Tuesday, 1 March 2016

35. கேள்வியும் பதிலும் !



35. கேள்வியும் பதிலும் !
 A Tanjore painting of the Mahabharata War.
From:www.bhagavadgitausa.com  Copyright status not stated. used here for educational purpose.

அறிவியல் பயணம் கேள்விகேட்பதிலிருந்து  தொடங்குகிறது.  பௌதிக விஞ்ஞான  மானாலும், ஆன்மீகமானாலும்  இது பொருந்தும். சில சமயம் தெரியாதவர்கள்  தெரிந்தவர்களைக் கேட்பார்கள். சில சமயம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களைக் கேட்பார்கள்--ஆசிரியர்கள் மாணவர்களைக் கேட்பது போல. சில சமயம் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். விடை காணும் முயற்சியே அறிவுவிளக்கத்தின் ஆரம்பமாகிறது.

நமது ஹிந்து பாரம்பர்யத்தில் கேள்விகேட்பது என்பது மிகவும் ஊறிப்போன பழக்கம் ; மிகவும் ஊக்குவிக்கப்படும் அம்ஸம். ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொல்கிறார்:

தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன சேவயா  [ 4.34] 

அந்த பெரிய விஷயத்தை பெரியவர்களைத் தாழ்மையுடன் அணுகி, வணங்கி நன்கு கேட்டுத் தெரிந்துகொள்.

உபனிஷதமும் கேள்வியும்

ஆனால் இது க்ருஷ்ணர்  தொடங்கிவைத்ததல்ல. இது நமது புராதன வழி. இதை உபனிஷதத்தில் பார்க்கிறோம்.  அங்கு சிஷ்யன் குருவைக் கேட்பதும், குரு சிஷ்யனைக் கேட்பதும் சகஜம். கேனேஷிதம் பததி ப்ரேஷிதம்  மன: என்றே ஒர் உபனிஷதம் தொடங்குகிறது. ஒரு பையன் 12 வருஷம் குருகுலவாசம் முடித்துவிட்டுத்  திரும்பி வருகிறான். பையனுக்குக் கொஞ்சம் கர்வம் வந்தது போல் அப்பாவுக்குத் தோன்றுகிறது. " அப்பனே, எதைத் தெரிந்துகொண்டால்  எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ அதை நீ அறிந்தாயா ? " என்று கேட்கிறார். மகனுக்குத் தெரியவில்லை. அடுத்தபாடம் அங்கிருந்து தொடங்குகிறது. நாரதர் சனத்குமாரரிடம் வருகிறார். "ஐயனே, எனக்குச் சொல்லித் தாருங்கள் " என்று வேண்டுகிறார்.  "நாரதா, உனக்கு ஏற்கெனவே என்ன தெரியும் ?" என்று  திருப்பிக் கேட்கிறார் சனத்குமாரர் ! அங்கே, ஜனகர் சபையிலோ ஒரே அமளி ! யாக்ஞவல்க்யர் பரிசுபெற வந்திருக்கிறார். மற்ற ரிஷிகள் அவரைச் சும்மா விடுவதில்லை ;கேள்வி கேட்டுத் தொளைத்து விடுகிறார்கள். அதில் ஒரு பெண் ரிஷியும் உண்டு. இவ்வாறு பல இடத்திலும், பல விதத்திலும் கேள்வி கேட்பதை நாம் பாராட்டியே வந்திருக்கிறோம்.





Nachiketas learning from Yama, painting by S.Rajam.




இதையெல்லாம் தூக்கியடிப்பதுபோல் ஒரு நிகழ்ச்சி. நசிகேதஸ் என்ற ஒன்பது வயதுப் பையன். எப்படியோ யமலோகத்துக்கு வந்துவிடுகிறான்.  யமதர்மராஜன் அவனுக்கு வரம் கொடுக்கும்படி யாகிறது. அந்தப் பயன் கேட்கிறான்: "யமதர்மனே! மரணத்துக்குப்பின்  என்ன ஆகிறது? சிலர் எதோ இருக்கிறது என்கிறார்கள்; சிலர் ஒன்றும் இல்லை என்கிறார்கள். இதன் உண்மை என்ன? எனக்குத் தெரிந்தாக வேண்டும். இதைச்சொல்ல உன்னைவிடத் தகுதியான ஆசாமி வேறு யாரும் இல்லை !" என்று கேட்டு அசத்துகிறான். இந்தக் கேள்விக்கு பதிலாக ஒர்  உபனிஷதம் மலர்கிறது!

