Friday, 13 November 2015

7,திருமுருகாற்றுப்படை -5. திருவேரகம்



7. திருமுருகாற்றுப்படை-5



19TH century view of Swamimalai ie Thiruverakam
from: murugan.org Thanks.

திருவேரகம்

ஆவினன்குடியிலிருந்து  ஏரகத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார் நக்கீரர்.

ஆவினன்குடியில் தேவர்களின் வருகையைக் கூறினார். அந்த வானுலகத் தேவர்களும் முனிவர்களின் பின்னாலேயே செல்கிறார்கள். கன்றைக்காட்டி பால் கறப்பதுபோல், தவத்தில் சிறந்த முனிவர்களை முன்னே விட்டு, முருகனின் அருளைப்பெற நினக்கிறார்கள்! இதுவும் பொருள் பொதிந்த செயல். இந்த உலகில் புரிந்த புண்யச் செயல்களுக்காக மேலுலகப் பதவியைப் பெற்றவர்கள் இந்த தேவர்கள்.அந்த உலகில் அவர்கள் புதிதாய்ச் செய்யும்  நல்வினை எதுவும் இல்லை! இவ்வுலகில் தவம் செய்வோரே அத்தேவர்களைவிட மேலானவர்கள்.

இக்கருத்தை சாத்தனார் மணிமேகலையில் ஒரு இடத்தில் அழகாகச் சொல்கிறார். ஆபுத்திரன் புரிந்த புண்யத்தினால் அவனுக்கு இந்த்ர பதவியே கிடைத்துவிடும் நிலை ஏற்பட்டது! தன் பதவிக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த இந்த்ரன், இதைத் தடுப்பதற்காக தளர்ந்த  நடையுடன் தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கையோர் மறையோன் வேஷத்தில்  ஆபுத்திரனிடம் வருகிறான்.'அப்பா, நான் இந்த்ரன். நீ ஏற்கெனவே அதிக தானங்கள் செய்துவிட்டாய், அதற்குரிய பலனை உனக்குத் தருவேன்' என்கிறான். ஆபுத்திரன் அவனை எள்ளி நகைக்கிறான். 'ஐயா பெரியவரே. உங்கள் உயர்ந்த உலகத்திலே நீங்கள் என்ன செய்துகிழித்து விட்டீர்கள்! இந்த உலகில் செய்த புண்யத்தின் பலனை அங்கே அனுபவித்து வருகிறீர்கள்.நீங்கள் என்ன தரவியலும், வந்த வழியே திரும்பும்' என்கிறான்!

ஈண்டு செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்டகு சிறப்பின் நும் கடவுள ரல்லது
அறஞ்செய் மாக்கள் புரங்காத் தோம்புனர்
 நற்றவஞ்செய்வோர் பற்றற முயல்வோர்
யாவருமில்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே
உண்டி கொல்லோ,உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ, பேணுநர் கொல்லோ
யாவையீங்களிப்பன!

நல்ல நாடு என்றால் அங்கே தானமும் தவமும் இருக்கவேண்டும், அறம் தழைக்கவேண்டும். அறச் செயலில் ஈடுபட்ட பெரியோர் தேவர்களைவிடச் சிறந்தவர்கள். முனிவர்களை முதலில் சொன்னதன் வாயிலாக இதை நமக்கு அறிவுறுத்தினார் நக்கீரர் இங்கு ஏரகத்தில் வேறொருவகையில் அறம் செய்பவர்களைப் பற்றிச் சொல்கிறார்.

முனிவர்களுக்கு அடுத்தபடியாக அறவாழ்க்கையிலேயே ஈடுபட்டவர்கள் அந்தணர்கள். அந்தணர் என்போர் அறவோர் என்பார் வள்ளுவர்.இவர்கள் வாழ்க்கை முழுதுமே அறத்திற்காகவே அர்ப்பணிக்கப் பட்டது. ஏரகத்தில் அந்தணர்கள் செய்யும் வழிபாடு பற்றிச் சொல்கிறார் நக்கீரர். பதின்மூன்றே வரிகள் அடங்கிய இப்பகுதியில் பல அரிய விஷயங்களைச் சொல்கிறார்.

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை


மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து


இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர் உடீஇ
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து


ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி


விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன், 



பல அரிய விஷயங்கள் இங்கே வருகின்றன.

இருமூன்று எய்திய இயல்பினின் == அந்தணர்களுக்கென்று விதிக்கப்பட்டது
ஆறு தொழில்கள்.அறு தொழிலோர் என்பார் வள்ளுவர். வேதம் ஓதுதல் ஓதுவித்தல். வேள்விகள் செய்தல், செய்வித்தல், தானம் ஏற்றல். கொடுத்தல் என்பவையே இத்தொழில்கள். இவற்றைத் தொழில்கள் என்பதைவிடக் கடமைகள் என்பதே பொருந்தும்.ஏனெனில், இவை பொருள் ஈட்டுவதற்கான சாதனங்கள் அல்ல.தானம் வாங்குவதற்கும் பல கட்டுப்பாடுகள். யாரிடத்திலும், எல்லாவற்றையும் தானமாகப்பெறக்கூடாது, தானமாக வந்ததையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் நெறிமுறைகள்.


