Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts

Monday, 9 October 2017

83.ஊர் வாய்


83. ஊர் வாய்
costigdj.wordpress.com

"உலை வாயை மூடினாலும் மூடலாம், ஊர் வாயை மூடமுடியுமா " என்று தமிழில் பழமொழி உண்டு. வம்பு-தும்பு மக்களின் சுவாரஸ்யமான பொழுது போக்கு அம்சம்- காசு பணம் தேவையில்லை! வீண்பேச்சு மிகவேகமாகப் பரவும் : Four horses cannot overtake the tongue என்பது ஒரு சீனப் பழமொழி.  It is easier to dam a river than to stop gossip  என்று ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் சொல்வார்கள். எல்லா மதங்களும் எதைப்பற்றியும்/ யாரைப்பற்றியும் தவறாகப் பேசாதே என்றே சொல்கின்றன. ஆனால் கோவில் குளங்களில் கூட  கும்பல்  சேர்ந்தால் பாதி வம்பு அரட்டைதான். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது! சென்னை சங்கீத சீசனில் கச்சேரிகளுக்குப் போனவர்களுக்கு இது அனுபவமாகியிருக்கும்! நமது ஆபீசுகளில் இது  சர்வசகஜம். Is not gossiping a form of networking, after all! Gossip brings people together, as do smoking and drinking!


பாவம், இதனால் சிலர் பாதிக்கப் படுவார்களே என்று கவலைப்  படுவதில்லை. சில மானஸ்தர்கள் அவதூறு தாங்காமல் உயிரைக்கூட விடலாம். "Done to death by slanderous tongues"  என்று ஓர் இடத்தில்  ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்!. 

இது ஏன் இப்படி நடக்கிறது என்பது புரிவதில்லை. பெரிய இடமோ, சிறியவரோ- யாரும் இதற்கு விலக்கல்ல. இதை இன்று சோஷியல் மீடியாவில் தாராளமாகவே பார்க்கிறோம்.பெரிய பதவியில், இருப்பவர்களைப் பற்றிய தாறுமாறான கருத்துக்கள் / வதந்திகள் தாராளமாகவே பகிர்ந்துகொள்ளப் படுகின்றன. இன்று தமிழ் நாட்டில் எதற்கும் மோடியையே சாடுகின்றனர்! பதவியில் இருப்பவர்கள் விமர்சனத்திற்கு உட்பட்டே தீரவேண்டும் - அது ஜனநாயகமுறையில் அவசியமான நிலை. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் தூற்றுவதை எப்படி ஏற்கமுடியும்? கொள்கையை விமர்சிக்கலாம்- குறை நிறைகளச் சுட்டிக்காட்டலாம்; தனிப்பட்ட முறையில் ஏன் தாக்கவேண்டும்? இன்று சோஷியல் மீடியாவில் இது மிகவும் சகஜமாகிவிட்டது, ஹை-டெக் முத்திரை பெற்றுவிட்டது!

50களில் வெளிவந்த ஒரு தமிழ்ப் படத்தில்  இதை நன்றாக விளக்கினார் 
 கவிஞர் கா.மு ஷெரிஃப்.






வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)






மணியம் செல்வன் வரைந்த அருமையான படம்.
Source: kavikamu.wordpress.com

வசதியைக் கண்டால் பொறாமையால் வெறுப்பு, ஏழ்மையைக் கண்டால் ஏளனம்- இதுதான் அடிப்படையோ ?

70களில் வந்த ஒரு ஹிந்திப் படத்தில்  கவிஞர் ஆனந்த் பக்ஷி இப்படி எழுதுகிறார்:

कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रैना


குச் தோ லோக் கஹேங்கே,
லோகோ கா காம் ஹை கஹ்னா
சோடோ, பேகார் கீ பாதோ மே
கஹீ பீத் ந ஜாயே ரைனா 

ஜனங்கள்  ஏதாவது  பேசத்தான் செய்வார்கள் - 

அப்படிப் பேசுவதுதான்  அவர்கள் தொழில் !
இதை பொருட்படுத்தாதே- 
இல்லையேல் இரவெல்லாம் இந்த வீண் விவகாரத்திலேயே கழியும்!


कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई
तू कौन है, तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई
फिर क्यूँ संसार की बातों से, भीग गये तेरे नैना
कुछ तो लोग कहेंगे...


குச் ரீத்  ஜகத் கீ ஐஸீ ஹை,
ஹர் ஏக் சுபஹ் கீ ஶாம் ஹுயீ
தூ கௌன் ஹை,  தேரா நாம் ஹை க்யா
ஸீதா பீ யஹா(ன்) பத்னாம் ஹுயீ
ஃபிர் க்யூ(ன்) ஸம்ஸார் கீ பாதோ ஸே
பீக் கயே தேரே நயனா
குச் தோ லோக் கஹேங்கே.........

