Saturday, 8 October 2016

75. எப்படி நன்றி சொல்வது ?


75. எப்படி நன்றி சொல்வது ?


ஒருவர்  நமக்குச் செய்த உபகாரத்திற்கு நன்றி பாராட்டுவது, நாம் ஒருவருக்கு  [தெரிந்தோ தெரியாமலோ ] செய்த  தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது - இவை எல்லா சமூகத்திலும் பண்பட்ட மக்களிடையே பரவலாக இருக்கும் நல்ல குணங்கள்.  "Oh, I am sorry " , 'Oh, thank you "-  இவை சொல்லாத ஆங்கிலம் பயின்றவர்கள் பண்பட்டவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.  நாம் பொதுவாக  "நன்றி" என்று சொல்வதில்லை- பெரும்பாலும் "சந்தோஷம்" என்றே சொல்கிறோம்; அதன் அடிப்படை நன்றி உணர்ச்சிதான். "சாரி" சொல்வது அவ்வளவு எளிதாக வருவதில்லை!

செய்த நன்றி திரும்பிவரும்


ஒருவருக்கு நாம் செய்த நல்லது நமக்கே திரும்பி வரும் என்பது -உண்மையில் அது நமக்கே நாம் செய்துகொள்வதுதான் என்பது -நமது மதத்தின் கொள்கை. இதை ஔவையார்  மூதுரையில் அழகாகச் சொன்னார்:




நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்..



ஆனால் எல்லோரும் நன்றிபாராட்டும் இயல்புடையவர்களாக இருப்பதில்லை! இதையும் ஔவையாரே சொல்கிறார்:

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர்.

மனிதனும் மிருகமும்

வீட்டில் செல்லப் பிராணி வளர்த்தவர்களுக்குத் தெரியும்- நாய், பூனை, மாடு, குதிரை என எதுவானாலும் செய்த நன்றி மறக்காத குணமுடையவை. யானை, சிம்பான்ஃஜி போன்ற விலங்குகளும் நன்றி மறக்காதவை. ஏன், சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் நன்றி பாராட்டுகின்ற நிகழ்ச்சிகளை நாம் அறிவோம்.



அனாதையாக விடப்பட்ட சிறு சிங்கக்குட்டியை இந்த   ஜெர்மன் வெடரினரி டாக்டர் Val Gruener வளர்த்தார்! இது காட்டும் நன்றியைப் பாருங்கள் ! Daily Mail.




  நன்றி மறப்பது மனிதனுக்கே உரிய குணம் போலும். அதனால்தான் 
வள்ளுவப் பெருமான்  "செய்ந்நன்றி அறிதல் " என்று ஒரு அதிகாரமே வகுத்தார். அதன் இறுதியில் ஆணித்தரமாகச் சொல்கிறார்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

மனித வாழ்க்கைக்கு எவ்வளவோ பேர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும்  ஆதாரமாக இருக்கிறது. இயற்கையில் உள்ள எவ்வளவோ சக்திகள் ஆதாரமாக இருக்கின்றன, இதற்கெல்லாம் எப்படி நன்றி சொல்வது? 

நன்றி சொல்லமுடியாத விஷயங்கள்

சில விஷயங்களுக்கு நன்றி சொல்லவே முடியாது, தாய் சிசுவுக்கு ஆற்றும் நன்மைக்கு எப்படி  நன்றி சொல்வது? தாயைப் போற்றுவதோடு சரி. அதற்குமேல் தாய்மையையே போற்றுகிறோம்.



யாதேவீ  ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண  ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை
நமோ நம :
என்று தாய்மைத் தத்துவத்தையே வணங்குகிறோம். 

Yourekaheartbeats.blogspot.com




நீரின்றி அமையாது உலகு. அதுவே அசல் அமுதம். ஆனால் அதைத் தரும் மழைக்கு நாம் எப்படி நன்றி சொல்வது ?  "மாரிமாட்டு என்னாற்றுங்கொல்லோ உலகு "  என்று கேட்கிறார் வள்ளுவர். வரும் மழை நீரை சரியானபடி சேகரித்து சிக்கனமாக, சரியான முறையில் பயன்படுத்துவதே நாம் அதற்குச் செய்யும்  கைம்மாறாகும். நாகரீகம் முற்றிய இக்காலத்தில் இதைக்கூட நாம் செய்வதில்லை !






