Tuesday, 27 September 2016

73. அவசியமான கல்வி !


73. அவசியமான கல்வி !

கல்வியின்  அவசியத்தைப் பற்றி யாருக்கும்  சந்தேகமே இல்லை.  ஆனால் எத்தகைய கல்வி அவசியம் என்பதைப் பற்றி  எங்கும் கருத்தொருமை  இல்லை!

பயனில்லாத கல்வி !


இன்று வயிற்றுப் பிழைப்புக்கு என்று ஒருவித கல்வி கற்கிறோம். பின்பு அது வாழ்க்கைக்கு உபயோகமாக இல்லை என்றும் சொல்கிறோம். இதை   "bread-winning V. man-making education "  என்று சுருக்கமாகச் சொன்னார்  ஸ்வாமி விவேகானந்தர்.  இது மெக்காலே பிரபு நமக்கு விட்டுச் சென்ற சொத்து. இதை நமது சுதந்திர இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்!  எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா நிலைகளிலும் இதையே  பின்பற்றி வருகிறார்கள். கல்வி அரசினரால் கட்டுப்படுத்தப்பட்ட துறை என்பதால்  இதில் நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது ! சுதந்திர இந்தியாவில் பல கல்விக் கமிஷன்கள் வந்து அட்ரஸே இல்லாமல் போய்விட்டன !  சோறுக்காகக் கற்கும் கல்விமுறை மட்டும் நீடிக்கிறது. ஆனால், பரிதாபம்- அதன் சோறுபோடும் தன்மையும் குறைந்துவருகிறது. நமது  பட்டதாரிகளில்  பாதிக்குமேல் வேலைக்குத் தகுதியில்லை என்று ஆகிவிட்டது.  This is the certificate of universal uselessness of our education system and general  incompetence of our educated class!
ஆனால், இந்த சர்க்காருக்கு வாழ்க்கைப்பட்ட  நாம், இந்த முருங்கை மரத்தில் ஏறமாட்டோம் என்று சொல்ல முடியுமா?

வாழ்க்கைக்குக்  கல்வி !

வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி என்பது என்ன? இதற்கு வாழ்க்கை என்பது என்ன, அதன் குறிக்கோள் என்ன , அதை அடையும் வழி என்ன போன்ற கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.  இதைத்தான் மதங்கள் செய்துவந்தன. இன்று இந்த நிலையைப்  பொதுவாழ்க்கையில் ஆதரிப்பவர்  இல்லை. பிறமதங்கள் தங்கள் கருத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகின்றன. அதற்கேற்ற நிதி மற்றும் பிற வசதிகளை அவை பெருக்கிக்கொண்டுள்ளன. நமது மதமோ சில சாமியார்களையும், சில மடங்களையும், குறுகிய கொள்கை வாதங்களையும் . புதிய  இயக்கங்களையும் நம்பியே  இருக்கிறது. 

யார் எப்படி இருந்தாலும், வைதிக மரபில் வந்தவர்களுக்காவது சில அடிப்படை உண்மைகள் தெரியவேண்டும்.  அதைச் சொல்லும் நபர்களும் அதற்கான வசதிகளும் இருக்கவேண்டும். இதை நாம் செய்யவில்லை. ஹிந்து மதத்தின் எந்தப் பிரிவும் இதைச்  சரியாகச் செய்யவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைப்  பற்றியே நிற்கின்றன. 

நாம் இந்த விஷயத்தில்  அரசினர் நடத்தும் கல்விக் கூத்தையோ, அன்றி  சில சாமியார்களையுமோ அல்லது அமைப்புகளையுமோ நம்பிப் பயனில்லை. வேறு வழி தேடவேண்டும்.

அறத்திற்கு அரசன்  ஆதரவு !

நமது  மரபில் "ஸ்வாத்யாயம் " என்ற கருத்து இருக்கிறது. ஒவ்வொருவரும் சுயமாகச் சிலவற்றைக் கற்கவேண்டும். சுயமாகச் சில முறைகளைப் பின்பற்றவேண்டும். இதை "பஞ்ச யஜ்ஞம் " என்பர். இந்த இரண்டும் முக்காலும் இன்று நடைமுறையில் இல்லை.  இவற்றைச் செயல்படுத்தவோ,மேற்பார்வையிடவோ  எந்த அதிகாரியோ அமைப்போ நம்மிடையே இல்லை!   ஒருகாலத்தில் இதையெல்லாம் நமது ராஜாக்களின் செங்கோல்  செய்தது !  திருவள்ளுவர் சொல்கிறார் :

அந்தணர் நூற்கும் அறத்திற்கும்  ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                                                     543

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                                                     560.

இன்று இத்தகைய க்ஷத்ரிய ராஜாக்கள் இல்லை. நாமாகவே நம்மளவில் ஏதாவது செய்தால் தான்  உண்டு. 

ஸ்வாத்யாயம்

 நாம் ஒவ்வொருவரும் அவசியமாகக் கற்க வேண்டியதே "ஸ்வாத்யாயத்தில்"  அடங்கும். இதன்படி, வைதிக மரபில் வந்தவர்கள் கற்கவேண்டியது / தினமும் பாராயணம் செய்யவேண்டியது என பெரியோர்கள் வகுத்தவை  கீழ்க்கண்ட ஐந்து  நூல்கள் ::

  • புருஷ ஸூக்தம்
  • ஸ்ரீ  ருத்ரம்
  • அவரவர் வேத ஶாகையிலுள்ள உபனிஷத்துக்கள்
  • ஸ்ரீமத் பகவத் கீதை
  • ஸ்ரீ விஷ்ணு  ஸஹஸ்ர நாமம்.
புருஷஸூக்தம்

புருஷ ஸூக்தம் எல்லா வேதங்களிலும்  பயிலப்படுகிறது. எனவே இதை அனைத்து வேதங்களின் சாரம், அத்தியாவசியமான அம்ஸம்  எனலாம். இது  பகவானாகிய புருஷோத்தமனின் மஹிமையைச் சொல்கிறது. எப்படி இந்த ப்ரபஞ்சம் பகவானின்  உருவமாக இருக்கிறது, இதற்கும் நமக்கும்  உள்ள தொடர்பு என்ன. இந்த பகவானை எப்படி ஆராதிப்பது  போன்ற விஷயங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது. நாமரூபமில்லாத பகவான் பலவித நாமரூபங்களுடன்  இந்த உலகாக  இருக்கிறார். இது நமக்காக  அவர் செய்த த்யாகம் ; எனவே நாமும் அவரைத்  தியாகத்தினால்தான்  ஆராதிக்க வேண்டும்; நாம் செய்யும் யாக-யஜ்ஞங்களின் பொருளும் பயனும் இதுவே என்பவை இதன் முக்கியக் கருத்துக்கள். நாம் எந்த தெய்வத்தை பூஜித்தாலும் அதற்கான பொதுவான மந்திரங்கள் இங்கு வருகின்றன ! இதை முறையாகக் கற்றுக்கொண்டால். இதைவைத்தே நாம் எல்லா பூஜைகளையும் செய்யலாம் !

ஸ்ரீ  ருத்ரம்



ஸ்ரீருத்ரம் யஜுர்வேதத்தின் ஹ்ருதயமாகக் கருதப்படுகிறது. இதை புருஷஸூக்தத்தின் விளக்கமாகக் கருதலாம். பகவான் எப்படி இந்த உலகில் எல்லாமாகவும் இருக்கிறார் என்பதை  இது விளக்குகிறது. இப்படி இந்த உலகையே பகவான் மயமாகக் கருதுவதால், நமக்குப் பிறவற்றிலிருந்து வரும் பயமும், தீமையும்,, வெறுப்பும் நீங்கிவிடும்! இங்கு சிவபிரானின் முன்னூறு அழகான நாமங்கள் வருகின்றன . சிவ உபாஸனைக்கு ஆதாரமான பஞ்சாக்ஷரி மந்திரம் இங்குதான் வருகிறது. இதைத்தொடர்ந்து  நாம் பகவானிடம் விடுக்கும் வேண்டுகோள் பகுதி வருகிறது. "இக பர ஸௌபாக்யம் " வேண்டாதார் யார் ? இதை வேண்டிப் பெறுவதற்கான மந்திரங்கள் இங்கு வருகின்றன !




உபனிஷதம்



 நசிகேதஸுக்கு எமதர்மன் உபதேசம்- கதா உபனிஷதம். படம் : எஸ்.ராஜம்

நாம் எந்த நிலையில் இருந்தாலும் , இந்த உலகும் அதிலுள்ள பொருள்களும்  ஒருகாலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்துவிடும் ! அப்போது  "நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே சென்று அடையவேண்டும் -[ பரா அயனம் = பராயணம் ] என்ற கேள்வி எழும் ! ஆனால் இதற்கு  விடையை இங்கு வாழும் போதே  [இஹைவ ] தெரிந்துகொள்ள வேண்டும்.  நாம் வாழும் உலக வாழ்க்கையே அதற்கும் வழிவகுக்க வேண்டும். இதைத்தெரிந்துகொள்ள உதவும் ஒரே சாதனம் உபனிஷதங்களே ! [ Knowing which we know everything worth knowing ]

"Paths of glory lead but to the grave" என்று   எழுதினார்  Thomas Gray. But is it the end or is there anything beyond it ? This is the crux of religion. The secret of life depends upon what comes after it! Alfred , Lord Tennyson wrote in "Crossing the Bar" :



Twilight and evening bell, 
      And after that the dark! 
And may there be no sadness of farewell, 
      When I embark; 

   For tho' from out our bourne of Time and Place 
      The flood may bear me far, 
I hope to see my Pilot face to face 
      When I have crost the bar.




But should we wait, till we cross the bar, to meet our Pilot? No, says Hinduism, in its Upanishads. We can meet Him here itself : ihaiva  இஹைவ = இங்கேயே !


நமது மதம் நமக்கு அளிக்கும் மிகப் பெரிய நம்பிக்கை இதுதான்: நமது வாழ்க்கை  பௌதிகமயமானது மட்டும் அல்ல. மனிதன் வெறும் மனிதனல்ல- உடலல்ல ! அவனுக்குள், இந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு உயர்ந்த பொருள் உறைந்திருக்கிறது! அதைக் கண்டுகொள்வதே வாழ்க்கையின் நோக்கம்.  இதை நமக்குத் தெளிவாகச் சொல்வது உபனிஷதம் ஒன்றுதான் !
உபனிஷதங்கள் 108 என்று ஒரு கணக்கு உண்டு. ஒவ்வொரு வேதத்திலும் உபனிஷதப் பகுதிகள் வருகின்றன. இவற்றில் பத்து முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன, அவற்றிற்கே  ஆதி சங்கரர் உரை எழுதினார். ஆனால் வேறு சிலவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கிறார்.  இவற்றையெல்லாம் கற்கவேண்டியதுதான் ! ஆனால் ஸ்வாத்யாயம் என்று வந்தால் முதலில் அவரவர் வேதத்திலுள்ள உபனிஷதங்களைப்  பயிலவேண்டும்.  முறையாகப் பயில வசதியில்லாதவர்கள் அவற்றின் அர்த்தத்தையாவது தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு வெளிநாட்டினர் எழுதிய புத்தகங்களையோ, வேதமரபில் வராத பிறர் எழுதியவற்றையோ  படிக்கலாகாது. 

