Thursday, 12 October 2017

85.வாழ்க்கைத் தத்துவம்


85. வாழ்க்கைத் தத்துவம் 

உலகில் எப்படி வாழவேண்டும்?
இதை விளக்க பல சமயங்கள் தோன்றியிருக்கின்றன. பல தத்துவங்கள் பிறந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகள், விளக்கங்கள் என குட்டை குழம்புகிறது.

இந்திய மரபில் பொதுவாக இதை தர்மம்-அறம் என்று அழைக்கிறோம். தமிழ் இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இந்தப் பிரிவைச் சார்ந்தவையே. திருக்குறளும் நாலடியாரும்  இதில்  அடங்கியதே. அரசினர் கட்டுப் பாட்டில் தடுமாறும்  நமது கல்வி முறையில் இதையெல்லாம் இப்போது சரியாகச் சொல்லித் தருவதில்லை.

சிறு வயதில் பெற்றோர்கள் / பெரியவர்கள்  சிலவற்றைச்  சொல்லித் தருகிறார்கள். சில நல்ல ஆசிரியர்கள் நல்ல பண்புகளைப்  போதிக்கிறார்கள். சிலவற்றைப் புத்தகம் வாயிலாகதத் தெரிந்துகொள்கிறோம். மற்றபடி, செய்திப்பத்திரிகை, மீடியா ஆகியவற்றின் ஆதிக்கம் தான், 'பேச்சை மட்டும்  கேட்காதே - நடத்தையைக் கவனி , பண்புள்ள பெரியவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்களோ , அதைப் பின்பற்று ' என்பது வழிவழியாக வந்த அறிவுரை. ஆனால் மீடியாவின் ஆதிக்கமும், விளம்பரமும் வளர்ந்துவிட்ட இன்னாட்களில் யார் உண்மையிலேயே யோக்யமானவர் என்று எப்படித் தெளிவது ? வேஷதாரிகளே அதிகம். 

நல்ல நடத்தைக்கு அஸ்திவாரம், 'இந்த உலகை, நம் எல்லோரையும் ஏதோ ஒரு சக்தி / அமைப்பு  இயக்குகிறது, நாம் அதன்படி நடந்துகொள்ள வேண்டும். நேர்மையாக, நாணயமாக இருக்கவேண்டும் ' என்ற ஒரு நம்பிக்கைதான். இது திடமாக இருந்தால் ஒழுக்கம் தானாக வரும். இதை சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்  அழகாகப் பாடினார்.


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தல் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)



எல்லா ஊர்களும் நமது ஊர்களே, எல்லா மக்களும் நமது உறவினரே.  நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. நோயும்  அதிலிருந்து  நீங்குவதும்  அப்படியே. சாதல் என்பது புதுமையான தல்ல. (அதனால்) வாழ்க்கை இனியது என்று களிக்க மாட்டோம்; வெறுத்து,  தீயது என்று  சொல்லவும் மாட்டோம். மின்னலுடன் பெரிய மழைபெய்து, வெள்ளம் பெருகி, கல்லில் மோதியபடியே  பெரும் வலிவுடன் செல்லும் ஆற்று நீரில் படகு போவதுபோல, இந்த உயிர்கள் உலகில்  ஏதோ ஒரு நியதியின் வசப்பட்டு நடக்கின்றன என்பதை  ஞானிகளின்  காட்சியில் கண்டு  தெளிவடைந்தோம் அதனால் பெரியவர்களைக் கண்டு வியக்க மாட்டோம். சிறியவர்களை  இகழவும் மாட்டோம்.



Inverie river ( Great Britain) in spate.
Photo copyright by Patrick Vincent licensed under Creative commons.

