17.பரிபாடல் - 7
செவ்வேட் பரமன்
பரிபாடல் என்பது ஒருவகை பா வகை. 25அடி முதல் 400 அடிவரை இதற்கு எல்லையாக வகுக்கப்பட்டது. இப்பாடல்கள் இசையோடு பாடப்படும்.
50/60 வருஷங்களுக்கு முன் வரை பொதுவாகவே நம் பண்டிதர்கள் தமிழ் செய்யுட்களை உரிய ராகத்தில் முதலில் சொல்லிக்காட்டி, பிறகுதான் அதைப் பதம் பிரித்து விளக்குவார்கள். இயலும் இசையும் இயல்பாகவே இணைந்து விளங்கிய காலம் அது, இப்போது நாம் முன்னேறிவிட்டோம்!
இப்போது நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் என்னும் தொகுப்பை மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் மிகப்பாடுபட்டு முதன்முதலில் 1918ல் பதிப்பித்தார்கள். இரண்டாம் பதிப்பு 1935ல் அவரே திருத்தி வெளிவந்தது. அதன் முகவுரையில் பரிபாடலைப்பற்றிய பல அரிய விஷயங்களை விளக்கியிருக்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களில் இன்பம் (காமம்) என்பதையே முதலாக வைத்து, உலகியலைப் பற்றியே இதில் வரும். ஆனல் கடவுள் வாழ்த்தும் வரும். இப்போது உள்ள பரிபாடலில் 70 பாட்டுக்கள் இருந்த தென்றும் அவற்றில் 8 திருமாலைப்பற்றியவை; 31 செவ்வேள் (முருகனைப்) பற்றியவை; 1 காடுகிழாள் (அல்லது கடல் ) பற்றியது;4 மதுரை பற்றியவை;26 வைகை பற்றியவை எனவும் பழம் பாட்டொன்றை முகவுரையில் காண்கிறோம். இப்போது இருப்பவை, திருமால் பற்றிய 6 பாடல்களும். முருகன் பற்றிய 8 பாடல்களும், வைகை பற்றிய 8 பாடல்களுமே யாகும்.டாக்டர் ஐயரவர்களின் முதல் பதிப்பிற்குப்பின் , கடந்த 100 வருஷங்களில் மேலும் ஒரு பாட்டைக்கூட நாம் புதிதாகக் கண்டெடுக்கவில்லை! டாக்டர் ஐயருடைய உரையும் அரும்பதவுரை அகராதியும் தான் இப்பாடல்களின் பொருளை நமக்கு விளக்குகின்றன.
திருமாலைப்பற்றிய 6 பாடல்களை நாம் பார்த்துவிட்டோம். இனி முருகனைப் பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.
நாம் பார்க்கும் முதல் பாட்டு கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் இயற்றியது. இவர் திருமாலைப் பற்றியும் இரண்டு பாடல்கள் (3,4 ) செய்திருக்கிறார். குறிப்பாக நான்காவது பாட்டில் திருமாலின் வ்யூஹம், அவருடைய மூன்று அவதாரங்கள், வேதம் அவரைப்போற்றும் விதம், அவருடைய அளத்தற்கரிய பெருமை ஆகியவற்றை வியந்து கூறி, "நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை" என்ற ஒப்பற்ற வரியையும் நமக்குத் தந்தார்! இவர் செவ்வேளையும் பாடுவது, அப்புலவர்கள் தெய்வங்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவில்லை என்பதைக் காட்டுகிறது!
செவ்வேளின் பெருமை!
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத்த புத்த வேல்
நாவலந் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை 10
பிணிமுகம் என்னும் யானையாகிய உன் வாகனத்தின் மேலேறிவந்து, இருள் சூழ்ந்து பரந்த குளிர்ந்த கடலில் புகுந்து, அங்குள்ள பாறைகள் பொடிபட,போர் புரிந்து, உன் வேலாயுதத்தால் மாமரமாகிநின்ற சூரனைக்கொன்றாய்! கொடுவினையுடைய அவுணர்கள் அனைவரையும் கொன்றாய்! க்ரௌஞ்சமலையைப் பிளந்து வழியுண்டக்கினாய்! அறுதலை அண்ணலே!
கஜவாஹனர்!
மூ இரு கயந்தலைமுந் நான்கு முழவுத் தோள்
ஞாயிற்று ஏர் நிறத் தகை நளினத்துப் பிறவியை
காஅய் கடவுட் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவ எனப் பேஎ விழவினுள்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே 1
அவை வாயும் அல்லபொய்யும் அல்ல
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை
சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும் 20
ஏனோர் நின் வலத்தினதே
நீ ஆறு தலைகளுடனும், பன்னிரு தோள்களுடனும், சூர்யன் உதித்தது போன்ற ஒளியுடனும் தமரைப்பூவினில் தோன்றினாய்!
"சம்ஹாரக் கடவுளின் சேயே! செவ்வேளே! பெரும் சிறப்புள்ளவனே! தலைவனே" எனப் பலவாறு வேலன் வெறியாட்டில் உன் பெருமயைப் பேசுகிறான்! இந்த உலகிற்கெல்லாம் நீயே தலைவனாதலின், அவ்வுரை எல்லாம் உண்மையல்ல! ஆனாலும் நீ அங்கே வெளிப்படுவதால், அவை பொய்யும் அல்ல! அவன் மொழிந்த சிறப்புகளை நீ ஒருகால் ஏற்காமலும் இருக்கலாம்! ஆனால் நல்வினையால் உயர்குடிப் பிறப்பினராதலும், தீவினையால் இழிபிறப்பினருமாதலாகிய இது, உன் ஆணையின் வசப்பட்டது. இச்சிறப்பு ஒருகாலும் உன்னைவிட்டு நீங்காது!
