Showing posts with label கீதை. Show all posts
Showing posts with label கீதை. Show all posts

Monday, 8 August 2016

67, தேரும் படகும்



67. தேரும் படகும்





வாழ்க்கையில் நடத்தை முக்கியமானது என்பர் பெரியோர். யார் எந்தக் கொள்கை வேண்டுமானாலும் பேசலாம்; என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம். "கற்றபின் நிற்க அதற்குத் தக " என்பார் வள்ளுவர். இன்று பொதுவாக  "Walk the talk "  என்கிறார்கள். ஆனால் பொதுவாழ்வில் இதை இன்று நாம் பார்க்கமுடிவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுமட்டும் இல்லை; சொல் ஒன்றும் செயல் வேறாகவும் இருக்கிறது.


தர்மம்- ஆசாரம்


சமய-ஆன்மீக வாழ்வில்  கொள்கையை விட நடத்தைக்கே முக்கியத்வம் கொடுத்தனர் பெரியோர். நம் சமயத்திற்கு  பெரியோர் வழங்கிய பெயர் "தர்மம்" என்பதே. புத்தரும் அவர் காட்டிய வழியை " தர்மம் " என்றே சொன்னார். அதாவது, நடத்தை. நமது மதத்தின் எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அங்கு நடத்தையே ப்ரதானமாக இருந்து வந்திருக்கிறது. இதன் அடிப்படையாக இருப்பது "யமம், நியமம் " என்ற இரண்டுமே. இதையே மத ஆசாரியர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்றபடி வெவ்வேறு பெயரில் வழங்கினார்கள். இதை பொதுவாக ஆசாரம் என்கிறோம். மேலாகப் பார்த்தால் வித்தியாசப்படுவதாகத் தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றுதான்.



வைதீக நெறியில் வந்தவர்களுக்கு வைதீக கர்மாக்களே ஆசாரத்தின் அடிப்படையாக இருந்தது. வேறு எண்ணங்களுக்கோ, செயல்களுக்கோ இடம்-நேரம் தராமல் மனதையும் உடலையும் ஸதா சத்கர்மாவில் ஈடுபடுத்தி அதன் மூலம் சித்த சுத்தி பெறவேண்டும் என்பது இதன் நோக்கம்



இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? கர்மாவில் ஈடுபடாமல் இதைச் சாதிக்க முடியாதா? உடலெடுத்தவன் கர்மத்தில் ஈடுபட்டே தீரவேண்டும் என்பது இயற்கை (ப்ரக்ருதி )யின் விதி. (கீதை 3.5,8)  இங்குதான் ஸாங்க்ய அறிவு பயன்படுகிறது! சதாகாலமும் கர்மாவிலேயே ஈடுபட்டால், அதன் நோக்கத்தையே மறந்துவிடக் கூடும் ! கர்மா வெறும் இயந்திர கதியில் நடைபெறும் ! ஆகவே, இதன்  அடிப்படை நுட்பத்தைத் தெரிந்துகொள்ள வேணும். 



மனிதன் ப்ரக்ருதி  வயப்பட்டவன். ஐம்பொறிகள். ஐம்புலன்கள், மனம் அஹங்காரம், முக்குணங்கள் ஆகியவற்றால் ப்ரக்ருதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறான். அதன் வழியே செயல்கள் செய்கிறான். சாஸ்திரங்கள் இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. பல கட்டு-திட்டங்களை வகுத்திருக்கின்றன. அனால் , தான் ஆத்மா - இந்த உடலோ, அதனுள் இயங்கும் அன்தக்கரணங்களோ அல்லது அஹந்தையோ அல்ல என்ற நினைப்பு ( ஆத்ம-அனாத்ம விவேகம் ) வராதவரை, மனதை முழுதும் அடக்க முடியாது. இதை கீதை சுருக்கமாகச் சொல்கிறது.



इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः।

मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः।।3.42।।




இந்த்ரியாணி பராண் யாஹு:  இந்த்ரியேப்ய :பரம் மன :
மனஸ்து பரா புத்தி : ய: புத்தே பரத: து ஸ:                              3.42


புலன்கள்  (உடலைவிட ) மேலானவை என்பார்கள். இந்தப் புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது ( நுண்ணீயது ). மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. புத்தியைக் காட்டிலும் எது மிகவும் மேலானதோ அதுவே அது (ஆத்மா ).

एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना ।



ஏவம் புத்தே : பரம் புத்த்வா ஸம்ஸ்தப்ய  ஆத்மானம் ஆத்மனா     3.43


இவ்வாறு புத்திக்கும் மேலானதை அறிந்து, நிச்சய புத்தியால் மனதையும் இந்த்ரியங்களையும் கட்டுப்படுத்தவேண்டும்.




சரீரம் = ரதம்!




ரோமானிய ரதம்

etc.usf.edu./clipart



இந்த ஆத்ம தத்துவத்தை அறியாதவன் எவ்வளவு கர்மா செய்தாலும் கடைசியில் கோட்டைவிடுவான் ! இதை கட உபநிஷதம் ஒரு உபமானத்தின் மூலம் விளக்குகிறது.


आत्मानँ रथितं विद्धि शरीरँ रथमेव तु ।
बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ॥ ३॥



ஆத்மானம்  ரதினம் வித்தி ஶரீரம் ரதமேவது
புத்திம் து ஸாரதிம் வித்தி  மன: ப்ரக்ரஹமேவ ச 


இந்த உடல் தேர் ஆகும். மனது கடிவாளம் ; புத்தி சாரதி.  ஆத்மா  தேரில் வீற்றிருப்பவன் ( சவாரி செய்பவன் ). இவ்விதம் அறியவேண்டும்.



इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।
आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४॥


இந்த்ரியாணி ஹயானாஹு: விஷயாம்ஸ் தேசு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம்  போக்தேத் யாஹுர் மனீஷிண :


இந்திரியங்களைக் குதிரைகள் என்றும்  விஷயங்கள் அவை செல்லும் பாதை யென்றும் கூறுவர். உடல். மனம் புலன்கள் ஆகியவற்றுடன் கூடிய ஜீவன்  அனுபவிப்பவன் என ஞானிகள் கூறுகின்றனர்.



यस्त्वविज्ञानवान्भवत्ययुक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः ॥ ५॥

யஸ்த்வ விஞ்ஞானவான் பவதி அயுக்தேன மனஸா  ஸதா
தஸ்யேந்த்ரியாணி அவஶ்யாணி துஷ்டாஶ்வா இவ ஸாரதே :



மனம் அடங்காமலும், விவேகமில்லாத புத்தியுடனும் இருப்பவன் எவனோ  அவனுக்கு, சாரதிக்கு அடங்காத துஷ்டக் குதிரைகள்போல். இந்த்ரியங்கள் வசப்படமாட்டா.



यस्तु विज्ञानवान्भवति युक्तेन मनसा सदा ।
तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः ॥ ६॥



யஸ்து விஞ்ஞானவான் பவதி  யுக்தேன மனஸா  ஸதா
தஸ்யேந்த்ரியாணி வஶ்யானி  ஸதஶ்வா இவ ஸாரதே :


மனதை அடக்கி, விவேகமுள்ள புத்தியுடன் கூடியவன் எவனோ  அவனுக்கு , சாரதிக்கு அடங்கிய நல்ல குதிரைகள் போல இந்த்ரியங்கள் வசப்பட்டவையாகும்.



यस्त्वविज्ञानवान्भवत्यमनस्कः सदाऽशुचिः ।
न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति ॥ ७॥



யஸ்த்வவிஞ்ஞானவான் பவதி  அமனஸ்க : ஸதா அ ஶுசி :
ந ஸ தத் பதமாப்னோதி ஸம்ஸாரம் ச அதிகச்சதி


எப்போதும் விவேகமில்லாதவனாகவும், மனம் அடங்காதவனாகவும், தூய்மை இல்லாதவனாகவும் இருப்பவன் எவனோ அவன்   பரமபதமாகிய இலக்கை அடையமாட்டான்.  (திரும்பத் திரும்ப ) பிறவிப்பாதையிலேயே  சென்றுகொண்டிருப்பான்.


यस्तु विज्ञानवान्भवति समनस्कः सदा शुचिः ।
स तु तत्पदमाप्नोति यस्माद्भूयो न जायते ॥ ८॥


யஸ்து விஞ்ஞானவான் பவதி  ஸமனஸ்க:  ஸதா ஶுசி :
ஸ து தத் பதம் ஆப்னோதி யஸ்மாத்  பூயோ ந ஜாயதே


எப்போதும் விவேகமுள்ளவனாகவும். மனம் அடங்கியவனாகவும், பரிசுத்தமானவனாகவும் இருப்பவன் எவனோ அவன், எங்கிருந்து மீண்டும் பிறப்பதில்லையோ அந்த  பெரும் நிலையை எய்துகிறான்.


विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः ।
सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम् ॥ ९॥


விஞ்ஞான ஸாரதிர் யஸ்து  மன: ப்ரக்ரஹவான் நர:
ஸ: அதவன : பரம் ஆப்னோதி தத் விஷ்ணோ: பரமம் பதம்


எந்த மனிதன் விவேகமுள்ள புத்தியை சாரதியாகவும் , அடக்கப்பட்ட மனதைக் கடிவாளமாகவும் உடையவனோ அவன் ஸம்சாரமாகிய கடுவழியின் எல்லையை அடைகிறான்.  அதுவே எங்கும் நிறைந்த பரம்பொருளுடன் ஒன்றுபட்ட பரமபதம் என்னும்  நிலையாம்.



इन्द्रियेभ्यः परा ह्यर्था अर्थेभ्यश्च परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्बुद्धेरात्मा महान्परः ॥ १०॥



இந்திரியேப்ய: பராஹ்யர்தா, அர்தேப்யஶ்ச பரம் மன :
மனஸஸ்து  பரா புத்திர்  புத்தேராத்மா  மஹான் பர :


இந்த்ரியங்களைவிட மேலானவை ( அவைகளுக்குக் காரணமான ) சூக்ஷ்ம பூதங்கள்;  அவற்றைவிட மேலானது மனம்; மனத்தைக்காட்டிலும் மேலானது புத்தி;  புத்தியைக்காட்டிலும் மேலானது ஆத்மா. அதுவே மஹிமை வாய்ந்தது.


महतः परमव्यक्तमव्यक्तात्पुरुषः परः ।
पुरुषान्न परं किंचित्सा काष्ठा सा परा गतिः ॥ ११


மஹத: பரமவ்யக்தம், அவ்யக்தாத் புருஷ: பர :
ப்ருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா  ஸா பராகதி :


மஹத்தான ஆத்மாவைவிட மேலானது அவ்யக்தம்;  அதற்கும் மேலானவன் புருஷன் ( பகவான் ); இந்த பகவானுக்கு மேலானது ஒன்றுமில்லை.  அவர்தான் எல்லை ;அவர்தான் கடைசி புகலிடம்.

[கட உப நிஷதம்  3.3- 11 ]


எனவே, உபநிஷதம் சொல்கிறது  :


விழித்துக்கொள்ளுங்கள் !


उत्तिष्ठत जाग्रत
    प्राप्य वरान्निबोधत ।
क्षुरस्य धारा निशिता दुरत्यया
    दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४॥


உத்திஷ்டத ஜாக்ரத 
ப்ராப்யவரான் நிபோதத
க்ஷுரஸ்ய தாரா  நிஶிதா துரத்யயா
துர்கம் பதஸ்தத கவயோ வதன்தி                                                    3.14


எழுந்திருங்கள். விழித்துக்கொள்ளுங்கள்.  சிறந்த ஆசார்யர்களை அடைந்து ஞானம் பெறுங்கள்.  அந்த மார்கம் கத்தியின் நுனிபோல் கூர்மையானது. நடப்பதற்கும் கடப்பதற்கும் அரியது என  ஞானிகள் கூறுகின்றனர்.



இது உபநிஷதத்தில் யமதர்மராஜன் நசிகேதஸுக்கு கூறும் அறிவுரை, இதையே பகவான் கீதையில் பல இடங்களில் விளக்கிச்சொல்லியிருக்கிறார்.

இங்கு ஒரு நுண்ணிய விஷயம் புலனாகிறது. நாம் பேச்சுவழக்கில்  "எல்லாம் மனசாக்ஷிப்படிதான் செய்தோம் " என்று சொல்லுகிறோம். மனம் சாக்ஷியாகுமே தவிர, நல்லது-கெட்டது, தர்மம் - அதர்மம் என்பதை அது முடிவுசெய்யாது. மனதிற்கு மேல் புத்தி; அதற்குமேல் ஆத்மா.  அதனால்தான், ஆத்மஞானிகள் வகுத்த தர்ம, நீதி சாஸ்திரங்களே தர்மத்திற்குப் ப்ரமாணமாகின்றன. கீதையிலும் பகவான் இதையே சொல்லியிருக்கிறார்.


तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ।


தஸ்மாத் ஶாஸ்த்ரம் ப்ரமாணம் தே  கார்யாகார்ய  வ்யவஸ்திதௌ

16.24


ஆகவே உனக்கு இவ்வுலகில் செய்யத்தக்கது= தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே  ப்ரமாணமாகும்.

[ ஆசை வசப்பட்டு  காம்ய கர்மங்களைச் செய்யக்கூடாது. அவசியமான கர்மங்களை - நியதம் கர்ம, கார்யம் கர்ம - சாஸ்திரம் வகுத்த வழியிலேயே செய்யவேண்டும் என்பது கீதையின் நிலை. ]


வெளி நாட்டமுடைய பொறி, புலன்கள்


நமது பொறி,புலன்கள் வெளியுலகத்தையே  நாடுகின்றன,
"பராஞ்சி கானி  வ்யத்ருணத் ஸ்வயம்பூ ; " 
पराञ्चि खानि व्यतृणत् स्वयम्भू-
 = புலன்களை புற நோக்குடன் பகவான் அமைத்துள்ளார்  என்பது கட உபனிஷதம். 
இதை உள் நோக்கித் திருப்புவதற்கே  யோகம், ஆன்மீக சாதனை, என்றெல்லாம் சொல்கிறோம்!  ஆமை தன் அவயவங்களை  உள்ளே இழுத்துக்கொள்வது  போல, புலன்களை  அவற்றின் விஷயங்களில்  செல்லவிடாது இழுத்துக்கொள்ள வேணும் என்று கீதையில்  (2.58 ) பகவான் சொல்கிறார். சரீரமாகிய ரதம் நன்கு செல்வதற்கு  ஆத்மாவை அறியவேண்டும். அதற்கு அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டும், ஞானிகளாகிய    ஆசார்யர்களை நாடவேண்டும்.   [ " அனன்ய  ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி " =  
अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति
அனுபூதி பெற்றவரின்  உபதேசத்தைப் பின்பற்றினால் குழப்பம் இல்லை என்கிறது  கட உபனிஷத் ].
  இந்த  விஷயத்தை குருதேவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  வேறு விதமாக விளக்குகிறார்.



உலகியலில் மூழ்கும் ஓடம்










1882ம் வருஷம், நவம்பர் 15ம் தேதி மாலை நேரம். குருதேவர் அன்பர் பலராம் போசின் வீட்டில் அமர்ந்து அன்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். உலகியலில் உழலும் மக்கள் உய்வதற்கு என்ன வழி என்று விளக்கிக்கொண்டிருந்தார். 







Man may be likened to grain. He has fallen between the millstones and is about to be crushed.  Only the few grains that stay near the peg escape. Therefore man should take refuge at the peg, that is to say, in God. Call on Him. Sing His name. Then you will be free.  Otherwise you will be crushed by the King of Death.

Then the Master sang a song.


Mother ! Mother ! My boat is sinking, here in the ocean of this world.
Fiercely the hurricane of delusion rages on every side!
Clumsy is my helmsman, the mind; stubborn my six oarsmen, the passions ;
Into a pitiless wind I sailed my boat, and now it is sinking!
Split is the rudder of devotion; tattered is the sail of faith;
Into my boat the waters are pouring!
Tell me, what shall I do ?
With may failing eyes, alas! nothing but darkness do I see.
Here in the waves I will swim,O Mother, and cling to the raft of Thy name!




அங்கே உபனிஷதம் நம்மை ரதத்துக்கு ஒப்பிடுகிறது; இங்கே, நாம் கடலில் தத்தளிக்கும்  படகு போல் இருக்கிறோம். அங்கே, மனமும் புத்தியும் இந்த்ரியங்களைச்  சரியாகச் செலுத்தவில்லை; இங்கே, மனதாகிய மாலுமி சரியில்லை! உபனிஷதம் நம்மை குருவை நாடச் சொல்கிறது; இங்கே குருதேவர் நம்மை   நேரே  இறைவனை வேண்டச் சொல்கிறார் !

உலகியலைத் தாண்டுவிக்கும் ஓடம் !


