37. கஷ்டமும் பரிகாரமும்
பிறவி என்று வந்துவிட்டால், கஷ்டமும் எங்கே என்று காத்திருக்கிறது! பொதுவாக, நமது பழவினையே நமது கஷ்டத்திற்குக் காரணம் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை."தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்று புறநானூறு சுருங்கச் சொல்கிறது.
ஔவையார் பாடினார்:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
செய்த தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறம் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வலியுறுத்தும் உண்மை.
ஊழிற் பெருவலி யாவுள என்பது வள்ளுவர் வாக்கு.
டெக்னிகலாக ஏதேதோ சொல்வார்கள். ஆதி ஆத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் என்ற வழியில் வரும் என்பார்கள். ஜோசியர்கள் ஜாதகத்தைப் பார்ப்பார்கள். கிரக சாரம் சரியில்லை என்பார்கள்! பரிகாரமும் பலமாதிரி சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் இதைப்பற்றி நிறைய பத்திரிகைகளும் புத்தகங்களும் வந்த வண்ணமிருக்கின்றன! எதை நம்புவது, எதை விடுவது என்று தெரிவதில்லை!
பெரியவர்கள் சொன்ன வழி
ஊழ், விதி என்று எவ்வளவு சொன்னாலும், வரும் கஷ்டத்திற்கு பரிகாரமும் அற நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக பெரியவர்கள் 'தெய்வநம்பிக்கை-வழிபாடு அவசியம்; எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்' என்பார்கள். சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட பரிகாரம் சொல்வார்கள். குலதெய்வ வழிபாடு, கோவில்களில் வேண்டுதலும் வழிபாடும், விளக்கேற்றிவைப்பது. பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, உபவாசம் இருப்பது,, சுந்தரகாண்டம், நாராயணீயம் பாராயணம் செய்வது, புத்தகத்தில் நூல் சார்த்திப் பார்ப்பது, பூ அல்லது சீட்டுப் போட்டுப் பார்ப்பது, தினசரி பூஜை , த்ருஷ்டி சுத்திப் போடுவது, போன்றவை சாதாரணமான ஆஸ்திகக் குடும்பங்களில் பின்பற்றப்பட்டுவந்த முறைகள். இன்று குடும்பங்கள் தலைமுறை வாரியாகப் பிரிந்திருப்பதால். இவை விடுபட்டுப்போய்விட்டன. தெரிந்து சொல்வதற்கு ஆளில்லை. கேட்டு செய்வதற்கும் சிரத்தை இல்லை. எளிய பரிகாரமானால் அதில் நம்பிக்கை இருப்பதில்லை!
எந்தப் பரிகாரமானாலும் சிலருக்குப் பலிக்கிறது- சிலருக்குப் பலிப்பதில்லை. சிலருக்கே சிலசமயம் பலிக்கலாம், பலிக்காமலும் போகலாம்! நமக்கு ஒன்றும் புரிவதில்லை!.சில சமயம் பரிகாரம் செய்கிறோம், சில விஷயங்கள் நடக்கின்றன ஆனால் பின்விளைவுகள் சரியாக இருப்பதில்லை! கடைசியில், "பகவான் நமக்குப் போட்டுவைத்தது இவ்வளவுதான் " என்று நம்மை நாமே தேற்றிக்கொள்கிறோம்.
ஒரு கஷ்டம் என்று வந்தால் பரிகாரம் தேடுவது இயற்கை. அதற்காக யாரை நாடுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். பரிகாரங்களை இருவிதமாகப் பிரிக்கலாம்: சாத்வீக [வைதீக]மானவை, தாந்திரீகமானவை. பரிகாரம் என்று இருந்தாலும் இவற்றின் பின்விளைவுகள் வேறுபடும். பரிகாரம் என்ற பெயரில் கர்மச்சுமையைச் சேர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமாகாது.
