Saturday, 28 May 2016

36. நலிந்துவரும் தேசீய வாதம்



36. நலிந்துவரும் தேசீய வாதம்




சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற கூத்து, ஜனநாயகம் என்ற  நாடகத்தின் அங்கமாக மீண்டும் ஒருமுறை தமிழ் நாட்டில் நடந்து முடிந்துவிட்டது. ஓட்டுப்போட்டதினால் 'ஜன நாயக' உரிமையை நிலைநாட்டியதாகவும், கடமையை நிறைவேற்றியதாகவும் பலர் பெருமைப்படலாம்! ஆனால் அடுத்த தேர்தல் வரை இனி மக்களை அரசியல்வாதிகள் சீண்டமாட்டார்கள். ஜன நாயகம் ஆட்சியில் முடங்கிவிட்டது; ஆட்சி கட்சியில் அடங்கிவிட்டது; கட்சி தலைமையில் ஒன்றிவிட்டது! யாருக்குக் கொண்டாட்டம் என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா, என்ன! 




A Hindi poster issued by the Election Commission



இனி, வழக்கம்போல் மக்கள் தங்கள்  தேவைகளுக்கும், குறைகளைச் சொல்லவும் கார்ப்பரேடர், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி  முதலிய தேவ-தேவியரையும், வி.ஏ.ஓ. தாசில்தார், கலெக்டர் முதலிய நாட்டு துரைமார்களையும் சேவித்துப் பிழைக்கவேண்டும்! இவர்களுக்குப் பூசாரிகளாகவும், புரோகிதராகவும், தரகர்களாகவும் கட்சியினர் செயல்படுவார்கள்! உரிய காணிக்கை செலுத்தி வேண்டியதைப் பெறலாம்!


பணத்திற்கு ஓட்டு


இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்ற செய்தி பரவலாக அடிபட்டது. பணமும் பல இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. என்னதான் ஜன நாயகம், பேச்சுரிமை என்று சொல்லிக்கொண்டாலும், நமக்குத் தெரியவந்த சில உண்மைகளை வெளியிட தயக்கமாகத்தான் இருக்கிறது.








 பெங்களூரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல விதத்தில் உழைக்கிறார்கள்: கூலிவேலை, பழம், காய்கறிகள் விற்பது, இஸ்திரி போடுவது, வீட்டுவேலை செய்வது என்று பலவிதத்தில் மெய் வருந்தி உழைக்கிறார்கள். இவர்களில் பலர் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பென்னாகரம் பகுதிகளிலிருந்து வருகிறார்கள். தமிழ் நாட்டில் தேர்தல் என்றால் இவர்களில் முக்கால்வாசிப்பேர்  அங்கு ஆஜராகிவிடுவார்கள். ஏதோ வரும்படி உண்டு என்பார்கள். 



Wherever Mr. Kaplan and his colleagues went, “journalists, politicians, and voters spoke of the bribes as a commonly accepted fact of the election process.”

For example, during visits to slums in Chennai and Hyderabad, they “learned that poor urban voters expect political parties to pay come election time.” They were told by a DMK political strategist that “slums are critical to a campaign because their population density and poverty allows them to be more ‘easily mobilized' by bribes.” Representatives of a non-governmental organisation working in a Chennai slum said that “the two main political parties in Tamil Nadu – the DMK and the AIADMK – regularly bribe voters.” They described a “sophisticated operation” to distribute cash: “Weeks before the elections agents of the parties come to the neighborhood with cash carried in rice sacks. They have copies of the voter lists and they distribute the money based on who is on the list.” The agents come in the middle of the night, “between two and four in the morning, when the Election Commission is asleep.”

A Report from The Hindu based on Wikileaks. 16 March, 2011


இந்தமுறை ஒரு ஓட்டுக்கு ரூ.250  (திருவண்ணாமலை) முதல் 500 (பென்னாகரம்) வரை வந்ததாகக் கேள்வி. என்னால் புரூஃப் தர இயலாது!





தேர்தல் பணம் புரளும் இடமாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே இதை நாம் பார்க்கிறோம். ஆனால் அங்கெல்லாம் இது சாதாரண மக்களைப் பாதிப்பதில்லை. பெரிய 'லெவலில்' நடக்கும் செயல்கள். 



Campaign money in the US Presidential Election, 2016. From New York Times

புரளும் பணம்- புரளாத மக்கள்


அங்கு எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் பொது நலன்கள் பாதிக்கப் படுவதில்லை. ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன்.


