Thursday, 12 November 2015

3. திருமுருகாற்றுப்படை-1 திருப்பரங்குன்றம்



3. திருமுருகாற்றுப்படை-1

சங்க இலக்கியம்

இப்போது நமது தமிழில்  உள்ள மிகத் தொன்மையான நூல்  சங்க இலக்கியமாகும். சுமார் 50,60 வருஷங்களுக்கு முன்பு வரை இதைப்பற்றிய ஒரு தெளிவான ,பொதுவான கருத்து இருந்தது. ஆனால்  திராவிட இனவாதமும் ஆராய்ச்சி என்கிற பெயரில் நடக்கும் கூத்துக்களும் மலிந்து விட்ட இக்காலத்தில் சங்க இலக்கியத்தைப் பற்றிப் பலவித கருத்துக்களும் ஹேஷ்யங்களும் நிலவுகின்றன. சங்கம் என்று  ஒன்று  இருந்ததா, அது எத்தனை, அந்தச் சொல்லே எப்படி வந்தது, அதன் காலம் என்ன, அதில் வரும் செய்திகள்  உண்மையா-கற்பனையா, என்று பலவித சந்தேகங்கள். சர்ச்சைகள். 'எந்த நாளிலும் எதிலும் நமக்கு எள்ளளவாகிலும் உள்ளபடிக்கு சந்தேகம் இல்லே, சந்தேகம் இல்லே' என்று ஒரு காலத்தில் ஒரு ஸினிமா  பாட்டு ப்ரபலமாயிருந்தது. ஆனால், இன்று எங்கும் எதிலும்  சந்தேகம்தான்,குழப்பம் தான்! அறிவு ஜீவிகளின் ஆதிக்கமல்லவா!

சங்க இலக்கியமென்பது பதினெட்டே நூல்கள்  அடங்கிய இரண்டு தொகுதிகள்- பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்பன. இவற்றைத் தவிற, 'பதினெண் கீழ்க்கணக்கு' என்று வேறு பதினெட்டு நூல்கள் அடங்கிய இன்னொரு தொகுதியும் உண்டு. ஆனால்  இதை 'சங்கம் மருவிய  காலத்து' நூல்கள் என்று சொல்கிறார்கள். திருக்குறள் இதில் சேர்ந்ததே.

பல புலவர்கள் வெவ்வேறு காலத்தில் எழுதிய  செய்யுட்களை  பின்னால் வந்த யாரோ இவ்வாறு தொகுத்திருக்கிறார்கள். இதை எழுதிய காலமும் தொகுத்த காலமும்  நமக்குச் சரியாகத் தெரியாது. இதைப்பற்றிய பழைய  சங்கதிகளை  தற்கால 'அறிஞர்கள் '  ஏற்றுக்கொள்வதில்லை.

இத்தொகுதிகளில் முதலில் வருவது பத்துப்பாட்டு. அதிலும் முதலில் வைத்து எண்ணப்படுவது  திருமுருகாற்றுப்படை.    நக்கீரர் எழுதிய இந்த நூல்தான் நமக்கு முருகனைப்பற்றித்  தமிழில் கிடைத்திருக்கும் முதல் நூலாகும். 317 அடிகள் கொண்ட இந்த நூலில்தான்  முருகனுக்குரிய சிறப்புத் தலங்களாகக் கருதப்படும்  அறுபடைவீடுகளைப் பற்றி முதன்முதலில்   நாம் தெரிந்துகொள்கிறோம்.