இவர் "கணியன் ". எண்  ஜோதிடம் அல்லது வான சாஸ்திரத்தில் ( Astronomy)  சிறந்தவர். எல்லாவற்றையும்  நன்கு  ஆராய்ந்து பார்த்திருக்கிறார். பிறவி என்றால் இறப்பும்  இயற்கையே- வியப்பல்ல. எல்லாம் ஏதோ நியதிக்குக் கட்டுப் படுகிறது என்றால்  ( இதை சம்ஸ்க்ருதத்தில் ரிதம் Rta  என்பார்கள்,) நன்மை-தீமைகளுக்கு வேறு யார் காரணமாக முடியும்? நாம்-பிறர் என்று எப்படி பேதப்படுத்துவது? எல்லாரும் நம்மவரே, எல்லா ஊரும் நமதே. இந்த நியதியும் நம் வசத்தில் இல்லை என்பதை அருமையான உவமை மூலம் விளக்கிவிட்டார். இதையே வள்ளுவர்  "ஊழிற் பெருவலி யாவுள ?" என்று  கேட்டார் !

இவ்வளவு  இருந்தும்  பழைய இலக்கியத்தைப் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது. இது உலகெங்கிலும் இன்று நிலவும் நிலை. "ஷேக்ஸ்பியரைப்  படித்து  என்ன புண்ணியம்? அவர் எழுதியது புரியவில்லை. அந்த  சமூக நிலையும் முறையும் இன்று இல்லை;  இன்று  ஷேக்ஸ்பியரைப் படிக்க  என்ன அவசியம் வந்துவிட்டது?" என்று இங்கிலாந்து இளைஞர்கள் கேட்கிறார்கள் ! நம்மவர்களின் நிலையும் அதுதான். பாடத்தில் வந்தால் ஏதோ தீராது என்று படிக்கிறார்கள். 

இந்த நிலையில் திரைக்கவிஞர்கள்  வாழ்க்கைக்கு அவசியமான சில கருத்துக்களை  எளிய இனிய பாடல்கள் வாயிலாக மக்களிடையே பரப்புகிறார்கள். அத்தகைய  இரு பாடல்களைப் பார்க்கலாம்.








1. கிஸீ கி முஸ்குராஹடோ (ன்)
படம்: அனாடி 1959  Anadi
கவிஞர் : ஶைலேந்த்ரா  Shailendra











किसी की मुस्कुराहटों पे हो निसार
किसीका दर्द मिल सके तो ले उधार
किसीके वास्ते हो तेरे दिल में प्यार
जीना इसी का नाम है
किसी की ...

கிஸீ கி முஸ்குராஹடோ(ன்)  பே ஹோ நிஸார்
கிஸீ கா தர்த் மில் ஸகே தோ லே  உதார்
கிஸீ கே வாஸ்தே  ஹோ தேரே தில் மே ப்யார்
ஜீனா இஸீ கா நாம்  ஹை 

பிறர் சந்தோஷத்தைக் கண்டு உன் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும்
பிறருக்கு துன்பம் வந்தால் அதை நீ இரவல் வாங்கிக்கொள் !
பிறருக்காக உன் மனதில் அன்பு ஊறட்டும்!
இதைத்தான் வாழ்க்கை என்று சொல்வோம்!


(माना अपनी जेब से फ़कीर हैं
फिर भी यारों दिल के हम अमीर हैं ) - (२)
मिटे जो प्यार के लिये वो ज़िन्दगी
जले बहार के लिये वो ज़िन्दगी
किसी को हो न हो हमें तो ऐतबार
जीना इसी का नाम है


மானா அப்னி ஜேப்  ஸே ஃபகீர் ஹை
ஃபிர் பீ யாரோ தில் கே ஹம் ஹமீர் ஹை
மிடே ஜோ ப்யார் கே லியே ஓ ஜிந்தகீ
ஜலே பஹார்  கே லியே ஓ ஜிந்தகீ
கிஸீ கோ ஹோ ந ஹோ ஹமே தோ ஐத்பார்
ஜீனா இஸீ கா  நாம் ஹை 


நம் பாக்கெட்டில் பணம் இல்லை- உண்மைதான்
ஆனால் மனதால் நாம் செல்வந்தர்களாக இருக்கிறோம் !
( நல்ல மனம் உள்ளவர்களாக இருக்கிறோம் )
அன்பிற்காக யார் உயிரையும் கொடுக்கிறார்களோ- 
நல்ல காலம் வரும் என்று யார் ஏங்குகிறார்களோ-
அவர்களே வாழ்கிறார்கள்.
யாருக்கு இருக்கிறதோ,இல்லையோ -
இது தான் வாழ்க்கை என  நாம் நம்புகிறோம்.


