Showing posts with label அருணகிரி நாதர். Show all posts
Showing posts with label அருணகிரி நாதர். Show all posts

Wednesday, 5 October 2016

74. திருப்பதி முருகன் ?



74. திருப்பதி முருகன் ?


நம்மில் சிலருக்கு புரளிகள்  கிளப்பிவிடுவதில் அலாதிப் பிரியம் போலும்! தமிழ்ப் பற்று, தமிழர் பெருமை என்ற பெயரில் எதையாவது கிளப்பிவிடுவர். திருஞான சம்பந்தர் ஆயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்தார் என்று ஒருவர் கணக்குச் சொன்னார்! தாலி கட்டுவது தமிழர் வழக்கமில்லை என்று சிலர் முழங்கினர். ராவணன் திராவிடன் என்றனர். இப்படி எத்தனையோ !

இப்போது சிலர், திருப்பதியில் இருப்பது முருகனே;  பின்னர் வந்த வைஷ்ணவர்கள் விக்ரஹத்தில் மாறுதல் செய்து பாலாஜியாக மாற்றிவிட்டனர் என்கின்றனர்.இந்தமாதிரி ஒரு கருத்து சில வட்டாரங்களில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் இன்று இதற்கு அரசியல் சாயமும், மொழிவெறியும்,துவேஷமும்  ஏற்றி  இன்டர்நெட்டில் உலவவிடுகிறார்கள்.

குறிஞ்சிக் கடவுள் முருகன்


இதற்கு முக்கிய ஆதாரமாக இவர்கள் சொல்வது, முருகன் குறிஞ்சி நிலக்கடவுள்; எல்லா குன்றுகளும்-மலைகளும் முருகனுக்கே உரிய இடம்; ஒருகாலத்தில் தமிழ் நாட்டின் எல்லையாக இருந்த வேங்கடமலையில் முருகன் இல்லாமல் விஷ்ணு இருப்பது பொருத்தமல்ல என்பதே. அங்கிருக்கும் பல  தமிழ் கல்வெட்டுகளின்மீது சுண்ணாம்படித்து தெலுங்கர்கள் தமிழர்களுக்கு அநியாயம் செய்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.


பழந்தமிழ் நாட்டில் நிலத்தை ஐவகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் என வகுத்தார்கள். இந்த செய்தி தமிழில் இருக்கும் நூல்களில் மிகப் பழமையானதாகக் கருதப்படும்  தொல்காப்பியத்தில் வருகிறது.

       'மாயோன் மேய காடுறை உலகமும்
     சேயோன் மேய மைவரை உலகமும்
     வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
     வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
     சொல்லிய முறையாற்  சொல்லவும் படுமே.' 


இது பொருளதிகாரத்தில் வரும் 5ம் சூத்திரம். இதன்படி, நிலம்  4வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் குறிப்பிடப் பட்டது தெரிகிறது. இதன்படி,

முல்லை:  காடும்  காடுசார்ந்த பகுதி - தெய்வம் - மாயோன் =திருமால்
குறிஞ்சி : மலையும் மலை சார்ந்த இடமும். தெய்வம் சேயோன்= முருகன்
மருதம் : வயலும் வயல் சார்ந்த பகுதியும்  தெய்வம்- வேந்தன் = இந்த்ரன்
நெய்தல் -கடலும் கடல் சார்ந்த பகுதியும். தெய்வம் வருணன்.

சொல்லவும் படுமே என்று தொல்காப்பியர் அடக்கமாகச் சொல்கிறார்: இவ்வாறு  சொல்கிறார்கள்-சொல்லப்படுகிறது என்கிறார். அவரே புதிதாகச் சொல்லவில்லை. எனவே இது  மிகத் தொன்மையான வழக்கு. 

பிறகு காலப்போக்கில்   முல்லையும் குறிஞ்சியும்  நீர்வளம் குன்றி பாலையாக மாறியது. இதை சிலப்பதிகாரத்தில்  தெரிந்துகொள்கிறோம்.



         'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
      நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
      பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.' 

 



இது காடுகாண் காதையில் வருகிறது. பாலைக்குரிய  திணையை  "நடுவு நிலைத் திணை " என்பார் தொல்காப்பியர். பாலைக்குத் தெய்வம் கொற்றவை- துர்க்கை  என ஆயிற்று.

குன்று தோறும் குமரன் கோயில் ?


இதன்படி, குறிஞ்சி நிலத்திற்கு தெய்வம் முருகன் என்பது தெளிவாகிறது. ஆனால், எல்லா குன்றுகளிலும் மலைகளிலும் முருகன் கோவில் இல்லை! மலை இல்லாத இடங்களிலும் முருகன் வழிபாடு இருக்கிறது. ஷோளிங்கரில் நரசிம்மர் அமர்ந்திருக்கிறார். கழுக்குன்றத்தில் சிவபெருமான்! இன்னும் எத்தனையோ சொல்லலாம். அறுபடை வீட்டில் ஒன்றாகக் கருதப்படும் சுவாமிமலை இயற்கைக் குன்றே அல்ல! [இதனால் உண்மையான சுவாமிமலை இதுவல்ல, மலை நாட்டில் உள்ளது  என்று சிலர் சொல்வர்.. அருணகிரி நாத சுவாமிகள் இப்போதுள்ள ஊரையே பாடியிருக்கிறார். இதை விரிவாக வேறொரு இடத்தில் எழுதியிருக்கிறேன்.]



. இதனால் முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் அங்கு எல்லா மலை,  குன்றுமீதும்  கோவில் இருந்தது என்பது  பொருளல்ல. மலைவாழ் மக்கள் மலையையே தெய்வமாக வழிபட்டனர்.- குன்றே குமரன்! [ க்ருஷ்ணர்  கோவர்த்தன கிரியையே பூஜை செய்யச் சொன்னார் என்பதை இங்கு நினைவுகூறுவோம் ] மலைவாழ் மக்கள் பலவிதமாக, பல இடங்களில் முருகனை வழிபட்டனர். இதை திருமுருகாற்றுப் படையில் பார்க்கிறோம். எனவே இதை மட்டுமே வைத்து மலைமேல் இருப்பது பெருமாள் அல்ல என்று சொல்ல முடியாது. அப்படியெனில் மலைமேல் சிவன் கோவில் வந்தது எப்படிச் சரியாகும்? திருச்சிராப்பளியில் மலைமேல் பிள்ளையாரல்லவோ இருக்கிறார்!  திருச்சிராப்பள்ளித் தியானமே  முருகன் வழிபாடு எனப் பொருள்வர எழுதினார்  அருணகிரி நாதர்.


சிராப்பளி என்பார் மனமேதினி  நோக்கிய பெருமாளே !
 [சிராப்பள்ளி என்பார் மனதையே கோயிலாகக் கொண்ட பெருமாளே]


அருணகிரி நாதர் திருப்பதியில் திருப்புகழ் பாடியிருக்கிறார். இதைவைத்து அங்கு இருந்தது முருகன் தான் எனச் சொல்லமுடியுமா?  அருணகிரி நாதருக்கு முருகன் வழிபடுகடவுளாக- இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அவருக்கு பிற தெய்வங்கள் மீது வெறுப்பு இல்லை. முத்தைத்தரும் முதல் திருப்புகழிலேயே  ராமாயண, பாகவத நிகழ்ச்சிகளைச் சொல்லி. "பச்சைப்புயல் மெச்சத்தகு பொருள் "  ( மேகவர்ணன் திருமால் மெச்சும் முருகனே) எனப் பாடுகிறார். 






இன்று நமக்கு திருப்புகழ் நூல் கிடைக்கக் காரணமாக இருந்த பெரியவர் வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை. பரம்பரையாக முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட  நெறியில் வந்தவர். இவர் திருமகனார் வ.சு. செங்கல்வராயபிள்ளை. தணிகைமணி எனச் சிறப்புப் பெற்றவர்.  திருப்புகழைச் செம்மையாகப் பதித்து அதற்கு உரை எழுதி வாழ்நாள் முழுதும் அதிலேயே ஊறித்  திளைத்தவர். இவர் திருப்பதித் திருப்புகழுக்கு எழுதிய உரையில் திருவாஞ்சியம் திருப்புகழை எடுத்துக்காட்டி அங்கு திருப்பதிமலையில் இருந்தது திருமால் என்பதைக் காட்டுகிறார்.


"பாண்டவர்க்கு  வரதன், மை உருவோன், பிரசித்த நெடியவன், ரிஷிகேசன், உலகீன்ற பச்சை உமை யண்ணன், வடவேங்கடத்தில் உறைபவன்,  உயர் சார்ங்க, கட்க, கரதலன்" 
எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்!

அருணகிரி நாதர்  எந்த க்ஷேத்திரத்திலும் முருகனையே பாடினார். சிதம்பரம் திருப்புகழில். 

