Tuesday, 23 February 2016

30.சில பொது ப்ரார்த்தனைகள்



30. சில  பொது ப்ரார்த்தனைகள்.



ஹிந்துக்கள்  பொதுவாகவே தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள். ஏதோ ஒரு வழியில் பூஜை, புனஸ்காரம், நாள்-கிழமை,  கோவில்-குளம் என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஶ்ரத்தையும் தீவிரமும் குறைந்து வருவதுபோல் இருக்கிறது.

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் ஸந்த்யாவந்தனம் தவிர, ஜபதபம் என்று செய்வார்கள். ராமாயணம், கீதை, நாராயணீயம் என்று ஏதாவது பாராயணம் செய்யாமல் சாப்பிடமாட்டர்கள்.ஶ்லோகம், ஸ்தோத்ரம் என்று எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உபாசனை ஏற்றுக்கொண்டவர்கள்  பூஜை செய்வார்கள். துடைத்து மெழுகி, கோலமிட்டு, விளக்கேற்றி வைப்பது,  நைவேத்யம் (பொதுவாக மஹா நைவேத்யம் என்னும் அன்னம் தான்) இதெல்லாம் பெண்களின் பொறுப்பு. அது தவிர  துளசி மாட பூஜை, வாசல் படிக்கு பூஜை என்பவை வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் இருக்கும். எல்லோரும் வேலைக்குப் போகும் இக்காலத்தில் இவை வெகுவாகக் குறைந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஒரு பக்கம் பத்திரிகைகளில் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்; நடைமுறையில் வேறுமாதிரி இருக்கிறது.

ப்ரார்த்தனை என்றால், ஏதோ ஸ்தோத்திரம் படிப்பது, ஶ்லோகம் சொல்வது என்றுதான் பொதுவாக நினைக்கிறோம். தெய்வ நினைவூட்டும் எச்செயலும் ப்ரார்த்தனைதான் என்ற பரந்த எண்ணம் வந்தால், நம் வாழ்க்கையே ப்ரார்த்தனை மயமாகிவிடும்! ஸ்தோத்ரம், மன்த்ரம் என்று சொல்லாவிட்டலும், சிலருக்கு மலை, கடல், சூர்ய உதயம் முதலிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்தாலும் அல்லது உயர்ந்த  சங்கீதத்தைக் கேட்டாலும் தெய்வ நினவு வந்துவிடும்! அப்போது அதுவே அவர்கள் செய்யும் ப்ரார்த்தனை யாகிவிடும்! பூஜை, ஜபம் என்று உட்கார்ந்தாலும் ஒரே இயந்திரகதியில் போனால் அது ப்ரார்த்தனை யாகுமா?



புவனேஶ்வரி தேவி- விவேகானந்தரின் அன்னையார்- ஜபத்தில்.
தாயைப்போல பிள்ளை !


மன்த்ரமும் ப்ரார்த்தனையும்

காயத்ரி மன்த்ரம் என்கிறோம். ஆனால் அதுவே மிகப்பெரிய ப்ரார்த்தனை என்பது பலருக்கும் தெரியாது! பரம்பொருளாகிய தூயஒளியிடம் தூய அறிவை வேண்டுவதே இந்த மன்த்ரம்!  காதையும் மூக்கையும் பிடித்துக்கொண்டு உட்காருவதில் அர்த்தத்தைக் கோட்டைவிடுகிறோம்! காயத்ரி மன்த்ரத்தின் பொருளையும் பயனையும் மிக அழகாக ஆங்கிலத்தில் விளக்கியிருக்கிறார், ஐ.கே. டைம்னி என்ற பெரியவர். [ Gayatri by I.K.Taimni. Theosophical Publishing House, Chennai]

இவ்வாறு, நமது மன்த்ரங்கள் பலவற்றிலும்  பல ப்ரார்த்தனைப் பகுதிகள் அடங்கி இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

வேதம், உபனிஷதம் முதலியவற்றைச் சொல்லத்தொடங்குமுன்பும், முடிக்கும் போதும்  "ஶான்தி மன்த்ரம் " என்று சொல்வது மரபு. பல ஶான்தி மன்த்ரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஓர் அரிய ப்ரார்த்தனைதான். உதாரணத்துக்கு ஒன்று.

