Thursday, 12 November 2015

4. திருமுருகாற்றுப்படை-2



4. திருமுருகாற்றுப்படை-2

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினற்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே--தாயுமானவர்.

கோவில், குளம் தரிசனம் என்று இப்போது நாம் நினைத்தால் கிளம்பிவிடுகிறோம்.அதற்கேற்ப போக்குவரத்து வசதிகளும் தங்குமிட வசதிகளும் பெருகிவிட்டன.சுற்றுலா, சுகவுலா என்று ஆகிவிட்டது.புனிதப் பயணம் பிக்னிக்காகி விட்டது.

புனித யாத்திரை

புனிதப் பயணத்தை "முறையால்" தொடங்கவேண்டும் என்கிறார் தாயுமானஸ்வாமிகள். அது என்ன முறை? பெரியவர்கள் பல நெறிமுறைகளைப் பின்பற்றினார்கள்..ஒரு பெரிய க்ஷேத்திற்குப் போக நினைத்தால்,  உடனே போகமுடியாவிட்டால்,அதற்காக ஸங்கல்பம் (தெளீந்த தீர்மானம்) செய்துகொண்டு ,மஞ்சள் துணியில் காசு முடிந்து வைப்பார்கள்.காசி, ராமேஸ்வரம். திருப்பதி என்று போவதானால்,வசதி உள்ளவர்கள் கூட நாலுபேரிடம் சொல்லி சிறுசிறு தொகையும் பெறுவார்கள். பலபேர் தானே முன்வந்து பொருள் தருவார்கள். அங்கங்கு உண்டியலில் போட சேர்த்துவைத்திருந்த பணத்தையும் தருவார்கள்..கேட்பவர்களுக்கு , அகந்தையை அடக்க இது ஒரு சந்தர்ப்பம்; கொடுப்பவர்களுக்கோ, ஒரு தர்மச் செயலுக்கு உதவிய புண்ணியம்! கிளம்புவதற்குமுன்,யாத்ரா தானம் என்று செய்வார்கள்; திரும்பி வந்தபிறகு ஸமாராதனை செய்வார்கள். காசி கயிறு, கங்கை சொம்பு, அன்னபூரணி படம், மேல்கோட்டை வைரமுடிசேவை படம் என்று கொண்டுவந்து கொடுப்பார்கள்.புனிதப் பயணம் என்று தீர்மானித்ததிலிருந்து அந்த ஒரு எண்ணமே மேலோங்கி நிற்கும். போகும் வரை அதே சிந்தனை! வந்தபிறகு அதே நினைவு! ஏதோ போனோம்,வந்தோம் என்று இருக்காது. இத்தகைய ஒரு யாத்திரையே என்றும் மனதில் நிற்கும். கி.மு, கி.பி என்று சொல்வது போல, இத்தகைய யாத்திரையை வைத்து வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிப்பார்கள்

இப்பொழுது மினிபஸ் , வீடியோவுடன் டூரிஸ்டு கோச், வைத்து சுற்றுலா கிளம்புகிறோம்! பல கைடு புத்தகங்களும் வழிகாட்டிகளும் இருக்கின்றன.எல்லாம் பிஸினெஸ்!முன்பெல்லாம் ஏற்கெனவே போய்விட்டு வந்தவர்கள்  வழி சொல்வார்கள். அப்பொழுதும் நாமேதான் பல விஷயங்களை அனுபவத்தில் தெரிந்துகொள்ள வேணும்! யாராவது அனுபவஸ்தர்கள் கூடவருவது பெரிய சகாயமாகும்.. 50களில் க்ருபானந்த வாரியார் ஸ்வாமிகள்  சில பக்தர்களை வட தேச யாத்திரைக்கு கூட்டிச் சென்றார். எந்த இடத்தில் என்ன செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை யெல்லாம் சொல்லித்தந்தார்! இதைப் பற்றி பின்னால் ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறார்..இப்போது ஃபோட்டோ எடுக்கிறோம்-ஆனால் (அதனால்?)பார்த்தது மனதில் நிலைப்பதில்லை! எவ்வளவு இடங்களைக் .'கவர்'  செய்கிறோம் என்பதே குறி!