வழாஅது  ==  இந்த அந்தணர்கள் இந்த நெறிமுறையிலிருந்து  வழுவாதவர்கள். நெறியிலிருந்து தவறி, வெறும் பெயருக்கு பிராம்மணனாக இருப்பவன் "ப்ரம்ம பந்து" என்று உபனிஷதத்தில் வரும்.

மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்  கெடும்
என்பார் வள்ளுவர். (குறள் 134) 
இங்கு வரும் அந்தணர்கள் கடமையிலிருந்து தவறாதவர்கள்.

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி == இவர்கள் தந்தை, தாய் இரு வழியிலும் நானாவித கோத்ரங்களைச் சேர்ந்த பழைய வம்சாவளியினர். தொல்குடி= பழைய குடியில் வந்தவர்கள். இவர்கள் பூர்வீகக் குடியைச் சேர்ந்தவர்கள்.
தொல்குடி என்பதால் இவர்கள் பரம்பரையாக அங்கேயே இருப்பவர்கள் என்று ஆகிறது.

[இவர்கள் பெயரும் பொதுவாக அந்த ஊரின் சாமிபெயராகவே இருக்கும். சிதம்பரத்தில் கனகசபை, நடராஜன், குஞ்சிதபாதம்.மதுரையில் சோமசுந்தரம், சுந்தரேசன்.திருவாரூரில் த்யாகராஜன். திருவிடைமருதூரில் மஹாலிங்கம்.சேலத்தில்  சுகவனேஸ்வரன், நெல்லையில் காந்திமதி இப்படித்தான் அந்தந்த ஊர்க்குடிகள் பெயர்வைப்பார்கள்! இப்பொழுது மாறிவிட்டது!]
அறு  நான்கு இரட்டி === 6X4X2 == 48
இளமை நல்லியாண்டு  ==வருஷங்கள் வரையிலும் இளமையில்
ஆறினிற் கழிப்பிய  ==ப்ரம்மச்சரிய ஆச்ரமத்தில் நின்று அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றிய வர்கள்.

இது நக்கீரர் நமக்குச் சொல்லும் புதிய செய்தி! பொதுவாக, 24 வயது வரையில் ப்ரம்மச்சரிய நிலையில் நின்று வேதக்கல்வி பயிலவேண்டுமென்பதே மரபெனச் சொல்வார்கள்.மநு தர்மத்தில் வாழ்க்கையின் கால்பகுதியோ அல்லது 36 வருஷங்கள் வரையிலோ எனச் சொல்லியிருக்கிறது. இங்கு நக்கீரர் 48 ஆண்டுகள் எனத் தெளிவாகச் சொல்லுகிறார். எனவே இது மிகப்பழைய காலத்தில் நிலவிய நிலையாகத் தெரிகிறது. அப்படியென்றால், திருமுருகாற்றுப்படை மிகவும் பழைய  நூல் என்பது தெளிவு!

அறன் நவில் கொள்கை === எப்பொழுதும் தர்மம் பற்றியே பேசும் கொள்கை  உடையவர்கள்

மூன்று வகை குறித்த முத்தீ== ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்னி என்று குறிக்கப்பட்ட முவ்வெரிகளை  மூவேளையிலும்  ஓம்பியவர்கள்

செல்வத்து == அதையே செல்வமாக உடையவர்கள்

இருபிறப்பாளர் ==உபநயனம் ஆனதினால் இரண்டாவது பிறப்பு எய்தியவர்கள்

பொழுது அறிந்து நுவல == தக்க சமயத்தை (முகூர்த்தம், நல்லவேளை) அறிந்து, மந்திரங்களால் துதிக்கின்றனர்.

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண் ஞாண்= மும்மூன்று நுண்ணிய இழைகளால் ஆகிய முப்புரி நூல் அணிந்தவர்கள்

புலராக் காழகம் == உலராத, ஈர ஆடையை

புலர உடீஇ== தம் உடலிலேயே உலரும்படி உடுத்தியிருக்கிறார்கள்' 

இதுவும் நமக்கு புதிய செய்தி. பிராமணர்கள் ஈர ஆடையுடனோ. ஒற்றை ஆடையுடனோ  தெய்வ வழிபாடு செய்யமாட்டார்கள். உலர்ந்த ஆடையுடன்தான் வழிபாடு செய்யவேண்டும் என்பது நியதி. இங்கு நக்கீரர் கூறும் விஷயம் பற்றி எதுவும் அறிய இயலவில்லை.

உச்சிக் கூப்பிய கையினர் = கைகளைத் தலைக்குமேல் தூக்கிக் கும்பிடுகின்றனர்.

தற் புகழ்ந்து= முருகனைப் புகழ்ந்து

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி== ஆறு அக்ஷரங்களைக் கொண்ட, உபதேசமாகப்பெற்ற அரிய வேத மன்த்ரத்தை ["கேள்வி" என்றதனால், இந்த மன்த்ரம் நூலைக் கற்று வந்ததல்ல, உபதேசமாகச் செவி வழி பெற்றது என்பதைக் குறிப்பிடுகிறார். மன்த்ரங்களை இவ்வாறு தான் குருமூலமாக உபதேசமாகப் பெறவேண்டும்.]

