Thursday, 12 November 2015

5. திருமுருகாற்றுப்படை-3. திருச்சீரலைவாய்



5. திருமுருகாற்றுப்படை-3

திருச்செந்தூர் - ஒரு பழைய தோற்றம்

திருச்சீரலைவாய்

ரங்குன்றிலிருந்து நேரே  அலைவாயாகிய திருச்செந்தூருக்கு வருகிறார் நக்கீரர். உடனே நேரடியாக விஷயத்திற்கும் வந்துவிடுகிறார். எடுத்தவுடன் இங்கு முருகன் வரும் செய்தியைச் சொல்கிறார்.

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை 
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு



முருகன் இங்கு யானைமேல் எழுந்தருளுகிறான். அந்தயானை காற்றுபோல் வேகமாக வருகிறது. கூற்றம்போல யாராலும் தடுக்கமுடியாத ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அதன் பக்கங்களில் மணிகள் அசைகின்றன. அதன் நெற்றியில் அங்குசம் பதிந்ததின் அடையாளமான  வடு கோடாகத் தெரிகிறது.அதில் வாடாத மாலை பட்டத்துடன் விளங்குகிறது. இப்படிப்பட்ட யானைமீது முருகன் வருகிறான்.

ஆடும் பரி என்று மயிலையே முருகனின் பிரதான வாகனமாகச் சொல்கிறோம். ஆனால் முருகனுக்கு  ஆடு, யானை என்ற வேறு இரண்டு வாகனங்களும் உண்டு.

யானையின்மீது  கம்பீரமாக  வரும் முருகனின்  திருமுடியில்  அழகிய அரிய வேலைப்பாடுடன் கூடிய கிரீடம் பொலிகிறது.

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப 
நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப



  நல்லகிரீடத்திற்கு ஐந்து அம்ஸங்கள் பொருந்தியிருக்கவேண்டும் என்பது முறை. இங்கு அந்த ஐந்து லக்ஷணங்களும் பொருந்தி ,சிறந்த வேலைப்பாடு அமைந்ததாக  (செய்வினை முற்றிய)உள்ளது இக்கிரீடம். பொன்னாலாகி மாணிக்கம் பதிக்கப்பெற்றது. பல நிற மணிகள் ப்ரகாசிக்கின்றன. பரமனின் செவிகளில் மகரக்குழைகள் அசைந்து பளிச்சிடுகின்றன. தண்ணிலவைச் சூழ்ந்து மின்னும் தாரகைகள் போன்று  காணுகின்றன.

இங்கு முருகன் ஆறு முகங்களும் பன்னிரு கையும்  உடையவனாகக் காட்சிதருகிறான். இந்த முருகனின் காட்சி யாருக்குக் கிடைக்கும்? சீரிய நியமத்துடன் தவமிருந்து, தம் ஸங்கல்பத்தை முடித்த  தூய முனிவர்களின் மனதிலே இந்த முகங்கள் தோன்றும்!

தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார்
மனனேர்பு  எழுதரு வாள் நிற முகனே


"சிதேகா ஷடஸ்யா ஹ்ருதித்யோ ததேமே
முகானி:" ஆதி சங்கரர். மனதை அடக்கி உள்ளே ஆத்ம ஒளி கண்டவர்களுக்கு ஆறு முகங்கள் தோன்றும்!




கோழி ஒங்கிய வென்றடு விறற் கொடியுடன் அலைவாய் அமர்ந்த
அறுமுகச் செவ்வேட் பரமன்.

இனி நக்கீரர், ஒவ்வொரு முகத்துக்கும் கைகளுக்கும் உரிய செயல்களை விவரிக்கிறார்.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல் கதிர் விரிந்தன்று ஒருமுகம்.


ஊழிக்கால மாவிருளைப் போக்குவது  சதகோடி சூர்யப்ரகாசமுள்ள முருகன். அந்த இருளைக்காட்டிலும் அடர்த்தியானது நமக்குள்ளே இருக்கும் அஞ்ஞான இருள். இது ஜன்ம ஜன்மாந்தரமாக நம்மைத் தொடர்வது.முருகன் புற இருளைப் போக்குவதோ டல்லாது, நமது அக இருளையும் போக்கும் ஞான பாஸ்கரன்.

