11. பரிபாடல் -1
மாயோன் உகந்த பாரிஜாதம்!
பொய்யும் வழுவும்!
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் பெருகிவிட்டபிறகு பழைய தமிழ் இலக்கியத்தில் காணும் விஷயங்களை மறுத்தும் மறைத்தும் எழுதும் போக்கு மலிந்து விட்டது. கல்வித்துறை இவர்கள் அரசின் வசம் இருப்பதால் அதையும் தங்கள் கொள்கை பரப்பும் சாதனமாகவே பயன்படுத்துகிறார்கள். தங்கள் கருத்துக்கு இசைந்துவரும் பகுதிகளை மட்டுமே பாடத்திட்டத்தில் சேர்க்கிறார்கள். அதையும் அவர்கள் சொல்லும் அளவு, சொல்லித்தரும் முறையிலேயே படித்து எழுதவேண்டும்! மீறிப் போனால், மார்க்கு போகும்!
ஒரு காலத்தில் மூர்க்கமாகக் கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார்கள். பிறகு, ஒன்றே தேவன் என்றார்கள். பிராமணர்கள் ஆரியர்கள்; ஜாதி, மதம், சாமியெல்லாம் இவர்கள் கொண்டுவந்தது என்றார்கள். முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்றார்கள். தமிழ் நாட்டில் திருமால், இந்த்ரன், வருணன், பலதேவன் , கொற்றவை என்னும் துர்கை ஆகிய கடவுளர் வழிபடப் பெற்றனர் என்பதை சொல்லிக்கொள்ளவில்லை. முருகனும் தமிழ் நாட்டில் அவதரிக்கவில்லை என்பதை அறியவில்லை, அல்லது கண்டுகொள்ள வில்லை! (ராவணன் த்ராவிடன் என்பது போல்தான் இதுவும்!) முருகன் தமிழர்களுக்கே உரித்தான கடவுள்; பின்னர் வந்த ஆரியர்கள் கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்ற பெயரில் தமதாக்கிக் கொண்டார்கள் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வருவது இன்னமும் நடக்கிறது. இவர்களுடன் நாம் வாதுக்குப் போகவேண்டியதில்லை. ஆனால் உண்மையைத்தெரிந்து கொள்ளவேண்டுமானால், மூல புத்தகங்களை நாமே வாசித்தறியவேண்டும்.
சங்க நூல்களில் முதலில் வரும் பத்துப்பாட்டில் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இதில் வரும் விஷயங்களைச் சென்ற 8 கட்டுரைகளில் பார்த்தோம். முருகன் ஹிமயமலைச் சாரலில் தர்பை விளையும் பொய்கையில் வந்தவன் ( ஶரவணபவன்) சிவகுமரன், பார்வதி மைந்தன், கார்த்திகைப் பெண்கள் வளர்த்தவன், அக்னி ஸம்பந்த முள்ளவன், தேவர்களுக்கு ஸேனாதிபதி, சூரனை வதைத்தவன், வள்ளி,தேவஸேனை நாயகன் என்ற எல்லா புராணவிஷயங்களையும் நக்கீரர் சொல்லிவிட்டார். திராவிட வாதிகள் செய்யக்கூடியது ஒன்றுதான்- இதை நம் மக்கள் அறியாமல் செய்யவேண்டும். இதைப் பாடதிட்டத்தில் சேர்க்காததன்மூலம் அதைச் செய்து வருகிறார்கள்! பள்ளிப் படிப்பை மட்டுமே நம்பும் நபர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாது.
அடுத்து, எட்டுத்தொகையில் உள்ள புறநானூற்றில் வரும் விஷயங்களைப் பற்றி முன்பே சில கட்டுரைகளீல் எழுதியிருக்கிறேன். [ kauniyansri.blogspot.in/2014 literature-light and delight]இந்தப் பகுதிகளையும் இவர்கள் பாடத்தில் போடமாட்டார்கள்! பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டது!
இப்போது, இதிலுள்ள இன்னொரு நூலான பரிபாடலில் வரும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.
பரிபாடலில் 70 பாட்டுக்கள் இருந்ததாகவும். இப்பொழுது 22தான் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இவற்றில் 6 பாடல்கள் திருமாலைப் பற்றியவை; 8 பாடல்கள் முருகனைப் பற்றியவை; 8 பாடல்கள் வைகை நதியைப் பற்றியவை. பல புலவர்கள் பாடியவை. இவை இசையுடன் பாடப்பெற்றவை. ஒவ்வொரு பாட்டிற்கும் பண் (ராகம்) அமைத்திருக்கிறார்கள். மற்ற சங்க நூல்களைப் போலவே இதிலும் இயற்கை வர்ணனைகள் மிகுந்திருக்கும். அதிலும் பெண்களைப்பற்றிய வர்ணனைகள் அதிகமாகவே வரும். அது அக்கால ஃபேஷன்! இதில் வரும் சில வர்ணனைகளை வைத்து ஸினிமா எடுத்தால், இன்றைய சென்ஸார் கூட அனுமதிக்க மாட்டார்கள்!
இதற்கு பரிமேலழகர் எழுதிய உரை இருக்கிறது. (13ம் நூற்றாண்டு)
சிவபெருமான், குறுமுனியாகிய அகஸ்தியர், முருகன் முதலிய புலவர்கள் இருந்து ஆராய்ந்து வளர்த்த சங்கம் என்னும் தமிழ்க்கடலில் தோன்றிய அரிய அமுதம் பரிபாடல் என்று இதன் பெருமை பேசப்படுகிறது! "ஓங்கு பரிபாடல்" என்று அறிஞர்கள் போற்றுவார்கள்.
