13. பரிபாடல் -3
திருமாலின் புகழ்!
கடவுள் உலகைப் படைத்தார் என்று சொல்வது மரபு. ஆனால், கடவுளே இந்த ப்ரபஞ்சமாக மலர்ந்தார் என்பது ஹிந்துமதக் கோட்பாடு.God did not just make- he manifested as the world.பாராதி எல்லா உலகமுமாய், எல்லாப் பூதமுமாய் ஆனார் என்பது நமது கொள்கை.எல்லா உலகமும் ஆனாய் நீயே என்பது அப்பர் வாக்கு. மாணிக்கவாசக ஸ்வாமிகள் கூறுகிறார்:
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஆத்மானுபூதி அடைந்த ஞானிகள் இந்த உலகை ப்ரஹ்ம மயமாகவே காண்கிறார்கள். த்ருஷ்டிம் ஞானமயீம் க்ருத்வா பஶ்யேத் ப்ரஹ்மமயம் ஜகத் என்பது கோட்பாடு. இது ஹிந்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை.
பரிபாடலில் மூன்றாவது பாட்டில், இந்தக் கருத்துடன் தொடங்குகிறார் கடுவன் இளவெயினனார்.
திருமாலிடமிருந்து ஶ்ருஷ்டி !
- மா அயோயே! மாஅயோயே!
- மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
- மணி திகழ் உருபின் மா அயோயே!
- தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
- ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
- திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
- மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
- தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
- மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
- மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
- மாயா வாய்மொழி உரைதர வலந்து:
ஶ்ருஷ்டியில் எல்லாப் பொருள்களும் திருமாலிடமிருந்து தோன்றியவை.
மாயோனே! நீலமணீ போன்ற திருமேனி யுடைய மாயோனே!
உன் திருவடி அடியவர்களின் பிறவிப் பிணியை நீக்கும்!
தீ, காற்று, வானம்,நிலம், நீர் என்னும் ஐந்து பூதங்களும்,சூர்ய சந்திரர்களும், தர்மமும் (அதற்கு ஆதாரமான வேள்விகளும்) ஐந்து கோள்களும் (செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி), திதியின் மைந்தர்களாகிய அஸுரர்களும், விதியின் மக்களாகிய பன்னிரண்டு ஆதித்யர்களும், குற்றமற்ற அஷ்ட வஸுக்களும், ஏகாதஸ ருத்ரர்களும். இரு அஸ்வினி தேவர்களும்.யமனும் அவனுடய படராகிய கூற்றுவனும், மூவேழாகிய இருபத்தியொரு உலகங்களும், அவற்றில் வாழும் உயிர்களும் ஆகிய இவை எல்லாம் உன்னிடத்திலிருந்தே வெளிப்பட்டு நிலைத்தன என்று வேதம் மொழிகிறது. அதுபற்றி நாங்களும் உரைத்தோம்!
- ‘வாய்மொழி ஓடை மலர்ந்த
- தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
- நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
தாமரை மலரில் தோன்றிய ப்ரம்மதேவனும் அவனுக்குத் தந்தையும் நீயே என்று அந்தணர்களின் அருமறை மொழிகின்றது. அதனால் நாங்களும் அவ்வாறே கூறுகின்றோம்.
தேவர் புகழும் திருமால்
- ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
- பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
- பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
- நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
- சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
- கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தேவர்களிடமிருந்து அமிர்தத்தைக் கொணர்ந்து தன் தாயின் துயர் தீர்த்த கருடனை வாகனமாகக் கொண்டிருக்கிறாய். அந்தக் கருடனையே கொடியாகவும் கொண்டிருக்கிறாய்.உன் திருவடிகளில் ஒன்று கீழ் ஏழு உலகங்களையும் அளந்தது! உன் திருவடிகளைத் தொழாதவர்களும் உள்ளனரோ?
- தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
- மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
- ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
- கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
- ‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
- சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
- ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
- நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
- பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
- பாடுவார் பாடும் வகை. 30
ஊழியின் முடிவில்,நெருப்பும், கூற்றுவனும், யமனும், சூர்யனும் திரிந்து கூடி, பொங்கும் கடலில் அமிழும் நிலமகளை அழகிய கொம்புடைய வராஹமாகி எடுத்தாய் எனவும்; மேகங்கள் (விடாது) பொழிவதனால் விழும் நீரை, அன்னச் சேவலாகி உன் சிறகினால் வற்றச் செய்தாய் எனவும் முனிவர்களும் தேவர்களும் உன் சிறப்பினை நயந்து பாடுகின்றனர். அந்த முறையிலேயே நாங்களும் உன்னைப் புகழ்வோம்.
- கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
- எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
- நகை அச்சாக நல் அமிர்து கலந்த
- நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை,
- இரு கை மாஅல் ! 35
- முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
- ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
- எழு கையாள! எண் கை ஏந்தல்!
- ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
- பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
- ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
- பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
- நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
- அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
- இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
- நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
- முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
நீயே குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அஸுரனை அழித்தாய்.உன் புகழைப்போலவே உன் கைகளும் எண்ணிலடங்காதவை. அமிர்தத்தைக் கடைந்து எடுத்த அக்காலத்தில், அஸுரர்களை விலக்கி, தேவர்களுக்கே நீ அமிர்தத்தைக் கொடுத்ததால், ஒரு கை நடுவு நிலையிலிருந்து திரிந்தது. இரு கை, மூன்று கை, நூறு, ஆயிரம், பதினாயிரம்,நூறாயிரம் என்றிவ்வாறு எண்ணற்ற கைகளையும், யாக்கைகளையும் உடையவனாக இருக்கிறாய். வேதங்களின் முதல்வனே! பரம் பொருளே! நீ எங்கள் பொறி புலன்களுக்கு எட்டாதவனாக இருக்கிறாய்.உன் பெருமையை உன்னைத்தவிர வேறு யாரால் உணர இயலும்?
-
- நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
- வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
- வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
- அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
- பிறை வளர், நிறை மதி உண்டி,
- அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
- திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
- நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
- அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
- அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
- வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
- ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
- சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
- ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
- ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
திருமால் பெருமையை அறிய இயலாது!
வழிவழி வந்த வேத முதல்வனே! அரிய நூல்களாலும், மனம்,அஹங்காரத்தினாலும், மற்ற எல்லாவற்றாலும் உன் வலியையும் வனப்பையும் அறிய இயலாது. பூரண கலைகளுடன் கூடிய சந்திரனின் கிரணங்களையே உணவாக உடைய, பலவித அணிகள் பூண்ட தேவர்களின் தலைவனாக இருக்கிறாய். நீ பூமியை அளந்த காலத்தில் உனக்கு அஞ்சி, கலைந்து கெட்ட மாலைகளுடன் கடலுக்குள் புகுந்து கொண்ட அஸுரர்களுக்கும் நீயே தலைவனாக இருக்கிறாய்! உன் மரபை நன்கு அறிந்த ஞானிகளும், உனக்கு யார் பகைவன், யார் நண்பன் என்று சொல்ல இயலாது!
ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளையும் தன் அலகினால் கவ்விய கருடனை வாகனமாக உடையவனே! சிவந்த கண்ணுடைய திருமாலே எனக் கதறும் வண்ணம் அவன் தருக்கையும் அடக்கியவனே! காலத்திற்கும் முதல்வனாக உள்ளவனே! வேதம் மொழிவதால் இவ்வாறு உன் பெருமையை அறிந்தோம்.
[இந்தப் பகுதியில். வருபவை, பகவத்கீதையின் வாசகங்களை நினைவூட்டுகின்றன.. உதாரணம்: 9.29.
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्।।9.29।।
ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே
த்வேஷ்ய: அஸ்தி ந ப்ரிய:
யே பஜன்தி து மாம் பக்த்யா
மயி தே தேஷுசாப்யஹம்.
எல்லா உயிரினங்களிலும் நான் ஒரே ஸமமாக நிறைந்துள்ளேன்..எனக்கு வேண்டாதவன்- வேண்டியவன் என்று யாரும் இல்லை. ஆனல் எவர்கள் அன்புடன் என்னை ஆராதிக்கிறார்களோ அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் இருக்கிறேன். ]
- தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
- கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
- அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
- வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
- வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
- அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
- உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
- மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
- முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
- பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
உன் தன்மையை சாமவேதம் பாடுகிறது ! அதனால் ஒருவாறு அறிந்தோம்..நெருப்பில் வெம்மையும், மலரில் மணமும், கல்லினுள் மணியும், சொல்லில் வாய்மையும், அறத்தினுள் அன்பும்., மறத்தினுள் கொடுமையும், வேதத்தில் உபனிஷதமும்,பூதத்தில் ஆகாயமும்,சூர்யனில் ஒளியும், சந்திரனில் குளிர்ச்சி யும் நீ தான். எல்லாம் நீயே, அவற்றின் உட்பொருளும் நீயே ! அதனால் நீ உறைதலும் இல்லை, உறையும் இடமும் இல்லை! அவற்றைக் கொண்டு உன்னை அறிதல் மாயையாகும்! (மாயமார் அனையை) நீ பிறவாத பிறப்பில்லை ! உன்னைப் பிறப்பித்தோரும் இல்லை!
[இந்த பகுதிகள் ஆழ்ந்த பொருளுள்ளவை. வெறும் மொழிப்புலமையினால் உரை சொல்ல முடியாது. பகவானே எல்லாமுமாக ஆனார்; ஆனால் அவர் எதிலும் அடங்கியவர் இல்லை !எதனாலும் அவரை அறியவோ, அளக்கவோ முடியாது ! இந்தக் கருத்து கீதையில் பயின்று வருகிறது. 7ம் அத்யாயத்தில், தன்னுடைய பர, அபர ப்ரக்ருதிகளை விளக்குகிறார் பகவான். ஆனால் அவர் எதிலும் அடங்கியவரில்லை என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக, 7.12, 9.4 ஶ்லோகங்களைப் பார்க்கவும் .