....................ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம் கொடுத் தன்றே.

நம்முடைய வழிபாடென்பது பொதுவாக  நமது வேண்டுகோள் நிறைவேற நாம் செய்யும் பிரார்த்தனை யாகவே இருக்கிறது. இது வேத காலத்திலிருந்து தொடர்ந்துவரும் முறை! ஸ்ரீ ருத்ரத்தில் 300  நாமங்கள் சொல்லி பகவானை ஆராதித்துவிட்டு, உடனே நமது விருப்பப் பட்டியலை நீட்டுகிறோம்! "வாஜஸ்சமே" என்று  உணவிலிருந்து தொடங்கி அடுக்கிக்கொண்டே போகிறோம்!  பகவான் கீதையில் நான்கு வகை பக்தர்களைச் சொல்கிறார். (7.16)வரம் கேட்பவரும்  (அர்த்தார்த்தி) அதில் அடக்கம்!  யாரோ சில ஞானிகள் 'வீடும் வேண்டா விறலினராக" இருக்கலாம்; நாம் வரம் கேட்கும் வகை! இது நமது ஆண்டவனுக்கும் தெரியும்! அதனால் அவர் அன்பு பெருகி, இனிமையாக, மிக்க மகிழ்சியுடன் வரம் கொடுக்கிறார்!


..........................ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே


அந்தணர் செய்யும் வேள்விகள் உலக நன்மையைக் கருதி  ஏற்பட்டவை. உலகம் சரியாக இயங்குவதற்கான பல செயல்களுக்கு அதிகாரியாக பல தேவர்களை இறைவன் நியமித்திருக்கிறான். வேள்விகள் மூலம் தகுந்த ஆஹுதி யளித்து அவர்களைப் போஷிப்பது அந்தணர்களின் கடமை.இந்த யஜ்ஞங்களின் பலன் தேவர்களை அடையாமல் செய்து, அவற்றைத் தாமே அனுபவிக்க அஸுரர்கள் முயல்வார்கள். சூரபத்மன் முதலிய அரக்கர்கள் இத்தகையவரே. மந்திர விதி தவறாமல்  அந்தணர்கள் செய்யும் யாகங்கள் நன்கு நிறைவேற ஒருமுகம் திருவுள்ளம் கொள்ளும். உண்மையில், வேள்விகளின் தலைவன் முருகனே. அவனை "விப்ர குல யாகச் சபாபதி"  என்பார் அருணகிரி நாதர் (வேடிச்சி  காவலன் வகுப்பு). முருகனின் அவதாரம் இந்த அஸுரர்களை அழிப்பதற்காகவே நிகழ்ந்தது. சூராதி யவுணரை அழித்து தேவர்களின் இடத்தை அவர்களுக்கே மீண்டும் அளித்தான் முருகன்.(முன் கட்டுரைகளையும் பார்க்கவும்)

...............................ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத் திசை விளக்கும்மே


இங்கே ஒர் அரிய கருத்தைச் சொல்லுகிறார் நக்கீரர்.

"எஞ்சிய பொருள்களை" என்கிறார். எது எஞ்சியது? ஏன் எஞ்சியது?

