Showing posts with label மஹேந்த்ர நாத் குப்தர். Show all posts
Showing posts with label மஹேந்த்ர நாத் குப்தர். Show all posts

Thursday, 8 September 2016

68. இரு புத்தகங்களின் கதை-1


68. இரு புத்தகங்களின் கதை -1



thanks: imlostinbooks.blogspot.in


உலகில் மொத்தம் சுமார் 13 கோடி புத்தகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருஷந்தோறும் லக்ஷக்கணக்கில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன. சைனா 4,40,000 ; அமெரிக்கா 3,05.000; இங்கிலாந்து  1,84.000; இந்தியா 45,000- 90,000 வரை (எல்லா மொழிகளிலும் ) புத்தகம் வெளியிடுவதாக மதிப்பிடுகின்றனர். ஆனால், எத்தனை பேர் படிக்கிறார்கள்? உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நபர் சுமார் ஆறு புத்தகங்கள் படிப்பதாகக் கணக்கிடுகின்றனர். அமெரிக்கர்கள் வருஷத்தில் சராசரியாக 12 புத்தகங்கள் படிப்பதாக எண்ணப்படுகிறது. சுமார் 63% அமெரிக்கர்கள்  1914ம் ஆண்டில் ஒருபுத்தகமாவது  படித்ததாகச்  சொன்னார்கள். இது 2011ல் இருந்ததைவிட 6% குறைவாகும். நம் நாட்டைப்பற்றி எந்த விளக்கமும் இல்லை!

நஹி நஹி ரக்ஷதி !


இன்று கல்வியறிவு பரவலாகிவிட்டதன் காரணமாக, எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை நாளும் பெருகிவருகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பத்திரிகைகளைத்தான் படிக்கின்றனர். இன்று யாரும் எதைப்பற்றியும் எழுதலாம் என்ற நிலை உருவாகிவிட்டது ! இலக்கியம் என்றபெயரில் எதைவேண்டுமானாலும் எழுதலாம்! எதையும் இலக்கியம் என்று சொல்லலாம்! ஆனாலும் நம்மைப் பண்படுத்திய புத்தகங்கள் எவை, எத்தனை என்று பார்த்தால், ஓரிரண்டு சமயப் புத்தகங்களைத்தான் சொல்லமுடியும். வயதான காலத்தில் எந்த இலக்கியப் புத்தகமும் ஆறுதல் தராது! இதை ஆதி சங்கரர் " நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்  கரணே " என்று சொன்னார். 



இந்தியாவில்  அனைத்துமொழிகளிலும் உள்ள  ஹிந்து மதப்  புத்தகங்களுக்கு மூலம்- ஆணிவேர் சம்ஸ்க்ருதப் புத்தகங்களே. [ தமிழ் நாட்டு சைவ சிந்தாந்தத்திற்கும் இது பொருந்தும். ] ஆனால், மெக்காலே கல்விச் சூழ்ச்சியால் இன்று இந்தியர்கள்  பெரும்பாலும் மூலத்தை அறியாதவர்களாகி விட்டார்கள். அபத்தமான மொழிபெயர்ப்பைப் படித்தே காலம் தள்ளுகிறார்கள் !

இரண்டு மகத்தான புத்தகங்கள்



இந்த நிலையில் இரண்டு மகத்தான புத்தகங்கள் நவீன இந்தியாவில் தோன்றின. ஒன்று, வங்காளி மொழியில் ஸ்ரீ மஹேந்த்ர நாத குப்தர்  எழுதிய " ஸ்ரீ ஸ்ரீ  ராமக்ருஷ்ண கதாம்ருதம் " என்ற ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாறு-மற்றும் உபதேசங்கள் அடங்கிய நூல். மற்றது ஸ்ரீ முருகனார் எழுதிய தமிழ் நூல்: "குரு வாசகக்  கோவை ". இது பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் உபதேசத் தொகுப்பாகும்.




