Sunday, 29 November 2015

20. பரிபாடல் -10. இயற்கையும் இறைவனும்



20.பரிபாடல் - 10


கல்லத்திமரம்- திருப்பரங்குன்றின் தல விருக்ஷம்.
Ficus tinctoria. By Tau'olunga (Own work) [GFDL(http://wwwgnu.org/copyleft/fdl.html(CC BY-SA 3.0 creativecommons via Wikimedia commons)

இயற்கையும் இறைவனும்

நமது புனித ஸ்தலங்கள், தீர்த்தங்கள்  என்று பார்த்தால், முதலில் அவை இயற்கையாகவே மிகவும் அழகுவாய்ந்த, ரம்யமான இடங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். தேவாரம் முதலிய பழைய அருட்பாடல்களில்  தலங்களின் இயற்கை வளமும் வனப்பும் மிகவும் விரிவாகவே பேசப்படுகின்றன. குறிப்பாக, சம்பந்தரின் பதிகங்கள் ஒவ்வொன்றிலும் இதை நாம் பார்க்கலாம். கோவில்  என்பது மிகவும் பெரிய அமைப்பாக இருந்ததில்லை; ஆனால் அவை இருந்த சூழ்நிலை ஆறு, குளம் , மலை, காடு, வயல் ,சோலை என்று  இயற்கை எழில் கொஞ்சும் விதமாகவே இருந்தது. ஜனத்தொகை பெருகி, நாகரிகம் வளர்ந்து, ஊர்களின் எல்லைகளும் விரிவுபடப்பட , கோவில்களின் இயற்கை எழில் குன்றிக் குறைந்து, இப்போது  அனேகமாக மறைந்தே விட்டது எனலாம்.

50,60 வருஷங்களாக  இவ்விடங்களுக்குப் போய் வருபவர்களுக்கு  இந்த மாற்றங்கள் வேதனை தரும். பழநியில்  வையாபுரிக்குளம் நல்ல நீர் நிறைந்திருக்கும், ஷண்முகநதியில் கோடையிலும் நீர் ஓடும், மலையைச் சுற்றினால், அதுவும் காலைவேளையில், சில்லென்ற காற்றில் மூலிகைகளின் மணம் வரும். அண்ணாமலையைச் சுற்றினால், செங்கம்  ரோட்டிலிருந்து  திரும்பியதுமே ஒருவித  அமைதி  நம்மை ஆட்கொள்ளும்.  மாட்டுவண்டிகள் தவிற வேறு வாகனங்களே கிடையாது. பறவைகளின் ஒலி தவிர வேறு சப்தமே இருக்காது. கடை, கண்ணி என்று எதுவும் கிடையாது. சிதம்பரம் நகரத்தை நெருங்கும்போதே, புவனகிரி தாண்டிய சிறிது  தொலைவிலேயே  நான்கு  கோபுரங்களும் தெரியும், நாம் போவது ஒரு புனித இடம் என்னும் எண்ணம் தோன்றும். நகரில்  எந்தவீதியில், எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் கோபுரம் தெரியும். இன்று கோபுரத்தின் எதிரில் நின்றாலொழிய கோபுரம் கண்ணில் படாது! அவ்வளவு  முன்னேற்றம்! திருமயிலை திருக்குளத்தை மறைத்து கடைகள்! கோயிலுக்குள் சேவைக்கு டிக்கட் வைத்து அரசினர் நடத்தும் வியாபாரம்! வெளியே, குளக்கரையை ஆக்ரமித்து அரசினர் ஆதரவில் தனியார் வியாபாரம்! புனிதமோ, அழகோ, யாருக்குத் தேவை? பணமிருந்தால் பத்தாதா?

மீதியிருக்கும் சில இடங்களையும் அவற்றின் புனிதமும் எழிலும் கெடாமல் எப்படிப் பராமரிப்பது என்பது தெரியவில்லை; இதில் யாருக்கும் அக்கறையும் இல்லை. ஒருபுனித நதியிலோ, குளத்திலோ நீராடுவது என்பது வெறும் உடலைக்கழுவக் குளிப்பதல்ல! அதற்கு ஒரு நெறிமுறை உண்டு.  ஒவ்வொரு பெரிய  கோவிலுக்கும் ஒரு குளம்; அதில் நீராடினால் இன்னின்ன பலன் என்றெல்லாம் இன்றைக்கும்  புத்தகத்தில் எழுதி வருகிறார்கள்; ஆனால், எந்த ஒரு குளமும் அதற்கேற்ற நிலையில் இல்லை!



சென்னை-புரசைவாக்கம் கங்காதரேஶ்வரர் கோயி ல் குளத்தின் நிலை! 2014 மழை சீசனில்! தினமலரில் வந்த படம். நன்றி.