ஸம்ஸாரம் பெரிய கடல்;  நாம் இதைத் தாண்டுவதற்கு அன்னை துர்கையே ஓடமாக இருக்கிறார் என்ற கருத்து துர்கா ஸூக்தத்தில் வருகிறது !



दु॒र्गां दे॒विꣳ शर॑णम॒हं
प्रप॑द्ये सु॒तर॑सि तरसे॒ नमः॑ ॥ २॥


துர்காம் தேவீம் ஶரணமஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம :


துர்கா தேவியை நான் சரணடைகிறேன். துன்பக் ( ஸம்ஸாரக் ) கடலிலிருந்து கரைசேர்ப்பவளே ! எங்களைக் காப்பாய் ! உனக்கு நமஸ்காரம்.

இதை அக்னிதேவனுக்கும் உகந்த ஸூக்தமாகச் சொல்வார்கள்:



स नः॑ पर्ष॒दति॑ दु॒र्गाणि॒ विश्वा॑ ना॒वेव॒ सिन्धुं॑ दुरि॒ताऽत्य॒ग्निः ॥

ஸ   ந; பர்ஷததி  துர்காணி விஶ்வா  நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:


படகின் மூலம் கடலைக் கடத்துவிப்பதுபோல், எங்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் அக்னிதேவன்  காக்கட்டும் !

இதே கருத்து நாம் சொல்லும் மன்த்ர புஷ்பத்திலும்  9ம்  மந்த்ரத்தில் வருகிறது:



ऽप्सु नावं॒ प्रति॑ष्ठितां॒ वेद॑ । प्रत्ये॒व ति॑ष्ठति ॥ ८॥


யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத: ப்ரத்யேவ திஷ்ட்டதி


யார் தண்ணீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ அவன் அதிலேயே நிலைபெறுகிறான்.

பூஜை முடிவில், இந்த  மந்திரத்தைச் சொல்லி, பகவானுக்கு பூ சமர்ப்பித்து  நமஸ்காரம் செய்கிறோம். இங்கு பகவானே ஓடமாக  இருந்து நம்மை கரை சேர்ப்பதற்குத் தயாராக இருக்கிறார். நாம் இதை அறிந்து ( வேத ) அந்த ஓடத்தில் நிலைபெற வேண்டும். [ இந்த ஓடத்தில் ஏறாதவன் தண்ணீரில் மூழ்கிவிடுவான் .] இங்கு தண்ணீர் உலகின் உருவகமாக இருக்கிறது. இதையே ஸம்ஸார ஸாகரம் என்கிறோம். இதைக் கடக்கும் சாதனமாக பகவான் நாமத்தைக் கொள்ளவேண்டும். ஸ்ரீ ராமக்ருஷ்ணர் சொன்ன ஒரு உவமையில் எவ்வளவு சாஸ்திரக் கருத்துக்கள் வருகின்றன !


குறிப்பு:

1.ஸ்ரீமந் நாராயணீயத்தில்  32வது  தசகத்தில் மத்ஸ்யாவதாரம் பற்றிச் சொல்கிறார் ஸ்ரீ பட்டத்திரி. இதில் 7வது ஶ்லோகத்தில் இந்த  உலகையே படகாகச் சொல்கிறார்!  இதன் ஆங்கிலப் பதிப்பில் ஸ்ரீ.எஸ்,என். சாஸ்திரி அளிக்கும்  அருமையான விளக்கம் :


The earth is depicted as a boat because only by being born on the earth as a human being can a jiva obtain realisation of identity with Brahman and thereby cross the ocean of Samsara. The earth is the boat which takes one across this ocean. [ Book published by Chinmaya Mission.] 
ஆனால் இங்கு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேணும்!

2. இங்கு கொடுத்திருக்கும் உபனிஷத உரை, 'அண்ணா'  சுப்ரமண்ய ஐயர் கருத்தைத் தழுவியது.
3. வேத, உபனிஷத மன்த்ரங்களை புத்தகத்திலிருந்து படிப்பது தவறாகும். வேதாத்யயனம் செய்த பெரியவர்களிடமிருந்து தான்  தெரிந்துகொள்ள வேணும்.
4.The Ten Yamas and Ten Niyamas
YAMAS — The 10 Vedic Restraints













Tuesday, 1 March 2016

35. கேள்வியும் பதிலும் !



35. கேள்வியும் பதிலும் !
 A Tanjore painting of the Mahabharata War.
From:www.bhagavadgitausa.com  Copyright status not stated. used here for educational purpose.

அறிவியல் பயணம் கேள்விகேட்பதிலிருந்து  தொடங்குகிறது.  பௌதிக விஞ்ஞான  மானாலும், ஆன்மீகமானாலும்  இது பொருந்தும். சில சமயம் தெரியாதவர்கள்  தெரிந்தவர்களைக் கேட்பார்கள். சில சமயம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களைக் கேட்பார்கள்--ஆசிரியர்கள் மாணவர்களைக் கேட்பது போல. சில சமயம் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். விடை காணும் முயற்சியே அறிவுவிளக்கத்தின் ஆரம்பமாகிறது.

நமது ஹிந்து பாரம்பர்யத்தில் கேள்விகேட்பது என்பது மிகவும் ஊறிப்போன பழக்கம் ; மிகவும் ஊக்குவிக்கப்படும் அம்ஸம். ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொல்கிறார்:

தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன சேவயா  [ 4.34] 

அந்த பெரிய விஷயத்தை பெரியவர்களைத் தாழ்மையுடன் அணுகி, வணங்கி நன்கு கேட்டுத் தெரிந்துகொள்.

உபனிஷதமும் கேள்வியும்

ஆனால் இது க்ருஷ்ணர்  தொடங்கிவைத்ததல்ல. இது நமது புராதன வழி. இதை உபனிஷதத்தில் பார்க்கிறோம்.  அங்கு சிஷ்யன் குருவைக் கேட்பதும், குரு சிஷ்யனைக் கேட்பதும் சகஜம். கேனேஷிதம் பததி ப்ரேஷிதம்  மன: என்றே ஒர் உபனிஷதம் தொடங்குகிறது. ஒரு பையன் 12 வருஷம் குருகுலவாசம் முடித்துவிட்டுத்  திரும்பி வருகிறான். பையனுக்குக் கொஞ்சம் கர்வம் வந்தது போல் அப்பாவுக்குத் தோன்றுகிறது. " அப்பனே, எதைத் தெரிந்துகொண்டால்  எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ அதை நீ அறிந்தாயா ? " என்று கேட்கிறார். மகனுக்குத் தெரியவில்லை. அடுத்தபாடம் அங்கிருந்து தொடங்குகிறது. நாரதர் சனத்குமாரரிடம் வருகிறார். "ஐயனே, எனக்குச் சொல்லித் தாருங்கள் " என்று வேண்டுகிறார்.  "நாரதா, உனக்கு ஏற்கெனவே என்ன தெரியும் ?" என்று  திருப்பிக் கேட்கிறார் சனத்குமாரர் ! அங்கே, ஜனகர் சபையிலோ ஒரே அமளி ! யாக்ஞவல்க்யர் பரிசுபெற வந்திருக்கிறார். மற்ற ரிஷிகள் அவரைச் சும்மா விடுவதில்லை ;கேள்வி கேட்டுத் தொளைத்து விடுகிறார்கள். அதில் ஒரு பெண் ரிஷியும் உண்டு. இவ்வாறு பல இடத்திலும், பல விதத்திலும் கேள்வி கேட்பதை நாம் பாராட்டியே வந்திருக்கிறோம்.





Nachiketas learning from Yama, painting by S.Rajam.




இதையெல்லாம் தூக்கியடிப்பதுபோல் ஒரு நிகழ்ச்சி. நசிகேதஸ் என்ற ஒன்பது வயதுப் பையன். எப்படியோ யமலோகத்துக்கு வந்துவிடுகிறான்.  யமதர்மராஜன் அவனுக்கு வரம் கொடுக்கும்படி யாகிறது. அந்தப் பயன் கேட்கிறான்: "யமதர்மனே! மரணத்துக்குப்பின்  என்ன ஆகிறது? சிலர் எதோ இருக்கிறது என்கிறார்கள்; சிலர் ஒன்றும் இல்லை என்கிறார்கள். இதன் உண்மை என்ன? எனக்குத் தெரிந்தாக வேண்டும். இதைச்சொல்ல உன்னைவிடத் தகுதியான ஆசாமி வேறு யாரும் இல்லை !" என்று கேட்டு அசத்துகிறான். இந்தக் கேள்விக்கு பதிலாக ஒர்  உபனிஷதம் மலர்கிறது!

