Monday, 30 November 2015

21. பரிபாடல் - 11. குன்றின் வனப்பு



21. பரிபாடல் -11



மரங்களை வழிபடுவது தொன்மையானது.
PICTURE FROM: santhipriyaspages. Thanks.

குன்றின் வனப்பு

சொந்த ஊர், சீமை என்றால் எல்லோருக்குமே ஒருவித பிடிப்பு இயற்கையாகவே வந்துவிடும்! அதுவும் சிறிய வயதில் இருந்த இடங்களும் கழித்த காலங்களும்  மனதைவிட்டு நீங்காதவை! சென்னை, மும்பை என்று எவ்வளவு பேசினாலும், அவை இத்தகைய  நெருக்கத்தை விளைப்பதில்லை. முன்பெல்லாம் ஊரைப்போட்டுதான் பேரை எழுதுவோம்! பெரியவர்களை  ஊரைச்சொல்லியே அறிந்துகொள்வோம். செம்பை, சேங்காலிபுரம் என்பதற்குமேல் எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை! சங்கீதத்துறையில்  இதை இன்னமும் பார்க்கலாம்.

புலவர்கள் தாங்கள் பாடும் தலைவன் இடத்தைப் போற்றிப் பாடுவார்கள். சேக்கிழார் தொண்டை மண்டலத்தைப் புகழ்கிறார்.  கம்ப நாடர் கோசல நாட்டைப் பற்றிப்  பாடினாலும், அவர் புகழ்வது காவிரி நாட்டைத்தான்! க்ருபானந்த வாரியார் சுவாமிகள்  தம் ஊரான காங்கேயநல்லூர்  பற்றித் தனிப் புராணமே பாடியிருக்கிறார்.

புலவர்கள் இருப்பதை உயர்த்தியே சொல்வார்கள். ஆனால், இறைவனுக்குகந்த இடம் என்று நம் பெரியவர்கள் சொல்லிய இடங்கள்  புராண  , வரலாற்று நிகழ்ச்சிகளுடனுன் தொடர்பு கொண்டதோடு, இயற்கையிலேயே  சில சிறப்புக்கள் உடைய உயர்ந்த இடங்களாகவே  இருக்கின்றன. முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி  என்று வந்துவிட்ட இக்காலத்தில்  அனேகமாக எல்லா இடங்களும் அவற்றின் இயற்கை எழிலும் வளமும்  குன்றித்தான்  நிற்கின்றன. இன்றைய சபரிமலையை, ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!  இமயமலைக்கும்  இதே கதிதான்! இத்தகைய சீரழிவு பெரும்பாலும் நம்  கண்ணெதிரிலேயே  நடக்கிறது!  முன்பு, சாலை போடும் தடத்தில் ஒரு ஏரியோ, பெரிய மரமோ  அல்லது குன்றோ எதிர்பட்டால், அதைச் சுற்றியே சாலை போடுவார்கள்.  இப்போது இதையெல்லாம்  பொருட்படுத்துவதில்லை. சில வருஷங்களுக்கு முன்பு, ஹொசூர்- பெங்களூர் சாலையை விஸ்தரித்த போது,  நூற்றுக்கும் மேற்பட்ட  பெரிய பெரிய ஆலமரங்களை  வெட்டித்தள்ளினார்கள். இது நடந்த  30 ஆண்டுகளில், அந்த இடத்தில் ஓரு ஆலமரம் கூட திரும்ப நடவில்லை! தற்போது கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையை  விரிவுபடுத்துகிறார்கள். 19,000 பெரிய பெரிய மரங்கள் - பெரும்பாலும் 100 வயதான புளிய மரங்கள்- வெட்டி அகற்றப்பட்டுவிட்டன ! சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்ககாலத்தின் இயற்கைச் செல்வத்தை  நாம் இன்று கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.

குன்றெல்லாம்  குமரனுக்கே  என்பது நமது மரபு. அதனால் குன்றே தெய்வீகமாகக் கருதப்பட்டது. அங்கிருந்த சுனை, குளம். மரம் ,மலர்  என ஒவ்வொரு அம்சமும் தெய்வத்தோடு தொடர்புடையதாகவே கொள்ளப்பட்டது. இதை இந்தப் பாடலில் காட்டுகிறார்  நல்லழிசியார் என்ற புலவர்.

மலையில் மாலை வழிபாடு!



