83. ஊர் வாய்
costigdj.wordpress.com
"உலை வாயை மூடினாலும் மூடலாம், ஊர் வாயை மூடமுடியுமா " என்று தமிழில் பழமொழி உண்டு. வம்பு-தும்பு மக்களின் சுவாரஸ்யமான பொழுது போக்கு அம்சம்- காசு பணம் தேவையில்லை! வீண்பேச்சு மிகவேகமாகப் பரவும் : Four horses cannot overtake the tongue என்பது ஒரு சீனப் பழமொழி. It is easier to dam a river than to stop gossip என்று ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் சொல்வார்கள். எல்லா மதங்களும் எதைப்பற்றியும்/ யாரைப்பற்றியும் தவறாகப் பேசாதே என்றே சொல்கின்றன. ஆனால் கோவில் குளங்களில் கூட கும்பல் சேர்ந்தால் பாதி வம்பு அரட்டைதான். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது! சென்னை சங்கீத சீசனில் கச்சேரிகளுக்குப் போனவர்களுக்கு இது அனுபவமாகியிருக்கும்! நமது ஆபீசுகளில் இது சர்வசகஜம். Is not gossiping a form of networking, after all! Gossip brings people together, as do smoking and drinking!
பாவம், இதனால் சிலர் பாதிக்கப் படுவார்களே என்று கவலைப் படுவதில்லை. சில மானஸ்தர்கள் அவதூறு தாங்காமல் உயிரைக்கூட விடலாம். "Done to death by slanderous tongues" என்று ஓர் இடத்தில் ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்!.
இது ஏன் இப்படி நடக்கிறது என்பது புரிவதில்லை. பெரிய இடமோ, சிறியவரோ- யாரும் இதற்கு விலக்கல்ல. இதை இன்று சோஷியல் மீடியாவில் தாராளமாகவே பார்க்கிறோம்.பெரிய பதவியில், இருப்பவர்களைப் பற்றிய தாறுமாறான கருத்துக்கள் / வதந்திகள் தாராளமாகவே பகிர்ந்துகொள்ளப் படுகின்றன. இன்று தமிழ் நாட்டில் எதற்கும் மோடியையே சாடுகின்றனர்! பதவியில் இருப்பவர்கள் விமர்சனத்திற்கு உட்பட்டே தீரவேண்டும் - அது ஜனநாயகமுறையில் அவசியமான நிலை. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் தூற்றுவதை எப்படி ஏற்கமுடியும்? கொள்கையை விமர்சிக்கலாம்- குறை நிறைகளச் சுட்டிக்காட்டலாம்; தனிப்பட்ட முறையில் ஏன் தாக்கவேண்டும்? இன்று சோஷியல் மீடியாவில் இது மிகவும் சகஜமாகிவிட்டது, ஹை-டெக் முத்திரை பெற்றுவிட்டது!
50களில் வெளிவந்த ஒரு தமிழ்ப் படத்தில் இதை நன்றாக விளக்கினார்
கவிஞர் கா.மு ஷெரிஃப்.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)
மணியம் செல்வன் வரைந்த அருமையான படம்.
Source: kavikamu.wordpress.com
வசதியைக் கண்டால் பொறாமையால் வெறுப்பு, ஏழ்மையைக் கண்டால் ஏளனம்- இதுதான் அடிப்படையோ ?
70களில் வந்த ஒரு ஹிந்திப் படத்தில் கவிஞர் ஆனந்த் பக்ஷி இப்படி எழுதுகிறார்:
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रैना
குச் தோ லோக் கஹேங்கே,
லோகோ கா காம் ஹை கஹ்னா
சோடோ, பேகார் கீ பாதோ மே
கஹீ பீத் ந ஜாயே ரைனா
ஜனங்கள் ஏதாவது பேசத்தான் செய்வார்கள் -
அப்படிப் பேசுவதுதான் அவர்கள் தொழில் !
இதை பொருட்படுத்தாதே-
இல்லையேல் இரவெல்லாம் இந்த வீண் விவகாரத்திலேயே கழியும்!
कुछ रीत जगत की ऐसी है, हर एक सुबह की शाम हुई
तू कौन है, तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई
फिर क्यूँ संसार की बातों से, भीग गये तेरे नैना
कुछ तो लोग कहेंगे...
குச் ரீத் ஜகத் கீ ஐஸீ ஹை,
ஹர் ஏக் சுபஹ் கீ ஶாம் ஹுயீ
தூ கௌன் ஹை, தேரா நாம் ஹை க்யா
ஸீதா பீ யஹா(ன்) பத்னாம் ஹுயீ
ஃபிர் க்யூ(ன்) ஸம்ஸார் கீ பாதோ ஸே
பீக் கயே தேரே நயனா
குச் தோ லோக் கஹேங்கே.........