 सर्वे भवन्तु सुखिनः
सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु
मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
 शान्तिः शान्तिः शान्तिः ॥



Om Sarve Bhavantu Sukhinah
Sarve Santu Nir-Aamayaah |
Sarve Bhadraanni Pashyantu
Maa Kashcid-Duhkha-Bhaag-Bhavet |
Om Shaantih Shaantih Shaantih ||



ஓம், ஸர்வே பவன்து ஸுகின
ஸர்வே ஸன்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஶ்யன்து
மா கஶ்சித்  து:கபாக் பவேத்
ஓம் ஶான்தி  ஶான்தி  ஶான்தி:

ஓம்.  எல்லா உயிர்களும் ஸுகமாக இருக்கட்டும்
அனைத்தும் நோயின்றி இருக்கட்டும்.
எல்லோரும் நல்லதையே  பார்க்கட்டும்.
யாருக்கும் எந்தவிதத்திலும் துன்பம் நேராமல் இருக்கட்டும்
முவ்வகையிலும்  ஶாந்தி நிலவுக.


இன்னொரு ஶான்தி ப்ரார்த்தனை :



ॐ तच्चं॒ योरावृ॑णीमहे ।
 गा॒तुं य॒ज्ञाय॑ । गा॒तुं य॒ज्ञप॑तये ।
 दैवी॓ स्व॒स्तिर॑स्तु नः । स्व॒स्तिर्मानु॑षेभ्यः ।
 ऊ॒र्ध्वं जि॑गातु भेष॒जम् ।
 शं नो॑ अस्तु द्वि॒पदे॓ । शं चतु॑ष्पदे ।
ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ॥


Om taccham yoravrini mahe
ghatun yajnaya
ghatun yajnapataye
daivi svastirastu naha
svastir manushebhyaha
urdhvam jigatu bheshajam
sham no astu dvipade
sham chatushpade
Om shantih shantih shantihi


ஓம். தச்சம்யோ  ஆவ்ருணீமஹே
காதும் யஜ்ஞாய  காதும் யஜ்ஞ பதயே
தைவீ ஸ்வஸ்திரஸ்துன:ஸ்வஸ்திர்  மானுஷேப்ய:
ஊர்த்த்வம் ஜிகாது பேஷஜம்
ஶம்னோ அஸ்து த்விபதே ஶம் சதுஷ்பதே
ஓம் ஶான்தி  ஶான்தி  ஶான்தி :


ஓம். நமது  துன்பங்களை நீக்கி, இன்பத்தை அருளும் அந்த இறைவனை நாம் வேண்டுகிறோம்.
யஜ்ஞங்களைச்  செய்பவர்களுக்கு அந்த யஜ்ஞத்தின் சிறந்த பயன் கிடைக்கவேண்டும்  என்று ப்ரார்த்திக்கிறோம்.
தெய்வீகமான மங்கலங்கள் நம்மை வந்தடைவதாக!
மக்கள் எல்லோரும்  மங்கலம் நிறைந்து விளங்குவார்களாக !
எதிர்காலத்திலும் நம் துன்பங்கள்  அனைத்தும் விலகுமாக !
இங்குள்ள இரண்டு காலுள்ள உயிர்கள் அனைத்தும்  மகிழ்ச்சியுடன் விளங்குவதாகட்டும்!
 நான்கு காலுள்ள ப்ராணிகள் அனைத்தும்  மகிழ்ச்சி பெறுவன வாகட்டும்!

ஓம். முவ்வகையிலும்  ஶான்தி  நிலவுவதாக !