(रिश्ता दिल से दिल के ऐतबार का
ज़िन्दा है हमीं से नाम प्यार का ) - (२)
के मर के भी किसी को याद आयेंगे
किसी के आँसुओं में मुस्कुरायेंगे
कहेगा फूल हर कली से बार बार
जीना इसी का नाम है

ரிஶ்தா தில் ஸே தி கே ஐத்பார் கா
ஜிந்தா ஹை ஹமீ  ஸே நாம் ப்யார் கா
கே மர் கே பீ கிஸீ கோ யாத்  ஆயேங்கே
கிஸி கே  ஆ(ன்)ஸ்வோ மே முஸ்குராயேங்கே
கஹேகா ஃபூல் ஹர் கலீ ஸே பார் பார்
ஜீனா இஸீ கா நாம் ஹை.

நம்பிக்கையின் மீது இரு  மனங்களுக்கிடையே  அமையும் உறவு-
அன்பு என்பது இவர்களால் தான்  தழைக்கிறது !
அப்போது, இறந்தபின்பும் சிலருக்கு நினைவு வரும்- 
சிலருக்கு கண்ணீருக்கிடையிலும் புன்முறுவல் பூக்கும்!
மலர் ஒவ்வொரு மொக்கையும் பார்த்துச் சொல்லும் -
 இதற்குத் தான் வாழ்க்கை என்று  பெயர் !

பிற உயிர்கள் பால் அன்பில்லாத ஜன்மம் ஒரு ஜன்மமா? இதைத்தானே வள்ளுவர் சொன்னார் ? :

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு.

இக்கருத்தை எவ்வளவு அழகாக விளக்குகிறார்  ஶைலேந்த்ரா !


परोपकारं वहन्ति नद्या , परोपकारं दुहन्ति गाया |
 परोपकारं फलन्ति वृक्ष, परोपकारं इदं शरीरं ||


பரோபகாரம் வஹன்தி நதியா,
பரோபகாரம் துஹன்தி காயா,
பரோபகாரம் ஃபலன்தி வ்ருக்ஷா
பரோபகாரம் இதம் ஶரீரம்.

பரோபகாரத்திற்கே நதிகள் ஒடுகின்றன
பரோபகாரத்திற்கே பசுக்கள் பால் தருகின்றன
பரோபகாரத்திற்கே மரங்கள் பழங்களைத் தருகின்றன
பரோபகாரத்திற்கே இந்த உடல் வந்திருக்கிறது!





2. மை ஜிந்தகீ கா ஸாத்
படம் : ஹம் தோனோ  1961 Hum Dono
கவிஞர் : ஸாஹிர் லுதியான்வி

मैं ज़िन्दगी का साथ निभाता चला गया
हर फ़िक्र को धुएँ में उड़ाता चला गया

மை ஜிந்தகீ கா ஸாத் நிபாதா சலா கயா
ஹர் ஃபிக்ர் கோ துயே (ன்) மே உடாதா சலா கயா

நான் வாழ்க்கையின் போக்கை ஒட்டியே  காலத்தைக் கழித்தேன்
ஒவ்வொரு கவலையையும் காற்றில் பறக்க விட்டேன்


बरबादियों का सोग मनाना फ़जूल था
बरबादियों का जश्न मनाता चला गया
हर फ़िक्र को...


பர்பாதியோ(ன்) கா ஸோக் மனானா ஃபஜூல் தா
பர்பாதியோ (ன்) கா ஜஷ்ன் மனாதா சலா  கயா
ஹர் ஃபிக்ர் கோ ...........

வரும் துன்பங்களையே நினைத்துக் கொண்டிருப்பது  இழுக்கு
அதனால் அத்துன்பங்களையே கொண்டாடினேன் !
கவலையை காற்றில் விட்டேன் !

जो मिल गया उसी को मुकद्दर समझ लिया 
जो खो गया मैं उसको भुलाता चला गया
हर फ़िक्र को...


ஜோ மில் கயா உஸீ கோ முகத்தர் ஸமஜ்லியா
ஜோ கோ கயா மை உஸ்கோ புலாதா சலா கயா
ஹர் ஃபிக்ர் கோ ..........

