Monday, 1 August 2016

61.ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும்- 1



61. ஸ்ரீமத் பாகவதமும்  
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -1




நமது மதத்தில் பல சாஸ்திர நூல்கள் இருக்கின்றன. வேதம், உபனிஷதங்கள், இதிஹாஸ-புராணங்கள், பலவித மந்திர-தந்த்ர நூல்கள், தர்ம ஶாஸ்திரங்கள், பக்தி இலக்கியம் என்றிப்படி இவை கணக்கில்லாமல் இருக்கின்றன. இவற்றில் பலவற்றில் " ஃபல ஶ்ருதி " என்று வரும். அதாவது, இதைப்படிப்பதால் இன்ன இன்ன பலன் என்று எழுதியிருக்கிறது. இதையெல்லாம் எப்படி நம்புவது ?

சாஸ்திரத்தை நம்பலாமா ?


ஒருவழியில் பார்த்தால், இதெல்லாம் நம்பிக்கையின் மீது அமைந்தது. நம்பிக்கையும்  அனுபவத்தின் மீது எழுகிறது. நமது தலைமுறை வரையில் ஒவ்வொரு ஆஸ்தீகக் குடும்பத்திலும் இவற்றைப் பின்பற்றிய யாரோ பெரியவர்கள்  இருந்தே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உபாஸகர் இருப்பார்; ஒவ்வொரு வீட்டிலும் தினமும் எதோ பூஜை செய்வார்கள்; ராமாயணம், பாகவதம், ஸஹஸ்ர  நாமம் என பாராயணம் செய்வார்கள். சில மந்த்ரங்கள் ஜபம் செய்வார்கள். அதற்குத் தகுந்தபலன் இருந்தே வந்திருக்கிறது. சில விஷயங்களில்  பலபேருக்கு நேரடி அனுபவமும் இருந்திருக்கிறது. ஒவ்வொரு தீவிர நம்பிக்கையின் பின்னாலும் ஒரு அனுபவம் இருக்கவே செய்கிறது.



இப்பொழுது இளைய தலைமுறையினரிடையே இந்த நம்பிக்கை அறவே இல்லை எனலாம். சம்பிரதாயமாக ஏதோ நடக்கிறதே தவிர, ஆங்கிலப் படிப்பு படித்தவர்களுக்கு நமது இதிஹாஸ-புராணங்களில் ஆத்மார்த்தமான நம்பிக்கையோ, ஈடுபாடோ  இல்லை. அவை அவர்களுக்கு தெரியவும் தெரியாது ! முக்கால்வாசிப்பேர், முதல் நூலைப் படித்ததில்லை, பார்த்ததும் இல்லை. கூட்டுக்குடும்பங்களும் இன்று அனேகமாக இல்லை; அதனால் பல பழைய முறைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன.


இந்த நிலை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியது. இன்றும் தொடர்கிறது. 

வாழ்ந்து காட்டுவோர் பெரியோர் !


எந்த சாஸ்திரத்தில் என்ன எழுதியிருந்தாலும், அதை வாழ்ந்துகாட்டும் பெரியவர்கள் இருந்தால்தான் அதை நம்பமுடியும். இன்று பலர் மேடைக்குமேடை ஆன்மீகம் பற்றி முழங்குகிறார்கள்; டி.வி காட்சியில் ஜமாய்க்கிறார்கள். எல்லாம் காசுக்காக நடக்கும் கூத்து!




நமக்குத் தெரிந்து  உண்மைத்துறவு காத்து, மெய்யான ஆன்மீகத்தை வாழ்ந்துகாட்டியவர் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர். ஒரு காலத்திற்குப்பின் மடத்தையே துறந்துவிட்டார் ! கடைசி வரை, கார், ரயில் என்று ஏறியதில்லை; உடலால் முடிந்தவரை, நடந்தே போனார்; எந்த படாடோபமும்  இல்லாத மிக இயல்பான எளிய வாழ்க்கை  நூறாண்டுகள் வாழ்ந்து காட்டினார். எந்த நாகரீக சாதனத்தையோ, வசதியையோ நாடியதில்லை. இந்த நவீன யுகத்திலும் இது சாத்தியம் என்று காட்டினார். ஆனால், அவர் வழியை யாரும் பின்பற்றவில்லை! அதுதான் கலிகாலம் என்பது!


