70.இரு புத்தகங்களின் கதை-3
நமோரமணாய நலம்பெற வாழ்க
விமோசன மெய்யன் விரைமலர்த் தாள் வாழ்க
அலை சேர்ந்துழலும் அடியார் பிறவித்தேரை
நிலைசேர வுய்த்த அருணேசன் நிலை வாழ்க
சித்த விசிராந்தியருள் செம்மலடிவாழ்க
அடைக்கல நாளும் புரக்கும் அண்ணலருள் வாழ்க
அன்பகத்து நாளும் அகலா தினிதுறைந்து
துன்பகற்று மின்பத் துணைவனடித் தூள் வாழ்க.
-ஸ்ரீ முருகனார்.
வாழ்க்கை வரலாறு: உண்மையும் மிகையும்
ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதென்பது தனிப்பட்ட கலை. அதுவும் எந்தத் துறையிலும் ( அரசியல்வாதிகள், சினிமா ஸ்டார்கள் தவிற) சிறந்து விளங்குபவர்களைப்பற்றி எழுதுவது மிகவும் கடினம். வெளிப்படையான நிகழ்ச்சிகளை ஒருவாறு எழுதிவிடலாம்; ஒருவரின் மனதையும் கருத்தையும் புரிந்துகொண்டு உண்மைக்கு மாறாமல் எழுதுவதென்பது அனேகமாக இயலாதென்றே சொல்லலாம். இலக்கிய உலகில் டாக்டர் ஜான்ஸன் ஆங்கிலப் புலவர்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் புகழ் பெற்றவை. ஜேம்ஸ் பாஸ்வெல் எழுதிய டாக்டர் ஜான்ஸனின் வாழ்க்கை வரலாறு [Boswell's Life of Dr.Johnson] இத்துறைக்கே சிகரகமாக இன்றுவரை திகழ்கிறது. யாருக்காவது ஒரு நல்ல எழுத்தாளர் அமைந்தால் 'இவருக்கு ஒரு பாஸ்வெல் கிடைத்தார் ' என்றே சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
சமய, ஆன்மீகத் துறையில் உண்மையான வரலாற்றைக் காண்பது அரிது. பக்தர்கள் எழுதும்போது [Hagiography] அன்புமிகுதியால் பலவிஷயங்களை மிகைப்படுத்தி விடுகிறார்கள். சிலவற்றை நம்பவே முடிவதில்லை. ஆதி சங்கரரைப்பற்றி பல சங்கர விஜய நூல்கள் இருக்கின்றன. எவற்றை நம்ப முடிகிறது? பழைய சமய குரவர்களே யன்றி, இன்றுவரை இதே நிலைதான் நீடிக்கிறது. ஒரு மஹான் மறைந்த பிறகு அவரைப்பற்றி எழுதுவதல்லாம் உண்மைதான் என்று யார் சொல்லமுடியும்?
வாழ்க்கை வரலாற்றைத் தவிர்த்து, கருத்துக்கள், உபதேசங்கள் என்று பார்த்தாலும், ஒரு ஞானியின் உபதேசம் அப்படியே நமக்குக் கிடைத்தது என்று சொல்ல முடியாது. ராமாயணம், கீதை போன்றவை அவை நிகழ்ந்தபோதே வரையப்பட்டவை. ஆனால் பைபிளும், தம்மபதமும் பிற்காலத்தில் தான் எழுந்தன. இருக்கும் உபதேசத்திற்கும் ஆயிரம் விளக்கங்கள் !
கதாம்ருதத்தின் தனித்தன்மை
இந்த நிலையில்தான், மஹேந்திர நாதர் எழுதிய ஸ்ரீ ராமக்ருஷ்ண கதாம்ருதம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. நடந்த நிகழ்சிகளையும் உரையாடல்களையும் அன்றன்றே குறித்துவைத்தார். தன் கருத்தைச் சொல்லாமல் குருதேவர் மொழிகளை அப்படியே பதிவுசெய்தார். இது அதுவரை காணாத புதுமை. அதனால்தான் 1942ல் அதன் ஆங்கிலப் பதிப்புக்கு அளித்த முகவுரையில் அல்டஸ் ஹக்ஸ்லி Aldous Huxley வியந்து எழுதினார்:
In the history of the arts genius is a thing of very rare occurrence. Rarer still, however, are the competent reporters and recorders of that genius.....