chanting of Samaveda.sehernow.in

எவ்வளவு உயர்ந்த சிந்தனை!  இது வேத மன்த்ரமானதால்  ஒவ்வொரு ஶப்தத்துக்கும் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. 'நாங்கள் செய்யும் இந்தப் ப்ரார்த்தனையையே  யஜ்ஞமாக ஏற்று, அருள் தர வேண்டும்' என்றும் அர்த்தம் சொல்லலாம். எவ்வளவு யஜ்ஞம்  செய்தாலும்  அதன் பலன் தானாக வருவதில்லை- அதற்கு இறைவன் அருள் வேண்டும் என்பதும் இங்கு தெரிகிறது! " கன்மம் பயன்தரல் கருத்தனது ஆணையால்" என்றார் ஸ்ரீ ரமணர்.
தனக்கு மட்டுமே நன்மை வேண்டும் குறுகிய புத்தியும் இங்கே இல்லை.  மனிதன் தன்னை பிற உயிர்களிலிருந்து பிரித்து வேறாகவே  எண்ணவில்லை!  இதுவே நமது ரிஷிகள் காட்டிய வழி. "ஆழ்க தீயதெல்லாம்- வையகமும் துயர்  தீர்கவே " என்று பாடினார் ஞானசம்பந்தர்.   " காக்கை குருவி எங்கள் ஜாதி ~ நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடினார் தேசியக் கவிஞர் பாரதியார்.  இப்படி ஆருயிரனைத்தும் அருள்பெற வேண்டும் என்று வேண்டுவதுதான் நம் மரபு. இதை விடாமல் ஒவ்வொருவரும் இத்தகைய  ஶான்தி மந்திரங்களையாவது  சொல்லிவர வேண்டும்.இதுவே நாம் நமது மகத்தான ரிஷிகளுக்குக் காட்டும் நன்றி; அத்துடன், இருந்த இடத்திலிருந்தே உலகத்திற்கு நாம் ஆற்றும் தொண்டு




suryatamil1.blogspot.in

வளமான வாழ்க்கை !
ஸ்ரீ ருத்ரம்  நமது வேதத்தின்  ஒரு முக்கியமான பகுதி, " நம ஶிவாய " என்னும் மன்த்ரம் இங்குதான் வருகிறது !. இதன் ஒரு பகுதியையே  ஶான்தி மன்த்ரம் போல் சொல்வது மரபு. 

शं च॑ मे॒ मय॑श्च मे प्रि॒यं च॑ मे‌உनुका॒मश्च॑ मे॒ काम॑श्च मे सौमनस॒श्च॑ मे भ॒द्रं च॑ मे॒ श्रेय॑श्च मे॒ वस्य॑श्च मे॒ यश॑श्च मे॒ भग॑श्च मे॒ द्रवि॑णं च मे य॒न्ता च॑ मे ध॒र्ता च॑ मे॒ क्षेम॑श्च मे॒ धृति॑श्च मे॒ विश्वं॑ च मे॒ मह॑श्च मे स॒ंविच्च॑ मे॒ ज्ञात्रं॑ च मे॒ सूश्च॑ मे प्र॒सूश्च॑ मे॒ सीरं॑ च मे ल॒यश्च॑ म ऋ॒तं च॑ मे॒‌உमृतं॑ च मे‌உय॒क्ष्मं च॒ मे‌உना॑मयच्च मे जी॒वातु॑श्च मे दीर्घायु॒त्वं च॑ मे‌உनमि॒त्रं च॒ मे‌உभ॑यं च मे सु॒गं च॑ मे॒ शय॑नं च मे सू॒षा च॑ मे॒ सु॒दिनं॑ च मे ॥ 3 ॥



ஶம் ச’ மே மய’ஶ்ச மே ப்ரியம் ச’ மே‌அனுகாமஶ்ச’ மே காம’ஶ்ச மே ஸௌமனஶ்ச’ மே த்ரம் ச’ மே ஶ்ரேய’ஶ்ச மே வஸ்ய’ஶ்ச மே யஶ’ஶ்ச மேபக’ஶ்ச மே த்ரவி’ணம் ச மே ன்தா ச’ மே ர்தா ச’ மே க்ஷேம’ஶ்ச மேத்றுதி’ஶ்ச மே விஶ்வம்’ ச மே மஹ’ஶ்ச மே ம்விச்ச’ மே ஜ்ஞாத்ரம்’ ச மேஸூஶ்ச’ மே ப்ரஸூஶ்ச’ மே ஸீரம்’ ச மே யஶ்ச’ ம றுதம் ச’ மே‌அம்ருதம்’ ச மே‌அயக்ஷ்மம்  மே‌அனா’மயச்ச மே ஜீவாது’ஶ்ச மே தீர்காயுத்வம் ச’ மே‌அனமித்ரம்  மே‌அப’யம் ச மே ஸுகம் ச’ மே ஶய’னம் ச மே ஸூஷா ச’ மேஸுதினம்’ ச மே || 3 ||


