18. பரிபாடல் -8
திருப்பரங்குன்றம்.
குன்றத்தில் குமரன்!
சங்க காலத்தில் திருப்பரங்குன்றம்தான் முருகனின் மிகப்புகழ் வாய்ந்த தலமாக இருந்தது போலும். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆறு தலங்களைப்பற்றிச் சிறப்பாகச் சொன்னாலும், முதலில் அவர் குன்றத்தையே பாடினார். பரிபாடலில் வரும் 8 பாடல்களில், 7 பாடல்கள் குன்றத்துக் குமரனையே கொண்டாடுகின்றன.
இப்போது நாம் பார்க்கப்போகும் பாடல் சற்று வித்தியாசமானது. இது முருகன் புகழ் பாடினாலும், பாதிக்குமேல் பிற விஷயங்களைப் பேசுகிறது.
சங்க காலத்தில் சில கருப்புப் புள்ளிகள்
சங்க காலம் பொற்காலம்; அப்போது நடந்த எல்லாமே உத்தமமானது என்றெல்லாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். நாம் புராணத்தில் படிக்கும் சத்திய யுகத்தில் இப்படி இருந்திருக்கலாமே தவிர , இது நடைமுறையில் சாத்திய மானதல்ல. பலவும் கலந்ததுதான் சமூகம். ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு காலத்தில் சில குறைகள் இருந்தே வந்திருக்கின்றன. சமய ஆசாரங்களும், பெரியவர்கள் போதித்த நன்னெறிகளும் இக்குறைகளைக் களையவே எழுந்தன.
சங்ககாலத்தில் இருந்த தமிழ் அரசர்கள் தங்களுக்குள் சதா சண்டையிட்டவாறே இருந்தனர். வீரம் என்ற பெயரில் தமிழ் மக்களையே கொன்று குவித்தனர்; அவர் வாழுமிடங்களையும், விளை நிலங்களையும், குடி நீரையும் பாழ்படுத்தினர். சேர, சோழ,பாண்டியர்களாகிய முடியுடை வேந்தர்கள் சிற்றரசர்களாகிய அதியமான், பாரி போன்ற
வர்களின் பெருமையைச் சகிக்காமல், வலியப் போரிட்டு அவர்களைக் கொன்றனர். பெரிய புலவர்களும் கையில் கப்பறை யேந்தி சோற்றுக்காக அலைந்து திரிந்தனர். கயவர்களையும் கஞ்சப்பேய்களையும் புகழ்ந்துபாடி வயிறு வளர்த்தனர்.அப்படிப் பாடியும் கொடுக்காத பிரபுக்களும் இருக்கவே செய்தனர்.
எந்தச் சமுதாயத்திற்கும் ஆதாரமாக இருப்பது நிலையான குடும்ப
வாழ்க்கை. அதற்கு அடிப்படை திருமணம். மறையவர் தேயத்து மன்றல் எட்டு என்று தொல்காப்பியத்தில் கண்டபடி, எட்டுவிதமான திருமணமுறைகள் இருந்தன. ஆனால், களவு, கற்பு என்ற இரண்டையே ப்ரதானமாகக்கொண்டு அவற்றுக்கும் சிறந்த நெறிமுறைகளை (இலக்கணம்) வகுத்தனர் பெரியோர்கள். இதில் களவு என்பது, காந்தர்வ விவாகம்.இது பொதுவாக சமூகத்தில், பண்பாட்டில் ஒரு நிலையில் இருப்பவர்களுக்கே பொருந்தும். கற்புமணம் என்பது, பெரியவர்கள் நிச்சயம் செய்து உரிய சடங்குகளுடன் நடைபெறும் மணம். கற்பெனப் படுவது கரணமொடு புணர்தல் என்பது தொல்காப்பியம். இதற்கெல்லாம் இன்று குதர்க்கமாக விளக்கம் தருகிறார்கள்! ஆந்தைகளுக்கு வெளிச்சத்தில் கண்தெரியாதாம்!
இவற்றையும் மீறி இருந்த ஒரு சங்ககால வழக்கம், திருமணமாகி இருந்த "தலைமகன்" பரத்தையிடம் போவது! இது சங்க காலத்தில் சர்வசாதாரணமாக நடந்தது. இந்தப் பாடலில் இத்தகைய ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார் புலவர், ஆசிரியன் நல்லந்துவனார்.
