26. தொழிலும் பாவமும்
https://icrindia.wordpress.com
உழைத்து உண்!
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ தொழில் செய்துதான் வாழவேண்டி யிருக்கிறது. இதற்கு கிறிஸ்தவர்களின் பைபிளில் ஒரு விளக்கம் சொல்கிறார்கள். ஆதி மக்களாகிய ஆதாமும் ஏவாளும் கடவுளின் ஆணையை மீறியதால் தெய்வீகச் சோலையிலிருந்து நீக்கப்பெற்று பூமிக்கு வந்தனர். "நீங்கள் பூமியில் போய் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்துச் சாப்பிடுங்கள் " என்று கடவுள் அவர்களைச் சபித்தார்!
By the sweat of your brow you will eat your food until you return to the ground, since from it you were taken; for dust you are and to dust you will return." [Genesis 3:19]
Bread labour
ஆதிப் பெற்றோர்களின் வாரிசுகளாகிய நாம் இப்படி மெய் வருந்த உழைத்துதான் உண்ணவேண்டியுள்ளது! ஆனால் சில மேலை நாட்டு அறிஞர்கள் இதை வேறு விதமாக விளக்கினர். ஒவ்வொருவரும் தன் உடலுழைப்பால்தான் வாழவேண்டும் என்பதை ஒரு அறக்கொள்கையாகவே அவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதை முதலில் சொன்னவர் பாண்டரேஃப் [T.M.Bondaref] என்ற ரஷ்யர். பின்னர் டால்ஸ்டாயும் ஆங்கில அறிஞர் ரஸ்கினும் இதைப் பரப்பினர்.காந்திஜி இதை அப்படியே பிடித்துக் கொண்டார்!
Tolstoy in farmer's clothing. painting by Ilya Repin.
ஆனால் உலகம் அவ்வளவு எளிய நிலையில் இல்லை! பலவிதமான தொழில்கள் பல்கிப் பெருகிவிட்டன.
ஆரம்பத்தில் எல்லா நாடுகளிலும் பரம்பரையாகவே தொழில்கள் நடைபெற்று வந்தன. தொழில்களை வைத்தே பெயரும் வந்தது. டெய்லர், ஸ்மித், பார்பர் , பட்லர் போன்ற பெயர்கள் இன்றும் வழங்கிவருகின்றன! பொருளாதாரம் பணத்தின் அடிப்படையில் அமைந்த பிறகு இந்த நிலை மாறிவிட்டது. மதிப்பு, கவர்ச்சி, பொருளீட்டும் வசதி ஆகியவற்றைப் பொறுத்து இப்பொழுது மக்கள் தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் போட்டியும் பொறாமையும் அதிகரித்துவிட்டது.
ஸ்வதர்மமே செய்யவேண்டியது
ஸ்வதர்மமே செய்யவேண்டியது
இந்தியாவிலும் இந்த முறைதான் இருந்து வந்தது. இதை நாம் வர்ண தர்மம் என்று கூறுகிறோம். ஒவ்வொரு வர்ணத்தவரும் தத்தமக்குரிய கர்மங்களைப் புரிவதே தம்மை ஆராதிப்பதாகும் என்று பகவான் கீதையில் கூறுகிறார்.
स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु।।18.45।।
ஸ்வே ஸ்வே கர்மண் யபிரத:
ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்ம நிரத: ஸித்திம்
யதாவிந்ததி தத் ஶ்ருணு.
தத்தம் தொழில்விருப்பிற்றாமியற்று வாரடைவார்
சித்தியினி மாந்தர்கள்தம் தீங்கில்தொழில் - உற்றங்
கநுட்டித்துச் சித்தி அடையும் நெறி தன்னை
உனக்கிசைப்பன் கேளாய் உவந்து.
அவவர்களுக்கு இயல்பாக ஏற்பட்டுள்ள கர்மங்களில் முழுமுனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிய சித்தியை எய்துகிறான்.
தன்னுடைய இயல்பான கர்மத்தை எப்படிச் செய்து பரம நிலையை அடையலாமோ அதை உனக்குச் சொல்கிறேன், கேள்.
यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।।18.46।।
யத: ப்ரவ்ருத்திர் பூதானாம்
யேன ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய
ஸித்திம் விந்ததி மானவ:
யாவனிடை எப்பொருட்கும் எய்தும் பிறப்புளதாம்
யாவனிவற் றெல்லாம் இலங்கிடுவன் - தேவவனைத்
தத்தமக்காம் கன்மத்தால் சார்ந்தடைவார் மானிடர்கள்
உத்தமமாம் சித்தியினை ஊங்கு.
எந்தப் பரம்பொருளிலிருந்து ஸகல ப்ராணிகளும் உண்டாயினவோ, எந்த பரமாத்மாவினால் இந்த உலகம் முழுதும் நிறைந்துள்ளதோ அந்த பரமாத்மாவை தன்னுடைய இயல்பான கர்மத்தினால் (ஸ்வதர்மத்தினால்)வழிபட்டு மனிதன் பரம ஸித்தியினை அடைகிறான்.
[ஸ்வதர்மத்தைச் செய்வதே கடவுள் பழிபாடாகும்][இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெண்பாக்கள் ஸ்ரீமான் முத்து ஐயர் என்னும் ஆசிரியர் 1907ம் வருஷம் இயற்றியதாகும். சென்னை ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம் இதை 1958ம் வருஷம் பிரசுரித்தது.]
From ISKCON sources. Thanks.
பிற கர்மத்தை விலக்கு
இதைச் சொன்ன பகவான், ஸ்வகர்மத்தையன்றிப் பிறவற்றைச் செய்யலாகாது என்றும் சொல்கிறார்.
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः।।3.35।।
ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:
பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதனம் ஶ்ரேய:
பரதர்மோ பயாவஹ:
நன்கொழுகும் மற்றோர் அறந்தன்னில் நற்குணனில்
தன் கடமை யாமறனே சாற்றின் மேல் - புன்கணுறத்
தன்னறத்திற் சாதல் நலமாகும் சார்ந்திடுமே
இன்னல்பிறர் தம்மறத்தால் ஈங்கு.
நன்கு அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறைவிருந்தாலும் தன்னுடைய தர்மமே மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தில் இறப்பதும் மேன்மையே தரும். பிறருடைய தர்மம் பயத்தை விளைவிக்கும்.
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्।।18.47।।
ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண:
பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவ நியதம் கர்ம
குர்வந்நாப்னோதி கில்பிஷம்.
நற்குணமொன் றில்லெனினும் தன்கருமம் நன்குபுரி
கிற்பதுமற் றோர்தொழிலிற் கேடறவே - நிற்பதினும்
மேலாமே தன்தொழிலை மேவிப் புரிந்திடுவோன்
ஏலானொர் வெம்பவமும் ஈங்கு.
நன்கு அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை வுள்ளதாக இருந்தாலும் தன்னுடைய தர்மமே உயர்ந்தது. ஏனெனில் இயல்பாக நேர்ந்த கர்மத்தைச் செய்வதால் மனிதன் பாவத்தை அடையமாட்டான்.
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत्।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः।।18.48।।
ஸஹஜம் கர்ம கௌந்தேய
ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண
தூமேநாக்நி ரிவாவாவ்ருதா
இயற்கையினாம் கன்மத்தை ஏதமுளதேனும்
செயற்கரிய தென்றுவிடல் தீதாம் - நயக்கக்கேள்
செந்தழலைத் தூமம்போற் செய்தொழிலைத் தீமைபல
சந்ததமும் சூழ்ந்திருப்ப தாம்.
குன்தியின் மகனே! குறைவுள்ளதாயினும் தனக்குரிய இயல்பான கர்மத்தை விட்டுவிடலாகாது. ஏனெனில், புகையால் சூழப்பட்ட தீ போல எல்லாக் கர்மங்களும் ஏதோ ஒரு வகையில் குறையினால் சூழப்பட்டதாகவே வுள்ளன.
இதையெல்லாம் சுருக்கிய மாதிரி, சங்கர பகவத் பாதர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்:
யத் லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன விநோதய சித்தம்.
உன்னுடைய நிஜ கர்மத்தினால் (ஸ்வதர்மத்தினால்) எந்தப்பொருள் உனக்கு வந்து அமைகிறதோ, அதைக்கொண்டு மனதில் த்ருப்தி அடைவாயாக.
