Monday, 30 November 2015

21. பரிபாடல் - 11. குன்றின் வனப்பு



21. பரிபாடல் -11



மரங்களை வழிபடுவது தொன்மையானது.
PICTURE FROM: santhipriyaspages. Thanks.

குன்றின் வனப்பு

சொந்த ஊர், சீமை என்றால் எல்லோருக்குமே ஒருவித பிடிப்பு இயற்கையாகவே வந்துவிடும்! அதுவும் சிறிய வயதில் இருந்த இடங்களும் கழித்த காலங்களும்  மனதைவிட்டு நீங்காதவை! சென்னை, மும்பை என்று எவ்வளவு பேசினாலும், அவை இத்தகைய  நெருக்கத்தை விளைப்பதில்லை. முன்பெல்லாம் ஊரைப்போட்டுதான் பேரை எழுதுவோம்! பெரியவர்களை  ஊரைச்சொல்லியே அறிந்துகொள்வோம். செம்பை, சேங்காலிபுரம் என்பதற்குமேல் எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை! சங்கீதத்துறையில்  இதை இன்னமும் பார்க்கலாம்.

புலவர்கள் தாங்கள் பாடும் தலைவன் இடத்தைப் போற்றிப் பாடுவார்கள். சேக்கிழார் தொண்டை மண்டலத்தைப் புகழ்கிறார்.  கம்ப நாடர் கோசல நாட்டைப் பற்றிப்  பாடினாலும், அவர் புகழ்வது காவிரி நாட்டைத்தான்! க்ருபானந்த வாரியார் சுவாமிகள்  தம் ஊரான காங்கேயநல்லூர்  பற்றித் தனிப் புராணமே பாடியிருக்கிறார்.

புலவர்கள் இருப்பதை உயர்த்தியே சொல்வார்கள். ஆனால், இறைவனுக்குகந்த இடம் என்று நம் பெரியவர்கள் சொல்லிய இடங்கள்  புராண  , வரலாற்று நிகழ்ச்சிகளுடனுன் தொடர்பு கொண்டதோடு, இயற்கையிலேயே  சில சிறப்புக்கள் உடைய உயர்ந்த இடங்களாகவே  இருக்கின்றன. முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி  என்று வந்துவிட்ட இக்காலத்தில்  அனேகமாக எல்லா இடங்களும் அவற்றின் இயற்கை எழிலும் வளமும்  குன்றித்தான்  நிற்கின்றன. இன்றைய சபரிமலையை, ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!  இமயமலைக்கும்  இதே கதிதான்! இத்தகைய சீரழிவு பெரும்பாலும் நம்  கண்ணெதிரிலேயே  நடக்கிறது!  முன்பு, சாலை போடும் தடத்தில் ஒரு ஏரியோ, பெரிய மரமோ  அல்லது குன்றோ எதிர்பட்டால், அதைச் சுற்றியே சாலை போடுவார்கள்.  இப்போது இதையெல்லாம்  பொருட்படுத்துவதில்லை. சில வருஷங்களுக்கு முன்பு, ஹொசூர்- பெங்களூர் சாலையை விஸ்தரித்த போது,  நூற்றுக்கும் மேற்பட்ட  பெரிய பெரிய ஆலமரங்களை  வெட்டித்தள்ளினார்கள். இது நடந்த  30 ஆண்டுகளில், அந்த இடத்தில் ஓரு ஆலமரம் கூட திரும்ப நடவில்லை! தற்போது கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையை  விரிவுபடுத்துகிறார்கள். 19,000 பெரிய பெரிய மரங்கள் - பெரும்பாலும் 100 வயதான புளிய மரங்கள்- வெட்டி அகற்றப்பட்டுவிட்டன ! சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்ககாலத்தின் இயற்கைச் செல்வத்தை  நாம் இன்று கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.

குன்றெல்லாம்  குமரனுக்கே  என்பது நமது மரபு. அதனால் குன்றே தெய்வீகமாகக் கருதப்பட்டது. அங்கிருந்த சுனை, குளம். மரம் ,மலர்  என ஒவ்வொரு அம்சமும் தெய்வத்தோடு தொடர்புடையதாகவே கொள்ளப்பட்டது. இதை இந்தப் பாடலில் காட்டுகிறார்  நல்லழிசியார் என்ற புலவர்.

மலையில் மாலை வழிபாடு!



தேம் படு மலர் குழை பூந்துகில்வடி மணி
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ
விடை அரை அசைத்த வேலன் கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்
விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து     5
கோல் எரி கொளை நறை புகை கொடிஒருங்கு எழ
மாலை மாலைஅடி உறைஇயைநர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்



அடியார்கள், தேன் சிந்தும் மலர்களையும், இளந்தளிர்களையும்,மெல்லிய ஆடையையும் மணியையும், வேலையும்    கொண்டு வருகின்றனர்.   கொடிகளையும் ஏந்தி வருகின்றனர். வேலனானவன் பலியிடுவதற் குரிய ஆட்டை மரத்தில் கட்டிவைத்திருக்கிறான். தரையில் சந்தனம் பூசியிருக்கிறது. இவற்றைச் சுமந்து வந்து, முருகக் கடவுள்  எழுந்தருளியிருக்கும் கடம்ப மரத்தை இசைக்கருவிகளை இசைத்துப்  பாடித் துதிக்கின்றனர்.



Neolamarckia cadamba. கடம்ப மரம்.




 மரங்களில் உள்ள மலர்கள் தேன் சொரிகின்றன. தீப்பந்தங்கள் ஒளிவீசுகின்றன. மணமுள்ள அகிற்புகை  எழுகின்றது.இவ்வாறு, திருப்பரங்குன்றத்தின் அடியில் மாலை தோறும் பலர் உறைகின்றனர்.  இவர்கள்  (இதை விட்டு) தேவர் உலகத்தையும் விரும்பமாட்டார்கள்.


இங்கு, கடம்ப மரத்தையே முருகனாக வழிபடுகின்றனர்!



ஒரு திறம் பாணர் யாழின் தீங் குரல் எழ
ஒரு திறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ 10
ஒரு திறம் கண் ஆர் குழலின் கரைபு எழ
ஒரு திறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத
ஒரு திறம் மண் ஆர் முழவின் இசை எழ
ஒரு திறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப
ஒரு திறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க 15
ஒரு திறம் வாடை உளர்வயின் பூங்கொடி நுடங்க



குன்றின் ஒரு பக்கத்தில்  பாணர்கள் இசைக்கும் யாழின் ஒலி எழுகின்றது, அதற்கு எதிராக வண்டுகளின் ஒலி  எழுகின்றது. ஒரு பக்கம் புல்லாங்குழல்களின்  ஒலியெழ, அதற்கெதிராக தும்பிகள் இசைக்கின்றன! ஒரு பக்கம் முழவுகளின் தாள ஓசை  கேட்க, அதனெதிராக, அருவிகளின் சப்தம்  எழுகின்றது. ஒரு பக்கம் விறலியர் மகளிர் ஆடுகின்றனர்; அதற்கெதிர், கொடிகள் காற்றில் அசைந்தாடுகின்றன!




