Showing posts with label கங்கை. Show all posts
Showing posts with label கங்கை. Show all posts

Saturday, 5 December 2015

25. அறியாமையும் அயோக்யத்தனமும்



25. அறியாமையும் அயோக்யத்தனமும்

"படிப்பது  ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் " என்று  நம்மிடையே ஒரு பழமொழி உண்டு.  நம் பேச்சுக்கும் செயலுக்கும்  இடையே உள்ள முரண்பாட்டை இதைவிடச் சரியாகச் சொல்ல முடியாது!

பசு புனிதமானது என்று  பேசுகிறோம்; அதைத் தெருவில் அலைந்து குப்பையை மேய விடுகிறோம், எருமைப் பாலைக் குடிக்கிறோம்!



நமது நகரங்களில்  கோமாதாவின் நிலை!
photo: helpanimalsindia.org


கங்கையும் காவிரியும் புனிதம் என்கிறோம்; அவற்றை அசிங்கப்படுத்தியும் வருகிறோம்! மதச்சார்பிலாத சர்க்கார்  என்கிறோம்; ஆனால் ஹிந்துக்  கோயில்களை  அவர்கள்  நிர்வாகத்திற்கும் சுரண்டலுக்கும் விட்டுவிட்டோம்! சர்சுக்கோ, மசூதிக்கோ போக கட்டணம் வசூலிப்பதில்லை; ஆனால் ஹிந்து கோவில்களில்  சர்க்காரே கட்டணம் பிடுங்குவார்கள்! இவ்வளவு ஏன்! ஒரு பெரியவர் நன்றாகச் சொன்னார்: நம் நகரங்களில் எல்லோரும் நடைபாதைக் கடைகளிலேயே, ரோடு  ஓரத்தில் நின்றவாறே  சாப்பிடுவதுதான் நவ நாகரீகம்- ஆனால் செறுப்பு  விற்க ஏ,ஸி   ஷோரூம்!



இது கங்கை! பாட்னாவில்.




இதுவும் கங்கைதான்!  கான்பூரில்  கங்கையில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகள்!
photo: archive.tehelka.com

மாசுபடிந்த  கங்கையின்  மற்றொரு காட்சி:



கங்கையைக் களங்கப்படுத்துவது  ரிஷிகேசத்திலேயே  தொடங்குகிறது. இதில் முக்கிய கைங்கர்யம் செய்வது, மத்திய  அரசினருக்குட்பட்ட இரண்டு தொழிற்சாலைகள்! இது கங்கையோடு கூடவே தொடர்கிறது. இதில் பங்குவகிப்பது, முக்காலும் ஹிந்துக்களே!




இது, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் யமுனை!
photo: post.jagran.com, April, 2012




இது "கங்கையிற் புனிதமாய காவிரி "!
இடம்: திருச்சி அம்மா மண்டபம் அருகே!
தி ஹிண்டு, 6-7-2014



இதுவும் காவிரிதான்-  ஈரோடுக்கு அருகே ! டெக்கான் க்ரோனிகில். 27-11-15

இதையெல்லாம் நேரிலோ, படத்திலோ பார்த்த பிறகு,

"கங்கே ச யமுனே சைவ கோதாவரி  ஸரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு"

என்று  சங்கல்பம் செய்ய யாருக்காவது  மனது வருமா? நல்லவேளை! ஸரஸ்வதி  பூமிக்குள்ளே போய் தப்பித்து விட்டது! சங்கல்பம் செய்பவர்களில் பலருக்கும் இதன் அர்த்தம் தெரியாது! அதுவும் நல்லதே!



எங்கள் நதி தெய்வீகமானது என்று 'டாம்டாம்' அடித்துக்கொள்ளாத  வெள்ளைக் காரர்களின் நிலை என்ன?
கீழே லண்டனில் ஓடும்  தேம்ஸ்  நதி!






இது பாரிஸில் ஓடும் ஸென்   (Siene) நதி!






 நமது மடாதிபதிகளும், உபன்யாசகாரர்களும் இன்னமும்  கங்கையும் காவிரியும் தெய்வீகம் என்று  கதை விட்டு காலக்ஷேபம் செய்கிறார்கள்! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நதியின், ஏரியின், குளத்தின் கதையும் இதுதான்! கங்கையின் புனிதத்தை எதுவும் கெடுக்காது -கெடுக்க முடியாது என்பது ஒரு தீவிரமான வாதம்!

