60.ஸ்ரீ உத்தவ கீதை -5
அர்ஜுனன், உத்தவர் - இருவருமே உத்தம அதிகாரிகள்.கல்வி, கேள்வி, ஒழுக்கங்களில் சிறந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு உண்டான கடமைகள் வெவ்வேறானவை. அதன்படி அவர்களுடைய நடை,உடை, பாவனைகளும் வேறுபட்டன. அவர்களின் மனோ 'பாவ 'த்திலும் குணாதிசயங்களிலும் வித்தியாசமிருந்தது. அதனால் பகவான் அவர்களுக்குச் சொன்ன விஷயங்கள் ஒன்றாக இருந்தாலும், அவர் சொன்ன விதத்தில் வித்தியாசமிருக்கிறது.
அதிகாரி பேதம்
பகவத்கீதையில் வரும் அத்தனை விஷயங்களும் உத்தவ கீதையிலும் வருகின்றன. நாம் விவரமான பட்டியல் போட்டுப்பார்த்தால் இந்த உண்மை எளிதில் புலனாகும். ஆனால், உத்தவகீதையில் விஷயங்கள் இன்னும் நேரடியாகவும் எளிதாகவும் இருக்கின்றன.
உத்தவரும் க்ருஷ்ணரும். source unknown.
ப்ரக்ருதி குணங்கள் மூலமாகச் செயல்படுகிறது. குணங்களை விவரமாக விளக்கி குணாதீதனாவது பற்றி அர்ஜுனனுக்குச் சொன்னார். அதையே உத்தவருக்குச் சொல்லும்போது இன்னும் எளிமையாக்கிவிட்டார்!
குணங்களை வெற்றிகொள்வது
श्रीभगवानुवाच।
सत्त्वं रजस्तम इति गुणा बुद्धेर्न चात्मनः।
सत्त्वेनान्यतमौ हन्यात्सत्त्वं सत्त्वेन चैव हि।।1।।
ஸத்வம் ரஜஸ்தம இதி குணா புத்தேர் ந சாத்மன :
ஸத்வேனான்யதமௌ ஹன்யாத் ஸத்வம் ஸத்வேன சைவ ஹி 11.13.1
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்றமுக்குணங்கள் மனிதனின் புத்தியில் உள்ளவை; அவை ஆத்மாவைச் சேர்ந்தவை அல்ல. ஸத்வ குணத்தைக் கொண்டு மற்ற இரு குணங்களையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.
பின்னர் ஸத்வ குணத்தால் அதையும் தாண்டிச் செல்லவேண்டும்!
இது எப்படிச் சாத்தியமாகும்?
सत्त्वाद्धर्मो भवेद्वृद्धात्पुंसो मद्भक्तिलक्षणः।
सात्त्विकोपासया सत्त्वं ततो धर्मः प्रवर्तते।।2।।
ஸத்வாத் தர்மோபவேத் வ்ருத்தாத் பும்ஸோ மத்பக்தி லக்ஷண :
ஸாத்விகோ பாஸயா ஸத்வம் ததோ தர்ம: ப்ரவர்ததே 11.13.2
மனிதன் ஸத்வகுணம் நிறைந்தவனாக ஆகும்போது, என்னிடம் பக்தி என்ற சிறந்த பண்பு வளர்கிறது! ஸாத்விகப் பொருட்களின் உபயோகத்தால் ஸாத்விகப் பண்பு வளர்கிறது. தர்மத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது!
ஆனால் இப்படி முடிவில்லாமல் குண ஆராய்ச்சி செய்வதே நல்லதல்ல !
किं वर्णितेन बहुना लक्षणं गुणदोषयोः।
गुणदोषदृशिर्दोषो गुणस्तूभयवर्जितः।।45।।
கிம் வர்ணிதேன பஹுனா லக்ஷணம் குணதோஷயோ :
குணதோஷத்ருஶிர்தோஷோ குணஸ்தூபய வர்ஜித: 11.19.45
குணதோஷங்களைப்பற்றி மேலும் மேலும் சொல்வதால் என்ன பயன் ?இவற்றைப்பற்றி அதிகம் நினைப்பதே தோஷம் ! இவற்றைக் கடந்து தன் ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பதே சிறந்த குணமாகும்.
விபூதிகள்
பகவத் கீதையில் போன்று, இங்கும் பகவான் தன் விபூதிகளை விளக்குகிறார். ஆனால், எவ்வளவுதான் சொல்லமுடியும்? பகவானின் மகிமையை அளக்க முடியுமா ? எதற்குள்ளாவது அடக்கமுடியுமா?