ஹிந்துமதம் காட்டும் வழி
ஆனால் நமது  மதத்தில் இதெற்கெல்லாம் வழிவகுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஒவ்வொரு இல்லறத்தானுக்கும்  உரிய கடமையாக வைத்தார்கள். இதைச் செய்வதால் புண்ணியம் வராது; செய்யாவிட்டால் பாபம் வரும் என்றார்கள். இதை பஞ்ச யஜ்ஞம் அல்லது ஐந்து வேள்விகள் என்றார்கள். இதன்படி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாத நன்மையைச் செய்யும் ஐந்து பேருக்கு நாம்  ஐந்து வகையில் நன்றி தெரிவிக்க வேணும். இதைத் தினமும் செய்யவேண்டும். இருக்கும் பொருளைக்கொண்டு இருந்த இடத்திலேயே செய்யவேண்டும்.- காடு, கீடு என்று ஓடவேண்டியதில்லை. இதை "கடன் " என்று சொன்னார்கள் !இந்த ஐந்து பேருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம். அதைத் தீர்க்கவேண்டும் !

1 ரிஷி / ப்ரஹ்ம யஜ்ஞம்:

உலகத்தில் எவ்வளவோ ஜீவராசிகள் இருக்கின்றன. எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம் என்பார்கள். இதில் மனிதன் மட்டுமே தன்னைப்பற்றி அறியும் நிலையில் இருக்கிறான். [ Self-conscious }.  மனிதன் யார், எங்கிருந்து  எதற்காக வந்தான், என்ன செய்யவேண்டும் என்பதை நமது ரிஷிகள்  ஞானதிருஷ்டியினால் கண்டு சொன்னார்கள்.-இதை "திறவோர் காட்சி " எனலாம். நாம் இந்த உடலல்ல; இந்த உடல் அழிவதால் "நாம்" அழிவதில்லை.  நாம் அமரத்தன்மை உடையவர்கள் --அந்த அறிவை/ நினைவை மறந்துவிட்டோம்; ; அதை மீண்டும் பெற்று நம் உண்மை நிலையை அறிவதே வாழ்க்கையின் லக்ஷ்யம்  என்று நமது ரிஷிகள் சொன்னார்கள். "ஶ்ருண்வந்து விஶ்வே அம்ருதஸ்ய புத்ரா: " உலக மக்களே கேளுங்கள்- நீங்கள் அமரத்தன்மையின் குழந்தைகள் என்று முழங்கினார்கள். இவற்றை உபனிஷதம் என்று ஆக்கித் தந்தார்கள்.

இதை அறிவதற்கு பக்குவம் வரவேண்டும்- மனம் செம்மைப்பட வேண்டும். அதற்காக சில கடமைகளை-கர்மாக்களை விதித்தார்கள். இவ்வாறு, கர்மம் செய்து மனம் தூய்மை பெற்று நமது உண்மையான இயல்பை அறிய வழி வகுத்தார்கள் இப்படி நமது ஞானக்கண்ணை- அறிவுக்கண்ணைத் திறந்தார்கள். நமது முதல் நன்றி இவர்களுக்கே உரியது. ஆனால்  உண்மையில் இதன் மூலம்  நாம் நமக்கேதான்  நன்மை செய்து கொள்கிறோம்! தேவர் உலகத்திலும் இது நடக்காது! மனித வாழ்க்கையில் தான் நடக்கும்.  அதனால் தான் ஆபுத்திரன்  இந்திரனை எள்ளி நகையாடி " ஐயா பெரியவரே! போய்வாருங்கள் ! அறஞ்செய் மாக்கள் புறங்காத்தோம்புனர், நற்றவஞ்செய்வோர், பற்றற முயல்வோர் , யாவரும் இல்லாத் தேவர்  நன்னாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே " என்று சொன்னான். 
நமது அறிவுக்கண்ணைத்திறந்து, விலங்கு நிலையிலிருந்து, மனித நிலையிலிருந்து நம்மை மேலேற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து,  ஆத்ம லாபம் பெற  வழிவகுத்த  ரிஷிகளுக்கே முதல் நன்றி  உரித்தாகும்.

