14. பரிபாடல் -4
from: ykantiques.com
திருமாலின் புராணப் பெருமை
பக்தியின் ஏற்றம்
பாரத நாடு பழம் பெரும் நாடு! இங்கு வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள்! தமிழில் மிகப்பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் மொழியை மட்டுமில்லாமல் வாழ்க்கையையே முறைப்படுத்துகிறது இவ்வாறு ஒரு வரம்புக்குட்பட்டு நடத்தும் வாழ்க்கையே பண்பாடு எனலாம். யாரும் எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று வந்துவிட்ட மேலை நாடுகளிலும் , சில விஷயங்களில் "எடிகட்" என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள்! சிகரெட் பிடிப்பவர்களைப் பாருங்கள்! இரண்டு, மூன்று பேர் சேர்ந்த இடத்தில், மற்றவர்களுக்கு நீட்டிவிட்டே தான் சிகரெட்டை எடுப்பான்!
வழிபாடு, பக்தி என்று வந்தாலும் அதிலும் பல நெறிமுறைகள்! மனதில் பக்தி-ஶ்ரத்தை இருக்கவேண்டியதுதான் முக்கியம், வெளி கட்டுப்பாடுகள் அவசியமில்லை; கண்ணப்பர் இல்லையா, என்கிற மாதிரி பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால். புராணம்- சரித்திரம் காட்டுவது ஒரே ஒரு கண்ணப்பர்தான்! மாணிக்கவாசக ஸ்வாமிகளே கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு தனக்கு இல்லை என்னும்போது, அவர் எவ்வளவு பெரியவர்! நாமெல்லாம் எந்தமூலை! அவர் பெயர் சொல்லவும் நமக்கு அருகதை இல்லை. நாமெல்லாம் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் கூறியபடி 'வைதி ' பக்தி செய்வதுதான் முறை.
நாரதர், சாண்டில்யர் போன்ற ரிஷிகள் பக்திக்கு இலக்கணம் சொல்லியிருக்கிறார்கள். பாகவதத்தில் ப்ரஹலாதன் கூறியதே பொதுவாக மதிக்கப்படுகிறது. அவன் பக்தியில் ஒன்பது நிலைகளைக் காட்டியிருக்கிறான்.
ஶ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஶக்யம் ஆத்ம நிவேதனம்.
ஸ்ரீமத் பாகவதம் 7.5.23
[பகவானது புகழைக் கேட்டல், அதைக் கீர்த்தனம் செய்தல், அதை மனதில் சிந்திப்பது, பாத ஸேவை, அர்ச்சித்தல், சாஷ்டாங்க நமஸ்காரம், தொண்டு புரிதல், நட்பு பாராட்டுதல், வாழ்க்கையையே அர்ப்பணித்தல்]
இதற்கு உதாரணமாக புராணங்களில் பல சரித்திரங்கள் உள்ளன. ராமாயணத்தில் பரதன் இவையனைத்தின் உருவகமாகத் திகழ்ந்தான். ஆஞ்சனேயரும் பலவித பக்தி நிலைகளைக் காட்டியவர்.
தமிழகத்தில், ஆழ்வார்- நாயன்மார் வாழ்க்கையில் பக்தியின் பல பரிமாணங்களைப் பார்க்கிறோம். சைவ சமய குரவர்களில், சம்பந்தரை ஸத்புத்ர வழிக்கும், அப்பரை தாஸ்ய நெறிக்கும், சுந்தரரைத் தோழமை மார்கத்திற்கும், மாணிக்கவாசகரைச் சாந்த/ஞான பாவமாகிய ஆத்ம நிவேதனத்திற்கும் எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியின்.அதீத நிலையில் இருந்தவர்கள்.
இவர்கள் பின்பற்றிய தத்துவ நெறி எதுவானாலும், இவர்கள் வாழ்க்கையில் உள்ள பொதுவான அம்ஸம், இவர்கள் இறைவனைப் பாடிப் போற்றிப் பரவினார்கள் என்பதே. ஶ்ரவணம்- கீர்த்தனம் என்பதற்கு இவர்கள் புதிய இலக்கணம் வகுத்தார்கள். பதிகம் பாடி வழிபடுவதையே வழியாகக் காட்டினார் சம்பந்தர்.