ஓம். ஶம் ச மே மயஶ் ச மே ப்ரியஞ்ச நே அனு காமஶ்ச மே


ஶம்  =  இவ்வுலக இன்பமும்
மய : = மேலுலக இன்பமும்
ப்ரியம்  =  பிரியமும்
அனுகாம: =  அதனால்  விளையும் ஆசையும்
காம :     = அவ்வாசையின் அனுபவமும்
ஸௌ மனஸ : = மனதிற்கினிய சுற்றத்தாரும்
பத்ரம்  =  மங்களமும்
ஶ்ரேய:  = உயர்ந்த நன்மையும்
வஸ்ய: = வசிப்பதற்கு நல்ல இடமும்
யஶ: = புகழும்
பக : = ஸௌபாக்யமும்
த்ரவிணம் =  செல்வமும்
யன்தா = வழிகாட்டும் ஆசார்யனும்
தர்த்தா  =  தந்தை போன்று தாங்குபவனும்
க்ஷேம :  = உடமைகளின் ரக்ஷணமும்
த்ருதி : = தைர்யமும்
விஶ்வம் = அனைவரின் அனுகூலமும்
மஹ: = வெகுமானமும்
ஸம்வித் : = வேத சாஸ்திரத்தின் ஞானமும்
ஞாத்ரம்  : பிறருக்கு  போதிக்கும் சக்தியும்
ஸூ : = மக்களை ஏவுவதில் திறமையும்
ப்ரஸூ :  = பணியாட்களை நன்கு நடத்தும் திறமையும்
ஸீரம்  =  மேழிச் செல்வமும்
லய: = இடையூறுகளின் நீக்கமும்
ருதம்  = [யாகம் முதலிய ] நற்கர்மங்களும்
அம்ருதம் = அவற்றின் புண்ய பலனும்
அயக்ஷ்மம்  = க்ஷயம் முதலிய நீடித்த நோய்களின் இன்மையும்
அனாமய :   = குறுகிய கால ஜ்வரம் முதலிய நோயின்மையும்
ஜீவாது :   = நோயற்ற வாழ்வுக்குரிய மருந்தும்
தீர்காயுத்வம்  =  நீண்ட ஆயுளும்
அனமித்ரம்  = நண்பர்கள் அல்லாதவர்கள் இல்லாமையும்
அபயம் =  பயமின்மையும்
ஸுகம்  = சுகமும்
ஶயனம் = நல்ல சயனமும்
ஸூஷா  = கடவுள் ஸ்மரணையுடன் கூடிய  விடியற்காலையும்
ஸுதினஞ்ச =  யஜ்ஞம், தானம், தவம், அத்யயனம் முதலிய  சத்  காரியங்களுடன் கூடிய பகற்பொழுதும்
மே  = இறைவனை  (ஸ்ரீ ருத்ரனை ) ஆராதிக்கும் எனக்கு சித்திக்கின்றனவாம். [சித்திப்பதாக ஆகட்டும் ]

நமது மதம் நம்மையெல்லாம் இந்த உலகத்தை விட்டு வெறுத்து ஓடச்சொல்ல வில்லை. நன்றாக வாழவே சொல்கிறது.ஆனால் சரியானபடி வாழச்சொல்கிறது. அதற்குதான்  இத்தனை சாத்திரங்கள்! "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் " என்கிறார் வள்ளுவர்.  "இகபர சௌபாக்யம் அருள்வாயே" என்று வேண்டுகிறார் அருணகிரி நாதர். 

நமக்கு வேண்டியவற்றை கடவுளிடமே வேண்டிப் பெறவேண்டும் என்பது பெரியவர்கள் காட்டிய வழி.  இங்கு எவ்வளவு விஷயங்களை வேண்டுகிறார் ! சிறந்த சீரான வாழ்க்கைக்கு செல்வத்தைத் தவிர எவ்வளவு  விஷயங்கள் தேவைப்படுகின்றன! கடவுள் நினைவுடன் பொழுது விடியவேண்டும்- புண்ணியச் செயல்களால் நாள் நிறைய வேண்டும் ~ இது எவ்வளவு தூய சிந்தனை!