கனக சபைமேவும் எனது குரு நாத 
கருணை முருகேசப்     பெருமாளே

என்று பாடுகிறார்.. அங்கு கனகசபையில் இருப்பது நடராஜாதானே!  எனில், முருகனை  புறம்தள்ளி நடராஜர் விக்ரஹத்தை வைத்தார்கள் என்பது பொருளா? எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு முருகனைத்தான் பாடுவார்!
எந்த தெய்வத்தைப் புகழ்ந்தாலும் அவர்களை முருகனுடன் சம்பந்தப் படுத்தி, கடைசி :"ஜே" முருகனுக்குத்தான் போடுவார். இதைவைத்து  அங்கு பிறதெய்வங்கள் இல்லை என்பது சரியல்ல.

தமிழ் நாட்டின் எல்லை

தொல்காப்பியத்திற்கு  பனம்பாரனார் எழுதிய  சிறப்புப் பாயிரத்தில்

வடவேங்கடந் தென் குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து

என்று வருகிறது. இதனால் பழைய காலத்தில் தமிழ் நாட்டின் எல்லைகளாக இருந்தவை வேங்கடமும் குமரிமுனையும் என்பது தெரிகிறது,

தென் குமரி  கடல் சார்ந்த பகுதி- நெய்தல் . இதற்கு தெய்வம் வருணன். ஆனால் அங்கிருப்பது குமரி அம்மன் கோயில் ! இலக்கணப்படி இது எப்படிப் பொருந்தும்?

தமிழ் நாட்டில் பல ஊர், க்ராமங்களிலும் எல்லைத்தெய்வமாக பிடாரி போன்ற  பெண்தெய்வங்களே  வழிபடப் படுகின்றன. இந்த மரபையொட்டி  நாட்டின் தென் எல்லையிலும்  அன்னைத்தெய்வத்தையே காவல் தெய்வமாக வைத்து வழிபட்டனர் என்பது பொருந்தும்.

இனி, வடக்கில் இருப்பது வேங்கட மலை. இங்கு எந்த தெய்வம் இருந்தது ?

குறிஞ்சியில் கொற்றவை !

போர்க்காலத்தில் குறிஞ்சி நிலத்துக்கு கொற்றவையும் வழிபடு தெய்வமாக அமையும் என்பது தொல்காப்பியத்தில் வருகிறது. (பொருளதிகாரம் )

மறங்கடைக் கூட்டிய  குடி நிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

அதனால்  வேங்கடத்தில் , தமிழ் நாட்டின் வட எல்லையில், காவல் தெய்வமாக இருந்தது அம்மன் எனக்கொள்ளலாமல்லவா?


இனி, வேங்கடத்தில் கோயிலின் கர்ப்பக்ரஹத்தின் மீதுள்ள விமானத்தைப் பாருங்கள் ! இதன் நாற்புறத்திலும் சிங்கத்தின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது! சிங்கம் அம்பாளின் வாஹனமல்லவா ? வேறு எங்காவது விஷ்ணு  கோயிலில் இவ்வாறு இருக்கிறதா?"

"அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாரனார்க்கே " 
என்று பாடினார் அப்பர். அம்பாள் நாராயண  சஹோதரி- நாராயணி ! ஆக, அம்பாள் கோயில் நாளடைவில் விஷ்ணு கோயிலாக மாறியது அவ்வளவு வியப்பானதல்ல! நாராயணி நாராயணனானார் !

இந்தமாதிரி விஷயங்களில் பண்பட்ட பெரியவர்களின் அறிவும் அனுபவமும் நமக்குத் துணைவரும். வெறும் ஏட்டுப் படிப்பு  மட்டும் உதவாது.

தெய்வீக அனுபவம்







ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் முதல் தலைவராக இருந்தவர் ஸ்வாமி ப்ரஹ்மானந்தர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரின்  நேர் சீடர். 'ராக்கால்' என்ற பெயரில் ஸ்ரீராமக்ருஷ்ணரால் தமது ஆன்மீக புத்திரனென மதிக்கப்பட்டவர். விவேகானந்தர் உட்பட அனைவராலும் 'ராஜா மஹராஜ்' என்று வழங்கப்பட்டவர். அனேகமாக சதாகாலமும்   உலக சிந்தனையற்று, தெய்வீக  நிலையிலேயே ஆழ்ந்திருந்தவர்.








 இத்தகையவர்  நூறு வருஷங்களுக்கு முன் திருப்பதி தரிசனத்திற்குச் சென்றார். அங்கு அவர் பாலாஜியைக் காணவில்லை- அன்னை காளி-துர்கையையே கண்டார் ! கூட இருந்தவர்கள் பாலாஜி-வெங்கடாசலபதி என்றனர். அவர் அம்பிகையைத்தான் கண்டார்! பிறகு அங்கிருந்த அர்ச்சகர்களிடம் விசாரித்தபோது இதன் உண்மை ஒருவாறு தெரிந்தது! இந்த நிகழ்ச்சி அவரது வரலாற்று  நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 



ஸ்வாமி ப்ரஹ்மானந்தர் வங்காளி. தமிழ் அறியாதவர். தமிழ் நாட்டின்  குறுகிய மதச்சண்டைகளில் ஈடுபடாதவர். இங்கு நடக்கும் வாதப்-பிரதிவாதங்களில் அக்கறை கொள்ளாதவர்- அவற்றைப்பற்றி அறியாதவர். மதவிஷயங்களில் பரந்த நோக்கு உடையவர். அவருக்கு இத்தகைய அனுபவம் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது தெளிவு.. 


மொட்டை ஆண்டியும் சடை ஆண்டியும் !

இம்மாதிரி விஷயங்களில்  உண்மையாக  ஆராச்சி செய்ய விரும்புவோர், முதலில் சரியான ஆதாரங்களைத் திரட்டவேண்டும்; அவற்றை விருப்பு-வெறுப்பின்றி  பரிசீலிக்கவேண்டும். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கேற்ப  விஷயங்களைத் திரித்துச் சொல்வது ஆராய்சியாகாது.









50/60 வருஷங்களுக்குமுன் தமிழ் நாட்டில் ஒரு சர்ச்சை நடந்தது: பழனி முருகன் மொட்டை ஆண்டியா, சடை ஆண்டியா என்று ! பார்க்காமலேயே பலரும் புரடா  விட்டார்கள் .  











வேங்கடம் முதல் குமரிவரை பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்து சரித்திர, இலக்கிய, சமய   உண்மைகளைப் பற்றி  ஆராய்ச்சிசெய்து விரிவாக எழுதிவந்த  தொ.மு பாஸ்கரத்  தொண்டைமான் அவர்கள் பழனிக்கும் சென்று விக்ரஹத்தைப் பார்த்து அது சடை ஆண்டிதான் என்று  உறுதி செய்தார். இம்மாதிரி உண்மையில் உண்மையான  நாட்டம் உள்ளவர்கள் சரியான ஆதாரங்களைச் சரியான வழியில் திரட்டி  சரியான முறையில் ஆராயவேண்டும்..


காலப்போக்கில் பல பழைய விஷயங்களை  மீண்டும்  பரிசீலித்து வருகிறோம் .ஆனால் ஆராய்ச்சி என்ற  போர்வையில் , சரியான ஆதாரங்களில்லாமல்  சொந்த மனச்சார்புகளை உண்மையென வாதிப்பது சரியாகாது. இதற்கு மொழிவெறியையும் குறுகிய பிராந்திய உணர்வையும் தூண்டிவிடுவது  பொது நலத்திற்கு  நன்மை பயக்காது. வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே !


வேங்கடத்தில் எந்த தெய்வம் இருந்தாலும், அவர்  மக்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது நிதரிசனமான உண்மை. கணக்கற்றவர்களின் அனுபவம். உண்மையான பக்தர்கள் இதிலேயே  மகிழ்ச்சியடைகிறார்கள்.






வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம் பொருளின் விளையாட்டே என்பது பெரியோர் கொள்கை, நாமும் அவர் வழியையே பின்பற்றி  அமைதியும் ஆனந்தமும் பெறுவோம்.

அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு!!






Thursday, 12 November 2015

1. பாடிப் பரவும் பக்திப் பெருவழி !





பாடிப் பரவும் பக்திப் பெருவழி !

தில்லைப் பெருங்கோயில்

பாடும் பணியே பணியாய் அருள்வாய்


ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு ஓரளவாவது தெய்வ நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தீவிரமாக ஆத்மமுன்னேற்றத்தில் நாட்டம் கொண்டால், இத்தகைய பொது நம்பிக்கையினால் பலன் விளையாது. அதற்கு 'சாதனை' செய்யவேண்டும். ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸர் இதை ரொம்பவும் வலியுறுத்தினார்.
மது  மதத்தில்  பலவித சாதனை முறைகளை  சாஸ்திரங்களில் பார்க்கிறோம். இவற்றினால் பலசமயங்களி ல் மனது குழம்பிவிடுகிறது. அப்போது  அனுபவம் வாய்ந்த பெரியவர்களும், ஆத்ம ஞானிகளும் ஒவ்வொருவருக்கும்  ஏற்ற வழியைக்  காட்டுகிறார்கள். இவ்வாறு  நமக்கேற்ற ஒரு வ்ழியைக் காட்டுபவரே நமக்குக் குரு  என்று  ஏற்றுக்கொள்கிறோம்.