இந்த உலகில்  சில நியதிகள் அப்படி -
காலை என்று வந்தால் மாலை என்று வரும்!
நீ யார், உன் பெயர் என்ன ?
ஸீதைக்கும் இங்கு கெட்டபெயர் வரவில்லையா?
பின் ஏன்  உலகின் இத்தகைய  பேச்சைக்கேட்டு
உன் கண்ணில் நீர் வழிகிறது?
ஜனங்கள்   ஏதாவது பேசத்தான் செய்வார்கள்......


हमको जो ताने देते हैं, हम खोए हैं इन रंगरलियों में
हमने उनको भी छुप-छुपके, आते देखा इन गलियों में
ये सच है झूठी बात नहीं, तुम बोलो ये सच है ना
कुछ तो लोग कहेंगे...


ஹம்கோ ஜோ தானே தேதே ஹை,
ஹம் கோயே ஹை இன் ரங்க்ரலியோ மே
ஹம்னே உன்கோ பீ சுப்-சுப் கே,
ஆதே தேகே இன் கலியோ மே
யே ஸச் ஹை ஜூடி பாத்  நஹீ,
தும் போலோ யே ஸச் ஹை நா
குச் தோ லோக் கஹேங்கே .......

நாம்  தகாத வழிகளில் சென்று கெட்டலைந்து விட்டோம் -
என நம்மைத் திட்டுகிறார்களே  அவர்கள்
இதே சந்து பொந்துக்குள் திருட்டுத் தனமாக  நுழைவதை
நாம் பார்த்திருக்கிறோம் !
இது உண்மை, பொய்யல்ல.
 நீயே சொல்- இது உண்மையல்லவா!
ஜனங்கள் ஏதாவது பேசத்தான் செய்வார்கள்.

இந்த பத்தியில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார் கவிஞர். புரளி-அவதூறு கிளப்புபவர்களின் நடத்தை என்ன? குட்டுவதெல்லாம் மோதிரக்கை அல்ல! Pot calling kettle black?

 இது 'கம்மாஜ் ' ராகத்தில் அமைந்த பாடல். இசை அமைத்தவர் R.D.Burman.
பாடியவர் கிஷோர் குமார்.


யார் என்ன சொன்னாலும் கலங்காமல் நாம் நம் கடமையில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்



என்பது நீதி நெறி விளக்கம்.


இதையே  சற்று  'லைட்' மூடில் சொல்கிறார் ஸாஹிர் லுதியான்வி!

चाहे कोई खुश हो चाहे गालियाँ हज़ार दे
मस्त राम बन के ज़िंदगी के दिन गुज़ार दे

சாஹே கோயி குஷ் ஹோ, சாஹே காலியா ஹஜார் தே
மஸ்த் ராம் பன் கே ஜிந்தகீ கே  தின் குஜார் தே
சிலர் குஷி யடையட்டுமே, 
சிலர் ஆயிரம் தான் திட்டட்டுமே, அதனால் என்ன?
 நாம் விளையாட்டாக  வாழ்க்கையைக் கழிப்போம்!

பிறர் சொல்லும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பது  இங்கு கருத்து. ஆனால் அடுத்த வரியில் சிந்தனை மாறுகிறது!

बाँट कर जो खाये उसपे अपनी जान ओ दिल लुटा
अरे जो बचाये माल उसको जूतियों का हार दे


பா(ன்)ட் கர் ஜோ காயே உஸ்பே அப்னி ஜான் ஓ தில் லுடா
அரே  ஜோ பசாயே மால் உஸ்கோ ஜூதியோ கா ஹார் தே

தன்னுடன் இருப்பதை பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்களே -
அவர்களிடத்தில் நாம் மனதைப் பறிகொடுப்போம்!
யோவ்! யார் தன் பொருளைப் பதுக்கி வைக்கிறார்களோ
அவர்களுக்கு செருப்பு மாலை அணிவிப்போம்!

இது  சோஷலிசம் போல் தோன்றும் ! ஆனால் நமது அரசியலிலாகட்டும், சினிமாவிலாகட்டும் சோஷலிசம் வெறும் டயலாக் தான்! எந்த  சோஷலிஸ்டு தலைவரும் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கவில்லை!
இது சோஷலிசக் கொள்கையல்ல. வசதியுள்ளவர்கள்  மற்றவர்களுக்கு ஆவன  செய்யவேண்டும்  என்ற சாமானிய  தர்மம். இது உபனிஷதம் முதல் குறள் வரை நாம் காணும் நிலை. காந்திஜியும் இதையே சொன்னார். திரைக் கவிஞர் அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார் !

நாம் இத்தகைய  புரளி வலையிலோ, அலையிலோ  மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் !




ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே


வள்ளலார் ஸ்வாமிகள். .


 "He has a right to criticize who has a heart to help." --Abraham Lincoln


eraeravi.blogspot.in

Saturday, 2 July 2016

37. கஷ்டமும் பரிகாரமும்



37. கஷ்டமும் பரிகாரமும்

பிறவி என்று வந்துவிட்டால், கஷ்டமும் எங்கே என்று காத்திருக்கிறது! பொதுவாக, நமது  பழவினையே நமது கஷ்டத்திற்குக் காரணம் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை."தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்று புறநானூறு சுருங்கச் சொல்கிறது.

