Thursday, 12 November 2015

6. திருமுருகாற்றுப்படை-4 திருவாவினன்குடி



6. திருமுருகாற்றுப்படை-4


Gopuram of Thiruvaavinankudi Temple. Pazhani Hill is in the background.
From: Murugan.org. Thanks.

திருவாவினன்குடி

மனித இயல்புதான்  எத்தனை விசித்திரமானது! ஒரே பொருளைப் பலவிதமாகப் பார்க்கிறோம்,பயன் படுத்துகிறோம். அரிசி, கோதுமை என்ற இரு தானியங்களை மட்டும் எத்தனை எத்தனை விதத்தில் பக்குவப்படுத்துகிறோம்! இதில் ஒருவருக்குப் பிடித்தது மற்றொருவருக்குப் பிடிப்பதில்லை.ஒரே வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பலவிதத்தில் சமைத்துப்போடவேண்டி யுள்ளது! இதை ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார். ஒரே வயிற்றுப் பிள்ளைகளுக்கும் ஒரேமாதிரி அறிவும் ஆற்றலும் இருப்பதில்லை.

மனித இயல்பிலுள்ள வித்தியாசங்களுக்கு ஏற்றபடிதான் கடவுளும் பலவித மதங்களை அனுமதித்துள்ளான் என்பது அருளாளர்களின் கொள்கை. ஒவ்வொரு மதத்தினுள்ளும் பற்பல பிரிவுகளும் இவ்வாறு தான் தோன்றி வளர்ந்தன. ஒரே கடவுள், ஒரே புத்தகம், ஒரே கொள்கை என்று கிளம்பிய கிறிஸ்தவர்களும் பல நூற்றுக்கணக்கான பிரிவுகளாக இருக்கின்றனர். கும்பிடுவது ஒரே ஏசு நாதரானாலும், ஒருவர் சர்ச்சுக்கு இன்னொரு பிரிவினர் போகமாட்டார்கள்! இஸ்லாமிய மதத்திலும் இதே நிலைதான்- பல பிரிவுகள்.அவர்களுக்கிடையிலே பயங்கரமான ஆயுதப்போராட்டம்! இவ்வளவு ஏன்- ஒரு கட்சிக்குள்ளேயே எத்தனை கோஷ்டிகள்!

இதெல்லாம் தெரிந்துதான், நம் பெரியவர்கள் நமக்கு இந்த விஷயத்தில் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டார்கள். எந்தக் கடவுளை, எப்படி வேண்டுமானலும் கும்பிடு என்று விட்டுவிட்டார்கள்."ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று கூவிக் களித்தார் மணிவாசக ஸ்வாமிகள்!

நாம் சிவனை நடராஜா, தக்ஷிணாமூர்த்தி என்று கொண்டாடுகிறோம். வடக்கே அவரை  பெரிய யோகீஸ்வரராகப் பார்க்கிறார்கள். நமக்கு விநாயகர் "பிள்ளையார்"- ப்ரம்மச்சாரிதான்; வடக்கே அவருக்கு 'ஸித்தி-புத்தி' என்று இரண்டு பத்தினிகள்! நம் முருகனுக்கு இரு தேவியர்; ஆனால் வடக்கே அவர் கார்த்திகேயர் என்ற பெயரில் கடும் ப்ரம்மச்சாரி! அவரை வழிபட்டால் திருமணமாகாது என்பது அவர்கள் நம்பிக்கை! வங்காளி வைஷ்ணவர்களுக்கு, ராதா-க்ருஷ்ணர்; நம்மஊர் வைஷ்ணவர்களுக்கு இது ஒத்துவராது! அவர்களுக்கு, வெங்கடாசலபதி, பார்த்தசாரதி, பள்ளிகொண்ட பெருமாள்- இப்படி! நமக்கு அம்பாள் என்றால், லலிதா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி,த்ரிபுரசுந்தரி, லக்ஷ்மி, ஸரஸ்வதி, கௌரி என்போம்.வங்காளத்தில் துர்கை-காளிதான்! உ.பி,டில்லி பகுதியில் க்ருஷ்ணரை  வ்ரஜ பூமியின் நாயகராக ஏற்றுக்கொள்கிறார்கள்; அவரே குஜராத்தில் த்வாரகா நாதன்! அவரை "ரண் சோட்ஜி" என்றும் அழைக்கிறார்கள்- அதாவது, ரணகளத்தைவிட்டு ஓடிப்போனவர்! இதற்கும் ஒருகதை! நம் காலத்திலேயே கண்ணனை 'சேவகன்' என்று பாடினார் பாரதியார்! ஒரே தெய்வத்தை இப்படிப் பலஉருவிலும், பெயரிலும் வழிபடும் சுதந்திரம் வேறு எந்த மதத்திலும் இல்லை! முருகனுக்கே ஆகமங்களில் 16 உருவங்கள் தந்து, வழிபடுவதற்கு த்யானஸ்லோகங்களும் தந்திருக்கிறார்கள்! கர்நாடகத்தில் முருகன்- சுப்ரமண்யரை நாக உருவில் வழிபடுகிறார்கள்! பல இடங்களில் வேலுக்கு தனி வழிபாடும் உண்டு!



