25. அறியாமையும் அயோக்யத்தனமும்
"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் " என்று நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. நம் பேச்சுக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை இதைவிடச் சரியாகச் சொல்ல முடியாது!
பசு புனிதமானது என்று பேசுகிறோம்; அதைத் தெருவில் அலைந்து குப்பையை மேய விடுகிறோம், எருமைப் பாலைக் குடிக்கிறோம்!
நமது நகரங்களில் கோமாதாவின் நிலை!
photo: helpanimalsindia.org
கங்கையும் காவிரியும் புனிதம் என்கிறோம்; அவற்றை அசிங்கப்படுத்தியும் வருகிறோம்! மதச்சார்பிலாத சர்க்கார் என்கிறோம்; ஆனால் ஹிந்துக் கோயில்களை அவர்கள் நிர்வாகத்திற்கும் சுரண்டலுக்கும் விட்டுவிட்டோம்! சர்சுக்கோ, மசூதிக்கோ போக கட்டணம் வசூலிப்பதில்லை; ஆனால் ஹிந்து கோவில்களில் சர்க்காரே கட்டணம் பிடுங்குவார்கள்! இவ்வளவு ஏன்! ஒரு பெரியவர் நன்றாகச் சொன்னார்: நம் நகரங்களில் எல்லோரும் நடைபாதைக் கடைகளிலேயே, ரோடு ஓரத்தில் நின்றவாறே சாப்பிடுவதுதான் நவ நாகரீகம்- ஆனால் செறுப்பு விற்க ஏ,ஸி ஷோரூம்!
இதுவும் கங்கைதான்! கான்பூரில் கங்கையில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகள்!
photo: archive.tehelka.com
மாசுபடிந்த கங்கையின் மற்றொரு காட்சி:
கங்கையைக் களங்கப்படுத்துவது ரிஷிகேசத்திலேயே தொடங்குகிறது. இதில் முக்கிய கைங்கர்யம் செய்வது, மத்திய அரசினருக்குட்பட்ட இரண்டு தொழிற்சாலைகள்! இது கங்கையோடு கூடவே தொடர்கிறது. இதில் பங்குவகிப்பது, முக்காலும் ஹிந்துக்களே!
இது, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் யமுனை!
photo: post.jagran.com, April, 2012
இது "கங்கையிற் புனிதமாய காவிரி "!
இடம்: திருச்சி அம்மா மண்டபம் அருகே!
தி ஹிண்டு, 6-7-2014
இதுவும் காவிரிதான்- ஈரோடுக்கு அருகே ! டெக்கான் க்ரோனிகில். 27-11-15
இதையெல்லாம் நேரிலோ, படத்திலோ பார்த்த பிறகு,
"கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு"
என்று சங்கல்பம் செய்ய யாருக்காவது மனது வருமா? நல்லவேளை! ஸரஸ்வதி பூமிக்குள்ளே போய் தப்பித்து விட்டது! சங்கல்பம் செய்பவர்களில் பலருக்கும் இதன் அர்த்தம் தெரியாது! அதுவும் நல்லதே!
எங்கள் நதி தெய்வீகமானது என்று 'டாம்டாம்' அடித்துக்கொள்ளாத வெள்ளைக் காரர்களின் நிலை என்ன?
கீழே லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி!
இது பாரிஸில் ஓடும் ஸென் (Siene) நதி!
நமது மடாதிபதிகளும், உபன்யாசகாரர்களும் இன்னமும் கங்கையும் காவிரியும் தெய்வீகம் என்று கதை விட்டு காலக்ஷேபம் செய்கிறார்கள்! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நதியின், ஏரியின், குளத்தின் கதையும் இதுதான்! கங்கையின் புனிதத்தை எதுவும் கெடுக்காது -கெடுக்க முடியாது என்பது ஒரு தீவிரமான வாதம்!
இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் எழுந்த பாகவத புராணம் கலியில் நடப்பதைச் சரியாகச் சொல்லிவிட்டது:
அத்யுக்ர பூரி கர்மாணோ நாஸ்திகா ரௌரவா ஜனா:
தே அபி திஷ்டன்தி தீர்த்தேஷு தீர்த்த ஸாரஸ்ததோ கத:
மாஹாத்மியம், 1.1.72
நதி தீரங்களிலும், தேவாலயங்களீலும் பலவித தீய செயல்கள் புரிபவர்களும், தெய்வமில்லை என்று பேசித்திரியும் நாஸ்திகர்களும், மற நெறி ஒழுக்கத்தால் நரகம் புக இருப்பவர்களும் வசிப்பதால் தீர்த்தத்தின் ஸாரம் அழிந்து, அதன் மஹிமை அழிந்தது. (இது நாரதர் கூற்று.)