ஔவையார் பாடினார்:

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.


செய்த தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறம் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!


தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.



ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்  என்பது சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வலியுறுத்தும் உண்மை. 

ஊழிற் பெருவலி யாவுள என்பது வள்ளுவர் வாக்கு.


 டெக்னிகலாக ஏதேதோ சொல்வார்கள். ஆதி ஆத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் என்ற வழியில் வரும் என்பார்கள். ஜோசியர்கள் ஜாதகத்தைப் பார்ப்பார்கள். கிரக சாரம் சரியில்லை என்பார்கள்! பரிகாரமும் பலமாதிரி சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் இதைப்பற்றி  நிறைய பத்திரிகைகளும் புத்தகங்களும் வந்த வண்ணமிருக்கின்றன! எதை நம்புவது, எதை விடுவது என்று தெரிவதில்லை!

பெரியவர்கள் சொன்ன வழி

ஊழ், விதி என்று எவ்வளவு சொன்னாலும், வரும் கஷ்டத்திற்கு பரிகாரமும் அற நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. 


பொதுவாக பெரியவர்கள் 'தெய்வநம்பிக்கை-வழிபாடு அவசியம்; எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்' என்பார்கள். சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட பரிகாரம் சொல்வார்கள். குலதெய்வ வழிபாடு, கோவில்களில் வேண்டுதலும் வழிபாடும், விளக்கேற்றிவைப்பது. பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, உபவாசம் இருப்பது,, சுந்தரகாண்டம், நாராயணீயம் பாராயணம் செய்வது, புத்தகத்தில் நூல் சார்த்திப் பார்ப்பது, பூ அல்லது சீட்டுப் போட்டுப் பார்ப்பது, தினசரி பூஜை , த்ருஷ்டி சுத்திப் போடுவது, போன்றவை சாதாரணமான ஆஸ்திகக் குடும்பங்களில் பின்பற்றப்பட்டுவந்த முறைகள். இன்று குடும்பங்கள் தலைமுறை வாரியாகப் பிரிந்திருப்பதால். இவை விடுபட்டுப்போய்விட்டன. தெரிந்து சொல்வதற்கு ஆளில்லை. கேட்டு செய்வதற்கும் சிரத்தை இல்லை.  எளிய பரிகாரமானால் அதில் நம்பிக்கை இருப்பதில்லை!



எந்தப் பரிகாரமானாலும் சிலருக்குப் பலிக்கிறது- சிலருக்குப் பலிப்பதில்லை. சிலருக்கே சிலசமயம் பலிக்கலாம், பலிக்காமலும் போகலாம்! நமக்கு ஒன்றும் புரிவதில்லை!.சில சமயம் பரிகாரம் செய்கிறோம், சில விஷயங்கள் நடக்கின்றன ஆனால் பின்விளைவுகள் சரியாக இருப்பதில்லை! கடைசியில், "பகவான் நமக்குப் போட்டுவைத்தது இவ்வளவுதான் " என்று நம்மை நாமே தேற்றிக்கொள்கிறோம்.



ஒரு கஷ்டம் என்று வந்தால் பரிகாரம் தேடுவது இயற்கை. அதற்காக யாரை நாடுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். பரிகாரங்களை இருவிதமாகப் பிரிக்கலாம்: சாத்வீக [வைதீக]மானவை, தாந்திரீகமானவை. பரிகாரம் என்று இருந்தாலும் இவற்றின் பின்விளைவுகள்  வேறுபடும். பரிகாரம் என்ற பெயரில் கர்மச்சுமையைச் சேர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமாகாது. 


மலிந்த ஜோசியம்


இன்று ஜோசியம் 'மலிந்து'விட்டது. [ It has really become cheap or vulgar.] பகுத்தறிவு வாதமும் நாஸ்திக வாதமும் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் ஜோசியத்தின் மவுசு குறையவில்லை! புத்தகக் கண்காட்சி என்று போனால், ஒரு பக்கம் நாஸ்திக வாதம்- ஹிந்துமத எதிர்ப்பு புத்தகங்கள் குவிந்திருக்கின்றன; இன்னொரு பக்கம் ஜோசியம், மந்திரம்-தந்திரம் , பூஜை-பரிகாரம், கோவில்- புண்ணியத்தல யாத்திரை என்று புத்தகங்கள் குவிந்திருக்கின்றன! 50,60 வருஷங்களுக்குமுன் ஜோசியப் பைத்தியம் சமூகத்தில் இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. ஏதோ பலித்தால் சரிதான்! நம்பிக்கைக் கேற்ப நல்விளைவுகள் வளரட்டுமே!



