Monday, 20 February 2017

79. மஹாபெரியவருக்கு மரியாதை-1


79.மஹாபெரியவருக்கு  மரியாதை-1



சென்ற நூற்றாண்டில் தமிழகத்தின் ஆன்மீக- சமய உலகில் சூரியன் போல ஜொலித்தவர் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக 87 வருஷங்கள் இருந்த ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். பரமாசார்யா, ஸ்ரீ  பெரியவா- மஹாபெரியவா  என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர். நவீன யுகத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல், நவீன வசதிகள் எதையும் நாடாமல்,ஏற்றுக்கொள்ளாமல்,  கார், ரயில் என்று ஏறாமல் உடம்பு முடிந்த வரை நடந்தே நாடுமுழுதும் சென்றவர். உண்மையான சந்நியாசியாக இருந்தவர். சந்நியாசிகளுக்கெல்லாம் சந்நியாசியாக வாழ்ந்து காட்டியவர். 

மறைமுக எதிர்ப்பு

பெரியவர் பொதுவாக ஆஸ்தீகர்களால் மிகவும் மதித்துப் போற்றப்பட்டவர். ஆனாலும் இவர் சங்கர பரம்பரையிலான மடத்துடன் தொடர்புடையவராக இருந்ததாலும், முற்றிலும் வைதீக மரபைப் போற்றியதாலும் , சீர்திருத்தம் என்று கிளம்பாததாலும் இவரை  எல்லோரும் முழுமனதுடன் ஏற்கவில்லை. தனிப்பட்ட முறையில் எந்த மதத்தின் எந்தப்பிரிவைச் சேர்ந்தவர்களும் இவர் பெருமையை உணர்ந்தே இருந்தனர். ஆனால் இதை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர்கள் வெகு சிலரே. ஹிந்துத்வம் பேசுபவர்கள் கூட இவரை முழுமையாகப் பாராட்டுவதில்லை.மற்ற சங்கர மடங்களின் சிஷ்யகோடிகளும் இவரை  முழுமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் நிலவிய ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இவருக்கு மறைமுக எதிர்ப்பே அதிகமாக இருந்தது  எனலாம். மூன்று திராவிடக் கட்சிகள், பிற அரசியல் கட்சிகள், வைஷ்ணவர்கள், தமிழ் சைவ மடங்கள், பிற தமிழ் இயக்கங்கள், கிறிஸ்தவ சர்ச்சுகள், முஸ்லிம் இயக்கங்கள் என்று இப்படிப் பார்த்தால், இவர்கள் எல்லோருமே  இவரை  வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

பிராமணர்கள் செய்த துரோகம்

இதன் நடுவில் பிராமண சமுதாயமும் அவர்கள் சார்ந்த பத்திரிகைகளும் இவரைப்பற்றி ஒஹோவென செய்திகளை வெளியிட்டு, பலரிடையேயும் ஈகோ பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டன. இவர் ஒரு பிராம்மண சாமியார், இந்த மடம் பிராமணர்களின் நன்மைக்காக நடத்தப்படுகிறது
என்ற கருத்து இதனால் மக்களிடையே வேறூன்றியது. 

மஹாபெரியவர் மூன்று முக்கிய விஷயங்களுக்காகப் பாராட்டப்படுகிறார்.

1.இவர் கடைப்பிடித்த தூய்மை, எளிமை, தர்மத்திலிருந்து வழுவாமை
2.இவர் நமது அனாதி தர்மத்திற்கும், பிற விஷயங்களிலும்  அளித்த விளக்கங்கள். இவற்றின் விரிவும் ஆழமும் அவ்வத்துறையைச் சேர்ந்த நிபுணர்களையே மலைக்க வைக்கின்றன.
3.இவர் மக்களின் துன்பங்களைத் துடைத்த சம்பவங்கள். இவர் பூத உடல் மறைந்த பிறகு, இவற்றையே மக்கள்  பெரிதாகக் கொண்டாட முற்பட்டனர். இவற்றை அற்புத அமானுஷ்ய சக்தியின் வெளிப்பாடு என்றே போற்றுகின்றனர். இதன் விளைவு இவர் ஒரு அவதாரமாகவே கருதப்படுகிறார். நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் காமதேனு, கற்பகத்தரு போன்றே இவரைப் பார்க்கிறார்கள். இவர் படம் இல்லாத பிராமணவீடே (ஸ்மார்த்தர் ) இல்லையெனச் சொல்லலாம்!