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் எழுந்த  பாகவத புராணம்  கலியில் நடப்பதைச் சரியாகச் சொல்லிவிட்டது:


அத்யுக்ர பூரி கர்மாணோ நாஸ்திகா ரௌரவா ஜனா:
தே அபி திஷ்டன்தி தீர்த்தேஷு தீர்த்த ஸாரஸ்ததோ  கத: 

மாஹாத்மியம், 1.1.72

நதி தீரங்களிலும், தேவாலயங்களீலும் பலவித தீய செயல்கள் புரிபவர்களும், தெய்வமில்லை என்று பேசித்திரியும் நாஸ்திகர்களும், மற நெறி ஒழுக்கத்தால் நரகம் புக இருப்பவர்களும் வசிப்பதால் தீர்த்தத்தின் ஸாரம் அழிந்து, அதன் மஹிமை அழிந்தது. (இது நாரதர் கூற்று.)

சாமி, பூதம், மதம் என்ற ஏதோ ஒன்றின் அடிப்படையில் நம் ஜனங்கள் குளம் குட்டைகளயும்  ஆறு, நதி, கோயில்களையும்  நன்றாகவே  போற்றிப் பராமரித்து வந்தார்கள். விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும், சீர்திருத்தக் காரர்களும்  தீவிரமாகப் பிரச்சாரம் செய்து நம்பிக்கையைக்  குலைத்தார்கள். இன்று அறிவியல்  என்ற பெயரிலோ, சட்டம் என்ற பெயரிலோ, எதுவும் செய்ய இயலவில்லை! 

கோவில் என்று போனால், இன்னும் பரிதாபம்! இன்று  கோவில்களைப் பற்றி  நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் வந்தவண்ண மிருக்கின்றன. சில கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா வழக்கம் ஒரு காரணம். அதைவிட முக்கியமானது, ஜோசியம், ராசிபலன், பரிகாரம் என்று  பத்திரிகைகளில் வரும் விஷயங்களே! அதே சமயம் பல கோவில்களில் விளக்கு போடுவதற்கும் வருமானமில்லை! கோவில்களுக்கென்று விற்கப்படும் எல்லா பொருள்களும் கலப்படமே! பன்னீர், சந்தனம், குங்குமம், தேன், எண்ணெய்,  நெய் என்று எதை எடுத்தாலும் கலப்படம்!  கல்பூரத்தில் இருக்கும் கலப்படத்தினால் பல கோயில்களில் கல்பூரமே ஏறுவதில்லை!அர்ச்சனைத் தட்டு என்று விற்கிறார்கள். பார்த்தால், வாடிய, வாசனையில்லாத பூ, பழுக்காத அல்லது மிகவும் பழுத்து தோல் கருத்த பழம் என்றுதான் இருக்கும்!கோயில் வ்யாபார ஸ்தலமாகிவிட்டது! சில கோயில்களில் சில நிகழ்ச்சிகளுக்கு கான்ட்ராக்ட் முறை வந்துவிட்டது! நம்மைப்போன்ற அனாமதேயங்கள்  தர்ம வரிசையில் நின்றால், பெரிய கோயில்களீல் அரை நிமிஷம்  கூட சுவாமி தரிசனம் செய்ய விடுவதில்லை. 

எந்த புத்தகத்திலும்  இருக்கும் நிலையை  உள்ளபடி எழுதுவதில்லை. பழனி மலையில் ஸ்வாமி விக்ரஹம் நவபாஷாணத்தினால் ஆனது, அபூர்வ மருத்துவ குணம் கொண்டது. அதனால் சித்த மருத்துவர்கள், தர்மகர்த்தாக்கள், சில அர்ச்சகர்கள் ஆகியோர்  சேர்ந்து  சுவாமி விக்ரஹத்திலிருந்து சுரண்டி எடுக்கிறார்கள்  என்று  1962-3 வாக்கிலேயே வதந்திகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது இது நிதரிசனமாகிவிட்டது.  விக்ரஹம் தேய்ந்துபோய், மூலவருக்கு அபிஷேகம் செய்வதே நின்றுபோய் விட்டது! பழனியில் எது முக்கியமானதாக  இருந்ததோ, அதுவே  இன்று இல்லை என்றாகிவிட்டது! எல்லாம்  அரசினர் நிர்வாகத்தில் இருக்கும் இடத்தில்!கலிகாலம் தன் கைவரிசையைக் காட்டிவிட்டதோ?