முன்பெல்லாம் சிறு ஊர்களில்கூட சில ஆஸ்திகக் குடும்பங்களில் பெரியவர்கள்  பூஜை, ஜபம், உபாசனை என்று வைத்துக்கொண்டிருப்பார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் அவர்களைத்தான் நாடுவோம். அவர்கள் தங்கள் உபாசனாமூர்த்தியிடம் ப்ரார்த்தித்து விபூதி, குங்குமம் என்று கொடுப்பார்கள்; சில சுலோகம் சொல்லச்  சொல்வார்கள்; கோவிலில் நவக்ரஹம், ஹனுமார் சன்னிதிகளில் விளக்குப்போடு/ எரியும் விளக்கில் எண்ணெய் சேர்த்துவிடு என்பார்கள். காசு வாங்கமாட்டார்கள். அன்றைய எளிதான வாழ்க்கை முறைக்கு இத்தகைய எளிய பரிகாரங்களே சரியாக இருந்தன. இன்று நிலை வேறு. 


பரிகாரம் சொல்லத் தகுதி

பரிகாரங்கள் சொல்பவருக்கு தகுதி இருக்கவேண்டும். அத்தகைய தகுதி புத்தக அறிவினால்  மட்டும் வருவதில்லை.உண்மையான உபாசனை பலம் /தெய்வ அருள் இருக்கவேண்டும். வேஷம் நிறைந்த இக்காலத்தில்  இதைத் தெரிந்துகொள்வது எளிதல்ல.





ஆஸ்தீகப் பரிகாரங்களின் அடிப்படை தெய்வ நம்பிக்கைதான். இப்படி பரம்பரையாக வந்த முறைகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார் ப்ரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். "ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்ரம்" என்ற பெயரில் இரண்டுபாகங்களாக வந்திருக்கிறது.  இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிஷம். ஒரு பெரியவரே நம்முடன் இருந்து வழி நடத்துவது போன்றது.  


\




சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் அன்றைய  மாகாணம் முழுவதும் திருப்புகழ் பாடிப் பிரச்சாரம் செய்தவர்  ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள். அவரது குருவான ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்  உபதேசப்படி திருப்புகழையே மஹாமந்திரமாகக்கொண்டு தவம்செய்து சித்திபெற்றவர். திருப்புகழையே ஆதாரமாகக் கொண்டு வழிபடும் முறையை "திருப்புகழ் பாராயணத் தவநெறித்  திருமுறை " என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். எந்தவிதமான கஷ்டத்திற்கும் திருப்புகழிலிருந்தே பரிகாரம் சொன்ன மஹான் அவர். 


இன்று, சாமியார்கள், மடாதிபதிகள், Godmen,தாந்திரீகர்கள்  என்று  பெருகிவிட்டனர். இவர்களைப்  பலர் நாடுகின்றனர். விளம்பரமும் தடபுடலாக இருக்கிறது.இதில் எவ்வளவு நிஜம்-எவ்வளவு போலி என்பது தெரியாது.

உண்மையான ஆன்மீகவாதிகள் விளம்பரம் தேடுவதில்லை. ஆனாலும் இன்று மீடியாகாரர்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை.

ஞானிகளின் நிலை!

  ஸ்ரீ ராமக்ருஷ்ணர், பகவான் ரமணர் போன்ற பெரிய ஞானிகள் அவர்கள் காலத்திலேயே ப்ரபலமடைந்தவர்கள்.  ஆனால் அவர்கள் எந்த  விஷயத்திலும் யாருக்காகவும் தலையிட்டதில்லை.






ஸ்ரீராமக்ருஷ்ணர், விவேகானந்தர் விஷயத்தில்கூட  அன்னை காளியிடம் பிரார்த்தனை செய்யவில்லை! அவரையே ப்ரார்த்தித்து வேண்டியதைக் கேட்கச்சொன்னார்! மூன்றுமுறை முயன்றும் அவரால் எதுவும் கேட்க முடியவில்லை! பின்னர் ஸ்ரீ ராமக்ருஷ்ணரே பரிந்து 'உன் குடும்பத்தினர் சாதாரண உணவுக்கும் துணிக்கும் கஷ்டப்படமாட்டார்கள்' என்று மட்டுமே சொன்னார். நமக்குத் தெரிந்து  உலகியலாக அவர் அருள் செய்தது இது ஒன்றுதான்! 




ஒருமுறை கேசவ சந்திர சென் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னை சிம்ஹவாஹினியிடம் ஒர் இளநீர் படைத்து அவர் நலத்திற்காக வேண்டிக்கொண்டார். [ சென் தெய்வ சிந்தை யுள்ளவர், தான் கல்கத்தா போனால் கடவுளைப்பற்றி யாருடன் பேசுவது என்று ஸ்ரீ ராமக்ருஷ்ணருக்குக்  கவலை! ] ஆனால் இரண்டு வருஷம் கழித்து சென்  நோயினால்  மிகவும் வருந்திப்  படுத்திருந்தபோது ஸ்ரீ ராமக்ருஷ்ணர்   அவரைச் சென்று பார்த்தார். அப்போது சென்னின் தாயார் அவர் நலமடைய ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்.ஆனால் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ' அத்தகைய வார்த்தைகள் என் வாயிலிருந்து வராது; எல்லாம் அன்னையின் இஷ்டம் ' என்று சொல்லிவிட்டார்.  ஸ்ரீ சென் பிழைக்கவில்லை!





