74. திருப்பதி முருகன் ?
நம்மில் சிலருக்கு புரளிகள் கிளப்பிவிடுவதில் அலாதிப் பிரியம் போலும்! தமிழ்ப் பற்று, தமிழர் பெருமை என்ற பெயரில் எதையாவது கிளப்பிவிடுவர். திருஞான சம்பந்தர் ஆயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்தார் என்று ஒருவர் கணக்குச் சொன்னார்! தாலி கட்டுவது தமிழர் வழக்கமில்லை என்று சிலர் முழங்கினர். ராவணன் திராவிடன் என்றனர். இப்படி எத்தனையோ !
இப்போது சிலர், திருப்பதியில் இருப்பது முருகனே; பின்னர் வந்த வைஷ்ணவர்கள் விக்ரஹத்தில் மாறுதல் செய்து பாலாஜியாக மாற்றிவிட்டனர் என்கின்றனர்.இந்தமாதிரி ஒரு கருத்து சில வட்டாரங்களில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் இன்று இதற்கு அரசியல் சாயமும், மொழிவெறியும்,துவேஷமும் ஏற்றி இன்டர்நெட்டில் உலவவிடுகிறார்கள்.
குறிஞ்சிக் கடவுள் முருகன்
இதற்கு முக்கிய ஆதாரமாக இவர்கள் சொல்வது, முருகன் குறிஞ்சி நிலக்கடவுள்; எல்லா குன்றுகளும்-மலைகளும் முருகனுக்கே உரிய இடம்; ஒருகாலத்தில் தமிழ் நாட்டின் எல்லையாக இருந்த வேங்கடமலையில் முருகன் இல்லாமல் விஷ்ணு இருப்பது பொருத்தமல்ல என்பதே. அங்கிருக்கும் பல தமிழ் கல்வெட்டுகளின்மீது சுண்ணாம்படித்து தெலுங்கர்கள் தமிழர்களுக்கு அநியாயம் செய்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
பழந்தமிழ் நாட்டில் நிலத்தை ஐவகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் என வகுத்தார்கள். இந்த செய்தி தமிழில் இருக்கும் நூல்களில் மிகப் பழமையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் வருகிறது.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.'
இது பொருளதிகாரத்தில் வரும் 5ம் சூத்திரம். இதன்படி, நிலம் 4வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் குறிப்பிடப் பட்டது தெரிகிறது. இதன்படி,
முல்லை: காடும் காடுசார்ந்த பகுதி - தெய்வம் - மாயோன் =திருமால்
குறிஞ்சி : மலையும் மலை சார்ந்த இடமும். தெய்வம் சேயோன்= முருகன்
மருதம் : வயலும் வயல் சார்ந்த பகுதியும் தெய்வம்- வேந்தன் = இந்த்ரன்
நெய்தல் -கடலும் கடல் சார்ந்த பகுதியும். தெய்வம் வருணன்.சொல்லவும் படுமே என்று தொல்காப்பியர் அடக்கமாகச் சொல்கிறார்: இவ்வாறு சொல்கிறார்கள்-சொல்லப்படுகிறது என்கிறார். அவரே புதிதாகச் சொல்லவில்லை. எனவே இது மிகத் தொன்மையான வழக்கு.
பிறகு காலப்போக்கில் முல்லையும் குறிஞ்சியும் நீர்வளம் குன்றி பாலையாக மாறியது. இதை சிலப்பதிகாரத்தில் தெரிந்துகொள்கிறோம்.
'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.'
இது காடுகாண் காதையில் வருகிறது. பாலைக்குரிய திணையை "நடுவு நிலைத் திணை " என்பார் தொல்காப்பியர். பாலைக்குத் தெய்வம் கொற்றவை- துர்க்கை என ஆயிற்று.
குன்று தோறும் குமரன் கோயில் ?