मत्त एवेति तान्विद्धि नत्वहं तेषु ते मयि।।7.12।।
மத்த ஏவேதி தான் வித்தி
ந த்வஹம் தேஷு தே மயி
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः।।9.4।।
மத்ஸ்தானி ஸர்வபூதானி
ந சாஹம் தேஷ் வ வஸ்தித:
எல்லாம் என்னிடமிருந்தே வந்தவை; ஆனால் உண்மையில் அவற்றில் நானோ, என்னில் அவையோ இல்லை என்று புதிர்போலப் பேசுகிறார்! இந்த ப்ரபஞ்சம் இறைவனின் வெளிப்பாடு; ஆனால் அவர் இதற்குள் அடங்கியவர் இல்லை ! எந்தப் பொருளும் இறைவனை முழுதும் வெளிப்படுத்தவும் முடியாது. !இதன் உண்மைப் பொருளை ஆத்மீக அனுபவம் உள்ள பெரியோர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேணும்.சங்ககாலப் புலவர்கள் இந்த விஷயங்களை நன்கு அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது!
- பறவாப் பூவைப் பூவினோயே!
- அருள் குடையாக, அறம் கோலாக,
- இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
- ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
காயாம் பூ போன்று நீல நிறத்தவனே! அருளே குடையாகவும், அறமே செங்கோலாகவும் கொண்டு மூவேழ் உலகத்தையும் நீ ஆட்சி செய்கிறாய்!
காயாம்பூ! Memecylon umbellatum
By AntanO (Own Work) CC BY-SA 4.0 creativecommons via wikimedia commons.
- பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
- இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
- ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
- நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
ஐந்து பூதங்கள், ஐந்து கன்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்த்ரியங்கள், ஐந்து புலன்கள், மனம் முதலிய அந்தக்கரணங்கள் மூன்று. மூலப் ப்ரக்ருதி, புருஷன் எனப்பட்ட இருபத்தியைந்து தத்துவங்களினாலும் நான்கு யுகங்களிலும் உன் பெருமையை ஆராய்ந்து வருகின்றனர்!
[தத்துவங்கள் 25, 36. 96 எனப் பலவாறு கணக்கிடுகின்றனர். இங்குள்ள எண்களை ஒரு பொதுக் குறிப்பாகக் கொள்ளவேண்டும்.. கடவுள் எல்லாக் கணக்கிற்கும் அப்பாற்பட்டவர். நான்கு யுகங்களிலும் எப்படி ஆராய்ந்தாலும் அவர் பெருமையை அறிய முடியாது என்பது கருத்து.]
வ்யூஹமும் பெயரும்!
- செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
- பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
- இடவல! குட அல! கோவல! காவல!
- காணா மரப! நீயா நினைவ!
- மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
- தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
- மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
- பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
- பருதி வலவ! பொரு திறல் மல்ல!
- திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
சிவந்த கண்களுள்ள வாசுதேவனே!
கருத்த கண்களும் வெளுத்த உடலும் கொண்ட ஸங்கர்ஷணனே!
சிவந்த உடலுடைய ப்ரத்யும்னனே
படங்கள்: sreenivasaraos.com. thanks.
பச்சைக் கண் உள்ள அநிருத்தனே!
ஆய்ச்சியர்களோடு கை கோர்த்து அவர்களுக்கு இடமும் வலமும் ஆடினாய்! கூத்தாடக் குடமும் எடுத்தாய்! கலப்பை ஆயுதத்தை உடையவனே! உலகைக் காப்பவனே! எவராலும் அறியமுடியாத மரபை உடையவனே! அடியவர்களின் இதயத்தில் நிலைபெற்றவனே ! என்றும் நிலை பெற்றவனே !உலகை ஆளும் மன்னவ ! இயல் அறிந்த பழம் புலவனே! யாழ் வாசிக்கும் பாணனே ! வனமாலையை அணிந்தவனே ! தோல்வி யறியாத தலைவனே! பீதாம்பரம் அணிந்தவனே! வலம்புரி சங்கும் சக்கரமும் ஏந்தியவனே! போரில் நிபுணனே !
திருமகள் கணவனே ! வெற்றி வீரனே !
- மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
- நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
- வாய்மொழி மகனொடு மலர்ந்த
- தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94
நிலம் தோன்றாத அந்த ஆதிகாலத்தில், நீரின் நடுவில், உன் உந்தியில் ப்ரம்மனோடு தோன்றிய கமலத்தை உடையவனாகிய உன் சக்கரமே உலகிற்குக் காப்பாகும்!
Suseendram Stanumalayan Temple
எவ்வளவு புராணச் செய்திகள் இந்த சங்கப்பாடலிலே வருகின்றன! முழுதும் எழுதினால் ஒரு புத்தகமே ஆகும்!
No comments:
Post a Comment