ஐந்து உபனிஷதங்கள்

தமிழ் நாட்டில்  க்ருஷ்ண யஜுர்வேதம் பின்பற்றுபவர்களே அதிகம். இதில் வரும் உபனிஷதங்கள்:

  • கதா
  • கைவல்யம்
  • தைத்திரியம்
  • ஶ்வேதாஶ்வதரம்
  • நாராயணம்,

உபனிஷத்துக்கள்  ஜீவ- (ஆத்ம ) ப்ரஹ்ம ஐக்யத்தையே  கூறுகின்றன. இதையே பல நிலைகளிலிருந்து விளக்குகின்றன. இதன் முடிந்த முடிவாக நான்கு மஹாவாக்யங்களைக் கொள்கிறோம். ஓவ்வொன்றும் ஒரு வேதத்திலிருந்து வந்தது. 

  •  
    प्रज्ञानम् ब्रह्म
    ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம  -  ஐதரேய உபனிஷத்-  ருக்வேதம்.
  • अहम् ब्रह्मास्मि
    அஹம் ப்ரஹ்மாஸ்மி -   ப்ருஹதாரண்ய உபனிஷத்- ஶுக்ல யஜுர்வேதம்
  • तत् त्वम् असि
    தத் த்வம் அஸி  -  சாந்தோக்ய உபனிஷதம்-  சாமவேதம்
  • अयम् आत्मा ब्रह्म
    அயம் ஆத்ம ப்ரஹ்ம - மாண்டூக்யம் -  அதர்வண வேதம்.

இவற்றை மந்திரம் போல உருப்போடுவதால் ஒருபயனுமில்லை!  இவற்றைப் பற்றித் தீர்க்கமாகச்  சிந்தித்து, அதற்கான ஒழுக்கங்களையும்  பயிற்சிகளையும் தகுந்த ஆசார்யரின் துணையுடன் மேற்கொண்டு இவற்றின் உண்மையை   சொந்தமாக அநுபவத்தில் உணர்ந்து ( அபரோக்ஷ அனுபூதி )
 அதன் படி ஒழுகவேண்டும் இதுவே ஞானம் என்பது- புத்தக அறிவோ, கேள்வி விளக்கமோ அல்ல! 

 இவ்வாறு உபனிஷதங்களைப் பயில நாம் ஒரு பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும்.  அதனால் தான் இதை வேதத்தின் இறுதிப் பகுதியாக [ வேதாந்தம் ] வைத்தார்கள். சும்மா பொழுதுபோக்கிற்காக ஏ/சி ரூமில்  ஸோஃபாவில் சாய்ந்து  படிப்பது அல்ல ! ஆயிரம் லெக்சர் கேட்பதால் இந்த ஞானம் வராது : ந அயம் ஆத்மா ப்ரவசனேன லப்ய: ந பஹுதா ஶ்ருதேன .

ஆனாலும் இதில் என்ன இருக்கிறது என்பதை இந்த மரபில் வந்த நாம் ஒவ்வொருவரும்  தெரிந்துகொள்வது அவசியம். ஒரு பத்து  மந்திரமாவது  தகுந்தவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள  வேண்டும்.  இந்த மந்திரத்தால் மாங்காய் எதுவும் விழாது; மனது செம்மைப்படும். 

பகவத் கீதை : வைதிக  "பை பாஸ் " !

பகவத் கீதையைப் பற்றி  புதிதாக என்ன சொல்ல முடியும்? நமது வைதிக மதத்தின் திரண்ட சாரமாக இருப்பது கீதை. பொதுவாக உபனிஷதங்களையே வேதாந்தம் என்று சொல்லுவர். ஆனால் அதற்கும் மேலே இருப்பது கீதை.


வேதத்தின் முதல் பகுதியில் கர்ம யோகம் வருகிறது. இதன்வாயிலாக ஒருவன் சித்தசுத்தி பெறவேண்டும். இந்த நிலையில் ( சித்த சுத்தி பெற்றபின் ) அவன் ஞானயோகத்திற்குத் தகுதிபெறுகிறான். இதற்கான வழியைச் சொல்வது வேதத்தின் பின் பகுதியாகிய  உபனிஷதம். காலப்போக்கில்  இந்த முறை தவறிப்போனது. அதனால் பகவான் கீதையில் புதிய வழியைக் காட்டினார்.  கர்மம். ஞானம் ஆகியவற்றை  "யோகம். சாங்க்யம் " என்ற பெயரில் பகவான் கீதையில் சொல்கிறார். இவை பழைய வழிகள்  "புரா ப்ரோக்தா " என்று பகவானே சொல்கிறார். உடலெடுத்தவன் கர்மம் செய்வதைத் தவிற்க முடியாது; ஞானமும் அவசியம்- ஞானமில்லாமல் செய்யும் கர்மம் அனர்த்தம் விளைக்கும்.. ஆனால்  எது உண்மையான  கர்மம், எது ஞானம் என்பதை விளக்கியபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு  பகவானையே சரணமடைவாயாக என்ற அனன்ய பக்தியை இறுதி உபதேசமாகக் கூறுகிறார்.  இது பகவான் புரிந்த "வைதிக பைபாஸ் " ஆபரேஷனாகும். வைதிக மதத்தின் சாரத்தை இங்கே பிழிந்து தந்திருக்கிறார். அதனாலேயே கீதை  "உபனிஷதம், ப்ரஹ்ம வித்தை, யோக  ஶாஸ்திரம் " என மதிக்கப்படுகிறது. கீதையை உபதேசித்தது கி.மு.3100க்குமுன். பிறகு வந்த 5000 ஆண்டுகளில் கீதைக்கு மேலாகவோ அல்லது அதில் இல்லாததையோ உலகில் யாரும் எங்கும் சொல்லமுடியவில்லை !

விஷ்ணு  ஸஹஸ்ர நாமம்.



manuscript cover- 1690 AD


புருஷ ஸூக்தம், ஸ்ரீ ருத்ரம் ஆகியவற்றில் வருவது போலவே கீதையிலும்  பகவான், தானே இந்த உலகமாக ஆகியிருக்கிறார், இந்த உலகை வ்யாபித்திருக்கிறார், ஆனால் இந்த உலகில் எதிலும் அவர் அடங்கவில்லை என்பதை விளக்குகிறார். இப்படி உள்ள மஹத்தான பொருளை நாம் எப்படி மனதால் கிரஹிக்க முடியும் ?  இந்த மஹத்தான ப்ரஹ்மம் நமக்காக பகவானாக- அவதாரமாக வந்தது ! ஒரு நாமம், ஒர் உருவம் இல்லாத பரம்பொருள்  நாம் மனதினால் சிந்திக்கவும் வாயினால் பாடவும் வசதியாக  ஆயிரம் நாமங்கள்  கொண்டு விளங்குகிறது ! இதை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் விளக்குகிறது.


ருத்ரன், விஷ்ணு என்ற பெயர்களால் இவை ஏதோ குட்டி தெய்வங்கள், மும்மூர்த்திகளின்   அம்சம் என்று நினைக்கக் கூடாது. இவை பரம்பொருளின் பெயர்கள். இரண்டும் ஒன்றே.  வேறுபாடுகள் பின்னால்  கற்பிக்கப்பட்டவை. வேதத்தில் நாம்  காண்பது பல பெயர்களில் வரும் ஒரே பரம்பொருள் :  ஏகம் ஸத்; விப்ரா பஹுதா வதந்தி.

சிவ- விஷ்ணு அபேதம் 


வைதிக வழியில் வந்த ஸ்மார்த்தர்களுக்கு சிவ-விஷ்ணு பேதம் இல்லை. விஷ்ணு ஸஹஸ்ர  நாமத்தில் முதல் நாமமே "விஶ்வம் " என்பது. இது காசியில் சிவனின்  பெயர். எந்த ஸ்ரீவைஷ்ணவராவது  'விஶ்வனாதன் ' என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாரா? பின்னால் ஶிவ, ஸ்தாணு என்றெல்லாம நாமங்கள் வருகின்றன. இவை சிவனுக்கே உரிய பெயர்கள். எனவே, விஷ்ணு ஸஹஸ்ர  நாமம் என்றவுடன் , இது ஏதோ வேறு தெய்வத்தைப் பற்றியது என்று எண்ணவேண்டாம். குருவாயூரப்பனைப் பற்றி  ஆயிரம் ஶ்லோகங்களுக்குமேல்  உள்ள ஸ்ரீமந்  நாராயணீயத்தில், கடைசி ஶ்லோகத்தில்  ஸ்ரீ நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனை  "விஶ்வனாதா" என்றே  அழைக்கிறார். [ "அஞ்ஞாத்வா தே மஹத்வம் .......விஶ்வனாத க்ஷமேதா : " ] அவரும் ஸ்மார்த்தரே !


நம்மில் பலரும் நமது மதவிஷயங்களைப் பற்றி பல புத்தகங்கள் படித்திருக்கலாம்.  ஆனால் இங்கு சொன்ன ஐந்து புத்தகங்களே நமக்கு ஆதாரமானவை. இவற்றில் இல்லாதது வேறு எதிலும் இல்லை. அறிந்துகொள்ளவேண்டிய அவசியமான விஷயங்கள், அவற்றை நடைமுறையில் அனுசரிக்கும் முறை  ஆகிய இரண்டையும்  இந்த ஐந்து புத்தகங்களிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். இவற்றை  அர்த்தத்துடன்  நன்றாகத் தெரிந்துகொண்டால்  இன்றைய  விஞ்ஞான  கண்டுபிடிப்புக்களைக் கண்டு நாம் மயங்கமாட்டோம்.  Astrophysics, Time-Space, Quantum/ particle physics, evolution  ஆகிய எந்தத் துறையும்  நமக்கு மலைப்பைத்  தராது.


இவை எல்லாவற்றிலுமே தமிழில்  வந்த பதிப்புக்களில்  உரையுடன் கூடிய  "அண்ணா " சுப்ரமண்ய  ஐயரின்  புத்தகங்கள் சிறந்தவை.[ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், சென்னை ]  விஷ்ணு  ஸஹஸ்ர நாமத்திற்கு  சி.வே ராதாக்ருஷ்ண சாஸ்திரிகள் உரை சிறந்தது. [அகஸ்தியர் புத்தகசாலை, திருச்சி ]









பொதுவாக  காஞ்சி மஹாபெரியவரின்   "தெய்வத்தின் குரல் " இவை எல்லாவற்றையும் பற்றிய சரியான  விளக்கம் தரும்  அரிய பொக்கிஷமாக உள்ளது. 