ஒரு திறம் பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற
ஒரு திறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்     20
மாறு அட்டான் குன்றம் உடைத்து
ஓரிடத்தில், மகளிர் பாலைப்பண் அதற்குரிய அங்கங்களோடு இசைக்கின்றனர். அதற்கெதிராக  ஆடும் மயில்கள் அகவுகின்றன. இவ்வாறு, கற்றவர்கள் தங்களுக்குள் போட்டிபோடுவது போன்று, அங்கு மாறிமாறிப் பலவித ஒலிகள் எழும் சிறப்பினை உடையது, பகைவரை  வெற்றிகொண்ட அப் பரமனின் குன்றமாகும்.







கூடலும் குன்றமும்


பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை
கமழ் நறுஞ் சாந்தின் அவர் அவர் திளைப்ப
நணி நணித்து ஆயினும் சேஎய்ச் சேய்த்து    25
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால்
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு ஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை 30
வாய்வாய் மீ போய்  உம்பர் இமைபு இறப்ப
தேயா மண்டிலம் காணுமாறு இன்று
நூல்கள் புகழும்  கூடல் நகருக்கும் பரங்குன்றிற்குமிடையே  உள்ள தொலைவு பெரிதல்ல. இருந்தாலும் , அங்கு ஆண்களும் பெண்களும் வரும்போது ஏற்படும் நெரிசலால் அது  தூரமாகத் தெரிகிறது! பெண்களின் கூந்தலிலிருந்தும், ஆண்களின் குடுமியிலிருந்தும்  மலரிதழ்கள்  நிலத்தில் விழுந்து , பாதையையே மறைத்துவிட்டன!  எல்லாதிசைகளிலும் பரவிய தூய புகழுடைய பரங்குன்றில் பக்தர்கள் போடும் அகில்புகை எழுந்து வானுகை எட்டுகின்றது; அதனால்  (இமைக்காத கண் உடைய ) தேவர்கள் கூட கண் இமைப்பார்கள்! அந்தப் புகை சூரிய மண்டலத்தையும் மறைத்துவிடும்!
[சில வருஷங்களுக்குமுன் , திராவிடக் கட்சியினர் பிராமணர்களின் குடுமியை அறுத்தார்கள். இங்கு எல்லா தமிழர்களுமே குடுமி வைத்திருந்தார்கள் , அதில் பூவும் வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.]


வளை முன் கை வணங்கு இறையார்
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார் 35
ஈர மாலை இயல் அணியார்
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா
அனையபரங்குன்றின் அணி


மார்பில் மலர் மாலையணிந்த ஆடவர், மாலையும் கையில் வளையும் அணிந்த தம் மகளிருடன் விளையாடி, அங்குள்ள சுனையில் பாய்கின்றனர். அங்குள்ள மலர்களில் தாதுகளை மொய்த்திருந்த வண்டுகள் இதனால் பயந்து விலகுகின்றன. இவ்வித அலங்காரங்களை உடையது பரங்குன்று ! 


இவ்வாறு ஆடவரும் பெண்டிரும் அங்கு  சுனையில் நீராடிய செய்தியை மாங்குடி மருதனாரும்  மதுரைக் காஞ்சியில் கூறுகிறார்.

.........................................................யின்குரல்
தளிமழை பொழியும் தண்பரங் குன்றில் 
கலிகொள்  சும்மை யொளிகொள் ஆயந் 
ததைந்த கோதை தாரொடு பொலியப் 
புணர்ந்துடனாடும் இசையே யனைத்தும் 
அகலிரு வானத் திமிழ்ந்தினிது  இசைப்ப..   262-267



கீழோர் வயல் பரக்கும்வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ    40
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும்
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்
கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும் 45
கை ஊழ் தடுமாற்றம் நன்று



வெளேர் என்று  குன்றின்மேல் விழும் அருவியின் நீர்  கீழுள்ள வயல்களில் இடைவிடாது பாயும். அந்த அருவியில் விளையாடும் பெண்களின் நகைகளிலிருந்து விழுந்த மணிகள் அருவி நீரோடு வந்து வயல்களில் புகுந்து சிதைக்கும். வெளியிடங்களுக்குச் சென்ற ஆடவர்  திரும்பி வரவேண்டுமென்று  கோரி  மகளிர் தெய்வத்திற்கு  விழா எடுக்கின்றனர்.  அக் கணவன்மார் திரும்பிவந்தவுடன், திரும்பவும் விழா எடுத்து விருந்து செய்கின்றனர்.  அருவி அணிசெய்யும் பரங்குன்றிற்கும், வளம் மிகுந்த வைகைக்கும், பிடரிமயிர் அழகுசெய்யப்பெற்ற  குதிரைகள் பூட்டிய, கொடிபறக்கும்  தேர்களையுடைய  பாண்டியனது கூடல்மா நகருக்கும்   இன்னல்கள் இன்றி எல்லாம் இனிதே அமைந்தது.



முருகனுக்கு வாழ்த்து


என ஆங்கு
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ
பணி ஒரீஇ  நின் புகழ் ஏத்தி 50
அணி நெடுங் குன்றம் பாடுதும் தொழுதும்
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுகயாம் எனவே   53



 நீலமணிபோன்ற  நிறத்தையுடைய மயிலையும், உயர்ந்த கோழிக்கொடியையும்  உடைய  முருகப் பெருமானே ! பிணிமுகமாகிய யானையின் மேலேறிச்சென்று போர்செய்து வெல்லும் தலைவனே!




பிறவித்  துன்பம் நீங்கி, அழியாஇன்பம் மலிந்த  அப்பெரு நிலையை  நாம் பெறவேண்டுமென   வேண்டி, நாமும் எம் சுற்றத்தாரும் , உன் புகழை ஏத்தி, உன் பரங்குன்றைப் பாடித் தொழுகின்றோம்! அருள் புரிவாயாக !



f

from: jaghamani,blogspot.com. Thanks,

Sunday, 29 November 2015

20. பரிபாடல் -10. இயற்கையும் இறைவனும்



20.பரிபாடல் - 10


கல்லத்திமரம்- திருப்பரங்குன்றின் தல விருக்ஷம்.
Ficus tinctoria. By Tau'olunga (Own work) [GFDL(http://wwwgnu.org/copyleft/fdl.html(CC BY-SA 3.0 creativecommons via Wikimedia commons)

இயற்கையும் இறைவனும்

நமது புனித ஸ்தலங்கள், தீர்த்தங்கள்  என்று பார்த்தால், முதலில் அவை இயற்கையாகவே மிகவும் அழகுவாய்ந்த, ரம்யமான இடங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். தேவாரம் முதலிய பழைய அருட்பாடல்களில்  தலங்களின் இயற்கை வளமும் வனப்பும் மிகவும் விரிவாகவே பேசப்படுகின்றன. குறிப்பாக, சம்பந்தரின் பதிகங்கள் ஒவ்வொன்றிலும் இதை நாம் பார்க்கலாம். கோவில்  என்பது மிகவும் பெரிய அமைப்பாக இருந்ததில்லை; ஆனால் அவை இருந்த சூழ்நிலை ஆறு, குளம் , மலை, காடு, வயல் ,சோலை என்று  இயற்கை எழில் கொஞ்சும் விதமாகவே இருந்தது. ஜனத்தொகை பெருகி, நாகரிகம் வளர்ந்து, ஊர்களின் எல்லைகளும் விரிவுபடப்பட , கோவில்களின் இயற்கை எழில் குன்றிக் குறைந்து, இப்போது  அனேகமாக மறைந்தே விட்டது எனலாம்.