அவர்கள் காட்டிய  நெறிகளைக் கடைப்பிடித்து, அவர்கள் சொன்னதைக் கற்று அதன்படி நடந்து, அதைப் பிறருக்கும்  போதிப்பதே  அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, இதுவே    ரிஷி யஜ்ஞமாகும்.


2. தேவ யஜ்ஞம் :

இந்த உலகை பலவித இயற்கைச் சக்திகள் இயக்குகின்றன. இவை தானே இயங்குவதில்லை. இவற்றுக்குபின் தேவர்கள் இருக்கிறார்கள் . இது ஈஶ்வர நியதி. இவர்கள் போஷணையால் நாம் ஜீவிப்பதால், இவர்களைப் போஷிப்பது நமது கடமையாகிறது, இவ்வாறு போஷிப்பதே இவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

இதை கீதை மிகத் தெளிவாகச் சொல்கிறது.

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः।।3.14।।



அன்னாத் பவந்தி பூதானி  பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ  யஜ்ஞ: கர்ம சமுத்பவ:

உயிரினங்கள் அனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன. மழையிலிருந்து உணவின் உற்பத்தி ஏற்படுகிறது. மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது. வேள்வி விதிக்கப்பட்ட கர்மங்களிலிருந்து உண்டாகிறது.

कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।

तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्।।3.15।।



கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்ம அக்ஷர ஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வகதம்  ப்ரஹ்ம  நித்யம் யஜ்ஞோ ப்ரதிஷ்டிதம்

கர்மங்கள் வேதத்திலிருந்து உண்டாகின்றன, வேதம் அழிவற்ற பரமாத்மாவிடமிருந்து வந்தது என்று தெரிந்துகொள். எனவே எங்கும் நிறைந்த அழிவற்ற பரமாத்மா  எப்பொழுதும் வேள்வியில் நிலைபெற்றிருக்கிறார் எனத் தெளிவாயாக.

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।

अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति।।3.16।।



ஏவம் ப்ரவர்த்திதம் சக்ரம்  நானுவர்த்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ  மோகம் பார்த்த ஸ ஜீவதி.

பார்த்தா! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரையாகத் தொடங்கி  நடந்துவரும் படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாக பின்பற்றி நடக்கவில்லையோ - தன் கடமையைச் செய்யவில்லையோ- புலன்கள் வழியாக போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவவாழ்க்கை வாழ்பவன் வீணே வாழ்கிறான்.




தமிழில் மாதம் மும்மாரி என்பது மரபு. இதில் ஒன்று, அந்தணர்களின் வேள்வியினால் வருவது.
இது தவிற, ஒவ்வொருவரும் தம் குல ஆசாரப்படி தம் குலதெய்வம், இஷ்ட தெய்வம், கிராம தேவதை ஆகியவர்களுக்கு உரிய வழிபாடு செய்யவேண்டும். இது பொது நன்மையைக் கருதிச் செய்வது.

இப்படி தேவ யஜ்ஞம் நம்மை வாழவைக்கும் சக்திகளுக்கு நாம் பாராட்டும் நன்றியாகும்.

3. பித்ரு யஜ்ஞம் :

நாம் எந்த தர்மத்தைச் செய்தாலும் இந்த உடலை வைத்தே செய்யவேண்டும். ஶரீர மாத்யம் கலு தர்ம ஸாதனம். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே [ஏனெனில் ஊனுக்குள் ஈசன் உறைகிறான் ] என்பார் திருமூலர். இந்த உடல் நமது பெற்றோர்களால் வருவது. இப்படி பரம்பரையாக நமது மூதாதையர்கள் வழி நாம் உடல்பெற்று  ஆன்மீக  முயற்சியில் ஈடுபட்டு மேன்மை அடைகிறோம். அவர்கள் இருக்கும் இடம் பித்ருலோகம். அவர்களை நினைத்து நாம்செய்யும் நன்றியே பிதிர்க்கடனாகும். இதன் நன்மை அவர்கள் இன்று எந்த உலகில், உடலில் இருந்தாலும் அவர்களைத் தவறாது அடையும்.