குறிப்பு :

'சோறு ' என்பது சாப்பாட்டை மட்டுமே குறிக்கவில்லை.  "சோழ வள நாடு சோறுடைத்து " என்பது சோழ நாட்டின்  [அன்றைய ] நீர் வளம், நில வளம் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை.. அங்கு காவிரியின் இருமருங்கிலும் இருந்த சிவ-விஷ்ணு ஆலயங்கள் மக்களின் ஆன்மீக நலத்திற்கு வழிவகுத்தன. இங்கு சோறு என்பது  மோக்ஷத்திற்கு வழி என்னும் பொருளில் வந்தது ! இன்றைய கல்வியில் இந்த இரண்டுவித   சோற்றுக்குமே கஷ்டம் தான் !




Sunday, 11 September 2016

72. இரு புத்தகங்களின் கதை- 5



72. இரு புத்தகங்களின் கதை-5




காரா  யருள்பெய் கண்ணோக்கால்
கதிர்மாமுகத்தான் முறுவலால்
போரா நின்றார்க் குண்மையுறப்
புகலு மின்சொற் போதத்தான்

-ஸ்ரீ முருகனார்.

பகவான் ஸ்ரீ ரமணரை நம்போன்றவர்கள் புரிந்துகொள்ள முடியாது. நம்மிடையே நம்முடன் ஒருவராக வாழ்ந்தார். ஆனாலும் அவர் நம்போன்று இல்லை!  ஒருமுறை இவரைப்பார்த்த ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் " இது என்ன நினைக்கிறதோ தெரியவில்லையே " என்றார். மனத்தைக் கடந்த நிலையில் நிரந்தரமாக இருந்தவர்; ஆனாலும் நம்முடன் சகஜமாகப் பேசிப் பழகி வந்தார். இது நமக்காக இவர் செய்த த்யாகமாகும். ஒரு சமயத்தில்  தன்னுடைய நிலை "அதி ஆஶ்ரமி " என்று வெளியில் சொல்ல நேர்ந்தது. ஆசிரமத்தில் கடிகாரம் இருக்கும்; எல்லாம் நேரம் தவறாமல் நடக்கும். ஆனாலும் பகவானுக்கு நேரம், காலம் பற்றிய ப்ரக்ஞையே இல்லை என்று இவருடன்  ஸ்வாதீனமாகப் பழகிய தேவராஜமுதலியார் எழுதியிருக்கிறார்.

ரகசிய மில்லாத உபதேசம்


பகவானுடைய உபதேசத்தில் ரகசியம், ஒளிவு-மறைவு, மூடுமந்திரம், தந்திர சாதனை என்று எதுவுமே கிடையாது. பகவான் யாரையும் தன் சீடன் என்று சொன்னதில்லை. யாருக்கும் எந்த தீக்ஷையும் தந்ததில்லை. ஆனால் இவர் பார்வையிலேயே ஆத்மதீபத்தை ஏற்றிவைப்பார். " கண்ணால் பரம் காட்டுவான்", "அண்ணாமலை ரமணன் அன்பர்க்கருள் மாரி கண்ணாலே பெய்யும் கருணைத் திறம் " என்றெல்லாம் பாடுவார் முருகனார். இதை பக்குவிகளே அனுபவித்தனர். யாரையும் சீடன் என்று சொல்லாவிட்டலும், குருவாக இருந்திருக்கிறார்.  இதை ஸ்ரீ ஆர்தர் ஆஸ்போர்ன் அருமையாக விளக்கியிருக்கிறார்.வித்

உண்மையான உபதேசம் பகவான் மவுனமாக நம்மீது செலுத்திய அருள். அவர் சந்நிதியில் 'சும்மா' அமர்ந்திருப்பதே நாம் செய்யவேண்டியது. "மவுனமா வுரையாற் காட்டும் மாபிரம வத்து வாலன் " என்று பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் தமிழில் எழுதினார். This silent influence on the heart is the direct teaching of Bhagavan.  இது புரியாதவர்களுக்கே  வார்த்தைகளினாலான உபதேசம் தேவைப்படும்.

வித்தகத் தொன்னூல் அனைத்தும்  விஞ்சைசேர் நின் மோனப்
புத்தகத்துக்கு ஆன்றோர் புகன்றவுரைப் பாயிரமே

என்று பாடுகிறார் முருகனார் !



பகவானின் உபதேசம் எளிமையானது, நேரடியானது. அதனால் இதை பலசமயங்களில் சாதாரணமாகவே வெளியிட்டிருக்கிறார். இவர் இயற்றிய ஸ்துதி நூல்களில் கூட உபதேசம் இடம்பெறும் . அருணாசல தீப தர்சன தத்துவத்தை விளக்கும் பாடலில் இவர் உபதேசத்தைப் பாருங்கள்:


இத்தனுவே நானாம் எனும் மதியை நீத்தப்
புத்தி யிதயத்தே பொருந்தி  அக நோக்கால்
அத்துவித மாமெய் யகச்சுடர் காண்கை பூ
மத்தியெனும் அண்ணாமலைச்சுடர் காண் மெய்யே.

அக்ஷரமணமாலையில்,

தானே தானே தத்துவமிதனைத் 
தானே காட்டுவாய் அருணாசலா

என்று வருகிறது. இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

ஞானி /அத்வைதி: பகவான் காட்டிய புதுவழி


ஸ்ரீ பகவானை ஞானி, அத்வைதி என்று சொல்வது வழக்கமாகி விட்டது. அவர் காட்டியது ஞானமார்க்கம் என்றும் சொல்கிறார்கள். ஞானமார்கம் என்பது ப்ராசீன மானது. இதை பகவான் கீதையில் சாங்க்யம் என்று சொல்கிறார். ஆனால் பழைய ஞான மார்கத்திற்கும் நமது பகவான்  காட்டிய வழிக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜீவன், ஜகத், ஈஶ்வரன் ஆகிய மூன்று விஷயங்களை ஆராய்வதே பழைய ஞான மார்க்கம். இது முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது! ஆனால் இதையெல்லாம் ஆராய்பவன் யார் ? அதைப்பார் என்பது நமது பகவானின் உபதேசம். நாம் உலகத்தைக் காண்கிறோம். நாம் யார் என்பது தெரியாவிட்டால் , உலகம் எப்படி விளங்கும்? ஆசாமியைப் பார், சாமி தானே விளங்கும் என்பார் பகவான்! பகவான் இதற்குச் சொன்ன பெயர் விசாரம் என்பதே. 

Enquire or Surrender



பலரும் இதைக் கடினமெனக் கருதினர். பகவான் அவர்களுக்குச் சொன்னது:
விசாரம் செய் அல்லது கடவுளைச் சரணடை. [ Enquire or Submit (surrender)]  இரண்டிற்கும் பலன் ஒன்றுதான். பகவான்  அருணாசலத்தை பக்திக்கு இலக்காகக் காட்டினார். அருணாசல ஸ்துதி பஞ்சகம் இதற்கான இலக்கியமாகிறது. இதில் அருணாசல ரகசியங்களை வெளியிட்டார். 
கிரியிது பரம்
அருணாசலப் பரமன்
கிரியுருவாகிய கிருபைக் கடல்
சிற்சொரூபனாம் இறை
அருணமாமலையெனும் அன்பே
பருப்பத உருப்பெறு பரனே
அருண மலையெனும் எலையறு அருளொளிக் கடலே
மலைமருந்தா யொளிர் அருணாசலா
என்றெல்லாம் அருணாசலத்தின் அருட்செயல்களை விவரித்தார். அதனால்,

வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடாது உன்னருள்
வெளிவிட் டெனைக்கா  அருணாசலா
என்று பாடுகிறார்.

மாறாத உபதேசம்


ஸ்ரீ பகவான்  தனியாக உபதேசம்  என்று செய்தது கிடையாது. சாதகர்கள், அன்பர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார். இந்த விடைகள் பகவானின் சொந்த அனுபவத்தின்மீது எழுந்தவை. காலப்போக்கில் எல்லாவிதமான சாதகர்களும் எல்லாவிதமான கேள்விகளையும் எழுப்பியதால் பகவான் அளித்த விளக்கங்கள்  எல்லா விதமான ஆன்மீக சாதனைகளின்  சூக்ஷ்மங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. சாதகர் எந்த நிலையிலிருந்து கேட்டாலும் பகவான் ஆத்ம தத்துவத்தையே [ உள்ள பொருள் ] வலியுறுத்துவார். எனவே, இந்த ஒரு தத்துவமே பல கோணங்களிலிருந்தும் விவரிக்கப்படும்; பிறவற்றுடன் அதற்குள்ள தொடர்பும் விளங்கும்!



தமிழில் தத்துவம் : ரமணாந்தம் !


கேட்பவர் எந்த மொழியில் கேட்டாலும் பகவான் பெரும்பாலும் தமிழில்தான் பதில் சொல்வார். அதுவும் பரிபாஷைகள் இல்லாமலிருக்கும். 
திருச்சுழி வேங்கடராமன் என்ற 17 வயது இளைஞன் ஞானானுபவம் பெற்று ரமண மஹரிஷியாக மலர்ந்தபோது, அவருக்கு நமது வேதாந்த இலக்கியத்தில் பரிச்சயமே இல்லை! ப்ரஹ்மம் என்ற பெயர் தெரியாமலேயே ப்ரஹ்ம சாக்ஷாத்காரம் பெற்றவர் பகவான். அவர் படித்திருந்த  தெல்லாம் பெரியபுராணமும், பைபிளும் தான்! அதனால் அவருடைய விளக்கங்களும் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.


முருகனார் பெரிய தமிழ் அறிஞராக இருந்தாலும், அவரும் நமது வேதாந்த இலக்கியத்தைப் படித்ததில்லை ! ஆன்மீகத்தில் அவர் அறிந்தது  பகவானிடம் கற்றதே! இவரும் லக்ஷ்மண சர்மா என்ற அன்பரும் உள்ளது நாற்பதுக்கு பகவானிடமே பாடம் கேட்டனர் ! அதனால் முருகனாருக்கு வேறு எந்த தத்துவ மரபின் தாக்கமும் இருக்கவில்லை! தனக்கு வேதாந்தமோ, சித்தாந்தமோ எதுவும் தெரியாது; தான் அறிந்ததெல்லாம் 
"ரமணாந்தம் " மட்டுமே என்று அவரே சொல்லுவார்!



மேலும் முருகனார் பகவானிடம் வந்ததிலிருந்து அவரது அருள்பெற்று பகவான் காட்டிய வழியில் ஆத்மானுபவமும் அடைந்தவர். அவரது எழுத்தில் அவருடைய அனுபவமும் ப்ரதிபலிக்கிறது. [ சொந்த ஆன்மீக அனுபவம் இல்லாமல் ஆன்மீக விஷயங்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவோ, எழுதவோ முடியாது.]