தமிழ் என்று சொன்னாலும் சங்கத்தமிழ் இன்று வழக்கில் இல்லை. அந்தச் சொற்களின்   பொருள்  மாறிவிட்டது. விளக்கம் இல்லாமல் அதைப் புரிந்து கொள்ள முடியாது.நாற்றம் என்றால் நல்ல மணம் என்று பொருள்.இன்று அது துர் நாற்றம் என்ற அர்த்தத்திலேயே வழங்குகிறது. நூல் என்றால்  அது இலக்கணத்தையே குறிக்கும். ஆனால் இன்று அது புத்தகங்களுக்கு பொதுவான பெயராகிவிட்டது.சில சமயம் அர்த்தம் அனர்த்தமாகிவிடும்!   யாராவது ஒரு இளைஞனைப் பார்த்து "கிழவன்" என்று  இன்று சொன்னால் அடிக்க வந்துவிடுவான். ஆனால் சங்கத் தமிழில் "கிழவன்" என்கிற சொல்லுக்கு "தலைவன்" என்று பொருள்! என்றும் இளையவனான முருகனை  "மலை கிழவோனே" என்கிறார்  நக்கீரர். "குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே" என்கிறார் அருணகிரி நாதர். சங்கத் தமிழை இன்று பேச்சு வழக்கில்  நுழைக்கமுடியாது. மேலும் செய்யுள் நடையில் அமைந்திருப்பதால் சொற்களைப் பிரித்துப் பொருள் காண வேண்டும். பழைய இலக்கிய நூல்களில் ஒரு சொல்லுக்கு இந்த இடத்தில் இதுதான் பொருள் என்கிற ஒரு நியதி உண்டு.. அதாவது பல சொற்கள் கலைச்சொல் போலவே வழங்கும். நம் இஷ்டத்திற்கு பொருள் சொல்ல முடியாது. ஒரு சொல்லின் பொருளைச் சரியாகத் தெரிந்துகொள்ள அச்சொல் பயின்று வரும் வேறு பல    நூல்களைக் கற்றிருக்கவேண்டும். இக்காலத்தில் சொற்களைக் கூட்டிப் படிப்பதும் எழுதுவதுமே அரிதாகிவிட்டது. உரை நூல்கள் என்று  வரும் பலவும் பல இடங்களில் மழுப்பலும் சொதப்பலுமாகவே உள்ளன. தன் சொந்த விருப்புக்கு ஒத்துவராத இடங்களை விடுத்தோ , அல்லது மறைத்தோ மாற்றியோதான் உரை எழுதுகிறார்கள். அவர்கள் நடையும் தெளிவாக இருப்பதில்லை, ஏதோ பள்ளிமாணவர்களுக்காக  எழுதுவது போல் இருக்கிறது. பாவம்,அவர்கள் தலையெழுத்து!

சங்கப் புலவர்கள்  ஆழ்ந்த புலமையுடன்  சீரிய  ரஸனையும்  வாய்க்கப்பெற்றவர்கள். ஒரு விஷயத்தைச் சட்டென்று சொல்லமாட்டார்கள். பல உவமைகள், நீண்ட வர்ணனைகள், புலவர்களுக்கே உரித்தான மிகைப்படுத்திச் சொல்லும் குணம்- ஆகியவை மலிந்திருக்கும். இயற்கைக் காட்சிகளில் சொக்கிப்போய் விடுவார்கள்! திருஞான ஸம்பந்தரின் பாடல்களில் கூட நாம் இந்த நடையைப் பார்க்கிறோம்.

திருமுருகாற்றுப்படை இந்தவிஷயத்தில் எல்லோருக்கும் அப்பா, தாத்தா வாகும்! அவ்வளவு  இயற்கை வர்ணனைகள்!

முருகனின் பெருமை சொல்லும் நூல் என்று பார்த்தால், இந்த இயற்கைக் காட்சிகளும் பிறவர்ணனைகளும் நமக்குத் தடையாகவே இருப்பதுபோல் தோன்றும்! ஆனால் இலக்கியம் என்று பார்த்தால், இவை இல்லாமல்  நூல் முழுமை பெறாது! நான் இங்கு இரண்டே விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன்.
1. இந்த இயற்கை வர்ணனைகளை விட்டுவிட்டு, முருகன்  சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று பார்ப்பது.

2. இதில் வரும் முருகனின் நாமங்களைத் தனியே தொகுத்துப் பார்ப்பது.

அறிஞர்கள்  கோபிக்காமல் இருக்கவேண்டும்!



திருப்பரங்குன்றம்




photo by Wiele&Klein, c1890. Public domain.