4. நர யஜ்ஞம் :

நமது வாழ்வுக்கு எவ்வளவோபேர் எத்தனையோ விதத்தில் உழைக்கிறார்கள். அவர்களை நாம் அறியோம். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது? நம் காட்சிக்கு வருபவர்களுக்கு நாம் உதவவேண்டும். அதிதிகளுக்கு உணவிடுதல், அனாதைகளுக்கு உதவுதல்,  எல்லாருக்கும் பயன்படும் பொதுத்தொண்டு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

5, பூத யஜ்ஞம் :




இது எல்லாவகை உயிரினங்களுக்காகவும் செய்வது. நமக்கு  உணவு தானியங்கள்,  காய்கறி பழங்கள்  வர எவ்வளவு ஜீவராசிகள் உழைக்கின்றன! யாரோ என்றோ போட்ட  விதை இன்று நமக்குப் பூவும் காயும் பழமும் நிழலும் தருகிறது! வண்ணத்துபூச்சியும், வண்டும் மலரில் அமர்ந்து பூ காய், பழம் ஆக வழிசெய்கிறது! இவற்றுக்கு நாம் எப்படி  நன்றி சொல்வது? காக்கைக்கு சாதம் வைப்பது, எறும்புக்கு உணவாகுமாறு அரிசிமாவினால் கோலம் போடுவது என்பவை நாம் இதற்காக ஒரு அடையாளமாகச்   Symbolic செய்கிறோம். இதை யாவரும் செய்யலாம். திருமூலர் சொல்கிறார்:

யாவர்க்குமாம் இறைவற்கொரு  பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறற்கின்னுரை தானே.


வள்ளுவர் சொல்வது

இவ்வளவு விஷயங்களையும் தமக்கே உரிய வழியில் மிக எளிமையாகவும் தெளிவாகவும்  "இல்வாழ்க்கை " என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர். சொல்லிவிட்டார். குறிப்பாக ஐந்து வேள்விகளைப்பற்றிச் சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை. 

இங்கு தென்புலத்தார் என்பது பித்ருக்கள். அவர்களுக்கு உரிய திசை தெற்கு. என்பது நமது நாட்டு நம்பிக்கை.  பிறற்குரிய கடனைச் செய்துவிட்டு கடைசியில் 'தான் ' என்கிறார்.  இங்கு தன்னை ஓம்புவது  என்பது என்ன?  உடலை எப்படி ஓம்பினாலும் அது ஒரு நாள் அழிந்துவிடும். எனவே, இங்கு அழியும் உடலை மட்டுமே குறிக்கவில்லை. இந்த உடலை வைத்து  ஆற்றவேண்டிய  கடனை,  அடையவேண்டிய  உயர்ந்த லக்ஷியத்தைச் சொல்கிறார். அதுதான் ஆன்ம வித்தை, இதையே நாம் ப்ரஹ்ம யஜ்ஞம் அல்லது ரிஷி யஜ்ஞம் என்கிறோம்.

பண்டிகைகள்: விரதமும் விழாவும்

நமது பண்டிகைகளில் சிலவற்றை விரதமாக ஏற்கிறோம்; சிலவற்றை விழாவாக கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். தீபாவளி, பொங்கல்  இரண்டும் மிகக் கோலகலமாகக் கொண்டாடப் படுகின்றன. இவற்றின் போது நாம் நம்முடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் தந்து நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொங்கல் சூரியனுக்கு நாம் செலுத்தும் நன்றியின் உருவம்தான்.

இது உலகம் முழுவதும் பரவியிருந்த புராதன வழக்கம். கிறிஸ்தவ மதமும் இஸ்லாமும்  தோன்றி இதை அழித்துவிட்டன, ஆனாலும் முழுதும் அழியவில்லை. ஏசு நாதர் பிறந்த நாள் யாருக்கும் தெரியாது ! அவர்கள் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுவது இத்தகைய சூரிய வழிபாடே  Harvest Festival  என்பது பல அறிஞர்களின் கருத்து. இன்றுகூட கனடாவிலும் அமெரிக்காவிலும்  Thanksgiving Day  என்று விடுமுறைவிட்டு கொண்டாடுகிறார்கள்! கனடாவில் அக்டோபரிலும் ஐக்கிய அமெரிக்காவில்  நவம்பரிலும் தடபுடலாகக் கொண்டாடுகிறார்கள் ! சமய அளவில் அறுவடை சார்ந்த விழாவாக இருந்த இது இன்று  சமூக அளவில்  Secular  விழாவாக மாறிவிட்டது. ஆனால் அடிப்படை, நன்றி தெரிவித்தல் தான் !