பக்தர்கள் இவ்வாறு பகவானது நாமத்தைப் பாடுவார்கள் என்பதைக் கீதையில் பார்க்கிறோம்.
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।। 9.14।।
நமஸ்யன் தஶ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே.
உறுதியான விரதம் பூண்ட பக்தர்கள் இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். என்னை அடையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் என்னையே த்யானித்துக் கொண்டும் வேறு எதிலும் நாட்டமில்லாத அன்புடன் ஸதா என்னையே வழிபடுகிறார்கள்.
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।। 10.9।।
மச்சித்தா மத்கதப்ராணா போதயன்த: பரஸ்பரம்
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யன்தி ச ரமன்தி ச
இடைவிடாது என்னிடமே மனதைச் செலுத்திய பக்தர்களும் என்னிடம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களுமான பக்தர்கள், என்பால் உள்ள பக்தியினாலே தங்களுக்கிடையே என்னுடைய ப்ரபாவத்தை விளக்கிக்கொண்டும், என் குணங்களையும் கீர்த்தியையும் பேசிக்கொண்டும் மகிழ்ச்சியடைகிறார்கள். என்னிடமே இன்புறுகிறார்கள்.
இக்கருத்துக்களின் தொடர்புடையதாகவே அடுத்த பரிபாடல் பாட்டு இருக்கிறது.
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5
திருமாலே ! ஐந்து இந்த்ரியங்களையும் அடக்கி, (அனைவரிடமும் நட்புணர்வு கருணை, பற்றின்மை, எல்லோரிடமும் நல்லதையே காணல் ஆகிய ) நான் கு குணங்களால் சித்தத்தைத் தூயதாக்கி, மனதை ஒருமுகப்படுத்திய உன் பக்தர்கள் உன்னைத் தொழுதேத்தி உன் புகழை விரித்துப் பாடுகிறார்கள். இத்தகைய புகழ்ச்சொற்களினால் உனக்குப் பெருமை உண்டாவதில்லை ' இதை அறிந்திருந்தாலும், நாங்களும் ஏதோ சொல்கிறோம்! இதைக்கேட்டு நீ நகைத்தால், அதுவும் சரியே!
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;
நீல மணி , அலை ஓய்ந்த கடல், நீருண்ட மேகம், போன்றது உன் கரிய மேனி. அதனின்றும் மாறுபட்ட பொன்னிற ஆடையை உடுத்தியிருக்கிறாய்! உன் கையிலுள்ள சக்கரம், உன்னோடு பகைத்தவர்களின் உயிரைக் கவர்வது.
அவதாரங்கள்.
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
கோபமில்லாத போதும் (இயற்கையிலேயே ) சிவந்த கண்களை உடையவனே!மார்பில் பூசிய சந்தனம் உலர்ந்து போகும் அளவிற்கு உன்மீது பகைமைக்கனலைக் கொண்ட பொல்லாத ஹிரண்யன், உன்னைப் புகழ்ந்த காரணத்தினால் ப்ரஹ்லாதனுக்கு பல துன்பம் இழைத்து வருத்தினான். அப்போதும் ப்ரஹ்லாதன் தன் தந்தைக்கு (அவன் தகுதியற்ற வனாயினும்) உரிய மரியாதை தந்தான்! ப்ரஹ்லாதனிடத்திலே உள்ள அன்பினால் நீ அவனை மார்போடு அணைத்துக்கொண்டாய்!தூணிலிருந்து நரஸிம்ம உருவில் வெளிப்பட்டு, மிகுந்த வலிவுடன் மலைபோன்ற ஹிரண்யன் பார்பில் பாய்ந்து, முரசுகள் இடிபோல் முழங்க, அவன் மார்பை கூரிய நகத்தினால் கிழித்து, அவனுடைய உடலைச் சிதைத்தாய்!
