Sunday, 11 September 2016

72. இரு புத்தகங்களின் கதை- 5



72. இரு புத்தகங்களின் கதை-5




காரா  யருள்பெய் கண்ணோக்கால்
கதிர்மாமுகத்தான் முறுவலால்
போரா நின்றார்க் குண்மையுறப்
புகலு மின்சொற் போதத்தான்

-ஸ்ரீ முருகனார்.

பகவான் ஸ்ரீ ரமணரை நம்போன்றவர்கள் புரிந்துகொள்ள முடியாது. நம்மிடையே நம்முடன் ஒருவராக வாழ்ந்தார். ஆனாலும் அவர் நம்போன்று இல்லை!  ஒருமுறை இவரைப்பார்த்த ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் " இது என்ன நினைக்கிறதோ தெரியவில்லையே " என்றார். மனத்தைக் கடந்த நிலையில் நிரந்தரமாக இருந்தவர்; ஆனாலும் நம்முடன் சகஜமாகப் பேசிப் பழகி வந்தார். இது நமக்காக இவர் செய்த த்யாகமாகும். ஒரு சமயத்தில்  தன்னுடைய நிலை "அதி ஆஶ்ரமி " என்று வெளியில் சொல்ல நேர்ந்தது. ஆசிரமத்தில் கடிகாரம் இருக்கும்; எல்லாம் நேரம் தவறாமல் நடக்கும். ஆனாலும் பகவானுக்கு நேரம், காலம் பற்றிய ப்ரக்ஞையே இல்லை என்று இவருடன்  ஸ்வாதீனமாகப் பழகிய தேவராஜமுதலியார் எழுதியிருக்கிறார்.

ரகசிய மில்லாத உபதேசம்


பகவானுடைய உபதேசத்தில் ரகசியம், ஒளிவு-மறைவு, மூடுமந்திரம், தந்திர சாதனை என்று எதுவுமே கிடையாது. பகவான் யாரையும் தன் சீடன் என்று சொன்னதில்லை. யாருக்கும் எந்த தீக்ஷையும் தந்ததில்லை. ஆனால் இவர் பார்வையிலேயே ஆத்மதீபத்தை ஏற்றிவைப்பார். " கண்ணால் பரம் காட்டுவான்", "அண்ணாமலை ரமணன் அன்பர்க்கருள் மாரி கண்ணாலே பெய்யும் கருணைத் திறம் " என்றெல்லாம் பாடுவார் முருகனார். இதை பக்குவிகளே அனுபவித்தனர். யாரையும் சீடன் என்று சொல்லாவிட்டலும், குருவாக இருந்திருக்கிறார்.  இதை ஸ்ரீ ஆர்தர் ஆஸ்போர்ன் அருமையாக விளக்கியிருக்கிறார்.வித்

உண்மையான உபதேசம் பகவான் மவுனமாக நம்மீது செலுத்திய அருள். அவர் சந்நிதியில் 'சும்மா' அமர்ந்திருப்பதே நாம் செய்யவேண்டியது. "மவுனமா வுரையாற் காட்டும் மாபிரம வத்து வாலன் " என்று பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் தமிழில் எழுதினார். This silent influence on the heart is the direct teaching of Bhagavan.  இது புரியாதவர்களுக்கே  வார்த்தைகளினாலான உபதேசம் தேவைப்படும்.

வித்தகத் தொன்னூல் அனைத்தும்  விஞ்சைசேர் நின் மோனப்
புத்தகத்துக்கு ஆன்றோர் புகன்றவுரைப் பாயிரமே

என்று பாடுகிறார் முருகனார் !



பகவானின் உபதேசம் எளிமையானது, நேரடியானது. அதனால் இதை பலசமயங்களில் சாதாரணமாகவே வெளியிட்டிருக்கிறார். இவர் இயற்றிய ஸ்துதி நூல்களில் கூட உபதேசம் இடம்பெறும் . அருணாசல தீப தர்சன தத்துவத்தை விளக்கும் பாடலில் இவர் உபதேசத்தைப் பாருங்கள்:


இத்தனுவே நானாம் எனும் மதியை நீத்தப்
புத்தி யிதயத்தே பொருந்தி  அக நோக்கால்
அத்துவித மாமெய் யகச்சுடர் காண்கை பூ
மத்தியெனும் அண்ணாமலைச்சுடர் காண் மெய்யே.