புலவர்களின் கையேந்திப் பிழைப்பு

சங்க இலக்கியத்தில் ஒரு சங்கடமான நிலை- பெரிய பெரிய புலவர்கள் கூடசெல்வந்தரை நம்பியே பிழைக்கவேண்டிய நிலை! அதனால் வறுமையில் வாடிய பல புலவர்கள் கஞ்சனையும்  கசடனையும் கூட இந்திரன், சந்திரன் என்று பாடிய அவல நிலை! (இன்றுகூட எத்தனை 'அறிஞர்கள் ' அரசியல் வாதிகளைப் புகழ்ந்து பாடியே காலத்தை ஓட்டுகிறார்கள்!)இதைவைத்து ஒரு காவிய நடையே உருவாகிவிட்டது! ஆற்றுப்படை என்பது அதன் பெயர்!  ஒரு அரசனிடமோ, வேறு வள்ளலிடமோ பரிசு பெற்று வந்த ஒரு புலவன், வேறு ஒரு புலவருக்கு அந்த அரசன் அல்லது வள்ளல்  இருக்கும் ஊருக்கு வழிகாட்டி யனுப்புவதே இந்த ஆற்றுப்படை! பத்துப்பாட்டில் 5 பாட்டுக்கள்  இந்தமாதிரி ஆற்றுப்படைதான்!

ஆனால் நம் நக்கீரர் அந்தமாதிரியான புலவர் இல்லை! இவரிடம் வந்து மாட்டிக்கொண்டவன் ஒரு பக்தன்! அவன் புனிதப் பயணம் செல்ல எண்ணுகிறான்.அதனால் நக்கீரர் அவனை சரவணபவ நிதி யாகிய அறுமுககுருபரவேளிடம் ஆற்றுப் படுத்துகிறார்! அவன் இருக்கும் ஆறு விசேஷமான இடங்களைச் சொல்லி விளக்குகிறார். முருகனுடைய அடையாளத்தைச் சொல்லுகிறார். அவன் இருக்கும் இடங்களின் அடையாளத்தையும் சொல்லுகிறார்.

முருகன் என்னும் பேரொளிப் பிழம்பைக் காட்டினார். அந்த ஒளியின் துணைகொண்டு  அப்பெருமானின் தாளைக் காட்டினார். அங்கிருந்து அவனது வலிய கையைக் காட்டினார். அவன் மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன் என்றார். மணவினை நிகழ்ந்த முருகன்  என்றால் மணமாலை இருக்கவேண்டுமே? மாலையைக் காண அவன் மார்புக்கு நாம் பார்வையைச் செலுத்தவேண்டும்!



இந்த்ரன் தேவசேனையை  மணம் முடித்து வைப்பது.


தாரும் கண்ணியும்

பண்டைத் தமிழர்கள் எதிலும் ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்றியவர்கள்..எல்லா விஷயத்திலும் ஒரு இலக்கணத்தை வகுத்துக்கொண்டவர்கள். மணவினையினால் வரும் மன மகிழ்ச்சியைக் காட்டுவதற்காகவே ஒரு விசேஷ மலர்- அதனால் தொடுக்கப்பட்ட மாலை- கடம்ப மாலை- செங்கடம்ப மாலை! இது முருகன் மார்பிலே தவழ்கிறது!

உருள் பூந் தண்தார் புரளும் மார்பினன்

[நக்கீரர்  கடைச்சங்கப் புலவர்களிலே தலையாயவர். அவர் வெறுமனே மாலை என்று சொல்வாரா?  அந்த மாலை, அதிலிருக்கும் மலர், அந்த மலர்  தரும் மரம், அந்த மரம் வளர்ந்து நிற்கும் மலை, அதன் மீது பெய்யும் மழை, அதைப் பொழியும் மேகம், அந்த மேகங்களுக்கு ஆதாரமான கடல் நீர்- என்று இப்படி நான்கு வரிகளில் இந்த விஷயங்களைச் சொல்லுகிறார்.]


