16. பரிபாடல் -6
திருமாலிருஞ்சோலைமலை
அழகர்கோயில் மண்டபம்.
பரிபாடலில் நமக்குக் கிடைத்துள்ள திருமாலைப் பற்றிய பாடல்களீல் ஆறாவது பாடல் இது. திருமாலைப் பற்றிப் பொதுவாக இல்லாமல் திருமாலிருஞ்சோலைமலை என்னும் அழகர்கோயிலைப் பற்றி இளம்பெருவழுதியார் பாடியது. இது ஓர் அபூர்வமான தலம். காடுசார்ந்தபகுதியானதால், பழைய தமிழ் இலக்கண முறைப்படி, இங்கு மாயோனுக்குக் கோயில். இங்கு குன்றும் இருப்பதால். குன்றின்மேல் குமரனுக்குக் கோயில்! பெருமாள் கோவில், வைஷ்ணவர்களீன் திவ்யதேசம்; முருகன் கோயில், அறுபடை வீடுகளில் ஒன்றாகிய பழமுதிர்சோலை! மாமனுக்கும் மருகனுக்கும் என்ன இணக்கம்! அறியாப் பதர்கள் அல்லல் படுகிறார்கள்!
இரண்டும் சங்க காலத்திலேயே பாடப்பட்டதால் இவற்றின் தொன்மை விளங்கும். சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய நமது பல தெய்வங்களின் வழிபாடும் மிகவும் தொன்மையானது.சரித்திர காலத்திற்கு முற்பட்டது. ஆராய்ச்சி என்று சொல்லி இந்தக் காலத்தில், தாங்களாகவே ஒரு கற்பனைத் தேதியை வைத்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள். என்ன உளறினாலும், எல்லாவற்றுக்கும் பி.ஹெச்.டி தான்!
சிவன், விஷ்ணு, குமரன் வழிபாடு என்று இருந்தாலும், அக்காலத்தில் சைவம், வைஷ்ணவம், கௌமாரம் என்ற பிரிவுகள் இல்லை! இந்தப் பிரிவுகள் மிகப் பிந்திய காலத்தில் தோன்றியவையே. இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது சில தத்துவ வேறுபாடுகள். இவை சில ஆசார்ய புருஷர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. நமது வேதமோ, உபனிஷதமோ, கீதையோ "இதுதான் ஒரே கொள்கை" என்று சொல்லவில்லை! "உள்ளது ஒரே பொருள், அதை எப்படி வேண்டுமானாலும் உணர்ந்துகொள் " என்பதே அவற்றின் அறிவுரை! தத்துவப் பூசல்கள் பின்னால் தோன்றியவை. தத்துவம் என்பது உள்ள பொருளைப்பற்றிய நமது கருத்தே தவிர, உள்ள பொருளே அல்ல!
கடவுள் உலகைப் படைத்தார் , கடவுளே உலகமாகப் பரிணமித்தார் என்றெல்லாம் சாதாரணமாகச் சொல்கிறோம். நமக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை! ஆனால் தத்துவ வாதிகள் சும்மா இருக்கமாட்டர்கள். முதல் காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்றெல்லாம் சொல்லி கடையை விரிப்பார்கள்.பரிணாமம் என்றால் எப்படி- பால் தயிராவது போலவா என்றெல்லாம் கேட்டு குட்டையைக் குழப்புவார்கள்! நமக்கு வேண்டியது கடவுள் என்றால் நாம் ஏன் இந்தக் கொள்கைக் குட்டையில் விழவேணும்? ஸ்ரீ ராமக்ருஷ்ணர், பகவான் ஒருவரே நிஜமான பொருள் அவரைப்பிடித்துக்கொள் என்றார். பகவான் ரமணர், "நீ கடவுளைப் பற்றியும் உலகைப் பற்றியும் இவ்வளவு ஆராய்ச்சி செய்கிறாயே, நீ யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்! "ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு" என்று சொன்னார் பட்டினத்தார். இத்தகைய எளிய தெய்வ நம்பிக்கையே நமக்குப் போதுமானது. திருமாலையே பரம்பொருளாகக் கண்ட நம் புலவர் பரிபாடலில் இதையே சொல்கிறார்.
குன்றத்தின் பெருமை!
