23. பரிபாடல் - 13
ஜவ்வாதுமலை- குறிஞ்சி நிலம்!
From: yaanan,wordpress,com
இயற்கையோடு இயைந்த வாழ்வு!
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் பயிற்சியும் பரிச்சயமும் உள்ளவர்கள் தமிழ் மக்கள் "இயற்கையோடு இயைந்த " வாழ்வு வாழ்ந்தார்கள் என்று பெருமையாகச் சொல்வார்கள். அவர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தார்கள், அவற்றிற் கேற்ற முறையை வகுத்தார்கள் என்று பெருமைப்படுவார்கள்.
இயற்கையோடு வாழும் வாழ்க்கை என்பது என்ன? ஒருவன் இருக்கும் இடத்தின் தன்மையைப் பொறுத்தே வாழ்க்கை அமைகிறது.. அந்தந்தச் சூழ்நிலையில் ( நில, நீர் வளமும் பிறவும்) விளையும் அல்லது கிடைக்கும் பொருள்களே உணவாகிறது. அந்தந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தபடியே( தட்ப வெப்பம், மழை ) உடையும் இருப்பிடமும் அமைகின்றன. தொழிலும் அவ்வாறுதான். கடலோரத்தில் இருப்பவர்கள் மீன் பிடித்து வாழ்கிறார்கள்.
பண்டைய எகிப்தியர் மீன் பிடித்துவந்து, அதை உலர்த்துவதற்கு தயார் செய்தது!
இன்றைய செஷல்ஸ் Seychelles தீவில் மீன்பிடித்து வருபவன்!
காட்டில் இருப்பவர்கள் வேட்டையாடுகிறார்கள்; காட்டில் விளையும் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். சமவெளியில், நீர்வசதியும் நிலவளமும் உள்ள இடத்திலிருப்பவர்கள் விவசாயம், கால்நடை பராமரிப்பு முதலியவற்றில் ஈடுபடுகிறார்கள். உப்பங்கழிகள் வெப்பமுள்ள கடற்கரைப் பகுதிகளில்தான் அமையும்; கொம்புத்தேன் மலைமேல்தான் கிடைக்கும்! எப்பவும் பனிஉறையும் பிரதேசத்திலிருக்கும் எஸ்கிமோகூட அதற்குத் தகுந்தவாறு வாழ்கிறான். உலகம் முழுவதும் இந்த முறைதான் இருந்தது! உலகின் பலமொழி இலக்கியத்திலும் இதை நாம் பார்க்கலாம். நாகரிகம் என்று ஏதோ ஒன்று பரவிவிட்ட இக்காலத்தில் இம்முறைகள் மாறிவருகின்றன. அமெரிக்கர்களும் பிற வெள்ளைத்தோலர்களும் செய்வதே நாகரிகம் என்று எண்ணத் தொடங்கிவிட்டோம்!
குறிஞ்சியும் மருதமும் சேர்ந்த காட்சி! பிரான்மலை!
by Arunankapilan (Own Work) CC BY-SA 3.0 creativecommons via Wikimedia commons.
தமிழ் நாட்டின் சிறப்பு, ஒவ்வொன்றுக்கும் உரிய இலக்கணம் வகுத்ததுதான். இது பாரத நாட்டுக்கே உள்ள பொதுத்தன்மை! இதை சம்ஸ்க்ருத்தில் "லக்ஷணம் " என்பார்கள். ஐவகை நிலத்துக்கும், அங்கு வாழும் மக்கள், பிற உயிர்கள் ஆகியவற்றுக்கு தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. ஆனால் நடப்பதை வைத்துதான் இலக்கணம் வந்தது. தான் புதிதாகச் செய்ததாகத் தொல்காப்பியர் சொல்லவில்லை.
ஒவ்வொரு சமுதாயமும் தனக்கேற்ற வழியை வகுத்துக் கொண்டுதான் வாழ்ந்துள்ளது. ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறந்தே இருந்தன. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்காத வரை, எந்தப் பிரச்சினையும் இல்லை! அப்படி ஒப்பிடுவதில் அர்த்தமும் இல்லை!இயற்கையின் நியதிகளை மீறியதால்தான் பல நாகரிகங்களும் அழிந்துவிட்டன. இதை Richard B.Gregg எழுதிய "Which Way Lies Hope" (Navajivan, Ahmedabad) என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். எவ்வளவு இலக்கணம் இருந்து நமக்கு என்ன லாபம்? பழங்கதைகள் பேசுவதால் என்ன பயன்? இன்று எந்த ஆற்றிலோ, ஏரியிலோ நேராக தண்ணீர் அருந்த முடியுமா? நேராகப் 'போடும்' தண்ணீருக்கு டாஸ்மாக் கடைகளுக்குப் போகவேண்டும்!
