Thursday, 3 December 2015

24. பரிபாடல்- 14. வேண்டும் முருகன் அருள்!





24. பரிபாடல் -14



வேண்டும் முருகன் அருள்!

பரிபாடலில் முருகனைப் பற்றி எட்டு பாடல்கள் உள்ளன. இப்போது நாம் பார்ப்பது எட்டாவது பாடல். நல்லச்சுதனார் பாடியது.இவர் இசையிலும் தேர்ந்தவர் போலும்!  நான்கு பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

இறைவனைப் பலவிதத்தில் எண்ணிப் பார்க்கிறோம், பலவாறு வணங்குகிறோம், கொண்டாடுகிறோம். ஞானிகள் அவனை தங்களுக்குள்ளேயே உணர்கிறார்கள்;உலகத்தையே, இயற்கையையே கடவுளாகப் போற்றுகிறார்கள்.தத்துவ வாதிகள் பற்பல கொள்கைகளை விளக்குகிறார்கள். சமய வாதிகள் பல உருவங்களைக் கற்பிக்கிறார்கள். எளிய மக்கள் ஏதோ மரத்திலோ, மலையிலோ, ஆற்றிலோ ஊற்றிலோ இறைவனை வரித்து வழிபடுகிறார்கள். இதுதான் என்று சொல்லமுடியாத அந்தப் பெரிய வஸ்து, பக்தி வலையில் வந்து விழுகிறது! கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் ஒருங்கே களிப்பருளுகிறது!

அடியவர்கள் தாங்கள் விரும்பி வழிபடும் தெய்வத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு  பொருளையும் தெய்வீக மாகக் கருதி அவற்றையும் வழிபடுகிறார்கள்! திருமாலின் ஐந்து ஆயுதங்கள், சிவனின் சூலம், சக்தியின் வாஹனம், ராமரின் பாதுகை,கோதண்டம் என ஒவ்வொன்றும் வழிபாட்டுக்குரிய தாகிறது. அருணகிரிநாதருக்கு அருளிய குமரன், அவர் எதையெதைப் பாடவேண்டும் எனவும்  சொன்னான்! 

பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பக்ஷியெனும் உக்ர துரகமு நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரும் குக்குடமும் ரக்ஷைதரு
சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள் கை  மறவேனே



ஆடும் பரி, வேல், அணிசேவல்,  திருவடி, பன்னிரு தோள்,வயலூர் என இப்படிப் பாடினார் அருணகிரியப்பன். இப்படி முருகனோடு தொடர்புடையவற்றைப் பாடுவதை நாம் பரிபாடலிலும் பார்க்கிறோம்.

முருகனின் பெருமை, துதி



ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி
பொரு சமம் கடந்த புகழ் சால்வேழம்
தொட்டதை தைப்பு அமை சருமத்தின்தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய
வெரிநத் தோலொடு  முழு மயிர் மிடைந்த 5
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்
கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த 10
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலைஅளி நீர்ச் சூழி
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்   15
குன்றத்து அடி உறை இயைக எனப் பரவுதும்
வென்றிக் கொடி அணி செல்வ நிற் தொழுது


முருகா! நீ வாஹனமாகக் கொண்டு ஊர்வது,  நெருப்பைப் போன்ற முகபடாம் விளங்கும் தலையையுடய (பிணிமுகமெனும் ) யானை. இது பல போர்களில் வெற்றியைக் கண்டது!

உன் தாமரை போன்ற திருவடிகளில் அணிந்திருக்கும் செருப்பு, நன்றாகப் பதப்படுத்தப்பட்ட தோலினால் ஆனது; சிகப்பு வர்ணம் பூசியது; பாம்பின் உரித்த சட்டை போன்று மென்மையானது; மயில் பீலிகளால் அலங்கரிக்கப் பட்டது.


உன் திருக்கரத்தில் தவழும் வேலானது, மாமரமாகி நின்ற சூரபத்மனை அழித்தது; க்ரௌஞ்ச கிரியைத் துளைத்தது!