அக்ஷரமணமாலையில்,

தானே தானே தத்துவமிதனைத் 
தானே காட்டுவாய் அருணாசலா

என்று வருகிறது. இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

ஞானி /அத்வைதி: பகவான் காட்டிய புதுவழி


ஸ்ரீ பகவானை ஞானி, அத்வைதி என்று சொல்வது வழக்கமாகி விட்டது. அவர் காட்டியது ஞானமார்க்கம் என்றும் சொல்கிறார்கள். ஞானமார்கம் என்பது ப்ராசீன மானது. இதை பகவான் கீதையில் சாங்க்யம் என்று சொல்கிறார். ஆனால் பழைய ஞான மார்கத்திற்கும் நமது பகவான்  காட்டிய வழிக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜீவன், ஜகத், ஈஶ்வரன் ஆகிய மூன்று விஷயங்களை ஆராய்வதே பழைய ஞான மார்க்கம். இது முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது! ஆனால் இதையெல்லாம் ஆராய்பவன் யார் ? அதைப்பார் என்பது நமது பகவானின் உபதேசம். நாம் உலகத்தைக் காண்கிறோம். நாம் யார் என்பது தெரியாவிட்டால் , உலகம் எப்படி விளங்கும்? ஆசாமியைப் பார், சாமி தானே விளங்கும் என்பார் பகவான்! பகவான் இதற்குச் சொன்ன பெயர் விசாரம் என்பதே. 

Enquire or Surrender



பலரும் இதைக் கடினமெனக் கருதினர். பகவான் அவர்களுக்குச் சொன்னது:
விசாரம் செய் அல்லது கடவுளைச் சரணடை. [ Enquire or Submit (surrender)]  இரண்டிற்கும் பலன் ஒன்றுதான். பகவான்  அருணாசலத்தை பக்திக்கு இலக்காகக் காட்டினார். அருணாசல ஸ்துதி பஞ்சகம் இதற்கான இலக்கியமாகிறது. இதில் அருணாசல ரகசியங்களை வெளியிட்டார். 
கிரியிது பரம்
அருணாசலப் பரமன்
கிரியுருவாகிய கிருபைக் கடல்
சிற்சொரூபனாம் இறை
அருணமாமலையெனும் அன்பே
பருப்பத உருப்பெறு பரனே
அருண மலையெனும் எலையறு அருளொளிக் கடலே
மலைமருந்தா யொளிர் அருணாசலா
என்றெல்லாம் அருணாசலத்தின் அருட்செயல்களை விவரித்தார். அதனால்,

வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடாது உன்னருள்
வெளிவிட் டெனைக்கா  அருணாசலா
என்று பாடுகிறார்.

மாறாத உபதேசம்


ஸ்ரீ பகவான்  தனியாக உபதேசம்  என்று செய்தது கிடையாது. சாதகர்கள், அன்பர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார். இந்த விடைகள் பகவானின் சொந்த அனுபவத்தின்மீது எழுந்தவை. காலப்போக்கில் எல்லாவிதமான சாதகர்களும் எல்லாவிதமான கேள்விகளையும் எழுப்பியதால் பகவான் அளித்த விளக்கங்கள்  எல்லா விதமான ஆன்மீக சாதனைகளின்  சூக்ஷ்மங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. சாதகர் எந்த நிலையிலிருந்து கேட்டாலும் பகவான் ஆத்ம தத்துவத்தையே [ உள்ள பொருள் ] வலியுறுத்துவார். எனவே, இந்த ஒரு தத்துவமே பல கோணங்களிலிருந்தும் விவரிக்கப்படும்; பிறவற்றுடன் அதற்குள்ள தொடர்பும் விளங்கும்!



தமிழில் தத்துவம் : ரமணாந்தம் !


கேட்பவர் எந்த மொழியில் கேட்டாலும் பகவான் பெரும்பாலும் தமிழில்தான் பதில் சொல்வார். அதுவும் பரிபாஷைகள் இல்லாமலிருக்கும். 
திருச்சுழி வேங்கடராமன் என்ற 17 வயது இளைஞன் ஞானானுபவம் பெற்று ரமண மஹரிஷியாக மலர்ந்தபோது, அவருக்கு நமது வேதாந்த இலக்கியத்தில் பரிச்சயமே இல்லை! ப்ரஹ்மம் என்ற பெயர் தெரியாமலேயே ப்ரஹ்ம சாக்ஷாத்காரம் பெற்றவர் பகவான். அவர் படித்திருந்த  தெல்லாம் பெரியபுராணமும், பைபிளும் தான்! அதனால் அவருடைய விளக்கங்களும் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.