கொடைக்கானல் போகும் வழியில் பழநி மலைகளின் ஒரு காட்சி

நமக்கு இன்னொரு நல்ல பழக்கமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் தவிர, நாமெல்லாம் எந்தக் கோவிலுக்கும் போவோம்! ஒரே சிவன் கோவிலுக்கு சைவர்களும் வருவார்கள்- சாக்தர், ஸ்மார்த்தர்களும் வருவார்கள், பொது பக்தர்களும் வருவார்கள். எங்கும் அவரவர் தத்தம் குல ஆசாரப்படி வழிபடுவார்கள். சிலர், பொங்கல் படைப்பார்கள், மாவிளக்கு ஏற்றுவார்கள், முடி எடுப்பார்கள். காவடி, பால்குடம் என்று எடுப்பார்கள். சிலர் தீமிதிப்பார்கள். கன்னத்தில் குத்திக்கொள்வார்கள்.சிலர் மஞ்சள் ஆடையுடன் வருவார்கள், சிலர் ஈரவுடையுடனேயே வருவார்கள்! சில இடத்தில் ஆடு, கோழி வெட்டுவது சில வகுப்பினரிடையே இன்றும் நடந்துவருவது! சில முற்போக்குவாதிகள் இதையெல்லாம் தடுக்க கோர்ட்டு, கச்சேரி என்று ஓடுகிறார்கள். ஆனால் தினமும் லக்ஷக்கணக்கில் ஆடுகளையும் கோழிகளையும்வெட்டி தம்வயிற்றுக்குள் தள்ளுவது மட்டும் ஜீவஹிம்சையில் சேராது!

இதையெல்லாம் இங்கே சொல்வதற்கு ஒரு காரணமுண்டு! இதுவரை முருகனைப் பற்றிப் பொதுவாகச் சொல்லி வந்தார் நக்கீரர். சூரனைச் சம்ஹாரம் செய்து, அமரர்களுக்கு அவர்களுடைய இடத்தை மீட்டுக் கொடுத்தது, தெய்வானை திருமணம், ஆறுமுகம், பன்னிருகைக் கோலனாக செந்திலில் காட்சி தருவது, முகங்களும் கைகளும் செய்யும் செயல்கள் ஆகியவற்றைச் சொன்னார்.இனி, மக்கள் அவரை எந்தெந்த விதத்தில், எங்கு எப்படி வழிபடுகிறார்கள் என்பதைச் சொல்ல வருகிறார்.ஆக, நம்மிடையே நிலவிவரும் விதவிதமான பழக்கங்கள் தொன்றுதொட்டே உள்ளவை தாம்.முதலில் நம்மை திருவாவினன்குடிக்கு அழைத்துச் செல்கிறார்.


திருவாவினன்குடி


திருவாவினன்குடி கோவில் கோபுரம்.