தேம் படு மலர் குழை பூந்துகில்வடி மணி
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ
விடை அரை அசைத்த வேலன் கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்
விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து     5
கோல் எரி கொளை நறை புகை கொடிஒருங்கு எழ
மாலை மாலைஅடி உறைஇயைநர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்



அடியார்கள், தேன் சிந்தும் மலர்களையும், இளந்தளிர்களையும்,மெல்லிய ஆடையையும் மணியையும், வேலையும்    கொண்டு வருகின்றனர்.   கொடிகளையும் ஏந்தி வருகின்றனர். வேலனானவன் பலியிடுவதற் குரிய ஆட்டை மரத்தில் கட்டிவைத்திருக்கிறான். தரையில் சந்தனம் பூசியிருக்கிறது. இவற்றைச் சுமந்து வந்து, முருகக் கடவுள்  எழுந்தருளியிருக்கும் கடம்ப மரத்தை இசைக்கருவிகளை இசைத்துப்  பாடித் துதிக்கின்றனர்.



Neolamarckia cadamba. கடம்ப மரம்.




 மரங்களில் உள்ள மலர்கள் தேன் சொரிகின்றன. தீப்பந்தங்கள் ஒளிவீசுகின்றன. மணமுள்ள அகிற்புகை  எழுகின்றது.இவ்வாறு, திருப்பரங்குன்றத்தின் அடியில் மாலை தோறும் பலர் உறைகின்றனர்.  இவர்கள்  (இதை விட்டு) தேவர் உலகத்தையும் விரும்பமாட்டார்கள்.


இங்கு, கடம்ப மரத்தையே முருகனாக வழிபடுகின்றனர்!



ஒரு திறம் பாணர் யாழின் தீங் குரல் எழ
ஒரு திறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ 10
ஒரு திறம் கண் ஆர் குழலின் கரைபு எழ
ஒரு திறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத
ஒரு திறம் மண் ஆர் முழவின் இசை எழ
ஒரு திறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப
ஒரு திறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க 15
ஒரு திறம் வாடை உளர்வயின் பூங்கொடி நுடங்க



குன்றின் ஒரு பக்கத்தில்  பாணர்கள் இசைக்கும் யாழின் ஒலி எழுகின்றது, அதற்கு எதிராக வண்டுகளின் ஒலி  எழுகின்றது. ஒரு பக்கம் புல்லாங்குழல்களின்  ஒலியெழ, அதற்கெதிராக தும்பிகள் இசைக்கின்றன! ஒரு பக்கம் முழவுகளின் தாள ஓசை  கேட்க, அதனெதிராக, அருவிகளின் சப்தம்  எழுகின்றது. ஒரு பக்கம் விறலியர் மகளிர் ஆடுகின்றனர்; அதற்கெதிர், கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன!




ஒரு திறம் பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற
ஒரு திறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்     20
மாறு அட்டான் குன்றம் உடைத்து
ஓரிடத்தில், மகளிர் பாலைப்பண் அதற்குரிய அங்கங்களோடு இசைக்கின்றனர். அதற்கெதிராக  ஆடும் மயில்கள் அகவுகின்றன. இவ்வாறு, கற்றவர்கள் தங்களுக்குள் போட்டிபோடுவது போன்று, அங்கு மாறிமாறிப் பலவித ஒலிகள் எழும் சிறப்பினை உடையது, பகைவரை  வெற்றிகொண்ட அப் பரமனின் குன்றமாகும்.







கூடலும் குன்றமும்


பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை
கமழ் நறுஞ் சாந்தின் அவர் அவர் திளைப்ப
நணி நணித்து ஆயினும் சேஎய்ச் சேய்த்து    25
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால்
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு ஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை 30
வாய்வாய் மீ போய்  உம்பர் இமைபு இறப்ப
தேயா மண்டிலம் காணுமாறு இன்று
நூல்கள் புகழும்  கூடல் நகருக்கும் பரங்குன்றிற்குமிடையே  உள்ள தொலைவு பெரிதல்ல. இருந்தாலும் , அங்கு ஆண்களும் பெண்களும் வரும்போது ஏற்படும் நெரிசலால் அது  தூரமாகத் தெரிகிறது! பெண்களின் கூந்தலிலிருந்தும், ஆண்களின் குடுமியிலிருந்தும்  மலரிதழ்கள்  நிலத்தில் விழுந்து , பாதையையே மறைத்துவிட்டன!  எல்லாதிசைகளிலும் பரவிய தூய புகழுடைய பரங்குன்றில் பக்தர்கள் போடும் அகில்புகை எழுந்து வானுகை எட்டுகின்றது; அதனால்  (இமைக்காத கண் உடைய ) தேவர்கள் கூட கண் இமைப்பார்கள்! அந்தப் புகை சூரிய மண்டலத்தையும் மறைத்துவிடும்!
[சில வருஷங்களுக்குமுன் , திராவிடக் கட்சியினர் பிராமணர்களின் குடுமியை அறுத்தார்கள். இங்கு எல்லா தமிழர்களுமே குடுமி வைத்திருந்தார்கள் , அதில் பூவும் வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.]