Harvest Festival Flowers at united Reformed Church, Shrewsbury, UK.
Marion Haworth, CC  BY-SA 2.0 Creativecommons  via Wikimedia Commons.




Wednesday, 5 October 2016

74. திருப்பதி முருகன் ?



74. திருப்பதி முருகன் ?


நம்மில் சிலருக்கு புரளிகள்  கிளப்பிவிடுவதில் அலாதிப் பிரியம் போலும்! தமிழ்ப் பற்று, தமிழர் பெருமை என்ற பெயரில் எதையாவது கிளப்பிவிடுவர். திருஞான சம்பந்தர் ஆயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்தார் என்று ஒருவர் கணக்குச் சொன்னார்! தாலி கட்டுவது தமிழர் வழக்கமில்லை என்று சிலர் முழங்கினர். ராவணன் திராவிடன் என்றனர். இப்படி எத்தனையோ !

இப்போது சிலர், திருப்பதியில் இருப்பது முருகனே;  பின்னர் வந்த வைஷ்ணவர்கள் விக்ரஹத்தில் மாறுதல் செய்து பாலாஜியாக மாற்றிவிட்டனர் என்கின்றனர்.இந்தமாதிரி ஒரு கருத்து சில வட்டாரங்களில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் இன்று இதற்கு அரசியல் சாயமும், மொழிவெறியும்,துவேஷமும்  ஏற்றி  இன்டர்நெட்டில் உலவவிடுகிறார்கள்.

குறிஞ்சிக் கடவுள் முருகன்


இதற்கு முக்கிய ஆதாரமாக இவர்கள் சொல்வது, முருகன் குறிஞ்சி நிலக்கடவுள்; எல்லா குன்றுகளும்-மலைகளும் முருகனுக்கே உரிய இடம்; ஒருகாலத்தில் தமிழ் நாட்டின் எல்லையாக இருந்த வேங்கடமலையில் முருகன் இல்லாமல் விஷ்ணு இருப்பது பொருத்தமல்ல என்பதே. அங்கிருக்கும் பல  தமிழ் கல்வெட்டுகளின்மீது சுண்ணாம்படித்து தெலுங்கர்கள் தமிழர்களுக்கு அநியாயம் செய்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.


பழந்தமிழ் நாட்டில் நிலத்தை ஐவகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் என வகுத்தார்கள். இந்த செய்தி தமிழில் இருக்கும் நூல்களில் மிகப் பழமையானதாகக் கருதப்படும்  தொல்காப்பியத்தில் வருகிறது.

       'மாயோன் மேய காடுறை உலகமும்
     சேயோன் மேய மைவரை உலகமும்
     வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
     வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
     சொல்லிய முறையாற்  சொல்லவும் படுமே.' 


இது பொருளதிகாரத்தில் வரும் 5ம் சூத்திரம். இதன்படி, நிலம்  4வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் குறிப்பிடப் பட்டது தெரிகிறது. இதன்படி,

முல்லை:  காடும்  காடுசார்ந்த பகுதி - தெய்வம் - மாயோன் =திருமால்
குறிஞ்சி : மலையும் மலை சார்ந்த இடமும். தெய்வம் சேயோன்= முருகன்
மருதம் : வயலும் வயல் சார்ந்த பகுதியும்  தெய்வம்- வேந்தன் = இந்த்ரன்
நெய்தல் -கடலும் கடல் சார்ந்த பகுதியும். தெய்வம் வருணன்.

சொல்லவும் படுமே என்று தொல்காப்பியர் அடக்கமாகச் சொல்கிறார்: இவ்வாறு  சொல்கிறார்கள்-சொல்லப்படுகிறது என்கிறார். அவரே புதிதாகச் சொல்லவில்லை. எனவே இது  மிகத் தொன்மையான வழக்கு. 

பிறகு காலப்போக்கில்   முல்லையும் குறிஞ்சியும்  நீர்வளம் குன்றி பாலையாக மாறியது. இதை சிலப்பதிகாரத்தில்  தெரிந்துகொள்கிறோம்.



         'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
      நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
      பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.' 

 



இது காடுகாண் காதையில் வருகிறது. பாலைக்குரிய  திணையை  "நடுவு நிலைத் திணை " என்பார் தொல்காப்பியர். பாலைக்குத் தெய்வம் கொற்றவை- துர்க்கை  என ஆயிற்று.