என்னுடன் வேலை செய்தவர் ஒருவர். அவர் கணவர் மத்திய அரசில் அதிகாரி. அவர் ஊர் சென்னை; அம்மாள் ஊர் பெங்களூர். இரண்டு இடத்திலும் அவர்களுக்கு குடும்ப சொத்தாக வீடு இருந்தது. ஆனால் அவர்கள் வேலைசெய்த டெல்லியில் வீடு இல்லை. அவர்களுக்கு ஒரேமகன்; மணமாகி அமெரிக்காவில் வேலை.  அங்கு ப்ரசவத்திற்கு இந்த அம்மாள் போகவேண்டிய நிலை. ஆனால் அவர் விசா மூன்றுமுறை நிராகரிக்கப்பட்டுவிட்டது.  காரணம்: அவர்கள் வேலை செய்த டெல்லியில் சொத்து இல்லாததாலும், அவர்களின் ஒரேமகன் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருந்ததாலும் அவர் இந்தியாவிற்கு திரும்பிவந்துவிடுவார் என்று நம்புவதற்கில்லை! இனிமேல் விசா வாங்க வழியே இல்லை என்ற நிலை.

அவர் மகன் சும்மா இருக்கவில்லை. அவன் இருந்த ராஜ்யத்தின் செனட்டருக்கு நிலையை விளக்கி ஃபேக்ஸ் அனுப்பினான். செனட்டர் அவனை நேரில் பார்த்து நிலையை அறிந்தார். அமெரிக்க அதிபர் ஆஃபீசுடன் தொடர்புகொண்டார். மூன்றாவது நாள் எம்பசிக்காரர்கள் டெல்லியில் அவர் வீட்டிற்குத் தேடிவந்து விசா வழங்கினர். இந்தியாவில் இப்படி நடக்குமா? அங்கு மேலிடத்தில் பணம் புரண்டாலும் சாதாரணக் குடிமகனை மண்ணில் போட்டுப் புரட்டுவதில்லை! இங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்குத் தொல்லைதான். "காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம் " என்று அன்று பட்டுக்கோட்டையார் எழுதியது இன்றும் சரியாகத்தான் இருக்கிறது! ஏதோ கையாவது மிஞ்சியதால், அடுத்த தேர்தலுக்கு வருவதை நீட்டிப் பெறலாம்!

எதிர்பாராத முடிவுகள்


இந்த முறை தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு பலரும் எதிர்பார்த்தபடி அமையவில்லை! ஆனால் இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளும், பிற சில்லறைக் கட்சிகளும் வட்டாரக் கட்சிகள். அவர்களுக்கிடையே அதிக வித்தியாசமில்லை. காங்கிரஸ் , கம்யூனிஸ்டு, பா.ஜ.க ஆகியவையே பெயரளவில் தேசியக் கட்சிகள்.

வட்டாரக் கட்சிகள் தேசிய விரோதிகள்


கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இனவாதம், ஜாதி துவேஷம், பிற மொழி எதிர்ப்பு, நாஸ்திக வாதம், குறிப்பாக ஹிந்துமத எதிர்ப்பு என்பவையே அவற்றின் வேர்கள். கல்வித்துறையைக் கைவசம் கொண்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் துவேஷ உணர்ச்சியைப் பரப்பி வருகிறார்கள். ஏதோ தமிழன் என்பவன் தனி இனம், மற்ற இந்தியர்கள் வேறு என்ற பிரமையை விஶ்வரூபமாக வளர்த்துவிட்டார்கள். ஆகவே, எந்த திராவிடக் கட்சி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி  என்று வந்தாலும் இரண்டும் தேசீய விரோத சக்திகளே! தேச சதிக்கட்சிகளே! மற்ற உதிரிக் கட்சிகளும் அப்படியே!

கம்யூனிஸ்டுகளுக்கு தனிபலம் இல்லை. வட்டாரக் கட்சிகளுடன் கூடிக் குளிர்காய்ந்தே வருபவர்கள். இந்த முறை கூட்டு சரியில்லை, கோட்டை விட்டார்கள். 

காங்கிரஸ்: தேய்ந்த தேசீயம்


தேசியக் கட்சியாக இருந்த காங்கிரஸ்,  நேருவின் தலைமையில் சோஷலிசப் போர்வைக்குள் புகுந்து தேசீயப் பொருளாதாரத்தை நசுக்கும் கட்சியாக ஆகியது. இந்திராவின் பிடியில் குடும்ப ஆதிக்கக் கட்சியாகியது, இன்றும் இதே நிலைதான் நீடிக்கிறது. மதியும் மானமும் உள்ள பழைய காங்கிரஸ்காரர்கள்  அன்றே அதிலிருந்து விலகிவிட்டனர். சந்தர்ப்பவாதிகளும், அடிவருடிகளும், ஆதாயம் தேடுபவர்களும் மட்டும் அதில் இன்னமும்  நீடிக்கிறார்கள்.