50,60 வருஷங்களாக  இவ்விடங்களுக்குப் போய் வருபவர்களுக்கு  இந்த மாற்றங்கள் வேதனை தரும். பழநியில்  வையாபுரிக்குளம் நல்ல நீர் நிறைந்திருக்கும், ஷண்முகநதியில் கோடையிலும் நீர் ஓடும், மலையைச் சுற்றினால், அதுவும் காலைவேளையில், சில்லென்ற காற்றில் மூலிகைகளின் மணம் வரும். அண்ணாமலையைச் சுற்றினால், செங்கம்  ரோட்டிலிருந்து  திரும்பியதுமே ஒருவித  அமைதி  நம்மை ஆட்கொள்ளும்.  மாட்டுவண்டிகள் தவிற வேறு வாகனங்களே கிடையாது. பறவைகளின் ஒலி தவிர வேறு சப்தமே இருக்காது. கடை, கண்ணி என்று எதுவும் கிடையாது. சிதம்பரம் நகரத்தை நெருங்கும்போதே, புவனகிரி தாண்டிய சிறிது  தொலைவிலேயே  நான்கு  கோபுரங்களும் தெரியும், நாம் போவது ஒரு புனித இடம் என்னும் எண்ணம் தோன்றும். நகரில்  எந்தவீதியில், எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் கோபுரம் தெரியும். இன்று கோபுரத்தின் எதிரில் நின்றாலொழிய கோபுரம் கண்ணில் படாது! அவ்வளவு  முன்னேற்றம்! திருமயிலை திருக்குளத்தை மறைத்து கடைகள்! கோயிலுக்குள் சேவைக்கு டிக்கட் வைத்து அரசினர் நடத்தும் வியாபாரம்! வெளியே, குளக்கரையை ஆக்ரமித்து அரசினர் ஆதரவில் தனியார் வியாபாரம்! புனிதமோ, அழகோ, யாருக்குத் தேவை? பணமிருந்தால் பத்தாதா?

மீதியிருக்கும் சில இடங்களையும் அவற்றின் புனிதமும் எழிலும் கெடாமல் எப்படிப் பராமரிப்பது என்பது தெரியவில்லை; இதில் யாருக்கும் அக்கறையும் இல்லை. ஒருபுனித நதியிலோ, குளத்திலோ நீராடுவது என்பது வெறும் உடலைக்கழுவக் குளிப்பதல்ல! அதற்கு ஒரு நெறிமுறை உண்டு.  ஒவ்வொரு பெரிய  கோவிலுக்கும் ஒரு குளம்; அதில் நீராடினால் இன்னின்ன பலன் என்றெல்லாம் இன்றைக்கும்  புத்தகத்தில் எழுதி வருகிறார்கள்; ஆனால், எந்த ஒரு குளமும் அதற்கேற்ற நிலையில் இல்லை!



சென்னை-புரசைவாக்கம் கங்காதரேஶ்வரர் கோயி ல் குளத்தின் நிலை! 2014 மழை சீசனில்! தினமலரில் வந்த படம். நன்றி.

இயற்கையான  சூழலில் கோயில். அங்கு ஒரு குளம், அதற்கு ஒரு ஸ்தல விருக்ஷம் என்றெல்லாம் ஏற்படுத்தி, இறைவனை இயற்கையோடு பிணைத்தார்கள்! இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்திய  சங்க காலத்தில், ஒவ்வொரு வகை நிலத்திற்கும் ஒரு கடவுள் என்று வைத்தார்கள்! அந்தந்த கடவுளைப் பாடியவர்கள்  அந்த நிலத்தின்  அருமைபெருமைகளையும்  சேர்த்தே பாடினார்கள்.

நாம் இப்போது பார்க்கும் இந்தப் பாடலைப் பாடியவர் கேசவனார் என்ற புலவர். குமரனைப் பாடும்போது, அவன் உறையும் குன்றத்தின் வனப்பையும் பாடுகிறார். 

கார்காலத்தில்  எழில்மிகு குன்றம்




கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே
அடியுறை மகளிர் ஆடும் தோளே 5
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை
நீடன்மின் வாரும்என்பவர் சொல் போன்றனவே

குமரவேளே!  மேகங்கள் மிகுந்த மழை பொழிதலால் சுனைகள் நிறைந்து, பூக்கள்  மலர்ந்திருக்கின்றன. குளிர்ந்த கடம்ப மலர்களின்  தாதை ஊதுகின்ற வண்டுகளின் குரல், பண்கள் போன்று ஒலிக்கிறது. மலையின் பக்கங்களீல் விளையும் மூங்கில்கள், அம்மலையின்அடியில் வாழும் பெண்களின் தோள் போன்று இருந்தன! 





வாகைப்பூவைப் போன்ற கொண்டையை உடைய மயில்கள் கூவுகின்றன. அவற்றின் குரல் , 'இனியும் தாமதம் செய்யாமல் வருக" என்று  பிரிந்து சென்ற தலைவர்களை அழைப்பவர்களின் குரல் போன்று  ஒலிக்கிறது.






நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன    10
வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் 15
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்
கார் மலிந்தன்று  நின் குன்று 17


கொன்றை மலர் கொத்துக்கள், பொன்னால் செய்த மாலைகள் போன்று விளங்குகின்றன.    










பாறைகளில் வேங்கை மலர்கள் பரந்திருக்கின்றன. அதைக்கண்டு, தாய்மார்கள்  பேதைப்பருவத்துப்  பெண் குழந்தைகளிடம்  'புலி,புலி' என்று சொல்வது போலிருக்கிறது. 





நெருங்கிய மொட்டுக்களையுடைய காந்தள் மலர்கள் மலர்ந்தன. அவற்றின் இடையே செங்காந்தள் பூக்கள் பரந்திருக்கின்றன! இவ்விதம் உன்னுடைய குன்றமானது கார்காலத்தின்   எழிலுடன் விளங்குகின்றது,



முருகன் புகழ்



………………………………………………………………போர் மலிந்து
சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே 20
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே


சூரபன்மனைக் குலத்தோடு அழித்த ஒளிமிக்க வேலாயுதத்தை உடையவனே! கார்காலத்தில்  வெண்மேகம் எழுவதுபோன்று , புகையும் அகில் முதலியவற்றால் எழும் தூபத்தை  விரும்புகின்றனை! ஆறுமுகமும், பன்னிரு தோளும் கொண்டு, வள்ளிப்பிராட்டியாகிய  உயர்ந்த மலரை விரும்புவோனே!


கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே
பிறந்த ஞான்றே நின்னை உட்கிச் 25
சிறந்தோர் அஞ்சிய சீருடையோயே
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே


பிரிந்த தலைவர் வந்து சேர்ந்து, பின்பு நீங்காது இருக்கவேண்டும் என மகளிர் வீணைவாசித்துப் பாடி உன்னை வேண்டுகின்றனர்! நீ அத்தகைய பாட்டில் விருப்பம் கொண்டனை! பிறந்த உடனேயே இந்த்ரன் முதலானோர் கண்டு அஞ்சும் சிறப்பினைக் கொண்டாய்! இரண்டு பிறப்பையும் அதனால் வரும் இரண்டு பெயர்களையும் , அன்பு பொருந்திய நெஞ்சத்தையும் உடைய அந்தணர்களின் அறத்தை விரும்புகின்றாய்!
வேண்டுதல்


அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை
துன்னித் துன்னிவழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே 32



நீ இத்தன்மைகளை உடையவனாதலால், நாங்கள் பெருவிருப்புடன் உன்னை வழிபடுகின்றோம். இதன் பயனாக, மேலும் மேலும் வளர்ந்து, உன் தொல் புகழினும் மேலாக  அவ்வழிபாடுகள் ஆகவேண்டும்! அவ்வாறு அருள் புரிவாயாக!

இங்கே அழகைத் தேடவேணும்!

Saturday, 28 November 2015

19. பரிபாடல் -9. பரங்குன்றத்துப் பரமன்



19. பரிபாடல் -9



பரங்குன்றத்துப் பரமன்

இது பல வருஷங்களுக்குமுன் நடந்த சமாசாரம்.
எங்கள் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்துவந்தாள். நம் பண்டிகை, பூஜை ஆகியவற்றைப் பார்த்தோ என்னவோ தெரியவில்லை-  ஒருநாள் "ஐயா, எனக்கும் வூட்லெ வெச்சுக் கும்பிட சாமிபடம் எதுனாச்சும் தா " என்றாள்.அவள் அடுத்துச் சொன்னதுதான் அபாரம்! "ஆனால்  ரெண்டு பொண்ஜாதி வெச்ச சாமிபடம் தராதே"  என்று ஒரு போடு போட்டாளே பார்க்கணும்!

நம் சாமிகள் எல்லோருமே 'இரண்டு பொண்ஜாதி ' வகையினர்தாம் ! சிவனுக்கு இடையில் உமை, தலையில் கங்கை; பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி; க்ருஷ்ணருக்கு, ருக்மிணி, சத்யபாமா;  இதுதவிர, ராதா எக்ஸ்ட்ரா சமாசாரம். அப்பனும் மாமனும் இப்படி இருந்தால் முருகன் சும்மா இருப்பானா? அவனுக்கும் வள்ளி, தெய்வானை என்று இரண்டுபேர்! நம் பெரியவர்கள் பிள்ளையாரையும் விட்டு வைக்கவில்லை- சித்தி, புத்தி என்று அவருக்கும் இரண்டு கற்பித்து விட்டார்கள்! தப்பியது ராமர் ஒருவர்தான்! ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி வ்ரதுடே என்று த்யாகராஜஸ்வாமிகள் பாடியபடி, அவர் மட்டும் ஏகபத்னி  விரதம். ஆனால் நான் புலவனாக இருந்தால் அவரையும் விட மாட்டேன்! ராமன் தர்மத்தின் உருவல்லவா- ராமோ விக்ரஹவான் தர்ம:! என்றும் தர்மத்தை விடாதவர் என்றால், தர்மத்தையும் ஒரு பத்னியாகச் சொல்லலாம் அல்லவா? கடைசியில் அதுதானே நடந்தது? ராஜதர்மத்திற்காக, பத்னியையும் அல்லவா த்யாகம் செய்தார்!

தெய்வங்களுக்கு இவ்விதம் பத்னிகளைக் கற்பித்தது தத்துவத்தின்  ஒருவித விளக்கமாகும். தெய்வத்தின் சக்தியே இவ்வாறு உருவகப்படுத்தப் படுகிறது. முருகனின் இச்சாசக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி என்பவையே வள்ளி, தெய்வானை,வேல் என உருவகப்படுத்தப் படுகின்றன. இதையெல்லாம் க்ருபானந்த வாரியார் ஸ்வாமிகள் நன்றாக விளக்கியிருக்கிறார்.

ஆனால் புலவர்கள் இதைவைத்து சொல்லாட்டம் ஆடுவார்கள்! அதுவும் தமிழ் இலக்கண மரபில் தோய்ந்த  சங்கப் புலவர்கள் சும்மா விடுவார்களா? முருகன் முதலில் தெய்வானையை மணந்து கொள்கிறான். தமிழ் இலக்கண மரபுப்படி, இது  கற்பு மணம். அடுத்து வள்ளியை ஏற்பது களவுமணம். இதில் எது சுவாரஸ்யமானது என்பது பற்றிப் பாடுகிறார்  குன்றம் பூதனார் என்ற புலவர். வள்ளியை மணந்ததால் தெய்வானை கோபிக்கிறாள் என்றும் , தெய்வானை-வள்ளி கூட்டத்தினரிடையே பூசல் என்றும் இவ்வாறு கற்பனை செய்துகொண்டு போகிறார் புலவர்.  நல்ல இலக்கியமாக இருந்தாலும், எனக்கு இது அவ்வளவாக ரசிக்கவில்லை.சற்று விரசமாகவே படுகிறது.


தெய்வங்களுக்குப் பத்தினிகள், இரண்டு தேவிகள் என்பதெல்லாம் மிகவும் நாசூக்காகக் கையாளவேண்டிய விஷயங்கள்.சிவனைப் பற்றிச் சொல்லும்போது, மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருச்சாழலில் எழுதுகிறார்:

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடி
சலமுகத்தால்  அவன்சடையில் பாய்ந்திளனேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.

சிவபெருமான் கங்கையின் வேகத்தைத்  தாங்கித் தடுத்திராவிட்டால், இந்த பூமி அதைத் தாங்கியிராது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! இதுவே அருளாளர்களின் வாக்கிற்கும் எனைய புலவர்களீன் சொல்லுக்கும் உள்ள வித்தியாசம். அதனால்தான் பரிபாடலில் உள்ள பாடல்கள்  பெரிய இலக்கியமானாலும் ஒரு தெய்வீக அந்தஸ்தைப் பெறவில்லை. படிக்கிறோமே தவிற பாராயணம் செய்வதில்லை !
அதனால்,இந்தப் பாடலில் வரும்  அத்தகைய பகுதிகளை விட்டு, முருகன் பற்றிய விஷயங்களை மட்டுமே பார்ப்போம்.



