Saturday, 14 November 2015

8.திருமுருகாற்றுப்படை-6. குன்றுதோறாடல்



8.திருமுருகாற்றுப்படை-6

Tirukazhukunram. திருக்கழுக்குன்றம். வேதகிரி

குன்றுதோறாடல்

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற  நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

என்று பாடினார்  வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள். ஆண்டவன் எல்லோருக்கும் பொதுவில் நின்று அருள் செய்கிறான். அவரவர் தத்தம் மனோபாவப்படி அவ்வருளை உணர்ந்து கொள்கிறார்கள். பரிக்ஷைக்குப் போகும் மாணவன் வழியில் அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு    தலையில் குட்டிக்கொண்டு மூன்று தோப்புக்கரணம் போட்டுப்  போகிறான். கன்னம் வைக்கக் கிளம்பும் திருடன் தன் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டுத்தான் கிளம்புகிறான்.[இக்காலத்தில் பெரிய பெரிய திருடர்கள் ஒரு பங்கை ஏதோ கோவில் உண்டியலில் சேர்த்துவிடுவார்கள்!] கடவுள் கருணையால் எல்லோருக்கும் பிழைப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது! நம் தகுதியைப் பார்த்துக் கொடுப்பது என்று வந்தால் நமக்கு என்ன கிடைக்கும்?

பண்டிதர்கள் கடவுளை எப்படியெப்படியோ கற்பனை செய்து கஷ்டப்படுகிறார்கள். பாமரர்களுக்கு 'கடவுள்' என்கிற ஒரே நம்பிக்கை! ஞானிகளின் காட்சிக்குக் கிட்டாத கண்ணன் ஆயர்பாடியில் பெற்றம் மேய்த்துண்ணும் பிள்ளைகளோடு கூடிக்   கும்மாளம் போட்டான்! இது எத்தகைய பேறு! முக்கூர் ஸ்வாமிகள் ஒரு சம்பவம் சொன்னார். ஒரு சமயம் விடியற்காலை திருப்பதியில் திருக்குளத்தில் ஸ்னானம் செய்துகொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு க்ராமத்து ஆசாமி .  பலமாக ஏதோ தோத்திரம் சொல்லிக்கொண்டிருந்தான், எல்லாம் தப்புத்தப்பாக! 'கோவிந்தா' என்றுகூடச் சொல்லவரவில்லை, 'கோஹிந்தா' என்று சொல்லிவந்தான்! இவருக்கு ஒரே எரிச்சல்! அவனிடம் போய்ச்சொல்ல வேண்டும் என்று நினைத்தார். அதற்குள் அவன் பெருமாளிடம் ஜோராக வேண்டிக்கொண்டான்: "அப்பனே, உன் தயவினால் இப்படி வருஷாவருஷம்  வந்து
கொண்டிருக்கிறேன்.இன்னும்  ரொம்ப வருஷம் இப்படியே வரும்படிப் பண்ணவேண்டும்!". முக்கூருக்குச் சுரீர் என்று உரைத்தது! 'இவன் ஏதோ அவனுக்குத் தெரிந்தமாதிரி தோத்திரம் பண்ணுகிறான்; பெருமாளும் அதை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அனுக்ரஹம் செய்து வருகிறார். இதைத்திருத்த நாம் யார்?' என்று தோன்றிவிட்டது! சும்மாயிருந்துவிட்டார்! கல்லாத பேர்கள் நல்லவர்களாக இருக்கலாம் தானே! ஆண்டவன் மதியைப் பார்க்கிறாரா, மனதைப் பார்க்கிறாரா? "மதியால் வித்தகனாகி,மனதால் உத்தமனாகி" என்றார் அருணகிரி நாதர்.

இதுவரை, நக்கீரர் இருவகை சுரர்களைக் காட்டினார். ஆவினன்குடியில் வானுலக சுரர்கள்-  தேவர்களைக்- காட்டினார். ஸ்வாமிமலையில் பூலோக சுரர்கள்- அந்தணர்களைக் காட்டினார்! (அந்தணர்களை அப்படியும் சொல்லுவார்கள்.) இப்போது நரர்களைக் காட்டுகிறார். அதுவும் எப்படிப்பட்ட நரர்கள்! வால்மீகி, குகன், கண்ணப்ப நாயனார் போன்ற பெரியவர்கள் தோன்றிய குலமான வேடர்களைக் காட்டுகிறார்!