வளை முன் கை வணங்கு இறையார்
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார் 35
ஈர மாலை இயல் அணியார்
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா
அனையபரங்குன்றின் அணி


மார்பில் மலர் மாலையணிந்த ஆடவர், மாலையும் கையில் வளையும் அணிந்த தம் மகளிருடன் விளையாடி, அங்குள்ள சுனையில் பாய்கின்றனர். அங்குள்ள மலர்களில் தாதுகளை மொய்த்திருந்த வண்டுகள் இதனால் பயந்து விலகுகின்றன. இவ்வித அலங்காரங்களை உடையது பரங்குன்று ! 


இவ்வாறு ஆடவரும் பெண்டிரும் அங்கு  சுனையில் நீராடிய செய்தியை மாங்குடி மருதனாரும்  மதுரைக் காஞ்சியில் கூறுகிறார்.

.........................................................யின்குரல்
தளிமழை பொழியும் தண்பரங் குன்றில் 
கலிகொள்  சும்மை யொளிகொள் ஆயந் 
ததைந்த கோதை தாரொடு பொலியப் 
புணர்ந்துடனாடும் இசையே யனைத்தும் 
அகலிரு வானத் திமிழ்ந்தினிது  இசைப்ப..   262-267



கீழோர் வயல் பரக்கும்வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ    40
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும்
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்
கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும் 45
கை ஊழ் தடுமாற்றம் நன்று



வெளேர் என்று  குன்றின்மேல் விழும் அருவியின் நீர்  கீழுள்ள வயல்களில் இடைவிடாது பாயும். அந்த அருவியில் விளையாடும் பெண்களின் நகைகளிலிருந்து விழுந்த மணிகள் அருவி நீரோடு வந்து வயல்களில் புகுந்து சிதைக்கும். வெளியிடங்களுக்குச் சென்ற ஆடவர்  திரும்பி வரவேண்டுமென்று  கோரி  மகளிர் தெய்வத்திற்கு  விழா எடுக்கின்றனர்.  அக் கணவன்மார் திரும்பிவந்தவுடன், திரும்பவும் விழா எடுத்து விருந்து செய்கின்றனர்.  அருவி அணிசெய்யும் பரங்குன்றிற்கும், வளம் மிகுந்த வைகைக்கும், பிடரிமயிர் அழகுசெய்யப்பெற்ற  குதிரைகள் பூட்டிய, கொடிபறக்கும்  தேர்களையுடைய  பாண்டியனது கூடல்மா நகருக்கும்   இன்னல்கள் இன்றி எல்லாம் இனிதே அமைந்தது.



முருகனுக்கு வாழ்த்து


என ஆங்கு
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ
பணி ஒரீஇ  நின் புகழ் ஏத்தி 50
அணி நெடுங் குன்றம் பாடுதும் தொழுதும்
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுகயாம் எனவே   53



 நீலமணிபோன்ற  நிறத்தையுடைய மயிலையும், உயர்ந்த கோழிக்கொடியையும்  உடைய  முருகப் பெருமானே ! பிணிமுகமாகிய யானையின் மேலேறிச்சென்று போர்செய்து வெல்லும் தலைவனே!




பிறவித்  துன்பம் நீங்கி, அழியாஇன்பம் மலிந்த  அப்பெரு நிலையை  நாம் பெறவேண்டுமென   வேண்டி, நாமும் எம் சுற்றத்தாரும் , உன் புகழை ஏத்தி, உன் பரங்குன்றைப் பாடித் தொழுகின்றோம்! அருள் புரிவாயாக !



f

from: jaghamani,blogspot.com. Thanks,

No comments:

Post a Comment