இந்த உலகத்தையும் அதன் இயக்கத்தையும் அறிந்து கொள்ள மனிதன் பலகாலும் முயன்று வந்திருக்கிறான். பலதுறையைச் சேர்ந்த அறிஞர்கள் இதைப் பலவாறு விளக்குகிறார்கள். விஞ்ஞானிகள் வெளியுலகத்தை ஆராய்கிறார்கள். அணுமுதல் அண்டகோளம் வரை அலசுகிற விஞ்ஞானிகள், எதிலுமே  'இதுதான் இறுதி உண்மை' என்று சொல்ல இயலவில்லை.
ஆராய்ச்சி முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. வான சாஸ்திரிகள் (Astrophysicists) "வான வெளிக்கு எல்லையே இல்லை, அது விரிந்துகொண்டே போகிறது "   The Expanding Universe என்கிறார்கள். "நாம் காணக்கூடிய உலகம்  The Observable Universe" என்று தாங்களே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு, அதற்குட்பட்டே பேசுகிறார்கள். ஆனால்  இதுவே அவர்கள் கணக்கிற்கும் கருத்திற்கும் வரவில்லை! அணுவை ஆராயப் புகுந்தவர்களோ, "ஸர்வம் சக்தி மயம்" என்று கண்டு, உட்கார்ந்து விட்டார்கள். இதெல்லாம் ஒன்றும் தெரியாத இரண்டுங்கெட்டான்கள் இன்னமும் விஞ்ஞானம் விஞ்ஞானம் என்று சொல்லித் திரிகிறார்கள்!

இதையே இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தவர்கள், மதம்- தத்துவம் என்று பல வலைகளை விரித்து, தாங்களும் சிக்கி, மற்றவர்களையும் சிக்கவைத்து விட்டார்கள்.

இவற்றிற் கிடையே எத்தனையோ பிரிவுகள், அறிஞர்கள்! கணக்கில்லாத நூல்கள்! இந்த உலகில் அடிப்படையாக உள்ளது எது என்பது யாருக்குமே விளங்கவில்லை! மெய்ஞானிகள் இதை உணர்ந்துகொண்டு விட்டார்கள்.இது மனம், வாக்குகளுக்கு எட்டாதது என்கிறார்கள்.இதனையே கடவுள்  என்று தமிழில் அழகாகச் சொல்கிறோம். மனம், மொழிகளைக் கடந்த பொருள்! எல்லாவற்றையும் கடந்து, அதே சமயம் எல்லாவற்றிற்கு உள்ளும் வியாபித்து நிற்பது! இதை சம்ஸ்கிருதத்தில் ப்ரஹ்மம் என்கிறோம். இது ஒன்றுதான் எச்சில் படாதது என்பார் ஸ்ரீராமக்ருஷ்ணர்! ஏனெனில், எவரும் இதை வாயினால் விளக்கியதில்லை!

எனவே, நம் அறிவு, ஆராய்ச்சிகள் அனைத்தையும் மீறி எஞ்சி நிற்கும் பொருள்  இது ஒன்றுதான்! இந்த நல்லறிவை- மெய்ஞானத்தை நமக்கு அளிப்பவன் ஞானபண்டிதனாகிய முருகன்! நமது அறிவு ஆராய்ச்சிகளுக்கு அடங்காமல் எஞ்சியுள்ள பொருளை இன்புடன்ஆராய்ந்து சந்திரனைப்போல திசையெல்லாம்  விளங்கும்படிச் செய்வது ஒரு முகம்! 

இதனை அருணகிரி யண்ணல் அருமையாகச் சொல்கிறார்!

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி


 வாசித்துக் காணொணாதது  = நூல்களைக் கற்பதனாலே இதை அறிய முடியாது.
பூசித்துக் கூடொணாதது  =   பூஜை, ஆராதனை என்பவற்றால் இதை அடையமுடியாது.
வாய்விட்டுப் பேசொணாதது = இதை வாயினாலே (மொழியினாலே) விளக்கமுடியாது.

நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொணாதது = மனத்துக்கண் மாசு உள்ளோருக்குத்  தோன்றாது!
நேசர்க்குப் பேரொணாதது =  இறைவனிடம் அன்பு பூண்டவர்களின் இதயத்தை விட்டு    நீங்காதது

மாயைக்குச் சூழொணாதது  = மாயையினால் சூழவியலாதது

விந்து நாத ஓசைக்குத் தூரமானது == சக்தி, சிவம் என்று நாம் எழுப்பும் ஆராய்ச்சி ஓசைகளுக்கு மிக அப்பாற்பட்டது

மாகத்துக்கு ஈறதானது  ==   ஆகாயத்திற்கே முடிவாக இருப்பது
லோகத்துக் காதியானது    ==படைக்கப்பட்ட உலகத்துக்கெல்லாம் ஆதி (முதலாக) இருப்பது

இதை  நான் உணரும்படியாக ,உண்மையான யோகத்தை அடையுமாறு நீ மெய்ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

இன்னொரு இடத்தில்,

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன  பரசமய கலைஆர வாரமற
உரைஅவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி  யானதுவும்

என்கிறார். இதை அநுபூதியில்தான் உணரமுடியும்.