சில சமயங்களில்  சமூகம் முழுவதுமே குழம்பிப்  போகும்  நிலையையும் நாம் சரித்திரத்தில் படிக்கிறோம். அந்த சமயங்களில்  ஏதோ ஒரு பெரிய மஹான் தோன்றி  ஒரு புதிய வழியை நமக்குக் காட்டித் தருகிறார். அல்லது  பழையதையே  திருத்தித்  தருகிறார். ஆதி சங்கரர்  இந்த வகையில்  நமது வைதிக மரபில் இருந்த குளறுபடிகளை  நீக்கி ஷண்மத ஸ்தாபனம் செய்து  நமது  மதத்துக்குப் புத்துயிர் கொடுத்தார்.

ஆனால்  அவருக்குப் பிறகு  தத்துவ ரீதியில் வாதப்ரதி வாதங்கள்  கிளம்பி விட்டன . தெய்வங்களுக்குள்ளும் வேறுபாடுகளைக் கற்பித்து பல மதங்கள் தோன்றிவிட்டன. மீண்டும் பழைய குருடியே திரும்பி  வந்துவிட்டாள்!

எந்த ஸ்வாமியை நாம் வழிபட்டாலும், ஒவ்வொரு வழியிலும் தத்துவக் குழப்பங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம் ஸ்மார்த்தர்கள். நமக்கு  சிவ-விஷ்ணு  பேதம் கிடையாது. ஆனால் தத்துவக் குழப்பம் உண்டு!  நமக்கு ஆதாரம்  சங்கர பகவத் பாதரின்  அத்வைதக் கொள்கை என்று சொல்லிக்கொள்கிறோம்- ஆனால் நடைமுறையில் த்வைதிகளாகத்தான் இருக்கிறோம்! நடைமுறையில் இதுதான் ஸாத்தியம்! நம்போன்றவர்கள்  அத்வைதம் பேசுவது வெறும் வேஷமாகவே முடியும்! (பசி, தாகம் போன்ற ) உடல் உணர்சிகளும், உலக நினைப்பும் உள்ளவரை ஞானம், அத்வைதம் என்று பேசுவது  சரியல்ல என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர்.  பகவான் ரமணர்  "உள்ளது  நாற்பது" அனுபந்தத்தில்  (39) இதையே  நமக்கு அறிவுறுத்தினார்:

அத்துவிதம்  என்றும்  அகத்துறுக  ஓர்போதும் 
அத்துவிதம் செய்கையில்  ஆற்றற்க.

தெய்வ  ஆராதனை  என்றாலும்  அதிலும் பலவித குழப்பங்கள்! ஹோமம், மன்த்ர ஜபம், பூஜை, அர்ச்சனை, கோவில்களில் விசேஷ வழிபாடு, விரதம், உபவாசம், தந்திர ப்ரயோகங்கள்  என்று பட்டியல்  நீண்டு கொண்டே போகிறது!
ஒவ்வொரு பெரியவரும் ஒவ்வொன்றை  சிலாகித்துப் பேசுகிறார்கள்!

நம்மில் பலரும்  ஏதோ பூஜை புனஸ்காரம் என்று வைத்துக்கொண்டிருந்தாலும், ப ழைய  ஆசார  கட்டு திட்டங்கள்  குறைந்து விட்டன. நாமே பல விஷயங்களில் ரிலாக்ஸ் செய்துகொண்டு விட்டோம், அதற்கு சமாதானமும் கண்டுபிடித்துவிட்டோம்!

பல தெய்வங்கள்,பல  மூர்த்திகள்,பல வழிகள், பல குருமார்கள், இவற்றை  பிரச்சாரம் செய்ய பல மடங்கள் ,பத்திரிகைகள். சேனல்கள்  என்று  ஆகிவிட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில்  ஸ்ரீ மாணிக்கவாசக ஸ்வாமிகள் பாடினார்:







தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களில்
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறற் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும் 

(போற்றித் திருஅகவல்)

நமக்கு இப்படிக் குழப்பம் தோன்றிவிட்டது! 
பின்னர் வந்த அருணகிரிநாத ஸ்வாமிகளும் பாடினார்:

ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
     மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்

ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
     மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே
ஆடம்பரமான பூஜைகள், இடைவிடாது செய்யும் ஜபங்களில் உள்ள ஆசை, தெய்வங்களை எழுந்தருளச் செய்வதற்காக ஆராதிக்கும் யன்த்ரத் தகடுகள், பெரிய மண்டபங்களில் நடக்கும் கொண்டாட்டங்கள், ஆரவாரமாக நடக்கும் வேத ஆகம முழக்கங்கள், யஜ்ஞங்களுக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஸமித்துக்கள்-  இவற்றைக் கண்டு நாம் மருளாமல் இருக்கவேண்டும்  என்று வேண்டிக் கொள்கிறார்!

சமயவாதிகள் இடும் வாதப் பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல்  இருக்கவேண்டும் என்கிறார்.

குவலயம் கற்றுக்  கத்தி இளைக்கும்
சமய சங்கத்தைத் தப்பி யிருக்குங்
குணமடைந்துட்பட்டொக்க இருக்கும்           படிதாராய்

(செடியுடம்பு- காஞ்சி திருப்புகழ்)


இவ்வுலகத்திலே உள்ள சமய நூல்களை எல்லாம் கற்று. அதனால்  சமயவாதிகள்  பெருங்கூச்சலிட்டு ஈடுபடும் சழக்குகளிலிருந்து தப்பி விலகி,எப்போதும் உத்தம குணத்திலேயே ஈடுபட்டு இருக்கும் அந்த நிலையைத் தருவாயாக.


துலுக்கர்களின் படையெடுப்பினாலும், அவர்கள் ஆட்சிசெய்த இடங்களில் நிலவிய குழப்பத்தினாலும் நமது ஸனாதன மதத்திற்கு கெடுதி நேர்ந்தபோது பல மஹான்கள் நாடெங்கிலும்  தோன்றி  பக்தி மார்கத்தையே போதித்து மக்களை ஒன்றுபடுத்தி நல்வழி காட்டினார்கள். சைதன்ய மஹாப்ரபு எல்லோருக்கும் பொதுவாக 'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண  க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே'  என்ற மந்திரத்தை  உபதேசித்தார்.  (இவர்கள் வழியில் ஹரே க்ருஷ்ண என்று தொடங்குகிறார்கள் )ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸ ஸ்வாமிகள்  'ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்' என்ற மந்திரத்தை உபதேசித்தார்.


காஞ்சி பீடத்தில் 59 வது  ஜகத்குருவாக இருந்த  ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள் நம் காலத்திற்கு பகவன்   நாமாவைச் சொல்லுவதுதான் வழி என்று  நமது சாஸ்திரங்களின் ஆதாரத்தைக் கொண்டே ஸ்தாபிதம் பண்ணினார். "ஸ்ரீ பகவன்  நாம ரஸோதயம்" என்ற  புஸ்தகத்தில்  இதை நன்றாக விளக்கியிருக்கிறார். (ஸ்ரீ பகவன்  நாம வங்கி, சென்னை-33 வெளியீடு)





கலி கல்மஷ சித்தானாம் பாபத்ரவ்ய ஜீவினாம்
விதி கர்ம விஹீனானாம்  கதி: கோவிந்த கீர்த்தனம்.


கலி நமது புத்தியில் ஏறி சித்தத்தைக் கெடுத்து விட்டது. ஏதேதோ பாபம் செய்து அதனால் வரும் பொருளைக்கொண்டு வயிற்றை வளர்க்கிறோம். ஏதோ கர்மா என்று செய்தாலும்  அது விதி பூர்வகமாக இருப்பதில்லை, பகவானது நாமாவைச் சொல்லுவது ஒன்றுதான் நமக்குக்  கதி என்று அந்த மஹான்  சொன்னார்.


 அவரைத்தொடர்ந்து  ஸ்ரீ  ஸ்ரீதர ஐயாவாள், ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள்  ஆகிய மஹான்கள் பஜனை ஸம்ப்ரதாயத்தை  ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.



 ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்

இதற்கு சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாகவே  தோன்றிய  ஞான ஸம்பந்த ஸ்வாமிகள் இதையே செய்து காட்டினார்!
By Thiago Santos.(Child Saint Sambandhar.Uploaded by nmadhuubala)CC BY-SA 2.0 creativecommons via Wikimedia commons.

ஊர் ஊராகத் திரிந்து,, கோவில் கோவிலாகச் சென்று  அங்குள்ள ஸ்வாமியைப்பாடி நமக்கு வழி காட்டினார். ஆனால் நாம் மக்குகளாக இருப்பதால் இது நமது மண்டையில் ஏறவில்லை! அவர் காட்டிய வழியை  "பதிகப் பெருவழி" என்று நம்பியாண்டார்   நம்பி  குறிப்பிட்டார். ஞானஸம்பந்தர்  பாடிய பதிகத்தைப் பாடுவதே சிறந்தவழி யாகும் என்றார். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.