வால்மீகியின் கேள்வி = ராமாயணம்


Narada Visits Valmiki

தமஸா நதிக்கரையில்  வால்மீகி அமர்ந்திருக்கிறார். அங்கு நாரத மஹரிஷி வருகிறார். அவருக்குத் தகுந்தபடி மரியாதை செய்துவிட்டு, வால்மீகி அவரிடம் கேட்கிறார் : "தற்போது இந்த உலகில்  தர்மவானாகவும் குணவானாகவும் இருப்பது யார்?" இதற்கு பதிலாக  நாரதர் ராமரைப் பற்றிச் சொல்கிறார். இதையே விரிவாக ராமாயணமென்ற ஆதிகாவியமாக  வால்மீகி எழுதினார்.

வ்யாசரும் நாரதரும்: ஸ்ரீமத் பாகவதம்


அங்கே, ஸரஸ்வதி நதிக்கரையில் வ்யாசர்  அமர்ந்திருக்கிறார். முகத்தில் கவலைக்குறி; அமைதியற்ற நிலை. அங்கும் நாரதர் வருகிறார். 'அப்பா, என்ன பிரச்சினை ? ' என்று கேட்கிறார். " ஐயனே! நான் வேதத்தை நான்காக வகுத்து சீடர்களுக்குக் கற்பித்துவிட்டேன். புராணங்களை எழுதிவிட்டேன். ஐந்தாவது வேதமாக மதிக்கப்படும் மஹாபாரத இதிஹாஸத்தையும் எழுதிவிட்டேன். ஆனாலும் மனதில் அமைதியில்லை" என்று சொல்கிறார் வ்யாசர். " எல்லாம் சரி; ஏதோ தர்மம், அது,இது என்றுதானே எழுதினாய்? நீ பகவானைப் பற்றி என்ன எழுதினாய் ?  பகவான் வாஸுதேவனின் அவதார மஹிமையைப் பற்றிச் சொல்லாமல். வேறு எத்தனைதான் எழுதி என்ன ப்ரயோஜனம்? பக்தியல்லவா முக்திக்கு நேரான வழி? அதனால் பகவான் அச்சுதனின் அவதார மஹிமையைப் பற்றி எழுது " என்று நாரதர் வ்யாசருக்கு அறிவுரை கூறினார். அதன்படி வந்தது ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம்.

இப்படி பலரின் கேள்வியே நமது ஆன்மிக மேம்பாட்டிற்கு வழிவகுத்தன.
அர்ஜுனனும் க்ருஷ்ணரும்

அர்ஜுனன் போர்க்களத்தில் எதெதோ சொல்கிறான். கடைசியில் வில்லையும் அம்புகளையும் தூக்கியெறிந்துவிட்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து விடுகிறான். க்ருஷ்ணரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறான்:  "மதுஸூதனா! தர்மம் பற்றிய விஷயத்தில் நான் குழம்பிப் போயிருக்கிறேன். நான் தங்களைச் சரணடைந்துவிட்டேன். சிஷ்யன் நிலையில் கேட்கிறேன். எனக்கு திடமாக எது நன்மையைத் தருமோ அதைச் சொல்லுங்கள்!" [2.7.] க்ருஷ்ணர் பின்னால் ஶ்லோகம் 4.34ல் சொல்லப் போவதற்கு  லக்ஷியமாக இது அமைந்திருக்கிறது!  கீதை இந்தக் கேள்விக்கு விடையாக எழுந்ததேயாகும்.

தர்மபுத்ரர்- பீஷ்மர்: விஷ்ணுஸஹஸ்ர நாமம்

அர்ஜுனனுக்கு யுத்தத்துக்குமுன் வந்த குழப்பம் தர்மபுத்திரருக்கு  போருக்குப் பின்னால் வருகிறது. அரியணையில் அமர்ந்துவிட்டான் - மனதில் அமைதி இல்லை!  தனக்காகத்தானே இவ்வளவு பெரிய  யுத்தம் நடந்தது, இவ்வளவு பேர் மாண்டனர் என்று நினைத்து  வருந்துகிறான். அர்ஜுனனுக்கு குழப்பம் வந்தபோது பளிச்சென்று க்ருஷ்ணரிடம் கேட்டான். ஆனால் தர்மபுத்திரன் வேறு மாதிரி . க்ருஷ்ணர் பார்த்தார். தர்மருக்கு பீஷ்மரிடம் அலாதி விசுவாசம் என்று தெரியும். 'அப்பனே! பீஷ்மர்  தர்மங்களையெல்லாம் நன்கு அறிந்தவர். அவர் அம்புப்படுக்கையில் கிடக்கிறார். அவரிடம் போய் தர்மத்தைக் கேள்' என்று தூண்டுகிறார்.





 பீஷ்மர் எல்லா தர்மங்களையும் சொல்கிறார். ஒன்றையும் விடாமல்  (அசேஷேண) கேட்ட தர்மருக்கு தலை சுற்றுகிறது! இவ்வளவு தர்மம் இருந்தால் என்ன செய்வது? எதைப் பின்பற்றுவது? கடைசியாக தர்மர் வாயைத்திறந்து ஆறு கேள்விகள் கேட்கிறார்:

1. கிம் ஏகம் தைவதம் லோகே ?


எல்லா சாஸ்திரங்களிலும் எது ஒன்றே தெய்வமெனச் சொல்லப்பட்டிருக்கிறது ?

2. கிம் வாப் யேகம் பராயணம் ?


ஜன்மாவை அடைந்தவர்கள் எந்த ஒன்றையே அடையவேண்டியது?

3. ஸ்துவன்த: கம் ?


எந்த தெய்வத்தைத் துதிப்பவர்களும்

4 . கம் அர்ச்சந்த: ? 
ப்ராப்னுயுர்மானவா ஶுபம்


எந்த தெய்வத்தை அர்ச்சிப்பவர்களுமான மனிதர்கள்  க்ஷேமத்தை அடைவார்கள் ?



5. கோ தர்ம ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத : ?


ஸர்வ தர்மங்களுள்  எது சிறந்ததென தாங்கள்  தீர்மானித்திருக்கிறீர்கள் ?

6. கிம் ஜபன் முச்யதே ஜன்து: ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ?


ஜன்மாவை அடந்த ஜீவன்  எதனை ஜபித்தால்  ஜனன-மரண  ரூபமான சம்ஸார பந்தத்திலிருந்து  விடுபடுவான் ?

பீஷ்மபிதாமகர்  இதற்கு விடை சொல்கிறார்.

1. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச  மங்களம்
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ அவ்யய: பிதா


எவர் பவித்ரமான கங்கை முதலியவற்றையும் புனிதமாக்குகிறவரோ; ஸுகம், அதன் காரணம், அதை உபதேசிக்கும் சாஸ்திரம், ஆகிய இவை எல்லாவற்றிற்கும் மங்களமானவரோ, தெய்வங்களுள் மிகச்சிறந்த தேவரோ, எவர் ஸர்வ ப்ராணிகளுக்கும் அழிவற்ற பிதாவோ, அவரே சிறந்த தெய்வம்.

2. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத் தப:
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம  பரமம் ய: பராயணம்.


எந்த தேவன் மிகச்சிறந்த  பெரிய தேஜஸோ, எந்த தேவன் மிகச்சிறந்தவனாக இருந்து உலகை அடக்கி ஆளுகின்றானோ, எந்த தேவன் மிகப்பெரிய ப்ரஹ்மமோ,  எந்த தேவன் சிறந்த அடைய வேண்டிய கதியோ, அது ஒன்றே முக்தர்கள் அடையவேண்டிய ஸ்தானம்.

3.அனாதி நிதனம் விஷ்ணும் ஸர்வலோக நமஸ்க்ருதம்
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத்.


ஆதி அந்தம் அற்றவரும், எங்கும் நிறைந்தவரும், எல்லா உலகத்திற்கும் நாயகனும், எல்லா உலகங்களையும் தமது இயல்பான அறிவினால்  நேரில் பார்ப்பவருமான பகவானை எப்பொழுதும்  ஸ்தோத்ரம் செய்பவன்  எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபடுவான்.

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்தனம்
லோக நாதம்  மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்.


வேதம், வேத வித்துக்கள், தவம், சதுர்முக ப்ரம்மன், இவர்களுக்கு நன்மையைச் செய்பவரும்,  ஸர்வ தர்மங்களையும் அறிந்தவரும்,  உலகத்தோரின் கீர்த்தியை வ்ருத்தி செய்பவரும், உலகத்திற்கு அதிபரும்,  மிகச்சிறந்ததும், உண்மைப் பொருளும், எல்லா பிராணிகளின் உற்பத்திக்குக் காரணமானவருமான  பகவானைத் துதிப்பவன் எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபடுவான்.