குன்று தோறும் குமரன் கோயில் ?


இதன்படி, குறிஞ்சி நிலத்திற்கு தெய்வம் முருகன் என்பது தெளிவாகிறது. ஆனால், எல்லா குன்றுகளிலும் மலைகளிலும் முருகன் கோவில் இல்லை! மலை இல்லாத இடங்களிலும் முருகன் வழிபாடு இருக்கிறது. ஷோளிங்கரில் நரசிம்மர் அமர்ந்திருக்கிறார். கழுக்குன்றத்தில் சிவபெருமான்! இன்னும் எத்தனையோ சொல்லலாம். அறுபடை வீட்டில் ஒன்றாகக் கருதப்படும் சுவாமிமலை இயற்கைக் குன்றே அல்ல! [இதனால் உண்மையான சுவாமிமலை இதுவல்ல, மலை நாட்டில் உள்ளது  என்று சிலர் சொல்வர்.. அருணகிரி நாத சுவாமிகள் இப்போதுள்ள ஊரையே பாடியிருக்கிறார். இதை விரிவாக வேறொரு இடத்தில் எழுதியிருக்கிறேன்.]



. இதனால் முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் அங்கு எல்லா மலை,  குன்றுமீதும்  கோவில் இருந்தது என்பது  பொருளல்ல. மலைவாழ் மக்கள் மலையையே தெய்வமாக வழிபட்டனர்.- குன்றே குமரன்! [ க்ருஷ்ணர்  கோவர்த்தன கிரியையே பூஜை செய்யச் சொன்னார் என்பதை இங்கு நினைவுகூறுவோம் ] மலைவாழ் மக்கள் பலவிதமாக, பல இடங்களில் முருகனை வழிபட்டனர். இதை திருமுருகாற்றுப் படையில் பார்க்கிறோம். எனவே இதை மட்டுமே வைத்து மலைமேல் இருப்பது பெருமாள் அல்ல என்று சொல்ல முடியாது. அப்படியெனில் மலைமேல் சிவன் கோவில் வந்தது எப்படிச் சரியாகும்? திருச்சிராப்பளியில் மலைமேல் பிள்ளையாரல்லவோ இருக்கிறார்!  திருச்சிராப்பள்ளித் தியானமே  முருகன் வழிபாடு எனப் பொருள்வர எழுதினார்  அருணகிரி நாதர்.


சிராப்பளி என்பார் மனமேதினி  நோக்கிய பெருமாளே !
 [சிராப்பள்ளி என்பார் மனதையே கோயிலாகக் கொண்ட பெருமாளே]


அருணகிரி நாதர் திருப்பதியில் திருப்புகழ் பாடியிருக்கிறார். இதைவைத்து அங்கு இருந்தது முருகன் தான் எனச் சொல்லமுடியுமா?  அருணகிரி நாதருக்கு முருகன் வழிபடுகடவுளாக- இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அவருக்கு பிற தெய்வங்கள் மீது வெறுப்பு இல்லை. முத்தைத்தரும் முதல் திருப்புகழிலேயே  ராமாயண, பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்லி. "பச்சைப்புயல் மெச்சத்தகு பொருள் "  ( மேகவர்ணன் திருமால் மெச்சும் முருகனே) எனப் பாடுகிறார். 






இன்று நமக்கு திருப்புகழ் நூல் கிடைக்கக் காரணமாக இருந்த பெரியவர் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை. பரம்பரையாக முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட  நெறியில் வந்தவர். இவர் திருமகனார் வ.சு. செங்கல்வராயபிள்ளை. தணிகைமணி எனச் சிறப்புப் பெற்றவர்.  திருப்புகழைச் செம்மையாகப் பதித்து அதற்கு உரை எழுதி வாழ்நாள் முழுதும் அதிலேயே ஊறித்  திளைத்தவர். இவர் திருப்பதித் திருப்புகழுக்கு எழுதிய உரையில் திருவாஞ்சியம் திருப்புகழை எடுத்துக்காட்டி அங்கு திருப்பதிமலையில் இருந்தது திருமால் என்பதைக் காட்டுகிறார்.