சாமி, பூதம், மதம் என்ற ஏதோ ஒன்றின் அடிப்படையில் நம் ஜனங்கள் குளம் குட்டைகளயும் ஆறு, நதி, கோயில்களையும் நன்றாகவே போற்றிப் பராமரித்து வந்தார்கள். விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும், சீர்திருத்தக் காரர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து நம்பிக்கையைக் குலைத்தார்கள். இன்று அறிவியல் என்ற பெயரிலோ, சட்டம் என்ற பெயரிலோ, எதுவும் செய்ய இயலவில்லை!
கோவில் என்று போனால், இன்னும் பரிதாபம்! இன்று கோவில்களைப் பற்றி நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் வந்தவண்ண மிருக்கின்றன. சில கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா வழக்கம் ஒரு காரணம். அதைவிட முக்கியமானது, ஜோசியம், ராசிபலன், பரிகாரம் என்று பத்திரிகைகளில் வரும் விஷயங்களே! அதே சமயம் பல கோவில்களில் விளக்கு போடுவதற்கும் வருமானமில்லை! கோவில்களுக்கென்று விற்கப்படும் எல்லா பொருள்களும் கலப்படமே! பன்னீர், சந்தனம், குங்குமம், தேன், எண்ணெய், நெய் என்று எதை எடுத்தாலும் கலப்படம்! கல்பூரத்தில் இருக்கும் கலப்படத்தினால் பல கோயில்களில் கல்பூரமே ஏறுவதில்லை!அர்ச்சனைத் தட்டு என்று விற்கிறார்கள். பார்த்தால், வாடிய, வாசனையில்லாத பூ, பழுக்காத அல்லது மிகவும் பழுத்து தோல் கருத்த பழம் என்றுதான் இருக்கும்!கோயில் வ்யாபார ஸ்தலமாகிவிட்டது! சில கோயில்களில் சில நிகழ்ச்சிகளுக்கு கான்ட்ராக்ட் முறை வந்துவிட்டது! நம்மைப்போன்ற அனாமதேயங்கள் தர்ம வரிசையில் நின்றால், பெரிய கோயில்களீல் அரை நிமிஷம் கூட சுவாமி தரிசனம் செய்ய விடுவதில்லை.
எந்த புத்தகத்திலும் இருக்கும் நிலையை உள்ளபடி எழுதுவதில்லை. பழனி மலையில் ஸ்வாமி விக்ரஹம் நவபாஷாணத்தினால் ஆனது, அபூர்வ மருத்துவ குணம் கொண்டது. அதனால் சித்த மருத்துவர்கள், தர்மகர்த்தாக்கள், சில அர்ச்சகர்கள் ஆகியோர் சேர்ந்து சுவாமி விக்ரஹத்திலிருந்து சுரண்டி எடுக்கிறார்கள் என்று 1962-3 வாக்கிலேயே வதந்திகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது இது நிதரிசனமாகிவிட்டது. விக்ரஹம் தேய்ந்துபோய், மூலவருக்கு அபிஷேகம் செய்வதே நின்றுபோய் விட்டது! பழனியில் எது முக்கியமானதாக இருந்ததோ, அதுவே இன்று இல்லை என்றாகிவிட்டது! எல்லாம் அரசினர் நிர்வாகத்தில் இருக்கும் இடத்தில்!கலிகாலம் தன் கைவரிசையைக் காட்டிவிட்டதோ?
நமது கோயில்களின் செல்வத்தைக் கண்டு அவற்றைக் கொள்ளையடித்தனர் துலுக்கர்கள்; அவற்றின் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டான் வெள்ளைக்காரன். நமது சுதந்திர சர்க்காரும் இதையே தொடர்ந்து வருகிறது! நமது கோயில்களில் இருக்கும் பொன், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பொருள்களின் விவரத்தை ரிசர்வ் பேங்கு சென்ற ஆண்டு கேட்டது! ரிசர்வ் பேங்கிற்கும் ஹிந்து கோவில்களுக்கும் என்ன சம்பந்தம்? இது நிதித்துறையின் நாய் போன்று செயல்பட்டது என்பது வெளிப்படை! (அப்போது சிதம்பரம் நிதி மந்திரி) சர்ச்சுகளிடமும் மசூதிகளிடமும் இப்படிக் கேட்கும் துணிவு இவர்களுக்கு உண்டா?
ஒரு பக்கம் பொது மக்களின் அறியாமை. ஓரு பக்கம் மத நம்பிக்கையை வைத்து வியாபாரம் செய்யும் கும்பல்கள்! ஒருபக்கம் அரசினர் செய்யும் அயோக்யத்தனம்! இதையெல்லாம் கேட்க ஹிந்துக்களுக்கு நாதியில்லை!
No comments:
Post a Comment