குன்றக் காட்சிகள்
திருப்பரங்குன்றம் குறிஞ்சி நிலம்- மலையும் மலைசார்ந்த இடமும். ஆனல் இங்கு வரும் மக்கள் மதுரைமாநகரில் வாழும் பெருமக்கள். முருகாற்றுப் படையில் நாம் பார்த்தது போல், குறிஞ்சி நிலத்திற்கே உரிய குறவன், குறத்தி, கானவர் ஆகியோரை நாம் இங்கு பார்க்க முடியாது. இங்கு வரும் மக்களையும், நடக்கும் செயல்களையும் அருமையாகச் சொல்கிறார் புலவர் நப்பண்ணனார்.
வள்ளியை மணந்தது
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து
அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின்
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு 5
சாறு கொள் துறக்கத்தவளடு
மாறு கொள்வது போலும் மயிற்கொடி வதுவை
முருகவேளே! நீ தேவலோகத்தில் இருந்தாலும், கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்திலும் எழுந்தருள விருப்பம் கொண்டாய்! நீ கடம்பமரத்தின் கீழ் வாசம் புரிகின்றாய்! அதன் மகிமை எம் அறிவுக்கு அப்பாற்பட்டது! தொன்மரபில் வந்த முனிவர்கள் உன்னைப் போற்றுகின்றனர்! தேவர்கள் அடையும் இன்பத்தை மக்களும் அடையவேண்டும் என்ற திருவருளினாலே, நீ திருப்பரங்குன்றின் கண் வள்ளி நாச்சியாரை மணந்து அருள்கின்றாய்! நீ வானுலகில் தேவயானையை மணந்ததற்கு மாறாக இவ்வுலகில் புரிந்த செயலாக இருக்கின்றது!
மதுரை மக்கள் பரங்குன்று நோக்கிச் செல்லுதல்
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை
அறம் பெரிது ஆற்றிஅதன் பயன் கொண்மார் 10
சிறந்தோர் உலகம் படருநர் போல
அறிவினாலும் ஆற்றலினாலும் பிறரைப் போரில் வெல்லும் மதுரையிலுள்ள மைந்தரும் மகளிரும் இரவு நீங்கியதும் விடியற்காலையில் பரங்குன்றை நோக்கிப் புறப்பட்டனர். அறம் புரிந்து, அதன் பயனை அனுபவிப்பதற்கு தேவலோகத்திற்குச் செல்பவர்களைப்போல் அவர்கள் சென்றனர்.
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி
புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர்
தெரி மலர்த் தாரர் தெரு இருள் சீப்பநின்
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு 15
அவர்கள் தத்தமக்கு ஏற்ற அழகிய அணிகளையும் பளிச்சிடும் ஆடைகளையும் அணிந்து கிளம்பினர். சிலர் குதிரை மீது ஏறினர்; சிலர் தேரில் ஏறினர். அவர்கள் மார்பில் மாலைகள் பொலிந்தன. அவர்களுடைய உடலின் விளக்கம் வழியில் உள்ள இருளைப் போக்கியது! இங்ஙனம் அவர்கள் பரங்குன்றிற்கும் மதுரைக்கும் இடையில் உள்ள வழியில் அடர்ந்து சென்றனர்.
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும் மாலைத் தலை நிறையால் தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு
மாலையை அணிந்த அவரது தலைகள் இடைவெளியில்லாமல் நெருங்கிச் சென்றதால், அந்த வழியானது ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டி, நிலத்திற்கு இட்ட மாலை போலத் தோற்றமளித்தது. அவர்கள் எழுப்பிய இரைச்சலானது கடலலைகள் கரையில் மோதுவதால் உண்டான சப்தம் போன்றிருந்தது.
பாண்டியன் குன்றில் வலம்வருதல்
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி 20
மட மயில் ஓரும் மனையவரோடும்
கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின் பழ மதிச்
சூடி அசையும் சுவல் மிசைத் தானையின் 25
பாடிய நாவின் பரந்த உவகையின்
நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே
படு மணி யானை நெடியாய் நீ மேய
கடி நகர் சூழ் நுவலுங்கால்
ஒலிக்கும் மணியை அணிந்த யானையின்மேல் வரும் முருகவேளே! அறிவில் சிறந்த பாண்டியன் மயில்போன்ற தன் மகளிருடன் வருகிறான். தம் பணிகளை நன்கறிந்த கண்போன்ற அமைச்சர்கள் கூட வருகிறார்கள். நாடு, நகரங்களிலுள்ள பிறரும் , தத்தம் மரபுப்படி அணிந்த தலைப்பாகை அழகு செய்ய, அவனைத் துதித்த படியே வருகின்றனர். இவர்கள் அனைவருடன் கூடி பாண்டிய மன்னன் மலையேறிவ ந்து, உன் திருக்கோயிலை வலம்வருகின்றான். அக் காட்சி, பல நக்ஷத்திரங்களும் சூழ சந்திரன் மேருமலையை வலம் வருவதை ஒத்திருக்கிறது.