[ குறிப்பு:
1.கர்மம், ஸ்வதர்மம் என்பதெற்கெல்லாம் இந்தக் காலத்து பண்டிதர்களும், புதிய ஸ்வாமிஜிக்களும், நவயுக குருமார்களும் விதவிதமாக விளக்கமளிக்கின்றனர். ஆங்கிலத்தில் எழுதுபவர்களும் கர்மத்தை action, work, activity, duty என்றெல்லாம் எழுதுகின்றனர். கர்மம், தர்மம், ஸ்வதர்மம் என்பவை பரிபாஷகள். மிகவும் பொருள்பொதிந்தவை. ஹிந்துக்கள் இவற்றை சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றுக்கு நேரான சொற்கள் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.
2. கீதையில் பகவான் அர்ஜுனனை பலபெயரிட்டு அழைக்கிறார். ஆனால் கவுன்தேயா - குன்தியின் மகனே -என்று அழைப்பது மிகவும் அருமையானது. இந்தப் பெயரிட்டு அழைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் பகவான் சொல்லும் அறிவுரைகள் மிகவும் முக்கியமானவை.
குன்தி (இதுதான் சரியான பதம். Kunti என்பதுதான் பெயர்.) க்ருஷ்ணருக்கு அத்தையாகவேண்டும் ஆனால், அவள் பகவானின் பக்தை என்பதுதான் நெருக்கத்திற்குக் காரணம். மஹாபாரதத்திலேயே குன்தியும் த்ரௌபதியும் மிக உயர்ந்த பாத்திரங்கள். குன்தி செய்தது போன்ற ப்ரார்த்தனை உலகில் வெறு யாரும், எங்கும் எப்போதும் செய்யவில்லை! இதைப் பிறகு பார்க்கலாம்.
3.ஶ்ரேயான் ஸ்வதர்மோ விகுண: என்று இரண்டுமுறை பகவான் சொல்வதிலிருந்து அந்தக் கருத்தின் முக்கியத்துவம் விளங்கும். இம்மாதிரி சில சொற்பிரயோகங்கள் கீதையில் சில இடங்களில் திரும்பத்திரும்ப வரும். அவை முக்கியமானவை.]
கர்ம ரஹஸ்யம்
கர்ம ரஹஸ்யம்
கர்மத்தில் ஈடுபடாமல் வாழமுடியாது, ஆனால் குறையில்லாத கர்மம் இல்லை ! கர்மம் செய்தாலும் அதனால் தளை - மறு பிறவி யென்னும் பந்தம் - வருகிறது. இதுதான் மனித வர்கம் பெற்றுள்ள சாபக்கேடு! பகவான் ஸ்ரீ ரமணர் சொல்கிறார்:
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீபற
வீடு தரலிலை உந்தீபற.
இதிலிருந்து எப்படி விடுபடுவது? கீதையில் இதைத்தான் பகவான் போதிக்கிறார். அவர் காட்டும் வழி:
- இயல்பாக நேர்ந்த கர்மத்தை (ஸ்வதர்மம்) மட்டும் செய். (கார்யம் கர்ம, நியதம் கர்ம , ஸஹஜம் கர்ம )
- அதை யஜ்ஞமாகச் (வேள்வி) செய். யஜ்ஞம் செய்யாமல் உண்பவன் திருடன்.
- அதை யோகமாகச் செய்.
- ஸங்கல்பத்தைத் துறந்து செய்.
- பலனில் பற்றில்லாமல் செய்.
- அகந்தையின்றிச் செய்.
- காம்ய கர்மம் செய்யாதே.
- கர்மத்தை பகவானின் ஆராதனமாகச் செய்.
- எப்போதும் பகவானை நினைத்துச் செய்.
- கர்மத்தை-அதன் பலனை- பகவானுக்கு அர்ப்பணம் செய்.
- கர்மம் செய்யாமல் இருப்பதில் விருப்பம் கொள்ளாதே. (கர்மத்தைத் துறப்பது ஸன்யாசமில்லை. கர்ம பலனைத் துறப்பதுதான் த்யாகம்.)