When we leave the field of art for that of spiritual religion, the scarcity of competent reporters becomes even more strongly marked......
Moreover, most saints have left neither writings nor self-portraits.
..their disciples ...in most cases have proved themselves singularly incompetent as reporters and biographers....Hence the special interest attaching to this enormously detailed account of the daily life and conversations of Sri Ramakrishna.....
No other saint has had so able and indefatigable a Boswell. Never have the small events of a contemplative's daily life been described with such a wealth of intimate detail. Never have the casual and unstudied utterances of a great religious teacher been set down with so minute a fidelity....
...this excellent version of a book so curious and delightful as a biographical document, so precious at the same time, for what it teaches us of the life of the spirit.
ஞானியின் அன்றாட வாழ்க்கை
ஒரு ஞானி அல்லது மஹாபுருஷரின் அன்றாட நடவடிக்கையைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமா? ஆம். யாரும் எதையும் பேசலாம் சாத்தானும் வேதத்தை ஒப்பிக்கலாம். Even the Devil may quote the scripture. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறியவேண்டும். அதனால்தான் அர்ஜுனன் கேட்டான்: ( கீதை 2.54)
கேசவா, சமாதியில் நிலைபெற்று ஸ்திரபுத்தி யுள்ளவ (ஸ்தித ப்ரக்ஞன் ) னுடைய இலக்கணம் என்ன? இவன் எப்படிப் பேசுவான்? எப்படி உட்காருவான்? எப்படி நடப்பான்?
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் தன்னை இரவும் பகலும் நன்கு பரீக்ஷிக்கும்படி ( ஒரு வ்யாபாரி நாணயத்தைப் பரீக்ஷிப்பதுபோல) தன் அன்பர்களுக்குச் சொல்லுவார்.
பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் விஷயத்தில் நாம் சிலவிதத்தில் பாக்யம் செய்தவர்களாவோம். அவர் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அவரே சொல்லியிருக்கிறார்.## 54 வருஷங்கள் அல்லும் பகலும் கொஞ்சமும் தனிமையே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். தன் முக்கிய உபதேசங்களையும் தானே எழுதிவைத்திருக்கிறார். ஆனால் அவர் முக்கிய உபதேசங்கள் வெளிவரக் காரணமாக இருந்த மஹாபுருஷர் ஸ்ரீ முருகனாராவார்.
## ஒரு ஞானி தன்னைப் பற்றிச் சொல்வது அரிதாகும். அவர் அவ்விதம் சொல்லாவிட்டால் சில விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடும். அதனால்தான் ஞானிகளின் வாக்குக்கு மதிப்பு அதிகம்.
"பகவானே, உங்களைப் பற்றி தேவரிஷி நாரதர், மற்றும் அஸிதர், தேவலர் , வ்யாசர் போன்ற ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் சொல்கிறீர்கள். ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே . (அதனால் ) நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே என்று நம்புகிறேன் . ஸர்வ மேதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேஶவ "
என்று சொல்கிறான் அர்ஜுனன். [ கீதை 10. 13,14]
முருகனார் என்னும் மஹாபுருஷர்
டி ஆர், கனகம்மாள் எழுதிய புத்தகத்தின் மேலட்டை. ஸ்ரீ ரமணாச்ரம வெளியீடு.