முருகன் குறிஞ்சி நிலக் கடவுள்! சேயோன் மேய மைவரை உலகமும் என்பது தொல்காப்பியம். இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ ஓரிரண்டு மலையே முருகன் இடம் என்பதல்ல. எல்லா மலையும் அவனுடையதே! வேறு எந்த சாமிக்கு கோயில் இருந்தாலும் மலைக்கு அசல் சாமி முருகனே! மலையின் மேல் கோயிலெழுப்பித்தான் கும்பிட வேண்டும் என்பது இல்லை.மலையே முருகன் உருதான்! க்ருஷ்ணர் கோவர்த்தன மலைக்கே பூஜை செய்தார்! 




சென்னிமலை

இன்று மலைமேல் கோயில் என்று கட்டி, அங்கு கார்போக சாலை போட்டு, பெரியபெரிய கட்டிடங்கள் கட்டி மலையையே உருக்குலைத்து விடுகிறோம். 60 வருஷம்போல் பழநி போன்ற இடங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு அந்த இடங்கள் எவ்வளவு மாறிவிட்டன என்பது புரியும். அந்த மலையே தெய்வீகமானது என்ற நினைப்பிருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?


view of Vallimalai.வள்ளிமலை.

நமக்கு குன்றுதோறாடல் என்று எல்லாமலைகளையும்  பொதுவாகக் காட்டுகிறார் நக்கீரர். இன்று திருத்தணி படைவீடுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது, எல்லா மலைகளுமே குன்றுதோறாடலில் சேர்ந்தவைதாம். மலையும் மலைசார்ந்த இடத்து மக்களாகிய வேடர்களுக்கு வேலவனே சொந்தக் கடவுள்!அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் வழிபடுகிறார்கள்.


Jnanamalai ஞானமலை

குறவர்கள் மலைமேல் முருகனுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அதைப் பூசிக்க பூசாரி ஒருவன் இருக்கிறான்.பூஜையின்போது இவனுக்கு ஆவேசம் வரும்.ஆடுவான். இவனை வேலன் என்பார்கள்.இவன் முருகனுக்கு, வாஸனையுள்ளஇலை தழைகள், சில காட்டுக் காய்கள்.காட்டு மல்லிகை, வெண்கூதாளம் ஆகியவற்றைக் கொண்டு  நெருக்கிக் கட்டி மாலை தொடுத்திருக்கிறான். இதை முதலில் முருகன் வாங்கி அணிந்துகொள்கிறான்.

 பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் 
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்



இந்தக் குறவர்கள் ஆடுகிறார்கள்.

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் 
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர



இவர்கள் மார்பில் மணமுள்ள சந்தனம் பூசியிருக்கிறார்கள்.
வலிய வில்லால் கொலைபுரிபவர்கள்- கொடுந்தொழில் செய்பவர்கள். கொலையே புரி வேடர் குலம் என்பார் அருணகிரிநாதர்.
இவர்கள் மூங்கில் குழாய்களில் அடைத்துவைத்திருந்த தேன் கள்ளாக ஆனதை, மலைமேல்  சிறுசிறு இடங்களில் வசிக்கும் தம் உறவினருடன் சேர்ந்து உண்டு களிக்கிறார்கள். அத்துடன் தொண்டகம் என்கிற சிறிய பறையைக்கொட்டி ஆடுகிறார்கள். இவர்கள் ஆடும் கூத்திற்கு  குன்றக்குரவை என்று பெயர். கையைக் கோர்த்து வட்டமாக நின்று ஆடுவது.