- இவ்வாறு கர்மம் புரிந்து, மீண்டும் பிறவித்தளையில் படாமல் இருப்பதுதான் திறமை (யோக: கர்மஸு கௌஶலம்)
இன்று சமூகம் இந்த நிலையிலிருந்து எங்கோ சென்றுவிட்டது. வேலை செய்தே வயிறு வளர்க்கவேண்டும்; ஆனால் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு பலருக்கும்- குறிப்பாக, நடுத்தர வர்கத்தினருக்கு- சுதந்திரமில்லை! யார் எதையும் செய்யலாம் என்ற நிலை! ஸ்வதர்மம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆனால், சமுதாய நிலை மாறிவிட்டதால் கர்மத்தின் இயல்பு மாறிவிடவில்லை! குற்றம் குறை இல்லாத கர்மம் இல்லை. ஆனால் எந்தக் கர்மத்தையும் அதற்குரியவர்கள் செய்தால் பாவமில்லை! தனக்கென இயல்பாக இல்லாத கர்மத்தைச் செய்தால்தான் பாவம் வருகிறது!
இதை இன்றைய பகுத்தறிவு வாதிகளும் பொதுவாகப் படித்தவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தத் தொழில் செய்தாலும் பரவாயில்லை; 'செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்' என்பதெல்லாம் இன்றைய கொள்கைகள்!
டாக்டர், வக்கீல் தொழில் சேவையா, சுரண்டலா?
ஒரு காலத்தில் டாக்டர், வக்கீல், இஞ்சினீயர் போன்ற தொழில்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தனர். பொதுவாக சமூகத்தில் செல்வாக்குமிக்கதாக இவை கருதப்பட்டன. ஆனால், சில சமயப்பெரியவர்கள் இத்தொழில்களை பாவம் மிக்கதாகவே கருதினார்கள்! ஏதோ துன்பத்தில் உள்ளவர்கள்தான் டாக்டர்களையும் வக்கீல்களையும் நாடுகிறார்கள். அவர்களிடம் பணம் சுரண்டித்தானே இவர்கள் "சேவை" செய்கிறார்கள்? இஞ்சினீயர்களோ, முன்னேற்றம் என்றபெயரில் மரங்களை வெட்டுகிறார்கள், குளம் குட்டைகளைத் தூர்க்கிறார்கள், ஓடும் நதிகளைத் தடுக்கிறார்கள்- எல்லாம் இயற்கைக்கு ஊறு செய்யும் செயல்கள்! பாவம் சேராமல் புண்ணியமா வரும் ?
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் வக்கீல்களிடமிருந்தும், டாக்டர்களிடமிருந்தும் எதையும் வாங்கிக்கொள்ளமாட்டார்! பிறருடைய கஷ்டத்தை வைத்து காசு சம்பாதிப்பவர்கள் இவர்கள் என்பது அவர் கருத்து!
50வருஷங்களுக்கு முன்பு வரையில் டாகடர்களிடமும் வக்கீல்களிடமும் இன்றைக்கு இருப்பது போன்ற வியாபார புத்தி இருந்ததில்லை. எனக்கு சில டாக்டர்களிடமும் வக்கில்களிடமும் பழக்கம் இருந்தது. நான் பார்த்த வரையில் அவர்கள் ஏதோ ஒரு சுயக் கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். நான் இருந்த ஊரில் எந்த டாக்டரும் கை நீட்டி காசுவங்கியதை நான் பார்த்ததில்லை! குடும்ப டாக்டர் என்று இருப்பார்.கன்ஸல்டேஷன் என்று கட்டணமும் வாங்கமாட்டர்கள். உடலைப் பார்த்து எழுதிக் கொடுப்பார்கள். கம்பவுண்டர் என்று இருப்பார், அவர் மருந்தைக் கொடுப்பார். நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொள்வார். மறுபடியும் போகும்போது நாம் கொடுப்பதை வரவு வைத்துக் கொள்வார். உடனுக்குடன் காசு கொடுத்தால்தான் மருந்து என்ற நிலையை நான் பார்த்ததில்லை. இன்று மருத்துவம் சேவை, தொழில், வியாபாரம் என்ற நிலைகளைத் தாண்டி பகல் கொள்ளை யாகிவிட்டது.
