பாடிப் பரவும் பக்திப் பெருவழி !
தில்லைப் பெருங்கோயில்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு ஓரளவாவது தெய்வ நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தீவிரமாக ஆத்மமுன்னேற்றத்தில் நாட்டம் கொண்டால், இத்தகைய பொது நம்பிக்கையினால் பலன் விளையாது. அதற்கு 'சாதனை' செய்யவேண்டும். ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸர் இதை ரொம்பவும் வலியுறுத்தினார்.
நமது மதத்தில் பலவித சாதனை முறைகளை சாஸ்திரங்களில் பார்க்கிறோம். இவற்றினால் பலசமயங்களி ல் மனது குழம்பிவிடுகிறது. அப்போது அனுபவம் வாய்ந்த பெரியவர்களும், ஆத்ம ஞானிகளும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழியைக் காட்டுகிறார்கள். இவ்வாறு நமக்கேற்ற ஒரு வ்ழியைக் காட்டுபவரே நமக்குக் குரு என்று ஏற்றுக்கொள்கிறோம்.
சில சமயங்களில் சமூகம் முழுவதுமே குழம்பிப் போகும் நிலையையும் நாம் சரித்திரத்தில் படிக்கிறோம். அந்த சமயங்களில் ஏதோ ஒரு பெரிய மஹான் தோன்றி ஒரு புதிய வழியை நமக்குக் காட்டித் தருகிறார். அல்லது பழையதையே திருத்தித் தருகிறார். ஆதி சங்கரர் இந்த வகையில் நமது வைதிக மரபில் இருந்த குளறுபடிகளை நீக்கி ஷண்மத ஸ்தாபனம் செய்து நமது மதத்துக்குப் புத்துயிர் கொடுத்தார்.
ஆனால் அவருக்குப் பிறகு தத்துவ ரீதியில் வாதப்ரதி வாதங்கள் கிளம்பி விட்டன . தெய்வங்களுக்குள்ளும் வேறுபாடுகளைக் கற்பித்து பல மதங்கள் தோன்றிவிட்டன. மீண்டும் பழைய குருடியே திரும்பி வந்துவிட்டாள்!
எந்த ஸ்வாமியை நாம் வழிபட்டாலும், ஒவ்வொரு வழியிலும் தத்துவக் குழப்பங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம் ஸ்மார்த்தர்கள். நமக்கு சிவ-விஷ்ணு பேதம் கிடையாது. ஆனால் தத்துவக் குழப்பம் உண்டு! நமக்கு ஆதாரம் சங்கர பகவத் பாதரின் அத்வைதக் கொள்கை என்று சொல்லிக்கொள்கிறோம்- ஆனால் நடைமுறையில் த்வைதிகளாகத்தான் இருக்கிறோம்! நடைமுறையில் இதுதான் ஸாத்தியம்! நம்போன்றவர்கள் அத்வைதம் பேசுவது வெறும் வேஷமாகவே முடியும்! (பசி, தாகம் போன்ற ) உடல் உணர்சிகளும், உலக நினைப்பும் உள்ளவரை ஞானம், அத்வைதம் என்று பேசுவது சரியல்ல என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ணர். பகவான் ரமணர் "உள்ளது நாற்பது" அனுபந்தத்தில் (39) இதையே நமக்கு அறிவுறுத்தினார்:
அத்துவிதம் என்றும் அகத்துறுக ஓர்போதும்
அத்துவிதம் செய்கையில் ஆற்றற்க.
தெய்வ ஆராதனை என்றாலும் அதிலும் பலவித குழப்பங்கள்! ஹோமம், மன்த்ர ஜபம், பூஜை, அர்ச்சனை, கோவில்களில் விசேஷ வழிபாடு, விரதம், உபவாசம், தந்திர ப்ரயோகங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!
ஒவ்வொரு பெரியவரும் ஒவ்வொன்றை சிலாகித்துப் பேசுகிறார்கள்!
நம்மில் பலரும் ஏதோ பூஜை புனஸ்காரம் என்று வைத்துக்கொண்டிருந்தாலும், ப ழைய ஆசார கட்டு திட்டங்கள் குறைந்து விட்டன. நாமே பல விஷயங்களில் ரிலாக்ஸ் செய்துகொண்டு விட்டோம், அதற்கு சமாதானமும் கண்டுபிடித்துவிட்டோம்!
பல தெய்வங்கள்,பல மூர்த்திகள்,பல வழிகள், பல குருமார்கள், இவற்றை பிரச்சாரம் செய்ய பல மடங்கள் ,பத்திரிகைகள். சேனல்கள் என்று ஆகிவிட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ மாணிக்கவாசக ஸ்வாமிகள் பாடினார்:
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களில்
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறற் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களில்
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறற் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
(போற்றித் திருஅகவல்)
நமக்கு இப்படிக் குழப்பம் தோன்றிவிட்டது!