ஒருவன் பரத்தையிடம் போய்விட்டுத் திரும்புகிறான். 'உன் உடம்பில் வேறுபெண்ணின் வாசனை வருகிறது ' என்கிறாள் தலைவி. 'இல்லை, இது இங்குள்ள மலர்கள், கனிகள் அவற்றின் மேல் வீசி வந்த காற்றால் வந்த மணம்; இதை பிராமணர்கள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்; வைகை மணல் மீது ஆணையிடுகிறேன்; இக்குன்றின் மீது ஆணையிடுகிறேன்' என்றெல்லாம் அடுக்குகிறான். இங்கு தோழி தலையிட்டு, 'ஏடா, நீ சொல்லுவதெல்லாம் பொய். நீ பார்ப்பனர்மேல் ஆணையிட்டாலும் இடலாம், ஆனால் , வைகைமீதும், இக்குன்றின் மீதும், குமரன்மீதும், வள்ளிமீதும் ஆணையிடாதே. நீயிடும் பொய் ஆணைக்கு இத் தெய்வமும் அவன் வேலும் உன்னை வருத்தும் ' என்கிறாள். ஆனாலும் தலைவி உனக்காக முருகனிடம் வேண்டித் தொழுவாள் என்கிறாள்.நான் இந்தப் பகுதிகளை இங்கு விட்டுவிட்டேன்.
இமயத்தை ஒத்த பரங்குன்று
மண்மிசை அவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் 5
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் 5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக 10
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக 10
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்
முருகா! துளசி மாலையும் கருடக் கொடியும் உடைய திருமாலும், எருதில் ஊரும்சிவபெருமானும், தாமரையில் தோன்றிய ப்ரம்ம தேவரும்,அவரிலிருந்து தோன்றி, உலகின் இருளைப்போக்கும் பன்னிரு ஆதித்யர்களும், மருத்துவர் இருவரும், அஷ்ட வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், அஷ்டதிக்குப் பாலர்களும், பிற தேவர்களும், அஸுரர்களும், வேதத்தில் சிறந்த முனிவர்களும், உன்னைத் தரிசிக்கும் பொருட்டு, இம்மண்ணுலகில் உனக்கேற்ற இடமாக இருக்கிறது உன் திருப்பரங்குன்றம். அதனால் அது இமயமலைக்கு ஈடாயிற்று.
மும்மூர்த்திகளும், தேவரும் முருகனைத் தரிசித்துத் தொழுவதை அருணகிரி நாதர் முதல் திருப்புகழிலேயே சொல்லிவிடுகிறார்.
முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்கத் தமரரும் அடிபேண.
தேவர்களுக்குத் தரிசனம் தர முருகன் வீற்றிருந்த சபையின் பெருமையையும், அங்கு வந்த தேவர்களின் வரிசையையும் "அருமறை யவன்முதல்" எனத் தொடங்கும் கொலு வகுப்பில் 48 அடிகளில் மிகவும் அழகாகச் சொல்கிறார் அருணகிரியார். அங்கு முருகன் இருந்த இடம் "சிவபரகிரி " யாகிய இமயம். இங்கு பரங்கிரியிலும் முருகன் அத்தகைய காட்சி தருவதால், பரங்கிரி பரகிரிபோலாயிற்று!
திருப்பரங்குன்றின் பழைய தோற்றம்-1858
குன்றின் எழில்
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் 15
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் 15
அருவி தாழ் மாலைச் சுனை
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ
மத நனி வாரணம் மாறு மாறு அதிர்ப்ப 20
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ
மத நனி வாரணம் மாறு மாறு அதிர்ப்ப 20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை
அக்குன்றில் அருவி விழும் சுனையானது, இமயத்தில் நீ எழுந்தருளிய தாமரைமலர்ந்த பொய்கையைப் போன்றது.. அங்கு எழும் மேக முழக்கம் உனது யானையின் முழக்கத்தைப்போன்றது. அம்முழக்கத்தைக் கேட்ட கோழி, குன்றில் எதிரொலிக்கும்படிக் கூவியது. மதம் மிக்க யானைகள் மாறுமாறாகப் பிளிறின. இவற்றால் அந்தக் குன்றில் எதிரொலி உண்டாகி குன்றே அதிர்ந்தது!.