முருகனார் பெரிய தமிழ் அறிஞராக இருந்தாலும், அவரும் நமது வேதாந்த இலக்கியத்தைப் படித்ததில்லை ! ஆன்மீகத்தில் அவர் அறிந்தது  பகவானிடம் கற்றதே! இவரும் லக்ஷ்மண சர்மா என்ற அன்பரும் உள்ளது நாற்பதுக்கு பகவானிடமே பாடம் கேட்டனர் ! அதனால் முருகனாருக்கு வேறு எந்த தத்துவ மரபின் தாக்கமும் இருக்கவில்லை! தனக்கு வேதாந்தமோ, சித்தாந்தமோ எதுவும் தெரியாது; தான் அறிந்ததெல்லாம் 
"ரமணாந்தம் " மட்டுமே என்று அவரே சொல்லுவார்!



மேலும் முருகனார் பகவானிடம் வந்ததிலிருந்து அவரது அருள்பெற்று பகவான் காட்டிய வழியில் ஆத்மானுபவமும் அடைந்தவர். அவரது எழுத்தில் அவருடைய அனுபவமும் ப்ரதிபலிக்கிறது. [ சொந்த ஆன்மீக அனுபவம் இல்லாமல் ஆன்மீக விஷயங்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவோ, எழுதவோ முடியாது.]

சாதனையே முக்கியம்


ஞானம், தத்துவம், விசாரம் என்றால் ஏதோ மூளைக்கு வேலைதரும் சமாசாரம், ஆயிரம் புத்தகங்கள் படிக்கவேண்டும், I.Q அதிகம் இருக்கவேண்டும் என்றெல்லாம்  எண்ணத்தேவையில்லை. பகவான் காட்டிய வழியில் இரண்டே படிகள்:
- கர்த்தாவை யார் என அறிவதே நோக்கம். இதுவே அடிப்படை நிலை.
- இதற்காக சாதனை செய்தல் வேண்டும். இந்த சாதனையின் சாராம்சம் 'நான் என்னும் எண்ணம் எங்கே எழுகிறது ' என்று கவனித்து அந்த இடத்தில் நமது புத்தியை ஒடுக்கவேண்டும். இதையே  "புத்தி இதயத்தே பொருந்தி அக நோக்கால்" என்று தீப தர்சனப் பாடலில் சொன்னார். 
இங்கு இதயம் என்பது உடலின்  பௌதிக உறுப்பல்ல. "நான்" என்ற ப்ரக்ஞை எங்கு எழுகிறதோ அந்த நிலை/இடம். எவரும் 'நான்' என்று சொல்லும்போது மாரைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்- மூளை அடக்கிய தலையோ, வேறு இடமோ அல்ல. "நான் என்று மார் தட்டும் பெருமாளே" என்பார் அருணகிரி நாதர்.ஆகவே இதை இதயம் என்பது மரபு.
பகவான் த்யானம் [ meditation ] சமாதி, யோகம் என்றெல்லாம் சொன்னதில்லை. புத்தி இதயத்தே பொருத்துவதென்பதை  Self-attention என்று சொல்லலாம். இதுவே பகவான் விதித்த சாதனை முறை. பகவான் வழியில், புத்தகம் அதிகம் படித்து புத்தி தடுமாறத் தேவையில்லை! Intellectual understanding is no substitute for actual practice and realisation. As taught by Bhagavan, Enquiry or Vichara is not an intellectual endeavour or mental work but a spiritual effort. 

உடனுக்குடன் பதிவு



பகவானுடன் ஹாலில் இருக்கும்பொழுது அங்கு நடக்கும் உரையாடலிடையே பகவான் சொல்லும் ஆன்மீகக் கருத்துக்களை [உபதேசங்கள்] முருகனார் உடனுக்குடன் குறித்துக்கொள்வார். அன்றிரவே அவற்றைச் செய்யுளாக எழுதி அடுத்த  நாள் காலையில் பகவானிடம் காட்டுவார். பகவானும் அவற்றைப் பார்வையிட்டும் திருத்தியும் திருப்பித்தருவார். சில சமயம்  கருத்து சரியாக வரவில்லை, அல்லது மேலும் விளக்கம் தேவை என்று நினைத்தால் தானே  செய்யுளும் எழுதுவார். 

குருவாசகக் கோவை- 1939



இவ்வாறு  1939ல் முருகனாரல் அதுவரை இயற்றப்பட்ட 852 பாடல்களும் பகவானால் இயற்றப்பட்ட சில பாடல்களும் இருந்தன. இவற்றை குருவாசகக் கோவை என்ற பெயரில் அன்பர் ரமணபாதானந்தர் வெளியிட்டார். அதற்காக அவர் ஆச்ரமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்! ஆனால், பகவான் அவர் இருந்த பலாக்கொத்திற்குத் தானே சென்று அவரைப் பார்ப்பார்!