ஸ்ரீ ஸம்பந்தர் பாடிய பதிகங்களுக்கும்  மற்றவர் பாடல்களுக்கும் பெரிய வித்தியாஸம் இருக்கிறது. ஸ்ரீ ஸம்பந்தர் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யரின் அவதாரம்.இதை அருணகிரி நாதர்  பல பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.  ஞான ஸம்பந்தர் பதிகங்கள்  வெறும் வேண்டுகோளாக அமையவில்லை.  அதில் அவர்  ஆணித்தரமாக, ஆணையிட்டுச் சொல்கிறார்!
'இதைப் பாடுங்கள், வினை போகும்'. 'இதைப் பாடுங்கள்  , பாபம் தீண்டாது-இது நீலகண்டத்தின் மீது ஆணை', 'இதைப் பாடுங்கள், நாளும் கோளும் உங்களுக்குத் தொல்லை தரா- இது எனது ஆணை'' என்றெல்லாம்  ஒருவித அதாரிடியோடு  சொல்லுகிறார்!

சித்தம் வைத்த அடியாரவர் மேல் அடையாமற்று இடர் நோயே

வலிதாயம் அடையா  நின்றஅடியார்க்கு அடையாவினை அல்லல் துயர்தானே


உய்யும் வண்ணம்  நினைமின்  நினைந்தால்  வினை தீரும் நலமாமே


பற்றி வாழும் அதுவே  சரணாவது பாடும் அடியார்க்கே


பெருமான் கழலேத்த நம் உண்மைக் கதியாமே


கற்றாங்கு எரி ஓம்பி  கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லை சிற்றம் பலமேய
முற்றாவெண் திங்கள் முதல்வன்  பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

அவ்வினைக் கிவ்வினை யாம்என்று சொல்லுமஃது அறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊன மன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும்   நாமடியோம்
செய்வினை வந்தெமைத்  தீண்டப்பெறா  திருநீலகண்டம்


தானுறு கோளும் நாளும் அடியாரைவந்து நலியாத 
வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.


இந்த மாதிரியான பாடலை வேறு யாரும் பாடவில்லை!

இதை தன் பெயரிலேயே ஆணித்தரமாகச் சொல்கிறார்:

  நான்மறை ஞான ஸம்பந்தன் சொன்ன
பண்ணியல் பாடவல்லார்கள் இந்தப்
பாரொடு விண் பரிபாலகரே

நன்றார் தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக்  குறைவின்றி நிறை புகழே





ஞான ஸம்பந்தர் செய்தது "குன்றாத் தமிழ்" ! இதையே "திரு நெறிய தமிழ்"என்கிறார். இதைச் சொன்னால் "தொல்வினை தீர்தல் எளிதாமே" என்று உறுதி கூறுகிறார்! அருவினையைத் துறந்து ஆட்செய்வாரே என்கிறார்! 


நாம் பாடுவது இருக்கட்டும். கேட்டாலே போதும், வினை போய்விடும் என்கிறார்:
யாழின் இசை வல்லார் சொலக்கேட்டா ரவரெல்லாம்
ஊழின் மலி வினைபோயிட உயர்வானடைவாரே.

இந்தமாதிரி கீதையில் ஸ்ரீபகவானைத்தவிர வேறு யாரும் சொன்னதில்லை!

ஞான ஸம்பந்தர் நமக்குக் காட்டியது ஒரு புதிய, எளிய வழியாகும்.
இதில் மந்திர தந்திரம் எதுவும் இல்லை! மாயாஜாலம் எதுவும் இல்லை!


'ஸம்பந்தர்  சைவர் ஆச்சே, இது நமக்குச்  சரிப்படுமா' என்றெல்லாம் தயங்கத் தேவையில்லை!  சைவம். வைஷ்ணவம் , சாக்தம் என்பதெல்லாம் பின்னால் வந்த பெரியவர்கள் நிறுவிய கொள்கைகள். ஆனால் சிவ, விஷ்ணு ஆராதனைகள்  மிகவும் ப்ராசீனமான ஸம்ப்ரதாயமாகும். நமது அனாதியான வேதத்தில் ருத்ரன், விஷ்ணு, நாராயணன் ஆகிய பெயர்கள் எந்த ஒரு குறுகிய தெய்வத்தையோ, கோட்பாட்டையோ வைத்துச் சொல்லப்படவில்லை. அவை பரம்பொருளின் பெயர்களே. \
'ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்' என்று சொல்லி ஸங்கல்பம் செய்யும்   நாம், 'நாராயணாயேதி ஸமர்ப்பயாமி' என்றுதானே முடிக்கிறோம்! ஞானஸம்பந்தர் 'கவுணியன்'- அதாவது கௌண்டின்ய கோத்ரத்தவர்! வேதஸாரத்தையே பாடினார்.அவர் தன்னை "மறை ஞான ஞான முனிவன்" என்றே சொல்லிக் கொள்கிறார்!   அதனால் அவர் பதிகங்களைச் சொல்லுவதற்குத் தயங்க வேண்டியதில்லை.

பதிகப் பெருவழி, பதிகப் பெருநெறி
பதிகப் பெரு நிதி, பதிகம் பதிகமே!

murugan.org

6. திருமுருகாற்றுப்படை-4 திருவாவினன்குடி



6. திருமுருகாற்றுப்படை-4


Gopuram of Thiruvaavinankudi Temple. Pazhani Hill is in the background.
From: Murugan.org. Thanks.

திருவாவினன்குடி

மனித இயல்புதான்  எத்தனை விசித்திரமானது! ஒரே பொருளைப் பலவிதமாகப் பார்க்கிறோம்,பயன் படுத்துகிறோம். அரிசி, கோதுமை என்ற இரு தானியங்களை மட்டும் எத்தனை எத்தனை விதத்தில் பக்குவப்படுத்துகிறோம்! இதில் ஒருவருக்குப் பிடித்தது மற்றொருவருக்குப் பிடிப்பதில்லை.ஒரே வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பலவிதத்தில் சமைத்துப்போடவேண்டி யுள்ளது! இதை ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார். ஒரே வயிற்றுப் பிள்ளைகளுக்கும் ஒரேமாதிரி அறிவும் ஆற்றலும் இருப்பதில்லை.

மனித இயல்பிலுள்ள வித்தியாசங்களுக்கு ஏற்றபடிதான் கடவுளும் பலவித மதங்களை அனுமதித்துள்ளான் என்பது அருளாளர்களின் கொள்கை. ஒவ்வொரு மதத்தினுள்ளும் பற்பல பிரிவுகளும் இவ்வாறு தான் தோன்றி வளர்ந்தன. ஒரே கடவுள், ஒரே புத்தகம், ஒரே கொள்கை என்று கிளம்பிய கிறிஸ்தவர்களும் பல நூற்றுக்கணக்கான பிரிவுகளாக இருக்கின்றனர். கும்பிடுவது ஒரே ஏசு நாதரானாலும், ஒருவர் சர்ச்சுக்கு இன்னொரு பிரிவினர் போகமாட்டார்கள்! இஸ்லாமிய மதத்திலும் இதே நிலைதான்- பல பிரிவுகள்.அவர்களுக்கிடையிலே பயங்கரமான ஆயுதப்போராட்டம்! இவ்வளவு ஏன்- ஒரு கட்சிக்குள்ளேயே எத்தனை கோஷ்டிகள்!

இதெல்லாம் தெரிந்துதான், நம் பெரியவர்கள் நமக்கு இந்த விஷயத்தில் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டார்கள். எந்தக் கடவுளை, எப்படி வேண்டுமானலும் கும்பிடு என்று விட்டுவிட்டார்கள்."ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று கூவிக் களித்தார் மணிவாசக ஸ்வாமிகள்!