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல எனின்ஆங்கு அவை பலவே
இந்த உலகத்தில் நமது அறிவுக்கு எட்டாத, தம் நிலையிலிருந்து பெயராத புகழ்வாய்ந்த பல மலைகள் இருக்கின்றன. சக்கரவாள கிரி முதலிய அம்மலைகளைப் புகழ்பெற்ற பழைய புலவர்கள் ஆய்ந்து பாடியிருக்கின்றனர்.
.............................. பலவினும் 5
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்குடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே குல வரை சிலவினும் 10
அப்படிப்பட்ட மலைகள் பலவற்றிலும், நிலத்தில் உள்ளவரது பசித்துன்பத்தை நீக்கி, பலவகையிலும் அவர்களுக்குப் பயன் தருவதாக உள்ளவை சிலவேயாகும். அச்சிலவற்றிலும், தெய்வங்கள் தாமாகவே விரும்பும் மலர்களைக்கொண்ட தடாகங்களும், மேகம் தவழும் முகடுகளும் கொண்ட சில குலமலைகள் சிறந்தவை யாகும்.
குல வரை சிலவினும் 10
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
அச்சிறந்த குலமலைகளிலும், கடலும் தீயும் போல் வேறுவேறு நிறமும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலும் கொண்ட மாயோனும் பலதேவரும் எழுந்தருளியுள்ள சோலைமலை சிறந்ததாகும்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப
துளஸி மாலையணிந்த திருமால் அருள் புரியாவிடின் நாம் உயர்ந்த மேலுலகத்தை அடைய இயலுமா? பெறற்கரிதான மேலுலகத்தை எளிதில் தரும் திருமால் இருக்கும் சோலைமலையை ஏத்துவோம்!
திருமாலின் பெருமை
அரா அணர் கயந்தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
நாமத் தன்மை நன்கனம் படி எழ 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினைமின் மாந்தீர் கேண்மின் 29
வெண்கடப்பமாலை, மென்மையான உயர்த்திய தலையை உடைய ஆதிசேஷனாகத்தோன்றிய பலதேவரின் திருமார்பை அழகுசெய்வதுபோல, அருவி வீழ்வதனால் சிலம்பாறு அழகு பெறுகின்றது. திரு, சோலை ஆகிய அழகிய அடைகளுடன் வழங்கும் மாலிருங்குன்றமானது, காதல் வயப்பட்ட ஆடவர்க்கும் மகளிர்க்கும் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறது! திருமாலின் புகழ் உலகெங்கும் பரவுகிறது, இந்த ஆச்சரியமான குன்றிலே, இளவெயில் சூழவளரும் இருட்டைப்போல, பீதாம்பரத்தை அணிந்துள்ள திருமால் பலதேவரோடு அமர்ந்திருக்கும் நிலையை எண்ணி, உலக மாந்தர்களே, நீங்கள் தியானம் செய்வீர்களாக! இன்னம் கேளுங்கள்!.
திருமாலிருஞ்சோலைமலையின் வனப்பு
……………………………………………………..கமழ் சீர்
சுனையெலாம் நீலம் மலர சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலரகாய் கனி
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சுனைகளில் எல்லாம் நீலமலர்கள் மலர்ந்திருக்கின்றன. அச்சுனைகளைச்சுற்றி அசோக மரங்களும் மலர்ந்திருக்கின்றன.வேங்கை மரங்களும் காய்கனிகளுடன் விளங்குகின்றன. அதனால் அம்மலை, மாயோனைப்போன்று இனிய நிலயையுடையதாயிற்று.
சென்று தொழுகல்லீர் கண்டு பணிமின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டுமயர் அறுக்கும் காமக் கடவுள்
அங்கு சென்று மாயோனைப் பணிய இயலாதவர்களே! அம்மலையைக் கண்டாவது பணிவீர்களாக! இருங்குன்றென்னும் பெயர் இக்கடல் சூழ்ந்த உலகில் பரவிப் பழம்புகழ் பெற்ற தாயிற்று. நம் மயக்கத்தை ஒழிக்கும் அன்புக் கடவுளைப் பரவுங்கள்!