 முதல் புத்தகம்   The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் 1942ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் ஆஸ்திக வட்டாரத்தில் ப்ரபலமாகியது. முருகனாருடைய புத்தகமோ, 
The Garland of Guru's Sayings என்ற பெயரில் ஆங்கிலத்தில் இருந்தாலும், ப்ரபலமடையவில்லை.தமிழிலும் அதிகம் பேருக்குத் தெரியாது. தீவிர ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் தான் இதை அறிவர். இந்த இரு புத்தகங்களின் பின்னணி அற்புதமானது. இவற்றை எழுதியவர்களும் அற்புத புருஷர்கள்.

ஸ்ரீ ராமக்ருஷ்ணர்



1836ல் வங்காளத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கதாதர் சட்டோபாத்யாய், 1853ல் அன்றைய இந்தியாவின் தலை நகரான கல்கத்தாவிற்கு வந்தார். சந்தர்ப்ப வசத்தால் ராணி ராஸமணி தக்ஷிணேஶ்வரில் கட்டிய பவதாரிணி என்ற காளிகோயிலுக்கு 1855ல் வந்து பின்பு அர்ச்சகரானார். தீவிர பக்தியால் அன்னை காளியைபப் பிரத்யக்ஷமாகக்கண்டு , அவருடைய சான்னித்யத்தியத்தை நிரந்தரமாக அடைந்தார். பின்னர் அன்னையின் அருளால் ஹிந்து மதத்தின் ஒவ்வொரு பிரிவின் உண்மையையும் அனுபவத்தில் அறிந்து ஹிந்துமதமே உண்மையான "சனாதன தர்மம் " [என்றும் நிலைத்திருப்பது ] என்பதைக் கண்டுகொண்டார். இந்த சாதனைகள் 1872 வரை நீடித்தன. அதன் பிறகு அவருடைய ஆன்மீக மேன்மையை அறிந்துகொண்ட பக்தர்கள் அவரிடம் வரலாயினர். ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் அவர்களுக்கு உபதேசம் வழங்கினார். 

ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் முக்கிய உபதேசம் மிகவும் எளிமையானது. அதை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்:


கடவுள் ஒருவரே உண்மைப் பொருள். பிற எல்லாம் நிலையில்லாதவை, அதனால் மெய்த்தன்மை அற்றவை. ஒவ்வொருவரும் ஏதாவது சாதனையை  மேற்கொண்டு, கடவுளை நாடி அனுபவத்தில் உணரவேண்டும். இதுவே மனித வாழ்வின் லக்ஷியம். இக் கலிகாலத்தில் பழைய வைதிக கர்மாக்களை சரியாகச் செய்ய முடியாது. ஞானமார்க்கமும் கலிகாலத்தில்  கடினமாகும். தந்திர சாதனைகளும் அபாயமானவை; கலிகாலத்திற்கு ஏற்றவையல்ல. நாரதர் காட்டிய பக்திவழிதான் இக்காலத்திற்கு ஏற்றது. அவர் காட்டிய வழியில்  சாதகர்கள் முயற்சி செய்யவேண்டும்.