பின்னர் வந்த அருணகிரிநாத ஸ்வாமிகளும் பாடினார்:
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே
மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே
ஆடம்பரமான பூஜைகள், இடைவிடாது செய்யும் ஜபங்களில் உள்ள ஆசை, தெய்வங்களை எழுந்தருளச் செய்வதற்காக ஆராதிக்கும் யன்த்ரத் தகடுகள், பெரிய மண்டபங்களில் நடக்கும் கொண்டாட்டங்கள், ஆரவாரமாக நடக்கும் வேத ஆகம முழக்கங்கள், யஜ்ஞங்களுக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஸமித்துக்கள்- இவற்றைக் கண்டு நாம் மருளாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்!
சமயவாதிகள் இடும் வாதப் பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்கிறார்.
குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும்
சமய சங்கத்தைத் தப்பி யிருக்குங்
குணமடைந்துட்பட்டொக்க இருக்கும் படிதாராய்
(செடியுடம்பு- காஞ்சி திருப்புகழ்)
இவ்வுலகத்திலே உள்ள சமய நூல்களை எல்லாம் கற்று. அதனால் சமயவாதிகள் பெருங்கூச்சலிட்டு ஈடுபடும் சழக்குகளிலிருந்து தப்பி விலகி,எப்போதும் உத்தம குணத்திலேயே ஈடுபட்டு இருக்கும் அந்த நிலையைத் தருவாயாக.
துலுக்கர்களின் படையெடுப்பினாலும், அவர்கள் ஆட்சிசெய்த இடங்களில் நிலவிய குழப்பத்தினாலும் நமது ஸனாதன மதத்திற்கு கெடுதி நேர்ந்தபோது பல மஹான்கள் நாடெங்கிலும் தோன்றி பக்தி மார்கத்தையே போதித்து மக்களை ஒன்றுபடுத்தி நல்வழி காட்டினார்கள். சைதன்ய மஹாப்ரபு எல்லோருக்கும் பொதுவாக 'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே' என்ற மந்திரத்தை உபதேசித்தார். (இவர்கள் வழியில் ஹரே க்ருஷ்ண என்று தொடங்குகிறார்கள் )ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸ ஸ்வாமிகள் 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்' என்ற மந்திரத்தை உபதேசித்தார்.
காஞ்சி பீடத்தில் 59 வது ஜகத்குருவாக இருந்த ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள் நம் காலத்திற்கு பகவன் நாமாவைச் சொல்லுவதுதான் வழி என்று நமது சாஸ்திரங்களின் ஆதாரத்தைக் கொண்டே ஸ்தாபிதம் பண்ணினார். "ஸ்ரீ பகவன் நாம ரஸோதயம்" என்ற புஸ்தகத்தில் இதை நன்றாக விளக்கியிருக்கிறார். (ஸ்ரீ பகவன் நாம வங்கி, சென்னை-33 வெளியீடு)
கலி கல்மஷ சித்தானாம் பாபத்ரவ்ய ஜீவினாம்
விதி கர்ம விஹீனானாம் கதி: கோவிந்த கீர்த்தனம்.
கலி நமது புத்தியில் ஏறி சித்தத்தைக் கெடுத்து விட்டது. ஏதேதோ பாபம் செய்து அதனால் வரும் பொருளைக்கொண்டு வயிற்றை வளர்க்கிறோம். ஏதோ கர்மா என்று செய்தாலும் அது விதி பூர்வகமாக இருப்பதில்லை, பகவானது நாமாவைச் சொல்லுவது ஒன்றுதான் நமக்குக் கதி என்று அந்த மஹான் சொன்னார்.
அவரைத்தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள், ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் ஆகிய மஹான்கள் பஜனை ஸம்ப்ரதாயத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்
இதற்கு சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாகவே தோன்றிய ஞான ஸம்பந்த ஸ்வாமிகள் இதையே செய்து காட்டினார்!
By Thiago Santos.(Child Saint Sambandhar.Uploaded by nmadhuubala)CC BY-SA 2.0 creativecommons via Wikimedia commons.
ஊர் ஊராகத் திரிந்து,, கோவில் கோவிலாகச் சென்று அங்குள்ள ஸ்வாமியைப்பாடி நமக்கு வழி காட்டினார். ஆனால் நாம் மக்குகளாக இருப்பதால் இது நமது மண்டையில் ஏறவில்லை! அவர் காட்டிய வழியை "பதிகப் பெருவழி" என்று நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டார். ஞானஸம்பந்தர் பாடிய பதிகத்தைப் பாடுவதே சிறந்தவழி யாகும் என்றார். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.
