Sunday, 15 November 2015

9.திருமுருகாற்றுப்படை-7. பழமுதிர்சோலை



9.திருமுருகாற்றுப்படை-7


A view of the Himalayas' 
from: ahamot.org.en

பழமுதிர்சோலை

கடவுள் எங்கே இருக்கிறார்? எங்குதான் இல்லை? என்று ஞானிகள் திருப்பிக்கேட்பார்கள். 'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பொருள் என்பார் தாயுமானவர். 'எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே 'என்கிறார் அப்பர்..'வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர், ஊனுக்குள் ஈசன் உறைந்திருந்தானே 'என்கிறார் திருமூலர்.

நம்போன்றவர்களுக்கு இதனாலெல்லாம் த்ருப்தி ஏற்படுவதில்லை!  கோவில்-குளம், மலை-குகை, நதி-கடல் என்று  கிளம்பினால்தான் மனம் நிறையும்!

சில இடங்கள் இயற்கையிலேயே அமானுஷ்ய சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. இத்தகைய இடங்கள் எல்லா தேசங்களிலும் இருக்கின்றன.வெள்ளைக்காரர்களும்   இவற்றை நம்பத்தான் செய்கிறார்கள். நம் நாட்டிலோ, இவற்றிற்குப் பஞ்சமே இல்லை! அதுவும் தமிழ் நாட்டில், காவேரிக் கரையில் ஒவ்வொரு பழைய ஊரும் ஒரு க்ஷேத்ரம்தான்! ஒவ்வொன்றிற்கும் புராணம் இருக்கும். ஒன்றை விட ஒன்று உசத்தி என்கிற மாதிரியும் கதை இருக்கும்! கங்கையிற் புனிதமான காவிரி என்று சொல்லிக்கொள்வோம்.ஆனால், கங்கையாகட்டும், காவிரியாகட்டும், அதை எவ்வளவு தூரம் கெடுத்துவிட்டோம் என்பதை எழுதி மாளாது.

நம் நாட்டிலேயே மிகவும் புனிதமாகக் கருதப்படும் இடம் ஹிமாலயம்.ஆனால் இதுவும் இப்போது டூரிஸ்டுகளின் பிடிக்குள் வந்துவிட்டது. 'டெவலப்மென்ட்' என்ற பெயரில் மலையும் காடும் அழிக்கப்பட்டு வருகின்றன. 

நம் ஊரிலிருந்து  ராமாயணம் ப்ரவசனம் செய்யும் சாஸ்திரிகள் ஒருவர் ஹிமாலய யாத்திரை போனார். அங்கு நடக்கும் வெட்டிச் செயல்களையும் அநியாயங்களையும்  கண்டு மனது கஷ்டப்பட்டது. நேரே ரிஷிகேசத்தில் ஸ்வாமி சிவானந்தரிடம் வந்தார். இங்கெல்லாம் புனிதமே போய்விட்டது என்று குறைப்பட்டார். "நீ என்னடா சொல்கிறாய் " என்று கூறிய ஸ்வாமிஜி, அவர் தலைமேல் கைவைத்து, "இப்போது மலையைப் பார்" என்றார். திரும்பி மலையைப்பார்த்த சாஸ்திரிகளுக்கு ஒரே ஷாக்! அங்கே ஒவ்வொரு இடத்திலும் சன்யாசிகள், தவசிகள்  என்று அமர்ந்து தத்தம் ஜபதபத்தில் ஈடுபட்டுத்தான் இருந்தனர்! இது நமது ஊனக்கண்ணுக்குத் தெரிவதில்லை! அதனால்தான் வழிவழியாக புனிதமாகக் கருதப்பட்டு வந்த இடங்களின் புனிதம் கெடாமல் நாம் நடந்துகொள்ள வேணும். ஒரு இடம், ஒரு மரம், ஒரு குளம்  புனிதமானது என்று பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை.