முருகனாரும் ( அமர்ந்திருப்பது), ரமணபாதானந்தரும்- 1930 வாக்கில்.


இதற்குப் பிறகும் முருகனார்  இவ்விதம் பாடல்கள் எழுதிவந்தார்.ஆனால் அவை கவனிப்பாரற்றுக் கிடந்தன. பகவானின் மஹாசமாதிக்குப்பிறகு சாது ஓம் என்ற  நல்ல தமிழறிஞர் ,அத்துடன் பகவான் வழியை மட்டுமே பற்றிய தீவிர பக்தர், முருகனாரிடம் பெரும் பக்திகொண்டவர், அவர் மதிப்புக்குரியவர்- கைப்பிரதிகளாக இருந்த பாடல்களைப் பார்த்தார்., அவற்றைத் தக்க இடத்தில் சேர்த்து,முருகனாரே பல பாடல்களுக்கு எழுதியிருந்த விளக்கக் குறிப்புகளுடன்,தனது உரையும் சேர்த்து   இரண்டாம் பதிப்பாக  1971ல் வெளிவர உதவினார். இப்பதிப்பில் முருகனார் பாடல்கள் 1254ம் பகவான் எழுதியவையாக 28 பாடல்களும் இருக்கின்றன.




நாளடைவில் இதிலிருந்து சில பகுதிகள் அன்பர்களால் தொகுக்கப்பட்டும், விளக்கங்களுடனும், மொழிபெயர்ப்பாகவும் வெளிவந்தன. 









பேராசிரியர் கே.ஸ்வாமிநாதன் இதை ஆங்கிலத்தில்  The Garland of Guru's Sayings என்று  வெளியிட்டார்.  செய்யுள் நடையில் அமைந்த இந்தப் பதிப்பில் மூலப்பாடல்களின்  கருத்து முழுமையாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால்  உலக அரங்கில் இது அறிமுகமாக இந்த முயற்சி  அடிகோலியது.













ஸ்ரீ சாது ஓம் எழுதிய தமிழ் உரையும் 2005ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.Translated by Michael James.
ஆனால் இது முழுமையான மொழிபெயர்ப்பு எனத் தோன்றவில்லை. May be a work in progress!




Translated by: 
Dr.T.V.Vekatasubramanian, Robert Butler and David Godman.



2008ல்  புதிய ஆங்கில உரை சிறந்த விளக்கக்குறிப்புக்களுடன் வந்திருக்கிறது. இதன் முன்னுரையில் இப்புத்தகத்தின் வரலாறு விரிவாகத் தரப்பட்டிருக்கிறது.மூலத்தின் தமிழ் நடை தற்காலத்தில் பலருக்கும் கடினமாகத் தோன்றும்; இந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் குறிப்புக்களும்  
நன்கு புரிந்துகொள்ள  உதவும்.


குருவாசகக் கோவையின் மஹத்வம்

குரு வாசகக் கோவையின்  மதிப்பு இரு நிகழ்ச்சிகளால் தெளிவாகிறது. 1939ல் இதன் முதல்பதிப்பு வந்தபோது , ஓர் அன்பர் அதன் ஆசிரியராகிய முருகனாரைப் பற்றி ஒருபாடல் எழுதிச் சேர்த்திருந்தார். அதைக் கண்ட பகவான்  அதை ஏறத்தாழ முற்றிலும் மாற்றி பின்வரும் பாடலை எழுதினார்:

குருவார்த்தை சிற்சிலவோர்  கோவையாக்  கோத்துப்
பரமார்த்த மாகப் பகர்ந்தான்- சருவார்த்த
வண்ணமுமவ் வாண்டான் வளர்கழலே யாகவருட்
கண்ணினிற்காண் கண்ண முருகன்.

(இன்றைய பதிப்பில் 13வது பாடல்)

தன்னையாண்ட குருவின் கழலே எல்லாமாக அருட் கண்ணால் காணும் முருகனார்  என்பது பகவானே சூட்டிய புகழாரமாகும்!  இதனால் முருகனாரின் பெருமையும் தகுதியும்  நன்கு விளங்கும்.

இத்தகையவர் கோத்த இக் கோவையானது குருவார்த்தையே அன்றித் தனது சொந்த கருத்தல்ல! இதை முருகனாரே அவையடக்கமாகச் சொல்கிறார்:

சந்தக் குருவாசகக் கோவை தேருங்கால் 
மந்த மதி படைத்த மத்தனேன் - புந்தியால்
எண்ணி யிசைத்ததுவன்று எண்ணாதிசைப்பித்தோன்
புண்ணியனாம் வேங்கடவன்  போன்ம். 


