19. பரிபாடல் -9
பரங்குன்றத்துப் பரமன்
இது பல வருஷங்களுக்குமுன் நடந்த சமாசாரம்.
எங்கள் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்துவந்தாள். நம் பண்டிகை, பூஜை ஆகியவற்றைப் பார்த்தோ என்னவோ தெரியவில்லை- ஒருநாள் "ஐயா, எனக்கும் வூட்லெ வெச்சுக் கும்பிட சாமிபடம் எதுனாச்சும் தா " என்றாள்.அவள் அடுத்துச் சொன்னதுதான் அபாரம்! "ஆனால் ரெண்டு பொண்ஜாதி வெச்ச சாமிபடம் தராதே" என்று ஒரு போடு போட்டாளே பார்க்கணும்!
நம் சாமிகள் எல்லோருமே 'இரண்டு பொண்ஜாதி ' வகையினர்தாம் ! சிவனுக்கு இடையில் உமை, தலையில் கங்கை; பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி; க்ருஷ்ணருக்கு, ருக்மிணி, சத்யபாமா; இதுதவிர, ராதா எக்ஸ்ட்ரா சமாசாரம். அப்பனும் மாமனும் இப்படி இருந்தால் முருகன் சும்மா இருப்பானா? அவனுக்கும் வள்ளி, தெய்வானை என்று இரண்டுபேர்! நம் பெரியவர்கள் பிள்ளையாரையும் விட்டு வைக்கவில்லை- சித்தி, புத்தி என்று அவருக்கும் இரண்டு கற்பித்து விட்டார்கள்! தப்பியது ராமர் ஒருவர்தான்! ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி வ்ரதுடே என்று த்யாகராஜஸ்வாமிகள் பாடியபடி, அவர் மட்டும் ஏகபத்னி விரதம். ஆனால் நான் புலவனாக இருந்தால் அவரையும் விட மாட்டேன்! ராமன் தர்மத்தின் உருவல்லவா- ராமோ விக்ரஹவான் தர்ம:! என்றும் தர்மத்தை விடாதவர் என்றால், தர்மத்தையும் ஒரு பத்னியாகச் சொல்லலாம் அல்லவா? கடைசியில் அதுதானே நடந்தது? ராஜதர்மத்திற்காக, பத்னியையும் அல்லவா த்யாகம் செய்தார்!
தெய்வங்களுக்கு இவ்விதம் பத்னிகளைக் கற்பித்தது தத்துவத்தின் ஒருவித விளக்கமாகும். தெய்வத்தின் சக்தியே இவ்வாறு உருவகப்படுத்தப் படுகிறது. முருகனின் இச்சாசக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி என்பவையே வள்ளி, தெய்வானை,வேல் என உருவகப்படுத்தப் படுகின்றன. இதையெல்லாம் க்ருபானந்த வாரியார் ஸ்வாமிகள் நன்றாக விளக்கியிருக்கிறார்.
ஆனால் புலவர்கள் இதைவைத்து சொல்லாட்டம் ஆடுவார்கள்! அதுவும் தமிழ் இலக்கண மரபில் தோய்ந்த சங்கப் புலவர்கள் சும்மா விடுவார்களா? முருகன் முதலில் தெய்வானையை மணந்து கொள்கிறான். தமிழ் இலக்கண மரபுப்படி, இது கற்பு மணம். அடுத்து வள்ளியை ஏற்பது களவுமணம். இதில் எது சுவாரஸ்யமானது என்பது பற்றிப் பாடுகிறார் குன்றம் பூதனார் என்ற புலவர். வள்ளியை மணந்ததால் தெய்வானை கோபிக்கிறாள் என்றும் , தெய்வானை-வள்ளி கூட்டத்தினரிடையே பூசல் என்றும் இவ்வாறு கற்பனை செய்துகொண்டு போகிறார் புலவர். நல்ல இலக்கியமாக இருந்தாலும், எனக்கு இது அவ்வளவாக ரசிக்கவில்லை.சற்று விரசமாகவே படுகிறது.
