15. பரிபாடல் -5
By Nsmohan at en.Wikipedia CC BY-SA 3.0 creativecommons via Wikimedia commons.
திருமாலைத் துதிப்போம்!
சங்கப் புலவர்கள் இயற்கையில் தோய்ந்தவர்கள். தெய்வச் சிந்தையுள்ள புலவர்கள் இயற்கையில் எதைக்கண்டாலும் தெய்வத்தையே நினவுகூறுகிறார்கள்.காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்டார் பாரதியார். மேகம், கடல், சூர்ய சந்திரன் என்று எதைப்பார்த்தாலும் திருமாலையே நினைத்தார்கள் சங்கப் புலவர்கள். திருமால் திருவுருவத்திலுள்ள அம்சங்களும் இயற்கையையே நினைவூட்டுகின்றன!திருமால் என்றதும் அவரது திருவருளே முதலில் கருத்தில் வருகிறது. திருமாலைத் துதித்து அடையும் பேற்றை நினைத்து இந்தப் பாட்டைத் தொடங்குகிறார் புலவர் நல்லெழுதியார்.
பெருமாளைத் தொழுவதால் வரும் பேறு!
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந்துகில் புனை முடி
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார் புள்ளுப் பொறி புனை கொடி
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5
திருமாலே! உன்னை அலங்கரிக்கும் பீதாம்பரம் மேகம் தவழும் நீல மலையின்மேல் சூரியகிரணங்களைப் போன்று உள்ளது! அழகிய திருமுடி அணிந்துள்ளாய்! நீ அணிந்துள்ள மாலை பொன்னும் நீல மணியும் பதிந்துள்ள மலையின்மேல் விழும் அருவியைப் போன்றுள்ளது!கருடக் கொடியையும் கொண்டு,சந்திரனைப் போன்று அளித்தல் தொழிலையும் உடையவனாக இருக்கிறாய்!
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் 10
அருவி உருவின் ஆரமொடுஅணிந்த நின்
திரு வரை அகலம் தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து
உனது திருக்கரங்களில் சங்கையும் சக்கரத்தையும் ஏந்தியிருப்பதானது, மழைக்காலத்தில் வானம் இருபுறமும் சூர்ய சந்திரர்களுடன் திகழ்வதைப்போன்று உள்ளது! உன் மார்பில் தவழும் பொன்ஆபரணங்கள் மின்னல் போன்று பளிச்சிடுகின்றன! அங்கு தவழும் முத்து மாலைகள் மலையிலிருந்து விழும் நீரோடை போன்றுள்ளன!
பெருமாளே ! உன்னைத் தொழுவார்க்கு, வைகுண்டமே உரியதாகின்றது!
திருமாலின் பெருமை!
திருச்சி மலைக்கோட்டையின் கீழ் உள்ள குடைந்தமைந்த கோயிலில் உள்ள திருமால் வடிவம்.
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடு போர் அண்ணால் 15
அவை அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்தி யாம் கூறிய ஐந்தனுள்ளும்ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே 20
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றிய நிலனு நீயே
அதனால்நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றொடு கனலும் 25
போர் பெரிதும் புரியும் அண்ணலே! சுவை முதலிய ஐந்து புலன்களும், அவற்றை நுகரும் பொறிகளுமாக நீயே இருக்கின்றாய்!
இந்த ஐந்தனுள் ஒன்றாகிய ஒலியால் அறியப்படும் ஆகாயம் நீயே.
ஓசையினாலும் ஸ்ப்ரிசத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே.ஒலி, ஸ்பரிசம். ஒளி ஆகியவற்றால் அறியப்படும் தீயும் நீயே.ஒலி, ஸ்பரிசம், ஒளி, சுவை ஆகிய நான்கால் அறியப்படும் நீரும் நீயே.இந்த நான்குடன் மணம் ஆகிய ஐந்தும் சேர்ந்து அறியப்படும் நிலமும் நீயே.நீயே இருபத்தியொரு உலகமாக இருக்கின்றாய்! நீயே முதற் பரம் பொருள்!அறத்தின் சொருபமாகிய நீயே, ஆதியும் அந்தமும் அற்று விளங்குகிறாய்! நீ காலத்தைக் கடந்தவன்! ஆகாயம், காற்று, தீயாக இருக்கின்றாய்!## கீழே குறிப்பு பார்க்க.