நக்கீரர் முதலில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிச் சொல்லுகிறர். இந்தப் பகுதியில் 77 வரிகள்  உள்ளன. ஆனால்  திருப்பரங்குன்றம் விஷயம் கடைசி 11 வரிகளில் தான் வருகிறது. முதலில் அவர் முகவுரை போலச்சில பொதுவான வற்றைச் சொல்கிறார். முருகனுடைய புகழைச்சிறிது விளக்கிவிட்டு, ஒரு யாத்ரிகனிடம்,'அப்பா, நீ இப்படிப்பட்ட தெய்வத்தைக் காண  விருப்பம் கொண்டு கிளம்பியிருக்கிறாய்.   இது நல்லதே. உன் எண்ணம் இப்போதே நிறைவேறும் . அவர் இருக்கும் இடங்களை இதோ  நான் சொல்கிறேன்' என்று தொடங்குகிறார்.


நக்கீரர் மதுரைக்காரர், அந்த அபிமானத்தினால் முதலில் தன் சொந்த ஊருக்கு நெருங்கிய  இடத்தைப் பாடுகிறாரோ!

திருப்பரங்குன்றம்  முருகப் பெருமான் தெய்வானை அம்மையாரைத் திருமணம் புரிந்து அருளிய இடம். தேவ ஸேனாபதியாகி அஸுரர்களை ஜெயித்து தேவர்களுடைய இடரைத்தீர்த்து, அவர்களுக்குத் தம் இடத்தை மீட்டுக் கொடுத்தார் முருகவேள். இந்த நன்றியைப் பாராட்டிய தேவர் தலைவன் தன் வளர்ப்புமகளாகிய  தேவஸேனையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார். முருகன் மீண்டும் தேவஸேனாபதியாகிறார்! இந்த மணம் தமிழ் இலக்கண முறைப்படி  கற்பு மணமாகும்."கற்பெனப் படுவது  கரணமொடு  புணர்தல்" என்பது தொல்காப்பியம். குமரனின் வெற்றிக் கொண்டாட்டம், தொடர்ந்து திருமணம் என்று இப்படி மங்கலச் செய்திகளுடன் தன் அறிமுகத்தைத் தொடங்குகிறார் நக்கீரர்.

முருகனின்  அவதாரமே  உலகத்தின் மங்களம் கருதி நிகழ்ந்தது  உயிர்களுக்கு ஆதாரம் உணவு, உணவு உற்பத்திக்கு அதாரம் மழை. மழைக்கு ஆதாரமாயிருப்பது  அந்தணர்கள் செய்யும் யஜ்ஞங்கள். இதை பகவத் கீதை
அழகாகச் சொல்லுகிறது:



अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः।।3.14।।


அன்னாத்  வன்தி பூதானி  பர்ஜன்யாத் அன்னஸம்பவ:
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ.

உயிரினங்கள் உணவிலிருந்து  உண்டாகின்றன. உணவின் உற்பத்தி மழையிலிருந்து ஏற்படுகிறது. மழை வேள்வியிலிருந்து  உண்டாகிறது. வேள்வி  கர்மத்திலிருந்து உண்டாகிறது.

மாதம் மும்மாரி பெய்யும்- இதில் ஒன்று அந்தணர்களின் வேள்விக்காக என்பது தமிழ் மரபு. இந்த வேள்விகளுக்குத் தடை செய்பவர்கள் அஸுரர்கள். இவர்கள் கை ஒருகாலத்தில் ஓங்கி தேவலோகத்தையே பிடித்துக்கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு அதிபதியான இந்த்ரனையும் அங்கிருந்து ஓட்டிவிட்டார்கள். இந்த்ரனோ, திருமாலோ, சிவபெருமானோ  அஸுரர்களை வெற்றி கொள்ள முடியாது  என்று கருதிய அனைவரும் முருகனிடம் முறையிட, அவர் அஸுரர்களை வெற்றி கொண்டு தேவர்களுக்கு வாழ்வளித்தார். இதை அருணகிரி நாதர் அழகாகச் சொல்லுகிறார்:

வெங்காள கண்டர்கைச்சூலமும் திருமாயன் 
வெற்றிபெரு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி 
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீஜயித்தருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே
 தனி ஆண்மை கொண்ட   நெடுவேல்

தேவர்களுக்கு வாழ்வளித்தார்  என்பதைக் கவிகள்  சமத்காரமாகச் சொல்வார்கள். அருணகிரி நாதர்  'இந்த்ராணியின் மாங்கல்யத்தைக் காத்தார்' என்று சொல்கிறர்,அதாவது, இந்த்ரன் பிழைத்தான்!

இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வி நோதன்

சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷாபரண க்ருபாகர ஞானாகர ஸுர பாஸ்கரனே

ஆக, ஆரம்பத்திலேயே நக்கீரர் முருகனின் அவதார ரகசியத்தை சுட்டிக் காட்டுகிறார். அந்தணர்களின் வேள்வியைக்காத்த முருகன், அவர்கள் முறைப்படி "ப்ராம்ம விவாகம்" செய்துகொண்டு விளங்கும் இடம் திருப்பரங்குன்றம்.
[ 'மறையவர் தேயத்து மன்றல் எட்டனுள்' என்பது தொல்காப்பிய சூத்திரம். தமிழ்  நாட்டில் எட்டுவிதமான  திருமண முறைகள்  வழக்கிலிருந்தன. இதில்  களவு மணம் என்பது 'காந்தர்வ விவாகம்' எனப்படுவது. கற்பு மணம்  என்பது 'ப்ராம்மம், ப்ராஜாபத்யம்' என்று வழங்கப்படும். முருகன் வள்ளியை மணந்தது களவு முறை; தெய்வானைத் திருமணம் கற்பு வழி.]

 இந்த முருகனை நினைக்கும்போது முதலில் அவருக்கு முருகனின்  பாதமலர்களே தோன்றுகின்றன. இது உண்மை அடியார்களின் இயல்பு. கடவுளின் கருணைக்கு இருப்பிடமாகவுள்ளது அவன் தாள்கள். பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்குத் தோணியாக உள்ளவை  அவன் தாள்கள். அதனால் தாளை வணங்குவதையே தலையாகக் கொள்வர் அடியார்..நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை  என்பது பரிபாடல்.'ஈசன் எந்தை இணையடி நிழலே' என்பார்  அப்பர் ஸ்வாமிகள். 'ஸ்ரீராம பாதமா நீ க்ருபா ஜாலுனே' என்பார் த்யாகராஜ ஸ்வாமிகள். ஸ்ரீ ராமா, உன் பாத க்ருபையே போதும் என்பது இதன் பொருள். பகவான் பாதம் பட்டாலே நம் தலையெழுத்தே அழிந்துவிடும்- 'அவன் கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே' என்று பாடுகிறார் அருணகிரி நாதர்.

நக்கீரர் முதலில் தாளையே பாடுகிறார்.

 உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு 
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் 


முருகனுடைய  தாள்களைக் காண்பதற்கு வெளிச்சம்தேவை. அந்த வெளிச்சத்தையும் முருகனே தருகிறார். ஆம்! அவன் தாளை வணங்குவதற்கும் அவன் அருள் தேவையல்லவா! ஆனால் அவர் தருவது எத்தகைய வெளிச்சம்! , மேருவை வலமாக வரும் சூரியன் உலகமே உவந்து களிக்கும்படி கடலிலே உதிக்கிறான். அவ்வாறு நெடுந்தூரத்திற்கு  நீக்கமில்லாமல் வீசுகிறது இந்த ஒளி!  அந்த ஒளியே முருகன்! அந்த ஒளியில் நாம்  முதலில் அவன் தாள்களைப் பார்க்கிறோம்.  அப்பா! அவை எப்படிப்பட்ட தாள்கள்! அவை உறுநர் தாங்குபவை-  தன்னை அடைந்தவர்களைக் காப்பாற்றுபவை.அறியாமை யாகிய இருளைப் போக்கும் ஒளியுடையவை.வலிவுடையவை. எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே என்றார் மாணிக்கவாசகர். இங்கு முருகனுடைய ஒளிமிக்க வலுவான தாள்கள் நம்மைத் தாங்குகின்றன!