நாம் சிவனை நடராஜா, தக்ஷிணாமூர்த்தி என்று கொண்டாடுகிறோம். வடக்கே அவரை  பெரிய யோகீஸ்வரராகப் பார்க்கிறார்கள். நமக்கு விநாயகர் "பிள்ளையார்"- ப்ரம்மச்சாரிதான்; வடக்கே அவருக்கு 'ஸித்தி-புத்தி' என்று இரண்டு பத்தினிகள்! நம் முருகனுக்கு இரு தேவியர்; ஆனால் வடக்கே அவர் கார்த்திகேயர் என்ற பெயரில் கடும் ப்ரம்மச்சாரி! அவரை வழிபட்டால் திருமணமாகாது என்பது அவர்கள் நம்பிக்கை! வங்காளி வைஷ்ணவர்களுக்கு, ராதா-க்ருஷ்ணர்; நம்மஊர் வைஷ்ணவர்களுக்கு இது ஒத்துவராது! அவர்களுக்கு, வெங்கடாசலபதி, பார்த்தசாரதி, பள்ளிகொண்ட பெருமாள்- இப்படி! நமக்கு அம்பாள் என்றால், லலிதா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி,த்ரிபுரசுந்தரி, லக்ஷ்மி, ஸரஸ்வதி, கௌரி என்போம்.வங்காளத்தில் துர்கை-காளிதான்! உ.பி,டில்லி பகுதியில் க்ருஷ்ணரை  வ்ரஜ பூமியின் நாயகராக ஏற்றுக்கொள்கிறார்கள்; அவரே குஜராத்தில் த்வாரகா நாதன்! அவரை "ரண் சோட்ஜி" என்றும் அழைக்கிறார்கள்- அதாவது, ரணகளத்தைவிட்டு ஓடிப்போனவர்! இதற்கும் ஒருகதை! நம் காலத்திலேயே கண்ணனை 'சேவகன்' என்று பாடினார் பாரதியார்! ஒரே தெய்வத்தை இப்படிப் பலஉருவிலும், பெயரிலும் வழிபடும் சுதந்திரம் வேறு எந்த மதத்திலும் இல்லை! முருகனுக்கே ஆகமங்களில் 16 உருவங்கள் தந்து, வழிபடுவதற்கு த்யானஸ்லோகங்களும் தந்திருக்கிறார்கள்! கர்நாடகத்தில் முருகன்- சுப்ரமண்யரை நாக உருவில் வழிபடுகிறார்கள்! பல இடங்களில் வேலுக்கு தனி வழிபாடும் உண்டு!



கொடைக்கானல் போகும் வழியில் பழநி மலைகளின் ஒரு காட்சி

நமக்கு இன்னொரு நல்ல பழக்கமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் தவிர, நாமெல்லாம் எந்தக் கோவிலுக்கும் போவோம்! ஒரே சிவன் கோவிலுக்கு சைவர்களும் வருவார்கள்- சாக்தர், ஸ்மார்த்தர்களும் வருவார்கள், பொது பக்தர்களும் வருவார்கள். எங்கும் அவரவர் தத்தம் குல ஆசாரப்படி வழிபடுவார்கள். சிலர், பொங்கல் படைப்பார்கள், மாவிளக்கு ஏற்றுவார்கள், முடி எடுப்பார்கள். காவடி, பால்குடம் என்று எடுப்பார்கள். சிலர் தீமிதிப்பார்கள். கன்னத்தில் குத்திக்கொள்வார்கள்.சிலர் மஞ்சள் ஆடையுடன் வருவார்கள், சிலர் ஈரவுடையுடனேயே வருவார்கள்! சில இடத்தில் ஆடு, கோழி வெட்டுவது சில வகுப்பினரிடையே இன்றும் நடந்துவருவது! சில முற்போக்குவாதிகள் இதையெல்லாம் தடுக்க கோர்ட்டு, கச்சேரி என்று ஓடுகிறார்கள். ஆனால் தினமும் லக்ஷக்கணக்கில் ஆடுகளையும் கோழிகளையும்வெட்டி தம்வயிற்றுக்குள் தள்ளுவது மட்டும் ஜீவஹிம்சையில் சேராது!

இதையெல்லாம் இங்கே சொல்வதற்கு ஒரு காரணமுண்டு! இதுவரை முருகனைப் பற்றிப் பொதுவாகச் சொல்லி வந்தார் நக்கீரர். சூரனைச் சம்ஹாரம் செய்து, அமரர்களுக்கு அவர்களுடைய இடத்தை மீட்டுக் கொடுத்தது, தெய்வானை திருமணம், ஆறுமுகம், பன்னிருகைக் கோலனாக செந்திலில் காட்சி தருவது, முகங்களும் கைகளும் செய்யும் செயல்கள் ஆகியவற்றைச் சொன்னார்.இனி, மக்கள் அவரை எந்தெந்த விதத்தில், எங்கு எப்படி வழிபடுகிறார்கள் என்பதைச் சொல்ல வருகிறார்.ஆக, நம்மிடையே நிலவிவரும் விதவிதமான பழக்கங்கள் தொன்றுதொட்டே உள்ளவை தாம்.முதலில் நம்மை திருவாவினன்குடிக்கு அழைத்துச் செல்கிறார்.


திருவாவினன்குடி


திருவாவினன்குடி கோவில் கோபுரம்.

திரு+ ஆ+ இனன் குடி= திருவாவினன்குடி! திரு=லக்ஷ்மியும், ஆ= காமதேனுவும். இனன்= சூர்யனும் வழிபட்ட தலம். இலக்கிய மரபில், இதை ஆவியர் என்னும் குடியினர் ஆண்ட இடம் என்பார்கள்.குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை ஈந்து  நலியாப் புகழ்பெற்ற  வள்ளல் பேகன் இக்குடியைச் சார்ந்தவன்! இன்று இந்த இடம் தன் பழைய வனப்பையும். வளத்தையும் இழந்து பழநிமலையைச் சார்ந்து உள்ளது.கோவில் வளாகமும் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. பழநிதான் இன்று புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இம்மலைக்கு பொதினி என்பது பழைய பெயர்.  நக்கீரர் பாடியது திருவாவினன் குடியைத்தான். அதுதான் அறுபடைவீட்டில் சேர்ந்தது. 51 அடிகளில் நக்கீரர் இதைப் பாடுகிறார்.

இங்கே நமக்கு ஒர் அற்புதக் காட்சியைக் காட்டுகிறார் நக்கீரர். முருகனைக்காண கூட்டம் முண்டியடித்துக்கொண்டு  நிற்கிறது. ஆனால் சாதாரண மனிதர்களையே காணவில்லை! காத்து, க்யூவில் நிற்பவர்களெல்லாம் தேவர்கள்! ஆனால், அவர்களும் தவத்தில் முதிர்ந்த முனிவர்களுக்கு முதல் நிலை தந்து, அவர்களுக்குப் பின்னாலேயே   நிற்கிறார்கள்! இம்முனிவர்களின் நிலையை 12 அடிகளில் விளக்குகிறார் நக்கீரர்.


சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் முற்புக




 நமது இலக்கியத்திலேயே இத்தகைய விளக்கத்தைக் காண்பது அரிது. முனிவன்  என்பதற்கே இலக்கணம் வகுக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

சீரை தைஇய உடுக்கையர்   == மரவுரியை உடுத்தியவர்கள்
சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் == அழகிய வலம்புரிச் சங்கு போல்  நரைத்த முடியுள்ளவர்கள்
மாசற இமைக்கும் உருவினர் == மாசு,மருவற்ற உடலுடையவர்கள்
மானின் உரிவை தைஇய ==மான் தோலைப் போர்த்தி யிருக்கிறார்கள்
ஊன் கெடு மார்பின் என்பெழுந்து  இயங்கும் யாக்கையர். == மார்பில் சதையே இல்லை. எலும்புகள் புடைத்திருக்கின்றன. உடல் அசையும்போது அவையும் அசைகின்றன'
நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் ==பல நல்ல நாட்களில் உணவை நீக்கி நோற்றவர்கள்
இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் == பகையையும் ஹிம்ஸையையும் மனத்திலிருந்து அறவே  நீக்கியவர்கள்
யாவதும் கற்றோர் அறியா அறிவினர் == நூலறிவினாலே வராத அரிய ஞானம் பெற்றவர்கள்
கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் ==மெத்தக் கற்றவர்களுக்கும் எல்லையாக நிற்கும் தலைமை நிலையில் உள்ளவர்கள்
காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர் ==காமத்துடன் கோபத்தையும் விட்டவர்கள், மெய்க்காட்சி பெற்றவர்கள்
இடும்பை யாவதும் அறியா இயல்பினர் == சிறிதளவு கூட துன்பம் என்பதையே அறியாதவர்கள்
மேவரத் துனிவில் காட்சி முனிவர் == ஞானக்காக்ஷி பெற்ற இம்முனிவர்கள் மனதிலிருந்து வெறுப்பை  நீக்கியவர்கள்.
முற்புக == இத்தகைய முனிவர்கள் முன்னே செல்கிறார்கள்  (அனைவரும் அவர்கள் முதலில் செல்ல வழிவிடுகிறார்கள்.)

முனிவர் என்பதன் முழு இலக்கணத்தையே இங்கே பார்க்கிறோம்! மெய்க்காட்சி பெற்ற திறவோர் ஆதலினாலே, விருப்பு வெறுப்பையும் அதனால் விளையும் இன்ப-துன்ப உணர்வுகளையும் தாண்டியவர்கள். ஆசை, கோபம் ஆகியவற்றை விட்டவர்கள். உலகப் பற்றும், உடற்பற்றும் இல்லாதவர்கள். கீதையில் பகவான் ஞானி, பக்தன், யோகி, ஸ்திதப்ரக்ஞன் ஆகியவர்களின் லக்ஷணங்களை விவரிக்கிறார். முனிவர்களை அங்கு விட்டுவிட்டார். அதனால் இங்கு நக்கீரர் அதை ஈடுசெய்தார் போலும்!இதைப் படிப்பதே நம் மனதை தூய்மை செய்யும்!