மக முயங்கு மந்தி வரைவரை பாய
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்டமணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ 40
குருகு இலை உதிரகுயிலினம் கூவ
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது
ஒன்னார்க்கடந்து அட்டான் கேழ் இருங்குன்று 45
குட்டியால் தழுவப்பட்ட மந்திகள் மலைக்குமலை தாவுகின்றன. மொட்டுக்களோடு கூடிய முல்லை மலர்கள், கற்பின் தூய தன்மையைக் காட்டுகின்றன..மயில்கள் அகவுகின்றன. குருக்கத்தி இலைகள் உதிருகின்றன. அம்மரங்களிலிருந்து குயில்கள் கூவுகின்றன. குழலுடனும் தாள ஒலியுடனும் பாட்டொலியும் திகழ்கின்றது. இந்த ஒலிகள் எல்லாம் , அம்மலையில், தன்னை எதிர்த்த அசுரர்களின் உயிரை மாய்த்த மாயோன் போன்றுள்ள இருண்ட குகைகளிலிருந்து இடைவிடாது எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.
அழகர் மலையில் ஒர் ஓடை!
The above three pictures taken from: https://3monthsinindia.wordpress.com.Gratefully acknowlwdged.
திருமாலைப் பரவுவோம்!
தையலவரொடும் தந்தாரவரொடும்
கைம் மகவோடும் காதலவரொடும்
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்
புல்லத் தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் 50
எவ்வயின் உலகத்தும் தோன்றிஅவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்
உங்கள் மனைவியரோடும், தாய், தந்தையரோடும், சிறுகுழந்தைகளோடும், அன்புள்ள சுற்றத்தருடனும் கூடி, அக்குன்றத்தைத் தெய்வமாக மதித்து,, அத்திசை நோக்கித் தொழுது செல்வீர்களாக! திருமால், தன் உந்தியில் உதித்த கமலத்தை நிகர்த்த கண்களை யுடையவன்,; மேகம், இருள், நீல மணி ஆகியவற்றையொத்த நிறத்தை உடையவன்; எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு, அங்குள்ள உயிர்களின் பிறவித்துன்பத்தை ஒழிப்பவன். அவன் அன்புகொண்டு அக்குன்றத்தில் எழுந்தருளியிருக்கின்றான்.
கள் அணி பசுந் துளவினவைகருங் குன்றனையவை
ஒள் ஒளியவைஒரு குழையவை 55
புள் அணி பொலங் கொடியவை
வள் அணி வளை நாஞ்சிலவை
சலம் புரி தண்டு ஏந்தினவை
வலம்புரி வய நேமியவை
வரி சிலை வய அம்பினவை 60
புகர் இணர் சூழ் வட்டத்தவைபுகர் வாளவை
என ஆங்கு
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின்எம் உள் அமர்ந்து இசைத்துஇறை
இருங்குன்றத்து அடி உறை இயைகஎன
பெரும் பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே 66
திருமாலே! நீ பசிய துளசி மாலையை அணிந்துள்ளாய்! கரிய மலை போன்றவன்!காதில் ஒற்றைக் குழையை அணிந்துள்ளாய்! கருடன் விளங்கும் கொடியை உடையவன்! வளைந்த கலப்பையை உடையவன்! தண்டு, சங்கு, சக்கரம்,வில், அம்பு, பராவளை, வாள் ஆகியவற்றை ஏந்தியவன்!
புகழ்மிக்க வேதம் இவ்வாறு அவன் பெருமையைப் புகல்வதால், நாமும் அவ்வாறே அவற்றுடன் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்து, திருமால், பலதேவர் என்னும் இருவரையும் தொழுவோம்! அவ்விருங்குன்றின்கீழ் வாழுமாறு அருள்புரிவாய் என வேண்டுவோமாக!
அழகர்கோயிலின் அழகிய தோற்றம்.
By TAMIZHU (Own work) CC BY-SA 3.0 creativecommons via wikimedia Commons.
இந்தப் பாடலுடன் பரிபாடலில் உள்ள திருமாலைப் பற்றிய பாடல்கள் நிறைவுபெறுகின்றன. தத்துவச் சிக்கல் ஏதும் இல்லாத அழகிய பாடல்கள். திருமாலின் தொன்மை வண்ணம்!
Ruined part of the temple.
No comments:
Post a Comment