Friday, 15 July 2016

43. கீதை என்னும் பொக்கிஷம்- 5



43. கீதை என்னும் பொக்கிஷம்- 5

 நமது மதம்  " ஸநாதனம் " என்று [ என்றும் இருப்பது, தொடர்ந்து வருவது ] ஆஸ்திகர்கள்  பெருமைப்படுகிறார்கள். இது ஓரளவுக்கு உண்மைதான். இன்று உலகில் வழங்கிவரும் மதங்களிலெல்லாம்  நமது மதமே புராதனமானது.

ஸநாதனம்!


ஆனால் ஸநாதனமென்பது  என்றும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள்தராது. மதத்தில் பல அம்சங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அம்சம் முன்னிலைக்கு வருகிறது. சில அம்சங்கள் பின் தள்ளப்படுகின்றன. கடந்த அரை  நூற்றாண்டில் நாமே பல பெரிய மாறுதல்களைப் பார்த்திருக்கிறோம். யுகங்கள் மாறிமாறி வருகின்றன என்ற கொள்கையையுடைய நாம், இவ்வத்தனை யுகங்களிலும் நமது தர்மம் மாறவே இல்லை என எப்படிச் சொல்லமுடியும்? நதி அதன் பெயரில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் ஒவ்வொரு வினாடியும் புதிய தண்ணீர்தான்!


யுக தர்மம்


 நமது தர்மம் யுகந்தோறும் மாறியே வந்திருக்கிறது. இதை நமது சாஸ்திரங்களே சொல்கின்றன. பாகவதம் 12வது ஸ்கந்தத்தில் இதுபற்றி வருகிறது. க்ருதயுகமான ஸத்ய யுகத்தில் த்யானம்-தபஸ் பொது தர்மமாக இருந்தது. த்ரேதாயுகத்தில் யஜ்ஞங்கள் ப்ரதானமாயின. த்வாபரயுகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளை வழிபடுவதும், புனித யாத்திரை போன்றவையும் முக்கிய இடத்தைப் பெற்றன. இக்கலிகாலத்தில் இது எதுவுமே அனுசரிக்கமுடியாமல் இருக்கும் என்று பாகவத்தில் வருகிறது. இக்காலத்தில் தலங்களும் தீர்த்தங்களும் தூய்மை யிழந்துவிடும்; கோவில்கள் வ்யாபார தலங்களாகிவிடும்;எவரும் தங்கள் தர்மத்தைப் பற்றி ஒழுகமாட்டார்கள்;  பக்தி- அதுவும் இருந்த இடத்திலிருந்தே பகவான் நாமத்தைச் சொல்வது ஒன்றுதான் இயலும் என தெளிவாகவே இருக்கிறது. ஆனால் இதுவே மஹிமைமிக்கது எனவும் சொல்லியிருக்கிறது!



பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரது அவதாரம் த்வாபரயுகத்தின் கடைசியில் நிகழ்ந்தது. பகவான் இப்பூவுலகை நீத்த அன்றே கலி காலம் தொடங்கியது! [ ஒரு கணக்குப்படி கி.மு 3012ம் வருஷம் ].ஆகவே அவர் பக்தியையே ப்ரதானமாகச் சொன்னதில் ஆச்சரியமில்லை அல்லவா? இந்த பகவத் கீதையிலும். உத்தவருக்கு அவர் அருளிய இறுதி உபதேசத்திலும் பக்தியையே முக்கியமாகச் சொல்லியிருக்கிறார். இதை அவர் மொழியிலேயே நாம் பார்த்துவருகிறோம்.


எங்கும் நிறைகின்ற பொருள் !