முருகனாரின் இயற்பெயர் C.K.சுப்பிரமணிய ஐயர்.. ராமனாதபுரத்தில் இருந்த எளிய பிராமணக் குடும்பம். 1890ல் பிறந்தவர். தந்தையார் க்ருஷ்ண ஐயர்; தாயார் சுப்புலக்ஷ்மி அம்மாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயாரின் பாதுகாப்பில் வளர்ந்தவர். இறுதிவரை தாயாரின்மேல் பற்றுக்கொண்டிருந்தார். 5 வயதுவரை பேச்சு வரவில்லை. பின்னர் ராமனாதபுரத்திலும் மதுரையிலும் படித்தார். தமிழ் ஆர்வத்தால் தமிழையே நன்கு கற்றுத்தேர்ந்தார். சீலத்திலும் சிறந்து விளங்கினார். திருக்குறளை மறுவறக் கற்று அதன்படி வாழ்ந்துவந்தார். ராமனாதபுரம் சமஸ்தானக் குடும்பத்திற்கு தமிழ் பாடம் சொல்லிவந்தார், அங்கு ஆஸ்தான வித்வான்களாக இருந்த மு.ராகவையங்கார், ரா. ராகவையங்கார் ஆகியோரின் நட்பு பெற்றார். தமிழ் இலக்கியத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். சங்க இலக்கிய நடையில் பாடும் புலமையும் பெற்றார். தமிழில் இருந்த அன்பின் காரணமாக தன் பெயரையும் முகவை கண்ண முருகனார். என்று வழங்கலானார். இவருடைய புலமையையும் திறமையையும் கண்டு இவரை அன்று Dr, Chandler தலைமையில் இயங்கிய தமிழ் அகராதிக் குழுவில் பண்டித மெம்பராக எடுத்துக் கொண்டார்கள். .
மு.ராகவையங்காரின் தூண்டுதலால் சென்னையில் ஒரு பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். இந்த நாட்களில் காந்திஜியின் இயக்கத்தில் பற்றுக்கொண்டார். "ஸ்வதந்த்ர கீதம்" என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டார். இதன் ஒரு பிரதிகூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை.
ஸ்ரீ ரமண பகவானின் முதல் தரிசனம்
இவருடைய மாமனார் தண்டபாணி சுவாமிகள் ரமணபக்தர். அவர் ஒருமுறை ஸ்ரீ ரமணபகவான் எழுதியிருந்த "அருணாசல அக்ஷரமண மாலை" என்னும் ஸ்துதி நூலையும் " நான் யார் " என்ற சிறிய பிரசுரத்தையும் முருகனாரிடம் காட்டினார். அதைப் படித்த முருகனார் அசந்துபோனார். அதை யாத்தவரின் ஞான நிலையை உணர்ந்தார். அவரைப்பார்க்க ஆவல்கொண்டார். 1923 செப்டம்பரில் பள்ளிவிடுமுறையின் போது ( Michaelmas holidays ) திருவண்ணாமலைக்கு வந்தார். ( அன்று தேதி 21-9-23 என்று குறித்திருக்கிறார்.) கோவிலில் ஸ்வாமிதரிசனம் செய்தார். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் போகக்கூடாது என்னும் நியதி ஞாபகத்துக்குவந்தது. கோவிலில் கொடிமரத்தின் கீழ் உட்கார்ந்து "தேசிகப் பதிகம்" என்ற பெயரில் 12 பாடல்கள் எழுதினார். அத்துடன் அன்று ரமண பகவான் இருந்த கீத்துக் கொட்டகைக்குச் சென்றார். ஏனோ உள்ளே போகத்தோன்றவில்லை. வெளியிலேயே காத்திருந்தார். சிறிது நேரத்தில் பகவானே வெளியில் வந்தார் ; இவர் நிற்பதைப் பார்த்து " என்ன ? " என்று கேட்டார். முருகனார் தான் எழுதி வந்திருந்த பதிகத்தைப் பண்ணுடன் பாடத்தொடங்கினார்:
பார்வளர் கயிலைப் பருப்பத நீங்கிப்
பண்ணவர் சூழலை விட்டு
வாரொளி மணிபோல் வாசகர் வாக்கை
வளர்செவி மடுத்திட விரும்பி
ஏர்வளர் பெருந்தண் டுறையடைந்தாற்போல்
இழிசினேன் புன்சொலும் வேட்டுச்
சீர்வளரருணைச் செழும்பதி சேர்ந்தாய்
தேசிக ரமணமா தேவே.
இவ்வாறு பதினொரு பாடல்களுடன் இருந்த இந்தப் பதிகம், தற்போது முருகனார் வேறொரு சந்தர்ப்பத்தில் பாடிய கீழ்வரும் பாடலுடன் முடிகிறது:
தச்சறியாத சதுமறைப் பார்ப்பான் சமைத்தவுடற்
றுச்சிலுட் கன்மத் தொடர்பாற் புகுந்த சுணங்கனிது
புக்கிலை வேட்டுப் புலம்பெய்து காலையிற் புண்ணியனின்
எச்சிலை வேட்டுன் னிருதா ளிறைஞ்சி யிரக்கின்றதே.
முருகனார் தமிழ் இலக்கிய மரபுப்படி, பாடலின் அமைப்புக்கும் பொருளுக்கும் தகுந்தபடி பண் அமைத்து அதில் தான் பாடுவார். ஆசிரிய விருத்தத்தில் அமைந்த இந்தப் பதிகத்தை தக்கேசிப் பண்ணில் [காம்போதி ராகம் ] பாடத்தொடங்கினார். ஆனால் பாட இயலவில்லை. உணர்ச்சிப் பெருக்கினால் நாத் தழுதழுத்தது, தொண்டை அடைத்தது; கண்களில் நீர்மல்கியது; எழுதியதைப் பார்க்க இயலவில்லை.. இவரது நிலையைக் கண்ட பகவானே அதைவாங்கி வாசித்தார். இதற்குப் பிறகு முருகனாரால் தன் கவிதையைப் பண்ணுடன் பாடுவது இயலாமல் போனது!
இப்பதிகம் அற்புதமானது. பகவானைப் பார்க்குமுன்பே அவரை குருவாக [தேசிகன் ] வைத்து எழுதியது. அவரைப் பார்க்காமலேயே அவர் இயல்பைச் சொன்னது. இந்த வரிகளைப் பாருங்கள்:
பற்பல விதமாப் பலபடப் புரிந்த
பழவினை யொழித்திடப் பரிந்தோ
சிற்பர யோகஞ்செறிந்து நிற்கின்றாய்
தேசிக ரமணமா தேவே.
தேகமே மிகையாத் தேர்ந்தெலாந் துறந்த
தேசிக ரமணமா தேவே
வந்தடி வணங்கிடு வார்க்குத்
தூய்மையாம் உள்ளத் துறவினை நல்கித்
துகளறு காட்சியு மளித்துச்
சேய்மையாம் பொருளை யண்மையிற் சேர்ப்பாய்
தேசிக ரமணமா தேவே.
ரமணரின் நிழல்
இந்த ஒரு தரிசனத்திலேயே முருகனார் பகவானால் முற்றும் ஆட்கொள்ளப்பட்டார். இதன்பிறகு அடிக்கடி வருவார். ஆனால் அவரை திரும்பிப் போகச்செய்வது பெரும்பாடாகிவிடும், ரயில் நிலையத்திற்குப் போவார்; ரயிலும் வரும்; ஆனால் அதில் ஏறி உட்காரத் தோன்றாது! மீண்டும் ஆஶ்ரமத்திலேயே வந்து நிற்பார் ! பகவான் அவருடன் யாரையாவது அனுப்பி அவரை ரயிலேறச் செய்வார். முருகனாருக்கு உலகில் இருந்த ஒரே பிடிப்பு அவர் தாயார்தான். அவர் தாயார் மறைந்ததும், சடங்குகளைச் செய்துவிட்டு, மனைவிக்கும் ஒரு ஏற்பாடு செய்துவிட்டு 1926 ஜூலையில் நிரந்தரமாக அண்ணாமலைக்கே வந்துவிட்டார். அதன்பிறகு, 1973 ஆகஸ்டில் தன் உடலை உகுக்கும் வரை அங்கிருந்து நீங்கவில்லை. ஏதோ காரணத்தினால் ஆசிரமத்திலும் தங்கி உணவு கொள்ள வில்லை. பக்கத்தில் பலாக்கொத்தில் இருந்தார். பிச்சையெடுத்தே உண்பார். இந்த நேரம் தவிர பகவான் சன்னிதியிலேயே இருப்பார். பகவானின் நிழல் எனக் கருதப்பட்டார
வலதுகோடியில் முருகனார் அமர்ந்திருக்கிறார்.
பாடுவது பகவானைப் பற்றியே !
பகவானைப் பார்த்தபிறகு பிறவிஷயங்களைப் பற்றிப் பாடுவதை நிறுத்திவிட்டார். பகவான் பெருமை, பகவான் பகவான் உபதேசம், பகவானிடம் தனக்கு நேர்ந்த அனுபவம் ஆகிய பகவான் விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதுவார். இதற்கும் தூண்டுகோலாக ஒருவிஷயம் அமைந்தது..