புருவத்துக் கரு வல் கந்தத்தால்தாங்கி,
இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
முன்பொரு காலத்தில் பூமி வெள்ளத்தில் அமிழ்ந்த போது நீ வராஹமாகி. அப்பூமியைக் கழுத்தால் தாங்கி வெள்ளத்திலிருந்து வெளியே எடுத்தாய். இந்த உன் செயல் பலரும் புகழும் உலகத்தின் நடுவிலுள்ள மேருவின் தொழிலை ஒக்கும்.
உலகின் தோற்றமும் ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள 25நின் தண்மையும் சாயலும் திங்கள் உளநின் சுரத்தலும் வண்மையும் மாரி உளநின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உளநின் நாற்றமும் ஒண்மையும் பூவை உளநின் தோற்றமும் அகலமும் நீரின் உள 30நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உளநின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உளஅதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்ஏமம் ஆர்த்த நிற் பிரிந்துமேவல் சான்றன எல்லாம் 35
உன் வெப்பமும் ஒளியும் சூர்யனிடத்து உள்ளன. உன் தண்மையும் மென்மையும் சந்திரனிடத்து உள்ளன.உன் காக்கும் தன்மையும் , கொடையும் மழையிடத்து உள்ளன. உன் தாங்கும் திறனும் பொறுமையும் பூமியிடத்து உள்ளன. உன் மணமும் நிறமும் காயாம்பூவிடத்து உள்ளன. உன் தோற்றமும் பெருமையும் நீரிடத்து உள்ளன. உன் உருவமும் ஒலியும் ஆகாயத்துள்ளன. உன் வருகையும் ஒடுக்கமும் வாயுவிடத்துள்ளன. ஆதலினால், இவையும், அவையும், எவையும், பிறவும் உன்னிடத்திலிருத்து தோன்றி நிலைபெற்று பின்னர் பிரிந்து உன்னையே சேர்கின்றன.
கருடக் கொடி
சேவல் ஓங்கு உயர் கொடியோயே
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்
நின் ஒன்று உயர் கொடி யானை 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்
அவன் மடிமேல் வலந்தது பாம்பு
பாம்பு தொடி பாம்பு முடி மேலன
பாம்பு பூண் பாம்பு தலை மேலது 45
பாம்பு சிறை தலையன
பாம்பு படி மதம் சாய்த்தோய் பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு
கருடன் விளங்கும் உயர்ந்த கொடியை உடையவனே! உன்னுடைய கொடியாக பனை, கலப்பை, யானை முதலியன இருந்தாலும், அவை கருடக் கொடிபோல தனித்து உயர்ந்தவை அல்ல. உன்னுடைய கருடன் விஷமுள்ள பாம்பையும் உண்ணுவான். அவன் வயிற்றில் கட்டப்பட்டிருப்பது பாம்பு. அவன் கையில் உள்ள அணி பாம்பு. அவன் முடிமேல் பாம்பு. அவன் தலையிலும் சிறகிலும் பாம்பே! கொடிமேல் உள்ள அவன் இரையும் பாம்பே .
அளவிட முடியாத பெருமை
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும்கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் 50உள்வழி உடையை இல்வழி இலையேபோற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்மாற்று ஏமாற்றல் இலையே நினக்குமாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும்வேற்றுமை இன்று அது போற்றுநர்ப் பெறினே 55
கொடுமை, கோபம். பக்ஷ பாதம், நடுவு நிலை அகியவை உள்ளவரிடத்தில் நீ அவையவை உள்ளவனாகவும், அவை இல்லாதாரிடத்தில் அவை இல்லாதவனாகவும் இருக்கிறாய்!பகைவர் உயிரைப் பறித்தலும், நட்பினர் உயிரைப் பாதுகாத்தலுமாகிய இத்தொழில் உனக்கு இல்லை! ஏனினில் உனக்குப் பகைவர் என்றோ வேண்டியவர் என்றோ யாரும் இல்லை! உயிர்களின் இயல்பினாலே பகையும் நட்பும் இருப்பது போல்தோன்றினாலும் உனது இயல்பால் அவை அமையவில்லை!