ஆகாயத்திலிருந்து கீழ்விழும் கங்கையை சிவபெருமான் சடையில் தாங்குவது!  ராஜா ரவி வர்மா சித்திரம்.

முருகன் அவதாரம்



இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமைஉயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப 5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
 இந்த்ரனால் காக்கப்படும் இமயமலை, இந்தப் பெரிய நிலம் அசையாதபடி, வடதிசையில் ஓங்கி நிற்கிறது. அதன் சிகரத்தில், தெய்வ முனிவர் அறுவரும் உடன்பட, மதிப்புடைய கார்த்திகைப் பெண்டிர் அறுவரிடத்தே, ஆகாய கங்கையைப் பூப்போலச் சடையிலே தாங்கும் கங்காதரராகிய நீலகண்டப் பெருமானுடைய குமாரனாகப் பிறந்தோய்!

பரங்குன்றில் போட்டிகள்!


கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70
அடும் போராள நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் 75
செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்
படாகை நின்றன்று
கொடிய சூரபன்மனாகிய மாமரத்தை வீழ்த்திய   வேலையுடைய போர் வீரனே! உனக்குரிய  பரங்குன்றத்தில், ஆடல் பயின்றவர்களைப் பிற ஆடல்வல்லவர்கள் வெல்கிறார்கள்;  பாடல் பயின்றோரைப் பிற பாடல் வல்லார் வெல்கிறார்கள்; சூதாடுவதில் வல்லவர்களை சூதில்வல்ல வேறு சிலர் வெல்கிறார்கள். கல்வி பயின்றவர்களும் இவ்வாறே தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெல்கின்றனர். இத்தகைய வெற்றிகளால் புகழ் பரவ,  தடாகம் போன்ற சுனையின் அருகில் உனது கொடி நின்றது.

எமது வேண்டுதல்






மேஎ எஃகினவை
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை    80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்தொறும் பொலிந்தே   85



வியக்கத்த உயர்குணங்களை உடைய குமரனே! நீ உனக்குப் பொருத்தமான  வேலினை உடையவன். வெற்றி பெற்று உயரப் பறக்கவிட்ட கொடியால் உன் புகழ் பரவிற்று. உன்னுடைய கற்பு தேவியரின் அன்பை விரும்புகின்றாய்! உன்னிடம் அன்புகொண்ட நாம், உன் திருவடியை வணங்கும் செயல் நாள்தோறும் வளர்ந்து பயன் தந்து சிறக்க வேண்டும் என்று உன்னைத் தலைவணங்கி வாழ்த்தி வேண்டுகின்றோம். அவ்வாறே அருள்வாயாக.

Friday, 27 November 2015

18. பரிபாடல்- 8. குன்றத்துக் குமரன்!



18. பரிபாடல் -8

திருப்பரங்குன்றம்.

குன்றத்தில் குமரன்!

சங்க காலத்தில் திருப்பரங்குன்றம்தான்  முருகனின் மிகப்புகழ் வாய்ந்த தலமாக இருந்தது போலும். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆறு தலங்களைப்பற்றிச் சிறப்பாகச் சொன்னாலும், முதலில் அவர் குன்றத்தையே பாடினார். பரிபாடலில் வரும் 8 பாடல்களில், 7 பாடல்கள் குன்றத்துக் குமரனையே கொண்டாடுகின்றன.

இப்போது நாம் பார்க்கப்போகும் பாடல் சற்று வித்தியாசமானது. இது முருகன் புகழ் பாடினாலும், பாதிக்குமேல் பிற விஷயங்களைப் பேசுகிறது.

சங்க காலத்தில் சில கருப்புப் புள்ளிகள்

சங்க காலம் பொற்காலம்; அப்போது நடந்த எல்லாமே உத்தமமானது என்றெல்லாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். நாம் புராணத்தில் படிக்கும் சத்திய யுகத்தில் இப்படி இருந்திருக்கலாமே தவிர , இது நடைமுறையில் சாத்திய மானதல்ல. பலவும் கலந்ததுதான் சமூகம். ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு காலத்தில் சில குறைகள் இருந்தே வந்திருக்கின்றன. சமய ஆசாரங்களும், பெரியவர்கள் போதித்த நன்னெறிகளும் இக்குறைகளைக் களையவே எழுந்தன.

சங்ககாலத்தில் இருந்த தமிழ் அரசர்கள் தங்களுக்குள் சதா சண்டையிட்டவாறே இருந்தனர். வீரம் என்ற பெயரில் தமிழ் மக்களையே கொன்று குவித்தனர்; அவர் வாழுமிடங்களையும், விளை நிலங்களையும், குடி நீரையும் பாழ்படுத்தினர். சேர, சோழ,பாண்டியர்களாகிய முடியுடை வேந்தர்கள் சிற்றரசர்களாகிய அதியமான், பாரி  போன்ற
வர்களின் பெருமையைச் சகிக்காமல், வலியப் போரிட்டு அவர்களைக் கொன்றனர். பெரிய புலவர்களும் கையில் கப்பறை யேந்தி சோற்றுக்காக அலைந்து திரிந்தனர். கயவர்களையும் கஞ்சப்பேய்களையும் புகழ்ந்துபாடி வயிறு வளர்த்தனர்.அப்படிப் பாடியும் கொடுக்காத பிரபுக்களும் இருக்கவே செய்தனர்.

எந்தச் சமுதாயத்திற்கும் ஆதாரமாக இருப்பது  நிலையான குடும்ப
 வாழ்க்கை. அதற்கு அடிப்படை திருமணம். மறையவர் தேயத்து மன்றல் எட்டு என்று தொல்காப்பியத்தில் கண்டபடி, எட்டுவிதமான திருமணமுறைகள்  இருந்தன. ஆனால், களவு, கற்பு என்ற இரண்டையே ப்ரதானமாகக்கொண்டு அவற்றுக்கும் சிறந்த நெறிமுறைகளை (இலக்கணம்) வகுத்தனர் பெரியோர்கள். இதில் களவு என்பது, காந்தர்வ விவாகம்.இது பொதுவாக சமூகத்தில், பண்பாட்டில் ஒரு நிலையில் இருப்பவர்களுக்கே பொருந்தும். கற்புமணம் என்பது, பெரியவர்கள் நிச்சயம் செய்து  உரிய சடங்குகளுடன் நடைபெறும் மணம். கற்பெனப் படுவது கரணமொடு புணர்தல் என்பது தொல்காப்பியம். இதற்கெல்லாம் இன்று குதர்க்கமாக விளக்கம் தருகிறார்கள்! ஆந்தைகளுக்கு வெளிச்சத்தில் கண்தெரியாதாம்!

இவற்றையும் மீறி இருந்த ஒரு சங்ககால வழக்கம், திருமணமாகி இருந்த "தலைமகன்" பரத்தையிடம் போவது! இது சங்க காலத்தில் சர்வசாதாரணமாக  நடந்தது. இந்தப் பாடலில் இத்தகைய ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார் புலவர், ஆசிரியன் நல்லந்துவனார்.