பகவான் மலைமீது இருந்த போது பல அன்பர்கள் பகவான் மீது பாடல்கள் எழுதி வந்து சமர்ப்பிப்பார்கள். [ செந்தமிழ்க்கவி ராமச்சந்திர ஐயர் என்பவரும் அவர்களில் ஒருவர்,] அம்முறையில் முருகனாரும் ஒருமுறை ஒருபாடலை எழுதினார்:
அண்ணாமலை ரமணன் அன்பர்க் கருண்மாரி
கண்ணாலே பெய்யும் கருணைத் திறம்பாடி
எண்ணாதன வெண்ணி ஏங்கடியர் வெம்பாவத்
திண்ணா சறவே தெறுசே வகம்பாடிப்
பெண்ணா னலிகளெனும் பேதத்தை நீத்துத்தம்
உண்ணாடுளத்தொளிறும் உண்மை வளம்பாடிப்
பண்ணார் அவன்புகழைப் பாடுங்கீ தாமுதம்போல்
தண்ணார் அமைதி தழையேலோர் எம்பாவாய்.
இதைப் பார்த்த பகவான் 'ஓ நீர் மணிவாசகரைப்போல் போல் எழுதுவீரோ ? இப்படியே எழுதிகொண்டுபோனால் திருவாசகம்போல் அமையுமே " என்றார்.
இதைக்கேட்ட முருகனார் திடுக்கிட்டார். " திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகர் எங்கே, மூட மதியுடைய நான் எங்கே ! சூரியனுடன் மின்மினிப் பூச்சி போட்டிபோட முடியுமா? அனுபூதிமானாகிய மணிவாசகர்போல் நான் எப்படி எழுத முடியும் " என்று விம்மலுடன் கூறினார்.
அன்று பகவான் முருகனாரை அருட்கண்ணால் பார்த்தார். அதன் பிறகு முருகனார் திருவாசக அமைப்பு முறையில் , ஆனால் தேவாரப் பண்களில் பாடல் எழுதவாரம்பித்தார். 1933ல் இவை தொகுக்கப்பட்டு "ஸ்ரீ ரமண சந்நிதி முறை " என்ற பெயரில் நூலாக வந்தது. இதன் அருமையைக் கண்ட தமிழ் அறிஞர்கள் டாக்டர் உ.வே. சாமினாதையர், மு.ராகவையங்கார், வடிவேலு செட்டியார், செந்தமிழ்க்கவி ராமச்சந்திரையர், தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்..முருகனாரோ, எல்லாம் பகவானது அருள் என்று சொல்லிவிட்டார். முதற்பதிப்பில் எழுதிய நூல் வரலாறு என்ற பகுதியில் இவ்வாறு எழுதினார்:
உருக்குங் கருணை யுடை ரமணேசன்
திருக்கண்ணோக்கச் சேர்த்தலு மன்னோன்
சயம்பெறு மணிவாசகர் வாசகம் போல்
இயம்பவும் வலையோ என........
அசைத்தே மதியை அருளாலலர்த்தி
என்னிதயத்தே இலங்கவ் விறைவன்
என்னது செய்கை இலாதே ரமண
சந்நிதி முறை நூல் சாற்றினன்
தன்னது வாய்மை தழைத்தோங்கிடவே.
வாதவூர் மாணிக்க வாசகரென் வாக்கிலிருந்
தோதலா லோதினே னோர்தகவு மில்லாதேன்
போத குரு ரமண புங்கவன் செம்பொன்னடிக்கு
நீதவொளி சேர்சந் நிதிமுறை நூ லன்பாலே.
இதைப்பற்றி பகவான் ஸ்ரீ ரமணரே எழுதிய பாடல் இதோ:
அகத்தாமரை மலர்மீதுறை அருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
சகத்தாருய வகுத்தான் முறை திருவாசக நிகரே.
இவற்றாலெல்லாம் இந்த நூலின் பெருமையும் அதன் ஆசிரியரான முருகனாரின் மாண்பும் புலப்படும்.
சந்நிதிமுறை என்பது பகவானிடம் நம் முறையீடுகளைத் தெரிவிப்பதாக அமைந்த பாடல். இதில் அடங்கியுள்ள பல பாடல்களுக்குப் பின்னால் சில அருமையான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இது பகவான் ஸ்ரீ ரமணரின்மீது அமைந்த ஒப்பற்ற தோத்திர நூலாகும். இதன் சில பகுதிகளை பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஸ்ரீ ரமணாச்ரம வெளியீடு.