तेजः श्रीः कीर्तिरैश्वर्यं हृ्ीस्तयागः सौभगं भगः।
वीर्यं तितिक्षा विज्ञानं यत्र यत्र स मेंऽशकः।।40।।
தேஜ: ஸ்ரீ: கீர்திரைஶ்வர்யம் ஹ்ரீஸ் த்யாக : ஸௌபக பக :
வீர்யம் திதீக்ஷா விஞ்ஞானம் யத்ர யத்ர : மேஅம்ஶ : 11.16.40
எங்கெல்லாம் தேஜஸ், செல்வம், கீர்த்தி, ஐஶ்வர்யம், நாணம், த்யாகம், சவுந்தர்யம், ஸௌபாக்யம், வீரம், பொறுமை, மெய்யறிவு ஆகிய உயர்ந்த குணங்கள் காணப்படுகின்றனவோ, அவை என் அம்ஸங்களே.
एतास्ते कीर्तिताः सर्वाः संक्षेपेण विभूतयः।
मनोविकारा एवैते यथा वाचाभिधीयते।।41।।
ஏதாஸ்தே கீர்த்திதா: ஸர்வா: ஸங்க்ஷேபேண விபூதய:
மனோ விகாரா ஏவைதே யதா வாசாபிதீயதே 11.16.41
என் விபூதிகளைச் சுருக்கமாகச் சொன்னேன். ஆனால் இவை எல்லாம் மனோவிகாரங்களே . [ இவை உண்மையில் பாரமார்த்திகப் பொருள் இல்லை ] மனம், வாக்குக்கு உட்பட்ட எந்தப்பொருளும் மெய்ப்பொருள் ஆகாது.
இதெல்லாம் பகவத்கீதையில் வருவதுதான். ஆனால் ஒன்றை கவனிக்கவேண்டும்.பகவானின் விபூதிகள் அளவற்றவை. ஆனால் பகவான் எதற்குள்ளும் அடங்கியவரல்லர். கீதையில் விஶ்வரூபத்தைப் படித்துவிட்டு வியக்கிறார்கள்.ஆனால் அதுவும் உண்மையல்ல ! It is a wonderful spectacle, but not the whole or absolute Reality. " நீ எதையெல்லாம் காண விரும்புகிறாயோ அதையெல்லாம் இங்கு பார் " என்று சொல்கிறார். [யச்சான்யத் த்ரஷ்டும் இச்சஸி 11.7 ] ஆக, இதுவும் மனோவிகாரம் என்று தெரிகிறதல்லவா ? பகவானை யாரே உள்ளபடி அறியமுடியும் ?
மேலும், விபூதி என்பதன் உட்கருத்தை புரிந்துகொள்ளவேணும். No object in Nature can wholly or adequately express or represent or contain Bhagavan. But we should be reminded of Bhagavan when we look at anything. இயற்கையில் உள்ள எந்தப்பொருளிலும் பகவான் அடங்கி இருக்கவில்லை; ஆனால் எதைப்பார்த்தாலும் நமக்கு பகவான் நினைவு வரவேண்டும் இதற்குதான் விபூதி என்பது.
பகவத் கீதையைப்போன்று, இங்கும் கர்மம்-ஞானம், ப்ரக்ருதி, வர்ணாசிரம தர்மம், என்றெல்லாம் சொல்கிறார். வேதம் பற்றி ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.
वेदा ब्रह्मात्मविषयास्त्रिकाण्डविषया इमे।
परोक्षवादा ऋषयः परोक्षं मम च प्रियम्।।35।।
வேதா ப்ரஹ்மாத்மவிஷயாஸ் த்ரிகாண்டவிஷயா இமே
பரோக்ஷவாதா ருஷய: பரோக்ஷம் மம ப்ரியம் 11.21.35
வேதங்களில் மூன்று காண்டங்கள் உள்ளன. [ கர்ம, ஞான, உபாஸனா ].
இவற்றில் ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டுள்ள விஷயம் ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே என்பதுதான். [ ஜீவ-ப்ரஹ்ம ஐக்யம் ] ரிஷிகள் இந்த விஷயத்தை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி மறைமுகமாகச் சொல்வதே எனக்கும் பிடிக்கும்.
இது ஒரு முக்கியமான விஷயம். பெரியவர்கள் உயர்ந்த பொருளை வெளிப்படையாக எல்லோருக்கும் சொல்லமாட்டார்கள். தகுதியைப் பொறுத்துத்தான் சொல்வார்கள். தகுதியில்லாதவர் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டால் நன்மை விளையுமா? அணுவிஞ்ஞானம் தீவிரவாதிகள் கையில் வந்தால் என்ன ஆகும்? அதனால் பல முக்கிய விஷயங்கள் மறைமுகமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. சாஸ்திரங்களை நாமே படித்தால், அவற்றின் உள்ளர்த்தம் விளங்காது.