ஒருவன் பரத்தையிடம் போய்விட்டுத் திரும்புகிறான். 'உன் உடம்பில் வேறுபெண்ணின் வாசனை வருகிறது ' என்கிறாள் தலைவி. 'இல்லை, இது  இங்குள்ள மலர்கள், கனிகள் அவற்றின் மேல் வீசி வந்த காற்றால் வந்த மணம்; இதை பிராமணர்கள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்; வைகை மணல் மீது ஆணையிடுகிறேன்; இக்குன்றின் மீது ஆணையிடுகிறேன்' என்றெல்லாம் அடுக்குகிறான். இங்கு தோழி தலையிட்டு, 'ஏடா, நீ சொல்லுவதெல்லாம் பொய். நீ பார்ப்பனர்மேல் ஆணையிட்டாலும் இடலாம், ஆனால் , வைகைமீதும், இக்குன்றின் மீதும், குமரன்மீதும், வள்ளிமீதும் ஆணையிடாதே. நீயிடும் பொய் ஆணைக்கு இத் தெய்வமும் அவன் வேலும் உன்னை வருத்தும் ' என்கிறாள். ஆனாலும் தலைவி உனக்காக முருகனிடம் வேண்டித் தொழுவாள் என்கிறாள்.நான் இந்தப் பகுதிகளை இங்கு விட்டுவிட்டேன்.

இமயத்தை ஒத்த பரங்குன்று


மண்மிசை அவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் 5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக    10
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்


முருகா! துளசி மாலையும் கருடக் கொடியும் உடைய திருமாலும், எருதில் ஊரும்சிவபெருமானும், தாமரையில் தோன்றிய ப்ரம்ம தேவரும்,அவரிலிருந்து தோன்றி, உலகின் இருளைப்போக்கும் பன்னிரு ஆதித்யர்களும், மருத்துவர் இருவரும், அஷ்ட வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், அஷ்டதிக்குப் பாலர்களும், பிற தேவர்களும், அஸுரர்களும், வேதத்தில் சிறந்த முனிவர்களும், உன்னைத் தரிசிக்கும் பொருட்டு, இம்மண்ணுலகில் உனக்கேற்ற இடமாக இருக்கிறது உன் திருப்பரங்குன்றம்.  அதனால் அது இமயமலைக்கு ஈடாயிற்று.


மும்மூர்த்திகளும், தேவரும் முருகனைத் தரிசித்துத் தொழுவதை  அருணகிரி நாதர் முதல் திருப்புகழிலேயே சொல்லிவிடுகிறார்.

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்கத் தமரரும் அடிபேண.

தேவர்களுக்குத் தரிசனம் தர முருகன் வீற்றிருந்த சபையின் பெருமையையும், அங்கு வந்த தேவர்களின் வரிசையையும் "அருமறை யவன்முதல்" எனத் தொடங்கும் கொலு வகுப்பில்  48 அடிகளில் மிகவும் அழகாகச் சொல்கிறார் அருணகிரியார். அங்கு முருகன் இருந்த இடம் "சிவபரகிரி " யாகிய இமயம். இங்கு பரங்கிரியிலும் முருகன் அத்தகைய காட்சி தருவதால், பரங்கிரி பரகிரிபோலாயிற்று!




திருப்பரங்குன்றின் பழைய தோற்றம்-1858

குன்றின் எழில்


இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் 15
அருவி தாழ் மாலைச் சுனை
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ
மத நனி வாரணம் மாறு மாறு அதிர்ப்ப 20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை


அக்குன்றில் அருவி விழும் சுனையானது, இமயத்தில் நீ எழுந்தருளிய தாமரைமலர்ந்த பொய்கையைப் போன்றது.. அங்கு எழும் மேக முழக்கம் உனது யானையின் முழக்கத்தைப்போன்றது. அம்முழக்கத்தைக் கேட்ட கோழி, குன்றில் எதிரொலிக்கும்படிக் கூவியது. மதம் மிக்க யானைகள் மாறுமாறாகப் பிளிறின. இவற்றால் அந்தக் குன்றில் எதிரொலி உண்டாகி குன்றே அதிர்ந்தது!.



குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ 30
காலொடு மயங்கிய கலிழ் கடலென
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை   35



க்ரௌஞ்ச கிரியைத் துளைத்த வேலை யுடையவனே! மதுரையில் மணமுரசுகளின் முழக்கம் எழுந்தது. காற்றால் அலைபட்ட கடலைப் போலவும், கடலைக் குடிக்கும் மேக முழக்கத்தைப்போலவும், இந்த்ரனின் இடி முழக்கத்தைப் போலவும்,  அம்முரசுகள் அதிர்ந்தன..அதற்கு மாறிமாறி பரங்குன்றத்தில் முழக்கம்  (எதிரொலி)எழுந்தது

வழிபடும் பெண்கள்



வளி பொரு சேண் சிமை வரையகத்தால் 90
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர
குளிர் பொய்கை அளறு நிறைய
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி 95
சீறடியவர் சாறு கொள எழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும்
மணியும் கயிறும் மயிலும் குடாரியும் 100
பிணிமுகம்  உளப்படப் பிறவும் ஏந்தி



மதுரையிலிருந்து பரங்குன்றிற்குச் செல்லும்  அழகிய வழியில்  பூஜை செய்வதற்காக  எழுந்து, சந்தனமும், தூபத்துக்குரிய பொருள்களும், காற்றினால் அணைந்துபோகாத விளக்குகளும், மணம் கமழும் மலர்களூம்,முழவமும், மணியும் பாசமும், மயிலும். கோடரியும், பிணிமுகமும் ஆகியவற்றையும், முருகவேளுக்குரிய வேறுபிற பொருள்களையும் ஏந்தி பரங்குன்றையடைந்து தொழுவதற்காகச் செல்கின்றவர்கள் (ஆகிய மகளீர்)


[மயில், கோடரி, பிணிமுகம்  என்று இங்கு சொல்வது, அவற்றின் சிரிய  உருவங்கள். இவ்வாறு பல சிறிய உருவங்களை சாத்தி வழிபடுவது இன்றும் நடக்கிறது!]



கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் 105
கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்
செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப் போரும்
பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும்
மஞ்சு ஆடு மலை முழக்கும் 110
துஞ்சாக் கம்பலை
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்



'நாங்கள் எங்கள் காதலரோடு  அளவளாவியதாகக் கண்ட கனவு பொய்யாகாமல்,  உண்மையாகவே நடந்து நாம் நீராடுவதற்காக உன் வைகையில் புதுவெள்ளம் பெருகவேண்டும்' என வரம் வேண்டுவோரும்; மகப்பேறு வேண்டும் எனக்கோரி பல பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்துவோரும்; 'எம் கணவருக்கு பொருள் பெருகவேண்டும் ' எனப் பிரார்த்திப்போரும்; 'எம் கணவர் ஈடுபட்ட போரில் வெற்றி கிட்டவேண்டும்' என்று அர்ச்சனை புரிவோர்  எனப் பல நிலைகளில்  தலைமகளிர்  நின்றனர். பாடுபவர்களின் பாட்டிற்கேற்ற தாளமும், ஆடுபவர்களது கூத்திற்குரிய தாளமும் அவற்றோடு மலையில் உண்டாகும் எதிரொலியும் சேர்ந்து அங்கு பெருமுழக்கம் எழுந்தது.