4. தமேவ சார்ச்சயன் நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ்யம்ஶ்ச யஜமானஸ்தமேவச.


அழிவற்ற அந்த புருஷனையே பக்தியுடன் எக்காலமும் அர்ச்சிப்பவனும் , அப்பகவானையே மனதினால் த்யானிப்பவனும், வாக்கினால் துதிப்பவனும், நமஸ்கரிப்பவனுமான யஜமானன் ஸர்வ துக்கங்களிலிருந்தும் விடுபட்டவனாக ஆகிறான்.

5. ஏஷமே ஸர்வ  தர்மாணாம் தர்மோஅதிகதமோ மத:
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன் நர: ஸதா.


ஹ்ருதயத் தாமரையில் இருக்கும் ஸ்ரீமன் நாராயணனை பக்தியுடன் மனிதன் எப்பொழுதும் ஸ்தோத்திரங்களால் அர்ச்சிக்கவேண்டும்  என்பதுவே ஸர்வ தர்மங்களிலும் சிறந்த தர்மம்.

6. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அனன்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:


உலகங்களுக்கு ப்ரபுவும்,  ப்ரம்மாதி தேவர்களுக்கும் தேவனும்,  முடிவற்றவனும் ஆன ஸ்ரீ புஷோத்தமனை, மனிதன் எப்பொழுதும் முயற்சியுடன், ஆயிரம் நாமாக்களால் ஸ்தோத்ரம் செய்வதால்  ஸகல துக்கங்களிலிருந்தும்  விடுபடுகிறான்.

தர்மபுத்ரர் ஆறு கேள்விகள் கேட்டதால், நமது மதத்திற்கே அரிய பொக்கிஷமான விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் கிடைத்தன ! 
இந்த ஆயிரம் நாமங்களும் எப்படிப்பட்டவை? பீஷ்மரே சொல்கிறார்:

யானி  நாமானி கௌணானி  விக்யாதானி மஹாத்மன:
ரிஷிபி:பரிகீதானி 

மஹாத்மாவான பகவானுடைய குணங்களையொட்டி  ப்ரஸித்தமானவைகளும்,  மந்திரங்களாலும், மந்திரங்களைக் கண்டறிந்த ரிஷிகளாலும்  சொல்லப்பட்டவை.

[இங்கு  சேங்காலிபுரம் ப்ரஹ்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் உரை தரப்பட்டிருக்கிறது.]

இங்கு ஒரு ரஹஸ்யத்தை வெளிவிட்டு விடுகிறார் பீஷ்மர். இந்த ஆயிரம் நாமங்களையும் அவர்  இங்கு சொன்னாலும் இவை மந்திரங்களைக் கண்டறிந்த ரிஷிகளால் சொல்லப்பட்டவை ! அதாவது, இவையும் மந்திரம் போன்றவை !இவை வெளிவர பீஷ்மர் ஒரு கருவியே !
Bhishma lying on arrows. 17th century painting.


நைமிஶாரண்யத்தில் சூதர்
மேலும் ஒரு காட்சி.

இங்கே  நைமிசாரண்யம். சௌனகரும் மற்ற ரிஷிகளும் ஒரு பெரிய யாகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனிடையே சூத பௌராணிகரைப்  பார்த்துக் கேட்கின்றனர் :


இந்தக் கலிகாலத்தில் மக்கள் குறைந்த ஆயுளும் அறிவும் உடையவர்களாக இருக்கின்றனர். சோம்பலும் மிகுந்துள்ளவர்கள்.பாக்யம் குறைந்தும், பிணி முதலியவற்றால் பீடிக்கப் பட்டவர்களாயும் இருக்கின்றனர். ஏராளமான தர்மங்களைச் சொல்லியிருக்கிறார்கள். சாஸ்திர நூல்களும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றின் சாரத்தை நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டும். ஸ்ரீ பகவான் க்ருஷ்ணனாக இங்கு வந்தார், ஆனால் இப்போது அவரும் தம் இடத்திற்குத் திரும்பிவிட்டார்.


  • பரம்பொருள்  எந்த காரணத்திற்காக  க்ருஷ்ணராக அவதரித்தது ?
  • அவர்  ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்காக ப்ரம்ம,விஷ்ணு,ருத்ர ரூபத்தில் வருவதன் விசேஷமென்ன?
  • பகவானுடைய லீலா அவதாரங்கள் என்பவை எவை? இந்த லீலைகளின் மகிமை என்ன ?
  • கேசவரும் பலராமரும் மனித உருவில் வந்தும்  மனித  சக்தியை மீறிய செயல்கலைச் செய்தனர்.அவை என்ன?
  • க்ருஷ்ணர் இந்த பூமியிலிருந்து சென்றபிறகு தர்மத்திற்கு ஆதாரமாக இருப்பது எது?




இக்கேள்விகளுக்கு விடையாக ஸ்ரீ சூதர் அவர்களுக்கு  ஸ்ரீமத் பாகவதத்தை விளக்கிச்சொன்னார். பகவானிடம் பக்திசெய்வது ஒன்றுதான் சிறந்த தர்மம். அதனால் கர்ம வினையை அறுத்து, ஞானம் பெற்று, மோக்ஷத்தை அடையலாம். இது ஒன்றுதான் கலியில் வழி என்று உபதேசித்தார்.

பகவத் பக்தி யோகத:
பகவத் தத்வ விஞ்ஞானம்  முக்த ஸங்கஸ்ய ஜாயதே.

பகவானிடம் செய்யும் பக்தி யோகத்தால் மனம் தெளிவடைந்து, பகவானுடைய  ஸ்வரூப ஞானம் உண்டாகிறது.

பித்யதே ஹ்ருதயக் க்ரன்தி : சித்யந்தே  ஸர்வ ஸம்ஶயா:
க்ஷீயன் தே சாஸ்ய கர்மாணி த்ருஷ்ட ஏவாத்மநீஶ்வரே.

மனதிலுள்ள உலகியல் கட்டுக்கள் அவிழ்ந்துவிடுகின்றன. ஸந்தேகங்கள் அனைத்தும் சிதறிப்போகின்றன. கர்மத்தின் வினைகள் அழிந்துபோகின்றன. பகவானின் ஸ்வரூப ஞானம் ஏற்பட்டால், பகவானின் காக்ஷி தன்னுள் கிடைக்கிறது.

பஶ்யந்த் யாத்மனி சாத்மானம் பக்த்யா ஶ்ருதக்ருஹீதயா.

பக்தியினால் பகவானாகிய மெய்ப்பொருளான   பரதத்வத்தை தாங்களாகவே தமது ஆத்மாவில் உணர்கின்றனர். 

இவ்வாறு சூத பௌராணிகர் கலியில் பக்தியின் மேன்மையை உபதேசித்தார்.





ஸ்ரீ சுகப்ரம்மம்  பரீக்ஷித்துக்கு ஸ்ரீமத் பாகவதம் உபதேசிப்பது. 
Picture from ISKCON sources. Thanks,

அர்ஜுனன், தர்மன், நைமிஶாரண்யத்து முனிவர்கள் ஆகியோர் விதவிதமாகக் கேட்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் விடையாக வருவது ஒன்றுதான் : கலிகாலத்தில் பக்திதான் வழி. அர்ஜுனனுக்கு பகவானே சொல்கிறார். தர்மருக்கு பகவான் முன்னிலையில் பீஷ்மர் சொல்கிறார்.  நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு சூதர் சொல்கிறார். 
 முருகனும் ஔவையும்

நம் தமிழ் நாட்டில் ஞானபண்டிதனாகிய  குழவி, ஞானியான கிழவியைக் கேட்ட நான்கு கேள்விகள் ப்ரசித்தமானவை. ஆம், முருகப் பெருமான் ஔவையாரைக் கேட்கிறார்:

உலகில் கொடியது எது?

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங்கொடிது இளமையில் வருமை
அதனினுங்கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங்கொடிது  அன்பிலாப் பெண்டிர்
ஆதனினுங்கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

உலகில் இனியது எது?

இனியது கேட்கின் தனி நெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவனர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினுங் காண்பது தானே.

உலகில் பெரியது எது?

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது.
புவனமோ  நான்முகன் படைப்பு.
நான்முகன் கரியமால் உந்தியில் உதித்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிறல்  மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர்  உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.