இத்தகைய முனிவர்கள் முன்னே செல்ல , பின்னால் வருவது யார்?
தேவர்கள் வரவேண்டும்- அவர்களுக்குமுன் கந்தர்வர்கள் ஆணும் பெண்ணுமாக ஸ்ருதி சேர்த்த யாழுடன் இனிமையாகப் பாடிக்கொண்டே வருகிறார்கள். இதை 10 வரிகளில் சொல்கிறார்.

மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர
..............
மாசில் மகளிரொடு மறு இன்றி விளங்க

இப்போது பெரிய பெரிய தேவர்கள் வருகிறார்கள். முன்னணியில் வருவது யார் யார் என்பதை அவர்களுடைய கொடியே காட்டி விடுகிறது!

கொடுஞ்சிறைப் புள் அணி நீள் கொடிச் செல்வனும்
வளைந்த சிறகுடன் கூடிய  கருடன் இருக்கும் உயர்ந்த கொடியை உடைய திருமால்

................வெள் ஏறு..
உமை அமர்ந்து உறையும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

வெண்மையான ரிஷபக் கொடியை உடையவரும், உமாதேவியாரைப் பாகத்தில் வைத்தவரும் மூன்று மதில்களை எரித்தவருமாகிய சிவபெருமான்

யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்

ஐராவதத்தின் கழுத்தில் ஏறிவரும் செல்வம் மிக்க இந்த்ரனும்

ஆக இவர்கள் வருகிறார்கள் . மும்மூர்த்திகளில் ப்ரம்மாவைக் காணோம்! அங்கே இந்த்ரன் வருகிறான்! இதில்தான் இவர்கள் அனைவரும் ஏன் இங்கு வருகிறார்கள் என்பதன் காரணமே அடங்கியுள்ளது!
ப்ரம்மாவின் அகந்தையின் காரணமாக முருகன் அவனைச் சிறையில் அடைத்துவிட்டான்! ஸ்ருஷ்டித்தொழில் தடைபடவே, மற்ற தொழில்களும் பங்கமுற்றன.உலகம் சரியாக நடக்க முத்தொழிலும் அவசியம். அதனால், ப்ரம்மாவுக்காக பரிந்து பேச இவர்கள் வருகிறார்கள்! அதற்காக , முருகனை வசப்படுத்தும் பொருட்டு,   தவத்தில் சிறந்த முனிவர்களையும், இசைக்கும் கந்தர்வர்களையும் முதலில் அனுப்பிவிட்டு, தாம் பின்னால் வருகிறார்கள்!



நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய 
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரைப் பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர



இந்த உலகை நான்கு பக்கங்களிலும் நான்கு தேவர்கள் காத்து வருகின்றனர்.(இந்த்ரன்- கிழக்கு; யமன்-தெற்கு;வருணன்-மேற்கு; குபேரன்-வடக்கு) அதனால் உலகில் உள்ள நகர்கள் நல்ல நிலையில் விளங்குகின்றன. இவ்வுலகத்தை மும்மூர்த்திகள் பலரும் புகழும் வண்ணம் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். அதில், தாமரையில் தோன்றிய நான்முகன் சிறைப்பட்டதாலே, அவனைக் குறித்து முருகனைக் காண இவர்கள் வருகிறார்கள்!
இவர்களுக்கு தரிசனம் தருவதற்காக முருகன் ஆவினன்குடியிலே எழுந்தருளுவான்!


பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத்
தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன்காணத்


தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்



இப்போது எல்லா தேவர்களையும் நக்கீரர் குறிப்பிடுகிறார்.

பதினொரு மூவர் ==  11x3=முப்பத்து மூவர். பதினொரு (ஏகாதச ) ருத்ரர்கள், பன்னிரு (த்வாதச ) ஆதித்யர்கள், அஷ்ட (எட்டு) வஸுக்கள், இரண்டு அஸ்வினீ தேவர்கள் ஆகியோர்.
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் == 9x2 பதினெண் கணங்கள்.(பிற தேவர்கள், தைத்யர்கள், சித்த, வித்யாதரர்கள். யக்ஷர், கின்னரர், கிம்புருஷர், சாரணர், தாராகணம், நாகர் போன்றோர்)

தேவர்கள் என்றாலே ஒளி பொருந்தியவர்கள் என்று பொருள். இங்கு இத்தனை பேரும் சேர்ந்து வரும்போது , சூர்யனைப்போல் ப்ரகாசித்துக் கொண்டு, நக்ஷத்திரங்களைப்போல் மின்னிக்கொண்டு, காற்றைப்போல கடுகி, நெருப்பின் ஆற்றலுடன் வருகிறார்கள்.இடிபோன்ற முழக்கத்துடன் வருகிறார்கள். முருகனிடம் முறையிட்டு, தத்தம் பங்குகளைப்பெறும் ஆர்வத்துடன் வான வழியே வருகிறார்கள். தலைவனைப் பார்த்து மகிழ்கிறார்கள்.

இவர்கள் குறைகளைக்கேட்டு ஆவன செய்யும் பொருட்டு முருகன்  சிலகாலம் ஆவினன் குடியில் தெய்வானையோடு எழுந்தருளி யிருப்பான்.

கொள்கை மடந்தை என்கிறார் நக்கீரர். கொள்கை என்பது இங்கு கற்பு நெறியைக் குறிக்கும். தெய்வானைத் திருமணம் கற்பு வழி மணம். இங்கே தெய்வானை அம்மையைச் சொல்வதில் ஒரு ஸ்வாரஸ்யம்! இவர்  தேவலோகத்து மங்கை. வருவது தேவர்கள், அதுவும் தங்கள் குறையைச் சொல்லி பரிகாரம் தேட! அவரும் தங்கள் பக்கம் பரிந்து பேசுவார் என்பது குறிப்பு!

அருணகிரி நாதர் திருவகுப்பு என்று சில அரிய பாடல்களை அருளியுள்ளார்.அவற்றில் கொலு வகுப்பு என்பது ஒன்று. அதில் முருகன் தன் தர்பாரில் கொலுவீற்றிருப்பதையும் அப்போது யார்யார் அவரை தரிசிக்க வருகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.தேவர்கள் வருவதையும் அழகாகச் சொல்கிறார்!

அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி
அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்  ...... 1

அருணனு மதியமும் அனல்எழு கனலியும்
அணங்கி னொடுசூழ் கணங்கள் ஒருபால்  ...... 2

வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
மகிழ்ந்து மிகவே புகழ்ந்த தொருபால்  ...... 3

வயிரவ ரொடுபடர் உவணரும் உரகரும்
வரங்கள் பெறவே இரங்க ஒருபால்  ...... 4

இருடிகள் எவர்களும் இனியகி னரர்களும்
இணங்கி எதிரே வணங்க ஒருபால்  ...... 5

மடல்புனை புகரொடு வருபதி னொருவரும்
மருங்கின் உறவே நெருங்க ஒருபால்  ...... 11




(இது  கௌமாரம்.காம் மிலிருந்து எடுத்தது.  நன்றி,)

என்று இப்படி வர்ணிக்கிறார்! நக்கீரர் எழுதியதற்கு விளக்கம் போன்று இவை அமைந்துள்ளன!

இவ்வாறு முருகன் திருவாவினன்குடியில் வந்ததைச் சொல்லி, இன்னும் வேறு இடங்களும் உள்ளன  அதாஅன்று என்று தொடர்கிறார் நக்கீரர்.



5. திருமுருகாற்றுப்படை-3. திருச்சீரலைவாய்



5. திருமுருகாற்றுப்படை-3

திருச்செந்தூர் - ஒரு பழைய தோற்றம்

திருச்சீரலைவாய்

ரங்குன்றிலிருந்து நேரே  அலைவாயாகிய திருச்செந்தூருக்கு வருகிறார் நக்கீரர். உடனே நேரடியாக விஷயத்திற்கும் வந்துவிடுகிறார். எடுத்தவுடன் இங்கு முருகன் வரும் செய்தியைச் சொல்கிறார்.

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை 
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு



முருகன் இங்கு யானைமேல் எழுந்தருளுகிறான். அந்தயானை காற்றுபோல் வேகமாக வருகிறது. கூற்றம்போல யாராலும் தடுக்கமுடியாத ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அதன் பக்கங்களில் மணிகள் அசைகின்றன. அதன் நெற்றியில் அங்குசம் பதிந்ததின் அடையாளமான  வடு கோடாகத் தெரிகிறது.அதில் வாடாத மாலை பட்டத்துடன் விளங்குகிறது. இப்படிப்பட்ட யானைமீது முருகன் வருகிறான்.

ஆடும் பரி என்று மயிலையே முருகனின் பிரதான வாகனமாகச் சொல்கிறோம். ஆனால் முருகனுக்கு  ஆடு, யானை என்ற வேறு இரண்டு வாகனங்களும் உண்டு.

யானையின்மீது  கம்பீரமாக  வரும் முருகனின்  திருமுடியில்  அழகிய அரிய வேலைப்பாடுடன் கூடிய கிரீடம் பொலிகிறது.

