Monday, 16 November 2015

10. திருமுருகாற்றுப்படை-8. தெய்வம் தெளிவோம்!



10.திருமுருகாற்றுப்படை-8


பழநி  மலை

தெய்வம் தெளிவோம்!

ஒரு க்ஷேத்திரம் எப்படி உருவாகிறது? இதைச் சொல்வது கஷ்டம். காசி, ராமேஶ்வரம், பத்ரி-கேதார், ப்ரயாகை போன்ற இடங்கள்  தொன்றுதொட்டே புனிதமாகக் கருதப்படும் இடங்கள். சில இடங்கள் ரிஷி,முனிவர் தவம் செய்ததால் பெருமையும் புனிதமும் பெறுகின்றன; ஆனால், அவர்கள் அந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கே ஏதோ காரணம் இருக்கும். பகவான் ரமணர் அருணைக்கு வந்தது, அந்த கிரியே பரம் என்பதால்! ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்ததால் அதற்கு ஆன்மிக உலகில் பெருமை வந்தது.ஆனால், அதுவே முன்பு   அகஸ்தியர் இருந்த இடம் என்கிறார்கள்! ஸ்ரீ ராமக்ருஷ்ணர் சாதனை புரிந்து வாழ்ந்த இடம் என்பதால் தக்ஷிணேஶ்வரத்திற்கு மதிப்பு வந்தது. ஆனால், ராணி ராஸமணி அம்மையார்  எப்படி அந்தக்கோயிலைக் கட்ட நேர்ந்தது, கங்கைக் கரையிலுள்ள அந்த இடத்தை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதையெல்லாம் அறிந்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்; அந்த இடமும் இயற்கையிலேயே புனிதம் வாய்ந்தது என்பது புரியும். க்ஷேத்ரம் என்பது ஒரு அற்புதம் தான்! மனிதன் கட்டடம் கட்டலாம், கோயிலெழுப்பலாம் ஆனால் க்ஷேத்ரம் ஆவது அவன் கையில் இல்லை!

சில இடங்கள் சில சமயங்களில் ப்ரலமாகின்றன. குருவாயூரும் ஸ்ரீ நாராயணீயமும் நம்காலத்திலேயே ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராமதீக்ஷிதரின் உபன்யாசத்தினால் ப்ரபலமடைந்தன. சில சினிமா ப்ரபலங்கள் போகத்தொடங்கியதும், சபரிமலை யாத்திரையும் மிகவும் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. திருவண்ணாமலை கிரிவலமும் இப்படியேதான். இப்போதெல்லாம் ஜோஸ்யப் பத்திரிகைகள் சில இடங்களைப் பரிகாரத்தலங்கள் என்று எழுதுவதால் அவையும் ப்ரபலமடைந்து வருகின்றன. நாம் ஸ்த்ல புராணங்களைப் பார்த்தால், ஒவ்வொரு இடமும் ஏதோ ஒரு காரணத்தினாலேயே ஏற்றம் பெற்றது என்பது தெரியும்.

இதையெல்லாம் தூக்கியடிக்கும் விஷயமும் நடந்தது. 1975ல் "ஜய் ஸந்தோஷி மா" என்று ஒரு ஹிந்தி சினிமா வந்தது.முழுதும் கற்பனைக்கதை! எந்தவித சரித்திர, சாஸ்திர ஆதாரமும் கிடையாது! ஏதோவொரு அனாமதேய ஆசாமி, முன்பின் தெரியாத நடிகர்களையும் ஹைதர் காலத்து 'ஸ்டார்' களையும் வைத்து, இரண்டாந்தர ஸங்கீதக்காரர்கள், பாடகர்கள் என்றுபோட்டு  குறைந்த செலவில் எடுத்த படம். பெரிதாகப் பேசப்படும் "ஷோலே"   "தீவார்" என்ற படங்கள் வந்த அதே சமயத்தில் ரிலீசாகி, அவற்றிற்கு ஈடாக ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. ஆனால் அதைவிடப் பெரிய விஷயம், இந்தப் படம் வந்தவுடன், 'ஸந்தோஷி மாதா' என்ற புதிய தெய்வம் உருவம் பெற்று, ஒரு பெரிய தெய்வீக இயக்கமே வடதேசம் முழுவதும் பரவியது! புதிய கோவில்கள் எழுந்தன; உபவாசம், விரதம் ஆகியவை தோன்றிப் பரவின. பக்தர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவே, புதிய 'புராணக்' கதைகளும் உருவாயின! பலரும் இன்றும் ஸந்தோஷி மாதாவை வழிபடுகிறார்கள்! பயனடைவதாகச் சொல்கிறார்கள்! இதில் தெய்வீக அம்சம் இருக்கிறதோ, இல்லையோ,ஏதோ ஒரு விசேஷத்தன்மை இருக்கவே செய்கிறது! இதை "Occult" சக்தி என்பார்கள்.

இதில் முக்கியமான அம்ஸம், இந்த மாதாவின் எளிமை! மிக எளிய வழிபாட்டினாலேயே மகிழ்ந்து, பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து அவர்களுக்கு ஸந்தோஷம் அளிக்கக் கூடியவர் என்று காட்டினார்கள்!