இன்னும் ஒன்றையும் கவனித்தேன். டாக்டர்களுக்கும் வக்கீல்களுக்கும் அவர்கள் துறையின் சிறுமை தெரிந்தே இருந்தது! அவர்களில் பலரும் ஏதோ உபாஸனை, பூஜை என்று வைத்துக்கொண்டிருந்தார்கள்.-பரிஹாரம் தேடிக்கொண்டார்கள்! இதை அறிந்துதான் செய்தார்களா என்பது தெரியாது!
தொழில், கர்மம், பாவம்!
இரண்டு விஷயங்களைச் சொல்லவேண்டும்
என் கொள்ளுத்தாத்தா க்ராமத்தில் இருந்தவர், ஏதோ உபாஸனை வைத்திருந்தார். மணி- மன்த்ரம்- ஔஷதம் என்று பார்ப்பாராம். பொதுவாக மருந்து கொடுப்பார். சிலரை ஏதோ ஜபம் செய்யச்சொல்வார். சிலருக்காக- மன்த்ரங்கள் வாயில் நுழையாதவர்களுக்காக -தாமே ஜபமும் செய்வார், பூஜை செய்து விபூதியும் கொடுப்பார். ஆனால் , பிராமணர்கள் வந்துவிட்டால், அவருக்கு உதறல்! முதலில் ஜாதகம் கொண்டுவரச் சொல்லிப் பார்ப்பாராம். வந்தது கர்ம வியாதி இல்லை என்று தெரிந்தால்தான் .மருந்து கொடுப்பாராம். இல்லையென்றால் " அப்பா, இது கர்மத்தினால் வந்த வியாதி. இதில் நான் தலையிட முடியாது; ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் காட்டி பரிகாரம் தேடிக்கொள் " என்று சொல்லிவிடுவாராம்! பிறர் கர்மத்தில் தலையிடுவது என்றால் அவ்வளவு பயம்! அவர் செய்த வைத்தியத்திற்குக் காசு வாங்கியது இல்லை! காசுவாங்குவதும் கர்மத்தை ஏற்பதுதான்! கஷ்ட ஜீவனம்தான்.இன்று கர்மத்திற்கு பயப்படுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?
இன்னொருவர் எனக்குத் தெரிந்த வக்கீல். ஜில்லா கோர்ட்டில் பிராக்டீஸ். முப்பது வருஷங்களுக்குமேல் ப்ராக்டீஸ் செய்தும் அப்படியொன்றும் வருமானம் இல்லை. சிரமப்பட்டுத்தான் ஜீவனம். ஆனால் மனிதன் கெட்டிக்காரர். அவர் தொழிலில் தீவிரம் காட்டியதாகவே தெரியவில்லை. ஒருமுறை நானே அவரிடம் கேட்டேன்.அவர் சொன்ன பதில்:
ஆமாம்! இது என்ன தொழில்! கேஸ், கேஸ் என்று வருகிறார்கள் பாதிப்பேர் புளுகுவார்கள். முதலில் இவன் சொல்வது உண்மைதானா என்று பார்க்கவேண்டும். இவன் பக்கம் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சில விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது. குடும்பத் தகறாறு என்றால் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இன்று சண்டை போடுவார்கள்; நாள் விட்டு சமாதானமாகப் போக இடமிருக்கிறது. அண்ணன் -தம்பி சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள் . அவர்கள் உடலில் ஓடுவது ஒரே ரத்தம். கொஞ்சமாவது புத்தி வேண்டாமா? சரி, அவர்கள்தான் புத்திகெட்டவர்கள் என்றால், நம் புத்தி எங்கே போகிறது? நமக்கும் பிள்ளை-குட்டி இருக்கிறது. அண்ணன்- தம்பி விவகாரத்தை நாம் பெரிது படுத்தலாமா?