எல்லாவற்றிலும் பகவான் நிறைந்திருக்கிறார், எங்கும் வ்யாபித்திருக்கிறார் என்பதை முன்பே சொல்லிவிட்டார். நாம் ப்ரஹ்லாதன் போல் இருந்தால் இத்துடன் சமாதானமடைவோம்; அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என அமைவோம். ஆனால்  நாம் தான் மெத்தப் படித்த மேதாவிகளாயிற்றே ! நம் மன நிலை வேறு .அதனால் பகவான் இக்கருத்தை மேலும் விளக்குகிறார்.  கம்பர் பாடினார்:







"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 

 நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, 

 அலகிலா விளையாட்டுடையாரவர் 

தலைவர்அன்னவர்க்கே சரண் நாங்களே"



இது  "ஜன்மாத்யஸ்ய" எனத்தொடங்கும் ஸ்ரீமத் பாகவத்தின் முதல் பாடலை நினைவுபடுத்துகிறது. இதையே பகவான் இனி பல ஶ்லோகங்களில் விளக்கிச் சொல்கிறார். இவை பகவானின் விபூதிகளாகும். விபூதியோகம் என்ற தலைப்பிலேயே ஒரு அத்யாயம் இருந்தாலும், பகவானின் பெருமை பல இடங்களில் வருகிறது.ஆனால் ஒரு பெரிய வித்தியாசம். கம்பர் பாடலிலும் பாகவத  

ஶ்லோகத்திலும்  பகவானை எந்தப்பெயரிலும் குறிப்பிடவில்லை! "தலைவர்" என்று மட்டும் கம்பர் சொன்னார். " ஸத்யம் பரம் " என்று மட்டும் பாகவதம் சொல்கிறது. இங்கு பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் தன் பெயரிலேயே சொல்கிறார்!



ஞானமும் விஞ்ஞானமும் !


ஏழாவது அத்யாயம் 'ஞான விஞ்ஞான  யோகம்' என்ற தலைப்புக்கொண்டது. பகவானை அறிவதுவே உண்மை ஞானம்! அவரை எப்படி அறிவது? இதை பகவானே  விளக்குகிறார்.









இங்கு ஞானம் என்பது என்ன, விஞ்ஞானம் என்பது என்ன ? இதை ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்  நன்கு விளக்குவார்! ஒருவன் பாலைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை- அவன் அஞ்ஞானி! பாலைப் பார்த்திருப்பவன் ஞானி! பாலைப் பருகியவன் விஞ்ஞானி! 








ஒருவன் ஆகாயவிமானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை- அவன் அஞ்ஞானி; ஒருவன் கேள்விப்பட்டிருக்கிறான், ஒருவன் உயரப் பறக்கும்போது பார்த்திருக்கிறான்; ஒருவன் அருகில் சென்று பார்த்திருக்கிறான்- இவர்கள் ஞானி. ஒருவன் அதில் அமர்ந்து ப்ரயாணம் செய்திருக்கிறான்- அவன் விஞ்ஞானி! எனவே,பகவானை அறிவதிலும் பல நிலைகள் இருக்கின்றன! பகவானை முற்றும் அறிந்த மஹாபெரியவர்கள் யாரோ ?  "யான் அறி அளவையின்  ஏத்தி ஆனாது நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் " என்று நக்கீரர் சொல்கிறார்!


ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

श्री भगवानुवाच

मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः।

असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु।।7.1।।



மய்யாஸக்த மனா பார்த்த  யோகம் யுஞ்ஜன் மதாஶ்ரய :
அஸம்ஶயம் ஸமக்ரம் மாம்  யதா ஞாஸ்யஸி தத் ஶ்ருணு        7.1


என்னிடத்தில் நிலைத்த மனத்தினனாய், என்னையே சார்ந்து, யோகத்தில் ஒன்றியவனாக என்னை எப்படி முற்றும் அறிந்துகொள்வாயோ அதைச் சொல்கிறேன், கேள் .


காண்பரார் கண்ணுதலாக் காட்டாக்காலே என்பார் அப்பர் ஸ்வாமிகள்!


பகவானைப் பற்றி அறிந்துகொள்வதை ஏன் ஞானம் ,விஞ்ஞானம் என்று சொல்கிறோம்?  அதை அறிந்தபின்  தெரிந்துகொள்ளவேண்டியது எதுவுமே இல்லை!

यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते।।7.2।।


யஜ்ஞாத்வா நேஹ  பூயோ அன்யத் ஞாதவ்யம் அவஶிஷ்யதே    7.2


எதை அறிந்துகொண்டபிறகு  இவ்வுலகில் தெரிந்துகொள்வதற்கு வேறு எதுவும் இருக்காதோ 


मनुष्याणां सहस्रेषु कश्िचद्यतति सिद्धये।

यततामपि सिद्धानां कश्िचन्मां वेत्ति तत्त्वतः।।7.3।।



மனுஷ்யாணாம்  ஸஹஸ்ரேஷு  கஶ்சித் யததி  ஸித்தயே
யததாமபி  ஸித்தானாம் கஶ்சித் மாம் வேத்தி தத்வத:                  7.3


ஆயிரத்தில் யாரோ ஒருவன் என்னை அடைவதற்காக ஸாதனை செய்கிறான். அவர்களிலும் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி உணர்கிறான். 








பகவானின் அபர-பர ப்ரக்ருதி வடிவங்கள், நிலைகள்.


भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च।

अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा।।7.4।।


பூமிராபோஅனலோ வாயு: கம் மனோ புத்துரேவ  ச
அஹங்கார இதீயம் மே பின்னா  ப்ரக்ருதிர் அஷ்டதா                    7.4


மண், நீர், கனல், காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என எட்டுவகையாக என் ப்ரக்ருதி பிரிந்து விளங்குகிறது.(ஜடப்ரக்ருதி)




अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम्।

जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्।।7.5।।



அபரேயமிதஸ்த்வன்யாம்  ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவபூதாம் மஹாபாஹோ  யயேதம் தார்யதே ஜகத்                       7.5


ஆனால் இது கீழ்ப்பட்டது. இதனினும் வேறானதும் ஜீவவடிவாய் உள்ளதும், எதனால் இந்த ஜகம் முழுவதும் தாங்கப்படுகிறதோ அந்த என்னுடைய உயர்ந்த ப்ரக்ருதியையும் தெரிந்துகொள். (சேதனம்)


एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय।

अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा।।7.6।।



ஏதன்யோனீனி  பூதானி   ஸர்வாணீத்யுபதாரய
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா                         7.6



எல்லா உயிர்களும் இந்த இரண்டு ப்ரக்ருதிகளிலிருந்து உண்டானவை என்று தெரிந்துகொள். நானே இந்த உலகிற்கு பிறப்பிடமும், அழிவும் ஆகிறேன்.


मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय।

मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव।।7.7।।



மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி  தனஞ்ஜய
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ                       7.7


தனஞ்ஜயா ! என்னைக்காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை. இவ்வுலகனைத்தும் சரட்டில் மணிகளைப்போன்று என்னிடமே கோர்க்கப்பட்டுள்ளன.


[ இந்த உலகம் முழுவதும் பகவானிடமிருந்தே வந்தது. அதாவது பகவானைத்தவிர வேறு பொருள் இல்லை. அதனால், நூலினால் ஆன மணியே நூலில் கோர்க்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். முன்பெல்லாம் நூலினாலேயே ஆன பொத்தான்  button  வரும்! ]

தனஞ்ஜயன் =  செல்வத்தை எல்லாம் வென்றவன். இவனை விளித்து, "என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு சிறிதும் இல்லை" என்று சொல்வது எவ்வளவு ரசமானது! பகவானே உயர்ந்த செல்வம். "  நீவேரா குலதனமு, சந்ததமு, நீவேரா ஜீவனமு, ஓ ராமா " என்று பாடினார் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்.



रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः।

प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु।।7.8।।



ரஸோஹமப்ஸு கௌன்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வவேதேஷு ஶப்த: கே பௌருஷம் நர:                     7.8


குன்தி புத்ரனே! நான் நீரில் அதன் ருசியாக இருக்கிறேன். சந்த்ர, சூர்யர்களில் ஒளியாக இருக்கிறேன். எல்லா வேதங்களிலும் ஓங்காரமாக இருக்கிறேன். ஆகாயத்தில் ஒலியாக இருக்கிறேன்.  ஆண்களிடத்தில் ஆண்மையாக இருக்கிறேன்.


पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ।

जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु।।7.9।।



புண்யோ கந்த: ப்ருதிவ்யாம்  ச  தேஜஸ்சாஸ்மி  விபாவஸௌ
ஜீவனம் ஸர்வ பூதேஷு தபஸ்சாஸ்மி தபஸ்விஷு                       7.9


மண்ணில் அதன் நறுமணமாக ஆகின்றேன். தீயில்  ஒளியாக இருக்கிறேன். எல்லாஉயிர்களிலும் உயிராக இருக்கிறேன். தவம் செய்வோர்களிடம் தவமாக இருக்கிறேன்.


மண்ணுக்கு நறுமணம் உண்டா? நகரத்தில் வாழும் நாம் இதை மறந்துவிட்டோம். கிராமப்புறங்களில் மழை தூரல்  ஆரம்பித்தவுடன் நல்ல மண்வாசனை கிளம்பும்!


बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्।

बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्।।7.10।।



பீஜம் மாம் ஸர்வ பூதானாம் வித்தி பார்த்த ஸனாதனம்
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்வினாமஹம்                     7.10



பார்த்தா! சராசரங்கள் அனைத்திற்கும் அனாதியான  விதை நான் என அறிந்துகொள். புத்திமான்களின் புத்தியாகவும் தேஜஸ் உடையவர்களின் தேஜஸாகவும்  நானே இருக்கிறேன்.




बलं बलवतामस्मि कामरागविवर्जितम्।

धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ।।7.11।।


பலம் பலவதாம் சாஹம்  காமராக விவர்ஜிதம்
தர்மாவிருத்தோ பூதேஷு  காமோஸ்மி பரதர்ஷப                          7.11


பரதகுலத்தில் சிறந்தவனே! பலவான்களிடம், ஆசையும் பற்றும் நீங்கிய பலமாக நான் இருக்கிறேன். ப்ராணிகளிடம் தர்மம் தவறாத ஆசையாகவும் இருக்கிறேன்.


இந்த உலகம் உண்மையில் இருக்கிறதா?  ஶ்ருஷ்டி  என்பது உண்டா? என்றெல்லாம் வேதாந்த பண்டிதர்கள் சர்ச்சை செய்கிறார்கள். உலகம் மாயை- வெறும் தோற்றம்  என்கிறார்கள். இங்கு பகவான் தன் ப்ரக்ருதிமயமான உலகத்தைப்பற்றி மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். நாம் பிற சர்ச்சைகளில் ஈடுபடத் தேவையில்லை. இந்தப் ப்ரக்ருதி வெளியில் மட்டும் அல்ல, நம்மையும் ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது!









ये चैव सात्त्विका भावा राजसास्तामसाश्च ये।

मत्त एवेति तान्विद्धि नत्वहं तेषु ते मयि।।7.12।।



யே சைவ ஸாத்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஶ்ச யே
மத்த யேவேத்தி தான் வித்தி  ந த்வஹம் தேஷு தே மயி              7.12


மற்றும் ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களிலிருந்து  எவை தோன்றியவையோ அவையும் என்னிடமிருந்தே  தோன்றியவை என்று அறிந்துகொள். அவை என்னிடம் இருக்கின்றன; நான் அவற்றில் இல்லை!


இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவேணும்.  முக்குணங்களும் பகவானிடமிருந்தே வந்தவை. ஆனால் பகவான் அவை எதற்கும் கட்டுப்படாதவர்! 

त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत्।

मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्।।7.13।।



த்ரிபிர் குணமயைர்பாவைரேபி : ஸர்வமிதம் ஜகத்
மோஹிதம் நாபி ஜானாதி  மாமேப்ய: பரமவ்யயம்.                7.13


இந்த முக்குணங்களின் நிலைகளால் இந்த உலகம் முழுதும் மோஹமடைந்திருக்கிறது! (அதனால்) அவற்றிற்கு அப்பாலுள்ள மாறுபாடில்லாத என்னை அறிந்துகொள்வதில்லை!


दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।

मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते।।7.14।।



தைவீ ஹ்யேஷா குணமயீ  மம மாயா துரத்யயா
மாமேவ ஏ ப்ரபத்யன்தே மாயாமேதாம் தரன்தி தே                 7.14



முக்குண வடிவமான இந்த என்னுடைய மாயை  (மம மாயா) தெய்வீக சக்தி வாய்ந்தது. (தைவீ  ) கடப்பதற்கு அரிதானது. எவர்கள் என்னையே சரணடைகிறார்களோ அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்.