எது கிடைத்ததோ, நமக்கு இதுதான் கொடுத்துவைத்தது
என நினைத்துக்கொண்டேன்
எதை இழந்தேனோ, அதை மறந்துவிட்டேன் !
ஒவ்வொரு கவலையையும் காற்றில் விட்டேன் !

ग़म और ख़ुशी में फ़र्क़ न महसूस हो जहाँ
मैं दिल को उस मुक़ाम पे लाता चला गया
मैं ज़िन्दगी का साथ...


கம் ஔர் குஷீ மே ஃபர்க் ந மஹஸூஸ்  ஹோ ஜஹா(ன்)
மை தில் கோ உஸ் மகாம் பே லாதா சலா கயா
மை  ஜிந்தகீ கா ஸாத் நிபாதா சலா கயா

துன்பத்திற்கும் இன்பத்திற்கும் வித்தியாசம் காணாத, 
கண்டு கலங்காத, அந்த நிலை -
நான் மனதை அந்த லக்ஷியத்திலேயே  நிறுத்தி வைத்தேன்!
நான் வாழ்க்கையின் போக்கிலேயே காலத்தைக் கழித்தேன்!



" Let Fate find us prepared and active. Here is the great soul - the one who surrenders to Fate. The opposite is the weak and degenerate one, who struggles with and has a poor regard for the order of the world, and seeks to correct the faults of the gods rather than their own. "  Seneca, Moral Letters. 



இந்தப் பாடலைப் படிக்கும் போது எவ்வளவு தமிழ்ப் பழமொழிகள்
நினைவுக்கு வருகின்றன ! வகுத்தான் வகுத்த வகை, கிட்டாதாயின் வெட்டென மற, இடுக்கண் வருங்கால் நகுக, என இப்படி எத்தனை ! சுக-துக்கம் இவற்றிடையே சமத்வம் காண்பதே யோகம் என்பது கீதை வாக்கல்லவா!
பாரத நாடு முழுவதும் இருக்கும் சிந்தனைப்போக்கு ஒன்றுதான். கயவர்கள் மொழி, இனம் எனப்பிரித்து தடுமாறுகிறார்கள்.

இந்த இரு பாடல்களும் நமது வாழ்க்கைத் தடத்திற்கு இரு தண்டவாளங்களாக அமைந்துள்ளன ! ஒன்று, சமூக இயலில், பொதுவாழ்வில் நாம் பின்பற்றவேண்டிய  அன்பு நெறி  பற்றிச் சொல்கிறது. மற்றது தனி வாழ்வில் நாம் பற்றியொழுக வேண்டிய மன நிலை பற்றிச் சொல்கிறது !  இரண்டும் சேர்ந்து  கணியன் பூங்குன்றனாரின் சங்கப் பாடலுக்கு அமைந்த நவீன விளக்கமாக இருக்கின்றன !

Note : மை ஜிந்தகீ கா ஸாத் என்ற பாடலுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைச்  சொல்லவேண்டும். இதை 1965ல் ஒரு நாள் தனியாக இருக்கும்போது  ஆபிஸில் முணுமுணுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த  நண்பன்  அனீஸ் அஹமத், " இதைப்பாடுகிறாயே, பொருள் தெரியுமா ?" என்றான். ஓரளவு தெரியும், வார்த்தைக்கு வார்த்தை தெரியாது என்றேன். அவன் உடனே என்   நோட்டில்  இந்தப் பாடலை எழுதி  ஆங்கிலத்தில்  அர்த்தத்தையும் எழுதினான். பிறகு நாங்கள் வெவ்வேறு இடத்திற்குப்  போய்விட்டோம். சில வருஷங்களுக்குப் பிறகு விசாரித்ததில் அனீஸ் அஹமத்  தற்கொலை செய்துகொண்டான் எனத் தெரிந்து ஷாக் ஆயிற்று ! இத்தகைய பாட்டிற்குப் பொருள் சொன்ன படித்த இளைஞன்  தற்கொலையா செய்துகொண்டான் ? இந்த ஷாக் இன்னமும் நீங்கவில்லை.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான புதிர் போடுகிறது. புரியவில்லை.


taken from: guyaneseonline.wordpress.com






No comments:

Post a Comment