இதிலெல்லாம் பெரிய வேடிக்கை ( அல்லது வருத்தம் ) என்னவென்றால், மஹாபெரியவர் சொன்னதை யாரும் கேட்பதில்லை! அதன்படி யாரும் நடப்பதில்லை! எந்த பிராமணக் குடும்பமும் அதை முக்கிய விஷயத்தில்கூட அப்படியே பின்பற்றுவதில்லை! அப்படி இவர் என்னதான் சொன்னார் ?


  • சினிமா, டிராமா கெடுதல். அதற்கு போகக்கூடாது. ( கஷ்ட காலம்; டிவிமூலம் அவையே வீட்டுக்குள் வந்துவிடுகின்றன!)
  • காஃபி பழக்கம் கூடாது.
  • பட்டு உடுத்தக்கூடாது.
  • உபநயனம், கல்யாணத்தில் படாடோபம் கூடாது, அனாவசிய செலவுகள் கூடாது. இவற்றில் அவைதிக அம்சங்கள் கூடாது அல்லது குறைக்கவேண்டும்.
  • வரதக்ஷிணை ஒழியவேண்டும்
  • தேவைகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அனாவசிய செலவு கூடாது.
  • பெண்கள் ஓரளவுக்குமேல் கல்விகற்பது தேவையில்லாதது
  • பெண்கள் கட்டாயம் வேலைக்குப் போகக்கூடாது.
  • வெளிநாடு போவது கூடாது.
  • ஒவ்வொரு பிராமணச் சிறுவனும்  சில காலமாவது வேத அத்யயனம் செய்யவேண்டும். இதற்கு அனுகூலமாக, பள்ளிக்குப் போவதை விட்டு வீட்டிலேயே கற்கலாம். இவர்களுக்கு   ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், எஞ்சினீயர்கள்,அலுவலர்கள் போன்றோர் கல்வி புகட்டலாம்.
[இவையெல்லாம் சில முக்கிய அம்சங்கள், குறிப்பாகச் சொன்னவை. இது தவிர வைதீக ஸம்ப்ரதாயத்தைப் பற்றியும், பொது தர்மங்களைப் பற்றியும் பல அறிவுரைகள் கூறியிருக்கிறார்.]

பெரியவாளே பிரத்யக்ஷ தெய்வம் என்று கொண்டாடும் பிராமணர்கள் எத்தனைபேர் இதையெல்லாம் பின்பற்றுகிறார்கள் ? போடுவது சுத்த வேஷம்- ஆஷாடபூதித்தனம்  சுத்த ஹிபோக்ரிஸி. இதை மறைக்க ஜய ஜய சங்கர கோஷம் வேறு! மானம் கெட்ட பிழைப்பாக இல்லை?

இவர்கள் பெரியவர் சொன்னது எதையும் செய்வதில்லை, ஆனால் பெரியவர் பிராமணர்களின் சாமியார், பிராமணர்களுக்கான சாமியார் என்ற தோற்றத்தை மக்களிடையே உருவாக்கிவிட்டனர். இவர்கள் செய்வது எவ்வளவு பெரிய துரோகமாகிவிட்டது பாருங்கள்.