புருஷன்- பெண்டாட்டி விவகாரமும் இப்படிதான். நம்மால் முடிந்தால் சமாதானம் செய்துவைக்க வேண்டும். கோர்ட்,கச்சேரி என்று போனால், ஒவ்வொரு வக்கீலும் சிறிய விஷயத்தையும் பெரிது படுத்துவான்; குடும்ப விஷயங்கள் தெருவுக்கு வரும். சமாதானத்திற்கான கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் போய்விடும். குடும்பப் பெரியவர்களின் பெயர் கெடும். காசுக்காக கேசை நீட்டுவான். வக்கீல் என்பதை விடு- இதெல்லாம் ஒரு பண்புள்ள மனிதன் செய்யத் தகுந்த செயலா? காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதா? நான் இதுவரை ஒரு விவாகரத்து கேஸ்கூட தொட்டதில்லை!
இப்பொழுது பார் (சொன்னது 1974ல்)- யார் யாரோ முன்சிஃப், மாஜிஸ்டிரேட் என்று வருகிறான். ஒரு பண்பு இல்லை; சட்டம் சரியாகத் தெரிவதில்லை; நாம் எடுத்துச் சொன்னால் கோபம் வருகிறது-வன்மம் வைத்துக் கொள்கிறான். இந்த மாதிரி சின்ன ஊரில் கட்சிக்காரன் ஜாதி என்ன வென்று பார்க்கிறான்,.இவர்கள் எதிரில் போய் நின்று நாம் பேசவேண்டும்!ஏதோ என் கர்மம்- இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டேன். தொழில் தர்மம் என்று சொல்லி ஏன் அதர்மத்தைச் செய்து பாவத்தைக் கட்டிக்கொள்ள வேணும்? ஏதோ காலக்ஷேபம் நடந்தால் சரி.
இந்த 40 வருஷங்களில் நிலமை மேலும் மோசமாகியிருக்கிறது.
ஹிந்த் ஸ்வராஜ்
வக்கீல்கள், ஆங்கிலேய வைத்தியர்கள் இவர்கள் இந்தியாவை எப்படிக் கெடுத்தார்கள் என்பதை காந்திஜி 1908ல் எழுதிய 'ஹிந்த் ஸ்வராஜ்" என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். ஆனால் இன்றைய நிலையில் எல்லாத் தொழில்களுமே இந்தியாவை மேன்மேலும் மேலை நாட்டு மோகத்திற்கு அடிமையாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன. நியாயம், தர்மம், பாவ-புண்ணியம் என்ற எண்ணங்களுக்கு இடமில்லை. நமது சட்டம், பொருளாதாரம், அரசியல், நிர்வாகம் , மருத்துவம் என்ற எந்தத் துறையும், இவை தார்மீகக் கருத்துக்கள் என்பதால் இவற்றை ஏற்பதில்லை.
ஆனால் பாவ-புண்ணியம், கர்மம், கர்மவினை என்ற இவை காலத்தால் அழிவதில்லை. அரசியல் சட்டத்தால் இவற்றை அசைக்க முடியாது. மனிதன் "அறம் பாவமென்னும் அருங்கயிற்றால் " கட்டப்படுகிறான் என்கிறார் மாணிக்க வாசகர். பாவமோ, புண்ணியமோ நாம் செய்யும் கர்மத்தால் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இது மிகவும் சூக்ஷ்மமான விஷயம். गहना कर्मणो गतिः "கஹனா கர்மணோ கதி:" என்கிறார் பகவான், கீதையில். (4.17) [கர்மத்தின் போக்கு ஆழமானது, எளிதில் அறியமுடியாதது.)
இன்றைய இளைஞர்கள் பொருளாதார ஆதாயம் ஒன்றை மட்டுமே கருதி தம் தொழிலையோ, துறையையோ தேர்ந்தெடுக்கிறார்கள். பல பொது தர்மங்கள் அருகியும்,அழிந்தும் வருவதோடு, தனி மனித வாழ்விலும் பாவங்கள் சேர்கின்றன. இது எங்கு போய் நிற்கும் என்று யாரே சொல்ல வியலும்?
The world is too much with us; late and soon,
Getting and spending, we lay waste our powers;—
Little we see in Nature that is ours;
We have given our hearts away, a sordid boon!
This Sea that bares her bosom to the moon;
The winds that will be howling at all hours,
And are up-gathered now like sleeping flowers;
For this, for everything, we are out of tune;
It moves us not.
William Wordsworth.
No comments:
Post a Comment