ஸ்ரீ ரமண பகவான் யார் விஷயத்திலும்  நேரடியாகத் தலையிட்ட தில்லை. 'எதுவும் பிராரப்தப்படிதான் நடக்கும்; சிவனே என்று இருப்பதுதான் சரி ' என்பதே அவரது அறிவுரை. ஆனாலும் அவரை வேண்டிக்கொண்டதால் பல விஷயங்கள் நடந்ததாக பழைய அடியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  ஆசிரமத்திற்கு தந்தி அடிப்பார்கள்; கடிதம் எழுதுவார்கள்; கடிதம் தபாலில் சேர்த்த அடுத்த நிமிடமே பிரச்சினை தீர்ந்துவிட்டது என்பார்கள்! ஆனால் ஸ்ரீ பகவான் இவற்றிலெல்லாம் சம்பந்தப் பட்டதாகச் சொல்லிக்கொண்டதே  இல்லை. எல்லாம் தெய்வ நியதியின்படி நடந்தவை- Automatic Divine Activity; தனக்கு ஒன்றும் தெரியாது என்பார். அப்படியும் சில நிகழ்ச்சிகள் நமக்குத் தெரியவந்தன. ஒரு முறை ரங்க ஐயர் என்பவர்- அவருடன் பள்ளியில் படித்தவர்- மிகத்தீவிரமான ஜாதகக்கோளாறு
 என்று பயந்து பகவானிடம் வந்தார். ஒரு வருஷம் அவர் ஆசிரமக் காம்பவுண்டைத்  தாண்டி வெளியில் போகக்கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்தார்! 

அவர் எல்லோருக்கும் தெரியும்படி வெளிப்படையாகச் செய்த மூன்று அற்புத நிகழ்ச்சிகள்:

1. பழநிச்சாமி  என்ற அன்பருக்கு உயர்ந்த உலகம் அளித்தது
2. தன் தாயாருக்கு மோக்ஷ பதவி அளித்தது
3. லக்ஷ்மி என்ற பசுவிற்கு மோக்ஷமளித்தது. அதைக்குறித்து ஒரு செய்யுளும் இயற்றி, "பசுவாயாம் லட்சுமி விமுக்த நாள்" என்று தெள்ளத் தெளிவாக எழுதியும் வைத்தார்! அவருடைய தாயாருக்கே அளிக்காத பரிசு இது! 

இதற்கு நேர்மாறாக இருந்தவர் ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா.இவர் செய்துவரும் அற்புதங்கள் இன்றும் தொடர்கின்றன.

சன்னிதி விசேஷம்


மஹான்கள், ஞானிகள்  ஆகியோரின் சன்னிதியே விசேஷமானது ; அவர்களைத் தரிசிப்பதே பெரிய புண்ணியம் என்பார்கள்..ஆனாலும் நாம் ஆத்ம லாபத்திற்காக அவர்களை நாடுவதில்லை. லௌகீக நன்மை கருதித்தான்  அவர்களிடம் செல்கிறோம் . அண்மைக்காலம் வரை நம்மிடையே இருந்த ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரின் சரிதத்தில் இதைப்  பார்க்கிறோம்: அவர் சொன்ன பரிகாரங்களை ஏற்றுக்கொண்டோம்; அவர் கூறிய பிற அறவுரைகளை விட்டுவிட்டோம்!


ஒரு பெரியவர், மஹான் சமாதியானபின்  அவர் நிகழ்த்திய அற்புதங்கள், அதிசயங்கள்  பற்றி பலர் தங்கள் அனுபவத்தை எழுதுவது பத்திரிகைகள் மலிந்துவிட்ட தற்காலத்தில் மிகவும் சகஜமாகிவிட்டது.இன்டர்நெட்டிலும் பல விஷயங்கள் வருகின்றன. இவற்றை எப்படி நம்புவது?  ஸ்ரீ வள்ளீமலை ஸ்வாமிகள் 1950ல்  சமாதியெய்தினார்.  1970ல் அவரது நூற்றாண்டு ஜயந்தி விழாவில் ஒரு மலர் வெளிவந்தது.. அதில் அவருடன் தமக்கேற்பட்ட அனுபவங்களை பல  அடியவர்கள் வெளியிட்டனர். இதில்  பெயருடன் அவர்கள் விலாசமும் வெளியிடப்பட்டது!


நம்பிக்கை!