ஸ்ரீ ஸம்பந்தர் பாடிய பதிகங்களுக்கும் மற்றவர் பாடல்களுக்கும் பெரிய வித்தியாஸம் இருக்கிறது. ஸ்ரீ ஸம்பந்தர் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யரின் அவதாரம்.இதை அருணகிரி நாதர் பல பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஞான ஸம்பந்தர் பதிகங்கள் வெறும் வேண்டுகோளாக அமையவில்லை. அதில் அவர் ஆணித்தரமாக, ஆணையிட்டுச் சொல்கிறார்!
'இதைப் பாடுங்கள், வினை போகும்'. 'இதைப் பாடுங்கள் , பாபம் தீண்டாது-இது நீலகண்டத்தின் மீது ஆணை', 'இதைப் பாடுங்கள், நாளும் கோளும் உங்களுக்குத் தொல்லை தரா- இது எனது ஆணை'' என்றெல்லாம் ஒருவித அதாரிடியோடு சொல்லுகிறார்!
சித்தம் வைத்த அடியாரவர் மேல் அடையாமற்று இடர் நோயே
வலிதாயம் அடையா நின்றஅடியார்க்கு அடையாவினை அல்லல் துயர்தானே
உய்யும் வண்ணம் நினைமின் நினைந்தால் வினை தீரும் நலமாமே
பற்றி வாழும் அதுவே சரணாவது பாடும் அடியார்க்கே
பெருமான் கழலேத்த நம் உண்மைக் கதியாமே
கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை சிற்றம் பலமேய
முற்றாவெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
அவ்வினைக் கிவ்வினை யாம்என்று சொல்லுமஃது அறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊன மன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்
தானுறு கோளும் நாளும் அடியாரைவந்து நலியாத
வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
இந்த மாதிரியான பாடலை வேறு யாரும் பாடவில்லை!
இதை தன் பெயரிலேயே ஆணித்தரமாகச் சொல்கிறார்:
நான்மறை ஞான ஸம்பந்தன் சொன்ன
பண்ணியல் பாடவல்லார்கள் இந்தப்
பாரொடு விண் பரிபாலகரே
நன்றார் தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே
ஞான ஸம்பந்தர் செய்தது "குன்றாத் தமிழ்" ! இதையே "திரு நெறிய தமிழ்"என்கிறார். இதைச் சொன்னால் "தொல்வினை தீர்தல் எளிதாமே" என்று உறுதி கூறுகிறார்! அருவினையைத் துறந்து ஆட்செய்வாரே என்கிறார்!
நாம் பாடுவது இருக்கட்டும். கேட்டாலே போதும், வினை போய்விடும் என்கிறார்:
யாழின் இசை வல்லார் சொலக்கேட்டா ரவரெல்லாம்
ஊழின் மலி வினைபோயிட உயர்வானடைவாரே.
இந்தமாதிரி கீதையில் ஸ்ரீபகவானைத்தவிர வேறு யாரும் சொன்னதில்லை!
ஞான ஸம்பந்தர் நமக்குக் காட்டியது ஒரு புதிய, எளிய வழியாகும்.
இதில் மந்திர தந்திரம் எதுவும் இல்லை! மாயாஜாலம் எதுவும் இல்லை!
'ஸம்பந்தர் சைவர் ஆச்சே, இது நமக்குச் சரிப்படுமா' என்றெல்லாம் தயங்கத் தேவையில்லை! சைவம். வைஷ்ணவம் , சாக்தம் என்பதெல்லாம் பின்னால் வந்த பெரியவர்கள் நிறுவிய கொள்கைகள். ஆனால் சிவ, விஷ்ணு ஆராதனைகள் மிகவும் ப்ராசீனமான ஸம்ப்ரதாயமாகும். நமது அனாதியான வேதத்தில் ருத்ரன், விஷ்ணு, நாராயணன் ஆகிய பெயர்கள் எந்த ஒரு குறுகிய தெய்வத்தையோ, கோட்பாட்டையோ வைத்துச் சொல்லப்படவில்லை. அவை பரம்பொருளின் பெயர்களே. \
'ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்' என்று சொல்லி ஸங்கல்பம் செய்யும் நாம், 'நாராயணாயேதி ஸமர்ப்பயாமி' என்றுதானே முடிக்கிறோம்! ஞானஸம்பந்தர் 'கவுணியன்'- அதாவது கௌண்டின்ய கோத்ரத்தவர்! வேதஸாரத்தையே பாடினார்.அவர் தன்னை "மறை ஞான ஞான முனிவன்" என்றே சொல்லிக் கொள்கிறார்! அதனால் அவர் பதிகங்களைச் சொல்லுவதற்குத் தயங்க வேண்டியதில்லை.
பதிகப் பெருவழி, பதிகப் பெருநெறி
பதிகப் பெரு நிதி, பதிகம் பதிகமே!
murugan.org
No comments:
Post a Comment