வால்மீகியின் கேள்வி = ராமாயணம்


Narada Visits Valmiki

தமஸா நதிக்கரையில்  வால்மீகி அமர்ந்திருக்கிறார். அங்கு நாரத மஹரிஷி வருகிறார். அவருக்குத் தகுந்தபடி மரியாதை செய்துவிட்டு, வால்மீகி அவரிடம் கேட்கிறார் : "தற்போது இந்த உலகில்  தர்மவானாகவும் குணவானாகவும் இருப்பது யார்?" இதற்கு பதிலாக  நாரதர் ராமரைப் பற்றிச் சொல்கிறார். இதையே விரிவாக ராமாயணமென்ற ஆதிகாவியமாக  வால்மீகி எழுதினார்.

வ்யாசரும் நாரதரும்: ஸ்ரீமத் பாகவதம்


அங்கே, ஸரஸ்வதி நதிக்கரையில் வ்யாசர்  அமர்ந்திருக்கிறார். முகத்தில் கவலைக்குறி; அமைதியற்ற நிலை. அங்கும் நாரதர் வருகிறார். 'அப்பா, என்ன பிரச்சினை ? ' என்று கேட்கிறார். " ஐயனே! நான் வேதத்தை நான்காக வகுத்து சீடர்களுக்குக் கற்பித்துவிட்டேன். புராணங்களை எழுதிவிட்டேன். ஐந்தாவது வேதமாக மதிக்கப்படும் மஹாபாரத இதிஹாஸத்தையும் எழுதிவிட்டேன். ஆனாலும் மனதில் அமைதியில்லை" என்று சொல்கிறார் வ்யாசர். " எல்லாம் சரி; ஏதோ தர்மம், அது,இது என்றுதானே எழுதினாய்? நீ பகவானைப் பற்றி என்ன எழுதினாய் ?  பகவான் வாஸுதேவனின் அவதார மஹிமையைப் பற்றிச் சொல்லாமல். வேறு எத்தனைதான் எழுதி என்ன ப்ரயோஜனம்? பக்தியல்லவா முக்திக்கு நேரான வழி? அதனால் பகவான் அச்சுதனின் அவதார மஹிமையைப் பற்றி எழுது " என்று நாரதர் வ்யாசருக்கு அறிவுரை கூறினார். அதன்படி வந்தது ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம்.

இப்படி பலரின் கேள்வியே நமது ஆன்மிக மேம்பாட்டிற்கு வழிவகுத்தன.
அர்ஜுனனும் க்ருஷ்ணரும்

அர்ஜுனன் போர்க்களத்தில் எதெதோ சொல்கிறான். கடைசியில் வில்லையும் அம்புகளையும் தூக்கியெறிந்துவிட்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து விடுகிறான். க்ருஷ்ணரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறான்:  "மதுஸூதனா! தர்மம் பற்றிய விஷயத்தில் நான் குழம்பிப் போயிருக்கிறேன். நான் தங்களைச் சரணடைந்துவிட்டேன். சிஷ்யன் நிலையில் கேட்கிறேன். எனக்கு திடமாக எது நன்மையைத் தருமோ அதைச் சொல்லுங்கள்!" [2.7.] க்ருஷ்ணர் பின்னால் ஶ்லோகம் 4.34ல் சொல்லப் போவதற்கு  லக்ஷியமாக இது அமைந்திருக்கிறது!  கீதை இந்தக் கேள்விக்கு விடையாக எழுந்ததேயாகும்.

தர்மபுத்ரர்- பீஷ்மர்: விஷ்ணுஸஹஸ்ர நாமம்

அர்ஜுனனுக்கு யுத்தத்துக்குமுன் வந்த குழப்பம் தர்மபுத்திரருக்கு  போருக்குப் பின்னால் வருகிறது. அரியணையில் அமர்ந்துவிட்டான் - மனதில் அமைதி இல்லை!  தனக்காகத்தானே இவ்வளவு பெரிய  யுத்தம் நடந்தது, இவ்வளவு பேர் மாண்டனர் என்று நினைத்து  வருந்துகிறான். அர்ஜுனனுக்கு குழப்பம் வந்தபோது பளிச்சென்று க்ருஷ்ணரிடம் கேட்டான். ஆனால் தர்மபுத்திரன் வேறு மாதிரி . க்ருஷ்ணர் பார்த்தார். தர்மருக்கு பீஷ்மரிடம் அலாதி விசுவாசம் என்று தெரியும். 'அப்பனே! பீஷ்மர்  தர்மங்களையெல்லாம் நன்கு அறிந்தவர். அவர் அம்புப்படுக்கையில் கிடக்கிறார். அவரிடம் போய் தர்மத்தைக் கேள்' என்று தூண்டுகிறார்.