திரு+ ஆ+ இனன் குடி= திருவாவினன்குடி! திரு=லக்ஷ்மியும், ஆ= காமதேனுவும். இனன்= சூர்யனும் வழிபட்ட தலம். இலக்கிய மரபில், இதை ஆவியர் என்னும் குடியினர் ஆண்ட இடம் என்பார்கள்.குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை ஈந்து  நலியாப் புகழ்பெற்ற  வள்ளல் பேகன் இக்குடியைச் சார்ந்தவன்! இன்று இந்த இடம் தன் பழைய வனப்பையும். வளத்தையும் இழந்து பழநிமலையைச் சார்ந்து உள்ளது.கோவில் வளாகமும் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. பழநிதான் இன்று புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இம்மலைக்கு பொதினி என்பது பழைய பெயர்.  நக்கீரர் பாடியது திருவாவினன் குடியைத்தான். அதுதான் அறுபடைவீட்டில் சேர்ந்தது. 51 அடிகளில் நக்கீரர் இதைப் பாடுகிறார்.

இங்கே நமக்கு ஒர் அற்புதக் காட்சியைக் காட்டுகிறார் நக்கீரர். முருகனைக்காண கூட்டம் முண்டியடித்துக்கொண்டு  நிற்கிறது. ஆனால் சாதாரண மனிதர்களையே காணவில்லை! காத்து, க்யூவில் நிற்பவர்களெல்லாம் தேவர்கள்! ஆனால், அவர்களும் தவத்தில் முதிர்ந்த முனிவர்களுக்கு முதல் நிலை தந்து, அவர்களுக்குப் பின்னாலேயே   நிற்கிறார்கள்! இம்முனிவர்களின் நிலையை 12 அடிகளில் விளக்குகிறார் நக்கீரர்.


சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் முற்புக




 நமது இலக்கியத்திலேயே இத்தகைய விளக்கத்தைக் காண்பது அரிது. முனிவன்  என்பதற்கே இலக்கணம் வகுக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

சீரை தைஇய உடுக்கையர்   == மரவுரியை உடுத்தியவர்கள்
சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் == அழகிய வலம்புரிச் சங்கு போல்  நரைத்த முடியுள்ளவர்கள்
மாசற இமைக்கும் உருவினர் == மாசு,மருவற்ற உடலுடையவர்கள்
மானின் உரிவை தைஇய ==மான் தோலைப் போர்த்தி யிருக்கிறார்கள்
ஊன் கெடு மார்பின் என்பெழுந்து  இயங்கும் யாக்கையர். == மார்பில் சதையே இல்லை. எலும்புகள் புடைத்திருக்கின்றன. உடல் அசையும்போது அவையும் அசைகின்றன'
நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் ==பல நல்ல நாட்களில் உணவை நீக்கி நோற்றவர்கள்
இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் == பகையையும் ஹிம்ஸையையும் மனத்திலிருந்து அறவே  நீக்கியவர்கள்
யாவதும் கற்றோர் அறியா அறிவினர் == நூலறிவினாலே வராத அரிய ஞானம் பெற்றவர்கள்
கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் ==மெத்தக் கற்றவர்களுக்கும் எல்லையாக நிற்கும் தலைமை நிலையில் உள்ளவர்கள்
காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர் ==காமத்துடன் கோபத்தையும் விட்டவர்கள், மெய்க்காட்சி பெற்றவர்கள்
இடும்பை யாவதும் அறியா இயல்பினர் == சிறிதளவு கூட துன்பம் என்பதையே அறியாதவர்கள்
மேவரத் துனிவில் காட்சி முனிவர் == ஞானக்காக்ஷி பெற்ற இம்முனிவர்கள் மனதிலிருந்து வெறுப்பை  நீக்கியவர்கள்.
முற்புக == இத்தகைய முனிவர்கள் முன்னே செல்கிறார்கள்  (அனைவரும் அவர்கள் முதலில் செல்ல வழிவிடுகிறார்கள்.)