சாதனையே முக்கியம்


ஞானம், தத்துவம், விசாரம் என்றால் ஏதோ மூளைக்கு வேலைதரும் சமாசாரம், ஆயிரம் புத்தகங்கள் படிக்கவேண்டும், I.Q அதிகம் இருக்கவேண்டும் என்றெல்லாம்  எண்ணத்தேவையில்லை. பகவான் காட்டிய வழியில் இரண்டே படிகள்:
- கர்த்தாவை யார் என அறிவதே நோக்கம். இதுவே அடிப்படை நிலை.
- இதற்காக சாதனை செய்தல் வேண்டும். இந்த சாதனையின் சாராம்சம் 'நான் என்னும் எண்ணம் எங்கே எழுகிறது ' என்று கவனித்து அந்த இடத்தில் நமது புத்தியை ஒடுக்கவேண்டும். இதையே  "புத்தி இதயத்தே பொருந்தி அக நோக்கால்" என்று தீப தர்சனப் பாடலில் சொன்னார். 
இங்கு இதயம் என்பது உடலின்  பௌதிக உறுப்பல்ல. "நான்" என்ற ப்ரக்ஞை எங்கு எழுகிறதோ அந்த நிலை/இடம். எவரும் 'நான்' என்று சொல்லும்போது மாரைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்- மூளை அடக்கிய தலையோ, வேறு இடமோ அல்ல. "நான் என்று மார் தட்டும் பெருமாளே" என்பார் அருணகிரி நாதர்.ஆகவே இதை இதயம் என்பது மரபு.
பகவான் த்யானம் [ meditation ] சமாதி, யோகம் என்றெல்லாம் சொன்னதில்லை. புத்தி இதயத்தே பொருத்துவதென்பதை  Self-attention என்று சொல்லலாம். இதுவே பகவான் விதித்த சாதனை முறை. பகவான் வழியில், புத்தகம் அதிகம் படித்து புத்தி தடுமாறத் தேவையில்லை! Intellectual understanding is no substitute for actual practice and realisation. As taught by Bhagavan, Enquiry or Vichara is not an intellectual endeavour or mental work but a spiritual effort. 

உடனுக்குடன் பதிவு



பகவானுடன் ஹாலில் இருக்கும்பொழுது அங்கு நடக்கும் உரையாடலிடையே பகவான் சொல்லும் ஆன்மீகக் கருத்துக்களை [உபதேசங்கள்] முருகனார் உடனுக்குடன் குறித்துக்கொள்வார். அன்றிரவே அவற்றைச் செய்யுளாக எழுதி அடுத்த  நாள் காலையில் பகவானிடம் காட்டுவார். பகவானும் அவற்றைப் பார்வையிட்டும் திருத்தியும் திருப்பித்தருவார். சில சமயம்  கருத்து சரியாக வரவில்லை, அல்லது மேலும் விளக்கம் தேவை என்று நினைத்தால் தானே  செய்யுளும் எழுதுவார். 

குருவாசகக் கோவை- 1939



இவ்வாறு  1939ல் முருகனாரல் அதுவரை இயற்றப்பட்ட 852 பாடல்களும் பகவானால் இயற்றப்பட்ட சில பாடல்களும் இருந்தன. இவற்றை குருவாசகக் கோவை என்ற பெயரில் அன்பர் ரமணபாதானந்தர் வெளியிட்டார். அதற்காக அவர் ஆச்ரமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்! ஆனால், பகவான் அவர் இருந்த பலாக்கொத்திற்குத் தானே சென்று அவரைப் பார்ப்பார்!



முருகனாரும் ( அமர்ந்திருப்பது), ரமணபாதானந்தரும்- 1930 வாக்கில்.


இதற்குப் பிறகும் முருகனார்  இவ்விதம் பாடல்கள் எழுதிவந்தார்.ஆனால் அவை கவனிப்பாரற்றுக் கிடந்தன. பகவானின் மஹாசமாதிக்குப்பிறகு சாது ஓம் என்ற  நல்ல தமிழறிஞர் ,அத்துடன் பகவான் வழியை மட்டுமே பற்றிய தீவிர பக்தர், முருகனாரிடம் பெரும் பக்திகொண்டவர், அவர் மதிப்புக்குரியவர்- கைப்பிரதிகளாக இருந்த பாடல்களைப் பார்த்தார்., அவற்றைத் தக்க இடத்தில் சேர்த்து,முருகனாரே பல பாடல்களுக்கு எழுதியிருந்த விளக்கக் குறிப்புகளுடன்,தனது உரையும் சேர்த்து   இரண்டாம் பதிப்பாக  1971ல் வெளிவர உதவினார். இப்பதிப்பில் முருகனார் பாடல்கள் 1254ம் பகவான் எழுதியவையாக 28 பாடல்களும் இருக்கின்றன.




நாளடைவில் இதிலிருந்து சில பகுதிகள் அன்பர்களால் தொகுக்கப்பட்டும், விளக்கங்களுடனும், மொழிபெயர்ப்பாகவும் வெளிவந்தன. 









பேராசிரியர் கே.ஸ்வாமிநாதன் இதை ஆங்கிலத்தில்  The Garland of Guru's Sayings என்று  வெளியிட்டார்.  செய்யுள் நடையில் அமைந்த இந்தப் பதிப்பில் மூலப்பாடல்களின்  கருத்து முழுமையாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால்  உலக அரங்கில் இது அறிமுகமாக இந்த முயற்சி  அடிகோலியது.













ஸ்ரீ சாது ஓம் எழுதிய தமிழ் உரையும் 2005ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.Translated by Michael James.
ஆனால் இது முழுமையான மொழிபெயர்ப்பு எனத் தோன்றவில்லை. May be a work in progress!




Translated by: 
Dr.T.V.Vekatasubramanian, Robert Butler and David Godman.



2008ல்  புதிய ஆங்கில உரை சிறந்த விளக்கக்குறிப்புக்களுடன் வந்திருக்கிறது. இதன் முன்னுரையில் இப்புத்தகத்தின் வரலாறு விரிவாகத் தரப்பட்டிருக்கிறது.மூலத்தின் தமிழ் நடை தற்காலத்தில் பலருக்கும் கடினமாகத் தோன்றும்; இந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் குறிப்புக்களும்  
நன்கு புரிந்துகொள்ள  உதவும்.


குருவாசகக் கோவையின் மஹத்வம்

குரு வாசகக் கோவையின்  மதிப்பு இரு நிகழ்ச்சிகளால் தெளிவாகிறது. 1939ல் இதன் முதல்பதிப்பு வந்தபோது , ஓர் அன்பர் அதன் ஆசிரியராகிய முருகனாரைப் பற்றி ஒருபாடல் எழுதிச் சேர்த்திருந்தார். அதைக் கண்ட பகவான்  அதை ஏறத்தாழ முற்றிலும் மாற்றி பின்வரும் பாடலை எழுதினார்:

குருவார்த்தை சிற்சிலவோர்  கோவையாக்  கோத்துப்
பரமார்த்த மாகப் பகர்ந்தான்- சருவார்த்த
வண்ணமுமவ் வாண்டான் வளர்கழலே யாகவருட்
கண்ணினிற்காண் கண்ண முருகன்.

(இன்றைய பதிப்பில் 13வது பாடல்)

தன்னையாண்ட குருவின் கழலே எல்லாமாக அருட் கண்ணால் காணும் முருகனார்  என்பது பகவானே சூட்டிய புகழாரமாகும்!  இதனால் முருகனாரின் பெருமையும் தகுதியும்  நன்கு விளங்கும்.

இத்தகையவர் கோத்த இக் கோவையானது குருவார்த்தையே அன்றித் தனது சொந்த கருத்தல்ல! இதை முருகனாரே அவையடக்கமாகச் சொல்கிறார்:

சந்தக் குருவாசகக் கோவை தேருங்கால் 
மந்த மதி படைத்த மத்தனேன் - புந்தியால்
எண்ணி யிசைத்ததுவன்று எண்ணாதிசைப்பித்தோன்
புண்ணியனாம் வேங்கடவன்  போன்ம். 


இது- இதுவே !

1939ல் இதன் ப்ரூஃப்   ஃபாரங்களை பகவானே திருத்தினார். அந்த சமயத்தில்  இதற்கு நூன்முகம் வழங்கியிருந்த சாது நடனானந்தர் இவ்வாறு எழுதியிருந்தார்:


சுருங்கக் கூறின், ஸ்ரீ ரமண சித்தாந்தத்தை அதன் இயல் வடிவிலேயே  விரிவாக விளக்கப் போந்த நூல் இது எனலாம் 

என்று எழுதியிருந்தார். இதைப் பார்த்த பகவான் , ஒரே ஒரு திருத்தம் செய்தார். இது என்பதை இதுவே என மாற்றினார் ! 
எனவே, இந்த வரி இப்போது,


சுருங்கக் கூறின், ஸ்ரீ ரமண சித்தாந்தத்தை  அதன் இயல் வடிவிலேயே விரிவாக விளக்கப் போந்த நூல் இதுவே எனலாம்.




 பகவான் கையாலேயே இவ்வாறு திருத்தி எழுதப்பட்ட இதன் முக்கியத்துவம்  விளங்குகிறதல்லவா! இத்தகைய நூல் இருக்க, ரமண சித்தாந்தம் பற்றி பிற நூல்களைப் படிப்பது, கனியிருக்க கல்லைக் கடிப்பது போலல்லவா ஆகிறது !


எந்த விஷயத்திலும் பகவான் ரமணரின் முடிவான கருத்தென்ன என்பதைத் தெரிந்துகொள்ள குருவாசகக் கோவையே ஆதாரமான நூலாக இருக்கிறது.

ஒரு ஞானியின் மொழிகளைத்தாங்கி, அவராலேயே அங்கீகரிக்கப்பட்ட நூல் உலகிலேயே இது ஒன்றுதான் எனலாம்.





உபதேச உந்தியார், உள்ளது நாற்பது, குருவாசகக் கோவை ஆகிய மூன்றும் ஸ்ரீ பகவானின் நேரடி உபதேசங்களைத்  தாங்கி ஸ்ரீ ரமண ப்ரஸ்தானத்ரயமாக மதிக்கப்படுகின்றன. இம்மூன்றும் நமக்குக் கிடைக்க வழிசெய்தவர் ஸ்ரீ முருகனார்.