"பாண்டவர்க்கு  வரதன், மை உருவோன், பிரசித்த நெடியவன், ரிஷிகேசன், உலகீன்ற பச்சை உமை யண்ணன், வடவேங்கடத்தில் உறைபவன்,  உயர் சார்ங்க, கட்க, கரதலன்" 
எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்!

அருணகிரி நாதர்  எந்த க்ஷேத்திரத்திலும் முருகனையே பாடினார். சிதம்பரம் திருப்புகழில். 

கனக சபைமேவும் எனது குரு நாத 
கருணை முருகேசப்     பெருமாளே

என்று பாடுகிறார்.. அங்கு கனகசபையில் இருப்பது நடராஜாதானே!  எனில், முருகனை  புறம்தள்ளி நடராஜர் விக்ரஹத்தை வைத்தார்கள் என்பது பொருளா? எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு முருகனைத்தான் பாடுவார்!
எந்த தெய்வத்தைப் புகழ்ந்தாலும் அவர்களை முருகனுடன் சம்பந்தப் படுத்தி, கடைசி :"ஜே" முருகனுக்குத்தான் போடுவார். இதைவைத்து  அங்கு பிறதெய்வங்கள் இல்லை என்பது சரியல்ல.

தமிழ் நாட்டின் எல்லை

தொல்காப்பியத்திற்கு  பனம்பாரனார் எழுதிய  சிறப்புப் பாயிரத்தில்

வடவேங்கடந் தென் குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து

என்று வருகிறது. இதனால் பழைய காலத்தில் தமிழ் நாட்டின் எல்லைகளாக இருந்தவை வேங்கடமும் குமரிமுனையும் என்பது தெரிகிறது,

தென் குமரி  கடல் சார்ந்த பகுதி- நெய்தல் . இதற்கு தெய்வம் வருணன். ஆனால் அங்கிருப்பது குமரி அம்மன் கோயில் ! இலக்கணப்படி இது எப்படிப் பொருந்தும்?

தமிழ் நாட்டில் பல ஊர், க்ராமங்களிலும் எல்லைத்தெய்வமாக பிடாரி போன்ற  பெண்தெய்வங்களே  வழிபடப் படுகின்றன. இந்த மரபையொட்டி  நாட்டின் தென் எல்லையிலும்  அன்னைத்தெய்வத்தையே காவல் தெய்வமாக வைத்து வழிபட்டனர் என்பது பொருந்தும்.

இனி, வடக்கில் இருப்பது வேங்கட மலை. இங்கு எந்த தெய்வம் இருந்தது ?

குறிஞ்சியில் கொற்றவை !

போர்க்காலத்தில் குறிஞ்சி நிலத்துக்கு கொற்றவையும் வழிபடு தெய்வமாக அமையும் என்பது தொல்காப்பியத்தில் வருகிறது. (பொருளதிகாரம் )

மறங்கடைக் கூட்டிய  குடி நிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

அதனால்  வேங்கடத்தில் , தமிழ் நாட்டின் வட எல்லையில், காவல் தெய்வமாக இருந்தது அம்மன் எனக்கொள்ளலாமல்லவா?


இனி, வேங்கடத்தில் கோயிலின் கர்ப்பக்ரஹத்தின் மீதுள்ள விமானத்தைப் பாருங்கள் ! இதன் நாற்புறத்திலும் சிங்கத்தின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது! சிங்கம் அம்பாளின் வாஹனமல்லவா ? வேறு எங்காவது விஷ்ணு  கோயிலில் இவ்வாறு இருக்கிறதா?"

"அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாரனார்க்கே " 
என்று பாடினார் அப்பர். அம்பாள் நாராயண  சஹோதரி- நாராயணி ! ஆக, அம்பாள் கோயில் நாளடைவில் விஷ்ணு கோயிலாக மாறியது அவ்வளவு வியப்பானதல்ல! நாராயணி நாராயணனானார் !

இந்தமாதிரி விஷயங்களில் பண்பட்ட பெரியவர்களின் அறிவும் அனுபவமும் நமக்குத் துணைவரும். வெறும் ஏட்டுப் படிப்பு  மட்டும் உதவாது.