எத்தகைய  இயற்கையான , எளிய ஆசைகளை இங்கே காட்டுகிறார் புலவர்!
காதல் அல்லது மணவாழ்க்கையில் வெற்றி, குழந்தைப்பேறு, பொருளாதார முன்னேற்றம். எடுத்த தொழிலில்  வெற்றி-  இவற்றைத்தானே இன்றும் நாம் நாடி அலைகிறோம்! அன்று போலவே இன்றும் நம் குலப்பெண்கள் தானே இவற்றுக்காக விரதமும்  நோன்பும் இருக்கிறார்கள் !




கோயிலின் பழைய தோற்றம்-1858


குன்றே நீ வாழ்க!



என ஆங்கு
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி 125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
தண் பரங்குன்றம் நினக்கு   130



பரங்குன்றமே ! இவ்வாறு, மகளிரும் அவர் அன்பர்களும், அவரல்லாத வரம் வேண்டி நிற்கும் பிறரும் கூடி, நீலகண்டப் பெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருக்குமாரனாகிய கடம்ப மலர் சூடும் குமரச் செல்வனின் திருக்கோயிலை வழிபட்டு நிற்கின்றனர். இம்மண்ணுலகமே வருந்தும்படி மழையில்லாது போனாலும், நீர் நிறைந்திருக்கும்  அருவியான செல்வம் உன்னிடத்தே  நிலைத்திருக்குமாக!

   
இங்கே சில விஷயங்கள்  குறிப்பிடத்தக்கன.  சங்க காலத்தில் பார்ப்பனர் பேரில் ஆணையிடும் வழக்கம் இருந்தது போலும். தெய்வத்தின் மீதும், தெய்வ சம்பந்த முடைய பொருட்களின் மீது ஆணையிடுவது பெரும் பயத்தை உண்டாக்கியது! நமது வேண்டுகோள் நிறைவேற, அர்ச்சனை புரியும் வழக்கம்  அன்றே இருந்தது தெரிகிறது! சில விஷயங்களில் மனித இயல்பும் வழக்கமும் மாறவே இல்லை!

Tuesday, 24 November 2015

17.பரிபாடல்-7 செவ்வேட் பரமன்




17.பரிபாடல் - 7





செவ்வேட் பரமன்

பரிபாடல் என்பது  ஒருவகை பா வகை.  25அடி முதல் 400 அடிவரை இதற்கு எல்லையாக வகுக்கப்பட்டது. இப்பாடல்கள் இசையோடு பாடப்படும்.
50/60 வருஷங்களுக்கு முன் வரை  பொதுவாகவே  நம் பண்டிதர்கள் தமிழ் செய்யுட்களை உரிய ராகத்தில் முதலில் சொல்லிக்காட்டி, பிறகுதான் அதைப் பதம் பிரித்து விளக்குவார்கள். இயலும் இசையும் இயல்பாகவே இணைந்து விளங்கிய காலம் அது, இப்போது நாம் முன்னேறிவிட்டோம்!

இப்போது நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் என்னும் தொகுப்பை மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் மிகப்பாடுபட்டு முதன்முதலில் 1918ல் பதிப்பித்தார்கள். இரண்டாம் பதிப்பு 1935ல் அவரே திருத்தி வெளிவந்தது. அதன் முகவுரையில் பரிபாடலைப்பற்றிய பல அரிய விஷயங்களை விளக்கியிருக்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களில் இன்பம் (காமம்) என்பதையே முதலாக வைத்து, உலகியலைப் பற்றியே இதில் வரும். ஆனல் கடவுள் வாழ்த்தும் வரும். இப்போது உள்ள பரிபாடலில் 70 பாட்டுக்கள் இருந்த தென்றும் அவற்றில் 8 திருமாலைப்பற்றியவை; 31 செவ்வேள் (முருகனைப்) பற்றியவை; 1 காடுகிழாள் (அல்லது கடல் ) பற்றியது;4 மதுரை பற்றியவை;26  வைகை பற்றியவை எனவும்  பழம் பாட்டொன்றை முகவுரையில் காண்கிறோம். இப்போது இருப்பவை, திருமால் பற்றிய 6 பாடல்களும். முருகன் பற்றிய 8 பாடல்களும், வைகை பற்றிய 8 பாடல்களுமே யாகும்.டாக்டர் ஐயரவர்களின் முதல் பதிப்பிற்குப்பின் , கடந்த 100 வருஷங்களில்  மேலும் ஒரு பாட்டைக்கூட நாம் புதிதாகக் கண்டெடுக்கவில்லை! டாக்டர் ஐயருடைய உரையும் அரும்பதவுரை அகராதியும் தான் இப்பாடல்களின் பொருளை நமக்கு விளக்குகின்றன.

திருமாலைப்பற்றிய 6 பாடல்களை நாம் பார்த்துவிட்டோம். இனி முருகனைப் பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.

நாம் பார்க்கும் முதல் பாட்டு கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் இயற்றியது. இவர் திருமாலைப் பற்றியும் இரண்டு பாடல்கள்  (3,4 ) செய்திருக்கிறார். குறிப்பாக நான்காவது பாட்டில் திருமாலின் வ்யூஹம், அவருடைய  மூன்று அவதாரங்கள், வேதம் அவரைப்போற்றும் விதம், அவருடைய அளத்தற்கரிய பெருமை ஆகியவற்றை வியந்து கூறி, "நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை" என்ற ஒப்பற்ற வரியையும் நமக்குத் தந்தார்! இவர் செவ்வேளையும் பாடுவது, அப்புலவர்கள் தெய்வங்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவில்லை என்பதைக் காட்டுகிறது!


செவ்வேளின்  பெருமை!


பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத்த புத்த வேல்
நாவலந் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை 10

பிணிமுகம் என்னும் யானையாகிய உன் வாகனத்தின் மேலேறிவந்து, இருள் சூழ்ந்து பரந்த குளிர்ந்த கடலில் புகுந்து, அங்குள்ள பாறைகள் பொடிபட,போர் புரிந்து, உன் வேலாயுதத்தால் மாமரமாகிநின்ற  சூரனைக்கொன்றாய்! கொடுவினையுடைய அவுணர்கள் அனைவரையும் கொன்றாய்! க்ரௌஞ்சமலையைப் பிளந்து வழியுண்டக்கினாய்! அறுதலை அண்ணலே!



கஜவாஹனர்!