இந்தியத் தலைநகரான கல்கத்தாவில்  அந்த நாட்களில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள்  ஹிந்து மதத்தைப் பலவாறு  மூர்கத்தனமாகத்  தூஷித்து  வந்தார்கள். 1836ல் அமுலுக்கு வந்த மெக்காலேயின் கல்வித்திட்டத்தால்  நமது இளைஞர்கள்  மேலை நாட்டு விஷயங்களையும், ஆங்கிலத்தையும் பயிலத்தொடங்கினர். நடை, உடை, பாவனைகளில் ஆங்கிலேயரையே பின்பற்றத் தொடங்கினர்- அரை துரை யாயினர்! நமது மதத்திலிருந்த பிடிப்பு  குறையத் தொடங்கியது, நம்பிக்கையும் தளர்ந்தது. ராஜாராம்  மோஹன் ராய் போன்ற சீர்திருத்த வாதிகள்  'ப்ரம்ம  சமாஜம் ' போன்ற புதிய அமைப்புகளைத் தோற்றுவித்து படித்த இளைஞர்களை  ஈர்க்கமுயன்றனர். க்றிஸ்துவ மதத்தின் பல அம்சங்களை பின்பற்ற முயன்றனர். ஹிந்துக்கள் பத்தாம் பசலிகள் என்ற கருத்து  ஆங்கிலக்கல்வி கற்றவரிடையே பரவலாயிற்று.  இந்த நிலையில் பள்ளிக்கல்வியே கற்காத, ஆங்கிலம் கொஞ்சமும் அறியாத ஸ்ரீ ராமக்ருஷ்ணரின்  எளிய வங்காள க்ராமிய மொழியில்  வந்த வார்த்தைகள் கேட்டவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கேசவ சந்த்ர சென் போன்ற சீர்திருத்த வாதிகளும். படித்த இளைஞர்களும், கல்லூரி  மாணவர்களும்  அவரிடம் வர ஆரம்பித்தனர். இது 1881-82ல் தொடங்கியது. பிற்காலத்தில் விவேகானந்தர் எனப் புகழ்பெற்ற நரேந்த்ர நாத  தத்தரும், நமது மஹேந்த்ர நாத குப்தரும் இம்மாதிரி வந்தவர்கள் தாம்.. [  மஹேந்திரர்    'M'   
(ம ) எனற பெயரிலேயே  'கதாம்ருதத்'தை  எழுதி வெளியிட்டதால், இனி அவரை  ம என்றே குறிப்போம்.]

மஹேந்த்ர நாத குப்தர்- ம




ம  1854ல் பிறந்தவர்.  (விவேகானந்தருக்கு 9 வயது மூத்தவர்.)  கல்வியிலும்  ஒழுக்கத்திலும்  சிறந்தவர். பள்ளி ஆசிரியராக இருந்தார்.  சிறுவயது முதலே காலையில் எழுந்ததும் தாய், தந்தைக்கு நமஸ்காரம் செய்யும் வழக்கமுள்ளவர்.
தெய்வ சிந்தையும், சாதுக்களிடம் மரியாதையும் உடையவர். பள்ளி நாட்களிலேயே  தினமும் 'டைரி' எழுதுவார். கூர்ந்த மதியும் தீவிர ஞாபகசக்தியும் கொண்டவர்.. 1882 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் மனச் சாந்திக்காக கல்கத்தாவில் சில தோட்டங்களைப் பார்க்கக் கிளம்பி, உறவினர் ஒருவருடன், தக்ஷிணேஶ்வரக் கோயிலுக்கும்  வந்து எந்தவித முன்னேற்பாடுமின்றி .  ஸ்ரீ ராமக்ருஷ்ணரைத்  தரிசித்தார். அவரால் ஈர்க்கப்பட்ட மனத்தராகி, தொடர்ந்து  நாலரை வருஷங்கள்- குருதேவரின்  சமாதிவரை -அவருடன் இருந்தார். 


பள்ளியாசிரியரானதால் முக்காலும் விடுமுறை நாட்களில் தான் வருவார்.  குருதேவரின்  இடத்தைவிட்டு (அவர் சொன்னால் தவிர ) நகர மாட்டார்.  யார்யார் வந்தார்கள். யார் எங்கு உட்கார்ந்தார்கள், யார் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள், குருதேவர் என்ன சொன்னார், என்ன செய்தார் போன்ற எல்லாவற்றையும் அன்றன்றே தன்  நோட்டு புத்தகத்தில் குறித்து வைப்பார். ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் சொற்களை அவர் மொழியிலேயே  குறித்துவைப்பார். ( [தனது சொந்த சரக்கு எதுவுமில்லாமல் ]. குருதேவரைப் பற்றி தானே நேரில் பார்க்காதது, கேட்காதது எதையும் அவர் எழுதவில்லை.