பகவான் கீதையின் கடைசியில் , இதை யார்யாருக்குச் சொல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார். (18.67 ) அதேபோல் உத்தவ கீதையிலும் சொல்லியிருக்கிறார். (11.29.30 )
ஆத்மஹத்தி கூடாது !
இப்படி ஜீவன்-ப்ரஹ்மம் பற்றித் தெரிந்துகொண்டவன் , அந்த ஐக்ய நிலையை அடைய முயற்சி செய்யவேண்டும். அப்படிச் செய்யாதவன் ஆத்மாவைக் கொன்றவனாவான்.
एतद्विद्वान्पुरा मृत्योरभवाय घटेत सः।
अप्रमत्त इदं ज्ञात्वा मर्त्यमप्यर्थसिद्धिदम्।।14।।
ஏதத் வித்வான் புரா ம்ருத்யோரபவாய கடேத ஸ :
அப்ரமத்த இதம் ஞாத்வா மர்த்ய மய்யர்த ஸித்திதம் 11.20.14
இந்த மனித ஶரீரம் அழியும் தன்மையுடையது என்பது உண்மைதான். ஆனாலும் இதன் மூலமாகத்தான் பரமாத்மாவை அடைய முடியும். அதனால் ஞானம் உள்ள ஒருவன் மரணம் ஸம்பவிப்பதற்கு முன்பே கவனத்துடன் ஆத்மசாதனை புரிந்து, பிறப்பு-இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அடையவேண்டும்.
एषा बुद्धिमतां बुद्धिर्मनीषा च मनीषिणाम्।
यत्सत्यमनृतेनेह मर्त्येनाप्नोति माऽमृतम्।।22।।
ஏஷாம் புத்திமதாம் புத்திர்மனீஷா ச மனீஷிணாம்
யத் ஸத்யமன்ரு தேனேஹ மர்த்யேனாப்னோதி மாம்ருதம் 11.29.22
அழியும் தன்மை உடையதும், அசத்யமானதுமான இந்த உடலைக்கொண்டு அழியாதவரும் ஸத்யமானவருமான என்னை அடையலாம். இதுவே ஞானிகளின் ஞானமும், புத்திமான்களின் புத்தியும் ஆகும்.
नृदेहमाद्यं सुलभं सुलभं सुदुर्लभं
प्लवं सुकल्पं गुरुकर्णधारम्।
मयानुकूलेन नभस्वतेरितं
पुमान्भवाब्धिं न तरेत्स आत्महा।।17।।
ந்ருதேஹ மாத்யம் ஸுலபம் ஸுதுர்லபம்
ப்லவம் ஸுகல்பம் குருகர்ணதாரம்
மயானுகூலேன நபஸ்வதேரிதம்
புமான் பவாப்திம் ந தரேத் ஸ ஆத்மஹா 11.20.17
மனித சரீரம் கிடைப்பது அரிது. என்றாலும் இப்போது கிடைத்திருக்கிறது. இது வலிய படகைப்போன்றது.சம்ஸாரக்கடலைத் தாண்டுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இதை நடத்திச் செல்ல குருமார்கள் இருக்கிறார்கள். நான் அனுகூலமான காற்றாகவந்து நகர்த்திச் செல்கிறேன். இவ்வளவு சாதனங்கள் இருந்தும் ஸம்ஸாரக் கடலைக் கடக்காத மனிதன் தன் ஆத்மாவையே கொன்றவனாவான்.
[ ஆசார்யனை நாடவேண்டும்; பகவானை நினைக்கவேண்டும் என்பது குறிப்பு.]
तस्मान्मनोवचःप्राणान्नियच्छेन्मत्परायणः।
मद्भक्तियुक्तया बुद्ध्या ततः परिसमाप्यते।।44।।
தஸ்மாத மனோவச: ப்ராணான் நியச்சேன்மத் பராயண :
மத் பக்தியுக்தா புத்த்யா தத: பரிஸமாப்யதே 11.16.44
ஆகவே, என்னிடமே ஈடுபட்டு, என்னிடம் பக்திகொண்ட புத்தியுடன், மனம் , வாக்கு, ப்ராணன்களைத் தன் வசத்தில் கொண்டுவரவேண்டும். அவன் லக்ஷ்யத்தை எய்தியவனாவான். (அவன் செய்யவேண்டியது எதுவும் இல்லை.)