இவ்வாறு கள் அருந்தி மகிழ்வது சங்ககால வழக்கம். அதியமான் கொடுத்த கள்ளைச் சொல்லும்போது, "தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்"  என்கிறார் ஔவையார்.அதாவது, தேள் கொட்டினால் ஏறும் விஷம்போல, போதை ஏற்றும்  நாட்பட்ட கள் என்கிறார்!

இதைக் காண முருகன் வருகிறான்.அவனுடன் தேவப் பெண்களும் நன்கு அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள்.இந்த அலங்காரத்தை 7 அடிகளில் சொல்லும் நக்கீரர், அவர்களுடன் முருகன் வருவதை ஒரு  அடியில் சொல்கிறார்.

மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு

இயற்கையிலேயே சிவந்து அழகு நிறைந்த முருகன் தானும் அழகு செய்துகொண்டு வருகிறான்.

 செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் 
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் 
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்



இயற்கையிலேயே சிவந்த நிறமானவன்.சிவந்த ஆடை உடுத்தியவன். அடிசிவந்த அசோக மரத்தின் தளிரைக் காதில் அணிந்தவன், கச்சை அணிந்து, கழலைக் கட்டியிருக்கிறான்,வெட்சி மாலையைச் சூடியிருக்கிறான்.குழலையும் ஊதுகிறான், கொம்பையும் ஊதுகிறான். வேறு பல சிறிய வாத்யங்களையும் வாசிக்கிறான்..

ஆட்டு வாகனத்திலும் வருகிறான். மயில்மீதும் வருகிறான். குற்றமே சொல்லமுடியாத சேவல் கொடியைப்பிடித்திருக்கிறான். நெடிய உருவினன், தோளில் வளை அணிந்தவன்- இப்படி முருகன் வருகிறான்.

அவனுடன் யாழ்போல் இனிய குரலில் பாடும் பெண்களும் வருகிறார்கள்.

நரம்பார்த்தன்ன  இன்குரல் தொகுதியொடு

முருகன் கட்டியுள்ள  சிறந்த ஆடை நிலத்தில் புரளுமாறு வருகிறான்'

குறும் பொறிக்கொண்ட  நறுந்தண் சாயல்
மறுங்கிற் கட்டிய நிலன்  நேர்பு துகிலினன்

இங்கு அவர்கள் அனைவரும் ஆடுகிறார்கள்.. குறவர்கள் கைகோர்த்து ஆடுகிறார்கள். அவர்களுடன்  சேர்ந்து முருகனும் அவனுடன் வந்த மகளிரும் ஆடுகிறார்கள். முருகனும் அவர்களுடன் கைகோர்த்து, தன் தோள்களினால் அவர்களைத்தழுவி ஆடுகிறான். ஆம், இங்கு குறவர்களின் இடத்திலே தானும் ஒரு குரவனாகவே ஆகி ஆடுகிறான்! இதுவும் இவன் பண்பேயாகும்!

முழவுழற் தடக்கையின்  இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்று  தோறாடலும் நின்றதன் பண்பே

அதாஅன்று--இது மட்டும்  அல்ல.


  திருத்தணி
Tiruttani



.திருவாவினன்குடியில்  தேவர்களுக்கு தர்பாரில் காட்சிதந்தான்.  ஏரகத்தில் அந்தணர்களின் வைதீக ஆராதனையை ஏற்றுக் கொண்டான். மலைக் குறவர்களிடையே அவர்களில் ஒருவனாகவே  சேர்ந்து ஆடிப்பாடுகிறான்! இந்த வேடுவர்கள் கொடுத்துவைத்தவர்கள்! வேடர்குலப் பிடியைத்தானே நாடிச் சென்றடைந்தான்!

'என்னை  எப்படி ஆராதிக்கிறார்களோ அப்படியே நான் அவர்களுக்கு அருள் செய்கிறேன் ' என்று கீதையில் பகவான் சொன்னான். இங்கு முருகன் அதையே செய்து காட்டுகிறான்.

என்னப்பன்  எம்பிரான்  எல்லார்க்கும் தானீசன், ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ என்று மாணிக்க வாசக ஸ்வாமிகள் எவ்வளவு அழகாகச் சொன்னார்!






No comments:

Post a Comment