ம  ஏப்ரல் 24, 1886 வரை குருதேவரை 174 முறை  தரிசித்தார். அவருடைய டைரியில்  அன்றுதான் அவர் எழுதிய கடைசி குறிப்பு இருக்கிறது. குருதேவர்  1886ம் வருஷம் ஆகஸ்டு 15 நள்ளிரவுக்குமேல் தான் சமாதியடைந்தார். ஏப்ரலுக்குப் பிறகும் ம  பல முறை வந்தார்; பல நாட்களில் அவரே டாக்டரிடம்  குருதேவரின் உடல் நிலையைப்பற்றிச் சொல்வார். ஆனால் குருதேவர்  நோயால் மிகவும் வருந்திய அந்த நாட்களில் அவருக்கு எதுவும் எழுதத் தோன்றவில்லை போலும் !



Entries in the diary of M- a sample. 

தெய்வீகப் பணி !

குருதேவரைப் பற்றி எழுதும் பணி மஹேந்திரருக்கென விதிக்கப்பட்டது ! இதை குருதேவரே பல விதத்தில்  சூக்ஷ்மமாகத் தெரிவித்தார்.


பல சமயங்களில் ஒரு விஷயத்தை விளக்கும்போது, ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  ம வைப்பார்த்து, "என்ன, புரிந்ததா" என்று  கேட்பார். அதைத் திருப்பிச்சொல் என்பார். அவரைத் திருத்துவார், மேலும் விளக்குவார்.



ஒரு சமயம் வேறொரு இளைஞர்- பக்தர்  தானும் குறிப்பெடுக்கத் தொடங்கினார். அதை அறிந்த குருதேவர் " இது உனக்கான வேலையல்ல" எனத் தடுத்துவிட்டார் ! அவரும் அதுவரை எழுதியதைக் கிழித்து கங்கையில் போட்டுவிட்டார். [ இவரே பிற்காலத்தில் சிவானந்தர்  (மஹாபுருஷ் மஹராஜ் ) என்ற  பெயரில் நேர் சிடர்களில்  ஒருவரானார். ] ஆனால், ம சன்னியாசியாக விழைந்தபோது, குருதேவர் சம்மதிக்கவில்லை!


1885 மார்ச் மாதம் 7ம் தேதி. குருதேவர்  அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ம வைக்  கனிவுடன் பார்த்துச் சொன்னார்:


 As for you, you are all right. Only a little remains yet to be done. When that is done, nothing will remain, neither duty, nor work, nor (worldly ) life. Is it good to get rid of everything?

God binds the Bhagavata Pandit  to the world with one tie. If it was not so, who would explain the Bhagavata?  He keeps the pundit bound for teaching man. That is why the Divine Mother has kept you in the world.

மஹேந்திர நாதர் எழுதப்போவது பாகவதத்திற்கு ஒப்பானது, அதுவே அவருடைய  தெய்வீகப் பணி என்ற ரகசியத்தை இவ்வாறு குருதேவர் வெளிப்படுத்தினார் !  ஆனால் அன்று இது யாருக்கும் புரிந்திராது! ம டைரி எழுதிவந்தார் என்பதே யாருக்கும் தெரியாது!


Tim Ross. Public Domain via Wikimedia.


Saturday, 6 August 2016

66. ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -6


66. ஸ்ரீமத் பாகவதமும்
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -6



ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் வாழ்க்கை தெய்வீகமயமானது. பல அற்புத அனுபவங்கள் நிறைந்தது. ஒவ்வொரு க்ஷணமும் தெய்வ அனுபவத்திலேயே  கழித்தார். வெகு சிரமப்பட்டுதான் உலக நினைவு அவருக்கு வரும். எந்த சமயத்திலும் ஒரு பொருளோ. சொல்லோ, காட்சியோ அவரை சமாதி  நிலையில்  சேர்த்துவிடும். சமாதி நிலையில் தவிர, சாதாரண சமயங்களிலும் பல தெய்வீகக் காட்சிகளைக் காண்பார். அன்னையுடன் அனவரதமும் உரையாடுவார். 