இந்த ஆறெழுத்து -ஷடாக்ஷரம்-மன்த்ரம் எது? சரவணபவ என்பதே இது எனச் சொல்வார்கள். ஆனால் நச்சினார்க்கினியர் 'நமோ குமராய ' எனக் கூறுகிறார்.

நாஇயல் மருங்கின் நவிலப் பாடி== நாக்கு நன்கு புரளும்படியாக (ஸ்பஷ்டமாக) பலமுறையும் கூறி

[பொதுவாக, உபதேசம் பெற்ற மன்த்ரங்களை உரக்கச்சொல்ல மாட்டார்கள்.மனதிற்குள்ளேயே ஜபிப்பார்கள். அஞ்செழுத்தையும்  'நெஞ்சகம் நைந்து நினைமின்' என்கிறார் சம்பந்தர். இங்கே நாஇயல் மருங்கின் என்பதால் இந்த மன்த்ரங்களைத்தவிர  தோத்திரங்களையும் நன்கு உரக்கச் சொல்கிறார்கள் எனக் கொள்ளலாம்.]

விரையுறு நறுமலர் ஏந்தி== வாசனை மிக்க நல்ல மலர்களினால் வழிபடுகிறார்கள். பிராமணர்கள் மணமற்ற மலர்களை அர்ச்சனைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்.

மன்த்ரம் சொல்லி மலரிட்டு வழிபடுகிறார்கள் என்பதால், அந்தணரின் வைதீக மரபுப்படி, "மன்த்ர புஷ்பம் "  (யோ பாம் புஷ்பம் வேத எனத் தொடங்கும் ) ஓதி மலர் சாற்றுகிறார்கள் என்பது பெறப்படுகிறது.

பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்== இந்த வழிபாட்டை மிகவும் விரும்பிய முருகன், இவ்வாறு ஏரகத் தலத்தில் இருப்பதையும் உரிமையாகக் கொண்டவன். 

திருவாவினன் குடியில் முனிவர், தேவர்களீன் வழிபாட்டையும் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்ட முருகன், இங்கு திருவேரகத்தில், வேத மன்த்ரங்களுடனும்  ஸ்தோத்ரங்களுடனும் கூடிய அந்தணர்களின் வைதீக வழிபட்டையும் உவந்து ஏற்கிறான்.

இதோடு மட்டும் அல்ல- அதா அன்று  என்று தொடர்கிறார் நக்கீரர்.





View of the Vimanam of the temple from the first level
By UnreachableHost  (Own Work)CC BY-SA 3.0 creativecommons via Wikimedia Commons.

எது ஏரகம்?

இன்று ஸ்வாமிமலையே ஏரகம் எனக் கருதப்படுகிறது.ஆனால் இது இயற்கையான மலை அல்ல. செயற்கையாக அமைக்கப்பட்ட கல் கட்டடம். அவ்வளவு புராதனமானதாகவும் தெரியவில்லை.நச்சினார்க்கினியர் (6/7 வது நூற்றாண்டு)உரையில் இது மலை நாட்டில் உள்ள தலம் என்று எழுதியிருக்கிறார். மலை நாடு என்றால், சேர நாடாகவும் இருக்கலாம். கொங்கு நாடாகவும் இருக்கலாம்- அங்கும் மலைகள் உண்டு.இவற்றைத் தொடர்ந்து , இன்றைய கர்னாடகாவில் மேற்குமலைப் பகுதியில் "ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யா" என்றே ஒரு க்ஷேத்திரம் மிகப் பிரஸித்தமாக விளங்குகிறது. அதன் அருகில் குமார பர்வதம் என்ற மலையும் இருக்கிறது. கும்பகோணத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு இந்த சுப்ரஹ்மண்யரே குலதெய்வமாகவும் இருக்கிறார்!


A view of Kumara Parvata.https://thetimetiliveinisnow.files.wordpress.com.


ஆனால் நம் அருணகிரி நாதர் ஸ்வாமிமலையையே ஏரகம் எனப் பாடியிருக்கிறார். காவிரிக் கருகில் உள்ளது எனவும் கூறியிருக்கிறார்.
ஏரக வெற்பெனு மற்புதமிக்க சுவாமிமலை ,
தனி காவிரிக்கு வட பாரிசத்தில், 
என்றெல்லாம் சந்தேகத்துக் கிடமில்லாமல் பாடியிருக்கிறார்.


 இந்த இடத்தில்தான் சம்பந்தாண்டான் அவரை வாதுக்கு அழைத்ததாகவும், அவரும் வாதில் வென்று முருகன் பாத தரிசனம் பெற்றதாகவும் சொல்வார்கள்.

தகையாது எனக்கு உன்
அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே

என்று அவர் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.

நமக்கு இதுவே போதும்!



No comments:

Post a Comment