நாமெல்லாம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்று  நினைக்கிறோம். நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது? ஏன் பரிகாரம் பலிப்பதில்லை?  நமக்குத் தெரிவதில்லை! வட இந்தியாவில் ஒரு ராமாயணக்கதை வழங்கிவருகிறது. ராமர், சீதை,லக்ஷ்மணர் கோதாவரிக்கரையில் இருக்கின்றனர். ராமர் நீராடச்செல்கிறார்; வில்லை கரையில் மணலில் குத்தி  நிற்கவைக்கிறார். அங்கு ஈரம் கசிகிறது- பார்த்தால் ரத்தம். லக்ஷ்மணர் வில்லை எடுத்துப் பார்க்கிறார்- அதன் அடியில் ஒரு பெரிய தவளை சிக்கிக்கொண்டிருக்கிறது; அதற்கு அடிபட்டு ரத்தம் கசிகிறது! ராமர் மனது கஷ்டப்படுகிறது. "நான் வில்லை நிறுத்தியபோது நீ ஏன் சத்தம் போடவில்லை ?" என்று கேட்கிறார். " "ராமா! யாராவது என்னைத் துன்புறுத்தினால் 'ராமா, ராமா ' என்றுதான் கூப்பிடுவேன்; ஆனால் உனது வில்லே குத்தினால் வேறு யாரை அழைப்பேன் ?" என்றதாம் அந்தத் தவளை!












ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பாடினார்:

















       பொன்னின்  றொளிரும்  புரிசடையோய்  நின்னையன்றிப்

       பின்னொன்   றறியேன்   பிழைநோக்கி - என்னை

       அடித்தாலும்  நீயே  அணைத்தாலும்   நீயே

       பிடித்தேனுன்  பொற்பாதப் பேறு. 













நம் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் நல்ல வழியைக் காட்டுகிறார் திருஞானசம்பந்தர். 
ஊழ், ஊழ் என்று சொல்லிக்கொண்டிருந்தால்  விமோசனம் வருமா? 













அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃ தறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும்  உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.


இதையே வேறு பாடல்களிலும் சொல்கிறார்'

பண்டுசெய்த வல்வினை  பற்றறக் கெடும்வகை

உண்டு உமக்கு உரைப்பனால் ஒல்லைநீர் எழுமினோ

மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக

கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே


முன்னை நீர்செய் பாவத்தால்  மூர்த்திபாதம் சிந்தியாது

இன்ன  நீரிடும்பையில்  மூழ்கிறீர் எழுமினோ

பொன்னை வென்ற  கொன்றையான்  பூதம்பாட ஆடலான்

கொன்னவிலும்  வேலினான் கோடிகாவு   சேர்மினே.



 கர்மத்தளையை நீக்க கடவுளைப் பணியவேண்டும் என்பதே பெரியோர்கள் காட்டிய பாதை.



                


More things are wrought by prayer than this world dreams of.            Tennyson

Our reach should exceed our grasp, or what is heaven for.                     Robert Browning

Saints will aid if men will call
For the blue sky bends over all.
                                    - Coleridge

There are more things  in heaven and earth
Than are dreamt of in your philosophy.                                                     - Shakespeare





Saturday, 14 November 2015

8.திருமுருகாற்றுப்படை-6. குன்றுதோறாடல்



8.திருமுருகாற்றுப்படை-6

Tirukazhukunram. திருக்கழுக்குன்றம். வேதகிரி

குன்றுதோறாடல்

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற  நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

என்று பாடினார்  வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள். ஆண்டவன் எல்லோருக்கும் பொதுவில் நின்று அருள் செய்கிறான். அவரவர் தத்தம் மனோபாவப்படி அவ்வருளை உணர்ந்து கொள்கிறார்கள். பரிக்ஷைக்குப் போகும் மாணவன் வழியில் அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு    தலையில் குட்டிக்கொண்டு மூன்று தோப்புக்கரணம் போட்டுப்  போகிறான். கன்னம் வைக்கக் கிளம்பும் திருடன் தன் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டுத்தான் கிளம்புகிறான்.[இக்காலத்தில் பெரிய பெரிய திருடர்கள் ஒரு பங்கை ஏதோ கோவில் உண்டியலில் சேர்த்துவிடுவார்கள்!] கடவுள் கருணையால் எல்லோருக்கும் பிழைப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது! நம் தகுதியைப் பார்த்துக் கொடுப்பது என்று வந்தால் நமக்கு என்ன கிடைக்கும்?

