Saturday, 6 August 2016

66. ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -6


66. ஸ்ரீமத் பாகவதமும்
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் -6



ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் வாழ்க்கை தெய்வீகமயமானது. பல அற்புத அனுபவங்கள் நிறைந்தது. ஒவ்வொரு க்ஷணமும் தெய்வ அனுபவத்திலேயே  கழித்தார். வெகு சிரமப்பட்டுதான் உலக நினைவு அவருக்கு வரும். எந்த சமயத்திலும் ஒரு பொருளோ. சொல்லோ, காட்சியோ அவரை சமாதி  நிலையில்  சேர்த்துவிடும். சமாதி நிலையில் தவிர, சாதாரண சமயங்களிலும் பல தெய்வீகக் காட்சிகளைக் காண்பார். அன்னையுடன் அனவரதமும் உரையாடுவார். 

ஸ்ரீ ராமக்ருஷ்ணரின்  தெய்வீக நிலை

அவர் காசி சென்றபோது, அங்கு மணிகர்ணிகா கட்டத்தில் நம் சாஸ்திரங்கள் சொல்லும் ஒரு காட்சியை  நேரில் கண்டார். அங்கு மரணமடையும் ஜீவனுக்கு அதன் வலது செவியில் சிவபெருமானே தாரக மந்திரம் சொல்வதை நேரில் கண்டார் !

 ராமரையும் சீதாப்பிராட்டியையும் பல தடவை கண்டிருக்கிறார்'










ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  ஃபோட்டோவில் நாம் காணும் அற்புதப் புன்னகை அன்னை சீதாதேவியின்  திருமுகத்தது ! 

















அவர்  தூய அன்னை சாரதாதேவியாருக்காக இரண்டு தங்க வளையல்கள் செய்யச்செய்தார். இவை, அன்னை சீதை கையில் அவர் பார்த்தவை ! இவ்வாறு எவ்வளவோ அற்புத அனுபவங்கள்!











க்ருஷ்ணருடன் தொடர்பு

ஆனால்  ஸ்ரீமத் பாகவதம் பற்றிய அவர் அனுபவங்கள் சொல்லுக்கடங்கா அற்புதம் வாய்ந்தவை! ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வுலகை நீத்ததும், அவருடைய சான்னித்யம் ஸ்ரீமத் பாகவதத்தில் தங்கியது. அதனால் ஸ்ரீமத் பாகவதத்தை பகவானின் "வாங்மய ரூபம் " என்று சொல்கிறோம். இதை நேரில் கண்டு உணர்ந்தவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். பகவான் விக்ரஹத்திலிருந்து ஓர் ஒளி கிளம்பி, பாகவதப் புத்தகத்தை  அடைந்து, பின் பக்தர்களையும்  தொட்டது ! அதனால் அவர்  " பாகவதம் - பக்தர் - பகவான் " என்று எப்பவும் சொல்வார் ! பாகவதத்தைச் சொல்லும்படி ஸ்ரீ ஶுகருக்கு பகவானே ஆஞ்ஞாபித்தார் என்பார். அவர், பகவானின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ சைதன்யரின்  உண்மையான ஜன்ம ஸ்தானத்தை தன் தெய்வீகக் காட்சியால்/ உணர்வால் கண்டு சொன்னார். இது நதியின் போக்கு மாறியதால் புதையுண்டு கிடந்தது. அவர் மதுரா-ப்ருந்தாவனம் போனபோது அங்கிருந்து திரும்பிவரவே மறுத்துவிட்டார் ! கடைசியில் அவரது தாயாரின் நினைவுதான் அவரைத் திரும்பிவரச் செய்தது ! அவர்  பூரி ஜகன்னாதர் ப்ரஸாதத்தை வெகுவாக மதித்தார். அவர் அறையில் அது எப்பவும் இருக்கும். ஆனால் அவர் அந்த க்ஷேத்திரத்திற்குப் போனதில்லை ! அப்படிப்போனால் திரும்பிவரமாட்டார் என்பது அவரது உள்ளார்ந்த நம்பிக்கை ! 