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையேகோள் இருள் இருக்கை ஆய் மணி மேனிநக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியைபொன்னின் தோன்றிய புனை மறு மார்பநின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60அன்ன நாட்டத்து அளப்புஅரியவை
அன்பர்கள் உன்னை எந்த உருவத்தில் கருதுகிறார்களோ அதைத்தவிர உனக்கென்று வேறு உருவம் இல்லை! நீல மணீ போன்ற மேனியில் மணமுள்ள துளப மாலையை அணிந்தவனே! பொன் போலத்தோன்றும் ஸ்ரீவத்ஸத்தை யுடைய மார்பனே! உன் உந்தியில் தோன்றிய தாமரையை ஒத்தது உன் கண். நீ அளவிடுதற்கு அரியவன்.
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
வீடு பேற்றை அளிக்கும் திறலால் உன் தாளிணைகள் உன்னைவிடச் சிறந்தவை !
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;அன்னோர் அல்லா வேறும் உள; அவைநின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
நீ பகவான் என்ற தன்மையை உடையவன். இன்னும் பல்வேறு சிறப்புக்கள் உன்னிடம் உள்ளன. அவை உன்னையொத்த அந்தணர்கள் ஓதியுணர்ந்த உபனிஷதத்தின் பொருளாக உள்ளன. (எம் போன்றவர்கள் அறிய இயலுமா?)
[பிராமணர்களைக் குறிக்க பல சொற்கள் உள்ளன. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. அந்து என்பது அந்தம் அல்லது இறுதி. வேதத்தின் கடைப் பகுதியாகவும், அதன் முடிந்த முடிபாகவும் உள்ள பகுதி உபனிஷதம். இதையே 'வேதாந்தம் ' என்பர். வேத அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து, சமூகத்திற்கு தம் கடமைகளை ஆற்றி முடித்த முதிர்ந்த நிலையில் வேதாந்த விசாரத்தில் ஈடுபட்டு அவ்வழியில் ஒழுகுவர். பெரும்பாலும் த்யானத்திலேயே நிலைத்தவர்கள். இவர்களே அந்தணர்கள். இத்தகையோரே இறைவனைப்பற்றி ஏதோ அறிய முடியும் என்பது குறிப்பு.
பல நாமங்கள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும்
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்
எவ் வயினோயும் நீயே நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவலாளனும் நீயே
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே 73
ஆல மரத்திலும், கடப்ப மரத்திலும், ஆற்றிடையே உள்ள தீவிலும்,, குன்றிலும், பிற இடங்களிலும் நிறுவியுள்ள பல தெய்வங்களாகச் சொல்லப்படும் பல திருநாமங்களும் உன்னுடையவே! எங்கும் நீயே நிறைந்திருக்கின்றாய்! உன் பக்தர்கள் உன்னைக் கையினால் தொழும்போது, அக் கைகளில் பிடிபடுபவனும் நீயே! (அவர்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றாய் ) பக்தர்களுக்கு ஏவல் செய்பவனாகவும் இருக்கின்றாய்! அவர்கள் செயலுக்கு பாதுகாப்பாக இருப்பவனும் நீயே!
Banyan tree.
இப்பாடலில் வரும் கருத்துக்கள் எல்லாம் கீதையைத் தழுவியே இருக்கின்றன. அவதாரங்கள் பற்றிய விஷயங்கள் ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் வருகின்றன.
இதைப் பாடியதும் கடுவன் இளவெயினனார் தான்.
இப்பாடலில் வரும் கருத்துக்கள் எல்லாம் கீதையைத் தழுவியே இருக்கின்றன. அவதாரங்கள் பற்றிய விஷயங்கள் ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் வருகின்றன.
இதைப் பாடியதும் கடுவன் இளவெயினனார் தான்.
No comments:
Post a Comment