பண்டிதர்கள் கடவுளை எப்படியெப்படியோ கற்பனை செய்து கஷ்டப்படுகிறார்கள். பாமரர்களுக்கு 'கடவுள்' என்கிற ஒரே நம்பிக்கை! ஞானிகளின் காட்சிக்குக் கிட்டாத கண்ணன் ஆயர்பாடியில் பெற்றம் மேய்த்துண்ணும் பிள்ளைகளோடு கூடிக்   கும்மாளம் போட்டான்! இது எத்தகைய பேறு! முக்கூர் ஸ்வாமிகள் ஒரு சம்பவம் சொன்னார். ஒரு சமயம் விடியற்காலை திருப்பதியில் திருக்குளத்தில் ஸ்னானம் செய்துகொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு க்ராமத்து ஆசாமி .  பலமாக ஏதோ தோத்திரம் சொல்லிக்கொண்டிருந்தான், எல்லாம் தப்புத்தப்பாக! 'கோவிந்தா' என்றுகூடச் சொல்லவரவில்லை, 'கோஹிந்தா' என்று சொல்லிவந்தான்! இவருக்கு ஒரே எரிச்சல்! அவனிடம் போய்ச்சொல்ல வேண்டும் என்று நினைத்தார். அதற்குள் அவன் பெருமாளிடம் ஜோராக வேண்டிக்கொண்டான்: "அப்பனே, உன் தயவினால் இப்படி வருஷாவருஷம்  வந்து
கொண்டிருக்கிறேன்.இன்னும்  ரொம்ப வருஷம் இப்படியே வரும்படிப் பண்ணவேண்டும்!". முக்கூருக்குச் சுரீர் என்று உரைத்தது! 'இவன் ஏதோ அவனுக்குத் தெரிந்தமாதிரி தோத்திரம் பண்ணுகிறான்; பெருமாளும் அதை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அனுக்ரஹம் செய்து வருகிறார். இதைத்திருத்த நாம் யார்?' என்று தோன்றிவிட்டது! சும்மாயிருந்துவிட்டார்! கல்லாத பேர்கள் நல்லவர்களாக இருக்கலாம் தானே! ஆண்டவன் மதியைப் பார்க்கிறாரா, மனதைப் பார்க்கிறாரா? "மதியால் வித்தகனாகி,மனதால் உத்தமனாகி" என்றார் அருணகிரி நாதர்.

இதுவரை, நக்கீரர் இருவகை சுரர்களைக் காட்டினார். ஆவினன்குடியில் வானுலக சுரர்கள்-  தேவர்களைக்- காட்டினார். ஸ்வாமிமலையில் பூலோக சுரர்கள்- அந்தணர்களைக் காட்டினார்! (அந்தணர்களை அப்படியும் சொல்லுவார்கள்.) இப்போது நரர்களைக் காட்டுகிறார். அதுவும் எப்படிப்பட்ட நரர்கள்! வால்மீகி, குகன், கண்ணப்ப நாயனார் போன்ற பெரியவர்கள் தோன்றிய குலமான வேடர்களைக் காட்டுகிறார்!

முருகன் குறிஞ்சி நிலக் கடவுள்! சேயோன் மேய மைவரை உலகமும் என்பது தொல்காப்பியம். இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ ஓரிரண்டு மலையே முருகன் இடம் என்பதல்ல. எல்லா மலையும் அவனுடையதே! வேறு எந்த சாமிக்கு கோயில் இருந்தாலும் மலைக்கு அசல் சாமி முருகனே! மலையின் மேல் கோயிலெழுப்பித்தான் கும்பிட வேண்டும் என்பது இல்லை.மலையே முருகன் உருதான்! க்ருஷ்ணர் கோவர்த்தன மலைக்கே பூஜை செய்தார்! 




சென்னிமலை

இன்று மலைமேல் கோயில் என்று கட்டி, அங்கு கார்போக சாலை போட்டு, பெரியபெரிய கட்டிடங்கள் கட்டி மலையையே உருக்குலைத்து விடுகிறோம். 60 வருஷம்போல் பழநி போன்ற இடங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு அந்த இடங்கள் எவ்வளவு மாறிவிட்டன என்பது புரியும். அந்த மலையே தெய்வீகமானது என்ற நினைப்பிருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?


view of Vallimalai.வள்ளிமலை.

நமக்கு குன்றுதோறாடல் என்று எல்லாமலைகளையும்  பொதுவாகக் காட்டுகிறார் நக்கீரர். இன்று திருத்தணி படைவீடுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது, எல்லா மலைகளுமே குன்றுதோறாடலில் சேர்ந்தவைதாம். மலையும் மலைசார்ந்த இடத்து மக்களாகிய வேடர்களுக்கு வேலவனே சொந்தக் கடவுள்!அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் வழிபடுகிறார்கள்.


Jnanamalai ஞானமலை

குறவர்கள் மலைமேல் முருகனுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அதைப் பூசிக்க பூசாரி ஒருவன் இருக்கிறான்.பூஜையின்போது இவனுக்கு ஆவேசம் வரும்.ஆடுவான். இவனை வேலன் என்பார்கள்.இவன் முருகனுக்கு, வாஸனையுள்ளஇலை தழைகள், சில காட்டுக் காய்கள்.காட்டு மல்லிகை, வெண்கூதாளம் ஆகியவற்றைக் கொண்டு  நெருக்கிக் கட்டி மாலை தொடுத்திருக்கிறான். இதை முதலில் முருகன் வாங்கி அணிந்துகொள்கிறான்.

 பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் 
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்



இந்தக் குறவர்கள் ஆடுகிறார்கள்.