அதே சமயம், பெரிய பெரிய கோவில்கள்  இருக்கும் இடங்கள் எல்லாம் க்ஷேத்திரங்களாகிவிடுவது இல்லை!  தஞ்சைப் 'பெரிய ' கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் க்ஷேத்திரமாகவில்லை! ஏதோ சிற்பம். சிலை, கலை என்று சொன்னாலும் அங்கெல்லாம் தெய்வ சான்னித்யமில்லை!

ஏனோ தெரியவில்லை, முருகனுக்கென்று பெரிய கோயில் எதுவும் அமையவில்லை! ஈஶ்வரனுக்கோ, பெருமாளுக்கோ இருப்பது போன்ற ப்ரம்மாண்டமான  கோயில் முருகனுக்கு இல்லை! ஆனால்  நக்கீரர் சொன்ன இடங்கள் அத்தனையும் முருகன் சான்னித்யம் உள்ள இடங்கள்! கடற்கரை, குன்று, காடு,சோலை,மரம், மலை, சந்தி, சதுக்கம் என்று எந்த இடத்திலும் அவன் இருப்பான்! வழிபடும் இடத்தில் உருப்பெற்று விடுவான்! எப்படி வழிபட்டாலும்- வைதீக ஆராதனையானாலும் சரி,ஆர்வலர் கூடிப் பாடினாலும் சரி, ஆடு வெட்டி வெறியாடிக் கொண்டாடினாலும் சரி, அவன் வந்து விடுவான்! நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்: முகன் அமர்ந்து ஏத்தி, கைதொழூஉப் பரவி, காலில் விழுந்து வணங்கவேண்டியதுதான்! அவனை ஏத்துவதற்கு வசதியாக சில நாமங்களையும் கொடுத்துள்ளார் நக்கீரர். திருமுருகாற்றுப்படையில்  60 நாமங்கள் உள்ளன என்று காட்டியுள்ளார் கி.வா.ஜ அவர்கள்!

முருகன் நாம மாலை!

அகர வரிசையில் அந்த நாமங்களை இவ்வாறு பார்க்கலாம் :-


அந்தணர் வெறுக்கை                அறிந்தோர் சொன்மலை
அறுவர் பயந்த செல்வன்                ஆல்கெழு கடவுட் புதல்வன்
ஆறமர் செல்வன்

இசைபேராளன்                                      இயவுள்

கச்சினன்                                                  கழலினன்
காந்தட் கண்ணி  மிலைந்த சென்னியன்
குரிசில்                                                        குழலன்
குறிஞ்சிக் கிழவன்                                   குறும்பல்லியத்தன்
கொற்றவை சிறுவன்                             கோட்டன்

சிவந்த ஆடையன்                                    சூர்மருங்கறுத்த மதவலி
செச்சைக் கண்ணியன்                             செய்யன்
செயலைத் தண்தளிர் துயல்வரும்  காதினன்
செருவில் ஒருவன்                                     செல்வன்
செவ்வேற்  சேய்                                          சேய்
சேவலங்கொடியோன்

தகரன்                                                              தொடியணிதோளன்

நசையுனர்க்கு ஆர்த்தும்  இசை பேராளன்
நில நேர்பு துகிலினன்                                 நூலறி புலவன்
நெடியன்                                                           நெடுவேள்

பல்லியத்தன்                                                  பழையோள் குழவி
புரையுனர்  இல்லாப்  புலமையோன்
புலவரேறு                                                          புலவன்
பெருஞ்செல்வன்                                            பெரும்பெயர் இயவுள்
பேராளன்                                                            பொருநன்
பொருவிறல் மள்ளன்                                    பொலம்பூட்சேய்
போர்மிகு பொருநன்

மங்கையர் கணவன்                                        மஞ்ஞையன்
மதவலி                                                                  மராத்துத் தார் புரளும் மார்பினன்
மலைமகள் மகன்                                              மள்ளன்
மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன்
மாற்றோர் கூற்று
முருகன்                                                                  முருகு
மைந்தரேறு

வாணுதல் கணவன்                                           வானோர் தானைத்தலைவன்
வேல்கெழு தடக்கைச் செல்வன்                   வேள்.

அறுமுகனுக்குகந்த அறுபது நாமங்கள்!
இந்தப் பொருளில் வழங்கும்  ஸம்ஸ்க்ருத நாமங்களை  நாம் ஸஹஸ்ர நாமத்தில் பார்க்கலாம்.




குறிஞ்சி வாழும் மறவர்  நாயக
ஆதி விநாயகர் இளைய நாயக  காவிரி நாயக
வடிவின் நாயக ஆனைதன் நாயக
எங்கள் மானின் மகிழும் நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயகனார் குரு நாயக
ஆறு முகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


ஸ்கந்த ஷஷ்டி கொண்டாடப்படும் இந்த சமயத்தில், நாமும் அவன் நாமங்களை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து ஆனந்தம் அடைவோம்!

No comments:

Post a Comment