மூ இரு கயந்தலைமுந் நான்கு முழவுத் தோள்
ஞாயிற்று ஏர் நிறத் தகை நளினத்துப் பிறவியை
காஅய் கடவுட் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவ எனப் பேஎ விழவினுள்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே    1 
அவை வாயும் அல்லபொய்யும் அல்ல
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை
சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும் 20
ஏனோர் நின் வலத்தினதே
நீ ஆறு தலைகளுடனும், பன்னிரு தோள்களுடனும், சூர்யன் உதித்தது போன்ற ஒளியுடனும் தமரைப்பூவினில் தோன்றினாய்!
"சம்ஹாரக் கடவுளின் சேயே! செவ்வேளே! பெரும் சிறப்புள்ளவனே! தலைவனே" எனப் பலவாறு வேலன்  வெறியாட்டில் உன் பெருமயைப் பேசுகிறான்! இந்த உலகிற்கெல்லாம் நீயே தலைவனாதலின், அவ்வுரை எல்லாம் உண்மையல்ல! ஆனாலும் நீ அங்கே வெளிப்படுவதால், அவை பொய்யும் அல்ல! அவன் மொழிந்த சிறப்புகளை நீ ஒருகால் ஏற்காமலும் இருக்கலாம்! ஆனால் நல்வினையால் உயர்குடிப் பிறப்பினராதலும், தீவினையால்  இழிபிறப்பினருமாதலாகிய இது, உன் ஆணையின் வசப்பட்டது. இச்சிறப்பு ஒருகாலும் உன்னைவிட்டு நீங்காது!


முருகன் திரு அவதாரம்


ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில்லாக
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய 25
மாதிரம் அழலஎய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு 30
விலங்குஎன விண்னோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தத 
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டவன் உருவு
திரித்திட்டோன்  இவ் உலகு ஏழும் மருள    35
கருப் பெற்றுக் கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழுறு  முனிவர் நனி உணர்ந்து
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க எனஅவர் அவி 40
உடன் பெய்தோரே  அழல் வேட்டுஅவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்
வட வயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அந் நிலைஅயின்றனர்    45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை வயின் வழா அது நிற் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்
ஆதி அந்தணனாகிய நான்முகனாகிய பாகன் செலுத்திய, வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டிய பூமியாகிய தேரில் சென்று,  வாசுகி நாணாகவும், ஹிமயமலை வில்லாகவும் கொண்டு, திரிபுரங்களை ஒரு தழல் அம்பினால் அழியும்படி யெய்தவனும், அமரர்களுடைய வேள்விப் பாகம் உண்டவனும்,  பசிய கண்களை உடையவனுமாகிய பார்ப்பானகிய இறைவன், உமாதேவியாரோடு இன்புறும் சமயத்தில் உண்டான கருவை, இந்திரன் வேண்டுகோளின்படி பலவாகச் சேதித்தருளினான். அக்கருவை முனிவர்கள்  எழுவரும் பெற்றுத் தீமூட்டி அதனை ஹவிஸோடு பெய்தனர். பின்னர் அதனை  அருந்ததி தவிற கார்த்திகை மாதர் அறுவரும் உண்டு கர்ப்பமுற்றனர். சரவணப் பொய்கையில் தாமரைப்பூவில்  உன்னைப் பெற்றனர் என்பர்.

பெரும் பெயர் முருக நிற் பயந்த ஞான்றே 50
அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன்
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து  எறிந்தென
அறு வேறு துணியும் அறுவர் ஆக 
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்


பெரும் பெயர் முருகனே! அவ்வாறு நீ பிறந்த அன்றே,  இந்திரன் கர்வத்தால் தன் வஜ்ராயுதத்தை உன்மேல்  எறிய, ஆறு வேறு உருவமாகிப் பின்னும் ஒருவன் ஆனாய். முருகா! நீ நெடிது வாழ்க!


தேவஸேனாபதி!


ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடை 
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்    60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்த
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்


குழந்தைப் பருவத்திலே முற்ற வளராத திருமேனி தாங்கி,  விளையாட்டாகச் செய்த போரில், ஆயுதம் எதுவும் இல்லாத உன் கையிலேயே இந்த்ரன் தோல்வியுற்றான். " இத்தகைய ஆற்றலுள்ள இவனே நம் சேனைக்குத் தலைவனாகும் தகுதியுடையவன்" என்று  கருதிய அக்னி உனக்கு சேவலைத் தந்தான்.இந்த்ரன் மயிலையும், யமன் வெள்ளாட்டுக் கிடாவையும் தந்தான்.


ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறி வரிச் சாபமும் மரனும் வாளும் 65
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும 
தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன் தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்   70




அவ்வாறு அவரும் பிறரும் தத்தம் உடலிலிருந்து பிரித்துக் கொடுத்த ஆடும், மயிலும், சேவற்கோழியும், வில்லும் மரனும்,வாளும் ஈட்டியும் கோடரியும் மழுவும் கனலியும் மணியும் மாலையும் ஆகிய இவற்றைப் பன்னிரண்டு  கரங்களிலும்  தாங்கி,  தாமரையிலிருந்து வெளிவராத  அந்த இளமைப் பருவத்திலேயே  தேவர் சேனைக்குத் தலைவனானாய்! அதனால் அவர்களது அரசனான இந்த்ரன் புகழையும் கடந்துவிட்டாய்!




 தேவசேனாபதி.


முருகன் இணையடி நிழல்!


நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்
சேரா அறத்துச் சீர் இலோரும்
அழி தவப் படிவத்து அயரியோரும் 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்
நின் நிழல்


ஓ தலைவ! 
உயிர்களுக்குத் தீங்கு புரியுமாறு சினம் கொண்ட நெஞ்சினரும், அறத்தின்பால் சேராதவர்களும், கூடாவொழுக்கத்தால் தவவிரதம் அழிந்தவர்களும் "இப்பிறப்பில் அனுபவிப்பதே உண்மை, மறுபிறப்பு இல்லை" என்று கூறும் மதி இழந்தவர்களும் ஆகிய இவர்கள் உன் இணையடி நிழலை அடையமாட்டார்கள். உனது குணத்தை ஏற்றுக்கொண்டவர்களாகிய அறம்பூண்டவர்களும், வீடுபெறும் குணமுடையவர்களும்,  தவம் புரிவோரும், வணங்குவோரும் உன் தாள் நிழலை அடைவார்கள்.


எமது வேண்டுகோள்!


அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே 81


உருளும் கொத்தான கடப்பமலரால் ஆன மாலையை அணிந்த பெருமானே! அதனால் நாம் உம்மிடம்  நுகர்பொருளையும், அதற்குக் காரணமாகிய பொன்னையும், அதனால் பெறும் நுகர்ச்சியையும் இரந்து வேண்டவில்லை! எமக்கு வீடுபயக்கும் நின் அருளும், அதனைப்பெற நின்னிடத்தே செய்யும் அன்பும், அவ்விரண்டாலும் வரும் அறமும் ஆகிய இம்மூன்றையுமே வேண்டுகிறோம்! அருள்புரிவாயாக!