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் 
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர



இவர்கள் மார்பில் மணமுள்ள சந்தனம் பூசியிருக்கிறார்கள்.
வலிய வில்லால் கொலைபுரிபவர்கள்- கொடுந்தொழில் செய்பவர்கள். கொலையே புரி வேடர் குலம் என்பார் அருணகிரிநாதர்.
இவர்கள் மூங்கில் குழாய்களில் அடைத்துவைத்திருந்த தேன் கள்ளாக ஆனதை, மலைமேல்  சிறுசிறு இடங்களில் வசிக்கும் தம் உறவினருடன் சேர்ந்து உண்டு களிக்கிறார்கள். அத்துடன் தொண்டகம் என்கிற சிறிய பறையைக்கொட்டி ஆடுகிறார்கள். இவர்கள் ஆடும் கூத்திற்கு  குன்றக்குரவை என்று பெயர். கையைக் கோர்த்து வட்டமாக நின்று ஆடுவது.

இவ்வாறு கள் அருந்தி மகிழ்வது சங்ககால வழக்கம். அதியமான் கொடுத்த கள்ளைச் சொல்லும்போது, "தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்"  என்கிறார் ஔவையார்.அதாவது, தேள் கொட்டினால் ஏறும் விஷம்போல, போதை ஏற்றும்  நாட்பட்ட கள் என்கிறார்!

இதைக் காண முருகன் வருகிறான்.அவனுடன் தேவப் பெண்களும் நன்கு அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள்.இந்த அலங்காரத்தை 7 அடிகளில் சொல்லும் நக்கீரர், அவர்களுடன் முருகன் வருவதை ஒரு  அடியில் சொல்கிறார்.

மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு

இயற்கையிலேயே சிவந்து அழகு நிறைந்த முருகன் தானும் அழகு செய்துகொண்டு வருகிறான்.

 செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் 
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் 
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்



இயற்கையிலேயே சிவந்த நிறமானவன்.சிவந்த ஆடை உடுத்தியவன். அடிசிவந்த அசோக மரத்தின் தளிரைக் காதில் அணிந்தவன், கச்சை அணிந்து, கழலைக் கட்டியிருக்கிறான்,வெட்சி மாலையைச் சூடியிருக்கிறான்.குழலையும் ஊதுகிறான், கொம்பையும் ஊதுகிறான். வேறு பல சிறிய வாத்யங்களையும் வாசிக்கிறான்..

ஆட்டு வாகனத்திலும் வருகிறான். மயில்மீதும் வருகிறான். குற்றமே சொல்லமுடியாத சேவல் கொடியைப்பிடித்திருக்கிறான். நெடிய உருவினன், தோளில் வளை அணிந்தவன்- இப்படி முருகன் வருகிறான்.

அவனுடன் யாழ்போல் இனிய குரலில் பாடும் பெண்களும் வருகிறார்கள்.

நரம்பார்த்தன்ன  இன்குரல் தொகுதியொடு

முருகன் கட்டியுள்ள  சிறந்த ஆடை நிலத்தில் புரளுமாறு வருகிறான்'

குறும் பொறிக்கொண்ட  நறுந்தண் சாயல்
மறுங்கிற் கட்டிய நிலன்  நேர்பு துகிலினன்

இங்கு அவர்கள் அனைவரும் ஆடுகிறார்கள்.. குறவர்கள் கைகோர்த்து ஆடுகிறார்கள். அவர்களுடன்  சேர்ந்து முருகனும் அவனுடன் வந்த மகளிரும் ஆடுகிறார்கள். முருகனும் அவர்களுடன் கைகோர்த்து, தன் தோள்களினால் அவர்களைத்தழுவி ஆடுகிறான். ஆம், இங்கு குறவர்களின் இடத்திலே தானும் ஒரு குரவனாகவே ஆகி ஆடுகிறான்! இதுவும் இவன் பண்பேயாகும்!

முழவுழற் தடக்கையின்  இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்று  தோறாடலும் நின்றதன் பண்பே

அதாஅன்று--இது மட்டும்  அல்ல.


  திருத்தணி
Tiruttani



.திருவாவினன்குடியில்  தேவர்களுக்கு தர்பாரில் காட்சிதந்தான்.  ஏரகத்தில் அந்தணர்களின் வைதீக ஆராதனையை ஏற்றுக் கொண்டான். மலைக் குறவர்களிடையே அவர்களில் ஒருவனாகவே  சேர்ந்து ஆடிப்பாடுகிறான்! இந்த வேடுவர்கள் கொடுத்துவைத்தவர்கள்! வேடர்குலப் பிடியைத்தானே நாடிச் சென்றடைந்தான்!

'என்னை  எப்படி ஆராதிக்கிறார்களோ அப்படியே நான் அவர்களுக்கு அருள் செய்கிறேன் ' என்று கீதையில் பகவான் சொன்னான். இங்கு முருகன் அதையே செய்து காட்டுகிறான்.

என்னப்பன்  எம்பிரான்  எல்லார்க்கும் தானீசன், ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ என்று மாணிக்க வாசக ஸ்வாமிகள் எவ்வளவு அழகாகச் சொன்னார்!