மாலை தவழும் மார்பிலிருந்து கண்களை இன்னும் மேலே உயர்திப் பார்த்தால், முருகனின்  திருமுடி தெரிகிறது. அதன்மீதும் ஒரு மாலை! இது காந்தள் மலரால் கட்டப்பட்ட மாலை. புழந்தமிழ் நாட்டில்  ஒவ்வொரு அரசனுக்கும் என்று ப்ரத்யேகமான ஒரு மலரால் தொடுத்த மாலை உண்டு என்பது இலக்கணம். சோழனுக்கு ஆத்திமாலை, பாண்டியனுக்கு வேப்பமாலை என்று  சொல்வார்கள். முருகன் குறிஞ்சி நிலத்தின் தலைவன். அவனுக்கே உரியது காந்தள் மாலை..இக் காந்தள் மலரால் அமைந்த கண்ணி திருமுடியிலே விளங்குகிறது..

[இதைச்சொல்லவந்த நக்கீரர்,  இதற்கு முந்திய 32 அடிகளில், அம்மலர்களுக்கு
இருப்பிடமான சோலையையும் அங்கு நிகழும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் விவரிக்கிறார்! அது தேவ, அரச மளிர் ஆடும் சோலை! அவர்களும் அவர்களுடய தோழிமார்களும் அங்கு ஆடிப்பாடிக் களிக்கின்றனர். அவர்களது உடல்வனப்பினையும், ஆடைஅணிகலன்களையும், அவர்களின் கூந்தல் இன்ன பிற அலங்காரத்தையும் மிக விரிவாகவே 26 அடிகளில் வர்ணிக்கிறார்!]

 பிறகு, 6 அடிகளில் சில அரிய விஷயங்களைச் சொல்லுகிறார்.

கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி
வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து 
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்



'கோழி ஓங்கி விளங்குவதும், பகைவரை  வென்று, அவர்களைச்  சம்ஹாரம் செய்த வெற்றியை அறிவிப்பதுமான கொடி  நீண்ட நெடு நாள் வாழ்க' என்று அத் தெய்வப் பெண்கள்  வாழ்த்துகிறார்கள். பலர் கூடி, சிறப்புற்று விளங்குகின்ற அந்த மலையின் பக்கமெல்லாம் எதிரொலிக்கும் படியாகப் பாடி ஆடுகிறார்கள். அத்தகைய  சோலைகள்  உள்ள  அம்மலைச்சாரலில்  நெருங்கி வளர்ந்துள்ள மரங்களை குரங்குகள் நெருங்குவதில்லை! அங்குள்ள விளக்குபோன்ற காந்தள் மலர்களை வண்டுகள் கூட மொய்ப்பதில்லை!
(முருகனுடைய கொடியில் இருப்பது கோழியின் படமல்ல- அது உயிருள்ள நிஜம் சேவல்!)



 ; [மலர்களுக்கு 'வண்டெச்சில்' என்ற பெயருண்டு.மலர் மலர்ந்தவுடன் அதிலுள்ள தேனைப்பருக வண்டுகள்  வந்து மொய்க்கும். இப்படி வண்டு மொய்த்த மலர் சுவாமிக்கு சாற்ற ஏத்ததல்ல. அதனாலேயே, மலர்வதற்குமுன்பே மரமேறிப்.பறிக்க வசதியாக புலிக்காலை வேண்டிப்பெற்றார்  'வ்யாக்ரபாதர். இங்கு, 'இது முருகனுக்கு உரிய மலர், இதை நாம் தொடக்கூடாது' என்பது அவ்வண்டுகளுக்கே தெரியும் போலும்!]


பக்கத்தில் வ்யாக்ரபாதர் படம். இவரைத்தமிழில் புலிக்கால் முனிவர் என்பார்கள். இவர் சிதம்பரம் நடராஜாவின் தீவிர பக்தர்.இவர் வழிபட்ட ஸ்தலமாதலால் சிதம்பரத்திற்கே புலியூர் என்று பெயர் வந்தது. பதஞ்ஜலியுடன் இவரையும் சேர்த்தே சொல்லுவார்கள்.
படம்:www,saivasiddhanta.in. நன்றி.



பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

{இவ்வாறு,} காந்தள் மலர்களால் ஆகிய  குளிர்ந்த,பெரிய  கண்ணியை அணிந்த திருமுடியை உடையவன்.

நெடு வேல்

அடுத்து, முருகன் கை வேலைச் சொல்கிறார். இது எப்படிப்பட்ட வேல்! உலகிலேயே முதலில் தோன்றியது கடல்- இது பூமிக்கும் மூத்தது! இப்படிப்பட்ட கடலுக்குள் புகுந்து அதைக் கலக்கி, அங்கிருந்த சூரனை வதைத்த சுடர் விடும் நெடுவேல்!

பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்


இந்த கடலைக்கலக்கிய சமாசாரத்தை அருணகிரி யப்பன் அற்புதமாகக் கூறுகிறார்.

மகரம் அளறிடை புரள  உரககண பண மவுலி
மதியும் இரவியும் அலையவே
வளரெழிலி  குடருழல  இமையவர்கள் துயரகல....

குமரன் அறுமுகன்  எதிரும்  விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடியவேலே


முருகன் விட்ட வேலினது வெம்மையினாலே கடல் வற்றிவிட்டது.அக்கடலிலிருந்த பெரிய மகர மீன்கள் சேற்றிலே புரண்டன. கடல்  நீர்  வற்றியதால் பாதாளலோகத்திலிருந்த ஆதிசேஷனுடைய ஆயிரம் தலைகளும் வெளியேதெரிய அதனால் அவை  சூர்ய, சந்திர கிரணங்களால் தாக்குண்டன. மேகங்களின் உள் பாகங்கள்  சுழன்றன!  தேவர்களின் துயர் அகன்றது.. இப்படிப்பட்ட வேல்தான், ஆறுமுகனாகிய குமரன்,  தன்னை எதிர்த்து, வெற்றிச் சின்னங்களுடன் வந்த சூராதி அவுணர் படைகள் குலைந்து போகுமாறு விட்ட கொடிய வேலாகும்.


போர் என்றால்  அங்குவிழும் பிணங்களைத்தின்ன  பேய்கள் கூடிக் கூத்தடித்து கும்மாளம் போடும்! இதைப் பாடுவது தமிழ்ப் புலவர்களின் மரபு. நக்கீரர் அடுத்த 11 வரிகளில் பேய்களின் உருவத்தையும், அவற்றின் செயல்களையும் பற்றிப் பாடுகிறார். அருணகிரி நாதர் பல பாடல்களீல் இதைப் பாடி யிருக்கிறார்.

பிறகு, முருகன் அடைந்த வெற்றியைச் சொல்கிறார்.

இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை 
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்இசை செவ்வேள் சேஎய் 




இரண்டு பெரிய உருவங்களை எடுத்துவந்த ஒரு பெரிய சூரனது உடல் அஞ்சும்படியாக ஆறுவெவ்வேறு உருவத்தோடு அங்கு முருகன் வந்தான்.அசுரர்களின் வெற்றி முற்றும் அழிந்துபோகும்படி, தலைகீழாக நின்ற பூங்கொத்துக் களுடன் கூடிய அந்தப் பெரிய மாமரத்தை அழித்தான். அதனால் குற்றமில்லாத வெற்றியைப்  பெற்றான். அவனுடைய நல்ல புகழை யாரே உள்ளபடி அறியமுடியும்! அத்தகைய பெருமை உடையவன்  நமது செவ்வேள்சேயாகும்.


உன் எண்ணம் நிறைவேறும்

இப்படிப் பட்ட முருகனைக் காணவேண்டும் என்ற ஆசையினால் இப்புலவர்-பக்தர் நக்கீரர் முன் வருகிறார். அவருக்கு இதமான மொழிகளைக்கூறி வாழ்த்துகிறார், நக்கீரர்!

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீமுன்னிய வினையே




முருகனின்  சிவந்த திருவடிகளை  அடைய நினைத்த நல்ல மனதோடு,  நலம் தரக்கூடிய தீர்மானத்துடன் நீ உன் இடத்தை விட்டு வந்திருக்கிறாய். தங்கிக் கொண்டு செல்லும் யாத்திரையை நீ விரும்பினால், உன் நல்ல மனதில் எழுந்த இந்த ஆசை நிறைவேறும்! நீ நினைத்த செயல் இப்போதே நிறைவேறும்!