முருகன் இருக்கும்  இடங்கள் என்று நான்கு  இடங்களைக் குறிப்பாகச் சொன்னார். எல்லா மலைகளிலும்  இருப்பான் என்றும் சொன்னார். அவன் வேறு எங்கெங்கு இருக்கிறான் என்பதையும்  சொல்ல வருகிறார், நக்கீரர்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். ஓவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்க் கொண்டாடுகிறார்கள்.

சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஒவ்வொரு ஊரிலும் மக்கள்  விழா எடுக்கிறார்கள்.  விழாவுக்காக  இடத்தைப் பார்த்து, அங்கே  கோழிக்கொடியை நாட்டுகிறார்கள். ஆட்டை அறுத்து வைத்திருக்கிறார்கள். தினையரிசியுடன் மலரையும் கலந்து வைத்திருக்கிறார்கள் . இப்படிப்பட்ட விழாவிலும் முருகன் இருப்பான்.

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

சில தீவிர பக்தர்கள்  (ஆர்வலர்) இத்தகைய பொது விழாவில் கலந்து கொள்ளாமல், வேறு இடத்தில்  அவன் துதி பாடுவார்கள் (ஏத்த).இங்கும் முருகன் இருப்பான்., இப்போது, பஜனை, கோஷ்டியாக பாராயணம் செய்வது போன்றது இது.

வேலன் தைஇய வெறி அயர் களனும்

மலையிலே, குறவர்களின் கோயிலில் பூஜை செய்பவன் வேலன் என்று பார்த்தோம். இவன் வெறியாட்டு என்று ஆடுவான்.. ஆடை வெட்டிப் படைத்து,  கையில் வேலைப்பிடித்து. வெறி வந்ததுபோல்  ஆடுவான். இந்த இடத்திலும் முருகன் இருப்பான்.

இந்த இடங்கள் எல்லாம் செயற்கையாக அமைக்கப்பட்டவை.. காடு, ஆறு போன்ற இயற்கையாகவே அழகாக உள்ள இடங்களிலும், மக்கள் அழகாக அமைத்த சோலைகள், குளங்கள் போன்ற இடங்களிலும் இருப்பான்.

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

முருகன் என்றால் அழகு என்று வாய் கிழியப் பேசுகிறார்கள். ஆனால் முருகனுக்குரிய எந்த இடமாவது . அழகாக வைத்துக் கொள்ளப் படுகிறதா என்று பார்த்தால் அழுகைதான் வரும்! நம் மக்களுக்கு அழகுணர்ச்சி என்பது இல்லவே இல்லை  என்றுதான் தோன்றுகிறது,

இது தவிர, வேறு சில இடங்களும் முருகனுக்கு  ஏற்புடையவை. முருகன் மக்கள் தெய்வம். ஆகவே, மக்கள் கூடும் இடங்களில் இருப்பான்!  அக்காலத்தில்  பஞ்சாயத்து பேச ஊர்ப்பெரியவர்கள் மரத்தடியில் போட்ட மேடையில் அமருவார்கள். இது மன்றம். இதுதவிர, பொது இடங்களில் கூடுவார்கள் . இது பொதியில்.. மூன்று,  நான்கு  தெருக்கள்  கூடும் சந்தி, சதுக்கம் ஆகிய இடங்களும்  முருகன் இருக்கும் இடங்களே. முருகனுக்கு உகந்த  மலர் தரும் கடம்ப மரத்திலும் இருப்பான். சில இடங்களில் கட்டுத் தறியை  (கந்து) நட்டு அதிலேயே  இறைவனை  ஆவாஹனம் செய்வார்கள். அங்கும் முருகன் இருப்பான்..


சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்


இப்போது வேறொரு காட்சியைக் காட்டுகிறார் நக்கீரர். மலையில் உள்ள கோயிலில்  வேலன் செய்த பூஜையையும் அவன் ஆடிய வெறியாட்டத்தையும் பற்றிக் கூறினார். குன்றவர்  சாதிகூடி வெறியாடிக் கும்பிட என்பார் அருணகிரி நாதர். இங்கே, இன்னொரு இடத்தில், குறமகள் ஆடும் ஆட்டத்தைப் பற்றி  21 அடிகளில் விவரிக்கிறார். இவள் பலவிதமாகத் தன்னைத்  தயார் செய்து கொண்டு, தேவையான பொருட்களைத்திரட்டி, நீராடி, இரு நிறங்களில் அமைந்த ஆடையை அணிந்து,ஆடு வெட்டி, அதன் ரத்தத்தில் சிலவற்றைக் கலந்து பரப்பி. அச்சம் விளைக்கும் பலவித வாத்யங்களின் ஒலி யெழுப்பி, கொடிய மணிகளை இசைத்து, ஆடுகிறாள். இவளுக் கென்று எதுவும் வேண்டாத நிலையில், அந்த ஊர்களை வாழ்த்தி.ஆடுகிறாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிடுகிறது! அங்கு முருகனே பிரஸன்னராகிவிட்டது போலிருக்கிறது! தெய்வம்  இல்லை என்று முரண்டு நிற்பவர்களும் அஞ்சும்படியாக அவள் ஆடுகிறாள். முருகனின் வாகனமான, என்றுமே புறங்காட்டாத பிணிமுகம் என்ற யானையை வாழ்த்தி ஆடுகிறாள்.

இவ்வாறு, மலை, நாடு, காடு, பொது இடங்கள் என்று பல இடங்களிலும், மக்கள்  வேண்டுதலுடன் செய்யும் பற்பல விதமான வழிபாடுகளை யேற்று  அங்கெல்லாம் உறையும் இயல்புடையவன் முருகன்.

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே..

இங்கே நக்கீரர் ஆணித்தரமாகச் சொல்கிறார். இதெல்லாம் நான் அறிந்தது என்கிறார்- அதாவது, இதெல்லாம்  பிறரிடமிருந்து அறிந்த செவிவழியாக வந்த செய்தி யல்ல, எனக்கே தெரியும்  என்கிறார்.

இவ்வளவு உறுதியாகத் தெரிந்ததால், தயங்காமல் அறிவுரை கூறுகிறார்:

ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக
முந்து நீகண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி
கைதொழூஉப் பரவி, காலுற வணங்கி


நான் சொன்ன அந்த இடங்களானாலும் சரி, பிறவானாலும் சரி;  நீ முருகனைத் தரிசித்த வுடனே. முகம் மலர்ந்து, கைகுவித்து. அவன் பாதத்தில்  விழுந்து வணங்கி அவரைத் துதி.

எவ்வாறு துதிப்பது? இங்கு முருகனின் நாமங்களைக் கூறத் தொடங்குகிறார்..இவற்றில் முருகனின் அவதாரமும் செயல்களும் விளக்கப்படுகின்றன!

நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ

இது முருகனின் அவதாரத்தைக்  கூறுவது. 
நெடிய பெரிய ஹிமாசலத்தில். தர்பை விளையும்  பொய்கையில், ஐம்பூதப் பதிகளில் ஒருவனாகிய அக்னி தன் கையிலே ஏந்திக் கொடுக்க, ஆறு முனிவரின் மனைவியர் பெற்ற ஆறுமுகம் கொண்ட செல்வனே!
இவ்வாறு முருகன், சரவணபவன், கார்த்திகேயன் .ஷண்முகன் ஆகிறான்!

ஆல்கெழு கடவுட் புதல்வ
ஆலின் கீழமர்ந்த தக்ஷிணாமூர்த்தியின் புதல்வனே

மலை மகள் மகனே
பார்வதி புதல்வன்

மாற்றோர் கூற்றே

தேவர்களுக்குப் பகையான அசுரர்களின் யமனாக வந்தவன்.

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!