பிராமணர்களுக்கு சாட்டையடி




 பெரியவர் பேச்சையெல்லாம் பெரிய பெரிய புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். ( இவையெல்லாம் அவர் செய்த பெரிய , தொடர் பிரசங்கங்கள் இல்லை. அவர் பல சந்தர்ப்பங்களில் பேசியது, கொடுத்த ஆசியுரை ஆகியவற்றின்  தொகுப்பேயாகும்.) இதைப் படித்தால் அவர் பிராமணர்களை எவ்வளவு தூரம் கடிந்துகொண்டிருக்கிறார் [அல்லது நொந்துகொண்டிருக்கிறார் ] என்பது தெரியவரும். 

இதில் ஈ.வே.ராவுக்கும் மேலே போய்விட்டார்! பிராமணர்கள் சாமி, மதம் என்ற பெயரில் ஊரை ஏமாற்றினார்கள் என்றார் ஈ.வே.ரா. மஹாபெரியவரோ, பிராமணர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்  என்கிறார்.  நிலையான வருமானம், வசதியான வாழ்க்கை ஆகியவற்றிற்காக தங்களுடைய சொந்த தர்மத்தை விட்டுவிட்டு, சொந்த ஊரையெல்லாம் விட்டுவிட்டு, பட்டணப்பக்கம் வந்து, தாங்களும் கெட்டு சமூகத்தையும் கெட வழிசெய்தார்கள்  என்று வெளிப்படையாகவே விரிவாகவே தெளிவாகவே சொல்லியிருக்கிறார்! பிராமணர்கள் பிராமணர்களாக இருந்தனர் என்று ஈ.வே.ரா திட்டினார். பிராமணர்கள் சரியான பிராமணர்களாக இல்லை என்று பெரியவா சொன்னார்! பிராமண மத்தளம் இருபக்கமும் அடிவாங்கியது ! 
பெரியவரே பிராமணர்களின் மிகப்பெரிய கிரிடிக்!

பெரியவர் பேச்சும் சரித்திர நிலையும்

இந்த இடத்தில் ஒரு இடர்ப்பாடு இருக்கிறது.இதை மிகுந்த சங்கடத்துடன் சொல்கிறேன். பெரியவர் தெய்வம், அவர் சொன்னதெல்லாம் தெய்வவாக்கு என்று  எடுத்துக்கொண்டால்,  நாம் இதற்குமேல், இதற்கு எதிராக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் சரித்திரத்தையும், சமூக இயலையும் படித்தால் நிலைமை நேர்மாறாக இருக்கிறது என்று தோன்றுகிறது. 

வைதீக தர்மம் அரசனின் செங்கோல் பற்றி இருப்பது. இதை வள்ளுவரும் குறளில் சொல்லியிருக்கிறார் :

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.   543
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.    560

க்ஷத்ரிய  பலம் இல்லாமல்  வைதீக தர்மத்திற்கு ஆதரவு இல்லை. சென்ற ஆயிரம்  வருஷங்களாக இந்தியாவில் அன்னியர் ஆட்சியே வலுத்துவந்திருக்கிறது. இறுதியில் ஆங்கிலேயர் வந்தனர். நம் சுதேசி  மன்னர்கள் மறைந்தனர், அல்லது அவர்கள் வலுவிழந்தனர். நமது பொருளாதார முறை மாறியது. பிறரை அண்டியே வாழ்ந்த பிராமணர்களுக்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் ஆதரவு இல்லாமல்  போனது. அவர்கள் பயின்ற வேதக்கல்வி சோறுபோடவில்லை! அதற்கான மதிப்பும் குறைந்தது! அதைக்  கற்கும் வசதிகளும் அருகிப்போனது! அவர்களுக்கு வேறு தொழில் இல்லை, தெரியாது! முக்காலும் பிராமணர்கள்  வசதி இல்லாமல் இருந்தவர்கள் அல்லது வறுமையில்  வாடியவர்களே ! சோற்றுக்காக ஆங்கிலக்கல்வி  பயிலவேண்டியதாயிற்று. இதையெல்லாம் பார்த்தால் பிராமணர்களைக் குறை சொல்வதா அல்லது அவர்களுக்கு அனுதாபப் படுவதா? மஹாபெரியவர் குறையே சொல்லியிருக்கிறார் ! Brahmins have been the victims of the forces of historical change, not its cause. உலகில் எல்லா நாடுகளிலும் பழைய சமய-சமூக அமைப்புகள் தகர்ந்துவிட்டன. இன்று முஸ்லிம் நாடுகளில் இதுவே பல வன்முறை இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில், சுதந்திரப் போராட்டத்துடன் சமூக சீர்திருத்தமும் மாற்றங்களும் சேர்ந்துகொண்டன. நிலச்சீர்திருத்தம், மரபுவழி வந்த நிலைகளின் மறுப்பு , நாத்திக வாதம், நேரிடையான  பிராமண எதிர்ப்பு போன்றவற்றால் பிராமணர்களுக்கு சமூகத்தில் இருந்த மதிப்பும் பாதிக்கப்பட்டு, தமிழ் நாட்டில் எதிர்ப்பாகவே வலுத்தது. இது அனைத்தும் பெரியவர் காலத்திலேயே, அவர் கண்ணெதிரவே நடந்தன! பிராமணர்களுக்கு எந்த அரசும் எந்த ஆதரவோ, பாதுகாப்போ தரவில்லை!