குறிப்பு:





1. ஸ்ரீ முருகனாரின்  பணியும் பெருமையும் இத்துடன் அமையவில்லை. அவர் எழுதிய 15,000க்கும் அதிகமான பாடல்கள் அவர் மறைவுக்குப்பின் கண்டெடுக்கப்பட்டன.கைப்பிரதியாக இருந்த  இவற்றை ஸ்ரீ சாது ஓம் பல ஆண்டுகள் உழைத்துச் சரிபார்த்து தகுந்த தலைப்புகளில்   ஸ்ரீ ரமண ஞான போதம் என்ற பெயரில் 9 பாகங்களாகத் தொகுத்தார். பேராசிரியர் கே. ஸ்வாமினாதனின் அரிய முயற்சியினால் இவை டெல்லி ரமண கேந்த்ராவின்  வெளியீடுகளாக வந்திருக்கின்றன. இவற்றையெல்லாம்  கருத்தில் கொண்டால், ஸ்ரீ முருகனாரே சென்ற சில  நூற்றாண்டுகளில் ஜனித்த பெரும் தமிழ்ப் புலவர் என்பது தெரியும்..






2. உண்மையான ஸ்ரீ ரமண  சித்தாந்தம்  நிலைப்பதற்கும் தழைப்பதற்கும், ஸ்ரீ முருகனாரின் பெருமையை உலகம் அறிவதற்கும் முக்கிய கருவிகளாக இருந்தவர்கள் ஸ்ரீ ரமணபாதானந்தர், 
ஸ்ரீ சாது ஓம்,








 பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன் ஆகியோர்.


 இவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.













பல்லாண்டு  நங்கோ ரமண பகவற்குப் பல்லாண்டு
பல்லாண்டு நாயைப் பணிகொண்ட தெய்வப் பதத்துக்கு
பல்லாண்டு பாடுமிப் பாக்கிய மீந்தாற்குப் பல்லாண்டு
பல்லாண்டு பாடுறும்  பக்தர் குழாத்துக்குப் பல்லாண்டே.

-ஸ்ரீ முருகனார்.






Saturday, 10 September 2016

71. இரு புத்தகங்களின் கதை- 4


71. இரு புத்தகங்களின் கதை-4



ஊனான அகந்தை ஒழித் தகமே
தானாவொளிர் தற்பர சிற்சொருபம்
மோனானு பவங்கிளர் முத்தியருள்
கோனாவளர் சற்குருதாள் பணிவாம்.

-ஸ்ரீ முருகனார்.

ஞானிகளுக்குள்  பகவான் ஸ்ரீ ரமணர்  சற்று வித்தியாசமானவர். 54 வருஷங்கள்  அருணாசலத்தை விட்டு ஒருகணமும் நீங்காமல் அங்கேயே இருந்தார். ஆனால் யாரிடமும் தானே வலிந்து உபதேசம் என்று செய்ததில்லை.  யாரையும் தன் வழிக்கு வா என்று சொன்னதில்லை. பொதுவான உபதேசமும் எதுவும் செய்ததில்லை.

இருந்தாலும் தெய்வ சங்கல்பம் வேறுவிதமாக இருந்தது! அவர் திருவண்ணாமலைக்கு வந்த  நாளிலிருந்தே பழுத்த ஞானியாக இருந்தார். சாதனை, தபஸ் என்று எதுவும் செய்ததில்லை. ப்ரம்மானுபவத்தில் திளைத்திருந்தார்; எதுவும் பேசத் தோன்றவில்லை, பேசும் சக்தியையே கொஞ்ச காலம் இழந்திருந்தார்! ஆனால் சில புண்யசாலிகள் அப்போதே அவர் மஹிமையைத் தெரிந்துகொண்டார்கள். பெயரே தெரியாத அந்த நாட்களில் அவரை "ப்ராம்மண சுவாமி " என்றே அழைத்தார்கள். திருவிழா நாட்களில் அவரைக் காணவும் கூட்டம் வந்துவிடும்.

விசார ஸங்க்ரஹம்

இந்த நிலையில் அங்கு ஓவர்சீயராக இருந்த ஒரு அன்பர், வேதாந்தம்  பயில்பவர்,   கம்பீரம் சேஷய்யர் என்பவர்  பல சந்தேகங்களுடன் வந்தார். அந்த சமயம் பகவான் மவுனத்தில் இருந்தார். அதனால் அவர் எழுதிக்காட்டிய கேள்விகளுக்கு பகவான் விடை யெழுதினார். இவற்றை  சேஷய்யர்  தன்  நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். இது சுமார் 1901 வாக்கில் நடந்தது. இதுதான் பகவான் முதலில் செய்த உபதேசம். சேஷய்யருடைய மறைவுக்குப்பின்  இந்த நோட்டுப் புத்தகம் அவருடைய சகோதரரிடமிருந்து பெறப்பட்டு சாது நடனானந்தர் என்ற அடியவர் அதை கட்டுரை வடிவில் அமைத்தார். 'விசார சங்க்ரஹம் " என்ற பெயரில் இது வெளியானது. இதில் பகவானது நேர் உபதேசத்திலிருந்து மாறுபட்ட வேறுபல விஷயங்களும் வருகின்றன. அந்த சாதகர் அவற்றில் பரிச்சயமுடையவராக இருந்தார், அதனால் அதற்கேற்ப பகவானும் விடையளித்தார்.  நம் பகவானைப் பொறுத்தவரை இந்த விஷயத்தை நன்றாக நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

பகவானுடைய உபதேசம் என்றும் ஒன்றுதான். 54 வருஷங்களில் அதில் எந்த மாற்றமோ, வளர்ச்சியோ இல்லை.அதை  சுருக்கமாக அவர் வாக்கிலேயே காணலாம்.

ஆத்ம சொரூபத்தை அடைவதற்கான மார்க்கங்கள் பலவாயினும் முடிவு ஒன்றே. ஏனெனில் கர்த்தாவை ஆச்ரயித்தே சாதனைகள் யாவும் உள்ளன.கர்த்தாவானவன் தன்னை யார் என்று அறிதலே உயர்ந்த சாதனோபாயம். ஆதலால் யார் எந்த மார்கத்தை அனுஷ்டித்தாலும் பயன் சொரூபப்  பிராப்தியே . 

இதையே வேறுவிதமாகச் சொன்னால், கர்மாவைச் செய்யும் கர்த்தா இருக்கிறான். இவன் யார்? உபாசனையைச் செய்பவன் உபாசகன். இவன் யார்? யோகம் செய்பவன் யோகி. இவன் யார்? [ யோகம் என்றால்  சேருதல். பிரிந்ததுதான் ( வியோகம் ) சேரும்.. யார், எதிலிருந்து பிரிந்திருக்கிறார்கள்? ] விசார மார்கத்தில் ஈடுபடும் விசாரிப்பவன் யார்?  இப்படி ஒவ்வொரு நிலையிலும் வழியிலும் கர்த்தாவை யாரென அறிந்து கொண்டால், பலன்  சொரூபப் பிராப்தியே. இதுதான் உண்மை நிலை.

ஐன்ஸ்டீன் வந்தால் !

ஆனால் பகவானிடம் வந்தவர்கள் பகவான் என்ன  வழியைச் சொல்கிறார் என்று  கேட்கவில்லை! ஒரு வகையினர்  தாங்கள் செய்வதைச் சொல்வார்கள்,அதில் சந்தேகங்களைக் கேட்பார்கள். பகவானும் அவர்களுக்குத் தகுந்தமாதிரியே பதில் சொல்லுவார். இறுதியில் தன் உண்மை நிலையில் கொண்டு சேர்ப்பதாகவே அவர் பதில் இருக்கும். இன்னொரு வகையினர் தாம் கற்றதை வைத்து கேள்விகேட்பார்கள். அது வெறும் வரட்டு வாதமாக இருந்தால் பகவான் பதில் சொல்ல மாட்டார். சாதனையில் கஷ்டம் என்று வந்தால் அதற்குதான் பதில்சொல்வார். எந்த சாதனையையும் குறைத்துச் சொல்லமாட்டார். ஆனால்  எல்லா சாதனைக்கும் முடிவு ஆத்ம விசாரமே என்று விளக்குவார்.

ரமண சாஹித்யத்தைப் படித்தால் ஒரு உண்மை விளங்குகிறது. ரமண பகவானிடம் வந்தவர்கள் ஏதோ ஒரு சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தத்தம்  சம்பிரதாயக் கண்கொண்டே பகவானையும் பார்த்தார்கள். வெகு சிலர்தான் பகவானின் உண்மை உபதேசத்தை உணர்ந்து கொண்டார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு பள்ளிக்கு ஐன்ஸ்டீன்
ஸர். ஸி.வி.ராமன் போன்ற  பெரிய விஞ்ஞானி விஜயம் செய்தால், மாணவர்கள் அவரிடம் " ஐயா, நீங்கள் கண்டுபிடித்ததை எங்களுக்கு புரியும்படி விளக்கிச் சொல்லவேண்டும் " என்று கேட்கவேண்டும். அதைவிட்டு, " எங்களுக்கு டீச்சர் இந்த ஹோம் வர்க் கொடுத்தார்; அது விளங்கவில்லை.  நீங்கள் இதை சொல்லித்தர முடியுமா ?" என்று கேட்பதைப் போன்றது இது. [இது சாது ஓம் சொன்ன உதாரணம். ]


சிவப்ரகாசமானார் !





சேஷய்யருக்குப்பின், அதே காலகட்டத்தில் வந்தவர் சிவப்ரகாசம் பிள்ளை என்ற அன்பர். இவர் கல்லூரியில் ஃபிலாஸஃபி படித்திருந்தார். ஆனால் அவர் படித்த மேலை நாட்டு தத்துவத்தில் அவர் மனதிலிருந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. நான் யார் என்பதே அந்தக் கேள்வி. இத்துடன் அவர் பகவானிடம் வந்தார். அவர்  எழுதிக்கேட்ட வினாக்களுக்கு பகவான் அளித்த விடையைத் தொகுத்து  கட்டுரை வடிவில் எழுதி பகவானிடமே காட்டித் திருத்திக்கொண்டார். இதுவே பகவானின் நிஜ உபதேசத்தைத் தாங்கி நிற்கும் " நான் யார் "  என்ற சிறிய பிரசுரம். பலவருஷங்களுக்குப் பிறகு சிவப்ரகாசம் பிள்ளை காலமானசெய்தி கேட்டு, பகவான் " சிவப்ரகாசம் சிவப்ரகாசமானார் " என்று சொன்னார். இதிலிருந்து அவருடைய உயர்ந்த ஆத்மீக நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.


இதன் பிறகு, ஒரு நாள் பகவானுக்கும் அன்பர்களுக்குமிடையே நடந்த உரையாடலை சாது நடனானந்தர் தொகுத்து பகவானிடம் காட்டினார். பின்னர்  அது 'உபதேச மஞ்சரி' என்ற பெயரில் வெளிவந்தது.