எல்லா வெற்றிகளுக்கும் கொற்றவை- துர்கையே ஆதாரமானவள். அந்தக் கொற்றவையின் புதல்வன் முருகன்.

இழையணி சிறப்பிற் பழையோள் குழவி

பலவித ஆபரணங்களை அணிந்த புராதனியாகிய  பராசக்தியின் குழந்தை.
தேவி மனோமணி ஆயி பராபரை என்பார் அருணகிரி..


Somaskanda. By http://picasaweb.google.com/injamanen [CC BY- SA 3.0 creativecommons via Wikimdia commons.




வானோர் வணங்குவில் தானைத் தலைவ 

முருகன் தேவர் படைக்குத் தலைவன்.- தேவஸேனாதிபதி. இவன் கையில் வில்லேந்தி யுள்ளான். தேவர்கள் இவனை வணங்குகின்றனர்..
(ஸேனாதிபதிகளில் நான் ஸ்க்ந்தன் என்கிறார் பகவான் கீதையில்.)

மாலை மார்ப!

போர், போகம் ஆகியவற்றிற்குரிய மாலைகளை அவ்வக்காலத்தில் அணீபவன்.

நூலறி புலவ

இலக்கணத்தை நன் கு ஆராய்ந்து அறிந்த புலவன். முருகனே அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்பித்தான் என்பது நமது மரபு. [ முருகன் அகப்பொருள் நூலுக்கு ஏற்ற உரையைத் தெரிவித்தான் என்பது கடைச்சங்க காலத்து செய்தி.இதனை  நக்கீரர் அறிந்தவர்.] நூல் என்பதற்கு முன்பெல்லாம் இலக்கணம் என்றுதான் பொருள்.

செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!

போரில் ஒப்பற்ற ஒருவன்! என்றும் வெற்றியும் இளமையும் உள்ளவன்.

அந்தணர் வெறுக்கை!

அந்தணர்களின் செல்வமாக இருப்பவன்
முருகன் வேள்விக்காவலன்.ஆகவே, இவனே அந்தணர்களின் உண்மையான செல்வம்.

அறிந்தோர் சொன்மலை!

ஞானிகள் கூறும் புகழ்மொழிகள் அனைத்திற்கும் உரியவனாக இருப்பவன்.
அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடியது திருப்புகழ். இந்தப் பெயரைச் சூட்டியது முருகனே! 'பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்; பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்" என்கிறார் ராமலிங்க அடிகள். அதாவது, முருகன் புகழ் தவிர, பிற வெல்லாம் பொய்ம்மையே!

மங்கையர் கணவ!

வள்ளி, தெய்வானை ஆகிய மங்கையரின் கணவன்.

மைந்தர் ஏறே!

வீரர் களுக்குள் சிங்கம் போன்றவன்

வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ

வேல் பிடித்திருக்கும் கையில் கொண்ட வெற்றியாகிய செல்வத்தை உடையவன்.

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!

க்ரௌஞ்ச மலையை  அழித்த என்றும் குன்றாத வெற்றியை உடையவன்.
வானைமுட்டும் சிகரங்களை உடைய குறிஞ்சி நிலத்திற்குச் சொந்தக்காரன்!

பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!

பலவிதப் புலவர்களும் நன்குபுகழும் பெருமைக் குரியவன். புலவர்களுள் சிங்கம் போன்றவன்.

அரும் பெறல் மரபில் பெரும்பெயர் முருக!

நாம் பெறக்கூடிய பொருள்களில்/செல்வங்களில் எல்லாம் மிக அரிதானதும் பெரிதானதும் முக்திச் செல்வமே என்பது பெரியோர் வகுத்த முறை- மரபு. இச்செல்வத்தை உடையவன் முருகன். அதாவது, முருகனே முத்திச் செல்வம்!

நசையு நர்க்கு ஆர்த்தும் இசை பேராள!