இதன்படி, குறிஞ்சி நிலத்திற்கு தெய்வம் முருகன் என்பது தெளிவாகிறது. ஆனால், எல்லா குன்றுகளிலும் மலைகளிலும் முருகன் கோவில் இல்லை! மலை இல்லாத இடங்களிலும் முருகன் வழிபாடு இருக்கிறது. ஷோளிங்கரில் நரசிம்மர் அமர்ந்திருக்கிறார். கழுக்குன்றத்தில் சிவபெருமான்! இன்னும் எத்தனையோ சொல்லலாம். அறுபடை வீட்டில் ஒன்றாகக் கருதப்படும் சுவாமிமலை இயற்கைக் குன்றே அல்ல! [இதனால் உண்மையான சுவாமிமலை இதுவல்ல, மலை நாட்டில் உள்ளது என்று சிலர் சொல்வர்.. அருணகிரி நாத சுவாமிகள் இப்போதுள்ள ஊரையே பாடியிருக்கிறார். இதை விரிவாக வேறொரு இடத்தில் எழுதியிருக்கிறேன்.]
. இதனால் முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் அங்கு எல்லா மலை, குன்றுமீதும் கோவில் இருந்தது என்பது பொருளல்ல. மலைவாழ் மக்கள் மலையையே தெய்வமாக வழிபட்டனர்.- குன்றே குமரன்! [ க்ருஷ்ணர் கோவர்த்தன கிரியையே பூஜை செய்யச் சொன்னார் என்பதை இங்கு நினைவுகூறுவோம் ] மலைவாழ் மக்கள் பலவிதமாக, பல இடங்களில் முருகனை வழிபட்டனர். இதை திருமுருகாற்றுப் படையில் பார்க்கிறோம். எனவே இதை மட்டுமே வைத்து மலைமேல் இருப்பது பெருமாள் அல்ல என்று சொல்ல முடியாது. அப்படியெனில் மலைமேல் சிவன் கோவில் வந்தது எப்படிச் சரியாகும்? திருச்சிராப்பளியில் மலைமேல் பிள்ளையாரல்லவோ இருக்கிறார்! திருச்சிராப்பள்ளித் தியானமே முருகன் வழிபாடு எனப் பொருள்வர எழுதினார் அருணகிரி நாதர்.
சிராப்பளி என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே !
[சிராப்பள்ளி என்பார் மனதையே கோயிலாகக் கொண்ட பெருமாளே]
அருணகிரி நாதர் திருப்பதியில் திருப்புகழ் பாடியிருக்கிறார். இதைவைத்து அங்கு இருந்தது முருகன் தான் எனச் சொல்லமுடியுமா? அருணகிரி நாதருக்கு முருகன் வழிபடுகடவுளாக- இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அவருக்கு பிற தெய்வங்கள் மீது வெறுப்பு இல்லை. முத்தைத்தரும் முதல் திருப்புகழிலேயே ராமாயண, பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்லி. "பச்சைப்புயல் மெச்சத்தகு பொருள் " ( மேகவர்ணன் திருமால் மெச்சும் முருகனே) எனப் பாடுகிறார்.
இன்று நமக்கு திருப்புகழ் நூல் கிடைக்கக் காரணமாக இருந்த பெரியவர் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை. பரம்பரையாக முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட நெறியில் வந்தவர். இவர் திருமகனார் வ.சு. செங்கல்வராயபிள்ளை. தணிகைமணி எனச் சிறப்புப் பெற்றவர். திருப்புகழைச் செம்மையாகப் பதித்து அதற்கு உரை எழுதி வாழ்நாள் முழுதும் அதிலேயே ஊறித் திளைத்தவர். இவர் திருப்பதித் திருப்புகழுக்கு எழுதிய உரையில் திருவாஞ்சியம் திருப்புகழை எடுத்துக்காட்டி அங்கு திருப்பதிமலையில் இருந்தது திருமால் என்பதைக் காட்டுகிறார்.
"பாண்டவர்க்கு வரதன், மை உருவோன், பிரசித்த நெடியவன், ரிஷிகேசன், உலகீன்ற பச்சை உமை யண்ணன், வடவேங்கடத்தில் உறைபவன், உயர் சார்ங்க, கட்க, கரதலன்"எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்!