  நரசிம்மராவ் மட்டும் விதிவிலக்காக இருந்த ஒரே பெரிய மனிதர். அவர் பிரதமராக இருந்ததால் 1991ல் இந்தியா பிழைத்தது. அப்போது போலி, புரட்டுக் காந்திகள் இருந்த இடம் தெரியவில்லை.





1996ல் அவர் இறந்தபோது, அவர் உடலை காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டுவர அனுமதிக்க வில்லை! அவருக்கு டெல்லியில் நினைவுச்சின்னம் அமைக்கவும் இசையவில்லை!
குடும்ப அரசியலுக்கு சலாம் போடாதவரின் நிலை இது!




ஆனால் 60 ஆண்டுகளுக்குமேல் தேசீயம் வளர்த்த காங்கிரஸ், சுதந்திரத்திற்குப் பிறகு 20 ஆண்டுகள்கூட தமிழ் நாட்டில் தாக்குப்பிடிக்கவில்லை. சினிமா மாயை, தமிழின வாதம், தமிழ்மொழி கோஷம் ஆகியவற்றிற்கு காங்கிரஸ் சரியாக பதில் சொல்ல இயலவில்லை. 1967ல் படுத்துக் கொண்டே ஜயிப்பேன் என்றார் காமராஜ். அன்று படுத்த காங்கிரஸ் இன்னமும் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்குப் பின் அந்தக் கட்சி மானம் கெட்டு இந்த திராவிடக் கட்சிகளுடனேயே மாறிமாறிக் கூட்டு சேர்ந்து தன் தனித்தன்மையை இழந்துவிட்டது. திவ்ளூண்டு கட்சிக்குள்   கோஷ்டிப்பூசல் வேறு! 

பாரதீய ஜனதா



இன்றைய கட்சிகளில் பாரதீய ஜனதா மட்டுமே தேசீயக்கட்சி என்று எண்ணப்படும் நிலையில் இருக்கிறது. ஆனால் அதுவும் சந்தர்ப்ப வாதியாகி இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டு வைத்து அடி வாங்கியது. இருந்தாலும் இன்னமும் கூட்டுக்காக அலைகிறது! காவிரி நீர்ப்பிரச்சினை என்று வந்தால் அதன் தேசியத்தன்மை நசித்துவிடுகிறது!


இன்று தமிழ் நாட்டில் தேசீயம் தழைக்கும் சூழ்நிலை இல்லை. அதை உருவாக்குவதும் எளிதல்ல. அரசியல் போக்கு, பத்திரிகைகள், சினிமா, கல்வித்துறையின் பிடி ஆகியவற்றின் வாயிலாக, அரை நூற்றாண்டு காலமாகப் பரப்பப்பட்டு வரும் வட்டார வாதத்தை முறியடிப்பது என்பது பதவியில் இல்லாத கட்சியால் செய்யமுடியாத செயலாகும். இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை இருந்தால் பா.ஜ. க சில நிலை/முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.


  •  நல்லவர்களை முன்னிறுத்தி , தலைமையை வலுப்படுத்த வேண்டும்.
  • மக்களுடன்  நேரடித் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்'
  • எதிர்ப்பு, எதிர்ப்பு என்பதைவிட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • அடிப்படை தேசியக் கொள்கைகளை மக்களிடம் விளக்கிச் சொல்வதில் தளர்ச்சியடையக் கூடாது.  இதற்கு பெரிய பெரிய கூட்டம் போட்டு கூவிப் பிதற்றவேண்டிய அவசியம் இல்லை. சோஷியல் மீடியா, சிறுசிறு கூட்டங்கள்,கண்டகாட்சிகள் என்று எத்தனையோ சாதனங்கள் இருக்கின்றன. 
  • ஹிந்துக் கோவில்களை அரசினரின் பிடியிலிருந்து மீட்கவேண்டும்
  • அரசின் பொருளுதவி  பெறாதவகையில் கல்வித்துறையில் மாற்று முயற்சிகள் செய்யவேண்டும்.
காந்திஜி கற்பித்த பாடம்

மஹாத்மா காந்தி பல தவறுகள் - ஹிமாலயத் தவறுகள் - செய்தார், ஆனால் சில அடிப்படை அணுகுமுறைகளைக் கற்றுத் தந்தார்.




- கொள்கையை எதிர்த்தாலும் ஆளை விமர்சனம் செய்யாமலிருப்பது
- தனிமனித தூஷணை, துவேஷம் வளர்க்காமலிருப்பது
-பதவியில் இல்லாவிட்டாலும் , அரசினரின் உதவியின்றியே ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்வது. 
கதர், கிராமக் கைத்தொழில்கள், மதுவிலக்கு பிரச்சாரம், புதிய கல்வி முறை ஆகியவை அவர் இந்த வழியில் மேற்கொண்டவை. 