அருணாசல ஸ்துதி பஞ்சகம்

இதன் பிறகு பகவான்  அருணாசலத்தின் மீது அவ்வப்போது ஸ்தோத்திரப் பாடல்கள் எழுதினார். இவையும் பெரும்பாலும்  அன்பர்களின் வேண்டுகோளின்படியே எழுதப்பட்டன. ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஒரு சரித்திரம் இருக்கிறது.
அடியவர்கள்  டவுனில் பிக்ஷை எடுத்துவந்த அந்த நாட்களில் அவர்கள் பாடிச்செல்வதற்கு வசதியாக ஒரு பாடல் எழுதும்படிக் கேட்டனர். பல பெரியவர்கள் எழுதிய பாடல்கள் இருக்க நாம் வேறு ஏன் புதிதாக எழுதவேண்டுமென்று இருந்தார். ஆனால் ஒரு நாள் கிரிப்ரதக்ஷிணத்தின்போது  பாடல்  அருவியாய்வர,   உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு நீண்ட பாடலை எழுதினார் . அதுதான " அருணாசலசிவ" என்ற அவருடைய முத்திரை மந்திரத்தை  உள்ளடக்கிய  ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை' என்னும்  உயர்ந்த ஸ்துதியாகும். இவை அனைத்தும் அருணாசல ஸ்துதி பஞ்சகம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

முருகனார் பகவானிடம் வந்தபோது இருந்த ஸ்ரீ ரமண  சாஹித்யம் இவ்வளவுதான். 

முருகனார் தூண்டிய தெய்வீக இலக்கியம்
உபதேச உந்தியார்

பகவானின் அருளால் முருகனாரின் கவிதையூற்று பொங்கிப் பெருகலாயிற்று. முருகனார் முதலில் சந்நிதிமுறை நூலில் வந்த பாடல்களை எழுதிவந்தார். அதில் ஒருபகுதியில்- திருவுந்தியார்- பகவானையே பல அவதாரங்களாகவும் கருதிப் பாடினார். இங்கு சிவபெருமானுடைய லீலைகளை வர்ணிக்கும் பகுதியில்  தாருகவனத்து ரிஷிகள் கர்மகாண்டிகளாகி ( பூர்வமீமாம்சை)  பகவானைப் பழித்து கர்மத்தையே பற்றிய வன்னெஞ்சத்தர் ஆயினர்; பகவானிடம் தங்கள்  திறமை பலிக்கவில்லை என்று கண்டு அவரைச் சரணடைந்தனர். பகவான் அவர்களுக்கு உபதேசம் செய்தார் என்று வருகிறது. இந்த இடத்தில், பகவானது உபதேசம் வரும் இடம் வரை எழுதிய முருகனார். சிவபிரானின் உபதேசத்தை நான் எப்படி எழுதுவது, இதை பகவானேதான் எழுதவேண்டும் என்று கருதி, பேப்பரையும் பென்சிலையும் பகவானிடம் வைத்துவிட்டார். பகவானும் சிவபெருமானின் உபதேசத்தை 29 பாடல்களில் எழுதினார். 

தாரு வனத்திற்  றவஞ்செய் திருந்தவர்
பூருவ கன்மத்தா  லுந்தீபற
போக்கறை போயின ருந்தீபற.

கன்மத்தை யன்றிக் கடவு ளிலையென்னும்

வன்மத்த ராயின ருந்தீபற
வஞ்சச் செருக்கினா லுந்தீபற ..............

கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச் செய்

கன்ம பலங்கண்டா ருந்தீபற
கர்வ மகன்றன ருந்தீபற

காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தன நுந்தீபற
சிவனுப தேசமி துந்தீபற.

என்று முருகனார்  எழுதினார். பின்னர் ஸ்ரீ பகவான் 

கன்மம் பயன் றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதாலுந்தீபற.

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்

வினைக்கடல் வீழ்த்திடு முந்திபற
வீடு தரலிலை யுந்தீபற 

எனத் தொடங்கி, 

தனாதியல் யாதெனத் தான்றெரி  கிற்பின்  
அனாதி யனந்தசத் துந்தீபற
அகண்ட சிதானந்த முந்தீ பற

பந்த வீடற்ற பரசுக முற்றவா

றிந்த நிலைநிற்ற லுந்தீ பற
இறைபணி நிற்றலா முந்தீபற. 

என்று முடித்தார்.
இதில் நமது மதத்தில் அனுஷ்டானத்தில் உள்ள அனைத்து சாதனைகளையும் வகைப்படுத்தி, பகவானது சொந்த உபதேசமாகிய தன்னை அறிதலில் கொண்டு வந்து நிறுத்தினார். இவ்வாறு பகவான் முமையான நூல் வடிவில் தம் உபதேசங்களைத் தர வழிசெய்தார் முருகனார்.

உள்ளது நாற்பது

பகவான் அவ்வப்போது தனித்தனியாக சில பாடல்களை எழுதிவருவார். இவை அவ்வாறே கிடந்தன. இவற்றைப் பார்த்த முருகனாருக்கு ஒரு எண்ணம் உதித்தது. தமிழிலக்கியத்தில் ஊறிய முருகனாருக்கு  இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்ற மரபு  தெரியும். அதனால் பகவானின் பாடல்களையும் நாற்பதாகத் தொகுக்கவேண்டும்  என்ற ஆசை எழுந்தது. அதனால் பகவானிடமே, "மெய்யின் இயல்பும் அதை மேவுந்திறனும் நாம் உய்யும் படிக்கு அருளவேண்டும்; நாற்பது பாடல்களாக ஆக்கித் தரவேண்டும்' என்று விண்ணப்பித்தார். பகவானும் பாடல்களை எழுதுவதும் முருகனார் அவற்றைக் கருத்தொருமை பற்றி விலக்குவதும் சேர்ப்பதுமாக 40 பாடல்களைத் திரட்டி, இரு மங்களப் பாடல்களுடன்  "உள்ளது நாற்பது " என்றபெயரில் தொகுத்தார். இது 1931ம் வருஷம் ஆசிரமத்தால் வெளியிடப் பட்டது. இதுவே ரமணோபனிஷதம் எனத் தக்கது.  இது உருவான விதத்தை பாயிரமாக முருகனாரே எழுதினார்.

மெய்யின் இயல்பும் அதை மேவும் திறனும்  எமக்கு
உய்யும் படி முருகன் ஓதுகெனப்- பொய்யுலகின்
கள்ளமறு மாற்றாற் கனரமணன் கட்டுரைத்தான்
உள்ளது நாற்பது உவந்து.

பிறகு, முன்பு விலக்கிய பாடல்களுடன் சில புதிய பாடல்களையும் சேர்த்து மேலும் 40 பாடல்கள் கிடைக்கவே, அவை "உள்ளது  நாற்பது- அனுபந்தம்" என 1940ல் வெளிவந்தது.

உள்ளது நாற்பதின் கருத்துச் செறிவும் மொழிச் சிறப்பும் ப்ரமிக்க வைக்கும். முதல் மங்கலச் செய்யுளைப் பாருங்கள்:

உள்ளதலது உள்ள உணர்வு உள்ளதோ உள்ள பொருள்
உள்ளலற உள்ளத்தே உள்ளதால் - உள்ளமெனும்
உள்ளபொருள் உள்ளல் எவன்  உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல் உணர்.

முதல் பாடல்:

நாமுலகம் காண்டலால் நானாவாம் சத்தியுள 
ஓர்முதலை ஒப்பல் ஒருதலையே- நாமவுருச்
சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமும் ஆரொளியும்
அத்தனையும் தானாம் அவன்.

[பாடல்கள் எளிமைப் படுத்தப் பட்டுள்ளன ]




ஸ்ரீ முருகனார்.


இவ்வாறு இருபெரும் ஆன்மீக பொக்கிஷங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஸ்ரீ முருகனார். இவை இரண்டும் பகவானின் நேரடி உபதேசங்களைத் தாங்கி  நிற்கின்றன. ஆனால் இவற்றின் பொருளை வெறும்  மொழியறிவினால்  தெரிந்துகொள்ள முடியாது. மொழியறிவு வெறும் வாதப்பிரதிவாதங்களுக்கே இடம்தரும். உண்மைப் பொருளை யறிய ஆத்ம சாதனை அவசியம். அப்போது உண்மை மனதில் விளங்கும். 

இத்தனை விஷயங்களையும் தெரிந்துகொண்டால்தான் முருகனாரின் குருவாசகக் கோவையின்  உண்மையான மஹத்வம் புரியும்.








70. இரு புத்தகங்களின் கதை-3


70.இரு புத்தகங்களின் கதை-3



 நமோரமணாய நலம்பெற வாழ்க
விமோசன மெய்யன் விரைமலர்த் தாள் வாழ்க
அலை சேர்ந்துழலும் அடியார் பிறவித்தேரை
நிலைசேர வுய்த்த அருணேசன் நிலை வாழ்க
சித்த விசிராந்தியருள் செம்மலடிவாழ்க
அடைக்கல நாளும் புரக்கும் அண்ணலருள் வாழ்க
அன்பகத்து  நாளும் அகலா தினிதுறைந்து
துன்பகற்று மின்பத் துணைவனடித் தூள் வாழ்க.

-ஸ்ரீ  முருகனார்.

வாழ்க்கை வரலாறு: உண்மையும் மிகையும்


ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதென்பது தனிப்பட்ட கலை. அதுவும் எந்தத் துறையிலும் ( அரசியல்வாதிகள், சினிமா ஸ்டார்கள் தவிற) சிறந்து விளங்குபவர்களைப்பற்றி எழுதுவது மிகவும் கடினம். வெளிப்படையான நிகழ்ச்சிகளை ஒருவாறு எழுதிவிடலாம்; ஒருவரின் மனதையும் கருத்தையும் புரிந்துகொண்டு உண்மைக்கு மாறாமல் எழுதுவதென்பது அனேகமாக இயலாதென்றே சொல்லலாம். இலக்கிய உலகில் டாக்டர் ஜான்ஸன் ஆங்கிலப் புலவர்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் புகழ் பெற்றவை.  ஜேம்ஸ் பாஸ்வெல் எழுதிய டாக்டர் ஜான்ஸனின் வாழ்க்கை வரலாறு [Boswell's Life of Dr.Johnson] இத்துறைக்கே சிகரகமாக இன்றுவரை  திகழ்கிறது. யாருக்காவது ஒரு நல்ல எழுத்தாளர் அமைந்தால் 'இவருக்கு ஒரு பாஸ்வெல் கிடைத்தார் ' என்றே சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

சமய, ஆன்மீகத் துறையில் உண்மையான வரலாற்றைக் காண்பது அரிது. பக்தர்கள் எழுதும்போது [Hagiography] அன்புமிகுதியால் பலவிஷயங்களை மிகைப்படுத்தி விடுகிறார்கள். சிலவற்றை நம்பவே முடிவதில்லை. ஆதி சங்கரரைப்பற்றி பல சங்கர விஜய நூல்கள் இருக்கின்றன. எவற்றை  நம்ப முடிகிறது? பழைய சமய குரவர்களே யன்றி, இன்றுவரை இதே நிலைதான் நீடிக்கிறது. ஒரு மஹான் மறைந்த பிறகு அவரைப்பற்றி எழுதுவதல்லாம் உண்மைதான் என்று யார் சொல்லமுடியும்?