ரமணபாதானந்தர்
இது ஏதோ காரணத்தினால் ஆசிரமப் பதிப்பாக வரவில்லை, முதல் பதிப்பும் (1933) இரண்டாம் பதிப்பும் (1939) ஸ்ரீ ரமணபாதானந்தர் என்ற அன்பரால் வெளியிடப்பட்டது. [ மூன்றாம் பதிப்பு 1971 தான் ஆசிரமம் வெளியிட்டது.
நான்காம் பதிப்பு 1998ல் வந்தது.] இந்த அன்பர் வைஷ்ணவராக இருந்தும் முருகன் மீது பக்தியுடையவர். பகவானிடமும் பக்தியுடையவர். முருகனாரின் புலமையைப் போற்றி அவரிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டவர். "பகவான்" என்ற பெயரைக்கேட்டாலே மனமுருகிக் கண்ணீர் வடிப்பார். சந்நிதிமுறைப் பாடல்களை ராக, தாளத்துடன் பாடுவார். ஆனால்,அதன் பாவத்தில் லயித்து கண்ணீர் பெருக பாடமுடியாமல் தொண்டை அடைத்து நிற்பார். பம்பாயில் ஷேர் புரோக்கராக இருந்து சம்பாதித்த பெருளையெல்லாம் முருகனார் எழுதியவற்றைப் பதிப்பதிலேயே செலவுசெய்தார். சந்நிதிமுறை வெளியீட்டை பெரிய விழாவாகக் கொண்டாட எண்ணினார். ஆனால் நம் நாட்டில் அது நடக்கவில்லை. கோலாலம்பூரில் அப்புத்தகத்தை பட்டுவஸ்திரத்தால் மூடி, யானைமீது வைத்து, தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நாதசுரகலைஞர்களின் இசையுடன் பெரிய ஊர்வலத்துடன் கோலாஹல விழாவாக நடத்தினார், சிலோனிலும் இவ்வாறு செய்தார். !
நான்காம் பதிப்பு 1998ல் வந்தது.] இந்த அன்பர் வைஷ்ணவராக இருந்தும் முருகன் மீது பக்தியுடையவர். பகவானிடமும் பக்தியுடையவர். முருகனாரின் புலமையைப் போற்றி அவரிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டவர். "பகவான்" என்ற பெயரைக்கேட்டாலே மனமுருகிக் கண்ணீர் வடிப்பார். சந்நிதிமுறைப் பாடல்களை ராக, தாளத்துடன் பாடுவார். ஆனால்,அதன் பாவத்தில் லயித்து கண்ணீர் பெருக பாடமுடியாமல் தொண்டை அடைத்து நிற்பார். பம்பாயில் ஷேர் புரோக்கராக இருந்து சம்பாதித்த பெருளையெல்லாம் முருகனார் எழுதியவற்றைப் பதிப்பதிலேயே செலவுசெய்தார். சந்நிதிமுறை வெளியீட்டை பெரிய விழாவாகக் கொண்டாட எண்ணினார். ஆனால் நம் நாட்டில் அது நடக்கவில்லை. கோலாலம்பூரில் அப்புத்தகத்தை பட்டுவஸ்திரத்தால் மூடி, யானைமீது வைத்து, தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நாதசுரகலைஞர்களின் இசையுடன் பெரிய ஊர்வலத்துடன் கோலாஹல விழாவாக நடத்தினார், சிலோனிலும் இவ்வாறு செய்தார். !
இவ்வளவு இருந்தும் இப்புத்தகத்தின் பெருமையை தமிழ் நாட்டு ஆஸ்திகர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை! இதன் தமிழ் வளத்தையும் மக்கள் கண்டுகொள்ள வில்லை!
வாழி ரமணேசன் வாழியருள் வாரிசத்தாள்
வாழிரம ணீஈயகுண மாணடியார் - ஊழிபல
வாழி பராசத்தி வாழி சதாமுத்தி
வாழிசிவா னந்த வளம்.
சந்நிதிமுறை. பாடல் 1850.
வளர்க முருகனார் புகழ்!
No comments:
Post a Comment