உலகில் அரியது எது?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது.
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே



ஔவையார்-முருகனைச் சித்தரிக்கும் ஒரு படம்.
www.wwu.edu

கேள்வி கேட்டவர்களுக்கும், பதில் சொன்னவர்களுக்கும் நமது நமஸ்காரம்.

Friday, 19 February 2016

26.தொழிலும் பாவமும்



26. தொழிலும் பாவமும்


https://icrindia.wordpress.com


உழைத்து உண்!


உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ தொழில் செய்துதான் வாழவேண்டி யிருக்கிறது. இதற்கு கிறிஸ்தவர்களின் பைபிளில் ஒரு விளக்கம் சொல்கிறார்கள். ஆதி மக்களாகிய ஆதாமும் ஏவாளும் கடவுளின் ஆணையை மீறியதால் தெய்வீகச் சோலையிலிருந்து நீக்கப்பெற்று பூமிக்கு வந்தனர். "நீங்கள் பூமியில் போய் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்துச் சாப்பிடுங்கள் " என்று கடவுள் அவர்களைச் சபித்தார்!

By the sweat of your brow you will eat your food until you return to the ground, since from it you were taken; for dust you are and to dust you will return." [Genesis 3:19]



Bread labour

ஆதிப் பெற்றோர்களின் வாரிசுகளாகிய நாம் இப்படி மெய் வருந்த உழைத்துதான் உண்ணவேண்டியுள்ளது! ஆனால் சில மேலை நாட்டு  அறிஞர்கள்   இதை வேறு விதமாக விளக்கினர். ஒவ்வொருவரும் தன் உடலுழைப்பால்தான் வாழவேண்டும் என்பதை ஒரு அறக்கொள்கையாகவே அவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதை முதலில் சொன்னவர் பாண்டரேஃப் [T.M.Bondaref] என்ற ரஷ்யர். பின்னர் டால்ஸ்டாயும் ஆங்கில அறிஞர் ரஸ்கினும் இதைப் பரப்பினர்.காந்திஜி இதை அப்படியே பிடித்துக் கொண்டார்!



Tolstoy in farmer's clothing. painting by Ilya Repin.




ஆனால் உலகம் அவ்வளவு எளிய நிலையில் இல்லை! பலவிதமான தொழில்கள் பல்கிப் பெருகிவிட்டன.


ஆரம்பத்தில் எல்லா நாடுகளிலும் பரம்பரையாகவே தொழில்கள் நடைபெற்று வந்தன.  தொழில்களை வைத்தே பெயரும் வந்தது. டெய்லர், ஸ்மித், பார்பர் , பட்லர் போன்ற பெயர்கள் இன்றும் வழங்கிவருகின்றன! பொருளாதாரம் பணத்தின் அடிப்படையில் அமைந்த பிறகு இந்த நிலை மாறிவிட்டது. மதிப்பு, கவர்ச்சி, பொருளீட்டும் வசதி ஆகியவற்றைப் பொறுத்து இப்பொழுது  மக்கள் தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் போட்டியும் பொறாமையும் அதிகரித்துவிட்டது.

ஸ்வதர்மமே செய்யவேண்டியது



இந்தியாவிலும் இந்த முறைதான் இருந்து வந்தது. இதை நாம் வர்ண தர்மம் என்று  கூறுகிறோம். ஒவ்வொரு வர்ணத்தவரும் தத்தமக்குரிய கர்மங்களைப் புரிவதே தம்மை ஆராதிப்பதாகும் என்று பகவான் கீதையில் கூறுகிறார்.



स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः।

स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु।।18.45।।


ஸ்வே ஸ்வே கர்மண் யபிரத:
ஸம்ஸித்திம்  லபதே நர:
ஸ்வகர்ம நிரத: ஸித்திம் 
யதாவிந்ததி தத் ஶ்ருணு.           


தத்தம் தொழில்விருப்பிற்றாமியற்று வாரடைவார்
சித்தியினி மாந்தர்கள்தம்  தீங்கில்தொழில் - உற்றங்
கநுட்டித்துச் சித்தி  அடையும்  நெறி தன்னை
உனக்கிசைப்பன் கேளாய் உவந்து.


அவவர்களுக்கு இயல்பாக ஏற்பட்டுள்ள கர்மங்களில் முழுமுனைப்புடன்  ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிய சித்தியை எய்துகிறான்.
தன்னுடைய இயல்பான கர்மத்தை எப்படிச் செய்து பரம நிலையை  அடையலாமோ அதை உனக்குச் சொல்கிறேன், கேள்.


यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्।

स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।।18.46।।


யத: ப்ரவ்ருத்திர் பூதானாம்
யேன ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய
ஸித்திம் விந்ததி மானவ:          

யாவனிடை எப்பொருட்கும் எய்தும் பிறப்புளதாம்
யாவனிவற் றெல்லாம் இலங்கிடுவன் - தேவவனைத்
தத்தமக்காம் கன்மத்தால் சார்ந்தடைவார் மானிடர்கள்
உத்தமமாம் சித்தியினை ஊங்கு.


எந்தப் பரம்பொருளிலிருந்து ஸகல ப்ராணிகளும் உண்டாயினவோ, எந்த பரமாத்மாவினால் இந்த உலகம் முழுதும் நிறைந்துள்ளதோ அந்த பரமாத்மாவை தன்னுடைய இயல்பான கர்மத்தினால் (ஸ்வதர்மத்தினால்)வழிபட்டு மனிதன் பரம ஸித்தியினை அடைகிறான்.
[ஸ்வதர்மத்தைச் செய்வதே கடவுள் பழிபாடாகும்]
[இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெண்பாக்கள் ஸ்ரீமான் முத்து ஐயர் என்னும் ஆசிரியர் 1907ம் வருஷம் இயற்றியதாகும். சென்னை ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம் இதை 1958ம் வருஷம் பிரசுரித்தது.]



From ISKCON sources. Thanks.


பிற கர்மத்தை விலக்கு

இதைச் சொன்ன பகவான், ஸ்வகர்மத்தையன்றிப் பிறவற்றைச் செய்யலாகாது என்றும் சொல்கிறார்.


श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।

स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः।।3.35।।


ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:
பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதனம் ஶ்ரேய:
பரதர்மோ பயாவஹ:                   

நன்கொழுகும் மற்றோர் அறந்தன்னில் நற்குணனில்
தன் கடமை யாமறனே சாற்றின் மேல் - புன்கணுறத்
தன்னறத்திற் சாதல் நலமாகும் சார்ந்திடுமே
இன்னல்பிறர் தம்மறத்தால் ஈங்கு.

நன்கு அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய  தர்மத்தைக் காட்டிலும், குணக்குறைவிருந்தாலும்  தன்னுடைய தர்மமே மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தில் இறப்பதும் மேன்மையே தரும். பிறருடைய தர்மம் பயத்தை விளைவிக்கும்.


श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।

स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्।।18.47।।


ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:
பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவ நியதம் கர்ம
குர்வந்நாப்னோதி கில்பிஷம்.       

நற்குணமொன் றில்லெனினும் தன்கருமம் நன்குபுரி
கிற்பதுமற் றோர்தொழிலிற்  கேடறவே - நிற்பதினும்
மேலாமே தன்தொழிலை மேவிப் புரிந்திடுவோன்
ஏலானொர் வெம்பவமும் ஈங்கு.

நன்கு அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை வுள்ளதாக இருந்தாலும் தன்னுடைய தர்மமே உயர்ந்தது. ஏனெனில் இயல்பாக  நேர்ந்த கர்மத்தைச் செய்வதால் மனிதன் பாவத்தை அடையமாட்டான்.



सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत्।

सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः।।18.48।।


ஸஹஜம் கர்ம கௌந்தேய 
ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி  தோஷேண
தூமேநாக்நி ரிவாவாவ்ருதா                

இயற்கையினாம் கன்மத்தை  ஏதமுளதேனும்
செயற்கரிய தென்றுவிடல் தீதாம் - நயக்கக்கேள்
செந்தழலைத் தூமம்போற் செய்தொழிலைத் தீமைபல
சந்ததமும் சூழ்ந்திருப்ப தாம்.

குன்தியின் மகனே! குறைவுள்ளதாயினும் தனக்குரிய இயல்பான கர்மத்தை விட்டுவிடலாகாது. ஏனெனில், புகையால் சூழப்பட்ட தீ போல எல்லாக் கர்மங்களும் ஏதோ ஒரு வகையில் குறையினால் சூழப்பட்டதாகவே வுள்ளன.