ஸ்ரீ ராமக்ருஷ்ணரின்  தெய்வீக நிலை

அவர் காசி சென்றபோது, அங்கு மணிகர்ணிகா கட்டத்தில் நம் சாஸ்திரங்கள் சொல்லும் ஒரு காட்சியை  நேரில் கண்டார். அங்கு மரணமடையும் ஜீவனுக்கு அதன் வலது செவியில் சிவபெருமானே தாரக மந்திரம் சொல்வதை நேரில் கண்டார் !

 ராமரையும் சீதாப்பிராட்டியையும் பல தடவை கண்டிருக்கிறார்'










ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  ஃபோட்டோவில் நாம் காணும் அற்புதப் புன்னகை அன்னை சீதாதேவியின்  திருமுகத்தது ! 

















அவர்  தூய அன்னை சாரதாதேவியாருக்காக இரண்டு தங்க வளையல்கள் செய்யச்செய்தார். இவை, அன்னை சீதை கையில் அவர் பார்த்தவை ! இவ்வாறு எவ்வளவோ அற்புத அனுபவங்கள்!











க்ருஷ்ணருடன் தொடர்பு

ஆனால்  ஸ்ரீமத் பாகவதம் பற்றிய அவர் அனுபவங்கள் சொல்லுக்கடங்கா அற்புதம் வாய்ந்தவை! ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வுலகை நீத்ததும், அவருடைய சான்னித்யம் ஸ்ரீமத் பாகவதத்தில் தங்கியது. அதனால் ஸ்ரீமத் பாகவதத்தை பகவானின் "வாங்மய ரூபம் " என்று சொல்கிறோம். இதை நேரில் கண்டு உணர்ந்தவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். பகவான் விக்ரஹத்திலிருந்து ஓர் ஒளி கிளம்பி, பாகவதப் புத்தகத்தை  அடைந்து, பின் பக்தர்களையும்  தொட்டது ! அதனால் அவர்  " பாகவதம் - பக்தர் - பகவான் " என்று எப்பவும் சொல்வார் ! பாகவதத்தைச் சொல்லும்படி ஸ்ரீ ஶுகருக்கு பகவானே ஆஞ்ஞாபித்தார் என்பார். அவர், பகவானின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ சைதன்யரின்  உண்மையான ஜன்ம ஸ்தானத்தை தன் தெய்வீகக் காட்சியால்/ உணர்வால் கண்டு சொன்னார். இது நதியின் போக்கு மாறியதால் புதையுண்டு கிடந்தது. அவர் மதுரா-ப்ருந்தாவனம் போனபோது அங்கிருந்து திரும்பிவரவே மறுத்துவிட்டார் ! கடைசியில் அவரது தாயாரின் நினைவுதான் அவரைத் திரும்பிவரச் செய்தது ! அவர்  பூரி ஜகன்னாதர் ப்ரஸாதத்தை வெகுவாக மதித்தார். அவர் அறையில் அது எப்பவும் இருக்கும். ஆனால் அவர் அந்த க்ஷேத்திரத்திற்குப் போனதில்லை ! அப்படிப்போனால் திரும்பிவரமாட்டார் என்பது அவரது உள்ளார்ந்த நம்பிக்கை ! 




அவரிடம் வந்த இளைஞர்களில்  ராக்கால் ஸ்ரீ க்ருஷ்ணருடன் ப்ருந்தாவனத்தில் விளையாடியவர் என்று கண்டார். அவரைத் தன் மானஸீக- ஆன்மீக  புத்ரராகக் கொண்டார். இவரே பிற்காலத்தில் "ராஜா மஹராஜ் " என்று அழைக்கப்பட்ட ஸ்வாமி ப்ரம்மானந்தரானார்.  ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் முதல் தலைவர் இவரே ! பெரும்பாலும் இந்த உலக நினைவே இல்லாமல் இருந்தவர் !