இங்கு ,  நல்ல சுற்றம் வேண்டும்,நண்பர்கள் இல்லாத நிலை இருக்கக்கூடாது என்று வேண்டுகிறார்.  மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு நல்ல நண்பர்கள் , சுற்றத்தினர்  அவசியம் என்று இன்று எத்தனையோ மனோதத்துவவாதிகள் கூறுகின்றனர். ERICH FROMM  என்பவர் எழுதுகிறார்:







"Man has to be related, he has to find union with others, in order to be sane. This need to be one with others is his strongest passion,  stronger than sex and often even stronger than  his wish to live."
[Beyond The Chains of Illusion]

வளமான வாழ்க்கை என்பது பொருளை மட்டுமே கொண்டு அமைவதில்லை! இந்தப் பாடத்தையே இந்த ப்ரார்த்தனையில் கற்கிறோம்.

ஸூர்யன்: வாழ்வின் ஆதாரம்

இன்னொரு முக்கியமான ப்ரார்த்தனை. இது ஸந்த்யாவந்தனத்தில் வருகிறது.




 Aapaa dhyaavaa antarikshagm soorya aatma jagatas tastusahschaITat saksuhur devahitam purastaach chukra muccharatI

 Pasyema saradassatam | jeevema saradassatam | nandaama saradassatam | moedaama saradassatam | bhavaama saradassatam srnavaama saradssatam | prabravaama sarads-satam | ajeetaasyaama saradssatam | jyoekcha-sooryam drse ||

 ya udagaan-mahatoe-arnavaat-vibhraajamaanah sarirasya-madhyaat samaa vrishabhoe loehitaakshah sooryoe vipaschin manasaa  punaatu ||   



ஆபா த்யாவா அன்தரிக்ஷகும் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷஸ்ச
தச்சக்ஷுர் தேவஹிதம் புரஸ்தாச் சுக்ரமுச்சரத்.

பஶ்யேம ஶரத  ஶதம் ஜீவேம ஶரத: ஶதம்
நந்தாம ஶரத: ஶதம்  மோதாம ஶரத: ஶதம்
பவாம ஶரத ஶதம் ஶ்ருணுவாம ஶரத ஶதம் 
ப்ரப்ரவாம ஶரத ஶதம் அஜீதாஸ்யாம ஶரத ஶதம்
ஜ்யோக்ச சூர்யம் த்ருஶே.

ய  உதகான்  மஹதோர்ணவாத்  விப்ராஜமான:
ஸரிரஸ்ய மத்யாத்  ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷ:
சூர்யோ விபஶ்சின் மனஸா புனாது.


கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து தேவர்களுக்கு நன்மை  செய்வதும் கண்போன்றதுமான அந்த சூர்ய மண்டலத்தை நூறாண்டு கண்டு தொழுவோம்.

அவ்வாறு நூறு வருஷங்கள்  வாழ்வோம்.
நூறாண்டுகள் உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்.
 நூறு வருஷங்கள்  மகிழ்ந்திருப்போம்.
நூறு வருஷங்கள் கீர்த்தியுடன் விளங்குவோம்.
நூறாண்டுகள் இனியதையே பேசுவோம்.
நூறு வருஷங்களும் தீமைகளால் ஜெயிக்கபடாதவர்களாகவே வாழ்வோம்.
இவ்வாறு  நீண்ட காலம்  சூரியதேவனைப் பார்த்து  அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.

விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்களை உடையவரும் எல்லாமறிந்தவரான அவர், எல்லா திக்கிலும் ப்ரகாசிப்பவராய் பெரிய சமுத்ரத்தின் ஜலமத்தியிலிருந்து  காலையில் உதித்தார்.  அந்த சூர்ய தேவன் என்னை முழுமனதுடன் புனிதனாக்கி அருள்வாராக.

இது எத்தகைய சக்திவாய்ந்த ப்ரார்த்தனை! எல்லாவற்றையும் சொல்லி, கடைசியில் தூய்மையை வேண்டுகிறோம் !  "மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் " என்கிறார் வள்ளுவர்.