திருமால் பெருமை!!
முதல் பாட்டு திருமாலைப் பற்றியது. இதையே கடவுள் வாழ்த்தாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
திருமாலே! ஆயிரம் தலைகளினாலே ஆதிசேஷன் உனக்குக் குடை ஏந்துகிறான்! உன் மலர் மார்பில் திருமகள் இருக்கிறாள். சங்குபோன்ற வெண்மை நிறமுடையவனும், கலப்பை யாகிய ஆயுதத்தையும், பனைக்கொடியையும் , ஒரு குழையையும் உடைய பலதேவனாகவும் நீ இருக்கிறாய்! (பலதேவனும் விஷ்ணுவின் அம்ஸமே என்பது குறிப்பு.)
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10
தாமரையையொத்த கண்களையும், காயாம்பூ போன்ற நீல மேனியையும், திருமகள் அமர்ந்துள்ள மார்பினையும் உடையவனாக இருக்கிறாய். அம்மார்பில் கௌஸ்துப மணி விளங்குகின்றது.. பீதாம்பரமாகிய பொன்வண்ணத்துகில் அணிந்துள்ளாய்.
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே 13
நீ கருடனாகிய சேவல்கொடியை உடையவன். உன் பெருமையை நாவன்மை மிக்க அந்தணர்களின் அருமறைப்பொருளாகிய வேதம் உரைத்து நிற்கின்றது!
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25 போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
‘பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்
(இங்கு பல சொற்கள் விளங்கவில்லை )
உன்னோடு போர் புரிவோம் என்று சொல்லிவந்தவர்களின் வலி தொலையும் வகையில் நீ வெற்றி கொள்கிறாய். (கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!- ஸ்ரீ ஆண்டாள் ) மன்மதன், ப்ரம்மா ஆகியவர்களின் தந்தையாக இருக்கிறாய்.
விளங்கும் பல ஆபரணங்களை அணிந்த திருமாலே!
உன்னுடைய பெருமைமிகுந்த சரிதத்தை அறிவது என்பது மயக்கம் அற்ற ஞானிகளுக்கும் இயலாது. அவ்வாறிருக்க, நீ இத்தகையவன் என்று என்னால் சொல்ல முடியுமா?
உன் பெருமையை அறிவது அரிது என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும் உன்னிடம் கொண்ட அன்பினால், உன் பெருமையைப்பேசச் சக்தியில்லாத நாங்கள் இங்கு சொல்பவற்றை அர்த்தமில்லாதவை என்று கோபிக்காமல் அருள் புரிய வேண்டும். [ அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா நீ தாராய் பறை- ஸ்ரீ ஆண்டாள்.]
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.
பெருமை பொருந்திய அந்தணர்களால் காக்கப்படும் அறம் நீ.
அன்பர்களுக்கு அன்பும் நீயாவாய்.
நல்ல நெறியில் நில்லாதவர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் மறக்கருணையும் நீ யாவாய்,பகைவர்களுக்குச் செய்யும் துன்பமும் நீ.வானில் திகழும் சந்திர சூரியர்களும் நீயேயாவாய்.ஐந்து திருமுடிகளை யுடைய ஈசனும், அவன் புரியும் ஸம்ஹாரமும் நீ.வேதமும், ப்ரம்மனும் அவன் செய்யும் படைத்தல் தொழிலும் நீ.ஆகாயமும், பூமியும், நெடிதுயர்ந்த இமய மலையும் நீயே.
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
இவ்வாறு பல பொருள்களாக நீயே இருக்கிறாய். ஆதலினாலே, நீ இப்படி இருக்கிறாய், இன்னாரை ஒத்திருக்கிறாய் என்று உவமித்துச் சொல்லத் தகுதியுள்ளவர்கள் யாரும் இல்லை.பொன்னால் ஆன சக்கரப்படையை வலக்கையில் ஏந்திய நீ எல்லா உயிர்களுக்கும் முதல்வனாக இருக்கிறாய். பெரும் புகழ் படைத்த நீயே உனக்கு நிகராகும்.
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
உன்னையே நிகர்த்த புகழை உடையாய்.பொன்போல் மிளிரும் பீதாம்பரத்தை உடையாக அணிந்துள்ளாய்.கருடக்கொடி, சங்கு, பகைவரை யழிக்கும் சக்கரப்படை, நீலமணி போன்ற திருமேனி, எல்லைகடந்த புகழ். அழகிய மார்பு ஆகியவற்றை உடையாய்!
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68
இவ்வாறு, எம் சுற்றத்தாரோடு கூடி, உன் திருவடி யடைந்து, உன்னைப் புகழ்ந்து, 'என்றும் நின்று நிலவுக' என்று உன் திருவடியை வாழ்த்தி வணங்குகின்றோம். அருள் புரிவாயாக.
இது சங்ககாலப் பாடல். ஏறத்தாழ 2000 வருஷங்களுக்கு முந்தியது. இச்சங்கப்பாடலில் எல்லா புராண விஷயங்களும் வருகின்றன. இங்கு சிவ த்வேஷம் இல்லை என்பதையும் நாம் அறிகிறோம். மொழி தமிழே தவிர, எல்லாவிஷயங்களும் பாரத நாடு முழுமைக்கும் பொதுவானவையே !
No comments:
Post a Comment