வைதீக மரபைக்காக்க க்ஷத்ரிய பலம் இன்று இல்லை. இந்தச் சூழ்நிலையில் பிராமணர்கள் [மட்டும் ] பழைய மரபிலிருந்து விலகாமல் இருக்கவேண்டும் என்பது சாத்தியமா?  அதற்கு ஆதாரமாக இருந்த கூட்டுக் குடும்பம், கல்விமுறை, அரசியல் நெறி , சமூக இயல் ஆகிய அனைத்தும் மாறிவிட்டன! இன்றைய அரசு ஹிந்து மதத்தை-வைதீக தர்மத்தை ஆதரிக்கும் அரசல்ல. வெளிப்படையாகவே மிலேச்சக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அரசு. இந்தச் சூழ்நிலையில் பெரியவர் சொல்லியதை எல்லாம் அப்படியே நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது சந்தேகத்திற் கிடமானது. எனவே,  பிராமணர்கள் பெரியவர் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுவிட்டு  தாங்கள் செய்வதையே செய்துகொண்டிருக்கிறார்கள்! [மஹாபெரியவருக்குப் பின் மடத்தில் இருப்பவர்கள்  இதையெல்லாம் சொல்வதே இல்லை !]

இது இப்படியெனில், பெரியவருக்கு மரியாதை செய்வது எப்படி? பெரியவர் சொல்லியபடி செய்வதுதான் சரியான மரியாதை. அது நடக்கவில்லை. எனவே, பெரியவர் படத்திற்கு பூஜை, அவருக்கு விக்ரஹம், கோயில், ஜயந்திவிழா, மணிமண்டபம் என்று செய்கிறார்கள். பெருமாள் கோயில் இடித்தாலும் பரவாயில்லை, ராமாயணம் படித்தால் போதும் என்பது போன்ற நிலை இது!

பிரசாரம் தேவையா ?

இப்போது சிலர் [பெரியவரைப் பின்பற்றுபவர்களாகத் தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் ]  அவருடைய  போதனைகளைப் பிரச்சாரம் செய்யவேண்டும்; இல்லாவிட்டால் வரும் தலைமுறைகளுக்கு அவரைப்பற்றிச் சரியாகத் தெரியாது; அதற்காக சினிமா அல்லது டி.வி..சீரியல் எடுக்க வேண்டும் என்று சொல்கின்றனர் ! ஏற்கெனவே  ஏதோ ஒரு சானலில் ஒரு சீரியல் வந்து இடையில் நின்றுவிட்டதாம்! அது சரியில்லை; நாங்கள் சரியாகச் செய்வோம்; நூதன தொழில் நுட்பத்துடன் செய்வோம் என்று கூறுகின்றனர்.
இதைத் தனியாகப் பார்ப்போம்.


No comments:

Post a Comment