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப 
நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப



  நல்லகிரீடத்திற்கு ஐந்து அம்ஸங்கள் பொருந்தியிருக்கவேண்டும் என்பது முறை. இங்கு அந்த ஐந்து லக்ஷணங்களும் பொருந்தி ,சிறந்த வேலைப்பாடு அமைந்ததாக  (செய்வினை முற்றிய)உள்ளது இக்கிரீடம். பொன்னாலாகி மாணிக்கம் பதிக்கப்பெற்றது. பல நிற மணிகள் ப்ரகாசிக்கின்றன. பரமனின் செவிகளில் மகரக்குழைகள் அசைந்து பளிச்சிடுகின்றன. தண்ணிலவைச் சூழ்ந்து மின்னும் தாரகைகள் போன்று  காணுகின்றன.

இங்கு முருகன் ஆறு முகங்களும் பன்னிரு கையும்  உடையவனாகக் காட்சிதருகிறான். இந்த முருகனின் காட்சி யாருக்குக் கிடைக்கும்? சீரிய நியமத்துடன் தவமிருந்து, தம் ஸங்கல்பத்தை முடித்த  தூய முனிவர்களின் மனதிலே இந்த முகங்கள் தோன்றும்!

தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார்
மனனேர்பு  எழுதரு வாள் நிற முகனே


"சிதேகா ஷடஸ்யா ஹ்ருதித்யோ ததேமே
முகானி:" ஆதி சங்கரர். மனதை அடக்கி உள்ளே ஆத்ம ஒளி கண்டவர்களுக்கு ஆறு முகங்கள் தோன்றும்!




கோழி ஒங்கிய வென்றடு விறற் கொடியுடன் அலைவாய் அமர்ந்த
அறுமுகச் செவ்வேட் பரமன்.

இனி நக்கீரர், ஒவ்வொரு முகத்துக்கும் கைகளுக்கும் உரிய செயல்களை விவரிக்கிறார்.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல் கதிர் விரிந்தன்று ஒருமுகம்.


ஊழிக்கால மாவிருளைப் போக்குவது  சதகோடி சூர்யப்ரகாசமுள்ள முருகன். அந்த இருளைக்காட்டிலும் அடர்த்தியானது நமக்குள்ளே இருக்கும் அஞ்ஞான இருள். இது ஜன்ம ஜன்மாந்தரமாக நம்மைத் தொடர்வது.முருகன் புற இருளைப் போக்குவதோ டல்லாது, நமது அக இருளையும் போக்கும் ஞான பாஸ்கரன்.

....................ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம் கொடுத் தன்றே.

நம்முடைய வழிபாடென்பது பொதுவாக  நமது வேண்டுகோள் நிறைவேற நாம் செய்யும் பிரார்த்தனை யாகவே இருக்கிறது. இது வேத காலத்திலிருந்து தொடர்ந்துவரும் முறை! ஸ்ரீ ருத்ரத்தில் 300  நாமங்கள் சொல்லி பகவானை ஆராதித்துவிட்டு, உடனே நமது விருப்பப் பட்டியலை நீட்டுகிறோம்! "வாஜஸ்சமே" என்று  உணவிலிருந்து தொடங்கி அடுக்கிக்கொண்டே போகிறோம்!  பகவான் கீதையில் நான்கு வகை பக்தர்களைச் சொல்கிறார். (7.16)வரம் கேட்பவரும்  (அர்த்தார்த்தி) அதில் அடக்கம்!  யாரோ சில ஞானிகள் 'வீடும் வேண்டா விறலினராக" இருக்கலாம்; நாம் வரம் கேட்கும் வகை! இது நமது ஆண்டவனுக்கும் தெரியும்! அதனால் அவர் அன்பு பெருகி, இனிமையாக, மிக்க மகிழ்சியுடன் வரம் கொடுக்கிறார்!


..........................ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே


அந்தணர் செய்யும் வேள்விகள் உலக நன்மையைக் கருதி  ஏற்பட்டவை. உலகம் சரியாக இயங்குவதற்கான பல செயல்களுக்கு அதிகாரியாக பல தேவர்களை இறைவன் நியமித்திருக்கிறான். வேள்விகள் மூலம் தகுந்த ஆஹுதி யளித்து அவர்களைப் போஷிப்பது அந்தணர்களின் கடமை.இந்த யஜ்ஞங்களின் பலன் தேவர்களை அடையாமல் செய்து, அவற்றைத் தாமே அனுபவிக்க அஸுரர்கள் முயல்வார்கள். சூரபத்மன் முதலிய அரக்கர்கள் இத்தகையவரே. மந்திர விதி தவறாமல்  அந்தணர்கள் செய்யும் யாகங்கள் நன்கு நிறைவேற ஒருமுகம் திருவுள்ளம் கொள்ளும். உண்மையில், வேள்விகளின் தலைவன் முருகனே. அவனை "விப்ர குல யாகச் சபாபதி"  என்பார் அருணகிரி நாதர் (வேடிச்சி  காவலன் வகுப்பு). முருகனின் அவதாரம் இந்த அஸுரர்களை அழிப்பதற்காகவே நிகழ்ந்தது. சூராதி யவுணரை அழித்து தேவர்களின் இடத்தை அவர்களுக்கே மீண்டும் அளித்தான் முருகன்.(முன் கட்டுரைகளையும் பார்க்கவும்)

...............................ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத் திசை விளக்கும்மே


இங்கே ஒர் அரிய கருத்தைச் சொல்லுகிறார் நக்கீரர்.

"எஞ்சிய பொருள்களை" என்கிறார். எது எஞ்சியது? ஏன் எஞ்சியது?

இந்த உலகத்தையும் அதன் இயக்கத்தையும் அறிந்து கொள்ள மனிதன் பலகாலும் முயன்று வந்திருக்கிறான். பலதுறையைச் சேர்ந்த அறிஞர்கள் இதைப் பலவாறு விளக்குகிறார்கள். விஞ்ஞானிகள் வெளியுலகத்தை ஆராய்கிறார்கள். அணுமுதல் அண்டகோளம் வரை அலசுகிற விஞ்ஞானிகள், எதிலுமே  'இதுதான் இறுதி உண்மை' என்று சொல்ல இயலவில்லை.
ஆராய்ச்சி முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. வான சாஸ்திரிகள் (Astrophysicists) "வான வெளிக்கு எல்லையே இல்லை, அது விரிந்துகொண்டே போகிறது "   The Expanding Universe என்கிறார்கள். "நாம் காணக்கூடிய உலகம்  The Observable Universe" என்று தாங்களே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு, அதற்குட்பட்டே பேசுகிறார்கள். ஆனால்  இதுவே அவர்கள் கணக்கிற்கும் கருத்திற்கும் வரவில்லை! அணுவை ஆராயப் புகுந்தவர்களோ, "ஸர்வம் சக்தி மயம்" என்று கண்டு, உட்கார்ந்து விட்டார்கள். இதெல்லாம் ஒன்றும் தெரியாத இரண்டுங்கெட்டான்கள் இன்னமும் விஞ்ஞானம் விஞ்ஞானம் என்று சொல்லித் திரிகிறார்கள்!

இதையே இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தவர்கள், மதம்- தத்துவம் என்று பல வலைகளை விரித்து, தாங்களும் சிக்கி, மற்றவர்களையும் சிக்கவைத்து விட்டார்கள்.

இவற்றிற் கிடையே எத்தனையோ பிரிவுகள், அறிஞர்கள்! கணக்கில்லாத நூல்கள்! இந்த உலகில் அடிப்படையாக உள்ளது எது என்பது யாருக்குமே விளங்கவில்லை! மெய்ஞானிகள் இதை உணர்ந்துகொண்டு விட்டார்கள்.இது மனம், வாக்குகளுக்கு எட்டாதது என்கிறார்கள்.இதனையே கடவுள்  என்று தமிழில் அழகாகச் சொல்கிறோம். மனம், மொழிகளைக் கடந்த பொருள்! எல்லாவற்றையும் கடந்து, அதே சமயம் எல்லாவற்றிற்கு உள்ளும் வியாபித்து நிற்பது! இதை சம்ஸ்கிருதத்தில் ப்ரஹ்மம் என்கிறோம். இது ஒன்றுதான் எச்சில் படாதது என்பார் ஸ்ரீராமக்ருஷ்ணர்! ஏனெனில், எவரும் இதை வாயினால் விளக்கியதில்லை!

எனவே, நம் அறிவு, ஆராய்ச்சிகள் அனைத்தையும் மீறி எஞ்சி நிற்கும் பொருள்  இது ஒன்றுதான்! இந்த நல்லறிவை- மெய்ஞானத்தை நமக்கு அளிப்பவன் ஞானபண்டிதனாகிய முருகன்! நமது அறிவு ஆராய்ச்சிகளுக்கு அடங்காமல் எஞ்சியுள்ள பொருளை இன்புடன்ஆராய்ந்து சந்திரனைப்போல திசையெல்லாம்  விளங்கும்படிச் செய்வது ஒரு முகம்! 