முருகனுடைய ஒளி சாமான்யமானதா?  ஒரு சூர்யனுடய ஓளியை அதற்கு உவமையாகச் சொல்ல லாமா? அருணகிரி  நாதர் பாடுகிறார்:

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ஒரு சோதி வீசுவதும்

......................................மண நாறு சீரடியே

(சீர் பாத வகுப்பு)
யுகமுடிவுக் காலத்தில் தோன்றும் அந்த இருளைப்போக்கும், ஒப்பற்ற ஒளி. நூறு கோடி சூர்யர்கள் ஏககாலத்தில் உதித்ததுபோன்றது-அதுவே மயிலின்மிசை வரும் முருகனின் அடியின் ஒளியாகும்!



தாளைக் காட்டும் கை!


அவனுடைய கால்களிலிருந்து நம் கண்களைச் சிறிதே உயர்த்தினால் அவனுடைய கைகள் புலப்படுகின்றன. ஆம், நாம் பார்க்கும் தெய்வ  உருவங்களில். ஒருகை நம் பயத்தை நீக்கும் அபய ஹஸ்தம்; மற்றொரு கை அவன்  தாள்களை யல்லவா காட்டும்! இங்கு நாம் தாள்களிலிருந்து கையைப். பார்க்கிறோம். இந்தக் கை அல்லவா நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறது! இந்த வலிவுள்ள கைகள்  எத்தகைய பகையையும் தேய்த்து அழித்துவிடும்,நிர்மூலமாக்கிவிடும் விசாலமான கைகள்.

செறு நர்த் தேய்த்த செல் வுறழ் தடக்கை.

இத்தகைய தாள்களுக்கும் கைகளுக்கும் உரியவன் நம் முருகன் இங்குதான் தெய்வானையை  மணம் புரிந்துகொண்டான். அது மரபுப்படி நிகழ்ந்த கற்புமணம்.

மறு இல் கற்பின் வாள்  நுதல் கணவன்.

தெய்வானை அம்மையார் விண்ணுலகிலிருந்து வந்தவர். நமக்கு விண்ணுலகு அளிப்பவர். விண்ணுலகிற்கும் மேலான முக்தி நலத்தையே அளிப்பவர். அதனால் அவர் 'அமுதத் தெய்வானை திருமுக்திமாது' எனப்படுகிறார். இதை அருணகிரி நாதர் முதல் திருப்புகழிலேயே கூறிவிடுகிறார்:

முத்தைத்தரு பத்தித்திரு நகை அத்தி

மேலும்,  மேகம் தேவசேனையின் வாகனமாகக் கருதப் படுகிறது. அதை நினைப்பதால் நமது வறுமை நீங்கும் என்று  அருணகியார் பாடுகிறார். இது கந்தரந்தாதியில் வருகிறது. அவன் தெய்வமின்னூர் செல்வந்திகழு நமதின்மை தீர்க்கும் .

அவன்  == முருகனது
தெய்வ=  தெய்விகமாகிய
மின்  =     தெய்வயானை
ஊர்  =   ஏரி வருகின்ற்
செல் =   மேக வாகனமானது
வந்து  =  வந்து
இகழும்  = (பிறரால்) இகழப்படும்
நமது   =  நம்முடைய
இன்மை  == இல்லாமை  அனைத்தையும்
தீர்க்கும் == நீக்கிவிடும்
(இந்த உரை வில்லிபுத்தூரார் எழுதியது.)

இந்த முதல் ஆறு வரிகளிலேயே இத்தனை விஷயங்களையும் அடக்கிவிடுகிறார் நக்கீரர்.



A recent view. from: rtbi,in

குறிப்பு:

திருமுருகாற்றுப்படைக்கு உள்ள மிகச்சிறந்த உரை கி,வா. ஜ அவர்கள் எழுதியது. இதில் அவரது பாண்டித்யம் தெரியும்; ஆனால் பண்டிதத்தனம் இல்லை! இதைத் தவிர 'வழி காட்டி' என்ற ஒரு சிறு அறிமுக  நூலையும் 1947ல் எழுதியிருக்கிறார். இதைத்  திரு,வி,க அவர்கள் மிகவும் பாராட்டி சிறப்புரை  தந்திருக்கிறார்கள்.














No comments:

Post a Comment