நமது கோயில்களின்  செல்வத்தைக் கண்டு  அவற்றைக் கொள்ளையடித்தனர் துலுக்கர்கள்; அவற்றின் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டான் வெள்ளைக்காரன்.  நமது சுதந்திர சர்க்காரும் இதையே தொடர்ந்து  வருகிறது! நமது கோயில்களில் இருக்கும்  பொன், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பொருள்களின் விவரத்தை ரிசர்வ் பேங்கு சென்ற ஆண்டு  கேட்டது!  ரிசர்வ் பேங்கிற்கும் ஹிந்து கோவில்களுக்கும் என்ன சம்பந்தம்? இது நிதித்துறையின் நாய் போன்று செயல்பட்டது என்பது வெளிப்படை! (அப்போது சிதம்பரம் நிதி மந்திரி) சர்ச்சுகளிடமும் மசூதிகளிடமும் இப்படிக் கேட்கும் துணிவு இவர்களுக்கு உண்டா?

ஒரு பக்கம் பொது மக்களின் அறியாமை. ஓரு பக்கம் மத நம்பிக்கையை வைத்து வியாபாரம் செய்யும் கும்பல்கள்! ஒருபக்கம் அரசினர் செய்யும் அயோக்யத்தனம்! இதையெல்லாம் கேட்க ஹிந்துக்களுக்கு நாதியில்லை!




Saturday, 28 November 2015

19. பரிபாடல் -9. பரங்குன்றத்துப் பரமன்



19. பரிபாடல் -9



பரங்குன்றத்துப் பரமன்

இது பல வருஷங்களுக்குமுன் நடந்த சமாசாரம்.
எங்கள் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்துவந்தாள். நம் பண்டிகை, பூஜை ஆகியவற்றைப் பார்த்தோ என்னவோ தெரியவில்லை-  ஒருநாள் "ஐயா, எனக்கும் வூட்லெ வெச்சுக் கும்பிட சாமிபடம் எதுனாச்சும் தா " என்றாள்.அவள் அடுத்துச் சொன்னதுதான் அபாரம்! "ஆனால்  ரெண்டு பொண்ஜாதி வெச்ச சாமிபடம் தராதே"  என்று ஒரு போடு போட்டாளே பார்க்கணும்!

நம் சாமிகள் எல்லோருமே 'இரண்டு பொண்ஜாதி ' வகையினர்தாம் ! சிவனுக்கு இடையில் உமை, தலையில் கங்கை; பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி; க்ருஷ்ணருக்கு, ருக்மிணி, சத்யபாமா;  இதுதவிர, ராதா எக்ஸ்ட்ரா சமாசாரம். அப்பனும் மாமனும் இப்படி இருந்தால் முருகன் சும்மா இருப்பானா? அவனுக்கும் வள்ளி, தெய்வானை என்று இரண்டுபேர்! நம் பெரியவர்கள் பிள்ளையாரையும் விட்டு வைக்கவில்லை- சித்தி, புத்தி என்று அவருக்கும் இரண்டு கற்பித்து விட்டார்கள்! தப்பியது ராமர் ஒருவர்தான்! ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி வ்ரதுடே என்று த்யாகராஜஸ்வாமிகள் பாடியபடி, அவர் மட்டும் ஏகபத்னி  விரதம். ஆனால் நான் புலவனாக இருந்தால் அவரையும் விட மாட்டேன்! ராமன் தர்மத்தின் உருவல்லவா- ராமோ விக்ரஹவான் தர்ம:! என்றும் தர்மத்தை விடாதவர் என்றால், தர்மத்தையும் ஒரு பத்னியாகச் சொல்லலாம் அல்லவா? கடைசியில் அதுதானே நடந்தது? ராஜதர்மத்திற்காக, பத்னியையும் அல்லவா த்யாகம் செய்தார்!

தெய்வங்களுக்கு இவ்விதம் பத்னிகளைக் கற்பித்தது தத்துவத்தின்  ஒருவித விளக்கமாகும். தெய்வத்தின் சக்தியே இவ்வாறு உருவகப்படுத்தப் படுகிறது. முருகனின் இச்சாசக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி என்பவையே வள்ளி, தெய்வானை,வேல் என உருவகப்படுத்தப் படுகின்றன. இதையெல்லாம் க்ருபானந்த வாரியார் ஸ்வாமிகள் நன்றாக விளக்கியிருக்கிறார்.