அவரிடம் வந்த இளைஞர்களில்  ராக்கால் ஸ்ரீ க்ருஷ்ணருடன் ப்ருந்தாவனத்தில் விளையாடியவர் என்று கண்டார். அவரைத் தன் மானஸீக- ஆன்மீக  புத்ரராகக் கொண்டார். இவரே பிற்காலத்தில் "ராஜா மஹராஜ் " என்று அழைக்கப்பட்ட ஸ்வாமி ப்ரம்மானந்தரானார்.  ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் முதல் தலைவர் இவரே ! பெரும்பாலும் இந்த உலக நினைவே இல்லாமல் இருந்தவர் !






பாராயணப்  புத்தகங்கள்

நமது ஆன்மீகப் புத்தகங்கள் பலவகையானவை. ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் இதிஹாஸங்கள். வால்மீகி ராமாயணம் லக்ஷக்கணக்கானவர்களால் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது; ஆனால் மஹாபாரதத்தை அனேகமாக யாரும் வீட்டில் படிப்பதில்லை [அப்படி ஒரு நம்பிக்கை ] ஆனால் அதன் பகுதியான பகவத் கீதை பாராயண நூலாக இருந்தாலும், பலர் அதை ஏதோ ஸன்யாசிகளுக்கானது என்றே நினைக்கிறார்கள். விஷ்ணு ஸஹஸ்ர நாமம் மந்திரமாகவும், துதியாகவும் பாராயணத்திற்கும் வழங்கிவருகிறது. பாகவதம், ராமாயணம் போன்று பாராயண நூலாக இருக்கிறது. மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி அதைச் சுருக்கி "நாராயணீயம் " என்று செய்திருக்கிறார் !  இதுவும் சிறந்த பாராயண நூலாக இருக்கிறது. 

இக்காலத்தில் நம்மவர்களுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாததால் பலவித மொழிபெயர்ப்புக்களையும்  சுருக்க உரைகளையும் நாடுகின்றனர். இது அவ்வளவு சரியல்ல. மூல ஶ்லோகங்களுக்கு உள்ள ஆன்மீக சக்தி மொழிபெயர்ப்புக்கோ, உரை நடைகளுக்கோ இல்லை. மேலும் இவை பெரும்பாலும் வியாபார நோக்கம் கொண்டே வெளியிடப்படுகின்றன. இவை கதைப்புத்தகம் போன்ற நடையிலேயே எழுதப்படுகின்றன. ஸம்ஸ்க்ருதம் தெரியாவிட்டால், மூலத்தைப் படிக்கும்போதே  தெரிந்துகொள்ளலாம். சிறிது முயற்சி தேவை; இதுவே சிறந்த ஆன்மீகப் பயிற்சியாகிறது! 





பாகவதம்- தமிழில்









ஸ்ரீமத் பாகவதம் மூலம் உரையுடன் மூன்று சிறந்த தமிழ் பதிப்புக்களில் கிடைக்கிறது:

1. கடலங்குடி நடேச சாஸ்திரியார் பதிப்பு. 7 வால்யூம். கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 17.
2. சோமசுந்தர தீக்ஷிதர் ப்ரதி பத உரையுடன்.  7 வால்யூம். ஸ்ரீ ராம நாம வங்கி- ஸ்ரீ பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், சென்னை-33

இவை இரண்டும் மிக அருமையான வெளியீடுகள். நடேச சாஸ்திரியாரின் பதிப்பில் நாராயணீயமும் முழுதும் இருக்கிறது ! ஆஸ்திகர்களுக்கு உகந்த பதிப்பு.

3. கீதா ப்ரஸ், கோரக்பூர் வெளியீடு. 3 வால்யூம்.  தமிழ் எழுத்தில் சரியான உச்சரிப்புக் குறிப்புக்களுடன்  மூலம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், உரை சுமார்தான். ( சில இடங்களில் திராவிடக் கட்சிகளின் பாஷைபோல் இருக்கிறது ! ஆன்மீகப் புத்தகத்தில் ஆன்மீக பாஷை இல்லையென்றால் பின் என்ன சொல்வது ? தொடர்கதையா எழுதுகிறார்கள் ? )

ஆனந்தமய க்ருஷ்ணர் !