வாழ்க்கை வரலாற்றைத் தவிர்த்து, கருத்துக்கள், உபதேசங்கள் என்று பார்த்தாலும், ஒரு ஞானியின் உபதேசம் அப்படியே நமக்குக் கிடைத்தது என்று சொல்ல முடியாது. ராமாயணம், கீதை போன்றவை அவை நிகழ்ந்தபோதே வரையப்பட்டவை. ஆனால் பைபிளும், தம்மபதமும் பிற்காலத்தில் தான் எழுந்தன. இருக்கும் உபதேசத்திற்கும் ஆயிரம் விளக்கங்கள் !

கதாம்ருதத்தின் தனித்தன்மை

இந்த நிலையில்தான், மஹேந்திர நாதர் எழுதிய ஸ்ரீ ராமக்ருஷ்ண கதாம்ருதம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. நடந்த நிகழ்சிகளையும் உரையாடல்களையும் அன்றன்றே குறித்துவைத்தார். தன் கருத்தைச் சொல்லாமல் குருதேவர் மொழிகளை அப்படியே பதிவுசெய்தார். இது அதுவரை காணாத புதுமை. அதனால்தான் 1942ல் அதன் ஆங்கிலப் பதிப்புக்கு அளித்த முகவுரையில் அல்டஸ் ஹக்ஸ்லி Aldous Huxley வியந்து எழுதினார்:

In the history of the arts genius is a thing of very rare occurrence. Rarer still, however, are the competent reporters and recorders of that genius.....
When we leave the field of art for that of spiritual religion, the scarcity of competent reporters becomes even more strongly marked......

Moreover, most saints have left neither writings nor self-portraits.
..their disciples ...in most cases have proved themselves singularly incompetent as reporters and biographers....Hence the special interest attaching to this enormously detailed account of the daily life and conversations of Sri Ramakrishna.....

No other saint has had  so able and indefatigable a Boswell. Never have the small events of a contemplative's daily life been described with such a wealth of intimate detail. Never have the casual and unstudied utterances of a great religious teacher been set down with so minute a fidelity....

...this excellent version of a book so curious and delightful as a biographical document, so precious at the same time, for what it teaches us of the life of the spirit.

ஞானியின் அன்றாட வாழ்க்கை

ஒரு ஞானி அல்லது மஹாபுருஷரின் அன்றாட நடவடிக்கையைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமா? ஆம். யாரும் எதையும் பேசலாம் சாத்தானும் வேதத்தை ஒப்பிக்கலாம். Even the Devil may quote the scripture. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறியவேண்டும். அதனால்தான் அர்ஜுனன் கேட்டான்: ( கீதை 2.54)
கேசவா, சமாதியில் நிலைபெற்று ஸ்திரபுத்தி யுள்ளவ (ஸ்தித ப்ரக்ஞன் ) னுடைய இலக்கணம் என்ன? இவன் எப்படிப் பேசுவான்? எப்படி உட்காருவான்? எப்படி நடப்பான்?
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் தன்னை இரவும் பகலும் நன்கு  பரீக்ஷிக்கும்படி ( ஒரு வ்யாபாரி  நாணயத்தைப்  பரீக்ஷிப்பதுபோல) தன் அன்பர்களுக்குச் சொல்லுவார்.  


பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் விஷயத்தில் நாம் சிலவிதத்தில் பாக்யம் செய்தவர்களாவோம். அவர் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அவரே சொல்லியிருக்கிறார்.##  54 வருஷங்கள் அல்லும் பகலும்  கொஞ்சமும் தனிமையே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். தன் முக்கிய உபதேசங்களையும் தானே எழுதிவைத்திருக்கிறார். ஆனால் அவர் முக்கிய உபதேசங்கள் வெளிவரக் காரணமாக இருந்த மஹாபுருஷர் ஸ்ரீ முருகனாராவார்.

## ஒரு ஞானி தன்னைப் பற்றிச் சொல்வது அரிதாகும். அவர் அவ்விதம் சொல்லாவிட்டால் சில விஷயங்கள்  நமக்குத் தெரியாமலே போய்விடும். அதனால்தான் ஞானிகளின் வாக்குக்கு மதிப்பு அதிகம்.

"பகவானே, உங்களைப் பற்றி தேவரிஷி  நாரதர், மற்றும்  அஸிதர், தேவலர் , வ்யாசர் போன்ற ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள்.  நீங்களும் சொல்கிறீர்கள். ஸ்வயம்  சைவ ப்ரவீஷி மே . (அதனால் ) நீங்கள் சொல்வது அனைத்தும்  உண்மையே என்று நம்புகிறேன் . ஸர்வ மேதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேஶவ "
என்று சொல்கிறான் அர்ஜுனன். [ கீதை 10. 13,14]

முருகனார் என்னும் மஹாபுருஷர்




டி ஆர், கனகம்மாள்  எழுதிய   புத்தகத்தின்  மேலட்டை. ஸ்ரீ ரமணாச்ரம வெளியீடு.

முருகனாரின் இயற்பெயர்   C.K.சுப்பிரமணிய ஐயர்.. ராமனாதபுரத்தில் இருந்த எளிய பிராமணக் குடும்பம்.  1890ல் பிறந்தவர். தந்தையார் க்ருஷ்ண ஐயர்; தாயார் சுப்புலக்ஷ்மி அம்மாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயாரின் பாதுகாப்பில் வளர்ந்தவர். இறுதிவரை தாயாரின்மேல் பற்றுக்கொண்டிருந்தார்.  5 வயதுவரை பேச்சு வரவில்லை. பின்னர் ராமனாதபுரத்திலும்  மதுரையிலும் படித்தார். தமிழ் ஆர்வத்தால் தமிழையே நன்கு கற்றுத்தேர்ந்தார். சீலத்திலும் சிறந்து விளங்கினார். திருக்குறளை மறுவறக் கற்று அதன்படி வாழ்ந்துவந்தார். ராமனாதபுரம் சமஸ்தானக் குடும்பத்திற்கு தமிழ் பாடம் சொல்லிவந்தார், அங்கு ஆஸ்தான வித்வான்களாக இருந்த மு.ராகவையங்கார், ரா. ராகவையங்கார் ஆகியோரின் நட்பு பெற்றார். தமிழ் இலக்கியத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். சங்க இலக்கிய நடையில் பாடும் புலமையும் பெற்றார். தமிழில் இருந்த அன்பின் காரணமாக தன் பெயரையும் முகவை கண்ண முருகனார். என்று  வழங்கலானார். இவருடைய புலமையையும் திறமையையும் கண்டு இவரை அன்று Dr, Chandler தலைமையில் இயங்கிய தமிழ் அகராதிக் குழுவில் பண்டித மெம்பராக எடுத்துக்  கொண்டார்கள். .

மு.ராகவையங்காரின்  தூண்டுதலால் சென்னையில் ஒரு பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். இந்த நாட்களில்  காந்திஜியின் இயக்கத்தில் பற்றுக்கொண்டார். "ஸ்வதந்த்ர கீதம்" என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டார். இதன் ஒரு பிரதிகூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை. 

ஸ்ரீ ரமண பகவானின் முதல் தரிசனம்

இவருடைய  மாமனார் தண்டபாணி சுவாமிகள்  ரமணபக்தர். அவர் ஒருமுறை ஸ்ரீ ரமணபகவான் எழுதியிருந்த "அருணாசல அக்ஷரமண மாலை" என்னும் ஸ்துதி நூலையும் " நான் யார் " என்ற சிறிய பிரசுரத்தையும் முருகனாரிடம் காட்டினார். அதைப் படித்த முருகனார் அசந்துபோனார். அதை யாத்தவரின் ஞான நிலையை உணர்ந்தார். அவரைப்பார்க்க ஆவல்கொண்டார். 1923 செப்டம்பரில் பள்ளிவிடுமுறையின் போது ( Michaelmas holidays ) திருவண்ணாமலைக்கு வந்தார்.  ( அன்று  தேதி 21-9-23  என்று குறித்திருக்கிறார்.) கோவிலில் ஸ்வாமிதரிசனம் செய்தார். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் போகக்கூடாது என்னும் நியதி ஞாபகத்துக்குவந்தது.  கோவிலில் கொடிமரத்தின் கீழ் உட்கார்ந்து  "தேசிகப் பதிகம்" என்ற பெயரில்  12  பாடல்கள் எழுதினார். அத்துடன் அன்று ரமண பகவான் இருந்த கீத்துக் கொட்டகைக்குச்  சென்றார். ஏனோ உள்ளே போகத்தோன்றவில்லை. வெளியிலேயே காத்திருந்தார். சிறிது நேரத்தில்  பகவானே வெளியில் வந்தார் ; இவர் நிற்பதைப் பார்த்து  " என்ன ? " என்று கேட்டார். முருகனார் தான் எழுதி வந்திருந்த பதிகத்தைப் பண்ணுடன் பாடத்தொடங்கினார்:

பார்வளர் கயிலைப் பருப்பத நீங்கிப்
               பண்ணவர் சூழலை விட்டு
வாரொளி மணிபோல் வாசகர் வாக்கை
               வளர்செவி மடுத்திட விரும்பி
ஏர்வளர் பெருந்தண்  டுறையடைந்தாற்போல்
               இழிசினேன்  புன்சொலும் வேட்டுச்
சீர்வளரருணைச் செழும்பதி  சேர்ந்தாய்
               தேசிக ரமணமா  தேவே.

இவ்வாறு பதினொரு பாடல்களுடன் இருந்த இந்தப் பதிகம், தற்போது முருகனார் வேறொரு சந்தர்ப்பத்தில் பாடிய கீழ்வரும்  பாடலுடன்  முடிகிறது:

தச்சறியாத சதுமறைப் பார்ப்பான்  சமைத்தவுடற்
றுச்சிலுட் கன்மத்  தொடர்பாற்  புகுந்த சுணங்கனிது
புக்கிலை வேட்டுப்  புலம்பெய்து  காலையிற் புண்ணியனின்
எச்சிலை வேட்டுன்  னிருதா  ளிறைஞ்சி யிரக்கின்றதே.

முருகனார் தமிழ் இலக்கிய மரபுப்படி, பாடலின் அமைப்புக்கும் பொருளுக்கும் தகுந்தபடி பண் அமைத்து அதில் தான் பாடுவார்.  ஆசிரிய விருத்தத்தில் அமைந்த இந்தப் பதிகத்தை  தக்கேசிப் பண்ணில்  [காம்போதி ராகம் ] பாடத்தொடங்கினார். ஆனால் பாட இயலவில்லை.  உணர்ச்சிப் பெருக்கினால் நாத் தழுதழுத்தது, தொண்டை அடைத்தது; கண்களில் நீர்மல்கியது; எழுதியதைப் பார்க்க இயலவில்லை.. இவரது நிலையைக் கண்ட பகவானே அதைவாங்கி வாசித்தார்.  இதற்குப் பிறகு முருகனாரால் தன் கவிதையைப்  பண்ணுடன்  பாடுவது இயலாமல் போனது!