கலியினால் வந்த கிலி !

"ஸத்யம் வத, தர்மம் சர " என்கிறது வேதம். சத்தியத்தைப் பேசவேண்டும், தர்மத்தைச் செய்யவேண்டும். ஆனால் இன்று நடப்பது நேர்மாறாக இருக்கிறது: சத்தியமும் இல்லை, தர்மமும் இல்லை ! மஹாபாரதத்தில், துர்யோதனனை கலிகாலத்தின் உருவகமாகச் சொல்வார்கள். அவன் சொல்கிறான்: 

ஜானாமி தர்மம் ந ச மே ப்ரவ்ருத்தி :
ஜானாமி யதர்மம் ந ச மே நிவ்ருத்தி :
கேனாபி தேவான  ஹ்ருதிஸ்திதேன
யதா நியுக்தோஸ்மி ததா கரோமி.

தர்மம் என்ன என்று எனக்குத் தெரியும்; ஆனால் அதைச் செய்யமுடியவில்லை.
அதர்மம் என்ன என்பதும் தெரியும் ; ஆனால் அதைச் செய்யாமலிருக்க முடியவில்லை.
எனக்குள் ஏதோ ஒரு தேவதை நிலைகொண்டுவிட்டது ; அதன் சொல்படி  நான் செய்து வருகிறேன்.

நாம் துர்யோதனனிலிருந்து எந்தவிதத்தில் மாறுபடுகிறோம் ?

மெக்காலே : ஸூபர் சேன்ஸ்லர் !
Super Chancellor !


ஆங்கிலேயர்கள் மெக்காலேயின் கல்வித்திட்டத்தை 1836ல் அமல்படுத்தினர்.அதைக்கற்றவர்களுக்கே அரசில் வேலை என்றனர். அதனால் அதுவரை நமது நாட்டில் இருந்த கல்விமுறை சீர்கெட்டது. அதற்கு ஆதரவு இல்லாமல் போய்விட்டது. நமது பொருளாதாரம் அதற்கு முன்னரே ஆங்கிலேயர் வசம் வந்துவிட்டது. 



மெக்காலேயின் திட்டத்தில் ஒரு அம்சம் ஆங்கிலம் கற்கவேண்டும் என்பது. இன்னொரு அம்சம், 'இந்தியர்கள் முட்டாள்கள்; அவர்களுக்கு விஞ்ஞான அறிவு இல்லை; அவர்களுக்கு ஐரோப்பிய வழியில் பாடங்கள் சொல்லித்தர வேண்டும் ' என்பது. ஆனால், இதற்கும் பின்னால் ஒரு மறைமுக குறிக்கோள் இருந்தது : 'இந்தியர்கள்  தங்கள் சொந்த மதத்தில் பற்றுள்ளவர்கள்; இவர்கள் ஆங்கிலக் கல்வி கற்றால், சொந்த மதத்தை விட்டுவிடுவார்கள் ' என்பதுதான் அது. இதை அவரே நேரடியாகவே  சொல்லியிருக்கிறார்.



"Our English schools are flourishing wonderfully. We find it difficult, indeed, in some places impossible, to provide instruction for all who want it. At the single town of Hoogly fourteen hundred boys are learning English. The effect of this education on the Hindoos is prodigious. No Hindoo, who has received an English education, ever remains sincerely attached to his religion. Some continue to profess it as matter of policy; but many profess themselves pure Deists, and some embrace Christianity." 
 இதைத் தொடர்ந்து எழுதினார் :
" It is my firm belief that if our plans of education are followed up, there will not be a single idolator among the respectable classes in Bengal thirty years hence. And this will be effected without any effort to proselytise; without the smallest interference  with religious liberty, merely by the natural operation of knowledge and reflection. I heartily rejoice in the prospect."
Macaulay's letter to his father: 12, October, 1836.


இது பெருமளவுக்கு உண்மையாகிவிட்டது! ஆங்கிலக்  கல்விமுறை  வந்த 50 ஆண்டுகளுக்குள் 'படித்த' இளைஞர்கள் நமது மதத்தை தூஷிக்க ஆரம்பித்தனர்; சிலர் [ ராஜா ராம் மோஹன் ராய் போன்றவர்கள் ] நமது மதக்கொள்கைகளை 'சீர்திருத்த ' முயன்றனர். இந்தச் சந்தடியில்,கிறிஸ்தவப் பாதிரிகளும் போதகர்களும் மதமாற்றப் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். நமது மத நூல்களைப்பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பினர். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் இவர்களின் கூலிப்படையில் இருந்தனர்.