இந்த பௌதிக உலகில் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாதது சூரியவொளி என்பது  அடிப்படை விஞ்ஞான உண்மை. விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஸூர்யனை பௌதிகக்கண் கொண்டே பார்க்கிறார்கள். ஆனால் நாம் சூர்யனை பரம்பொருளின் ப்ரத்யக்ஷ உருவாகக் காண்கிறோம். நம்மில் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குபவரும் சூர்யனைத் தத்தம் வழிபடு கடவுளாகவே கருதுகிறார்கள் "ஏஷ ப்ரஹ்மாச விஷ்ணு: ச ஶிவ ஸ்கந்த: பரஜாபதி: " என அகஸ்திய ரிஷி  ஸ்ரீ ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தில் உபதேசம் செய்கிறார். ஆரோக்யம், ஐஶ்வர்யம் ஆகிய அனைத்தும் அளிப்பவர் சூர்யன் என ஜோதிட நூல்களும் வைத்திய நூல்களும் சொல்லும். ஆக, ஹிந்துமதத்தின் எந்தப் பிரிவினரும் ஏற்கும் பரம்பொருளின் உருவம் சூர்யன். 



By David Blesack. CC BY-SA 2.0

இந்த ப்ரார்த்தனை ஸந்த்யாவந்தனத்தில், மாத்யான்னிஹத்தில் வருகிறது!ஆனால், வேலை-வெட்டி என்று அலையும் இக்காலத்தில்  அனேகமாக யாரும் மாத்யான்னிஹம் செய்வதே இல்லை! எத்தகைய அருமையான ப்ரார்த்தனையை விட்டுவிட்டோம்! மாத்யான்னிஹம் என்று செய்யாவிட்டாலும் ப்ரார்த்தனையை மட்டுமாவது செய்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன !

ஓருகடினமான ப்ரார்த்தனை!


மிக்க நெஞ்சுறுதியுடன் குன்தி செய்த ப்ரார்த்தனையைப் பார்த்தோம். சில பெரியவர்கள் அதுமாதிரி ஒரு ஶ்லோகத்தைச் சொல்வார்கள்.

अनायासेन मरणं विनादैन्येन जीवनं
देहि मे क्रिपय शम्भो त्वयि भक्तिं अचन्चलं
Anayasena Maranam
Vina dainyena Jeevanam;
Dehi me Krupaya Sambho
Raksha Raksha Maheshwara.
"Anayasena maranam |
Vina dainyena jivanam ||
Dehi me krpaya krsna |
Tvayi bhaktimacancalam."||


அநாயாஸேன மரணம் 
வினா தைன்யேன ஜீவனம்
தேஹி மே க்ருபயா ஶம்போ
த்வயி பக்திம் அசஞ்சலம்

இது விதுரர் கூறிவந்த ப்ரார்த்தனை  என யமதர்மராஜன் யாரோ ரிஷிக்குச் சொன்னார் எனக் கேள்விப்பட்டிருக்கிறன்.
அவசியத்தேவைகளுக்கு அல்லல் படாத  ஜீவனம். சிரமமில்லாத மரணம். பகவானிடத்தில் நிலையான பக்தி இதையே வேண்டுகிறார். மூன்றாவது வரியைச் சிறிது மாற்றி சிவபரமாகவும். விஷ்ணு-க்ருஷ்ண பரமாகவும் சொல்வார்கள்.

நான் பார்த்தவரை --  நித்ய பாராயணம் எல்லாம் முடிந்த பிறகு, இதைச்சொல்லி நமஸ்காரம் செய்வார்கள். காஞ்சி மஹாபெரியவர் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்.

பலர் இதைச்சொல்லத் தயங்குகிறார்கள். ஆனால், இது ஒருவிதத்தில் மஹாம்ருத்யுஞ்சய மன்த்ரம் போன்றது தானே! அதைவிட இதில் பக்தி பாவம் அதிகம்! அசஞ்சல பக்தி வேண்டும்போது எதற்குப் பயப்படவேண்டும்?

நாராயணீயம் எனும் அருமருந்து!

காஞ்சி மஹாபெரியவர்கள் பல ஸமயங்களில் பலருக்கு பல ஶ்லோகங்களை சொல்லும்படி சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று கீழ்வரும் நாராயணீயம் ஶ்லோகம்.


अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं

निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥ 


அஸ்மின் பராத்மன் நனுபாத்ம கல்பே
த்வமித்தமுத்தாபித பத்மயோனி:
அனன்த பூமா  மம ரோக ராஶிம்
நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ . 

            தஶகம் 8. 13


குருவாதபுரியிலிருக்கும் விஷ்ணுவே!
எங்கும் வ்யாபித்திருக்கும் பரமாத்ம ஸ்வரூபியே !
இந்தப் பத்மமென்ற கல்பத்தில், இவ்விதம் ப்ரம்மாவை ஸ்ருஷ்டித்தவரும் அளவற்ற மஹிமையுடைய தாங்கள்தான்  என்னுடைய வ்யாதிக் கூட்டங்களைத் தடுக்கவேண்டும்.

இதன் பாராயணம்  வ்யாதிகளுக்குப்  பரிகாரமாக மஹாபெரியவர்களால் சொல்லப்பட்டு, பலர் கண்கூடாகப் பலனடைந் திருக்கின்றனர்.


இதே நாராயணீயத்தில்  மற்றொரு ஶ்லோகம், 98வது தஶகத்தில் வருகிறது.

दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं
सम्भ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाच्छिद्य सन्धावमानम् ।
चक्रं ते कालरूपं व्यथयतु न तु मां त्वत्पदैकावलम्बं
विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात् ॥११॥





துர்வாரம் த்வாதஶாரம்  த்ரிஶத பரிமிலத்
ஷஷ்டி பர்வாபிவீதம்
ஸம்ப்ராம்யத் க்ரூர வேகம்  க்ஷணமனு
ஜகதச்சித்ய ஸந்தாவமானம்
சக்ரம் தே காலரூபம் வ்யதயது
ந து மாம் தவத்பதைகாவலம்பம்
விஷ்ணோ காருண்ய ஸிந்தோ 
பவனபுரபதே பாஹி ஸர்வாமயௌகாத்      98.11

ஹே விஷ்ணுவே !
யாராலும் தடுக்க முடியாததும்,
பன்னிரண்டு மாதங்களாகிய சுழிகளை உடையதும்,
முன்னூற்றறுபது நாட்களாகிய முனைகளால் சூழப்பட்டதும்,
கொடிய வேகமுடையதாய் நன்கு சுழல்வதும்,
ஒவ்வொரு க்ஷணமும் உலகத்தைப் பலாத்காரமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு  வேகமாக ஓடுவதுமாகிய தங்களுடைய காலச்சக்ரம் 
தங்கள் திருவடிகளை மட்டுமே நம்பியிருக்கும் என்னை மட்டும் வருந்தச்செய்யக்  கூடாது !
கருணைக் கடலாகிய ஹே குருவாயூரப்பா!
ஸமஸ்த வியாதிக் கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றுவீராக!

காலம் போவதை நாம் உணர்வதில்லை! அதை எவ்வளவு  உருக்கமாக வர்ணித்திருக்கிறார்.  ஆதி ஶங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்:


दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायुः
तदपि न मुञ्चत्याशावायुः ॥ १२॥



12. தினயாமிந்யௌஸாயம் ப்ராத :
சிசிரவஸந்தௌ புனராயாத: I
கால:க்ரீடதி கச்சத்யாயு :
ததபி ந முஞ்சதி ஆஶாவாயு : II

பகல்-இரவு, மாலை-காலை, பனிக்காலம்-வஸன்த காலம்  இவை மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன, காலம் விளையாடுகிறது: ஆயுளைப் பறித்துப் போகிறது.ஆனாலும் ஆசையெனும் காற்று விடுவதாயில்லை!

காலமே பெரிய வ்யாதி ! "நான் காலமாக இருக்கிறேன் " என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஆனால் அதற்கு மருந்தாகவும் மாற்றாகவும் அவரே இருக்கிறார்.அவரைத்தான் அனைவரும் ப்ரார்த்தனை என்னும் வலையால் பிடிக்கவேண்டும் !. "பக்திவலையில் படுவோன் காண்க " என்கிறார் மாணிக்கவாசகர்.

நாம் அனைவரும் அவரவருக்குகந்த ப்ரார்த்தனையில் தவறாது ஈடுபடுவோமாக !








1 comment: