Saturday, 20 February 2016

27. ப்ரார்த்தனை பலவிதம்



27. ப்ரார்த்தனை பலவிதம்!

பயன் தரும் ப்ரார்த்தனை


மனிதனையும்  கடவுளையும்  இணைக்கும் பாலங்களில் மிக முக்கியமானதாக இருப்பது ப்ரார்த்தனையே.  கோவில்-குளம், மந்திர-தந்திரம். ஜப-தபம்,யாக-யஜ்ஞம், எனப் பல இருந்தாலும் ப்ரார்த்தனையின் எளிமையும், நேரடித் தன்மையும் வேறு எதற்கும் வராது. இதற்கென்று தனி மொழி வேண்டாம்; கட்டு திட்டங்கள் இல்லை; கால,தேசம் என்ற வரையறை இல்லை. பக்தன் என்ற ஒன்றைத் தவிர வேறு  எந்தத் தகுதியும் தேவையில்லை. அதனால்தான் உலகில் எல்லா இடத்திலும், எல்லா மக்களும் ப்ரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.


 ராபர்ட் ப்ரௌனிங்  Robert Browning என்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்  எழுதுகிறார்:
If thou shouldst never see my face again,
 Pray for my soul. More things are wrought by prayer
 Than this world dreams of. Wherefore, let thy voice
 Rise like a fountain for me night and day.
 For what are men better than sheep or goats                 
 That nourish a blind life within the brain,
 If, knowing God, they lift not hands of prayer
 Both for themselves and those who call them friend?
 For so the whole round earth is every way
 Bound by gold chains about the feet of God.



 [கடவுள்  இருப்பது தெரிந்தும்  தமக்காகவும் நண்பர்களுக் காகவும் கரம் கூப்பி  ப்ரார்த்திக்காதவர்கள்  ஆடுமாடுகளைவிட எந்த விதத்தில் மேலானவர்க ளாவார்கள்? நீ என் முகத்தை மீண்டும்  பார்க்காவிட்டலும் சரியே.- என் ஆத்மாவுக்காக ப்ரார்த்திப்பாயாக. இந்த உலகம் கனவில் காண்பதைவிட ப்ரார்த்தனை அதிகம் சாதிக்கும். அதனால்  ஊற்றுபோல் இடைவிடாது இரவும் பகலும் ப்ரார்த்தனை செய். ப்ரார்த்தனை என்னும்  இந்த தங்கச் சங்கிலி உலகம் முழுவதையும்  கடவுளின்  தாள்களில் பிணைக்கிறது!]




பகுத்தறிவு வாதம் பரவிவிட்ட இந்த நாட்களில்  பலர் இதை  நேரடியாக  ஒப்புக்கொள்ள மாட்டர்கள். ஆனால், ஷேக்ஸ்பியர் கூறுவது போல்:

There are more things in heaven and earth, Horatio,
Than are dreamt of in your philosophy.
Hamlet Act 1, scene 5,


அறிவுஜீவிகளின்  வீச்சுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள்  இந்த உலகில் இருக்கின்றன!


 நான்கு வித பக்தர்கள்!


மக்கள் எவ்வளவோ விஷயங்களுக்காகப்  ப்ரார்த்தனை செய்கிறார்கள். அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே  என்று பாடுகிறார், அருணகிரிநாதர். தத்தம் மனோபாவப் படியும், தேவைக்கேற்றவாறும் மக்கள் ப்ரார்த்திக்கின்றனர்.





 கீதையில் ஸ்ரீ பகவான் நான்கு விதமான பக்தர்களைப் பற்றிக் கூறுகிறார்.

चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन।

आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ।।7.16।।



சதுர்விதா பஜன்தே மாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜுன
ஆர்தா ஜிக்ஞாஸு அர்த்தார்த்தி ஞானி ச பரதர்ஷப.


என்னடியைப் போற்றும்  எழிலுடைய புண்ணியர்தாம்
இன்னலுழப்  போரறிவை இச்சிப்போர் -- துன்னறிய
தேசுதரும் செல்வத்தைச்  சேரவிழை  வார்அறிஞர்
மாசிலவர் நால்வர் மதி.
(முத்து ஐயர் வெண்பா)

ஆர்தி =  கஷ்டத்திலிருப்பவன்
ஜிக்ஞாஸு  =  ஞானமடைய விரும்புபவன்
அர்த்தார்த்தி  =   உலகியல் பொருள்களை விரும்புபவன்
ஞானி    = ஆத்மஞாநத்தை அடைந்தவன்

ஆகிய நான்கு வகையான  நற்செயலைச் செய்கின்ற பக்தர்கள்  என்னை வழிபடுகின்றார்கள் .

उदाराः सर्व एवैते ।।


உதாரா: ஸ்ர்வ ஏவைதே

செப்புமவர் யாரும் சிறந்தவரே.

இந்த நால்வகையினரின் ப்ரார்த்தனை  வெவ்வேறு விதமாகத்தானே 

இருக்கும்!



பாகவதத்தில் ப்ரார்த்தனைகள்










நமது சமய  இலக்கியத்தில்  இவ்வாறு பலவகைப் பட்ட ப்ரார்த்தனைகளைப் பார்க்கிறோம். நமது பக்தி இலக்கியத்திற்கே சிகரமாகிய ஸ்ரீமத் பாகவதத்தில் பலதரப்பட்டவர்களின்  பலதரப்பட்ட ப்ரார்த்தனைகள் குவிந்திருக்கின்றன.


(தமிழில் வந்த புத்தகங்களில் கடலங்குடியாரின் பதிப்பே சிறந்தது.)









சுகர் போன்ற ஞானிகள், நாரதர் போன்ற ரிஷிகள், ராஜாக்கள், பலி  போன்ற அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள், ஏன்- கஜேந்திரன் போன்ற விலங்குகள்  செய்த ப்ரார்த்தனைகள்கூட அதிலிருக்கின்றன.  யானை அரசனாகிய கஜேந்திரன் செய்த ப்ரார்த்தனை ஜகப்ரசித்தமானது.  "ஆதிமூலமே" என்று ஒருமுறைதான்  அழைத்தான்- நாராயணன் ஓடி வந்தானே என்று பூரித்துப் பாடுகிறார் அருணகிரிநாதர்.


மதசிகரி  கதறிமுது  முதலைகவர்  தரநெடிய 
மடு நடுவில்  வெருவிஒரு   விசை ஆதிமூலமென
வருகருணை வரதன்.

[சீர் பாத வகுப்பு ]





இதை ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளும் பாடுகிறார்.

வாரண ராஜுனி ஜூபனு  வேகமே
வச்சினதி வின்னானுரா    ராமா

[க்ஷீர ஸாகர சயனா]

யானக்கரசனாகிய கஜேந்த்ரன்  உன்னைக் கூப்பிட, நீவேகவேகமாக ஓடிவந்தாயே, ராமா, அதை நான் அறிவேன்.

பகவான் எடுத்த அவதாரங்களில் இரண்டு மிக அவசரமாக  நிகழ்ந்தவை- ஒன்று, ப்ரஹ்லாதனுக்காக நரஸிம்மமாக வந்தது. இங்கு கஜேந்திரனுக்காக வந்தது!



குன்தி செய்த ப்ரார்த்தனை


பகவான் கீதையில் முதலில் சொல்வது  ஆர்தி- கஷ்டத்திலிருப்பவனைப் பற்றி. அவன் தன் கஷ்டம் நீங்க ப்ரார்த்தனை செய்கிறான். இதுதான்  நாம் உலகில் பொதுவாகப் பார்ப்பது.

ஆனால், பாகவத்தில் ஒரு  அதிசயத்தைப் பார்க்கிறோம்! இதற்கு நேர்மாறான நிலையைப் பார்க்கிறோம்! " பகவானே, எனக்கு  மேலும் கஷ்டத்தைக் கொடு" என்று பகவானிடமே நேரில் வேண்டுகிறார் ஒருவர்! அதுதான் குன்தி!



Kunti praying to Krishna.
From ISKCON sources. Thanks.

பாரத யுத்தமெல்லாம் முடிந்து, யுதிஷ்டிரர்  ஆட்சியில் அமர்ந்தார். ஸ்ரீ க்ருஷ்ணர் த்வாரகைக்குப் புறப்படுகிறார். அப்போது குன்தி அவரைத் தோத்திரம் செய்து வேண்டுகிறார். 

नमस्ये पुरुषं त्वद्यमीश्वरं प्रकृते: परम् ।
अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवास्थितम् ॥१॥

நமஸ்யே புருஷம்  த்வதயமீஶ்வரம் ப்ரக்ருதே: பரம்
அலக்ஷ்யம் ஸர்வ பூதானம்  அன்தர் பஹிரவஸ்திதம்.

ஆதிபுருஷனும், ஈஶ்வரனும், மாயையைவிட்டு விலகினவரும்,எல்லா ப்ராணிகளுக்கும் உள்ளும் புறமும்  இருக்கிறவரும், அப்படியிருந்தாலும் கண்டுபிடிக்க முடியாதவருமான உம்மை நமஸ்கரிக்கிறேன்.


मायाजवनिकाच्छन्नमज्ञाधोक्षमव्ययम् ।
न लक्ष्यसे मूढदृशा नटो नाटयधरो यथा ॥२॥


மாயாஜவனி காச்சன்னம் அஞாதோ க்ஷஜம் அவ்யயம்
ந லக்ஷ்யஸே மூட த்ருஶா நடோ நாட்யதரோ யதா.


மாயையாகிய திரையினால் மறைக்கப்பட்டவரும், அழிவற்றவரும், திவ்யஞானம் உள்ளவருமான தங்களை, பக்தியோகம் அறியாதவளான நான் நமஸ்காரத்தை மட்டும் செய்கிறேன். வேஷம் தரித்த நடிகனை விஷயம் தெரியாதவன் எவ்விதம் அறிவதில்லையோ  அவ்விதம் தேஹத்தில் அபிமானம் வைத்த மனிதன் தங்களை அறிகிறதில்லை.



यथा हृषीकेश खलेन देवकी कंसेने रुद्धातिचिरं शुचार्पिता ।
विमोचिताहं च सहात्मजा विभो त्वयैव नाथेन मुहुर्विपद्गणात् ॥६॥


யதாஹ்ருஷீகேஶ  கலேன தேவகீ 
கம்ஸேன ருத்தாதிசிரம் ஶுசார்பிதா
விமோசிதாஹம் ச சஹாத்மஜா 
விபோ த்வயைவ  நாதேன முஹுவிபதகணாத்.

இந்த்ரியங்களுக்கு நாயகனான ஹே ப்ரபுவே ! துஷ்டனான கம்ஸனால் ஜெயிலில் அடைக்கப்பட்டு வெகுகாலம்   சோகத்தை  அனுபவித்த தேவகியை ரக்ஷித்தது போலவா  என்னை ரக்ஷித்தாய்? குழந்தைகளுடன் கூடிய என்னை நாதனான தாங்களே வெகு ஆபத்துக்களிலிருந்தும் ஒவ்வொரு சமயமும் ரக்ஷித்தீர்!


இங்கு ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார் குன்தி தேவி. இதைப் பொதுவாக  யாரும் கவனிப்பதில்லை.
ஸ்ரீ க்ருஷ்ணர் தேவகியை ரக்ஷித்தார்- குன்தியையும் ரக்ஷித்தார். ஆனால் இரண்டுக்கும் ஒரு பெரிய வித்தியாசம்: 
தேவகி விஷயத்தில் தேவகியை மட்டும் ரக்ஷித்தார்- அவர் குழந்தைகளை  ரக்ஷிக்கவில்லை! 
இங்கு குன்தி விஷயத்தில், அவளையும் அவருடைய குழந்தைகள் அனைவரையும்  ஒவ்வொரு முறையும் ரக்ஷித்தார்!  இதையே இங்கு குன்தி  நினைவுகூருகிறார்! தன் தாயைவிட அதிகக் கருணையை குன்திக்குச் செய்தார்!

विषान्महाग्ने: पुरुषाददर्शनादसत्सभाया वनवासकृच्छ्रत: ।
मृधे मृधे 
sनेकमहारथास्त्रतो द्रौण्यस्त्रतश्चास्म हरे sभिसक्षिता: ॥७॥



விஷான் மஹாக்னே: புருஷாததர்ஶனாத

ஸத்ஸபாயா வனவாஸ க்ருச்ருத:

ம்ருதே ம்ருதே அனேக மஹாரதாஸ்த்ரதோ 

த்ரோண்யஸ்த்ர ஶ்சாஸ்ம ஹரே அபிஸக்ஷிதா:



ஹே ஹரே !பீமனுக்கு விஷம் கொடுத்த போதும், அரக்கு மாளிகையில் நெருப்பு வைத்த போதும், ஹிடிம்பன் முதலிய ராக்ஷஸர்கள் வந்த போதும், சூதாட்ட சமயத்தில்  த்ரௌபதியின் வஸ்த்ராபஹரண காலத்திலும், காட்டில் வசித்தபோது நேர்ந்த கஷ்ட காலத்திலும், ஒவ்வொரு யுத்தத்திலும் மாஹாரதர்களின்  மந்திரத்துடன் கூடிய பாணம் விழுந்த பொழுதும், இப்பொழுதும்  அஸ்வத்தாமாவினுடைய அஸ்திரத்திலிருந்தும் நாங்கள் 

நன்கு ரக்ஷிக்கப்பட்டோம்.





विपद: सन्तु ता: शश्वत्तत्र तत्र जगद्गुरो ।
भवतो दर्शनं यत्स्यादपुनर्भवदर्शनम् ॥८॥

விபத: ஸன்து  ந :ஶஶ்வத்தத்ர  தத்ர ஜகத்குரோ
பவதோ தர்ஶனம் யத்ஸ்யாத புனர்பவ  தர்ஶனம்


ஜகத்குருவான ஹே க்ருஷ்ணா !
மறுபிறப்பை பாராமலிருக்கச்செய்யக் கூடிய  தங்கள் தர்ஶனமானது, எந்த ஆபத்துக்கள் வந்தால் எனக்குக் கிடைக்குமோ-- அப்படிப்பட்ட ஆபத்துக்கள் அடிக்கடி உண்டாகட்டும்


அதாவது, ஆபத்து வந்தாவது, பகவத் தர்ஶனம் கிடைக்க வேண்டும்.]


शृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णश: स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: ।
त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम् ॥२१॥

ஶ்ருண்வன்தி  காயன்தி  க்ருணன்த்யபீக்ஷ்ணஶ:
ஸ்மரன்தி நன்தன்தி தவேஹிதம் ஜனா:
த ஏவ பஶ்யந்த்யாசிரேண  தாவகம்
பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்.

எந்த ஜனங்கள்   உம்முடைய சரிதத்தைப் பிறர் சொல்லக் கேட்கிறார்களோ, தம் வாக்கினால்  சொல்லி கானம் செய்கிறார்களோ,  அடிக்கடி நினைக்கிறார்களோ,  நினைத்து ஆனந்தப்படுகிறார்களோ, அவர்கள் பிறப்பு, இறப்பு ஆகிய இவற்றைப் போக்குகின்ற  தங்களுடைய  பாததாமரைகளை வெகு சீக்கிரம் அடைவார்கள்.



अथ विश्वेश विश्वात्मन्विश्वमूर्ते स्वकेषु मे ।
स्नेहपाशमिमं छिन्धि दृढं पाण्डुषु वृष्णषु ॥२६॥

அத: விஶ்வேஶ:விஶ்வாத்மன் விஶ்வமூர்த்தே ஸ்வகேஷு மே
ஸ்னேஹபாஶமிமம் சிந்தி ஹ்ருதம் பாண்டுஷு வ்ருஷ்ணஷு.