இது- இதுவே !

1939ல் இதன் ப்ரூஃப்   ஃபாரங்களை பகவானே திருத்தினார். அந்த சமயத்தில்  இதற்கு நூன்முகம் வழங்கியிருந்த சாது நடனானந்தர் இவ்வாறு எழுதியிருந்தார்:


சுருங்கக் கூறின், ஸ்ரீ ரமண சித்தாந்தத்தை அதன் இயல் வடிவிலேயே  விரிவாக விளக்கப் போந்த நூல் இது எனலாம் 

என்று எழுதியிருந்தார். இதைப் பார்த்த பகவான் , ஒரே ஒரு திருத்தம் செய்தார். இது என்பதை இதுவே என மாற்றினார் ! 
எனவே, இந்த வரி இப்போது,


சுருங்கக் கூறின், ஸ்ரீ ரமண சித்தாந்தத்தை  அதன் இயல் வடிவிலேயே விரிவாக விளக்கப் போந்த நூல் இதுவே எனலாம்.




 பகவான் கையாலேயே இவ்வாறு திருத்தி எழுதப்பட்ட இதன் முக்கியத்துவம்  விளங்குகிறதல்லவா! இத்தகைய நூல் இருக்க, ரமண சித்தாந்தம் பற்றி பிற நூல்களைப் படிப்பது, கனியிருக்க கல்லைக் கடிப்பது போலல்லவா ஆகிறது !


எந்த விஷயத்திலும் பகவான் ரமணரின் முடிவான கருத்தென்ன என்பதைத் தெரிந்துகொள்ள குருவாசகக் கோவையே ஆதாரமான நூலாக இருக்கிறது.

ஒரு ஞானியின் மொழிகளைத்தாங்கி, அவராலேயே அங்கீகரிக்கப்பட்ட நூல் உலகிலேயே இது ஒன்றுதான் எனலாம்.





உபதேச உந்தியார், உள்ளது நாற்பது, குருவாசகக் கோவை ஆகிய மூன்றும் ஸ்ரீ பகவானின் நேரடி உபதேசங்களைத்  தாங்கி ஸ்ரீ ரமண ப்ரஸ்தானத்ரயமாக மதிக்கப்படுகின்றன. இம்மூன்றும் நமக்குக் கிடைக்க வழிசெய்தவர் ஸ்ரீ முருகனார்.


குறிப்பு:





1. ஸ்ரீ முருகனாரின்  பணியும் பெருமையும் இத்துடன் அமையவில்லை. அவர் எழுதிய 15,000க்கும் அதிகமான பாடல்கள் அவர் மறைவுக்குப்பின் கண்டெடுக்கப்பட்டன.கைப்பிரதியாக இருந்த  இவற்றை ஸ்ரீ சாது ஓம் பல ஆண்டுகள் உழைத்துச் சரிபார்த்து தகுந்த தலைப்புகளில்   ஸ்ரீ ரமண ஞான போதம் என்ற பெயரில் 9 பாகங்களாகத் தொகுத்தார். பேராசிரியர் கே. ஸ்வாமினாதனின் அரிய முயற்சியினால் இவை டெல்லி ரமண கேந்த்ராவின்  வெளியீடுகளாக வந்திருக்கின்றன. இவற்றையெல்லாம்  கருத்தில் கொண்டால், ஸ்ரீ முருகனாரே சென்ற சில  நூற்றாண்டுகளில் ஜனித்த பெரும் தமிழ்ப் புலவர் என்பது தெரியும்..






2. உண்மையான ஸ்ரீ ரமண  சித்தாந்தம்  நிலைப்பதற்கும் தழைப்பதற்கும், ஸ்ரீ முருகனாரின் பெருமையை உலகம் அறிவதற்கும் முக்கிய கருவிகளாக இருந்தவர்கள் ஸ்ரீ ரமணபாதானந்தர், 
ஸ்ரீ சாது ஓம்,








 பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன் ஆகியோர்.


 இவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.













பல்லாண்டு  நங்கோ ரமண பகவற்குப் பல்லாண்டு
பல்லாண்டு நாயைப் பணிகொண்ட தெய்வப் பதத்துக்கு
பல்லாண்டு பாடுமிப் பாக்கிய மீந்தாற்குப் பல்லாண்டு
பல்லாண்டு பாடுறும்  பக்தர் குழாத்துக்குப் பல்லாண்டே.

-ஸ்ரீ முருகனார்.






No comments:

Post a Comment