நவீன காலத்தில் கலிபுருஷன் மெக்காலே வடிவில் மீண்டும் வந்தான் போலும்! அதர்மத்திற்குத் துணைபோகும் கல்வியைக்  [ Secular education ] கொண்டுவந்தான். இன்றுவரை மெக்காலே தான் நமக்கு சூபர் சேன்ஸ்லர் !

கதாதரன் உதயம் ! முதல் சுதந்திரப்போர் முழக்கம்!


இந்த நிலையில்தான் ஒரு அதிசயம் நடந்தது. வங்காளத்தில் எங்கோ  ஒரு கிராமத்தில்  அதே 1836ம் வருஷம் பிறந்த கதாதரன் என்ற சிறுவன்,  சரியாக எழுதப்படிக்கத் தெரியாதவன் , ஆங்கிலம் கொஞ்சமும் அறியாதவன், அன்று இந்தியாவின்   தலைநகரான கல்கத்தாவிற்கு 1852ம் வருஷம் வந்தான்.



ஸ்ரீ ராமக்ருஷ்ணர் பிறந்த க்ராமமும் அவர் வீடும். பழைய தோற்றம் !



1855ல் தக்ஷிணேஶ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட காளிகோவிலில் சந்தர்ப்பவசத்தால் அர்ச்சகரானான். 17 வருஷங்கள் சாதனைகள் மேற்கொண்டு காளியன்னையின் ப்ரத்யக்ஷ தரிசனம் பெற்றான். அன்னையின் அருளால் நமது மதத்தின்  உண்மையைத் தெரிந்துகொண்டான். நமது மதத்தின் ஒவ்வொரு பிரிவின்  சத்தியத்தையும் சொந்த அனுபவ வாயிலாக அறிந்தான். நமது மதத்தின் மிக உயர்ந்த நிலையாகிய அத்வைதத்தையும் அனுபவத்தில் அறிந்தான். பின்னர் காளியின் எளிய மகனாகவே 1886 ஆகஸ்டு மாதம் 15ம் தேதி வரை வாழ்ந்தான். ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் என்ற பெயரில் உலகமே கொண்டாடும்  உத்தம புருஷர் இவரே.




சமாதி நிலையில் ஸ்ரீ ராமக்ருஷ்ணர்- 1879. இது ப்ரம்ம ஸமாஜக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ.

1872க்குப் பிறகு, படித்தவர்கள், இளைஞர்கள், உத்யோகம் பார்ப்பவர்கள், அரசுப் பதவியிலிருந்தவர்கள் என எல்லோரும் இவரைத் தேடிவரத் தொடங்கினர்.  இவரைக் கவனித்தவர்களும், இவர் பேசுவதைக் கேட்டவர்களும் நமது மதத்தின் உண்மையையும், பெருமையையும் உணரத்தொடங்கினார்கள். ஆங்கிலக் கல்வியில் சாரமில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்கள். [அதாவது, ஆங்கிலக் கல்வி கற்பதால், உண்மை ஞானம் பெறமுடியாது.]

இரு பெரும்  நிலை


ஸ்ரீ ராமக்ருஷ்ணரிடம் இரண்டு விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை :


1. நமது சாஸ்திரங்கள் கூறும் மிக உயர்ந்த நிலையாகிய  நிர்விகல்ப  ஸமாதி நிலையை அடைந்தும், பக்தி 'பாவ 'த்தில்  நிலைத்திருப்பதற்காக, அன்னையினால் , "பாவமுக " நிலையை  அருளப் பெற்றார். இதனால் உலகில் சகஜமாக இருப்பது சாத்தியமானது ; மேலும் வேண்டிய பொழுது அனாயாஸமாக சமாதி நிலை அடைவார். இந்த சமாதி நிலைதான் அறிஞர்களைக் கவர்ந்ததுடன், ஆன்மீகமே அறியாத பலரையும் அவரிடம் ஈர்த்தது !

