Wednesday, 18 November 2015

12.பரிபாடல்-2. திருமால் மஹிமை



12.பரிபாடல் -2



திருமால் மஹிமை.

உலகின்  தோற்றம்

இந்த உலகம் எப்போது  தோன்றியது?
உலகில் உள்ள ஒவ்வொரு குடியினரிடையேயும் உலகத்தின் படைப்பு பற்றிய ஒரு கதை/நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், யாரும் இதற்கு ஒரு காலத்தை நிர்ணயிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் மட்டும் இதற்கு விலக்கு! பைபிளில் வரும் கதைகளின் அடிப்படையில் அவர்கள் கணக்குப் போட்டவண்ணம் இருந்தனர். 1650ல், ஜேம்ஸ் உஷர் என்னும் பிஷப், ஏதோ கணக்குப்போட்டு, இந்த உலகம்  கி.மு. 4004ம் வருஷம் அக்டோபர் மாதம் 23ம் தேதி காலை 9 மணிக்கு 'உண்டாக்கப்பட்டது' (created)என்றார். இதை அம்மதத் தலைவர்கள்  அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.இது அவர்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. நாம் பெரிதும் கொண்டாடும் விஞ்ஞானியான ஐஸக்  ந்யூட்டன், பைபிள் முழுக்க முழுக்க உண்மை என்ற தீவிர நம்பிக்கை வைத்தவர். அவர், உலகம் உண்டாகியது கி.மு.4000 என்றார்- நான்கே வருஷங்கள் வித்தியாசம்! உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்கர்கள் இதை இன்னமும் நம்புகிறார்கள்!

இதன் பிறகு,  விஞ்ஞானம் வெகுவாக  வளர்ந்து, பைபிள் கொள்கை சுத்த முட்டாள்தனம் என்பது நிரூபணமாகிவிட்டது! இன்று விஞ்ஞானிகள் உலகின் வயதை 4.54 பில்லியன்  (454 கோடி )ஆண்டுகள் என்று ரேடியோமெட்ரிக் முறையில் மதிப்பிடுகின்றனர்.

ஹிந்து மதம் ஆதிமுதல் இதைப்பற்றிய திட்டமான கருத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ப்ரபஞ்சம் அநாதி- அதற்கு  ஆரம்பம்  என்று ஒன்று கிடையாது, இறுதி முடிவென்பதும் இல்லை! இது  தோன்றும், நிலைபெறும்,  மறையும்! பின், திரும்பவும் தோன்றும் ! இவ்வாறு இது தொடர்ந்து நடைபெறும்! ['ஆதி அந்த மில்லாத கால வெள்ளம்' என்று 'கல்கி' பொன்னியின் செல்வன் ஆரம்பத்தில் எழுதினார்!] இதில் ஒவ்வொரு தோற்றத்தின் போதும் ஒரு ப்ரம்மா வருவார். அவரது பகல் 432 கோடி வருஷங்கள் (4.32 பில்லியன் வருஷங்கள்,)அதே அளவு அவரது இரவு! பிறகு, மீண்டும் தோற்றம்!  இதைக்கண்டு, கார்ல் ஸாகான்  Carl Sagan போன்ற விஞ்ஞானிகள் அசந்துபோய் விட்டனர். அவர்கள் கணக்கு 4.54. நம் கணக்கு 4.32! (விவரங்களை, ஆங்கில விக்கிபீடியாவில் பார்க்கவும். என் blog 'ramananju.blogspot.in/2015 ல் 3.11.2015 இதை சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்)

மனிதன் பிறந்து மடிவது என்பது மட்டும் இல்லை, இந்த ப்ரபஞ்சமே இவ்வாறு தோன்றி மறையும் என்று தைரியமாகச் சொன்னவர்கள் ஹிந்துக்கள். ஊழிகள்-யுகங்கள் அடுக்கடுக்காக வந்துகொண்டேயிருக்கும்! மனிதனால் இதன் காலத்தை அறியவே முடியாது என்பது நமது கருத்து. இது இந்தியா முழுவதற்கும் பொதுவான கருத்து! இதை அடுத்த பாடலிலே கீரந்தையார் என்ற புலவர் பாடுகிறார்!

வராஹ அவதாரம்!