அருணகிரி நாதர் எந்த க்ஷேத்திரத்திலும் முருகனையே பாடினார். சிதம்பரம் திருப்புகழில்.
கனக சபைமேவும் எனது குரு நாத
கருணை முருகேசப் பெருமாளே
என்று பாடுகிறார்.. அங்கு கனகசபையில் இருப்பது நடராஜாதானே! எனில், முருகனை புறம்தள்ளி நடராஜர் விக்ரஹத்தை வைத்தார்கள் என்பது பொருளா? எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு முருகனைத்தான் பாடுவார்!
எந்த தெய்வத்தைப் புகழ்ந்தாலும் அவர்களை முருகனுடன் சம்பந்தப் படுத்தி, கடைசி :"ஜே" முருகனுக்குத்தான் போடுவார். இதைவைத்து அங்கு பிறதெய்வங்கள் இல்லை என்பது சரியல்ல.
தமிழ் நாட்டின் எல்லை
தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரத்தில்
வடவேங்கடந் தென் குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
என்று வருகிறது. இதனால் பழைய காலத்தில் தமிழ் நாட்டின் எல்லைகளாக இருந்தவை வேங்கடமும் குமரிமுனையும் என்பது தெரிகிறது,
தென் குமரி கடல் சார்ந்த பகுதி- நெய்தல் . இதற்கு தெய்வம் வருணன். ஆனால் அங்கிருப்பது குமரி அம்மன் கோயில் ! இலக்கணப்படி இது எப்படிப் பொருந்தும்?
தமிழ் நாட்டில் பல ஊர், க்ராமங்களிலும் எல்லைத்தெய்வமாக பிடாரி போன்ற பெண்தெய்வங்களே வழிபடப் படுகின்றன. இந்த மரபையொட்டி நாட்டின் தென் எல்லையிலும் அன்னைத்தெய்வத்தையே காவல் தெய்வமாக வைத்து வழிபட்டனர் என்பது பொருந்தும்.
இனி, வடக்கில் இருப்பது வேங்கட மலை. இங்கு எந்த தெய்வம் இருந்தது ?
குறிஞ்சியில் கொற்றவை !
போர்க்காலத்தில் குறிஞ்சி நிலத்துக்கு கொற்றவையும் வழிபடு தெய்வமாக அமையும் என்பது தொல்காப்பியத்தில் வருகிறது. (பொருளதிகாரம் )
மறங்கடைக் கூட்டிய குடி நிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே
அதனால் வேங்கடத்தில் , தமிழ் நாட்டின் வட எல்லையில், காவல் தெய்வமாக இருந்தது அம்மன் எனக்கொள்ளலாமல்லவா?
இனி, வேங்கடத்தில் கோயிலின் கர்ப்பக்ரஹத்தின் மீதுள்ள விமானத்தைப் பாருங்கள் ! இதன் நாற்புறத்திலும் சிங்கத்தின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது! சிங்கம் அம்பாளின் வாஹனமல்லவா ? வேறு எங்காவது விஷ்ணு கோயிலில் இவ்வாறு இருக்கிறதா?"
"அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாரனார்க்கே "
என்று பாடினார் அப்பர். அம்பாள் நாராயண சஹோதரி- நாராயணி ! ஆக, அம்பாள் கோயில் நாளடைவில் விஷ்ணு கோயிலாக மாறியது அவ்வளவு வியப்பானதல்ல! நாராயணி நாராயணனானார் !
இந்தமாதிரி விஷயங்களில் பண்பட்ட பெரியவர்களின் அறிவும் அனுபவமும் நமக்குத் துணைவரும். வெறும் ஏட்டுப் படிப்பு மட்டும் உதவாது.
தெய்வீக அனுபவம்
ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் முதல் தலைவராக இருந்தவர் ஸ்வாமி ப்ரஹ்மானந்தர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் நேர் சீடர். 'ராக்கால்' என்ற பெயரில் ஸ்ரீராமக்ருஷ்ணரால் தமது ஆன்மீக புத்திரனென மதிக்கப்பட்டவர். விவேகானந்தர் உட்பட அனைவராலும் 'ராஜா மஹராஜ்' என்று வழங்கப்பட்டவர். அனேகமாக சதாகாலமும் உலக சிந்தனையற்று, தெய்வீக நிலையிலேயே ஆழ்ந்திருந்தவர்.