பாராயணப்  புத்தகங்கள்

நமது ஆன்மீகப் புத்தகங்கள் பலவகையானவை. ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் இதிஹாஸங்கள். வால்மீகி ராமாயணம் லக்ஷக்கணக்கானவர்களால் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது; ஆனால் மஹாபாரதத்தை அனேகமாக யாரும் வீட்டில் படிப்பதில்லை [அப்படி ஒரு நம்பிக்கை ] ஆனால் அதன் பகுதியான பகவத் கீதை பாராயண நூலாக இருந்தாலும், பலர் அதை ஏதோ ஸன்யாசிகளுக்கானது என்றே நினைக்கிறார்கள். விஷ்ணு ஸஹஸ்ர நாமம் மந்திரமாகவும், துதியாகவும் பாராயணத்திற்கும் வழங்கிவருகிறது. பாகவதம், ராமாயணம் போன்று பாராயண நூலாக இருக்கிறது. மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி அதைச் சுருக்கி "நாராயணீயம் " என்று செய்திருக்கிறார் !  இதுவும் சிறந்த பாராயண நூலாக இருக்கிறது. 

இக்காலத்தில் நம்மவர்களுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாததால் பலவித மொழிபெயர்ப்புக்களையும்  சுருக்க உரைகளையும் நாடுகின்றனர். இது அவ்வளவு சரியல்ல. மூல ஶ்லோகங்களுக்கு உள்ள ஆன்மீக சக்தி மொழிபெயர்ப்புக்கோ, உரை நடைகளுக்கோ இல்லை. மேலும் இவை பெரும்பாலும் வியாபார நோக்கம் கொண்டே வெளியிடப்படுகின்றன. இவை கதைப்புத்தகம் போன்ற நடையிலேயே எழுதப்படுகின்றன. ஸம்ஸ்க்ருதம் தெரியாவிட்டால், மூலத்தைப் படிக்கும்போதே  தெரிந்துகொள்ளலாம். சிறிது முயற்சி தேவை; இதுவே சிறந்த ஆன்மீகப் பயிற்சியாகிறது! 





பாகவதம்- தமிழில்









ஸ்ரீமத் பாகவதம் மூலம் உரையுடன் மூன்று சிறந்த தமிழ் பதிப்புக்களில் கிடைக்கிறது:

1. கடலங்குடி நடேச சாஸ்திரியார் பதிப்பு. 7 வால்யூம். கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 17.
2. சோமசுந்தர தீக்ஷிதர் ப்ரதி பத உரையுடன்.  7 வால்யூம். ஸ்ரீ ராம நாம வங்கி- ஸ்ரீ பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், சென்னை-33

இவை இரண்டும் மிக அருமையான வெளியீடுகள். நடேச சாஸ்திரியாரின் பதிப்பில் நாராயணீயமும் முழுதும் இருக்கிறது ! ஆஸ்திகர்களுக்கு உகந்த பதிப்பு.

3. கீதா ப்ரஸ், கோரக்பூர் வெளியீடு. 3 வால்யூம்.  தமிழ் எழுத்தில் சரியான உச்சரிப்புக் குறிப்புக்களுடன்  மூலம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், உரை சுமார்தான். ( சில இடங்களில் திராவிடக் கட்சிகளின் பாஷைபோல் இருக்கிறது ! ஆன்மீகப் புத்தகத்தில் ஆன்மீக பாஷை இல்லையென்றால் பின் என்ன சொல்வது ? தொடர்கதையா எழுதுகிறார்கள் ? )

ஆனந்தமய க்ருஷ்ணர் !