तस्मात्सर्वात्मना तात निगृहाण मनो धिया।
मय्यावेशितया युक्त एतावान्योगसंग्रहः।।61।।
தஸ்மாத் ஸர்வாத்மனா தாத நிக்ருஹாண மனோ தியா
மய்யாவேஶிதயா யுக்த ஏதாவான் யோக ஸங்க்ரஹ : 11.23.61
ஆகையால், ப்ரிய உத்தவரே ! எவ்வகையிலும் புத்தியால் மனதை கட்டுப்படுத்துவாயாக. எல்லா வ்ருத்திகளையும் ஒடுக்கி, என்னிடமே எப்போதும் ஆழ்ந்து நிலைத்திருப்பாயாக. இதுதான் அனைத்து யோகங்களின் சாரம்.
இப்படி, ஜீவ-ப்ரஹ்ம ஐக்ய நிலை, ஆத்ம ஞானம், யோகம், கர்மம், எல்லாம் பகவத் பக்தியிலேயே நிறைவு பெறுகிறது.
Gratefully acknowledged.
பக்தியே சிறந்தது !
कथं विना रोमहर्षं द्रवता चेतसा विना।
विनानन्दाश्रुकलया शुध्येद्भक्त्या विनाशयः।।23।।
கதம் வினா ரோமஹர்ஷம் த்ரவதா சேதஸா வினா
வினா ஆனந்தாஶ்ருகலயா ஶுத்யேத் பக்த்யா வினாஆஶய : 11.14.23
பக்தி இருந்தாலும், உடல் சிலிர்த்தல், மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் பெருகுதல் ஆகியவை நிகழாத வரையில் அவனுடைய அந்தக்கரணம் முற்றும் தூய்மை அடைவதில்லை.
वाग्गद्गदा द्रवते यस्य चित्तं
रुदत्यभीक्ष्णं हसति क्वचिच्च।
विलज्ज उद्गायति नृत्यते च
मद्भक्तियुक्तो भुवनं पुनाति।।24।।
வாக் கத்கதா த்ரவதே யஸ்ய சித்தம்
ருதத்ய பீக்ஷ்ணம் ஹஸதி க்வசிச்ச
விலஜ்ஜ உத்காயதி ந்ருத்யதே ச
மத்பக்தி யுக்தோ புவனம் புனாதி 11.14.24
பூரண பக்தியுடையவனுடய சொல் தடுமாறுகிறது; மனம் உருகுகிறது; சில சமயம் அழுகிறான், சில சமயம் சிரிக்கிறான். வெட்கத்தை விட்டு உரத்த குரலில் பாடுகிறான், ஆடுகிறான். இத்தகைய என் பக்தன் உலகத்தையே புனிதப்படுத்துகிறான்.
यथाग्निना हेम मलं जहाति
ध्मातं पुनः स्वं भजते च रूपम्।
आत्मा च कर्मानुशयं विधूय
मद्भक्तियोगेन भजत्यथो माम्।।25।।
யதாக்னினா ஹேமமலம் ஜஹாதி
த்மாதம் புன: ஸ்வம் பஜதே ச ரூபம்
ஆத்மா ச கர்மானுஶயம் விதூய
மத்பக்தியோகேன பஜத்யதோ மாம் 11.14.25
நெருப்பில் உருக்கப்பட்ட தங்கம், மாசுக்கள் நீங்கி தன் இயல்பான நிலையை அடைகிறது. அதுபோல, பக்தன் என்னிடம் கொண்ட பக்தியோகத்தினால் கர்மவாசனைகளிலிருந்து நீங்கி (தன் இயல்பான- பரமாத்மாவான )என்னை அடைகிறான்.
यथा यथात्मा परिमृज्यतेऽसौ
मत्पुण्यगाथाश्रवणाभिधानैः।
யதா யதாத்மா பரிம்ருஜ்ய தேஸௌ
மத்புண்யகாதா ஶ்ரவணாபிதானை : 11.14.26
என்னுடைய புண்ய கதைகளைக் கேட்பதாலும் சொல்வதாலும் மனதின் மாசுகள் நீங்கி, ஆத்மஞானம் விளங்கப்பெறுகிறான்.
मामनुस्मरतश्चित्तं मय्येव प्रविलीयते।।27।।
மாமனுஸ்மரதஶ்சித்தம் மய்யேவ ப்ரவிலீயதே 11.14.27
என்னையே நினைத்துக்கொண்டிருப்பவனுடைய சித்தம்
என்னிடத்திலேயே லயமடைகிறது.