இதையெல்லாம் சுருக்கிய மாதிரி, சங்கர பகவத் பாதர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்:

யத் லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன விநோதய சித்தம்.

உன்னுடைய நிஜ கர்மத்தினால் (ஸ்வதர்மத்தினால்) எந்தப்பொருள் உனக்கு வந்து அமைகிறதோ, அதைக்கொண்டு மனதில் த்ருப்தி அடைவாயாக.

[ குறிப்பு:
 1.கர்மம், ஸ்வதர்மம் என்பதெற்கெல்லாம் இந்தக் காலத்து பண்டிதர்களும், புதிய ஸ்வாமிஜிக்களும், நவயுக குருமார்களும் விதவிதமாக விளக்கமளிக்கின்றனர். ஆங்கிலத்தில் எழுதுபவர்களும் கர்மத்தை action, work, activity, duty  என்றெல்லாம் எழுதுகின்றனர். கர்மம், தர்மம், ஸ்வதர்மம் என்பவை பரிபாஷகள். மிகவும் பொருள்பொதிந்தவை. ஹிந்துக்கள் இவற்றை சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றுக்கு நேரான சொற்கள் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.

2. கீதையில் பகவான் அர்ஜுனனை பலபெயரிட்டு அழைக்கிறார். ஆனால் கவுன்தேயா - குன்தியின் மகனே -என்று அழைப்பது மிகவும் அருமையானது. இந்தப் பெயரிட்டு அழைக்கும் ஒவ்வொரு சமயத்திலும்  பகவான் சொல்லும் அறிவுரைகள் மிகவும் முக்கியமானவை.
குன்தி  (இதுதான் சரியான பதம்.  Kunti  என்பதுதான் பெயர்.) க்ருஷ்ணருக்கு அத்தையாகவேண்டும்  ஆனால், அவள் பகவானின் பக்தை என்பதுதான் நெருக்கத்திற்குக் காரணம். மஹாபாரதத்திலேயே குன்தியும் த்ரௌபதியும் மிக உயர்ந்த பாத்திரங்கள். குன்தி செய்தது போன்ற ப்ரார்த்தனை உலகில் வெறு யாரும், எங்கும் எப்போதும் செய்யவில்லை! இதைப் பிறகு பார்க்கலாம்.


3.ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:  என்று இரண்டுமுறை பகவான் சொல்வதிலிருந்து அந்தக் கருத்தின் முக்கியத்துவம் விளங்கும். இம்மாதிரி சில சொற்பிரயோகங்கள்  கீதையில் சில இடங்களில் திரும்பத்திரும்ப வரும். அவை முக்கியமானவை.]

கர்ம ரஹஸ்யம்


கர்மத்தில் ஈடுபடாமல் வாழமுடியாது, ஆனால் குறையில்லாத கர்மம் இல்லை ! கர்மம் செய்தாலும் அதனால் தளை - மறு பிறவி யென்னும் பந்தம் - வருகிறது. இதுதான் மனித வர்கம் பெற்றுள்ள  சாபக்கேடு! பகவான் ஸ்ரீ ரமணர் சொல்கிறார்:

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீபற
வீடு தரலிலை உந்தீபற.

இதிலிருந்து எப்படி விடுபடுவது? கீதையில் இதைத்தான் பகவான் போதிக்கிறார். அவர் காட்டும் வழி:


  • இயல்பாக  நேர்ந்த கர்மத்தை (ஸ்வதர்மம்) மட்டும் செய். (கார்யம் கர்ம, நியதம் கர்ம , ஸஹஜம் கர்ம )
  • அதை யஜ்ஞமாகச் (வேள்வி) செய். யஜ்ஞம் செய்யாமல் உண்பவன் திருடன்.
  • அதை யோகமாகச் செய்.
  • ஸங்கல்பத்தைத் துறந்து செய்.
  • பலனில் பற்றில்லாமல் செய்.
  • அகந்தையின்றிச் செய்.
  • காம்ய கர்மம் செய்யாதே.
  • கர்மத்தை பகவானின் ஆராதனமாகச் செய்.
  • எப்போதும் பகவானை நினைத்துச் செய்.
  • கர்மத்தை-அதன் பலனை- பகவானுக்கு அர்ப்பணம் செய். 
  • கர்மம் செய்யாமல் இருப்பதில் விருப்பம் கொள்ளாதே. (கர்மத்தைத் துறப்பது ஸன்யாசமில்லை. கர்ம பலனைத் துறப்பதுதான் த்யாகம்.)
  • இவ்வாறு கர்மம் புரிந்து, மீண்டும் பிறவித்தளையில் படாமல் இருப்பதுதான்  திறமை (யோக: கர்மஸு கௌஶலம்)




இன்று சமூகம் இந்த நிலையிலிருந்து  எங்கோ சென்றுவிட்டது. வேலை செய்தே வயிறு வளர்க்கவேண்டும்; ஆனால் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு பலருக்கும்- குறிப்பாக, நடுத்தர வர்கத்தினருக்கு- சுதந்திரமில்லை!  யார் எதையும் செய்யலாம் என்ற நிலை! ஸ்வதர்மம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால், சமுதாய நிலை மாறிவிட்டதால் கர்மத்தின் இயல்பு மாறிவிடவில்லை! குற்றம் குறை இல்லாத கர்மம் இல்லை. ஆனால் எந்தக் கர்மத்தையும் அதற்குரியவர்கள் செய்தால் பாவமில்லை!  தனக்கென இயல்பாக இல்லாத கர்மத்தைச் செய்தால்தான் பாவம் வருகிறது!

இதை இன்றைய பகுத்தறிவு வாதிகளும் பொதுவாகப் படித்தவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தத் தொழில் செய்தாலும் பரவாயில்லை; 'செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்' என்பதெல்லாம் இன்றைய  கொள்கைகள்!

டாக்டர், வக்கீல்  தொழில் சேவையா, சுரண்டலா?

ஒரு காலத்தில் டாக்டர், வக்கீல், இஞ்சினீயர்  போன்ற தொழில்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தனர்.  பொதுவாக  சமூகத்தில் செல்வாக்குமிக்கதாக இவை கருதப்பட்டன.  ஆனால், சில சமயப்பெரியவர்கள் இத்தொழில்களை  பாவம் மிக்கதாகவே கருதினார்கள்! ஏதோ துன்பத்தில் உள்ளவர்கள்தான்  டாக்டர்களையும் வக்கீல்களையும் நாடுகிறார்கள். அவர்களிடம் பணம் சுரண்டித்தானே இவர்கள் "சேவை" செய்கிறார்கள்? இஞ்சினீயர்களோ, முன்னேற்றம் என்றபெயரில் மரங்களை வெட்டுகிறார்கள், குளம் குட்டைகளைத் தூர்க்கிறார்கள், ஓடும் நதிகளைத் தடுக்கிறார்கள்- எல்லாம் இயற்கைக்கு ஊறு செய்யும் செயல்கள்!  பாவம்  சேராமல் புண்ணியமா வரும் ?

ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்  வக்கீல்களிடமிருந்தும், டாக்டர்களிடமிருந்தும் எதையும் வாங்கிக்கொள்ளமாட்டார்! பிறருடைய கஷ்டத்தை வைத்து காசு சம்பாதிப்பவர்கள் இவர்கள் என்பது அவர் கருத்து!

50வருஷங்களுக்கு முன்பு வரையில் டாகடர்களிடமும் வக்கீல்களிடமும் இன்றைக்கு இருப்பது  போன்ற வியாபார புத்தி இருந்ததில்லை. எனக்கு சில டாக்டர்களிடமும் வக்கில்களிடமும் பழக்கம் இருந்தது. நான் பார்த்த வரையில் அவர்கள் ஏதோ ஒரு சுயக் கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். நான் இருந்த  ஊரில் எந்த டாக்டரும் கை நீட்டி காசுவங்கியதை  நான் பார்த்ததில்லை!  குடும்ப டாக்டர் என்று இருப்பார்.கன்ஸல்டேஷன் என்று கட்டணமும்  வாங்கமாட்டர்கள்.  உடலைப் பார்த்து  எழுதிக் கொடுப்பார்கள். கம்பவுண்டர் என்று இருப்பார், அவர்  மருந்தைக் கொடுப்பார்.  நோட்டுப் புத்தகத்தில்  எழுதிக்கொள்வார். மறுபடியும் போகும்போது நாம் கொடுப்பதை வரவு வைத்துக் கொள்வார்.  உடனுக்குடன் காசு கொடுத்தால்தான் மருந்து என்ற நிலையை நான் பார்த்ததில்லை. இன்று மருத்துவம்  சேவை, தொழில், வியாபாரம் என்ற நிலைகளைத் தாண்டி பகல் கொள்ளை யாகிவிட்டது.