பிற்காலத்தில் ஸ்வாமி விவேகானந்தரெனப் புகழ்பெற்ற நரேந்திரரும், முதலில் இதைப்பற்றி தன் கல்லூரியில் ஆங்கிலேயப் பேராசிரியர் ஒருவர் வாயிலாகக் கேட்டறிந்தார் !


2. முறையான பள்ளிப்படிப்பு கற்காதது போலவே, ஸ்ரீ ராமக்ருஷ்ணர் நமது  சமய சாஸ்திரங்கள் எதையும் படித்ததில்லை! அவருடைய சாஸ்திர அறிவு, சிறுவயதில் சாதுக்களுடனான பரிச்சயத்தின் வாயிலாக அவர் தெரிந்துகொண்டதுதான். பின்னால், அன்னையின் தரிசனமும் தெய்வீக அனுபவங்களும் பெற்றபின், எல்லா சாஸ்திரங்களும் அவரிடம் தஞ்சம் புகுந்தன ! அவர் பேசுவதெல்லாம் சாஸ்திரமாகவே இருந்தது! அவர் வாய்மொழிகள் ஸ்ரீமத் பாகவதம், அத்யாத்ம ராமாயணம், சண்டி, தந்த்ர நூல்கள் ஆகியவற்றின் கருத்துக்களாகவே இருந்தன





ஸ்ரீ ராமக்ருஷ்ணர் தரிசித்த அன்னை பவதாரிணி- தக்ஷிணேஶ்வரம்.
பவதாரிணி = சம்சாரக்கடலைத் தாண்டுவிப்பவள்.

சனாதன மதமே பரம சத்தியம்


ஸ்ரீராமக்ருஷ்ணர் நமது ஸனாதன மதமே ஸத்யமானது, சாஸ்வதமானது; பிற மதங்கள் தெய்வ வசத்தால் சில நாள் இருக்கும், பின் மறைந்துவிடும் என்று உறுதியாகச் சொன்னார்.

அவர் நமது மதத்தைப்பற்றிச் சொன்ன முக்கிய விஷயம், கலிகாலத்தில்  வேதம் கூறும் கர்ம முறைகளை  அனுசரிப்பது இயலாது ; நாரதர் காட்டிய பக்தி மார்கமே கலிகாலத்திற்கு ஏற்றது என்பது. இது பாகவதத்தின் மையக்கருத்தாகும்.


இதை சரியாகப் புரிந்துகொள்ளவேணும். நமது மதம் பல சாதனை முறைகளைக் கூறுகின்றது. இவை அனைத்தும் பல காலத்தில் பல ரிஷிகளாலும் மஹான்களாலும் வகுக்கப்பட்டவை. அவை அனைத்தும் சரியானவையே. ஆனால், அவை அனைத்தும் அப்படியே எல்லா காலத்திற்கும், எல்லோருக்கும் பொருந்தா.  தந்திர சாதனை பற்றிச் சொல்லும் பொழுது, 'அதுவும்  உண்மையான வழியே; ஆனால் அது வீட்டில் கொல்லைக்கதவு வழியாக  நுழைவதைப் போன்றது; தற்காலத்திற்கு ஏற்றதல்ல ' என்பார் ஸ்ரீராமக்ருஷ்ணர். 


ஸ்ரீ ராமக்ருஷ்ணர் கூறிய அறிவுரைகள்  முழுக்கவும் ஸ்ரீமத் பாகவதத்தின் கருத்துக்களாகவே   இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சிலவற்றை இனிப் பார்ப்போம். 


குறிப்பு :
மெக்காலே பல விதத்தில் நல்ல கருத்துக்கள் கொண்டிருந்தார். ஆனால், நமது மதத்தை/ நாகரீகத்தைப் பற்றிச் சரியாக அறிந்திருக்கவில்லை. நமது மதத்தை அழிப்பது அவரது நோக்கங்களில் ஒன்றாகியது. கிறிஸ்தவ மிஷினரிகள் செய்த வேலையை அவர் ஆங்கிலக் கல்வி வாயிலாக சாதிக்க நினைத்தார். இதில் பல இந்தியர்களே ஈடுபட்டார்கள். இன்றும் இந்த நிலை நீடிக்கிறது!






No comments:

Post a Comment