மலிந்த ஜோசியம்
இன்று ஜோசியம் 'மலிந்து'விட்டது. [ It has really become cheap or vulgar.] பகுத்தறிவு வாதமும் நாஸ்திக வாதமும் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் ஜோசியத்தின் மவுசு குறையவில்லை! புத்தகக் கண்காட்சி என்று போனால், ஒரு பக்கம் நாஸ்திக வாதம்- ஹிந்துமத எதிர்ப்பு புத்தகங்கள் குவிந்திருக்கின்றன; இன்னொரு பக்கம் ஜோசியம், மந்திரம்-தந்திரம் , பூஜை-பரிகாரம், கோவில்- புண்ணியத்தல யாத்திரை என்று புத்தகங்கள் குவிந்திருக்கின்றன! 50,60 வருஷங்களுக்குமுன் ஜோசியப் பைத்தியம் சமூகத்தில் இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. ஏதோ பலித்தால் சரிதான்! நம்பிக்கைக் கேற்ப நல்விளைவுகள் வளரட்டுமே!
முன்பெல்லாம் சிறு ஊர்களில்கூட சில ஆஸ்திகக் குடும்பங்களில் பெரியவர்கள் பூஜை, ஜபம், உபாசனை என்று வைத்துக்கொண்டிருப்பார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் அவர்களைத்தான் நாடுவோம். அவர்கள் தங்கள் உபாசனாமூர்த்தியிடம் ப்ரார்த்தித்து விபூதி, குங்குமம் என்று கொடுப்பார்கள்; சில சுலோகம் சொல்லச் சொல்வார்கள்; கோவிலில் நவக்ரஹம், ஹனுமார் சன்னிதிகளில் விளக்குப்போடு/ எரியும் விளக்கில் எண்ணெய் சேர்த்துவிடு என்பார்கள். காசு வாங்கமாட்டார்கள். அன்றைய எளிதான வாழ்க்கை முறைக்கு இத்தகைய எளிய பரிகாரங்களே சரியாக இருந்தன. இன்று நிலை வேறு.
பரிகாரம் சொல்லத் தகுதி
பரிகாரங்கள் சொல்பவருக்கு தகுதி இருக்கவேண்டும். அத்தகைய தகுதி புத்தக அறிவினால் மட்டும் வருவதில்லை.உண்மையான உபாசனை பலம் /தெய்வ அருள் இருக்கவேண்டும். வேஷம் நிறைந்த இக்காலத்தில் இதைத் தெரிந்துகொள்வது எளிதல்ல.
ஆஸ்தீகப் பரிகாரங்களின் அடிப்படை தெய்வ நம்பிக்கைதான். இப்படி பரம்பரையாக வந்த முறைகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார் ப்ரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். "ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்ரம்" என்ற பெயரில் இரண்டுபாகங்களாக வந்திருக்கிறது. இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிஷம். ஒரு பெரியவரே நம்முடன் இருந்து வழி நடத்துவது போன்றது.
\
சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் அன்றைய மாகாணம் முழுவதும் திருப்புகழ் பாடிப் பிரச்சாரம் செய்தவர் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள். அவரது குருவான ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் உபதேசப்படி திருப்புகழையே மஹாமந்திரமாகக்கொண்டு தவம்செய்து சித்திபெற்றவர். திருப்புகழையே ஆதாரமாகக் கொண்டு வழிபடும் முறையை "திருப்புகழ் பாராயணத் தவநெறித் திருமுறை " என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். எந்தவிதமான கஷ்டத்திற்கும் திருப்புகழிலிருந்தே பரிகாரம் சொன்ன மஹான் அவர்.
இன்று, சாமியார்கள், மடாதிபதிகள், Godmen,தாந்திரீகர்கள் என்று பெருகிவிட்டனர். இவர்களைப் பலர் நாடுகின்றனர். விளம்பரமும் தடபுடலாக இருக்கிறது.இதில் எவ்வளவு நிஜம்-எவ்வளவு போலி என்பது தெரியாது.
உண்மையான ஆன்மீகவாதிகள் விளம்பரம் தேடுவதில்லை. ஆனாலும் இன்று மீடியாகாரர்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை.
ஞானிகளின் நிலை!
ஸ்ரீ ராமக்ருஷ்ணர், பகவான் ரமணர் போன்ற பெரிய ஞானிகள் அவர்கள் காலத்திலேயே ப்ரபலமடைந்தவர்கள். ஆனால் அவர்கள் எந்த விஷயத்திலும் யாருக்காகவும் தலையிட்டதில்லை.