குன்றின் அடிவாரக் காட்சி
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி 30
வம்பு அணி பூங் கயிறு வாங்கிமரன் அசைப்பார்
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்
கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே 35
குருகு எறி வேலோய் நின் குன்றக் கீழ் நின்ற
இடை நிலம் யாம் ஏத்தும் ஆற
மத நீர் வழிவதால் வண்டுகள் மொய்க்கும் கபோலத்தை யுடைய யானைகளைச் சிலர் வழியிலிருந்து அகற்றி மரங்களில் கட்டி அவற்றிற்கு கரும்பை முறித்து உண்ணக் கொடுத்தனர். சிலர் மாலையணிந்த குதிரைகளை வழியிலிருந்து நீக்கினர். சிலர் தேர்களை வழியினின்று அகற்றினர். இவை இப்படிப் பரந்து நின்றதால் , க்ரவுஞ்ச மலையைப் பிளந்த வேலோய்! உன் குன்றின் கீழுள்ள நிலப்பரப்பு, பாண்டியனது பாசறையைப்போலத் தோன்றியது! நாம் உன்னை ஏத்திப் பரவுகிறோம்!
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும் 40
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப
ஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்
பாண்டியனுடன் வந்தவர்களில் சிலர், அங்குள்ள குரங்குகளுக்கு தின்பண்டம் தருகின்றனர். சிலர் கரியமுக முள்ள குரங்குகளுக்கு கரும்பைக் கொடுத்தனர்.
இசையறிவு உடைய சிலர், தெய்வத்தன்மை பொருந்திய பிரம்ம வீணையை வாசித்தனர். சிலர் குழல் வாசித்தனர். சிலர் அங்கு நடந்த வேள்வியின் சிறப்பைப் பாராட்டினர். சிலர் யாழின் இசைக்குத் தகுந்தவாறு முரசை ஒலித்தனர்.
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்
இவர்கள் இனங்ஙனம் இருக்க, சிலர் அங்குள்ள சித்திர சாலைகளில் சென்று சித்திரங்களைக் கண்டு மகிழலாயினர். அவர்களுள் சிலர், துருவச்சக்கரத்தைப் பொருத்திவரும் சூரியன் முதலிய கிரகங்களின் நிலையை விளக்கும் சித்திரத்தைக் கண்டனர்.
இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினா இறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் 50
சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும்
கணவர்கள் சில சித்திரங்களைக் காட்டி, "இவள் ரதி, இவன் மன்மதன்" என தம் மனைவியரின் கேள்விக்கு பதிலளித்தனர். வேறு ஒரு சித்திரத்தைக் காட்டி, " இது பூனையின் உருவெடுத்த இந்த்ரன் ; இவள் அகலிகை; இவன் கௌதம முனிவன்; இவர் கோபித்ததனால் அகலிகை கல்லானது இவ்வாறு "
என விளக்கினர்.
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் 55
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு
இவ்வாறு பரங்குன்றில் மாலின் மருகனாகிய முருகவேளின் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள இடம் பல சித்திர சாலைகளைக் கொண்டதாய் சோபித்து விளங்கியது.
உறவினரைப் பிரிந்த சிறுமி
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடை இடைப் புக்குப் பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் 60
ஏஎஓஒ என விளி ஏற்பிக்க
ஏஎஓஒ என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்பஅழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும் கூஉக் கூஉ மேவும் மடமைத்தே 65
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை
அந்தக் கூட்டத்தில் ஒரு சிறுமி தன் சொந்தக்காரர்களை விட்டுப் பிரிந்துவிட்டாள். அவர்களைத்தேடித்தேடி அங்குள்ள பாறைகளினிடையே புகுந்து திகைத்து, ஏஏ,ஓஓ என்று கூவினாள். அங்குள்ள குகைகளிலிருந்து அதே எதிரொலி எழுந்தது. அதை எதிரொலி என்று அறியாமல், அவர்களும் அழைப்பதாக நினைத்து, அங்கங்கே சென்று அவர்களைக் காணாமல் திரும்பினாள்! மேலும் மேலும் கூவினாள். அன்பர்களது வாழ்த்தினை உவந்து ஏற்கும் முருகனது பரங்குன்று இவ்வாறு சிறிய வயதினருக்கு மயக்கத்தைத் தருகிறது!
மருளும் மகளிர்!