இந்த உலகில் சில நியதிகள் அப்படி -
காலை என்று வந்தால் மாலை என்று வரும்!
நீ யார், உன் பெயர் என்ன ?
ஸீதைக்கும் இங்கு கெட்டபெயர் வரவில்லையா?
பின் ஏன் உலகின் இத்தகைய பேச்சைக்கேட்டு
உன் கண்ணில் நீர் வழிகிறது?
ஜனங்கள் ஏதாவது பேசத்தான் செய்வார்கள்......
हमको जो ताने देते हैं, हम खोए हैं इन रंगरलियों में
हमने उनको भी छुप-छुपके, आते देखा इन गलियों में
ये सच है झूठी बात नहीं, तुम बोलो ये सच है ना
कुछ तो लोग कहेंगे...
ஹம்கோ ஜோ தானே தேதே ஹை,
ஹம் கோயே ஹை இன் ரங்க்ரலியோ மே
ஹம்னே உன்கோ பீ சுப்-சுப் கே,
ஆதே தேகே இன் கலியோ மே
யே ஸச் ஹை ஜூடி பாத் நஹீ,
தும் போலோ யே ஸச் ஹை நா
குச் தோ லோக் கஹேங்கே .......
நாம் தகாத வழிகளில் சென்று கெட்டலைந்து விட்டோம் -
என நம்மைத் திட்டுகிறார்களே அவர்கள்
இதே சந்து பொந்துக்குள் திருட்டுத் தனமாக நுழைவதை
நாம் பார்த்திருக்கிறோம் !
இது உண்மை, பொய்யல்ல.
நீயே சொல்- இது உண்மையல்லவா!
ஜனங்கள் ஏதாவது பேசத்தான் செய்வார்கள்.
இந்த பத்தியில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார் கவிஞர். புரளி-அவதூறு கிளப்புபவர்களின் நடத்தை என்ன? குட்டுவதெல்லாம் மோதிரக்கை அல்ல! Pot calling kettle black?
இது 'கம்மாஜ் ' ராகத்தில் அமைந்த பாடல். இசை அமைத்தவர் R.D.Burman.
பாடியவர் கிஷோர் குமார்.
யார் என்ன சொன்னாலும் கலங்காமல் நாம் நம் கடமையில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
என்பது நீதி நெறி விளக்கம்.
இதையே சற்று 'லைட்' மூடில் சொல்கிறார் ஸாஹிர் லுதியான்வி!
चाहे कोई खुश हो चाहे गालियाँ हज़ार दे
मस्त राम बन के ज़िंदगी के दिन गुज़ार दे
சாஹே கோயி குஷ் ஹோ, சாஹே காலியா ஹஜார் தே
மஸ்த் ராம் பன் கே ஜிந்தகீ கே தின் குஜார் தே
சிலர் குஷி யடையட்டுமே,
சிலர் ஆயிரம் தான் திட்டட்டுமே, அதனால் என்ன?
நாம் விளையாட்டாக வாழ்க்கையைக் கழிப்போம்!
பிறர் சொல்லும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பது இங்கு கருத்து. ஆனால் அடுத்த வரியில் சிந்தனை மாறுகிறது!
बाँट कर जो खाये उसपे अपनी जान ओ दिल लुटा
अरे जो बचाये माल उसको जूतियों का हार दे
பா(ன்)ட் கர் ஜோ காயே உஸ்பே அப்னி ஜான் ஓ தில் லுடா
அரே ஜோ பசாயே மால் உஸ்கோ ஜூதியோ கா ஹார் தே
தன்னுடன் இருப்பதை பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்களே -
அவர்களிடத்தில் நாம் மனதைப் பறிகொடுப்போம்!
யோவ்! யார் தன் பொருளைப் பதுக்கி வைக்கிறார்களோ
அவர்களுக்கு செருப்பு மாலை அணிவிப்போம்!
இது சோஷலிசம் போல் தோன்றும் ! ஆனால் நமது அரசியலிலாகட்டும், சினிமாவிலாகட்டும் சோஷலிசம் வெறும் டயலாக் தான்! எந்த சோஷலிஸ்டு தலைவரும் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கவில்லை!
இது சோஷலிசக் கொள்கையல்ல. வசதியுள்ளவர்கள் மற்றவர்களுக்கு ஆவன செய்யவேண்டும் என்ற சாமானிய தர்மம். இது உபனிஷதம் முதல் குறள் வரை நாம் காணும் நிலை. காந்திஜியும் இதையே சொன்னார். திரைக் கவிஞர் அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார் !
நாம் இத்தகைய புரளி வலையிலோ, அலையிலோ மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் !
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
பிடியா திருக்க வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
சண்முகத் தெய்வ மணியே
"He has a right to criticize who has a heart to help." --Abraham Lincoln
eraeravi.blogspot.in
No comments:
Post a Comment