முருகன் திரு அவதாரம்
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில்லாக
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய 25
மாதிரம் அழலஎய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு 30
விலங்குஎன விண்னோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தத
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டவன் உருவு
திரித்திட்டோன் இவ் உலகு ஏழும் மருள 35
கருப் பெற்றுக் கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழுறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க எனஅவர் அவி 40
உடன் பெய்தோரே அழல் வேட்டுஅவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்
வட வயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அந் நிலைஅயின்றனர் 45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை வயின் வழா அது நிற் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்
ஆதி அந்தணனாகிய நான்முகனாகிய பாகன் செலுத்திய, வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டிய பூமியாகிய தேரில் சென்று, வாசுகி நாணாகவும், ஹிமயமலை வில்லாகவும் கொண்டு, திரிபுரங்களை ஒரு தழல் அம்பினால் அழியும்படி யெய்தவனும், அமரர்களுடைய வேள்விப் பாகம் உண்டவனும், பசிய கண்களை உடையவனுமாகிய பார்ப்பானகிய இறைவன், உமாதேவியாரோடு இன்புறும் சமயத்தில் உண்டான கருவை, இந்திரன் வேண்டுகோளின்படி பலவாகச் சேதித்தருளினான். அக்கருவை முனிவர்கள் எழுவரும் பெற்றுத் தீமூட்டி அதனை ஹவிஸோடு பெய்தனர். பின்னர் அதனை அருந்ததி தவிற கார்த்திகை மாதர் அறுவரும் உண்டு கர்ப்பமுற்றனர். சரவணப் பொய்கையில் தாமரைப்பூவில் உன்னைப் பெற்றனர் என்பர்.
பெரும் பெயர் முருக நிற் பயந்த ஞான்றே 50
அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன்
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்தென
அறு வேறு துணியும் அறுவர் ஆக
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்
பெரும் பெயர் முருகனே! அவ்வாறு நீ பிறந்த அன்றே, இந்திரன் கர்வத்தால் தன் வஜ்ராயுதத்தை உன்மேல் எறிய, ஆறு வேறு உருவமாகிப் பின்னும் ஒருவன் ஆனாய். முருகா! நீ நெடிது வாழ்க!
தேவஸேனாபதி!
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடை
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன் 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்த
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்
குழந்தைப் பருவத்திலே முற்ற வளராத திருமேனி தாங்கி, விளையாட்டாகச் செய்த போரில், ஆயுதம் எதுவும் இல்லாத உன் கையிலேயே இந்த்ரன் தோல்வியுற்றான். " இத்தகைய ஆற்றலுள்ள இவனே நம் சேனைக்குத் தலைவனாகும் தகுதியுடையவன்" என்று கருதிய அக்னி உனக்கு சேவலைத் தந்தான்.இந்த்ரன் மயிலையும், யமன் வெள்ளாட்டுக் கிடாவையும் தந்தான்.
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறி வரிச் சாபமும் மரனும் வாளும் 65
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும
தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன் தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் 70
அவ்வாறு அவரும் பிறரும் தத்தம் உடலிலிருந்து பிரித்துக் கொடுத்த ஆடும், மயிலும், சேவற்கோழியும், வில்லும் மரனும்,வாளும் ஈட்டியும் கோடரியும் மழுவும் கனலியும் மணியும் மாலையும் ஆகிய இவற்றைப் பன்னிரண்டு கரங்களிலும் தாங்கி, தாமரையிலிருந்து வெளிவராத அந்த இளமைப் பருவத்திலேயே தேவர் சேனைக்குத் தலைவனானாய்! அதனால் அவர்களது அரசனான இந்த்ரன் புகழையும் கடந்துவிட்டாய்!
தேவசேனாபதி.
முருகன் இணையடி நிழல்!
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்
சேரா அறத்துச் சீர் இலோரும்
அழி தவப் படிவத்து அயரியோரும் 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்
நின் நிழல்
ஓ தலைவ!
உயிர்களுக்குத் தீங்கு புரியுமாறு சினம் கொண்ட நெஞ்சினரும், அறத்தின்பால் சேராதவர்களும், கூடாவொழுக்கத்தால் தவவிரதம் அழிந்தவர்களும் "இப்பிறப்பில் அனுபவிப்பதே உண்மை, மறுபிறப்பு இல்லை" என்று கூறும் மதி இழந்தவர்களும் ஆகிய இவர்கள் உன் இணையடி நிழலை அடையமாட்டார்கள். உனது குணத்தை ஏற்றுக்கொண்டவர்களாகிய அறம்பூண்டவர்களும், வீடுபெறும் குணமுடையவர்களும், தவம் புரிவோரும், வணங்குவோரும் உன் தாள் நிழலை அடைவார்கள்.
எமது வேண்டுகோள்!
அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே 81
உருளும் கொத்தான கடப்பமலரால் ஆன மாலையை அணிந்த பெருமானே! அதனால் நாம் உம்மிடம் நுகர்பொருளையும், அதற்குக் காரணமாகிய பொன்னையும், அதனால் பெறும் நுகர்ச்சியையும் இரந்து வேண்டவில்லை! எமக்கு வீடுபயக்கும் நின் அருளும், அதனைப்பெற நின்னிடத்தே செய்யும் அன்பும், அவ்விரண்டாலும் வரும் அறமும் ஆகிய இம்மூன்றையுமே வேண்டுகிறோம்! அருள்புரிவாயாக!
No comments:
Post a Comment