முருகனை நாடி வருவோருக்கு, அவர்கள் வேண்டியதை வேண்டியாங்கு ஈயும் பெரும் புகழை உடையவன்.

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்

வேறு கதியற்றவர்களுக்கு அருள்பவன். பொன் ஆபரணங்களை அணிந்தவன்.செந்நிற உருவினன்.

மண்டமர் கடந்தனின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த்தாங்கும் உருகெழு நெடுவேள்

வந்த போர்களை முடிக்கும் பயங்கரமான நெடிய வேள்! ஆனால், அவன் மார்புதான் பரிசிலர்களைத் தாங்கும்- காப்பாற்றும்.

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்!

தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் ஏத்தும் பெரிய பெயருடைய தலைவன்.

சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி

சூரன் குலத்தையே அழித்த மிக்க வீரம் பொருந்திய வலிய மார்பை உடையவன்

போர்மிகு பொருந!

போரில் சிறந்து  நிற்கும் வீரன்

குரிசில்!

தலைவன்

இவ்வாறு  முருகன்   பெருமை சேர் நாமங்களைச் சொல்லிவந்த நக்கீரர், இங்கே நிறுத்துகிறார்.  அவன் பெருமையை நம்மால் அறியவோ சொல்லவோ முடியுமா என்று நினைக்கிறார்!  மிகவும் பணிவுடன்  சொல்கிறார்:

.......எனப்பல
யான் அறி அளவையின் ஏத்தி 

இவ்வாறு பல நாமங்கள் சொன்னாலும், இதெல்லாம்  நான் அறிந்த அளவுதான்.

ஆனாது

அத்துடன் அமையாமல்

நக்கீரர்  தனக்கு எதிரில் வந்த புலவனிடம் இவ்வாறு கூறுகிறார்.'அன்பனே! நீ முருகன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனைக் கண்டவுடன் முகம் மலர்ந்து, கையெடுத்துக் கும்பிட்டு, அவன் காலில் விழுந்து வணங்கி, இந்த நாமங்களைச் சொல்லி அத்துடன் அமையாது, அவனிடம் இவ்வாறு விண்ணப்பம்  செய்து கொள் ' என்கிறார்.

நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென், நின்னொடு
புரையுனர் இல்லாப் புலமையோய் எனக்
குறித்தது மொழியா அளவை

'இறைவனே ! உன் பெருமைகளை அளந்து அறிவது என்பது உலகில் உள்ள உயிர்களால் ஆகுமோ! நான் அதை நினைத்து உன் அடியை நாடி வந்தேன். உனக்கு ஒப்பார் இல்லாத ஞானம் உடையவனே ' என்று தொடங்கி நீ மனதில் குறித்ததெல்லாம் சொல்லி  முடிப்பதற்கு முன்பே, 

...........................குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளீயர்
சாறயர் களத்து வீறு பெறத் தோன்றி
அளியல் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி

அங்கே முருகனைச் சூழ்ந்துள்ள பலவிதத்  தொண்டர்கள், உன் எண்ணத்தை அறிந்து கொள்வார்கள். 'பெருமானே!  இவன் பால் நீ இரக்கம் கொள்ளல் தகும். இவன் அறிவு வாய்ந்த  இரவலன். உன் பெரும் புகழைக்கேட்டு, பல இனிய நல்ல  நாமங்களைக்  கூறித் துதித்து வந்தான்' என்று சொல்வார்கள்.

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலைத் தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இள நலம் காட்டி

தெய்வீகத் திறலுடன் , விண்முட்டும் நெடிய  திருவுருவுடைய அப்பெருமான் உனக்கு அருள்செய்ய அங்கே வருவான். அச்சம் விளைக்கும் தன்  நெடிய உருவத்தை  மறைத்து,  இளமையும் அழகும் மிக்க தன் பழைய தெய்வ வடிவோடு வருவான்!