இதை வாய்விட்டுச் சொல்லமுடியாது. சொல்கிறேன் என்பவனுக்குத் தெரியாது, தெரிந்தவனால் சொல்லவியலாது என்கிறது உபநிஷதம்.

யதோ வாசோ நிவர்த்தன்தே
அப்ராப்ய மனஸா ஸஹ:

என்பது  தைத்திய  உபநிஷத வாக்கியம். "எதை அடைய இயலாமல் வாக்கும் மனமும் திரும்பி வருகின்றனவோ" என்பது இதன் பொருள். இதுவே  "எஞ்சிய" பொருள் !  இதை விளக்குவது நம் முருகன்!




...............................ஒரு முகம்
செறு நர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கிக்
கறுவு கொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே

ஒரு முகம் போருக்குவந்த பகைவர்களை அழித்து, வந்த போரை ஒழித்து, தணியாத கோபத்துடன் கள வேள்வியைச் செய்தது.
[போரில் வெற்றி பெற்றவன் அந்தப் போர்க்களத்தில் விழுந்து கிடக்கும் உடல்களைக் கொண்டு துர்கைக்கு செய்யும் வேள்வி கள வேள்வி. இது போர்
மரபு]

........................ஒரு முகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஒரு முகம் கொடிபோன்ற குறமகள் வள்ளியுடன் மகிழ்ந்திருப்பது.

ஆங்கம் மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்து  வாங்கு நிமிர்தோள்

இவ்வாறு ஆறுமுகங்களும் தத்தமக்குரிய  முறையான செயல்களைச் செய்து வருகின்றன. அதனால் அவ்வம் முகத்திற்கேற்ப இரண்டிரண்டு கைகளும் தத்தம் செயலில் ஈடுபட்டுள்ளன. மார்பிலே புரளும் பொன்னாரம் தொங்கும் மாலை. அதை ஏற்று கொடையினாலே புகழ்பெற்ற தோள்கள் பன்னிரு புயங்களைத்தாங்கி நிமிர்ந்து நிற்கின்றன. இந்த நிலையில்,

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை
உக்கம் சேர்த்தியது ஒருகை

சூர்யனது வெப்பம் முழுவதையும் அப்படியே பூமியினால் தாங்க முடியாது.அதனால் சில முனிவர்கள் சூரியனுடனேயே வானில் சென்று தங்கள்  தவவலிமையினாலே பூமிக்குவரும் வெப்பத்தைக் குறைக்கிறார்கள்.முருகன் ஒருவலது கையை அம்முனிவர்களுக்குப் பாதுகாப்பாக உயர்த்தி இருக்கிறான்.இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறான்

இவ்வாறு சிலமுனிவர்கள் சூரியனுடன் ப்ரயாணம் செய்கிறார்கள் என்ற செய்தி புறநானூற்றில் வருகிறது. (பாடல் 43). ஆனால் தற்காலத்தில் இதற்கு வேறுவிதமாகப் பொருள் சொல்லுகின்றனர்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவர்.

யானைமீது வரும் முருகன் ஒரு கையைத் துடையின்மீது வைத்திருக்கிறான். ஒரு கையில் அங்குசம் இருக்கிறது.

நலம்பெறும் கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை.

அந்தணர்களின் வேள்வியைக் காக்கும் முகத்திற்கேற்ப, இரு கைகள்:

இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப

வியப்பான முறையில் இருகைகள் கேடயத்தையும் வேலையும் சுழற்றுகின்றன.