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் ஆனந்த வர்தனர்- ஆனந்தத்தைப்  பெருகச் செய்பவர்!  ஆனந்தம் என்பது சுக-துக்கம் என்கிற இரட்டைகளை மீறிய நிலை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல்லே கிடையாது ! இதைத் தமது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். மிக எளிய நிலையில் வாழ்ந்து, செல்வத்தால் அடையமுடியாத சாந்தியையும் ஆனந்தத்தையும் தன் அன்பர்களிடையே பரப்பினார்! எப்பொழுதும் பகவானைப் பற்றிய பேச்சுதான், ஆடல் பாடல் தான்! ப்ருந்தாவனத்தில் கண்ணன்  இருந்த அந்த  நாட்களே திரும்பிவந்தது போல் அவர் வாழ்க்கை இருந்தது- அதுவும் கடைசி 14 ஆண்டுகளில் !

பாகவதத்தின் முக்கிய அம்சம் அதில் வரும் பக்தர்களின் வரலாறுகள் தான் ! பக்தர் இல்லையேல் பாவம், பகவான் என்ன செய்வார் ? அவர் பக்த பராதீனன்- பக்தர் வசப்பட்டவர். ஏழை பக்தர்களையே சொத்தாக உடையவர் பகவான்  ( அகிஞ்சன வித்தாய ) என்றார் குன்தி தேவி. இதே போல் ராமக்ருஷ்ணரின் வாழ்விலும் நிகழ்ந்தது. பல சாதாரண பக்தர்கள் தவிர, அவருக்கு வந்த குருமார்களே அவர் பக்தர்களானார்கள் ! அவரைப் பார்த்த டாக்டரே பக்தரானார் !

மஹேந்த்ர நாத குப்தர்



இதையெல்லாம் நமக்கு படம் பிடித்துக் காட்டியவர்   "M"  என்ற எழுத்திற்குள் புகுந்துகொண்டு தம்மை விளம்பரப் படுத்திக்கொள்ளாத தொண்டர்-அன்பர் மஹேந்த்ர நாத குப்தர் . 

இவர் ஸ்ரீ ராமக்ருஷ்ணருடன் பழகிய நாட்கள் குருதேவரின்  வாழ்க்கையில்  இறுதி நாலரை வருஷங்களாக அமைந்தது நமது கர்மவினை போலும்!  அதிலும் அவர் பள்ளி ஆசிரியராக இருந்ததால், விடுமுறை நாட்களில் மட்டுமே  ஸ்ரீ ராமக்ருஷ்ணரைத் தரிசிக்க முடிந்தது. ஆனால்  அவர் தரிசித்த ஒவ்வொரு நாளும் வங்காளி மொழியில் குறிப்பெழுதி வைத்தார். இதில்,  என்ன தேதி, கிழமை, நேரம், எங்கு பார்த்தார், என்ன நிகழ்ச்சி நடந்தது, யார் யார் இருந்தார்கள்-வந்தார்கள்- போனார்கள்,  யார் எங்கு அமர்ந்திருந்தார்கள்,  என்ன பேசினார்கள், ஸ்ரீ ராமக்ருஷ்ணர் என்ன சொன்னார் என்ற எல்லா விவரமும் வருகிறது. ஸ்ரீ ராமக்ருஷ்ணர்  சொன்ன சொற்களை  மாற்றாமல் அப்படியே எழுதினார் ! இதை விரிவாக்கி, " ஸ்ரீ ராமக்ருஷ்ண கதாம்ருதம் " என்ற பெயரில் 5 பாகமாக பல ஆண்டுகள் இடைவெளியில் வெளியிட்டார். ஐந்தாவது பாகத்தின் ப்ரூஃப் வந்து, அதைத்திருத்தி முடித்த அதே இரவில்  குருதேவர் அடி சேர்ந்தார் ! இதைப்படித்த அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், "குருதேவரே  நேரில் பேசுவதுபோல் இருக்கிறது " என்றார் எனில், வேறு என்ன  சர்டிஃபிகேட்  தேவை? The words have come out from the depth of Truth.