இதனை அருணகிரி யண்ணல் அருமையாகச் சொல்கிறார்!

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி


 வாசித்துக் காணொணாதது  = நூல்களைக் கற்பதனாலே இதை அறிய முடியாது.
பூசித்துக் கூடொணாதது  =   பூஜை, ஆராதனை என்பவற்றால் இதை அடையமுடியாது.
வாய்விட்டுப் பேசொணாதது = இதை வாயினாலே (மொழியினாலே) விளக்கமுடியாது.

நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொணாதது = மனத்துக்கண் மாசு உள்ளோருக்குத்  தோன்றாது!
நேசர்க்குப் பேரொணாதது =  இறைவனிடம் அன்பு பூண்டவர்களின் இதயத்தை விட்டு    நீங்காதது

மாயைக்குச் சூழொணாதது  = மாயையினால் சூழவியலாதது

விந்து நாத ஓசைக்குத் தூரமானது == சக்தி, சிவம் என்று நாம் எழுப்பும் ஆராய்ச்சி ஓசைகளுக்கு மிக அப்பாற்பட்டது

மாகத்துக்கு ஈறதானது  ==   ஆகாயத்திற்கே முடிவாக இருப்பது
லோகத்துக் காதியானது    ==படைக்கப்பட்ட உலகத்துக்கெல்லாம் ஆதி (முதலாக) இருப்பது

இதை  நான் உணரும்படியாக ,உண்மையான யோகத்தை அடையுமாறு நீ மெய்ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

இன்னொரு இடத்தில்,

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன  பரசமய கலைஆர வாரமற
உரைஅவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி  யானதுவும்

என்கிறார். இதை அநுபூதியில்தான் உணரமுடியும்.

இதை வாய்விட்டுச் சொல்லமுடியாது. சொல்கிறேன் என்பவனுக்குத் தெரியாது, தெரிந்தவனால் சொல்லவியலாது என்கிறது உபநிஷதம்.

யதோ வாசோ நிவர்த்தன்தே
அப்ராப்ய மனஸா ஸஹ:

என்பது  தைத்திய  உபநிஷத வாக்கியம். "எதை அடைய இயலாமல் வாக்கும் மனமும் திரும்பி வருகின்றனவோ" என்பது இதன் பொருள். இதுவே  "எஞ்சிய" பொருள் !  இதை விளக்குவது நம் முருகன்!




...............................ஒரு முகம்
செறு நர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கிக்
கறுவு கொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே

ஒரு முகம் போருக்குவந்த பகைவர்களை அழித்து, வந்த போரை ஒழித்து, தணியாத கோபத்துடன் கள வேள்வியைச் செய்தது.
[போரில் வெற்றி பெற்றவன் அந்தப் போர்க்களத்தில் விழுந்து கிடக்கும் உடல்களைக் கொண்டு துர்கைக்கு செய்யும் வேள்வி கள வேள்வி. இது போர்
மரபு]

........................ஒரு முகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஒரு முகம் கொடிபோன்ற குறமகள் வள்ளியுடன் மகிழ்ந்திருப்பது.

ஆங்கம் மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்து  வாங்கு நிமிர்தோள்

இவ்வாறு ஆறுமுகங்களும் தத்தமக்குரிய  முறையான செயல்களைச் செய்து வருகின்றன. அதனால் அவ்வம் முகத்திற்கேற்ப இரண்டிரண்டு கைகளும் தத்தம் செயலில் ஈடுபட்டுள்ளன. மார்பிலே புரளும் பொன்னாரம் தொங்கும் மாலை. அதை ஏற்று கொடையினாலே புகழ்பெற்ற தோள்கள் பன்னிரு புயங்களைத்தாங்கி நிமிர்ந்து நிற்கின்றன. இந்த நிலையில்,

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை
உக்கம் சேர்த்தியது ஒருகை

சூர்யனது வெப்பம் முழுவதையும் அப்படியே பூமியினால் தாங்க முடியாது.அதனால் சில முனிவர்கள் சூரியனுடனேயே வானில் சென்று தங்கள்  தவவலிமையினாலே பூமிக்குவரும் வெப்பத்தைக் குறைக்கிறார்கள்.முருகன் ஒருவலது கையை அம்முனிவர்களுக்குப் பாதுகாப்பாக உயர்த்தி இருக்கிறான்.இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறான்

இவ்வாறு சிலமுனிவர்கள் சூரியனுடன் ப்ரயாணம் செய்கிறார்கள் என்ற செய்தி புறநானூற்றில் வருகிறது. (பாடல் 43). ஆனால் தற்காலத்தில் இதற்கு வேறுவிதமாகப் பொருள் சொல்லுகின்றனர்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவர்.

யானைமீது வரும் முருகன் ஒரு கையைத் துடையின்மீது வைத்திருக்கிறான். ஒரு கையில் அங்குசம் இருக்கிறது.

நலம்பெறும் கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை.

அந்தணர்களின் வேள்வியைக் காக்கும் முகத்திற்கேற்ப, இரு கைகள்:

இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப

வியப்பான முறையில் இருகைகள் கேடயத்தையும் வேலையும் சுழற்றுகின்றன.

எஞ்சிய பொருள்களை இன்புடன் விளக்கும்  ஞானபண்டிதன் அதற்கேற்ப மோனமுத்திரை காட்டுகிறான்.ஒருகை மார்புடன் சேர்ந்துமுத்திரை காட்டுகிறது ஒருகை மார்பில் புரளும் மாலையோடு சேர்ந்து இருக்கிறது.

ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய


களவேள்வி செய்யும் முகத்திற்கேற்ப , ஒரு கையை உயர்த்திச் சுழற்றுகிறான்;ஒரு கையினால் மணியை அடிக்கிறான்.

ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப
ஒருகை பாடின் படுமணி இரட்ட

அறநெறி தழைக்க வாழும் சமூகத்திற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையானது. மழை சகல அறத்திற்கும் ஆதாரம்.

சிறப்பொடு பூசனை செல்லாது  வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

நீரின்றி யமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.
என்பது குறள்.

 மணவாழ்கை அதற்கு உறுதுணை. அறன் எனப்பட்டதே இல்வாழ்கை என்பார் வள்ளுவர்.

அதன்படி, முருகனது ஒருகை, நீல வானிலிருந்து மிகுந்த மழையைப் பொழியவைக்கிறது. ஒரு கை  தேவப் பெண்களுக்கு மண மாலை சூட்டுகிறது.
வி
ஒருகை நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய
ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட.

இவ்வாறு ஆறு முகங்களுடனும் பன்னிரு கரங்களுடனும்  முருகன் வருகிறான்.துந்துபிகள்,சங்குகள், கொம்புகள் , வெற்றிமுரசு ஆகிய வாத்யங்கள் முழங்குகின்றன. அவற்றுடன் சேர்ந்து மயிலும் அகவுகின்றது.

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளை ஞரல
உரந்தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல்பொறி  மஞ்ஞை வெல்கொடி அகவ

முருகன் வானவீதி வழியே வேகமாக வரும் எண்ணம் கொண்டிருக்கிறான். இவ்வாறு வந்து, உலகமே புகழும் சிறப்புடைய அலைவாய் அடைந்து தங்குவது முருகனது இயல்பிலேயே அமைந்த குணமாகும்.

விசும்பாறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும்  நிலைஇய பண்பே.

அதா அன்று. அது மட்டுமல்ல.

இவ்விதமாக 48 அடிகளில் திருச்செந்தூர் பற்றிச் சொல்கிறார். இது பழம் பெருமை வாய்ந்த தலம். சூரஸம்ஹாரம் ஆனதும் வெற்றிக் கோலத்தொடு முருகன் வந்து தங்கிய இடம். அதனால் இது ஜயந்திபுரம் எனப்படும். அதற்கேற்ப நக்கீரர் ஆறு முகங்களையும் பன்னிரு தோள்களையும் பற்றிச் சொல்கிறார்.

ஆதி சங்கரர்க்கும் இத்தலத்தின் மீது அதீத ஈடுபாடு. கடல் அலைகள் முருகனின் கால்களில் வந்து அடங்குகின்றன.இதைப் பார்த்ததும், நமது எண்ணற்ற பிறவி அலைகளும் இப்படித்தானே அவன் காலடியில் அடங்கி ஒடுங்கும் என்று  நினைக்கிறார்!


यदा सन्निधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्ति पुत्रम् ॥४॥

.யதா ஸன்னிதானம் கதாமாநவா மே
பவாம்போதி பாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்.


"கடற்கரையிலுள்ள என் ஸன்னிதானத்தை அடைந்த அப்போதே, மனிதன் இந்த ஸம்ஸாரக் கடலைக் கடந்துவிட்டான்". இதையே இந்தக் கடற்கரைக் கோவிலிலிருந்து நம் பெருமான் சொல்லுவது போலிருக்கிறது. அந்தப் பராசக்தி புத்ரனைப் புகழ்வோம்.


- ஆதி சங்கரர். ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்.