இத்தகையவர் நூறு வருஷங்களுக்கு முன் திருப்பதி தரிசனத்திற்குச் சென்றார். அங்கு அவர் பாலாஜியைக் காணவில்லை- அன்னை காளி-துர்கையையே கண்டார் ! கூட இருந்தவர்கள் பாலாஜி-வெங்கடாசலபதி என்றனர். அவர் அம்பிகையைத்தான் கண்டார்! பிறகு அங்கிருந்த அர்ச்சகர்களிடம் விசாரித்தபோது இதன் உண்மை ஒருவாறு தெரிந்தது! இந்த நிகழ்ச்சி அவரது வரலாற்று நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ஸ்வாமி ப்ரஹ்மானந்தர் வங்காளி. தமிழ் அறியாதவர். தமிழ் நாட்டின் குறுகிய மதச்சண்டைகளில் ஈடுபடாதவர். இங்கு நடக்கும் வாதப்-பிரதிவாதங்களில் அக்கறை கொள்ளாதவர்- அவற்றைப்பற்றி அறியாதவர். மதவிஷயங்களில் பரந்த நோக்கு உடையவர். அவருக்கு இத்தகைய அனுபவம் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது தெளிவு..
மொட்டை ஆண்டியும் சடை ஆண்டியும் !
இம்மாதிரி விஷயங்களில் உண்மையாக ஆராச்சி செய்ய விரும்புவோர், முதலில் சரியான ஆதாரங்களைத் திரட்டவேண்டும்; அவற்றை விருப்பு-வெறுப்பின்றி பரிசீலிக்கவேண்டும். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கேற்ப விஷயங்களைத் திரித்துச் சொல்வது ஆராய்சியாகாது.
50/60 வருஷங்களுக்குமுன் தமிழ் நாட்டில் ஒரு சர்ச்சை நடந்தது: பழனி முருகன் மொட்டை ஆண்டியா, சடை ஆண்டியா என்று ! பார்க்காமலேயே பலரும் புரடா விட்டார்கள் .
வேங்கடம் முதல் குமரிவரை பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்து சரித்திர, இலக்கிய, சமய உண்மைகளைப் பற்றி ஆராய்ச்சிசெய்து விரிவாக எழுதிவந்த தொ.மு பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் பழனிக்கும் சென்று விக்ரஹத்தைப் பார்த்து அது சடை ஆண்டிதான் என்று உறுதி செய்தார். இம்மாதிரி உண்மையில் உண்மையான நாட்டம் உள்ளவர்கள் சரியான ஆதாரங்களைச் சரியான வழியில் திரட்டி சரியான முறையில் ஆராயவேண்டும்..
காலப்போக்கில் பல பழைய விஷயங்களை மீண்டும் பரிசீலித்து வருகிறோம் .ஆனால் ஆராய்ச்சி என்ற போர்வையில் , சரியான ஆதாரங்களில்லாமல் சொந்த மனச்சார்புகளை உண்மையென வாதிப்பது சரியாகாது. இதற்கு மொழிவெறியையும் குறுகிய பிராந்திய உணர்வையும் தூண்டிவிடுவது பொது நலத்திற்கு நன்மை பயக்காது. வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே !
வேங்கடத்தில் எந்த தெய்வம் இருந்தாலும், அவர் மக்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது நிதரிசனமான உண்மை. கணக்கற்றவர்களின் அனுபவம். உண்மையான பக்தர்கள் இதிலேயே மகிழ்ச்சியடைகிறார்கள்.
வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம் பொருளின் விளையாட்டே என்பது பெரியோர் கொள்கை, நாமும் அவர் வழியையே பின்பற்றி அமைதியும் ஆனந்தமும் பெறுவோம்.
அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு!!
No comments:
Post a Comment