பின்னால் வந்த ஆழ்வார்கள் பரிபாடலில் வரும் கருத்துக்களை மிகவும் சரளமாகக் கையாண்டிருக்கிறார்கள், எளிமைப்படுத்தி யிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில பாடல்கள்|:
நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும்|- நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை.
நா, தி,ப். 2401
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண்மதியும்- மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு.
(சூழ்ச்சி == சூழ்ந்தது. அகைப்பு == ஶ்ருஷ்டி.)
நா. தி.ப் 2418
பூ நிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்
மீ நிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினக்க வல்லரே.
நா.தி ப். 752
மூன்று திரு உருவங்கள்
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கலை நா அருந் தலைக் காண்மின் சேக்கைத் துளவம் சூடிய அறி துயிலோனும்
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் 30
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை
பாற்கடல் நடுவே, அதனின்றுமாறுபட்ட நிறத்துடன், பிளந்த நாக்குடனும், சுடரும் மணியுடனும் கூடிய விரித்த ஆயிரம் தலைகளுடனான ஆதிசேஷன் மீது, துளசிமாலையணிந்து, துயின்றபோதும் தன் அறிவு நிலை மாறாத ஒருவன்-
தன்னுடன் போரிடவரும் வீரப் பகைவருடன் பொருது, கலப்பை ஆயுதத்தால் அவர்கள் மார்பை ஆழ உழுது அவர்கள் உயிரை நீக்கிய ஒருவனும்-
அழகான அணிகளுடன் கூடிய கொம்புடன் வராகமாகத் தோன்றி, பூமியை எடுத்து, அதன் நடுக்கத்தை நீக்கிய ஒருவனும்-
ஆகிய மூன்று திருவுருவங்களாகப் பிரிந்தவன் முதல்வனாகிய நீ ஒருவனே யாகும்!
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை
ஏவல் இன் முது மொழி கூறும் 40
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வநல் புகழவை
கார் மலர்ப் பூவை கடலை இருள்மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை
நீ பல நிற முள்ள பாம்புக்குப் பகையாகிய கருடனைக் கொடியாகக் கொண்டிருக்கிறாய். கருடன் பொறித்த நீண்ட கொடியை யுடைய செல்வனே!
வேதம் உன் நல்லபுகழை ஓதுகின்றது!
மேகம், காயாம்பூ, கடல். இருள், நீலமணி ஆகிய இந்த ஐந்தையும் ஒத்தது உன் திருமேனி!
வலம்புரி வாய்பொழி அதிர்பு வான் முழக்குச் செல்
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி 45
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை
இருமை வினையும் இல ஏத்துமவை
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை 50
அடியும் கையும் கண்ணும் வாயும்
உன்னுடைய அருள்மொழி, வலம்புரிச் சங்கின் ஒலியையும், வேத கோஷத்தையும் ஒக்கும்! கோபத்தில் வரும் உன் மொழியோ, மேக முழக்கத்தையும் இடியோசையையும் போன்றது! இறந்தகாலம்,நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் உயிர்களுக்கு உன் கழல்களே புகலாக உள்ளன! உன்னைத் துதிப்பவர்களுக்கு பிறப்பு, இறப்பு ஆகிய இருவினையும் அற்றுப் போகிறது! உயிர்களைக் காக்க வேண்டும் என்பதொன்றே உன் திருவுள்ளமாகும்! உன் திருவடியும், கையும், கண்களும், திருவாயும் இலைக்கு மேல் விளங்கும் நெருங்கிய இதழ்களைக் கொண்ட தாமரை மலரை நிகர்த்தன.
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடுபெரியை
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை 55
நீ அணிந்த தோள் வளையும். திருவந்தியும், வாகுவலையமும் , உனது தாள்களும் ,தோளும் பிடறியும் பெரியன. உனது மார்பும், பின்புறமும் , மனதும் பருத்தன (விசாலமானவை). உனது கேள்வியும். அறிவும் அறமும் நுண்ணியவை.