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உறஅவை கிடப்ப 70
தெரி மலர் நனை உறுவ
ஐந்தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள
இளைய பெண்கள் சுனையருகில் இருந்த மரங்களிலிருந்து இளந்தளிர்களை விளையாட்டாக சுனையில் பிய்த்துப் போட்டனர். அவை சுனையில் இருந்த மலர்களுடனும் அரும்புகளுடனும் பொருந்தி, தலை தூக்கி நின்றன. இதைக்கண்டு இது ஐந்து தலை நாகம் என நினைத்தனர். அங்கு கிடந்த முதிர்ந்த அரும்புகளை அதன் பெரிய குட்டியென்றும், சிறிய அரும்புகளைச் சிறிய குட்டியென்றும் நினத்து மருண்டனர்!
…………………………………………………….. பாங்கர்
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் 75
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்
எருவை நறுந் தோடு எரி இணர் வேங்கை
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம்
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க 80
மணந்தவை போல வரை மலை எல்லாம்
நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்
விடியல் வியல் வானம் போலப் பொலியும்
நெடியாய் நின் குன்றின் மிசை
நெடியோய்! உன் மலையில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆம்பலும், காந்தளும், பஞ்சாய்க் கோரையின் பூவும், வேங்கை மலரின் கொத்தும், நறவம், கோங்க மலர், இலவம் ஆகிய இவையெல்லாம் நெருங்கிப் பூத்திருக்கின்றன. இவ்வாறு இம்மலை, பலவித நிறமுள்ள மலர்களால் நெருக்கிக் கட்டித் தொடுத்த மாலைகள் அணிந்தது போல் காண்கிறது! பல நிறங்களுள்ள மேகங்கள் அடர்ந்த விடியற்கால வானம் போன்று காட்சியளிக்கிறது!
12 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்!
from: https://maathevi.files.wordpress.com Thanks.
இங்கு வரும் மலர்களின் பெயர்கள் மணிமேகலையில் வரும் ஒரு காட்சியை நினவுபடுத்துகின்றன.
குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந்
திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்
நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய வுவவனம்
(மணிமேகலை மலர்வனம் புக்க காதை)
கன்னியரும் மணமான பெண்களும் செய்த பூஜை
நின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால் 85
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா
பொற் பவழப் பூங்காம்பின் பொற்குடை ஏற்றி
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்
கன்னிமை கனிந்த காலத்தார் நின் 90
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்
அடியவர்கள் உன் குன்றத்தை அடைந்து உனது சேவற் கொடி ஏற்றப்படும் யானையின் கும்பத்தை குங்குமத்தால் அலங்கரிக்கின்றனர். பூவும் நீரும் தெளித்து, செவிக் கவரிகளைச் சார்த்தி, பவளக் காம்புடைய பொற்குடையை மேலே கவித்து அவர்கள் பூஜை செய்தனர்.
அப்போது, மணமான பெண்களும் கன்னியரும் அந்த யானை உண்ட கவளத்திலிருந்து மிச்சத்தை விருப்பத்துடன் எடுத்து உண்டனர்! அப்படி அதன் சிறப்பை உணர்ந்து உண்ணாவிட்டால், பெண்கள் தம் காதலரின் சிறந்த அன்பைப் பெறமாட்டார்கள்! கன்னிப் பெண்கள் சிறந்த கணவரை அடையமாட்டார்கள்.
வாழ்த்தும் வேண்டுதலும்
குறப் பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் 95
சிறப்பு உணாக் கேட்டி செவி
கொடிபோன்ற குறமகளாகிய வள்ளி நாச்சியாரை மணந்தருளீயவனே! என் வாழ்த்தை உன் செவிக்கு உணவாகக் கருதிக் கேட்டருள வேண்டும்.
உடையும் ஒலியலும் செய்யைமற்று ஆங்கே
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்
உருவும் உருவத் தீ ஒத்திமுகனும்
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி 100
உன் ஆடையும் மாலையும் சிவந்த நிறமுடையன. உன் வேலாயுதமும் அவ்வாறே பவழக்கொடியைப் போல சிவந்த நிறமுடையது. உன் திருவுருவமும் எரிகின்ற தீ போன்றது. உன் திருமுகம் இளம் சூரியனை ஒக்கும்.
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி
அவ் வரை உடைத்தோய் நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே 105
உலகத்திற்குத் துன்பம் தந்த சூரபத்மனாகிய மாமரத்தை அழித்தவனே! பகைமை பூண்ட க்ரௌஞ்ச மலையின்மீது வேலைச் செலுத்தி அதைப் பிளந்தவனே! நீ இக்குன்றத்தில் கடம்பமரத்தில் விரும்பி எழுந்தருளிய நிலையை எம் சுற்றத்தோரோடு கூடித் துதித்துத் தொழுது வாழ்த்தினோம்! அருள் புரிவாயாக!
from: www.chenaitamilulaa.net. Thanks.