இயற்கையான  சூழலில் கோயில். அங்கு ஒரு குளம், அதற்கு ஒரு ஸ்தல விருக்ஷம் என்றெல்லாம் ஏற்படுத்தி, இறைவனை இயற்கையோடு பிணைத்தார்கள்! இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்திய  சங்க காலத்தில், ஒவ்வொரு வகை நிலத்திற்கும் ஒரு கடவுள் என்று வைத்தார்கள்! அந்தந்த கடவுளைப் பாடியவர்கள்  அந்த நிலத்தின்  அருமைபெருமைகளையும்  சேர்த்தே பாடினார்கள்.

நாம் இப்போது பார்க்கும் இந்தப் பாடலைப் பாடியவர் கேசவனார் என்ற புலவர். குமரனைப் பாடும்போது, அவன் உறையும் குன்றத்தின் வனப்பையும் பாடுகிறார். 

கார்காலத்தில்  எழில்மிகு குன்றம்




கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே
அடியுறை மகளிர் ஆடும் தோளே 5
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை
நீடன்மின் வாரும்என்பவர் சொல் போன்றனவே

குமரவேளே!  மேகங்கள் மிகுந்த மழை பொழிதலால் சுனைகள் நிறைந்து, பூக்கள்  மலர்ந்திருக்கின்றன. குளிர்ந்த கடம்ப மலர்களின்  தாதை ஊதுகின்ற வண்டுகளின் குரல், பண்கள் போன்று ஒலிக்கிறது. மலையின் பக்கங்களீல் விளையும் மூங்கில்கள், அம்மலையின்அடியில் வாழும் பெண்களின் தோள் போன்று இருந்தன! 





வாகைப்பூவைப் போன்ற கொண்டையை உடைய மயில்கள் கூவுகின்றன. அவற்றின் குரல் , 'இனியும் தாமதம் செய்யாமல் வருக" என்று  பிரிந்து சென்ற தலைவர்களை அழைப்பவர்களின் குரல் போன்று  ஒலிக்கிறது.






நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன    10
வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் 15
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்
கார் மலிந்தன்று  நின் குன்று 17


கொன்றை மலர் கொத்துக்கள், பொன்னால் செய்த மாலைகள் போன்று விளங்குகின்றன.    










பாறைகளில் வேங்கை மலர்கள் பரந்திருக்கின்றன. அதைக்கண்டு, தாய்மார்கள்  பேதைப்பருவத்துப்  பெண் குழந்தைகளிடம்  'புலி,புலி' என்று சொல்வது போலிருக்கிறது. 





நெருங்கிய மொட்டுக்களையுடைய காந்தள் மலர்கள் மலர்ந்தன. அவற்றின் இடையே செங்காந்தள் பூக்கள் பரந்திருக்கின்றன! இவ்விதம் உன்னுடைய குன்றமானது கார்காலத்தின்   எழிலுடன் விளங்குகின்றது,



முருகன் புகழ்



………………………………………………………………போர் மலிந்து
சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே 20
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே


சூரபன்மனைக் குலத்தோடு அழித்த ஒளிமிக்க வேலாயுதத்தை உடையவனே! கார்காலத்தில்  வெண்மேகம் எழுவதுபோன்று , புகையும் அகில் முதலியவற்றால் எழும் தூபத்தை  விரும்புகின்றனை! ஆறுமுகமும், பன்னிரு தோளும் கொண்டு, வள்ளிப்பிராட்டியாகிய  உயர்ந்த மலரை விரும்புவோனே!


கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே
பிறந்த ஞான்றே நின்னை உட்கிச் 25
சிறந்தோர் அஞ்சிய சீருடையோயே
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே


பிரிந்த தலைவர் வந்து சேர்ந்து, பின்பு நீங்காது இருக்கவேண்டும் என மகளிர் வீணைவாசித்துப் பாடி உன்னை வேண்டுகின்றனர்! நீ அத்தகைய பாட்டில் விருப்பம் கொண்டனை! பிறந்த உடனேயே இந்த்ரன் முதலானோர் கண்டு அஞ்சும் சிறப்பினைக் கொண்டாய்! இரண்டு பிறப்பையும் அதனால் வரும் இரண்டு பெயர்களையும் , அன்பு பொருந்திய நெஞ்சத்தையும் உடைய அந்தணர்களின் அறத்தை விரும்புகின்றாய்!
வேண்டுதல்


அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை
துன்னித் துன்னிவழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே 32



நீ இத்தன்மைகளை உடையவனாதலால், நாங்கள் பெருவிருப்புடன் உன்னை வழிபடுகின்றோம். இதன் பயனாக, மேலும் மேலும் வளர்ந்து, உன் தொல் புகழினும் மேலாக  அவ்வழிபாடுகள் ஆகவேண்டும்! அவ்வாறு அருள் புரிவாயாக!

இங்கே அழகைத் தேடவேணும்!

No comments:

Post a Comment