வேள்வியும்மறனும் விருப்பொடு வெய்யை
அறாஅ மைந்தின் செறாஅச் செங்கண்
செரு மிகு திகிரிச் செல்வ வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய் 60
நீ யாகத்தில் விருப்பம் கொண்டவன். போரில் வன்மை கொண்டவன். சினமில்லாமலேயே உன் கண்கள் சிவந்திருக்கின்றன. போர் செய்யும் சக்கரப் படையை உடைய செல்வனே! சிவந்த வெட்சிப் பூவுடன் தொடுத்த துளசி மாலையை தரித்த திருமார்புடையவனே!
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம்
அன் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே 64
முற்பிறப்புக்களீல் நாங்கள் செய்த தவத்தால்,இவ்வாறெல்லாம் நினைத்து ( உன்னை அன்னை யெனக் கருதி) பலமுறையும் உன் தாளைத்தொழுது வணங்கும் பேறு பெற்றோம்! உன்னைப் பலமுறையும் வாழ்த்தி இறைஞ்சுகிறோம்! இனி வரும் பிறவிகளிலும் இவ்வாறே நாங்கள் இருப்பதையே விரும்புகின்றோம். அவ்வண்ணமே அருள்வாயாக!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் என்கிறார் ஸ்ரீ ஆண்டாள். இதன் வித்து இங்கே தெரிகிறதல்லவா?
## குறிப்பு:
இங்கு முக்கியமான ஒரு விஷயத்தை ஞாபகத்தில் கொள்ள வேணும்.
நமது மதத்தைப் பற்றிய பலவிதமான கருத்துக்கள் பலநிலைகளில் மக்களிடையே பரவியிருக்கின்றன. இவற்றை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த்ரன், அக்னி, வருணன், வாயு ஆகிய பெயர்கள் வேதத்தில் வரும், புராணங்களிலும் வரும். ஆனால் இவை ஒரே தெய்வத்தைக் குறிக்கவில்லை.வேதத்தில் இவை பரம்பொருளின் பெயர்களாக வருகின்றன. ஆனால் இவை புராணங்களில் தேவர்களின் பெயர்களாக வழங்குகின்றன.
அதேபோல, ப்ரம்மா, விஷ்ணு, ( நாராயணன், திருமால்) ருத்ரன் (சிவன்) ஆகிய பெயர்கள் மும்மூர்திகளைக் குறிப்பதாக புராணங்களில் வரும்.ஆனால், வேதத்தில், விஷ்ணு, நாராயணன், ருத்ரன், சிவன் என்பதெல்லாம் பரம்பொருளின் (ப்ரஹ்மம்) பெயர்களேயாகும். பின்னாட்களில், ஒவ்வொரு கடவுள்பெயரில் ஒரு மதம் தோன்றியது. முக்கியமாக சூர்யன்,கணபதி,சிவன், விஷ்ணு, சக்தி, குமரன் ஆகிய தெய்வங்களைப் பரம்பொருளாகக் கொண்டு சௌர்யம். காணாபத்யம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம் என் ஆறு மதங்கள் (ஷண்மதம்)தோன்றின.அவ்வவற்றின் புராணங்களில் தம் கடவுளைப் பரம்பொருளாகவும், பிறரை அவருக்குக் கீழாகவும் காட்டினர். இதையெல்லாம் நாம் சரியான நோக்கோடு பார்க்கவேண்டும். பரம்பொருள் ஒன்றே; ஞானிகள் அதைப் பலபெயரிட்டு வழங்குகிறார்கள் என்பதுதான் சரியான வேதக் கோட்பாடு. (ஏகம் ஸத், விப்ரா பஹுதா வதன்தி). பெயரை வைத்து பூசல் கிளப்புபவன் பரம முட்டாளும் அயோக்யனும் ஆவான்.
இங்கு திருமாலுக்குச் சொன்னதையே சைவர்கள் சிவனுக்குச் சொல்வார்கள்!
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் (திருவண்டப்பகுதி) சொல்கிறார்:
...................................நாள் தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் திண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் (19-28)
இவை யனைத்தும் பரம்பொருளின் செயல்கள். ஒரே பரம்பொருளைச் சைவர்கள் சிவன் என்கிறார்கள்; வைஷ்ணவர்கள் விஷ்ணு என்கிறார்கள்.பெயரைக் கொண்டு பேதம் சொல்பவன் பேதையோ பேயோ அன்றி வேறு யார்?
SUPERB
ReplyDelete