முனிவர் என்பதன் முழு இலக்கணத்தையே இங்கே பார்க்கிறோம்! மெய்க்காட்சி பெற்ற திறவோர் ஆதலினாலே, விருப்பு வெறுப்பையும் அதனால் விளையும் இன்ப-துன்ப உணர்வுகளையும் தாண்டியவர்கள். ஆசை, கோபம் ஆகியவற்றை விட்டவர்கள். உலகப் பற்றும், உடற்பற்றும் இல்லாதவர்கள். கீதையில் பகவான் ஞானி, பக்தன், யோகி, ஸ்திதப்ரக்ஞன் ஆகியவர்களின் லக்ஷணங்களை விவரிக்கிறார். முனிவர்களை அங்கு விட்டுவிட்டார். அதனால் இங்கு நக்கீரர் அதை ஈடுசெய்தார் போலும்!இதைப் படிப்பதே நம் மனதை தூய்மை செய்யும்!


இத்தகைய முனிவர்கள் முன்னே செல்ல , பின்னால் வருவது யார்?
தேவர்கள் வரவேண்டும்- அவர்களுக்குமுன் கந்தர்வர்கள் ஆணும் பெண்ணுமாக ஸ்ருதி சேர்த்த யாழுடன் இனிமையாகப் பாடிக்கொண்டே வருகிறார்கள். இதை 10 வரிகளில் சொல்கிறார்.

மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர
..............
மாசில் மகளிரொடு மறு இன்றி விளங்க

இப்போது பெரிய பெரிய தேவர்கள் வருகிறார்கள். முன்னணியில் வருவது யார் யார் என்பதை அவர்களுடைய கொடியே காட்டி விடுகிறது!

கொடுஞ்சிறைப் புள் அணி நீள் கொடிச் செல்வனும்
வளைந்த சிறகுடன் கூடிய  கருடன் இருக்கும் உயர்ந்த கொடியை உடைய திருமால்

................வெள் ஏறு..
உமை அமர்ந்து உறையும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

வெண்மையான ரிஷபக் கொடியை உடையவரும், உமாதேவியாரைப் பாகத்தில் வைத்தவரும் மூன்று மதில்களை எரித்தவருமாகிய சிவபெருமான்

யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்

ஐராவதத்தின் கழுத்தில் ஏறிவரும் செல்வம் மிக்க இந்த்ரனும்

ஆக இவர்கள் வருகிறார்கள் . மும்மூர்த்திகளில் ப்ரம்மாவைக் காணோம்! அங்கே இந்த்ரன் வருகிறான்! இதில்தான் இவர்கள் அனைவரும் ஏன் இங்கு வருகிறார்கள் என்பதன் காரணமே அடங்கியுள்ளது!
ப்ரம்மாவின் அகந்தையின் காரணமாக முருகன் அவனைச் சிறையில் அடைத்துவிட்டான்! ஸ்ருஷ்டித்தொழில் தடைபடவே, மற்ற தொழில்களும் பங்கமுற்றன.உலகம் சரியாக நடக்க முத்தொழிலும் அவசியம். அதனால், ப்ரம்மாவுக்காக பரிந்து பேச இவர்கள் வருகிறார்கள்! அதற்காக , முருகனை வசப்படுத்தும் பொருட்டு,   தவத்தில் சிறந்த முனிவர்களையும், இசைக்கும் கந்தர்வர்களையும் முதலில் அனுப்பிவிட்டு, தாம் பின்னால் வருகிறார்கள்!



நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய 
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரைப் பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர



இந்த உலகை நான்கு பக்கங்களிலும் நான்கு தேவர்கள் காத்து வருகின்றனர்.(இந்த்ரன்- கிழக்கு; யமன்-தெற்கு;வருணன்-மேற்கு; குபேரன்-வடக்கு) அதனால் உலகில் உள்ள நகர்கள் நல்ல நிலையில் விளங்குகின்றன. இவ்வுலகத்தை மும்மூர்த்திகள் பலரும் புகழும் வண்ணம் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். அதில், தாமரையில் தோன்றிய நான்முகன் சிறைப்பட்டதாலே, அவனைக் குறித்து முருகனைக் காண இவர்கள் வருகிறார்கள்!
இவர்களுக்கு தரிசனம் தருவதற்காக முருகன் ஆவினன்குடியிலே எழுந்தருளுவான்!


பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத்
தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன்காணத்


தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்



இப்போது எல்லா தேவர்களையும் நக்கீரர் குறிப்பிடுகிறார்.