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ 30
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ 30
காலொடு மயங்கிய கலிழ் கடலென
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை 35
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை 35
க்ரௌஞ்ச கிரியைத் துளைத்த வேலை யுடையவனே! மதுரையில் மணமுரசுகளின் முழக்கம் எழுந்தது. காற்றால் அலைபட்ட கடலைப் போலவும், கடலைக் குடிக்கும் மேக முழக்கத்தைப்போலவும், இந்த்ரனின் இடி முழக்கத்தைப் போலவும், அம்முரசுகள் அதிர்ந்தன..அதற்கு மாறிமாறி பரங்குன்றத்தில் முழக்கம் (எதிரொலி)எழுந்தது
வழிபடும் பெண்கள்
வளி பொரு சேண் சிமை வரையகத்தால் 90
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர
குளிர் பொய்கை அளறு நிறைய
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி 95
பொழில் கொளக் குறையா மலர
குளிர் பொய்கை அளறு நிறைய
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி 95
சீறடியவர் சாறு கொள எழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும்
மணியும் கயிறும் மயிலும் குடாரியும் 100
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும்
மணியும் கயிறும் மயிலும் குடாரியும் 100
பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி
மதுரையிலிருந்து பரங்குன்றிற்குச் செல்லும் அழகிய வழியில் பூஜை செய்வதற்காக எழுந்து, சந்தனமும், தூபத்துக்குரிய பொருள்களும், காற்றினால் அணைந்துபோகாத விளக்குகளும், மணம் கமழும் மலர்களூம்,முழவமும், மணியும் பாசமும், மயிலும். கோடரியும், பிணிமுகமும் ஆகியவற்றையும், முருகவேளுக்குரிய வேறுபிற பொருள்களையும் ஏந்தி பரங்குன்றையடைந்து தொழுவதற்காகச் செல்கின்றவர்கள் (ஆகிய மகளீர்)
[மயில், கோடரி, பிணிமுகம் என்று இங்கு சொல்வது, அவற்றின் சிரிய உருவங்கள். இவ்வாறு பல சிறிய உருவங்களை சாத்தி வழிபடுவது இன்றும் நடக்கிறது!]
கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் 105
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் 105
கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்
செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப் போரும்
பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும்
மஞ்சு ஆடு மலை முழக்கும் 110
செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப் போரும்
பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும்
மஞ்சு ஆடு மலை முழக்கும் 110
துஞ்சாக் கம்பலை
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
'நாங்கள் எங்கள் காதலரோடு அளவளாவியதாகக் கண்ட கனவு பொய்யாகாமல், உண்மையாகவே நடந்து நாம் நீராடுவதற்காக உன் வைகையில் புதுவெள்ளம் பெருகவேண்டும்' என வரம் வேண்டுவோரும்; மகப்பேறு வேண்டும் எனக்கோரி பல பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்துவோரும்; 'எம் கணவருக்கு பொருள் பெருகவேண்டும் ' எனப் பிரார்த்திப்போரும்; 'எம் கணவர் ஈடுபட்ட போரில் வெற்றி கிட்டவேண்டும்' என்று அர்ச்சனை புரிவோர் எனப் பல நிலைகளில் தலைமகளிர் நின்றனர். பாடுபவர்களின் பாட்டிற்கேற்ற தாளமும், ஆடுபவர்களது கூத்திற்குரிய தாளமும் அவற்றோடு மலையில் உண்டாகும் எதிரொலியும் சேர்ந்து அங்கு பெருமுழக்கம் எழுந்தது.
எத்தகைய இயற்கையான , எளிய ஆசைகளை இங்கே காட்டுகிறார் புலவர்!
காதல் அல்லது மணவாழ்க்கையில் வெற்றி, குழந்தைப்பேறு, பொருளாதார முன்னேற்றம். எடுத்த தொழிலில் வெற்றி- இவற்றைத்தானே இன்றும் நாம் நாடி அலைகிறோம்! அன்று போலவே இன்றும் நம் குலப்பெண்கள் தானே இவற்றுக்காக விரதமும் நோன்பும் இருக்கிறார்கள் !
கோயிலின் பழைய தோற்றம்-1858
குன்றே நீ வாழ்க!
என ஆங்கு
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி 125
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி 125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
தண் பரங்குன்றம் நினக்கு 130
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
தண் பரங்குன்றம் நினக்கு 130
பரங்குன்றமே ! இவ்வாறு, மகளிரும் அவர் அன்பர்களும், அவரல்லாத வரம் வேண்டி நிற்கும் பிறரும் கூடி, நீலகண்டப் பெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருக்குமாரனாகிய கடம்ப மலர் சூடும் குமரச் செல்வனின் திருக்கோயிலை வழிபட்டு நிற்கின்றனர். இம்மண்ணுலகமே வருந்தும்படி மழையில்லாது போனாலும், நீர் நிறைந்திருக்கும் அருவியான செல்வம் உன்னிடத்தே நிலைத்திருக்குமாக!
இங்கே சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கன. சங்க காலத்தில் பார்ப்பனர் பேரில் ஆணையிடும் வழக்கம் இருந்தது போலும். தெய்வத்தின் மீதும், தெய்வ சம்பந்த முடைய பொருட்களின் மீது ஆணையிடுவது பெரும் பயத்தை உண்டாக்கியது! நமது வேண்டுகோள் நிறைவேற, அர்ச்சனை புரியும் வழக்கம் அன்றே இருந்தது தெரிகிறது! சில விஷயங்களில் மனித இயல்பும் வழக்கமும் மாறவே இல்லை!
No comments:
Post a Comment