தெய்வீக அனுபவம்







ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் முதல் தலைவராக இருந்தவர் ஸ்வாமி ப்ரஹ்மானந்தர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரின்  நேர் சீடர். 'ராக்கால்' என்ற பெயரில் ஸ்ரீராமக்ருஷ்ணரால் தமது ஆன்மீக புத்திரனென மதிக்கப்பட்டவர். விவேகானந்தர் உட்பட அனைவராலும் 'ராஜா மஹராஜ்' என்று வழங்கப்பட்டவர். அனேகமாக சதாகாலமும்   உலக சிந்தனையற்று, தெய்வீக  நிலையிலேயே ஆழ்ந்திருந்தவர்.








 இத்தகையவர்  நூறு வருஷங்களுக்கு முன் திருப்பதி தரிசனத்திற்குச் சென்றார். அங்கு அவர் பாலாஜியைக் காணவில்லை- அன்னை காளி-துர்கையையே கண்டார் ! கூட இருந்தவர்கள் பாலாஜி-வெங்கடாசலபதி என்றனர். அவர் அம்பிகையைத்தான் கண்டார்! பிறகு அங்கிருந்த அர்ச்சகர்களிடம் விசாரித்தபோது இதன் உண்மை ஒருவாறு தெரிந்தது! இந்த நிகழ்ச்சி அவரது வரலாற்று  நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 



ஸ்வாமி ப்ரஹ்மானந்தர் வங்காளி. தமிழ் அறியாதவர். தமிழ் நாட்டின்  குறுகிய மதச்சண்டைகளில் ஈடுபடாதவர். இங்கு நடக்கும் வாதப்-பிரதிவாதங்களில் அக்கறை கொள்ளாதவர்- அவற்றைப்பற்றி அறியாதவர். மதவிஷயங்களில் பரந்த நோக்கு உடையவர். அவருக்கு இத்தகைய அனுபவம் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது தெளிவு.. 


மொட்டை ஆண்டியும் சடை ஆண்டியும் !

இம்மாதிரி விஷயங்களில்  உண்மையாக  ஆராச்சி செய்ய விரும்புவோர், முதலில் சரியான ஆதாரங்களைத் திரட்டவேண்டும்; அவற்றை விருப்பு-வெறுப்பின்றி  பரிசீலிக்கவேண்டும். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கேற்ப  விஷயங்களைத் திரித்துச் சொல்வது ஆராய்சியாகாது.









50/60 வருஷங்களுக்குமுன் தமிழ் நாட்டில் ஒரு சர்ச்சை நடந்தது: பழனி முருகன் மொட்டை ஆண்டியா, சடை ஆண்டியா என்று ! பார்க்காமலேயே பலரும் புரடா  விட்டார்கள் .  











வேங்கடம் முதல் குமரிவரை பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்து சரித்திர, இலக்கிய, சமய   உண்மைகளைப் பற்றி  ஆராய்ச்சிசெய்து விரிவாக எழுதிவந்த  தொ.மு பாஸ்கரத்  தொண்டைமான் அவர்கள் பழனிக்கும் சென்று விக்ரஹத்தைப் பார்த்து அது சடை ஆண்டிதான் என்று  உறுதி செய்தார். இம்மாதிரி உண்மையில் உண்மையான  நாட்டம் உள்ளவர்கள் சரியான ஆதாரங்களைச் சரியான வழியில் திரட்டி  சரியான முறையில் ஆராயவேண்டும்..


காலப்போக்கில் பல பழைய விஷயங்களை  மீண்டும்  பரிசீலித்து வருகிறோம் .ஆனால் ஆராய்ச்சி என்ற  போர்வையில் , சரியான ஆதாரங்களில்லாமல்  சொந்த மனச்சார்புகளை உண்மையென வாதிப்பது சரியாகாது. இதற்கு மொழிவெறியையும் குறுகிய பிராந்திய உணர்வையும் தூண்டிவிடுவது  பொது நலத்திற்கு  நன்மை பயக்காது. வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே !


வேங்கடத்தில் எந்த தெய்வம் இருந்தாலும், அவர்  மக்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது நிதரிசனமான உண்மை. கணக்கற்றவர்களின் அனுபவம். உண்மையான பக்தர்கள் இதிலேயே  மகிழ்ச்சியடைகிறார்கள்.






வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம் பொருளின் விளையாட்டே என்பது பெரியோர் கொள்கை, நாமும் அவர் வழியையே பின்பற்றி  அமைதியும் ஆனந்தமும் பெறுவோம்.

அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு!!