எஞ்சிய பொருள்களை இன்புடன் விளக்கும்  ஞானபண்டிதன் அதற்கேற்ப மோனமுத்திரை காட்டுகிறான்.ஒருகை மார்புடன் சேர்ந்துமுத்திரை காட்டுகிறது ஒருகை மார்பில் புரளும் மாலையோடு சேர்ந்து இருக்கிறது.

ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய


களவேள்வி செய்யும் முகத்திற்கேற்ப , ஒரு கையை உயர்த்திச் சுழற்றுகிறான்;ஒரு கையினால் மணியை அடிக்கிறான்.

ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப
ஒருகை பாடின் படுமணி இரட்ட

அறநெறி தழைக்க வாழும் சமூகத்திற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையானது. மழை சகல அறத்திற்கும் ஆதாரம்.

சிறப்பொடு பூசனை செல்லாது  வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

நீரின்றி யமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.
என்பது குறள்.

 மணவாழ்கை அதற்கு உறுதுணை. அறன் எனப்பட்டதே இல்வாழ்கை என்பார் வள்ளுவர்.

அதன்படி, முருகனது ஒருகை, நீல வானிலிருந்து மிகுந்த மழையைப் பொழியவைக்கிறது. ஒரு கை  தேவப் பெண்களுக்கு மண மாலை சூட்டுகிறது.
வி
ஒருகை நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய
ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட.

இவ்வாறு ஆறு முகங்களுடனும் பன்னிரு கரங்களுடனும்  முருகன் வருகிறான்.துந்துபிகள்,சங்குகள், கொம்புகள் , வெற்றிமுரசு ஆகிய வாத்யங்கள் முழங்குகின்றன. அவற்றுடன் சேர்ந்து மயிலும் அகவுகின்றது.

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளை ஞரல
உரந்தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல்பொறி  மஞ்ஞை வெல்கொடி அகவ

முருகன் வானவீதி வழியே வேகமாக வரும் எண்ணம் கொண்டிருக்கிறான். இவ்வாறு வந்து, உலகமே புகழும் சிறப்புடைய அலைவாய் அடைந்து தங்குவது முருகனது இயல்பிலேயே அமைந்த குணமாகும்.

விசும்பாறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும்  நிலைஇய பண்பே.

அதா அன்று. அது மட்டுமல்ல.

இவ்விதமாக 48 அடிகளில் திருச்செந்தூர் பற்றிச் சொல்கிறார். இது பழம் பெருமை வாய்ந்த தலம். சூரஸம்ஹாரம் ஆனதும் வெற்றிக் கோலத்தொடு முருகன் வந்து தங்கிய இடம். அதனால் இது ஜயந்திபுரம் எனப்படும். அதற்கேற்ப நக்கீரர் ஆறு முகங்களையும் பன்னிரு தோள்களையும் பற்றிச் சொல்கிறார்.

ஆதி சங்கரர்க்கும் இத்தலத்தின் மீது அதீத ஈடுபாடு. கடல் அலைகள் முருகனின் கால்களில் வந்து அடங்குகின்றன.இதைப் பார்த்ததும், நமது எண்ணற்ற பிறவி அலைகளும் இப்படித்தானே அவன் காலடியில் அடங்கி ஒடுங்கும் என்று  நினைக்கிறார்!


यदा सन्निधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्ति पुत्रम् ॥४॥

.யதா ஸன்னிதானம் கதாமாநவா மே
பவாம்போதி பாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்.


"கடற்கரையிலுள்ள என் ஸன்னிதானத்தை அடைந்த அப்போதே, மனிதன் இந்த ஸம்ஸாரக் கடலைக் கடந்துவிட்டான்". இதையே இந்தக் கடற்கரைக் கோவிலிலிருந்து நம் பெருமான் சொல்லுவது போலிருக்கிறது. அந்தப் பராசக்தி புத்ரனைப் புகழ்வோம்.


- ஆதி சங்கரர். ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்.


1 comment:

  1. மிக அருமை .
    எளிமையாக எவர்க்கும் புரியும் வண்ணம் எடுத்துக்காட்டுகளோடு விளக்கியது அற்புதமாயிருந்தது.

    ReplyDelete