இங்கே நக்கீரர் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். இறைவனின் வடிவை நாம் இந்தக் கண்களினாலே பார்க்க இயலாது. அர்ஜுனனுக்கு யோகக்கண் வழங்கினார் பகவான்.ஆனால் அவனால் அதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை! உடம்பு பயத்தால் நடுங்கியது! "பகவானே ! உங்களுடைய  இந்த விச்வரூபத்தைக் கண்டு மனது பயந்து  நடுங்குகிறது! தாங்கள் இதை மறைத்துக் கொண்டு  பழையபடியே  தரிசனம் தரவேண்டும்" என்று வேண்டுகிறான்! (கீதை. 11-45,46)இங்கே முருகன் தன் இனிய, அழகிய வடிவத்துடனேயே வருகிறான்!

அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ

அன்பனே! பயத்தை விடு!  நீ வருவதை நான் முன்பே அறிவேன்! என்று  அன்பான , நல்ல வார்த்தைகளைச் சொல்லுவான்!

............................விளிவின்று
இருள் நிற முந்நீர் வளை இய உலகத்து
ஒரு நீயாகத்  தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி!

கரிய நிறம் கொண்ட  நீருள்ள கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் என்றும் அழிவில்லாமல் நீ ஒருவனே ஒப்பற்ற தலைவன் என்னும் படியாக, அரிய பரிசாகிய வீடு பேற்றை வழங்குவான்! 

ஆம்! இவ்வுலகிலேயே அந்த அழியாப் பேரின்ப  நிலையை அருளுவான்!

இப்படிப்பட்ட நம் முருகன் பழமுதிர்சோலைக்கு உரியவன் என்று தம் கூற்றை முடிக்கிறார், நக்கீரர். இதற்குமுன் 21 அடிகளில்  அத்தலத்தின் அழகை வர்ணிக்கிறார்.

பழமுதிர் சோலை மலை மலைகிழவோனே!


இங்கே நாம் முக்கியமாக ஒரு  விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  முருகன் இருக்கும் இடங்களையெல்லாம் சொல்லி, முக மலர்ச்சியுடன் கைகூப்பித்தொழுது, காலில் விழுந்து வணங்கு  என்றெல்லாம் சொன்ன நக்கீரர், 'இதைக்கேள், அதை வேண்டிக்கொள் ' என்று எதுவும் சொல்லவில்லை! 'நீபோய்க் கும்பிடு, அவனே கொடுப்பான்' என்கிறார்! 'நீ வருவதை நான் அறிவேன் ' என்கிறான் முருகன்  அப்போது, நமக்கு என்ன வேண்டும் என்பது தெரியாதா? "வேண்டத் தக்கது அறிவோய் நீ " என்பார் மாணிக்கவாசக ஸ்வாமிகள்.  தன்னிடம் எதையும் கேட்காதவர்களுக்குத் தன்னையே தருகிறான் இறைவன் என்பது கோட்பாடு!

இவ்வாறு முருகனை அடைவதற்குரிய. உயர்ந்த நெறியைக் காட்டுகிறார்
நக்கீரர்.



Kailas North Face
from: intothemiddlekingdom.com

சங்க இலக்கியத்தின் திருமுடியாகத் திகழ்வது  இந்த பக்திக் களஞ்சியம்! சங்க நடையில் இருப்பதால், மொழிவளமே முன்னிற்கிறது! முருகனைப் பற்றி வரும் விஷயங்களை மட்டுமே பார்த்தால், இதன் மகத்துவம் விளங்கும்!

பழமுதிர் சோலை, மதுரைக்கு அருகில் உள்ள   அழகர்மலை என்பர். இங்கு புராதனமான  முருகன் கோயில் இல்லை. இப்பொழுது மலைமேல் உள்ள கோவில் அண்மைக்காலத்தில் அமைத்தது. அடிவாரத்தில்  உள்ள திருமாலிருஞ்சோலைமலை வைஷ்ணவர்களின் திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.



















No comments:

Post a Comment