 பீஷ்மர் எல்லா தர்மங்களையும் சொல்கிறார். ஒன்றையும் விடாமல்  (அசேஷேண) கேட்ட தர்மருக்கு தலை சுற்றுகிறது! இவ்வளவு தர்மம் இருந்தால் என்ன செய்வது? எதைப் பின்பற்றுவது? கடைசியாக தர்மர் வாயைத்திறந்து ஆறு கேள்விகள் கேட்கிறார்:

1. கிம் ஏகம் தைவதம் லோகே ?


எல்லா சாஸ்திரங்களிலும் எது ஒன்றே தெய்வமெனச் சொல்லப்பட்டிருக்கிறது ?

2. கிம் வாப் யேகம் பராயணம் ?


ஜன்மாவை அடைந்தவர்கள் எந்த ஒன்றையே அடையவேண்டியது?

3. ஸ்துவன்த: கம் ?


எந்த தெய்வத்தைத் துதிப்பவர்களும்

4 . கம் அர்ச்சந்த: ? 
ப்ராப்னுயுர்மானவா ஶுபம்


எந்த தெய்வத்தை அர்ச்சிப்பவர்களுமான மனிதர்கள்  க்ஷேமத்தை அடைவார்கள் ?



5. கோ தர்ம ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத : ?


ஸர்வ தர்மங்களுள்  எது சிறந்ததென தாங்கள்  தீர்மானித்திருக்கிறீர்கள் ?

6. கிம் ஜபன் முச்யதே ஜன்து: ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ?


ஜன்மாவை அடந்த ஜீவன்  எதனை ஜபித்தால்  ஜனன-மரண  ரூபமான சம்ஸார பந்தத்திலிருந்து  விடுபடுவான் ?

பீஷ்மபிதாமகர்  இதற்கு விடை சொல்கிறார்.

1. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச  மங்களம்
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ அவ்யய: பிதா


எவர் பவித்ரமான கங்கை முதலியவற்றையும் புனிதமாக்குகிறவரோ; ஸுகம், அதன் காரணம், அதை உபதேசிக்கும் சாஸ்திரம், ஆகிய இவை எல்லாவற்றிற்கும் மங்களமானவரோ, தெய்வங்களுள் மிகச்சிறந்த தேவரோ, எவர் ஸர்வ ப்ராணிகளுக்கும் அழிவற்ற பிதாவோ, அவரே சிறந்த தெய்வம்.

2. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத் தப:
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம  பரமம் ய: பராயணம்.


எந்த தேவன் மிகச்சிறந்த  பெரிய தேஜஸோ, எந்த தேவன் மிகச்சிறந்தவனாக இருந்து உலகை அடக்கி ஆளுகின்றானோ, எந்த தேவன் மிகப்பெரிய ப்ரஹ்மமோ,  எந்த தேவன் சிறந்த அடைய வேண்டிய கதியோ, அது ஒன்றே முக்தர்கள் அடையவேண்டிய ஸ்தானம்.

3.அனாதி நிதனம் விஷ்ணும் ஸர்வலோக நமஸ்க்ருதம்
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத்.


ஆதி அந்தம் அற்றவரும், எங்கும் நிறைந்தவரும், எல்லா உலகத்திற்கும் நாயகனும், எல்லா உலகங்களையும் தமது இயல்பான அறிவினால்  நேரில் பார்ப்பவருமான பகவானை எப்பொழுதும்  ஸ்தோத்ரம் செய்பவன்  எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபடுவான்.

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்தனம்
லோக நாதம்  மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்.


வேதம், வேத வித்துக்கள், தவம், சதுர்முக ப்ரம்மன், இவர்களுக்கு நன்மையைச் செய்பவரும்,  ஸர்வ தர்மங்களையும் அறிந்தவரும்,  உலகத்தோரின் கீர்த்தியை வ்ருத்தி செய்பவரும், உலகத்திற்கு அதிபரும்,  மிகச்சிறந்ததும், உண்மைப் பொருளும், எல்லா பிராணிகளின் உற்பத்திக்குக் காரணமானவருமான  பகவானைத் துதிப்பவன் எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபடுவான்.