இன்னும் ஒன்றையும் கவனித்தேன்.  டாக்டர்களுக்கும் வக்கீல்களுக்கும் அவர்கள்  துறையின் சிறுமை தெரிந்தே இருந்தது! அவர்களில் பலரும் ஏதோ உபாஸனை, பூஜை என்று வைத்துக்கொண்டிருந்தார்கள்.-பரிஹாரம் தேடிக்கொண்டார்கள்! இதை அறிந்துதான் செய்தார்களா என்பது தெரியாது!

தொழில், கர்மம், பாவம்!

இரண்டு விஷயங்களைச் சொல்லவேண்டும் 


என் கொள்ளுத்தாத்தா க்ராமத்தில் இருந்தவர், ஏதோ உபாஸனை வைத்திருந்தார்.  மணி- மன்த்ரம்- ஔஷதம் என்று பார்ப்பாராம். பொதுவாக மருந்து கொடுப்பார். சிலரை  ஏதோ ஜபம் செய்யச்சொல்வார். சிலருக்காக- மன்த்ரங்கள் வாயில் நுழையாதவர்களுக்காக -தாமே ஜபமும்  செய்வார், பூஜை செய்து விபூதியும் கொடுப்பார். ஆனால் , பிராமணர்கள் வந்துவிட்டால், அவருக்கு உதறல்! முதலில் ஜாதகம் கொண்டுவரச் சொல்லிப் பார்ப்பாராம். வந்தது கர்ம வியாதி இல்லை என்று தெரிந்தால்தான் .மருந்து கொடுப்பாராம். இல்லையென்றால் " அப்பா, இது கர்மத்தினால் வந்த வியாதி. இதில் நான் தலையிட முடியாது; ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் காட்டி பரிகாரம் தேடிக்கொள் " என்று சொல்லிவிடுவாராம்! பிறர் கர்மத்தில் தலையிடுவது என்றால் அவ்வளவு பயம்! அவர் செய்த வைத்தியத்திற்குக் காசு வாங்கியது இல்லை!  காசுவாங்குவதும் கர்மத்தை ஏற்பதுதான்! கஷ்ட ஜீவனம்தான்.இன்று கர்மத்திற்கு பயப்படுபவர்கள் யாராவது  இருக்கிறார்களா?


இன்னொருவர் எனக்குத் தெரிந்த வக்கீல். ஜில்லா கோர்ட்டில் பிராக்டீஸ். முப்பது வருஷங்களுக்குமேல்  ப்ராக்டீஸ் செய்தும்  அப்படியொன்றும் வருமானம் இல்லை. சிரமப்பட்டுத்தான்  ஜீவனம். ஆனால் மனிதன் கெட்டிக்காரர். அவர் தொழிலில் தீவிரம் காட்டியதாகவே தெரியவில்லை. ஒருமுறை நானே அவரிடம் கேட்டேன்.அவர் சொன்ன பதில்:


ஆமாம்! இது என்ன தொழில்! கேஸ், கேஸ் என்று வருகிறார்கள் பாதிப்பேர் புளுகுவார்கள். முதலில் இவன் சொல்வது உண்மைதானா என்று பார்க்கவேண்டும். இவன் பக்கம் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.  சில விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது. குடும்பத் தகறாறு என்றால் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இன்று  சண்டை போடுவார்கள்; நாள் விட்டு சமாதானமாகப் போக இடமிருக்கிறது. அண்ணன் -தம்பி சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள் . அவர்கள் உடலில் ஓடுவது ஒரே ரத்தம். கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?  சரி, அவர்கள்தான் புத்திகெட்டவர்கள் என்றால், நம் புத்தி  எங்கே போகிறது? நமக்கும் பிள்ளை-குட்டி இருக்கிறது. அண்ணன்- தம்பி விவகாரத்தை நாம் பெரிது படுத்தலாமா?

புருஷன்- பெண்டாட்டி விவகாரமும் இப்படிதான். நம்மால் முடிந்தால் சமாதானம் செய்துவைக்க வேண்டும். கோர்ட்,கச்சேரி என்று போனால், ஒவ்வொரு வக்கீலும் சிறிய விஷயத்தையும் பெரிது படுத்துவான்; குடும்ப விஷயங்கள்  தெருவுக்கு வரும்.  சமாதானத்திற்கான  கொஞ்ச  நஞ்ச வாய்ப்பும் போய்விடும். குடும்பப் பெரியவர்களின் பெயர் கெடும். காசுக்காக கேசை நீட்டுவான். வக்கீல் என்பதை விடு- இதெல்லாம் ஒரு பண்புள்ள  மனிதன் செய்யத் தகுந்த செயலா? காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதா?  நான் இதுவரை ஒரு விவாகரத்து கேஸ்கூட தொட்டதில்லை!


இப்பொழுது பார் (சொன்னது 1974ல்)- யார் யாரோ  முன்சிஃப், மாஜிஸ்டிரேட் என்று வருகிறான். ஒரு பண்பு இல்லை; சட்டம் சரியாகத் தெரிவதில்லை; நாம் எடுத்துச்  சொன்னால் கோபம் வருகிறது-வன்மம் வைத்துக் கொள்கிறான். இந்த மாதிரி சின்ன ஊரில் கட்சிக்காரன் ஜாதி என்ன வென்று பார்க்கிறான்,.இவர்கள் எதிரில் போய் நின்று நாம் பேசவேண்டும்!ஏதோ என் கர்மம்- இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டேன். தொழில் தர்மம் என்று சொல்லி ஏன் அதர்மத்தைச் செய்து பாவத்தைக் கட்டிக்கொள்ள வேணும்? ஏதோ காலக்ஷேபம் நடந்தால்  சரி.

இந்த 40  வருஷங்களில் நிலமை மேலும் மோசமாகியிருக்கிறது.

ஹிந்த் ஸ்வராஜ்


வக்கீல்கள்,  ஆங்கிலேய வைத்தியர்கள்  இவர்கள் இந்தியாவை  எப்படிக் கெடுத்தார்கள் என்பதை காந்திஜி  1908ல் எழுதிய  'ஹிந்த் ஸ்வராஜ்" என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். ஆனால் இன்றைய நிலையில் எல்லாத் தொழில்களுமே  இந்தியாவை மேன்மேலும் மேலை நாட்டு மோகத்திற்கு  அடிமையாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன. நியாயம், தர்மம், பாவ-புண்ணியம் என்ற எண்ணங்களுக்கு இடமில்லை.  நமது சட்டம், பொருளாதாரம், அரசியல், நிர்வாகம் , மருத்துவம் என்ற எந்தத் துறையும், இவை தார்மீகக் கருத்துக்கள் என்பதால் இவற்றை ஏற்பதில்லை.


ஆனால் பாவ-புண்ணியம், கர்மம், கர்மவினை என்ற இவை  காலத்தால் அழிவதில்லை. அரசியல் சட்டத்தால் இவற்றை அசைக்க முடியாது.  மனிதன் "அறம் பாவமென்னும் அருங்கயிற்றால் "  கட்டப்படுகிறான் என்கிறார் மாணிக்க வாசகர். பாவமோ, புண்ணியமோ நாம் செய்யும் கர்மத்தால் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இது மிகவும் சூக்ஷ்மமான விஷயம். गहना कर्मणो गतिः "கஹனா கர்மணோ கதி:"  என்கிறார் பகவான், கீதையில். (4.17) [கர்மத்தின் போக்கு ஆழமானது, எளிதில் அறியமுடியாதது.)



இன்றைய இளைஞர்கள்  பொருளாதார ஆதாயம் ஒன்றை மட்டுமே கருதி  தம் தொழிலையோ, துறையையோ  தேர்ந்தெடுக்கிறார்கள். பல பொது தர்மங்கள் அருகியும்,அழிந்தும் வருவதோடு, தனி மனித வாழ்விலும் பாவங்கள் சேர்கின்றன. இது எங்கு போய் நிற்கும் என்று யாரே சொல்ல வியலும்?



The world is too much with us; late and soon,
Getting and spending, we lay waste our powers;—
Little we see in Nature that is ours;
We have given our hearts away, a sordid boon!
This Sea that bares her bosom to the moon;
The winds that will be howling at all hours,
And are up-gathered now like sleeping flowers;
For this, for everything, we are out of tune;
It moves us not.

William Wordsworth.