தொல் முறை இயற்கையின் மதியொ
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழி ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்



திருமாலே!மண்ணுலகமும் விண்ணுலகமும் பாழ்பட்டு,  சந்திரனும்  சூரியனும் கெடுகின்றன. அதனால் அழகிழந்த வானமும் கெட்டு ஊழிகள் முறையே கழிகின்றன. அதன்பின் ஆகாய ஊழியும். காற்றுத் தோன்றிய ஊழியும், அதிலிருந்து தீயும், அதிலிருந்து மழையும், அவற்றிலிருந்து நிலமும்  தோன்றிய ஊழிகளுமாக அளவிடமுடியாத காலம் கழிகின்றது.
அதன்பின், உயிர்கள் இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் நீ வராகத்  திருக்கோலம் கொண்டு பூமியை எடுத்தாய்! அதனால் இக் கல்பம் வராக கல்பம் என்னும் பெயர் பெற்றது.
அந்தப் பெயர், உன் செயல்களுக்குள் ஒன்றை மட்டுமே உணர்த்தும்!
இவ்வாறு நீ செய்த பல செயல்களுக்கும் உரிய அனேக கல்பங்கள் யாராலும் அறியப்படாதன.அத்தகைய பெருமையை உடைய ஆழி முதல்வனே! உன்னைத் தொழுகின்றோம்

இவ்வாறு, ஊழிக்காலத்தில் ஐம்பெரும் பூதங்களும் தத்தம் நிலையில் திரிந்து உலகின் இயக்கம் ஒடுங்கும்; பின்னர் மீண்டும் இயக்கம் தொடங்கும் என்ற கருத்து ஹிந்து சமயப்பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவானது. மாணிக்கவாசக ஸ்வாமிகள் பாடுகிறார்:

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எக்காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த  உன் அடியேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமுமாய்  அவைகாத்து எம்மைக் காப்பவனே.


ஆண்டவனே! ஐம்பெரும் பூதங்களும் ஒரு காலத்தில் ஒடுங்கும். இவ்வாறு தோற்றமும் சம்ஹாரமும் உனது திருவிளையாடலாகும்.ஐந்தொழில் புரியும் கால காலனாக நீயே இருக்கிறாய். எங்கள் தீவினையை ஒழிக்கும் மஹாகாலனாகவும் நீ இருப்பாயாக! தீவினையிலிருந்து எங்களைக் காப்பாயாக.

"காலோஸ்மி  லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்தோ" உலகங்கள் அனத்தையும் அழிப்பதற்காக பெருகிவந்துள்ள காலனாக இருக்கிறேன்  என்று கீதையில் பகவான் சொல்கிறார். [11.32. முதன்முதலாக அணுகுண்டு சோதனை  செய்தபோது, கீதையைப் படித்திருந்த  அணுவிஞ்ஞானி  ஒப்பன்ஹைமர் இந்த ஶ்லோகத்தையே  மேற்கோள் காட்டினார்!]

ஊழிக்காலம் சென்றபின், அந்த இறைவனே உயிர்களைப் படைத்துக் காக்கிறார். மீண்டும் பீடு உயர்வு ஈண்டி என்கிறார்  கீரந்தையார்.

இங்கு கீரந்தையார், இப்பொழுது நடக்கும் கல்பத்தைப் பற்றிச் சொன்னார். வராக அவதாரத்தில் எடுத்தபடியால் இதற்கு (ஸ்வேத ) வராக கல்பம் என்று பெயர். இதை ஜயதேவர்  அஷ்டபதியில் பாடினார்.




वसति दशनशिखरे धरणी तव लग्ना

शशिनि कलङ्ककलेव निमग्ना

केशवधृत सूकररूप 

जय  जगदीश हरे ॥३॥


வஸதி தஶன ஶிகரே தரணீ தவ லக்னா
ஶஶினி களங்க-களேவ நிமக்னா
கேஶவ த்ருத-ஸூகர ரூப
ஜய ஜகதீஶ ஹரே


ஜகத்திற்கு நாதனான ஹரி!வராஹ ரூபமெடுத்தான்.  ஜலத்திற்குள் அமிழ்ந்திருந்த இந்த பூமி அவன் கொம்பின் நுனியில் நின்றது! சந்திரனில் ஒரு புள்ளியைப்போன்று தோன்றியது. கேஶவா! உனக்கு வெற்றி யுண்டாகட்டும்!






சிறியவனே பெரியவன்!


நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20

இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதலும்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை

நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.   27




பலராமனின் சித்திரம். Public Domain.----------->


ங்குபோல் வெண்மை நிறமுடைய பலதேவனுக்கு  பிறப்பினால்  நீ இளையவன் ஆகிறாய் என்பார்கள். ஆனால் உன்  பெருமையை நினைப்பவர்களுக்கு , காரிருள் போன்ற ஆடையும் பனைக்கொடியும் உடைய அவனுக்கு நீ மூத்தவன் ஆகிறாய்!குற்றமற்ற கருத்துடைய ஞானிகள் ஆராய்ந்தறிந்த  மாறுபாடற்ற வேதத்தை அறிந்தால், நீ உயிர்கள் அனத்திலும் அந்தர்யாமியாய்  விளங்குகிறாய் என்பது விளங்கும்.இதையெல்லாம் நன்கு அறிந்துகொண்டால் இவை பல நிலைகளில் தோன்றும் உன் புராதனப் பெருமை என்பது தெரியும்.

[வடு இல் கேள்வியின் உயர்ந்தோர் என்னும் தொடர் மிக அருமையானது! "நிறை மொழி மாந்தர்" என்னும் தொல்காப்பிய மொழியை நினைவுபடுத்துகிறது]


ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்திய
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35


உனது திருமார்பில் உள்ள ஆபரணங்கள்  வானவில்லைப் போன்று விளங்குகின்றன. அவற்றின் நடுவில் திகழும் மதாணி, சந்திரன் போலத் திகழ்கிறது. சந்திரனில் உள்ள மறுவைப்போல உன் மார்பில் திருமகள் வீற்றிருக்கிறாள். நீ  ஆதி வராஹமாகி நீரில் மூழ்கியிருந்த பூமிதேவியை உன்கொம்பில் தாங்கித் தூக்கியெடுத்த போது,ஒரு புள்ளி அளவுகூட அது வருந்தவில்லை. இவ்வாறு விஷயம் தெரிந்தவர்கள்  சொன்னாலும்,உன் சிறப்பை முழுதும் கூறியதாக ஆகாது!


 கண்ணனும் அவன் அண்ணனும்! ISKCON  நின் அழகிய படங்களில் ஒன்று!
 நன்றி.

திருமாலின் வெற்றிச் செயல்கள்



ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40

தலை இறுபு தாரொடு புரள-
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்-
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.


உன்னைக் கோபத்துடன் எதிர்த்துவந்த  வலிய அஸுரர்கள் மடிய  முழங்கிய உன் சங்கின் ஒலி இடியோசை போன்றது.புயல் போன்று  எழுந்தது.அவர்கள் காது செவிடு படவும், தலையில் இருந்த கிரீடங்கள் ஆடவும், அவர்கள் கால்கள் வலுவிழக்கவும் நீ அவர்கள் கொடியை அழித்தாய்.
போரில் பகைவரை மாய்க்கும்  பெரியோய்! நீயே அவர்களின் இன்னுயிரைக் கவர்ந்தாய்.  நீ ஏந்திய சக்ராயுதம் அஸுரர்களின் தலையைப் பனங்காய்களைப்போல் உருட்டித் தள்ளியது. அவ்வாயுதம் அவர்களின் உயிரைப் பிடுங்கும் யமன் போன்றது. அதன் நிறம் நெருப்பின்  பொன்னிற ஜ்வாலை போன்றது.
திருமால் பெருமை


நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55
சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.




உனது திருமேனி நீலமணியைப் போன்று ஒளிர்வது. உன் கண்கள் தாமரையை ஒக்கும். உனது வாய்மை தப்பாமல் வரும் தினம் போன்றது. உனது பொறுமை பூமி போன்றது. உனது அருள் திறம், நீர் நிறைந்த மேகம் போன்றது. நாவன்மை மிக்க அந்தணர் ஓதும் வேதத்தின் பொருளாக  நீ இருக்கிறாய்.  நாங்கள் இவ்வாறு கூறிய அனத்தும் நீயே; மேலும் பிறவாகவும் இருக்கின்றாய்.

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி; 65

பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

சிவந்த அலகுடைய  கருடக் கொடியை உடைய எம் பெருமாளே! நீயே வேதங்களின் பொருளாக இருக்கின்றாய்!
 வேள்வி நடத்துவிக்கும் ஆசானின் உரையாக நீ இருக்கிறாய்.  உயர்ந்த வேதமந்திரங்களுடன், பலவித சடங்குகள் நிறைந்து, பெரிதாக வளர்க்கப்படும் ஹோமத்தீ, அங்குள்ள பசு, அது கட்டப்பட்டுள்ள யூபம், அங்கு படைக்கப்படும் உணவு (ஆஹுதி?) ஆகிய யாவும் அந்தணர் காணுகின்ற உனது வெளிப்பாடே யாகும்.  இதைக்கண்டு கடவுள் இல்லை என்பாரும் உடன்படுவர்!