இதுவரை நக்கீரர் சொன்னதெல்லாம் ஓர் அறிமுக உரை போன்றது! இவ்வளவு பெருமை நிறைந்த முருகனைப் பார்ப்பதென்பது எளிதில் முடியும் செயலா என்று  ஆசாமி மலைத்துப் போகக்கூடாதல்லவா! அதனால் அவனுக்கு முதலில் தைரியம் சொன்னார்.  நம்பிக்கையூட்டினார்.. பின்னர், முதல் இடமாக திருப்பரங்குன்றத்தைச் சொல்கிறார். அதற்கு அடையாளமாக, அருகில் உள்ள மதுரையை , 10 வரிகளில் விளக்குகிறார்.. முதலில் கோட்டையின் சிறப்பையும், அங்காடித் தெருவையும் மாடங்கள் நிறைந்த தெருக்களையும் 5 வரிகளில்சொல்லி, இத்தகைய கூடல் மா  நகருக்கு மேற்கே உள்ளது. என்கிறார். பிறகு, இன்னும் 5 வரிகளில்,  குன்றத்தைச் சூழ்ந்துள்ள வயல்வெளிகளின் வளத்தை  விளக்குகிறார். பின்னர், இத்தகைய

குன்றமர்ந்து உறைதலும் உரியன்

என்று  முடிக்கிறார்.  ஆனால், முருகனுக்கு இது ஒரு இடம் மட்டும் அல்ல, வேறு இடங்களும் உண்டு . அதனால் , அதாஅன்று என்று கூறி  நிறுத்துகிறார்.

இங்கு இரண்டு விஷயங்கள் மனதில் படுகின்றன, 'திருப்பரங்குன்று'  என்று தெளிவாகப் பெயரைச் சொல்லவில்லை! மதுரைக்கு மேற்கே உள்ள குன்று  என்று மட்டுமே சொல்கிறார். மதுரையிலும் கோட்டையைப் பற்றிச் சொல்கிறாரே தவிர, அங்குள்ள மீனாக்ஷி  கோவிலைச் சொல்லவில்லை!


சரவண பவநிதி  அறுமுக  குருபர
சரவண பவநிதி  அறுமுக  குருபர


குறிப்பு:

முருகக் கடவுளின் உருவில் காணும் ஒவ்வொரு விஷயமும் தத்துவார்த்தம் பொதிந்தது. முருகன் ஒளிப்பிழம்பு.ஞானவடிவு. இதுதான் நம் அகவிருளைப்போக்கி ஆத்மஞானம் தரும். நாம் ப்ரப்ரஹ்மத்தை ஓளியாக காயத்ரி மன்த்ரத்தால் த்யானிக்கிறோம். இந்த மன்த்ரத்தின் பொருளாகவும்,உருவாகவும் இருப்பவன்முருகன்.  "ஓங்காரத் துள்ளொளிக்
குள்ளே முருகன் உருவம்" என்பார் அருணகிரி நாதர்.அதனால் அவன் ஸுப்ரஹ்மண்யன்! உருவற்ற ப்ரஹ்மம் நம் நன்மையின் பொருட்டு ஸுப்ரஹ்மண்யமாக வந்தது! இவ்வாறு, ப்ரஹ்மம் என்னும் பரம்பொருள்  அவரது இயற்பெயராகவே இருக்கிறது! இது வேறு எந்த தெய்வத்திற்கும் அமையாத சிறப்பு. அதனால் தான் 'சுப்ரமண்யனுக்குமேல் தெய்வமில்லை' என்னும்  வழக்கு எழுந்தது. காயத்ரி மன்த்ரத்தையே  முக்கியமாகக் கொண்ட பிராமணர்களின் பெருஞ்செல்வம் முருகனே.அதனால் நக்கீரர் முருகனை அந்தணர் வெறுக்கை என்பார்.

அவன் கை வேல் ஞானத்தின் உருவம். ஆழ்ந்து,அகன்று நுண்ணியது. வேல் மலையைப் பிளந்தது என்று சொல்லுகிறோம். நமது பழைய சாஞ்சித கர்மம் மலைபோல் குவிந்துள்ளது., இதை ஞானம் ஒன்றுதான் அழிக்கும்.அந்த ஞானம் முருகன் அருளால் வரும். இதன் அடையாளம் வேல். "வினையோடவிடும் கதிர்வேல்" என்பது அருணகிரியார் வாக்கு. வேல் கடலை  வற்றச் செய்தது என்பது, நமது பிறவிப் பெருங்கடல் வற்றுவதைக் குறிக்கும். "அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன்" என்பதும் நம் அருணகிரியடிகளின் வாக்கு..இப்படி ஒவ்வொன்றையும் நாம் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேணும்.

No comments:

Post a Comment