பா.ஜ.க. இம்மாதிரி முறைகளை மேற்கொள்ளவேண்டும். 



ஹிந்தி என்ற சுமை!

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, பா.ஜ.கவிற்கு ஒரு பெரிய சுமை உண்டு. அது ஹிந்தி மொழி ஆதிக்கம் பற்றியது. எல்லா வட நாட்டுக் கட்சிகளுமே ஹிந்தி ஆதிக்கத்தை வளர்ப்பவைதாம். காங்கிரஸ் இதற்கு விலக்கல்ல. ஆனால் இன்றைய மத்திய அரசினர் ஹிந்தித் திணிப்பில் மிக தீவிரமாக இருப்பதோடு, அதை வெளிப்படையாகவும்- மூர்கத்தனமாகக்- காட்டிக்கொள்கின்றனர்! மோடி சர்க்கார் வெளியிடும் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஹிந்திப் பெயர்தான்! கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடி படத்துடன் வரும் விளம்பரங்கள் ஹிந்தியில் (ஆங்கில எழுத்தாக இருந்தாலும் அவை ஹிந்தி மொழிச் செய்திகள் தான்.) இருக்கின்றன. 

பல தில்லுமுல்லுகள், தகிடுதத்தங்கள் செய்துதான் ஹிந்தி மொழி பெரும்பான்மை மொழி என்று காட்டுகிறார்கள். இந்தியா  இயற்கையிலேயே பலமொழிகளை தேசீய மொழிகளாகக்கொண்ட நாடு. இதில் ஹிந்தி தான் தேசீய மொழி என்று கொண்டால், ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத அனைவரும் இரண்டாம் தரக்குடிமக்கள் என்ற  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது தேசீயமல்ல; ஜன நாயகமுமல்ல; அறிவுடைமையும் அல்ல. அற்பத்தனமான அராஜகம். அரசியல் அடாவடித்தனம்.  பேட்டை ரவுடித்தனம். இதை நாம் என்றும் ஏற்றுக்கொள்ள இயலாது. 

ஹிந்தி என்ற பாறாங்கல்லைக் கழுத்தில் கட்டிக்கொண்டிருக்கும் வரை, தமிழ் நாட்டு அரசியல் என்ற நதியில் பா.ஜ.க. நீந்த முடியாது! இந்த ஒரு விஷயம் அவர்கள் தேசீயத்தை அழித்துவிடும்!


ஹிந்தியற்ற தேசீயம்!

நமக்கு தேசியம் அவசியம். ஆனால் ஹிந்தி ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வதுதான்  தேசீயம் என்பதை ஏற்க முடியாது. 

உலகில் ஆங்கிலம் பேசும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது! ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி அல்ல.சரித்திர வாயிலாக 200 ஆண்டுகளாக நமக்கு பரிச்சயமான மொழி. இது நமக்கு உலக அரங்கில் ஆதாயம் தரும் மொழி. இன்றைய கல்வியறிவுக்கு இன்றியமையாதிருப்பது.
ஆழ்ந்த நீலம்= ஆங்கிலம் தாய்மொழியாகப் பேசுபவர்கள்.
வெளிறிய நீலம்= ஆங்கிலம் பரவலாகப் பேசுபவர்கள். இது சரித்திர உண்மை.
ஐக்கிய அமெரிக்காவில் ஆங்கிலம் பேசுபவர்கள்: 29,84,44,149
இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள்:                 12,10,00,000
இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசுபவர்கள்:                6, 40,00,000

[படமும் எண்ணிக்கையும்: விக்கிப்பீடியா ]


 தாய்மொழி + ஆங்கிலம் என்பதுதான்  நமது தேசீயத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்! இது எந்த இந்தியனுக்கும் பொதுவாக உள்ள நிலை! இதனால் யாருக்கும்  விசேஷமான ஆதாயம் இல்லை;அநீதி இல்லை. [இதற்குமேல் அவர்களாக விரும்பி யார் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம்!]

ஹிந்தி தாய்மொழியாக உள்ளவர்கள்  அத்துடன் ஆங்கிலம் மட்டுமே கற்கிறார்கள். ஹிந்தியைவிட ஆங்கிலத்தையே அதிகம் கற்கிறார்கள். ஆங்கிலம் கல்லாதவர்கள் பின்தங்கியே இருக்கிறார்கள்.ஆனால் மற்றவர்களுக்கு மூன்றுமொழிகள்! இது சுத்த அயோக்யத்தனமல்லவா?

 நமது தேசீயம் என்ற பூஜையில் ஹிந்தி ஆதிக்கம் என்ற கரடி குறுக்கிடத் தேவையில்லை.