வெண் கடம்ப மலர் --------->
inithal.blogspot.in


நீ அணித்துள்ள மாலை, வள்ளிப்பூவை இடையே வைத்துக் கட்டிய  உருளுகின்ற கடப்ப மலர் கொத்துக்களால்  ஆனது!







நீவிரும்பி அமர்ந்த பரங்கிரி, மேலோர்களால் புகழப்படுவது. ஏழுஏழாக வரிசையாய் அமைந்த நீண்ட இலைகளையுடைய பாலை மரங்கள் இதன் இடையை அழகுசெய்கின்றன! 







இங்கு விழும் அருவிகள் யானையின் முகத்தில் பூட்டிய அணிபோல் விளங்குகின்றன!



வெற்றிக் கொடியை உடைய எம் இறைவனே! விண்முட்டும் இந்த குளிர்ந்த குன்றின் அடியிலேயே என்றும் நாம் வாழவேண்டுமென அருளுமாறு உன்னைத் தொழுது  வேண்டுகிறோம்! அருள்புரிவாயாக!


குறிப்பு: 'அடி உறை இயைக' என்பதற்கு  "இக்குன்றத்தின் அடியின்கண் உறைதல் மறுபிறப்பிலும் இயைக வென " என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

குன்றின் வனப்பு



மிசை படு சாந்தாற்றி போலஎழிலி 30
இசை படு பக்கம்  இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க    35
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று






மேகம் முழங்கும் இடங்களில் தம் இரண்டு சிறகையும்  விசிரி போல விரித்து மயில்கள் ஆடின.

துளைகளையுடைய குழலோசை போல தும்பிகள் மலர்களில் ஊதின. வண்டினங்கள் எழுப்பும்ஒலி யாழின் இசை போன்று இருந்தது. அருவியின் நீர் முழவின் தாளம் போன்று ஒலித்தது. திருப்பரங்குன்றில் இவ்விதம் எல்லா ஒலிகளும் பரந்து எழுந்தன.


முருகனிடம் வேண்டுகோள்


மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை
ஆறு இரு தோளவை அறு முகம் விரித்தவை
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடி உறை
இன்று போல் இயைக எனப் பரவுதும்
ஒன்றார்த் தேய்த்த செல்வ நிற் தொழுதே   70








பகைவரை அழித்த செல்வனே!  நீ மாற்றாரைப் போரில் அழித்த வேலாயுதத்தை உடையவன் ! பன்னிரு தோள்களை உடையவன்! ஆறு திருமுகத்துடன் திகழ்கிறாய் !



நாங்கள் எங்கள் சுற்றத்தாரொடு  கூடி இன்றுபோல் என்றும்  உன் அடிக்கீழ் வசித்தல் அமையவேண்டும் என வேண்டித் தொழுகின்றோம் ! அருள் புரிவாயாக!









இவ்வாறு, பரிபாடலில் முருகனுக்குரிய பாடல்கள் நிறைவுபெறுகின்றன.இவற்றில் முருகனைப் பற்றிய எல்லாப் புராணச் செய்திகளும் வருவதைப்  பார்க்கிறோம்.  மக்கள் தத்தம் இயல்புக்கேற்ற வகையில் ஆடிப்பாடியும் உற்றார் உறவினருடன் கூடிக் களித்தும் முருகனைக் கொண்டாடினர்! சிவபெருமான், அம்பாள், ராமன் என்று வரும்போது, நம்மையறியாமல் வழிபாட்டில் பக்தியுடன் ஒருவித பயம் கலந்து விடுகிறது !. வடதேசத்தில் கண்ணன், நம்  நாட்டில் குமரன் என்றால், குதூகலம்தான்!  அதனால் தான் போலும், முருகனைப் பாடும் எல்லா புலவர்களும் என்றென்றும் அவனடிக்கீழ் இருப்பதையே வேண்டுகின்றனர்!


வேண்டும் அடியர் புலவர் வேண்ட
அரிய பொருளை வேண்டும் அளவில்
உதவும் பெருமாளே -  எனவும்,
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன 
அவை தருவித்தருள் பெருமாளே 
என்றும் பாடினார் அருணகிரிநாதர்.
 அவ்வண்ணமே முருகன் அனைவருக்கும் அருள்புரிவானாக!

No comments:

Post a Comment