ஓ ஜகத்பதியே ! ஜகத்ரூபியாக இருப்பவரே ! ஜகத்தில் அந்தர்யாமியாய் இருப்பவரே ! பந்துக்களான பாண்டவர்களிடத்தும், வ்ருஷ்ணி குலத்தவரிடத்தும் எனக்கிருக்கும் அபிமானமாகிய  பந்தத்தை நீக்கியருளும்!




त्वयि मे sनन्यविष्या मतिर्मधुपते sसकृत् ।
रतिमुद्वहतादद्धा गङ्गेवौघमुदन्वति ॥२७॥

த்வயி  மே அனன்யவிஷயா மதிர்மதுபதே அஸக்ருத்
ரதிமுத்வஹதாதத்தா கங்கேவௌகமுதன்வதி.


மதுராபுரிக்கு அதிபதியான ஹே க்ருஷ்ணா!
கங்கையின் ப்ரவாஹமானது இடையில் வரும்  தடைகளை லக்ஷ்யம் செய்யாமல்  சமுத்ரத்தையே அடைவதுபோல, என்னுடைய மனதானது, வேறு எதிலும் நாட்டம் கொள்ளாது இடைவிடாமல் தங்களிடமே  நிலைத்திருக்க வேண்டும்.



 நமது  சமய இலக்கியத்தில் லக்ஷக்கணக்கில்  ப்ரார்த்தனைகள் இருக்கின்றன. ஆனால், குந்தியின் இந்த ப்ரார்tத்தனைக்கு ஈடான இன்னொரு ப்ரார்த்தனை  இல்லை.




தமிழ் நாட்டின் ஆஸ்தீக உலகில்  50 வருஷங்களுக்கு முன்  கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரீ  ஸேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்.  ராமாயணம், பாகவதம், மஹாபாரதம். நாராயணீயம் ஆகியவற்றின் உபன்யாசத்தில் நிகரற்று வளங்கியவர். மந்திர சாஸ்திரங்களில் தேர்ந்தவர்.  சாஸ்த்ரோக்தமான பரிஹாரங்கள் சொல்வதில்  நிபுணர். தெய்வாம்ஸமான வாக்ஸித்தி பெற்றவர். இத்தகைய பெரியவர், நமது நன்மைக்காக சில முக்கிய  ஸ்தோத்ரங்களை திரட்டிக் கொடுத்தார்.  ஸ்ரீ  ஜய மங்கள  ஸ்தோத்ரம் என்ற பெயரில் 16 பாகங்களாக  இவை முதலில் வெளிவந்தன. [ இன்று இரண்டு பெரிய  பகுதிகளாக உள்ளன.] இதில், முதல் பாகத்தில், முதல் ஸ்தோத்திரமாக அவர்  கொடுத்திருப்பது, குன்தி செய்த இந்த ஸ்தோத்திரம்தான்  என்றால் இதன் பெருமையை வேறு  எப்படி விளக்கமுடியும்?


குறிப்பு:

தமிழில்  தோத்திரத் திரட்டுக்கள்  பல   இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ ஜய மங்கள ஸ்தோத்ரம்  அவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து, உயர்ந்து நிற்கிறது. குடும்பத்தில் சாதாரணமாக வரும் கஷ்டங்களிலிருந்தும், ஜாதக் ரீதியிலும், அந்தந்த  தசாபுக்தியிலும் நேரும் துன்பங்களிலிருந்தும் விடுபடவும்,, மனக்கவலை, வியாதி போன்றவற்றிற்கும் ஏற்ற பல அரிய ஸ்தோத்ரங்கள் இதில்  இருக்கின்றன. இத் தொகுப்பு, அநுபவசாலியாயும், மன்த்ர ஸித்தியும், வாக்ஸித்தியும் இருந்த வராயும் திகழ்ந்த  ஒரு பெரியவர்  செய்தது.  இது வியாபார ரீதியில் வந்ததல்ல. எல்லா பரிகாரங்களும் சாத்வீகமானவை.  இப் புத்தகம் வீட்டில் இருப்பதே ஒரு அரண்போலாகும்.  இது அவரவர் அநுபவத்தில்  தானே விளங்கும்.

மஹான்களின்  பாதங்களுக்கு நமஸ்காரம்!

No comments:

Post a Comment