பதினொரு மூவர் ==  11x3=முப்பத்து மூவர். பதினொரு (ஏகாதச ) ருத்ரர்கள், பன்னிரு (த்வாதச ) ஆதித்யர்கள், அஷ்ட (எட்டு) வஸுக்கள், இரண்டு அஸ்வினீ தேவர்கள் ஆகியோர்.
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் == 9x2 பதினெண் கணங்கள்.(பிற தேவர்கள், தைத்யர்கள், சித்த, வித்யாதரர்கள். யக்ஷர், கின்னரர், கிம்புருஷர், சாரணர், தாராகணம், நாகர் போன்றோர்)

தேவர்கள் என்றாலே ஒளி பொருந்தியவர்கள் என்று பொருள். இங்கு இத்தனை பேரும் சேர்ந்து வரும்போது , சூர்யனைப்போல் ப்ரகாசித்துக் கொண்டு, நக்ஷத்திரங்களைப்போல் மின்னிக்கொண்டு, காற்றைப்போல கடுகி, நெருப்பின் ஆற்றலுடன் வருகிறார்கள்.இடிபோன்ற முழக்கத்துடன் வருகிறார்கள். முருகனிடம் முறையிட்டு, தத்தம் பங்குகளைப்பெறும் ஆர்வத்துடன் வான வழியே வருகிறார்கள். தலைவனைப் பார்த்து மகிழ்கிறார்கள்.

இவர்கள் குறைகளைக்கேட்டு ஆவன செய்யும் பொருட்டு முருகன்  சிலகாலம் ஆவினன் குடியில் தெய்வானையோடு எழுந்தருளி யிருப்பான்.

கொள்கை மடந்தை என்கிறார் நக்கீரர். கொள்கை என்பது இங்கு கற்பு நெறியைக் குறிக்கும். தெய்வானைத் திருமணம் கற்பு வழி மணம். இங்கே தெய்வானை அம்மையைச் சொல்வதில் ஒரு ஸ்வாரஸ்யம்! இவர்  தேவலோகத்து மங்கை. வருவது தேவர்கள், அதுவும் தங்கள் குறையைச் சொல்லி பரிகாரம் தேட! அவரும் தங்கள் பக்கம் பரிந்து பேசுவார் என்பது குறிப்பு!

அருணகிரி நாதர் திருவகுப்பு என்று சில அரிய பாடல்களை அருளியுள்ளார்.அவற்றில் கொலு வகுப்பு என்பது ஒன்று. அதில் முருகன் தன் தர்பாரில் கொலுவீற்றிருப்பதையும் அப்போது யார்யார் அவரை தரிசிக்க வருகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.தேவர்கள் வருவதையும் அழகாகச் சொல்கிறார்!

அருமறை யவன்முதல் அரிஅரன் மகபதி
அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால்  ...... 1

அருணனு மதியமும் அனல்எழு கனலியும்
அணங்கி னொடுசூழ் கணங்கள் ஒருபால்  ...... 2

வருணனும் நிருதியும் வழியொடு தனதனும்
மகிழ்ந்து மிகவே புகழ்ந்த தொருபால்  ...... 3

வயிரவ ரொடுபடர் உவணரும் உரகரும்
வரங்கள் பெறவே இரங்க ஒருபால்  ...... 4

இருடிகள் எவர்களும் இனியகி னரர்களும்
இணங்கி எதிரே வணங்க ஒருபால்  ...... 5

மடல்புனை புகரொடு வருபதி னொருவரும்
மருங்கின் உறவே நெருங்க ஒருபால்  ...... 11




(இது  கௌமாரம்.காம் மிலிருந்து எடுத்தது.  நன்றி,)

என்று இப்படி வர்ணிக்கிறார்! நக்கீரர் எழுதியதற்கு விளக்கம் போன்று இவை அமைந்துள்ளன!

இவ்வாறு முருகன் திருவாவினன்குடியில் வந்ததைச் சொல்லி, இன்னும் வேறு இடங்களும் உள்ளன  அதாஅன்று என்று தொடர்கிறார் நக்கீரர்.



No comments:

Post a Comment