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் ஆனந்த வர்தனர்- ஆனந்தத்தைப்  பெருகச் செய்பவர்!  ஆனந்தம் என்பது சுக-துக்கம் என்கிற இரட்டைகளை மீறிய நிலை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல்லே கிடையாது ! இதைத் தமது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். மிக எளிய நிலையில் வாழ்ந்து, செல்வத்தால் அடையமுடியாத சாந்தியையும் ஆனந்தத்தையும் தன் அன்பர்களிடையே பரப்பினார்! எப்பொழுதும் பகவானைப் பற்றிய பேச்சுதான், ஆடல் பாடல் தான்! ப்ருந்தாவனத்தில் கண்ணன்  இருந்த அந்த  நாட்களே திரும்பிவந்தது போல் அவர் வாழ்க்கை இருந்தது- அதுவும் கடைசி 14 ஆண்டுகளில் !

பாகவதத்தின் முக்கிய அம்சம் அதில் வரும் பக்தர்களின் வரலாறுகள் தான் ! பக்தர் இல்லையேல் பாவம், பகவான் என்ன செய்வார் ? அவர் பக்த பராதீனன்- பக்தர் வசப்பட்டவர். ஏழை பக்தர்களையே சொத்தாக உடையவர் பகவான்  ( அகிஞ்சன வித்தாய ) என்றார் குன்தி தேவி. இதே போல் ராமக்ருஷ்ணரின் வாழ்விலும் நிகழ்ந்தது. பல சாதாரண பக்தர்கள் தவிர, அவருக்கு வந்த குருமார்களே அவர் பக்தர்களானார்கள் ! அவரைப் பார்த்த டாக்டரே பக்தரானார் !

மஹேந்த்ர நாத குப்தர்



இதையெல்லாம் நமக்கு படம் பிடித்துக் காட்டியவர்   "M"  என்ற எழுத்திற்குள் புகுந்துகொண்டு தம்மை விளம்பரப் படுத்திக்கொள்ளாத தொண்டர்-அன்பர் மஹேந்த்ர நாத குப்தர் . 

இவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணருடன் பழகிய நாட்கள் குருதேவரின்  வாழ்க்கையில்  இறுதி நாலரை வருஷங்களாக அமைந்தது நமது கர்மவினை போலும்!  அதிலும் அவர் பள்ளி ஆசிரியராக இருந்ததால், விடுமுறை நாட்களில் மட்டுமே  ஸ்ரீ ராமக்ருஷ்ணரைத் தரிசிக்க முடிந்தது. ஆனால்  அவர் தரிசித்த ஒவ்வொரு நாளும் வங்காளி மொழியில் குறிப்பெழுதி வைத்தார். இதில்,  என்ன தேதி, கிழமை, நேரம், எங்கு பார்த்தார், என்ன நிகழ்ச்சி நடந்தது, யார் யார் இருந்தார்கள்-வந்தார்கள்- போனார்கள்,  யார் எங்கு அமர்ந்திருந்தார்கள்,  என்ன பேசினார்கள், ஸ்ரீ ராமக்ருஷ்ணர் என்ன சொன்னார் என்ற எல்லா விவரமும் வருகிறது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  சொன்ன சொற்களை  மாற்றாமல் அப்படியே எழுதினார் ! இதை விரிவாக்கி, " ஸ்ரீ ராமக்ருஷ்ண கதாம்ருதம் " என்ற பெயரில் 5 பாகமாக பல ஆண்டுகள் இடைவெளியில் வெளியிட்டார். ஐந்தாவது பாகத்தின் ப்ரூஃப் வந்து, அதைத்திருத்தி முடித்த அதே இரவில்  குருதேவர் அடி சேர்ந்தார் ! இதைப்படித்த அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், "குருதேவரே  நேரில் பேசுவதுபோல் இருக்கிறது " என்றார் எனில், வேறு என்ன  சர்டிஃபிகேட்  தேவை? The words have come out from the depth of Truth.








இதை ஆங்கிலத்தில்  The Gospel of Sri Ramakrishna  என்ற பெயரில் 1942ம் வருஷம் வெளியிட்டனர். இந்த ஆங்கில பொழிபெயர்ப்பும்  மிகச்சிறந்ததாக அமைந்து விட்டது. தமிழில் வந்த எந்த மொழிபெயர்ப்பும் இவ்வளவு  சீராக இல்லை.