இதை ஆங்கிலத்தில்  The Gospel of Sri Ramakrishna  என்ற பெயரில் 1942ம் வருஷம் வெளியிட்டனர். இந்த ஆங்கில பொழிபெயர்ப்பும்  மிகச்சிறந்ததாக அமைந்து விட்டது. தமிழில் வந்த எந்த மொழிபெயர்ப்பும் இவ்வளவு  சீராக இல்லை.










கதாம்ருதம்





 M நன்கு கற்றறிந்தவர். " கதாம்ருதம் " என்ற சொல் ஸ்ரீ பாகவத்தில் வருகிறது. கோபிகைகள் பகவானின் லீலைகளை விளக்க இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதன் மகிமை என்ன என்பதையும் சொல்கின்றனர்.


तव कथामृतं तप्तजीवनं
     कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं
     भुवि गृणन्ति ते भूरिदा जनाः ॥ ९॥



தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
கவிபிரீடிதம் கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருணன்தி தே பூரிதா ஜனா:                         10.31.9

ஹே க்ருஷ்ணா ! தங்களுடைய  கதையாகிற அமிர்தம்  தாபத்தை அடைந்தவர்களுக்கு உயிர் அளிப்பது.  (வ்யாஸர், ஶுகர் போன்ற ) ஞானிகளால் கொண்டாடப்பட்டது. காம கர்மங்களைப் போக்கக்கூடியது. கேட்ட மாத்திரத்தில் மங்களங்களைக் கொடுக்கக்கூடியது. ஸகல ஐஶ்வர்யத்தையும் அளிக்கக்கூடியது. இக்கதையாகிற அமிர்தத்தை யார் சொல்கிறார்களோ அல்லது அனுபவிக்கிறார்களோ அவர்களே மஹாபாக்யசாலிகள். (புண்யம் செய்தவர்கள்.)

குறிப்பு:
இந்த ஶ்லோகத்தில் "க்ருஷ்ண" என்ற பதத்தைச் சேர்த்துச் சொல்லவேண்டும் என்று ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ரர் சொல்லியிருக்கிறார். அதன்படி:

தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்த ஜீவனம்
கவிபிரீடிதம் க்ருஷ்ண கல்மஷாபஹம்
ஶ்ரவண மங்களம் க்ருஷ்ண  ஸ்ரீமதாததம்
புவி க்ருணன்தி  தே க்ருஷ்ண பூரிதா ஜனா :

கதாம்ருதம்= கதையாகிய அமுதம் என்ற பதம்  The Gospel of Sri Ramakrishna வுக்கும் மிகவும் பொருந்தும். இதை "ஸ்ரீ ராமக்ருஷ்ண பாகவதம் " என்றே சொல்லலாம் ! இதைப் பாராயணம் செய்வதும் மிகவும் பயன் தரும். ராமரும், க்ருஷ்ணரும், அன்னை காளியும், பல ஞானி-பக்தர்களும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் உரையில் நம்முடன் உறவாடுவார்கள்.பல புராண-இதிஹாசக் காட்சிகள் நம் கண்முன் நிற்கும்; பல சாஸ்திர உண்மைகளின் சூக்ஷ்மம் விளங்கும். நம் மனம் உயர்வடையும். தீவினைகள் அகலும். பக்தி பெருகும்.  இதன் நல்விளைவுகளை அனுபவத்தில் உணரலாம். இதைப்படித்தபின் ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துக்கொண்டால் பல விஷயங்கள் தெளிவாகும். 

அன்பர்கள் இதைப்படித்துப் பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 


Note:
Sri Ramakrishna did not create any new sect or order. The Sri Ramakrishna Math was founded later by others. Sri Ramakrishna can or need by no means be confined to or exclusively identified with the RK Math circles. There is no scent or sign of any sectarianism in the words of Sri Ramakrishna.Like Vyasa, Suka and Narada, he is above all sects and divisions and belongs to all Hindus. The Gospel of Sri Ramakrishna is the only authentic source on his teachings. We need no other book.

Most of us educated in modern subjects through English lack exposure to authentic sources of our religious knowledge. What we learn comes through the filter of various sects/divisions, with modern prejudices and interpretations. In the circumstances, 'The Gospel of Sri Ramakrishna' will prove to be an excellent resource to understand our religion, and to realise what is practicable for sadhana in the modern conditions.








No comments:

Post a Comment