இங்கு, பின் வரும் கீதை வாசகம் ஒப்பு நோக்கத் தக்கது!


अहं क्रतुरहं यज्ञः स्वधाऽहमहमौषधम्।

मंत्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम्।।  9.16।।


இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேணும்.

அஹம் க்ரதுர்  அஹம் யஜ்ஞ:  ஸ்வதா  அஹம்  ஔஷதம்
மன்த்ரோ அஹம்  அஹமேவ ஆஜ்யம் அஹம் அக்னி: அஹம் ஹுதம்.

க்ரது  =  ஒரு குறிப்பிட்ட வேள்விச் சடங்கு
யஜ்ஞம்   == வேதமுறையிலான வேள்வி
ஸ்வதா  == பித்ருக்களிக்கப்படும் உணவு
ஔஷதம்  == எல்லா வகையான காய்கறி உணவும், மருந்துக்கான மூலிகைகளும்
மன்த்ரம் == ஆஹுதி அளிக்கும்போது மொழியப்படும் வேத வாக்யம்
ஆஜ்யம்   == ஆஹுதிக்கான நெய்யும், மற்ற பொருள்களும்.
அக்னி    ==ஹோமத்தீ
ஹுதம்    == ஆஹுதி

யஜ்ஞ நாராயணன்  என்பது வழக்கு, யஜ்ஞத்தையே இறைவனின் ஸ்வரூபமாகப் பார்க்க வேண்டும். 
இந்தப் பாடலில் இவ்வாறு காணுகிறார்கள் அந்தணர்கள் என்கிறார் கீரந்தையார்.

கீழ்வரும் கீதை ஶ்லோகத்தையும் பார்க்கவும்:

ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।

ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना।। 4.24।।


ப்ரஹ்மார்ப்பணம்  ப்ரஹ்ம ஹவிர்  
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ  தேன கன்தவ்யம்
 ப்ரஹ்ம் கர்ம ஸமாதினா

வேள்வியில் உபயோகிக்கும் ஸ்ருவம் என்னும் ஹோமக்கரண்டி  முதலான உபகரணங்களும் ப்ரஹ்மம்தான்.ஹோமம் செய்யப்படும் த்ரவ்யமும் ப்ரஹ்மம்தான். ப்ரஹ்மமேயான கர்த்தாமூலம் ப்ரஹ்மமாகிய அக்னியில் செய்யும் ஆஹுதியென்ற செயலும் ப்ரஹ்மம் தான். ப்ரஹ்மம் ஆகிய அக்கர்மத்தில் ஊன்றி  நிற்கின்ற அவன் அடையும் பலனும் அந்த ப்ரஹ்மமேதான். (அக்கர்மத்தைப் ப்ரஹ்மமாகவே கருதும் கர்த்தா ப்ரஹ்மத்தையே அடைகிறான்).

எல்லாமே பகவான்தான் என்ற நினைப்பில்லாமல் செய்யப்படும்  யாக யஜ்ஞங்கள் வெட்டிச் செயலேயாகும்.

 எவ்வளவு நுணுக்கமாக இதைக் கீரந்தையார் அறிந்திருக்கிறார்  என்பது இங்கே தெரிகிறது!

வேண்டுகோள்



பல் புகழும் பரவலும்
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்

தேவர்களுக்கு உணவாகிய அமிர்தத்தைக் கடைந்து கொடுப்பது என்று நீ மனதில்  நினத்த அப்போதே அவர்களுக்கு குன்றா இளமையும், வலிமையும்,மரணமிலாத் தன்மையும் வந்தெய்தின! உன் புகழ் பார்முழுதும் பரவியது.


 riseofhindustan.blogspot.com






 மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே. 76



அத்தகைய அரிய மரபு வாய்க்கப்பெற்ற பெரியோய்!எம் சுற்றத்தர்களுடன் கூடி உன் தாளில் எம் தலைதோயப் பணிந்து வணங்குகிறோம்.இந்த உலகப் பற்றுகள் எம்மை அடையாமல், எமக்கு நல்ல மெய்யுணர்வு வரவேண்டும் என உம்மை இறைஞ்சுகின்றோம். உன்னைப் பலமுறையும் வாழ்த்திப் பரவுகின்றோம்.  நீ அருள்புரிவாயாக!

Hindu Altar installed in Kairos House chapel in Wagner College,New York. Oct.2014

Image taken from:https://wagner.edu/newsroom/node-1539

No comments:

Post a Comment