ஆனால் புலவர்கள் இதைவைத்து சொல்லாட்டம் ஆடுவார்கள்! அதுவும் தமிழ் இலக்கண மரபில் தோய்ந்த  சங்கப் புலவர்கள் சும்மா விடுவார்களா? முருகன் முதலில் தெய்வானையை மணந்து கொள்கிறான். தமிழ் இலக்கண மரபுப்படி, இது  கற்பு மணம். அடுத்து வள்ளியை ஏற்பது களவுமணம். இதில் எது சுவாரஸ்யமானது என்பது பற்றிப் பாடுகிறார்  குன்றம் பூதனார் என்ற புலவர். வள்ளியை மணந்ததால் தெய்வானை கோபிக்கிறாள் என்றும் , தெய்வானை-வள்ளி கூட்டத்தினரிடையே பூசல் என்றும் இவ்வாறு கற்பனை செய்துகொண்டு போகிறார் புலவர்.  நல்ல இலக்கியமாக இருந்தாலும், எனக்கு இது அவ்வளவாக ரசிக்கவில்லை.சற்று விரசமாகவே படுகிறது.


தெய்வங்களுக்குப் பத்தினிகள், இரண்டு தேவிகள் என்பதெல்லாம் மிகவும் நாசூக்காகக் கையாளவேண்டிய விஷயங்கள்.சிவனைப் பற்றிச் சொல்லும்போது, மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருச்சாழலில் எழுதுகிறார்:

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடி
சலமுகத்தால்  அவன்சடையில் பாய்ந்திளனேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.

சிவபெருமான் கங்கையின் வேகத்தைத்  தாங்கித் தடுத்திராவிட்டால், இந்த பூமி அதைத் தாங்கியிராது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! இதுவே அருளாளர்களின் வாக்கிற்கும் எனைய புலவர்களீன் சொல்லுக்கும் உள்ள வித்தியாசம். அதனால்தான் பரிபாடலில் உள்ள பாடல்கள்  பெரிய இலக்கியமானாலும் ஒரு தெய்வீக அந்தஸ்தைப் பெறவில்லை. படிக்கிறோமே தவிற பாராயணம் செய்வதில்லை !
அதனால்,இந்தப் பாடலில் வரும்  அத்தகைய பகுதிகளை விட்டு, முருகன் பற்றிய விஷயங்களை மட்டுமே பார்ப்போம்.



ஆகாயத்திலிருந்து கீழ்விழும் கங்கையை சிவபெருமான் சடையில் தாங்குவது!  ராஜா ரவி வர்மா சித்திரம்.

முருகன் அவதாரம்



இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமைஉயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப 5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
 இந்த்ரனால் காக்கப்படும் இமயமலை, இந்தப் பெரிய நிலம் அசையாதபடி, வடதிசையில் ஓங்கி நிற்கிறது. அதன் சிகரத்தில், தெய்வ முனிவர் அறுவரும் உடன்பட, மதிப்புடைய கார்த்திகைப் பெண்டிர் அறுவரிடத்தே, ஆகாய கங்கையைப் பூப்போலச் சடையிலே தாங்கும் கங்காதரராகிய நீலகண்டப் பெருமானுடைய குமாரனாகப் பிறந்தோய்!

பரங்குன்றில் போட்டிகள்!


கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70
அடும் போராள நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் 75
செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்
படாகை நின்றன்று
கொடிய சூரபன்மனாகிய மாமரத்தை வீழ்த்திய   வேலையுடைய போர் வீரனே! உனக்குரிய  பரங்குன்றத்தில், ஆடல் பயின்றவர்களைப் பிற ஆடல்வல்லவர்கள் வெல்கிறார்கள்;  பாடல் பயின்றோரைப் பிற பாடல் வல்லார் வெல்கிறார்கள்; சூதாடுவதில் வல்லவர்களை சூதில்வல்ல வேறு சிலர் வெல்கிறார்கள். கல்வி பயின்றவர்களும் இவ்வாறே தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெல்கின்றனர். இத்தகைய வெற்றிகளால் புகழ் பரவ,  தடாகம் போன்ற சுனையின் அருகில் உனது கொடி நின்றது.

எமது வேண்டுதல்






மேஎ எஃகினவை
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை    80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்தொறும் பொலிந்தே   85



வியக்கத்த உயர்குணங்களை உடைய குமரனே! நீ உனக்குப் பொருத்தமான  வேலினை உடையவன். வெற்றி பெற்று உயரப் பறக்கவிட்ட கொடியால் உன் புகழ் பரவிற்று. உன்னுடைய கற்பு தேவியரின் அன்பை விரும்புகின்றாய்! உன்னிடம் அன்புகொண்ட நாம், உன் திருவடியை வணங்கும் செயல் நாள்தோறும் வளர்ந்து பயன் தந்து சிறக்க வேண்டும் என்று உன்னைத் தலைவணங்கி வாழ்த்தி வேண்டுகின்றோம். அவ்வாறே அருள்வாயாக.