4. தமேவ சார்ச்சயன் நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ்யம்ஶ்ச யஜமானஸ்தமேவச.


அழிவற்ற அந்த புருஷனையே பக்தியுடன் எக்காலமும் அர்ச்சிப்பவனும் , அப்பகவானையே மனதினால் த்யானிப்பவனும், வாக்கினால் துதிப்பவனும், நமஸ்கரிப்பவனுமான யஜமானன் ஸர்வ துக்கங்களிலிருந்தும் விடுபட்டவனாக ஆகிறான்.

5. ஏஷமே ஸர்வ  தர்மாணாம் தர்மோஅதிகதமோ மத:
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன் நர: ஸதா.


ஹ்ருதயத் தாமரையில் இருக்கும் ஸ்ரீமன் நாராயணனை பக்தியுடன் மனிதன் எப்பொழுதும் ஸ்தோத்திரங்களால் அர்ச்சிக்கவேண்டும்  என்பதுவே ஸர்வ தர்மங்களிலும் சிறந்த தர்மம்.

6. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அனன்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:


உலகங்களுக்கு ப்ரபுவும்,  ப்ரம்மாதி தேவர்களுக்கும் தேவனும்,  முடிவற்றவனும் ஆன ஸ்ரீ புஷோத்தமனை, மனிதன் எப்பொழுதும் முயற்சியுடன், ஆயிரம் நாமாக்களால் ஸ்தோத்ரம் செய்வதால்  ஸகல துக்கங்களிலிருந்தும்  விடுபடுகிறான்.

தர்மபுத்ரர் ஆறு கேள்விகள் கேட்டதால், நமது மதத்திற்கே அரிய பொக்கிஷமான விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் கிடைத்தன ! 
இந்த ஆயிரம் நாமங்களும் எப்படிப்பட்டவை? பீஷ்மரே சொல்கிறார்:

யானி  நாமானி கௌணானி  விக்யாதானி மஹாத்மன:
ரிஷிபி:பரிகீதானி 

மஹாத்மாவான பகவானுடைய குணங்களையொட்டி  ப்ரஸித்தமானவைகளும்,  மந்திரங்களாலும், மந்திரங்களைக் கண்டறிந்த ரிஷிகளாலும்  சொல்லப்பட்டவை.

[இங்கு  சேங்காலிபுரம் ப்ரஹ்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் உரை தரப்பட்டிருக்கிறது.]

இங்கு ஒரு ரஹஸ்யத்தை வெளிவிட்டு விடுகிறார் பீஷ்மர். இந்த ஆயிரம் நாமங்களையும் அவர்  இங்கு சொன்னாலும் இவை மந்திரங்களைக் கண்டறிந்த ரிஷிகளால் சொல்லப்பட்டவை ! அதாவது, இவையும் மந்திரம் போன்றவை !இவை வெளிவர பீஷ்மர் ஒரு கருவியே !
Bhishma lying on arrows. 17th century painting.


நைமிஶாரண்யத்தில் சூதர்
மேலும் ஒரு காட்சி.

இங்கே  நைமிசாரண்யம். சௌனகரும் மற்ற ரிஷிகளும் ஒரு பெரிய யாகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனிடையே சூத பௌராணிகரைப்  பார்த்துக் கேட்கின்றனர் :


இந்தக் கலிகாலத்தில் மக்கள் குறைந்த ஆயுளும் அறிவும் உடையவர்களாக இருக்கின்றனர். சோம்பலும் மிகுந்துள்ளவர்கள்.பாக்யம் குறைந்தும், பிணி முதலியவற்றால் பீடிக்கப் பட்டவர்களாயும் இருக்கின்றனர். ஏராளமான தர்மங்களைச் சொல்லியிருக்கிறார்கள். சாஸ்திர நூல்களும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றின் சாரத்தை நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டும். ஸ்ரீ பகவான் க்ருஷ்ணனாக இங்கு வந்தார், ஆனால் இப்போது அவரும் தம் இடத்திற்குத் திரும்பிவிட்டார்.