தெய்வங்களுக்குப் பத்தினிகள், இரண்டு தேவிகள் என்பதெல்லாம் மிகவும் நாசூக்காகக் கையாளவேண்டிய விஷயங்கள்.சிவனைப் பற்றிச் சொல்லும்போது, மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருச்சாழலில் எழுதுகிறார்:
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடி
சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திளனேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.
சிவபெருமான் கங்கையின் வேகத்தைத் தாங்கித் தடுத்திராவிட்டால், இந்த பூமி அதைத் தாங்கியிராது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! இதுவே அருளாளர்களின் வாக்கிற்கும் எனைய புலவர்களீன் சொல்லுக்கும் உள்ள வித்தியாசம். அதனால்தான் பரிபாடலில் உள்ள பாடல்கள் பெரிய இலக்கியமானாலும் ஒரு தெய்வீக அந்தஸ்தைப் பெறவில்லை. படிக்கிறோமே தவிற பாராயணம் செய்வதில்லை !
அதனால்,இந்தப் பாடலில் வரும் அத்தகைய பகுதிகளை விட்டு, முருகன் பற்றிய விஷயங்களை மட்டுமே பார்ப்போம்.
ஆகாயத்திலிருந்து கீழ்விழும் கங்கையை சிவபெருமான் சடையில் தாங்குவது! ராஜா ரவி வர்மா சித்திரம்.
முருகன் அவதாரம்
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமைஉயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப 5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
இந்த்ரனால் காக்கப்படும் இமயமலை, இந்தப் பெரிய நிலம் அசையாதபடி, வடதிசையில் ஓங்கி நிற்கிறது. அதன் சிகரத்தில், தெய்வ முனிவர் அறுவரும் உடன்பட, மதிப்புடைய கார்த்திகைப் பெண்டிர் அறுவரிடத்தே, ஆகாய கங்கையைப் பூப்போலச் சடையிலே தாங்கும் கங்காதரராகிய நீலகண்டப் பெருமானுடைய குமாரனாகப் பிறந்தோய்!
பரங்குன்றில் போட்டிகள்!
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70
அடும் போராள நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் 75
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் 75
செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்
படாகை நின்றன்று
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்
படாகை நின்றன்று
கொடிய சூரபன்மனாகிய மாமரத்தை வீழ்த்திய வேலையுடைய போர் வீரனே! உனக்குரிய பரங்குன்றத்தில், ஆடல் பயின்றவர்களைப் பிற ஆடல்வல்லவர்கள் வெல்கிறார்கள்; பாடல் பயின்றோரைப் பிற பாடல் வல்லார் வெல்கிறார்கள்; சூதாடுவதில் வல்லவர்களை சூதில்வல்ல வேறு சிலர் வெல்கிறார்கள். கல்வி பயின்றவர்களும் இவ்வாறே தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெல்கின்றனர். இத்தகைய வெற்றிகளால் புகழ் பரவ, தடாகம் போன்ற சுனையின் அருகில் உனது கொடி நின்றது.
எமது வேண்டுதல்
மேஎ எஃகினவை
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை 80
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை 80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்தொறும் பொலிந்தே 85
நயத் தகு மரபின் வியத் தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்தொறும் பொலிந்தே 85
வியக்கத்த உயர்குணங்களை உடைய குமரனே! நீ உனக்குப் பொருத்தமான வேலினை உடையவன். வெற்றி பெற்று உயரப் பறக்கவிட்ட கொடியால் உன் புகழ் பரவிற்று. உன்னுடைய கற்பு தேவியரின் அன்பை விரும்புகின்றாய்! உன்னிடம் அன்புகொண்ட நாம், உன் திருவடியை வணங்கும் செயல் நாள்தோறும் வளர்ந்து பயன் தந்து சிறக்க வேண்டும் என்று உன்னைத் தலைவணங்கி வாழ்த்தி வேண்டுகின்றோம். அவ்வாறே அருள்வாயாக.
No comments:
Post a Comment