இப்பதிகம் அற்புதமானது. பகவானைப் பார்க்குமுன்பே அவரை  குருவாக [தேசிகன் ] வைத்து எழுதியது. அவரைப் பார்க்காமலேயே அவர் இயல்பைச் சொன்னது.  இந்த வரிகளைப் பாருங்கள்:

பற்பல விதமாப் பலபடப் புரிந்த
     பழவினை யொழித்திடப் பரிந்தோ
சிற்பர யோகஞ்செறிந்து நிற்கின்றாய்
     தேசிக ரமணமா தேவே.

தேகமே மிகையாத் தேர்ந்தெலாந்  துறந்த 
    தேசிக ரமணமா தேவே

   வந்தடி வணங்கிடு வார்க்குத் 
தூய்மையாம் உள்ளத் துறவினை நல்கித்
    துகளறு காட்சியு மளித்துச்
சேய்மையாம் பொருளை யண்மையிற் சேர்ப்பாய்
   தேசிக ரமணமா தேவே.

ரமணரின் நிழல்


இந்த ஒரு தரிசனத்திலேயே முருகனார் பகவானால் முற்றும் ஆட்கொள்ளப்பட்டார்.  இதன்பிறகு அடிக்கடி  வருவார். ஆனால் அவரை திரும்பிப் போகச்செய்வது பெரும்பாடாகிவிடும், ரயில் நிலையத்திற்குப் போவார்; ரயிலும் வரும்; ஆனால் அதில் ஏறி உட்காரத் தோன்றாது! மீண்டும் ஆஶ்ரமத்திலேயே வந்து நிற்பார் ! பகவான் அவருடன் யாரையாவது அனுப்பி அவரை ரயிலேறச் செய்வார். முருகனாருக்கு உலகில் இருந்த ஒரே பிடிப்பு அவர் தாயார்தான். அவர் தாயார் மறைந்ததும், சடங்குகளைச் செய்துவிட்டு, மனைவிக்கும் ஒரு ஏற்பாடு செய்துவிட்டு 1926 ஜூலையில் நிரந்தரமாக அண்ணாமலைக்கே வந்துவிட்டார். அதன்பிறகு, 1973 ஆகஸ்டில் தன் உடலை உகுக்கும் வரை அங்கிருந்து  நீங்கவில்லை. ஏதோ  காரணத்தினால் ஆசிரமத்திலும் தங்கி உணவு கொள்ள வில்லை. பக்கத்தில் பலாக்கொத்தில் இருந்தார். பிச்சையெடுத்தே உண்பார். இந்த  நேரம் தவிர  பகவான் சன்னிதியிலேயே இருப்பார். பகவானின் நிழல் எனக் கருதப்பட்டார



வலதுகோடியில் முருகனார் அமர்ந்திருக்கிறார்.

பாடுவது பகவானைப் பற்றியே !

பகவானைப் பார்த்தபிறகு பிறவிஷயங்களைப் பற்றிப் பாடுவதை நிறுத்திவிட்டார். பகவான் பெருமை, பகவான்  பகவான் உபதேசம், பகவானிடம் தனக்கு  நேர்ந்த அனுபவம் ஆகிய பகவான்  விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதுவார். இதற்கும் தூண்டுகோலாக ஒருவிஷயம் அமைந்தது..

பகவான் மலைமீது இருந்த போது பல அன்பர்கள் பகவான் மீது பாடல்கள் எழுதி வந்து சமர்ப்பிப்பார்கள். [ செந்தமிழ்க்கவி ராமச்சந்திர  ஐயர் என்பவரும் அவர்களில் ஒருவர்,]  அம்முறையில் முருகனாரும் ஒருமுறை  ஒருபாடலை எழுதினார்:

அண்ணாமலை ரமணன்  அன்பர்க் கருண்மாரி
கண்ணாலே பெய்யும் கருணைத் திறம்பாடி
எண்ணாதன வெண்ணி ஏங்கடியர் வெம்பாவத்
திண்ணா  சறவே   தெறுசே வகம்பாடிப்
பெண்ணா னலிகளெனும் பேதத்தை நீத்துத்தம்
உண்ணாடுளத்தொளிறும்  உண்மை வளம்பாடிப்
பண்ணார் அவன்புகழைப் பாடுங்கீ தாமுதம்போல்
தண்ணார் அமைதி தழையேலோர் எம்பாவாய். 


இதைப் பார்த்த பகவான்  'ஓ நீர் மணிவாசகரைப்போல்  போல் எழுதுவீரோ ? இப்படியே எழுதிகொண்டுபோனால் திருவாசகம்போல் அமையுமே " என்றார்.
இதைக்கேட்ட முருகனார் திடுக்கிட்டார். " திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகர் எங்கே, மூட மதியுடைய நான் எங்கே ! சூரியனுடன் மின்மினிப் பூச்சி போட்டிபோட முடியுமா?  அனுபூதிமானாகிய மணிவாசகர்போல் நான் எப்படி எழுத முடியும் " என்று விம்மலுடன்  கூறினார்.

ஸ்ரீ ரமண சந்நிதி முறை





அன்று பகவான் முருகனாரை அருட்கண்ணால்  பார்த்தார். அதன் பிறகு முருகனார்  திருவாசக அமைப்பு முறையில் , ஆனால் தேவாரப் பண்களில் பாடல் எழுதவாரம்பித்தார். 1933ல் இவை தொகுக்கப்பட்டு  "ஸ்ரீ ரமண சந்நிதி முறை " என்ற பெயரில்   நூலாக வந்தது. இதன் அருமையைக் கண்ட தமிழ் அறிஞர்கள் டாக்டர்  உ.வே. சாமினாதையர், மு.ராகவையங்கார், வடிவேலு செட்டியார், செந்தமிழ்க்கவி ராமச்சந்திரையர், தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார்கள்..முருகனாரோ, எல்லாம் பகவானது அருள் என்று சொல்லிவிட்டார். முதற்பதிப்பில் எழுதிய நூல் வரலாறு என்ற பகுதியில் இவ்வாறு எழுதினார்:

உருக்குங் கருணை யுடை ரமணேசன்
திருக்கண்ணோக்கச் சேர்த்தலு மன்னோன்
சயம்பெறு மணிவாசகர் வாசகம் போல்
இயம்பவும் வலையோ  என........

அசைத்தே மதியை அருளாலலர்த்தி
என்னிதயத்தே இலங்கவ் விறைவன் 
என்னது செய்கை இலாதே ரமண 
சந்நிதி முறை நூல் சாற்றினன்
தன்னது வாய்மை தழைத்தோங்கிடவே.


வாதவூர்  மாணிக்க வாசகரென்  வாக்கிலிருந்
தோதலா லோதினே  னோர்தகவு மில்லாதேன்
போத குரு ரமண புங்கவன் செம்பொன்னடிக்கு
நீதவொளி  சேர்சந் நிதிமுறை நூ லன்பாலே.

இதைப்பற்றி பகவான் ஸ்ரீ ரமணரே எழுதிய பாடல் இதோ:

அகத்தாமரை மலர்மீதுறை அருணாசல ரமணன்
 நகைத்தானுற விழித்தானறச்  செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
சகத்தாருய வகுத்தான் முறை திருவாசக நிகரே.

இவற்றாலெல்லாம் இந்த நூலின் பெருமையும் அதன் ஆசிரியரான முருகனாரின் மாண்பும் புலப்படும்.








சந்நிதிமுறை என்பது பகவானிடம் நம் முறையீடுகளைத் தெரிவிப்பதாக  அமைந்த பாடல். இதில் அடங்கியுள்ள பல பாடல்களுக்குப் பின்னால்  சில அருமையான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இது பகவான் ஸ்ரீ ரமணரின்மீது அமைந்த ஒப்பற்ற  தோத்திர நூலாகும். இதன் சில பகுதிகளை  பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன்  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்திருக்கிறார்.

ஸ்ரீ ரமணாச்ரம வெளியீடு.





ரமணபாதானந்தர்

இது ஏதோ காரணத்தினால் ஆசிரமப் பதிப்பாக வரவில்லை, முதல் பதிப்பும் (1933) இரண்டாம் பதிப்பும் (1939) ஸ்ரீ ரமணபாதானந்தர் என்ற அன்பரால் வெளியிடப்பட்டது. [ மூன்றாம் பதிப்பு 1971 தான் ஆசிரமம் வெளியிட்டது.
நான்காம் பதிப்பு 1998ல் வந்தது.] இந்த  அன்பர்  வைஷ்ணவராக இருந்தும் முருகன் மீது பக்தியுடையவர். பகவானிடமும் பக்தியுடையவர். முருகனாரின் புலமையைப் போற்றி அவரிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டவர். "பகவான்" என்ற பெயரைக்கேட்டாலே மனமுருகிக் கண்ணீர் வடிப்பார். சந்நிதிமுறைப் பாடல்களை ராக, தாளத்துடன் பாடுவார். ஆனால்,அதன் பாவத்தில் லயித்து கண்ணீர் பெருக பாடமுடியாமல் தொண்டை அடைத்து  நிற்பார். பம்பாயில் ஷேர் புரோக்கராக இருந்து சம்பாதித்த பெருளையெல்லாம் முருகனார் எழுதியவற்றைப் பதிப்பதிலேயே செலவுசெய்தார்.  சந்நிதிமுறை வெளியீட்டை பெரிய விழாவாகக் கொண்டாட எண்ணினார். ஆனால் நம் நாட்டில் அது  நடக்கவில்லை. கோலாலம்பூரில் அப்புத்தகத்தை பட்டுவஸ்திரத்தால் மூடி, யானைமீது  வைத்து, தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நாதசுரகலைஞர்களின் இசையுடன் பெரிய ஊர்வலத்துடன் கோலாஹல விழாவாக நடத்தினார், சிலோனிலும் இவ்வாறு செய்தார். !

இவ்வளவு  இருந்தும்  இப்புத்தகத்தின்  பெருமையை  தமிழ் நாட்டு ஆஸ்திகர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை! இதன் தமிழ் வளத்தையும் மக்கள் கண்டுகொள்ள வில்லை!

வாழி ரமணேசன் வாழியருள் வாரிசத்தாள்
வாழிரம  ணீஈயகுண மாணடியார் - ஊழிபல
வாழி பராசத்தி  வாழி சதாமுத்தி 
வாழிசிவா னந்த வளம்.

சந்நிதிமுறை. பாடல் 1850.
வளர்க முருகனார்  புகழ்!