ज्ञाने कर्मणि योगे च वार्तायां दण्डधारणे।
यावानर्थो नृणां तात तावांस्तेऽहं चतुर्विधः।।33।।
ஞானே கர்மணி யோகே ச வார்தாயாம் தண்டதாரணே
யாவானர்தோ ந்ருணாம் தாத தாவாம்ஸ்தேஹம் சதுர்விதம் 11.29.33
அன்பரே ! ஞானம், கர்மம், யோகம், மற்றும் உலகாயத முயற்சிகள் , தண்ட நீதி ( அரசியல் ) ஆகியவற்றால் மக்கள் [ தர்ம, அர்த்த, காம, மோக்ஷ ] என்ற நான்குவித புருஷார்த்தங்களை அடைகின்றனர்.
ஆனால் உனக்கு இந்த நாலும் பூரணமாக நானே ஆவேன்.
இதைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும் ?
ஸ்ரீ க்ருஷ்ணாஸ்து பகவான் ஸ்வயம்
உத்தவ கீதையின் ரஹசியம்
உத்தவகீதை ஸ்ரீ பகவான் இந்த நிலவுலகை விட்டு நீங்குவதற்கு முதல் நாள் இரவு உபதேசிக்கப்பட்டது. பகவான் நீங்கியதும் கொடிய கலிகாலம் தொடங்கியது. இக்கலியில் முன் யுகங்களில் பின்பற்றப்பட்ட பல தர்மங்கள் சரிவராது, அவை நசித்துவிடும் என்று பகவானுக்குத் தெரியும். அவரை அன்று நெருங்கிக்கேட்டவர் பக்தர். பகவான் இப்பூவுலகை நீத்ததும் நமக்கு என்ன துணை என்பதே அவர் கவலை. அதனால் பகவான் இந்த யுகத்திற்கேற்ற தர்மத்தை இங்கு விவரித்தார்.
இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது.
பாரதப் போரெல்லாம் முடிந்து, யுதிஷ்டிரர் அரசுபெற்று வெகு நாட்களுக்குப்பின், ஒரு நாள் அர்ஜுனனும் க்ருஷ்ணரும் உலவிக்கொண்டிருந்தனர். அப்போது அர்ஜுனன், க்ருஷ்ணர் அன்று போர்க்களத்தில் சொன்ன வார்த்தைகளை போரின் நெருக்கடி காரணமாக சரியாகக் கவனித்துக் கேட்க இயலவில்லை என்றும், அவற்றை மீண்டும் சொல்லவேண்டும் என்றும் கேட்கிறார். " நீ எத்தகைய சீடன் ?" என்று அவரைக் கடிந்து கொண்ட பகவான் சொல்கிறார் :
ந ஶக்யம் தன்மயா பூயஸ்ததா வக்துமஶேஷத :
பரம் ஹி ப்ரஹ்ம கதிதம் யோகயுக்தேன தன்மயா.
[மஹாபாரதம், ஆஶ்வமேதிக பர்வம், 16.12-13 ]
கீதையை மீண்டும் அதேவடிவில் வெளிப்படுத்த என்னால் இயலாது.
அந்த சமயம் நான் யோகத்தில் நிலைத்தவனாக இருந்து பரமார்த்த தத்துவத்தை விவரித்தேன்.
பகவானால் முடியாதது என்று உண்டா? ஏதோ காரணத்தினால் பகவான் அன்று சொல்லவில்லை. பிறகு,பல வருஷங்கள் கழித்து, உத்தவருக்கு அதே பொருளை வேறு விதமாக உபதேசித்தார் ! இதில் கலிகாலத்தில் நடைமுறைக்கு எது ஏற்றதோ அதையே விளக்கியிருக்கிறார். கலியில் பக்திதவிர பிற தர்மம் எதுவும் செல்லுபடியாகாது ! அதனால் பகவான் பக்திபற்றியே விளக்கியிருக்கிறார். இதிலிருந்தே இதன் முக்யத்துவம் நன்கு
விளங்கும்.
குறிப்பு: உத்தவரே பக்த சூர்தாஸாக வந்தார் என்பது வட இந்தியாவில் சிலர் நம்பிக்கை! [பல வருஷங்களாக நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்திருந்த குறிப்புக்களை வைத்து இதை ஒருவாறு எழுதினேன். This is only introductory in nature. பண்டிதர்கள் இதில் உள்ள குற்றம் குறைகளைப் பொறுத்துக்கொள்ள வேணும்.]
ஸச்சிதானந்த ரூபாய விஶ்வோத்பத்யாதி ஹேதவே
தாபத்ரய வினாஶாய ஸ்ரீ க்ருஷ்ணாய வயம் நும :