ஸ்ரீராமக்ருஷ்ணர், விவேகானந்தர் விஷயத்தில்கூட அன்னை காளியிடம் பிரார்த்தனை செய்யவில்லை! அவரையே ப்ரார்த்தித்து வேண்டியதைக் கேட்கச்சொன்னார்! மூன்றுமுறை முயன்றும் அவரால் எதுவும் கேட்க முடியவில்லை! பின்னர் ஸ்ரீ ராமக்ருஷ்ணரே பரிந்து 'உன் குடும்பத்தினர் சாதாரண உணவுக்கும் துணிக்கும் கஷ்டப்படமாட்டார்கள்' என்று மட்டுமே சொன்னார். நமக்குத் தெரிந்து உலகியலாக அவர் அருள் செய்தது இது ஒன்றுதான்!
ஒருமுறை கேசவ சந்திர சென் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னை சிம்ஹவாஹினியிடம் ஒர் இளநீர் படைத்து அவர் நலத்திற்காக வேண்டிக்கொண்டார். [ சென் தெய்வ சிந்தை யுள்ளவர், தான் கல்கத்தா போனால் கடவுளைப்பற்றி யாருடன் பேசுவது என்று ஸ்ரீ ராமக்ருஷ்ணருக்குக் கவலை! ] ஆனால் இரண்டு வருஷம் கழித்து சென் நோயினால் மிகவும் வருந்திப் படுத்திருந்தபோது ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அவரைச் சென்று பார்த்தார். அப்போது சென்னின் தாயார் அவர் நலமடைய ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்.ஆனால் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ' அத்தகைய வார்த்தைகள் என் வாயிலிருந்து வராது; எல்லாம் அன்னையின் இஷ்டம் ' என்று சொல்லிவிட்டார். ஸ்ரீ சென் பிழைக்கவில்லை!
ஸ்ரீ ரமண பகவான் யார் விஷயத்திலும் நேரடியாகத் தலையிட்ட தில்லை. 'எதுவும் பிராரப்தப்படிதான் நடக்கும்; சிவனே என்று இருப்பதுதான் சரி ' என்பதே அவரது அறிவுரை. ஆனாலும் அவரை வேண்டிக்கொண்டதால் பல விஷயங்கள் நடந்ததாக பழைய அடியவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆசிரமத்திற்கு தந்தி அடிப்பார்கள்; கடிதம் எழுதுவார்கள்; கடிதம் தபாலில் சேர்த்த அடுத்த நிமிடமே பிரச்சினை தீர்ந்துவிட்டது என்பார்கள்! ஆனால் ஸ்ரீ பகவான் இவற்றிலெல்லாம் சம்பந்தப் பட்டதாகச் சொல்லிக்கொண்டதே இல்லை. எல்லாம் தெய்வ நியதியின்படி நடந்தவை- Automatic Divine Activity; தனக்கு ஒன்றும் தெரியாது என்பார். அப்படியும் சில நிகழ்ச்சிகள் நமக்குத் தெரியவந்தன. ஒரு முறை ரங்க ஐயர் என்பவர்- அவருடன் பள்ளியில் படித்தவர்- மிகத்தீவிரமான ஜாதகக்கோளாறு
என்று பயந்து பகவானிடம் வந்தார். ஒரு வருஷம் அவர் ஆசிரமக் காம்பவுண்டைத் தாண்டி வெளியில் போகக்கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்தார்! அவர் எல்லோருக்கும் தெரியும்படி வெளிப்படையாகச் செய்த மூன்று அற்புத நிகழ்ச்சிகள்:
1. பழநிச்சாமி என்ற அன்பருக்கு உயர்ந்த உலகம் அளித்தது
2. தன் தாயாருக்கு மோக்ஷ பதவி அளித்தது
3. லக்ஷ்மி என்ற பசுவிற்கு மோக்ஷமளித்தது. அதைக்குறித்து ஒரு செய்யுளும் இயற்றி, "பசுவாயாம் லட்சுமி விமுக்த நாள்" என்று தெள்ளத் தெளிவாக எழுதியும் வைத்தார்! அவருடைய தாயாருக்கே அளிக்காத பரிசு இது!
இதற்கு நேர்மாறாக இருந்தவர் ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா.இவர் செய்துவரும் அற்புதங்கள் இன்றும் தொடர்கின்றன.