கதாம்ருதம்





 M நன்கு கற்றறிந்தவர். " கதாம்ருதம் " என்ற சொல் ஸ்ரீ பாகவத்தில் வருகிறது. கோபிகைகள் பகவானின் லீலைகளை விளக்க இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதன் மகிமை என்ன என்பதையும் சொல்கின்றனர்.


तव कथामृतं तप्तजीवनं
     कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
     भुवि गृणन्ति ते भूरिदा जनाः ॥ ९॥



தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
கவிபிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருணன்தி தே பூரிதா ஜனா:                         10.31.9

ஹே க்ருஷ்ணா ! தங்களுடைய  கதையாகிற அமிர்தம்  தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பது.  (வ்யாஸர், ஶுகர் போன்ற ) ஞானிகளால் கொண்டாடப்பட்டது. காம கர்மங்களைப் போக்கக்கூடியது. கேட்ட மாத்திரத்தில் மங்களங்களைக் கொடுக்கக்கூடியது. ஸகல ஐஶ்வர்யத்தையும் அளிக்கக்கூடியது. இக்கதையாகிற அமிர்தத்தை யார் சொல்கிறார்களோ அல்லது அனுபவிக்கிறார்களோ அவர்களே மஹாபாக்யசாலிகள். (புண்யம் செய்தவர்கள்.)

குறிப்பு:
இந்த ஶ்லோகத்தில் "க்ருஷ்ண" என்ற பதத்தைச் சேர்த்துச் சொல்லவேண்டும் என்று ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ரர் சொல்லியிருக்கிறார். அதன்படி:

தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்த ஜீவனம்
கவிபிரீடிதம் க்ருஷ்ண கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் க்ருஷ்ண  ஸ்ரீமதாததம்
புவி க்ருணன்தி  தே க்ருஷ்ண பூரிதா ஜனா :

கதாம்ருதம்= கதையாகிய அமுதம் என்ற பதம்  The Gospel of Sri Ramakrishna வுக்கும் மிகவும் பொருந்தும். இதை "ஸ்ரீ ராமக்ருஷ்ண பாகவதம் " என்றே சொல்லலாம் ! இதைப் பாராயணம் செய்வதும் மிகவும் பயன் தரும். ராமரும், க்ருஷ்ணரும், அன்னை காளியும், பல ஞானி-பக்தர்களும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் உரையில் நம்முடன் உறவாடுவார்கள்.பல புராண-இதிஹாசக் காட்சிகள் நம் கண்முன் நிற்கும்; பல சாஸ்திர உண்மைகளின் சூக்ஷ்மம் விளங்கும். நம் மனம் உயர்வடையும். தீவினைகள் அகலும். பக்தி பெருகும்.  இதன் நல்விளைவுகளை அனுபவத்தில் உணரலாம். இதைப்படித்தபின் ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துக்கொண்டால் பல விஷயங்கள் தெளிவாகும். 

அன்பர்கள் இதைப்படித்துப் பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 


Note:
Sri Ramakrishna did not create any new sect or order. The Sri Ramakrishna Math was founded later by others. Sri Ramakrishna can or need by no means be confined to or exclusively identified with the RK Math circles. There is no scent or sign of any sectarianism in the words of Sri Ramakrishna.Like Vyasa, Suka and Narada, he is above all sects and divisions and belongs to all Hindus. The Gospel of Sri Ramakrishna is the only authentic source on his teachings. We need no other book.

Most of us educated in modern subjects through English lack exposure to authentic sources of our religious knowledge. What we learn comes through the filter of various sects/divisions, with modern prejudices and interpretations. In the circumstances, 'The Gospel of Sri Ramakrishna' will prove to be an excellent resource to understand our religion, and to realise what is practicable for sadhana in the modern conditions.