  • பரம்பொருள்  எந்த காரணத்திற்காக  க்ருஷ்ணராக அவதரித்தது ?
  • அவர்  ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்காக ப்ரம்ம,விஷ்ணு,ருத்ர ரூபத்தில் வருவதன் விசேஷமென்ன?
  • பகவானுடைய லீலா அவதாரங்கள் என்பவை எவை? இந்த லீலைகளின் மகிமை என்ன ?
  • கேசவரும் பலராமரும் மனித உருவில் வந்தும்  மனித  சக்தியை மீறிய செயல்கலைச் செய்தனர்.அவை என்ன?
  • க்ருஷ்ணர் இந்த பூமியிலிருந்து சென்றபிறகு தர்மத்திற்கு ஆதாரமாக இருப்பது எது?




இக்கேள்விகளுக்கு விடையாக ஸ்ரீ சூதர் அவர்களுக்கு  ஸ்ரீமத் பாகவதத்தை விளக்கிச்சொன்னார். பகவானிடம் பக்திசெய்வது ஒன்றுதான் சிறந்த தர்மம். அதனால் கர்ம வினையை அறுத்து, ஞானம் பெற்று, மோக்ஷத்தை அடையலாம். இது ஒன்றுதான் கலியில் வழி என்று உபதேசித்தார்.

பகவத் பக்தி யோகத:
பகவத் தத்வ விஞ்ஞானம்  முக்த ஸங்கஸ்ய ஜாயதே.

பகவானிடம் செய்யும் பக்தி யோகத்தால் மனம் தெளிவடைந்து, பகவானுடைய  ஸ்வரூப ஞானம் உண்டாகிறது.

பித்யதே ஹ்ருதயக் க்ரன்தி : சித்யந்தே  ஸர்வ ஸம்ஶயா:
க்ஷீயன் தே சாஸ்ய கர்மாணி த்ருஷ்ட ஏவாத்மநீஶ்வரே.

மனதிலுள்ள உலகியல் கட்டுக்கள் அவிழ்ந்துவிடுகின்றன. ஸந்தேகங்கள் அனைத்தும் சிதறிப்போகின்றன. கர்மத்தின் வினைகள் அழிந்துபோகின்றன. பகவானின் ஸ்வரூப ஞானம் ஏற்பட்டால், பகவானின் காக்ஷி தன்னுள் கிடைக்கிறது.

பஶ்யந்த் யாத்மனி சாத்மானம் பக்த்யா ஶ்ருதக்ருஹீதயா.

பக்தியினால் பகவானாகிய மெய்ப்பொருளான   பரதத்வத்தை தாங்களாகவே தமது ஆத்மாவில் உணர்கின்றனர். 

இவ்வாறு சூத பௌராணிகர் கலியில் பக்தியின் மேன்மையை உபதேசித்தார்.





ஸ்ரீ சுகப்ரம்மம்  பரீக்ஷித்துக்கு ஸ்ரீமத் பாகவதம் உபதேசிப்பது. 
Picture from ISKCON sources. Thanks,

அர்ஜுனன், தர்மன், நைமிஶாரண்யத்து முனிவர்கள் ஆகியோர் விதவிதமாகக் கேட்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் விடையாக வருவது ஒன்றுதான் : கலிகாலத்தில் பக்திதான் வழி. அர்ஜுனனுக்கு பகவானே சொல்கிறார். தர்மருக்கு பகவான் முன்னிலையில் பீஷ்மர் சொல்கிறார்.  நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு சூதர் சொல்கிறார். 
 முருகனும் ஔவையும்

நம் தமிழ் நாட்டில் ஞானபண்டிதனாகிய  குழவி, ஞானியான கிழவியைக் கேட்ட நான்கு கேள்விகள் ப்ரசித்தமானவை. ஆம், முருகப் பெருமான் ஔவையாரைக் கேட்கிறார்:

உலகில் கொடியது எது?

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங்கொடிது இளமையில் வருமை
அதனினுங்கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங்கொடிது  அன்பிலாப் பெண்டிர்
ஆதனினுங்கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

உலகில் இனியது எது?

இனியது கேட்கின் தனி நெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவனர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினுங் காண்பது தானே.

உலகில் பெரியது எது?

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது.
புவனமோ  நான்முகன் படைப்பு.
நான்முகன் கரியமால் உந்தியில் உதித்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிறல்  மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர்  உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.


உலகில் அரியது எது?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது.
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே



ஔவையார்-முருகனைச் சித்தரிக்கும் ஒரு படம்.
www.wwu.edu

கேள்வி கேட்டவர்களுக்கும், பதில் சொன்னவர்களுக்கும் நமது நமஸ்காரம்.