சன்னிதி விசேஷம்
மஹான்கள், ஞானிகள் ஆகியோரின் சன்னிதியே விசேஷமானது ; அவர்களைத் தரிசிப்பதே பெரிய புண்ணியம் என்பார்கள்..ஆனாலும் நாம் ஆத்ம லாபத்திற்காக அவர்களை நாடுவதில்லை. லௌகீக நன்மை கருதித்தான் அவர்களிடம் செல்கிறோம் . அண்மைக்காலம் வரை நம்மிடையே இருந்த ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரின் சரிதத்தில் இதைப் பார்க்கிறோம்: அவர் சொன்ன பரிகாரங்களை ஏற்றுக்கொண்டோம்; அவர் கூறிய பிற அறவுரைகளை விட்டுவிட்டோம்!
ஒரு பெரியவர், மஹான் சமாதியானபின் அவர் நிகழ்த்திய அற்புதங்கள், அதிசயங்கள் பற்றி பலர் தங்கள் அனுபவத்தை எழுதுவது பத்திரிகைகள் மலிந்துவிட்ட தற்காலத்தில் மிகவும் சகஜமாகிவிட்டது.இன்டர்நெட்டிலும் பல விஷயங்கள் வருகின்றன. இவற்றை எப்படி நம்புவது? ஸ்ரீ வள்ளீமலை ஸ்வாமிகள் 1950ல் சமாதியெய்தினார். 1970ல் அவரது நூற்றாண்டு ஜயந்தி விழாவில் ஒரு மலர் வெளிவந்தது.. அதில் அவருடன் தமக்கேற்பட்ட அனுபவங்களை பல அடியவர்கள் வெளியிட்டனர். இதில் பெயருடன் அவர்கள் விலாசமும் வெளியிடப்பட்டது!
நம்பிக்கை!
நாமெல்லாம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்று நினைக்கிறோம். நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது? ஏன் பரிகாரம் பலிப்பதில்லை? நமக்குத் தெரிவதில்லை! வட இந்தியாவில் ஒரு ராமாயணக்கதை வழங்கிவருகிறது. ராமர், சீதை,லக்ஷ்மணர் கோதாவரிக்கரையில் இருக்கின்றனர். ராமர் நீராடச்செல்கிறார்; வில்லை கரையில் மணலில் குத்தி நிற்கவைக்கிறார். அங்கு ஈரம் கசிகிறது- பார்த்தால் ரத்தம். லக்ஷ்மணர் வில்லை எடுத்துப் பார்க்கிறார்- அதன் அடியில் ஒரு பெரிய தவளை சிக்கிக்கொண்டிருக்கிறது; அதற்கு அடிபட்டு ரத்தம் கசிகிறது! ராமர் மனது கஷ்டப்படுகிறது. "நான் வில்லை நிறுத்தியபோது நீ ஏன் சத்தம் போடவில்லை ?" என்று கேட்கிறார். " "ராமா! யாராவது என்னைத் துன்புறுத்தினால் 'ராமா, ராமா ' என்றுதான் கூப்பிடுவேன்; ஆனால் உனது வில்லே குத்தினால் வேறு யாரை அழைப்பேன் ?" என்றதாம் அந்தத் தவளை!
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பாடினார்:
பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே
பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
நம் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் நல்ல வழியைக் காட்டுகிறார் திருஞானசம்பந்தர்.
ஊழ், ஊழ் என்று சொல்லிக்கொண்டிருந்தால் விமோசனம் வருமா?
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃ தறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.
இதையே வேறு பாடல்களிலும் சொல்கிறார்'
பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டு உமக்கு உரைப்பனால் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே
முன்னை நீர்செய் பாவத்தால் மூர்த்திபாதம் சிந்தியாது
இன்ன நீரிடும்பையில் மூழ்கிறீர் எழுமினோ
பொன்னை வென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
கர்மத்தளையை நீக்க கடவுளைப் பணியவேண்டும் என்பதே பெரியோர்கள் காட்டிய பாதை.
More things are wrought by prayer than this world dreams of. Tennyson
Our reach should exceed our grasp, or what is heaven for. Robert Browning
Saints will aid if men will call
For the blue sky bends over all.
- Coleridge
There are more things in heaven and earth
Than are dreamt of in your philosophy. - Shakespeare
No comments:
Post a Comment