இது மிகவும் முக்கியமான இடம். இதுவரை பகவான் சொன்ன "மாயை" என்பது பகவானுடைய ஒருவித சக்தியாகவே வருகிறது. என்னுடைய மாயை, அது தெய்வீகமானது என்கிறார். பின்னாட்களில் கருதியதுபோல், மாயை   illusion  என்ற பொருளில் வரவில்லை! இது பகவானுடைய சக்தியானதால் இதை மனித முயற்சியால் கடக்க இயலாது. எத்தகைய  யோகியும் ஞானியும் பகவானைச் சரணடைந்தே ஆகவேண்டும். 









பலவித பக்தர்கள்

பகவானைச் சரணடையாமல் இந்த உலகமாயையைத் தாண்டமுடியாது என்றால் அவரைப் பணிவதுதானே புத்திசாலித்தனம்? பகவான் பலவித பக்தர்களைப்  பற்றிச் சொல்கிறார்.


चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन।

आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ।।7.16।।


சதுர்விதா பஜந்தே மாம்  ஜனா ஸுக்ருதினோர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸு அர்த்தார்த்தீ  ஞானீ பரதர்ஷப                   7.16


பரதகுலத்தில் சிறந்த அர்ஜுனா! கஷ்டத்தில் இருப்பவன், ஞான நாட்டம் உடையவன், உலகியல் பொருள்களை விரும்புபவன், ஞானி என நால்வகையினர் என்னை வழிபடுகிறார்கள். இவர்கள் புண்ணியவான்கள்.




तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्ितर्विशिष्यते।

प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः।।7.17।।




தேஷாம் ஞானீ நித்யயுக்த ஏகபக்திர் விஶிஷ்யதே
ப்ரியோ  ஹி ஞானினோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய           7.17


அவர்களுள் எப்பொழுதும் என்னிடமே நிலைத்த ஏக  பக்தியுடைய ஞானி சிறந்தவன். அத்தகைய ஞானிக்கு நான் ப்ரியமானவன்; அவனும் எனக்கு இனியவன்.



उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम्।

आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम्।।7.18।।



உதாரா: ஸர்வ ஏ வைதே  ஞானீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவானுத்தமாம் கதிம்         7.18


 இவர்கள் [ முன் சொன்ன நால்வர் ] எல்லோருமே நல்லவர்கள். ஆனால் ஞானியோ, என்னிடம் ஒன்றிய மனமும் புத்தியும் கொண்டு, உயர்ந்த கதியாகிய  ( உத்தமாம் கதிம்) என்னையே ( மாம் ஏவ)  பற்றி நிற்கிறான். அதனால் அவன் என்னுடைய ஸ்வரூபமே என்பது என்னுடைய கருத்து (  மே மதம்).


ஞானி என்றதும் ஏதேதோ உருவங்கள் தோன்றும்.  பகவானை அறிவதே ஞானம்-விஞ்ஞானம் , அதற்குமேல் எதுவும் இல்லை என்று  முன்பே சொல்லிவிட்டார். அதனால் பகவானை அறிந்தவனே உண்மை ஞானி. இதையே இங்கு உறுதிசெய்கிறார். 



बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते।

वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः।।7.19।।



பஹூனாம் ஜன்மனாம் அன்தே  ஞானவான்மாம் பரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி  ஸ மஹாத்மா ஸுதுர்லப :                7.19. 


பல ஜன்மங்களுக்குப் பின் , கடைசியில் 'அனைத்தும் வாசுதேவனே' என்று அறிந்த  ஞானி என்னைப் புகலாக வந்தடைகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அரிதானவன்.  (7.3 ம் பார்க்க ).


ஆனால் பகவானை நினைக்காத பேர்வழிகளும் இருக்கிறார்கள்!

கடவுளைக் கருதாத கயவர்கள்


न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः।

माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः।।7.15।।


ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யன் தே நராதமா:
மாயயாபஹ்ருத ஞானா  ஆஸுரம்  பாவமாஶ்ரிதா:                     7.15


பாவச் செயல்களால் அறிவிழந்தவர்களும்,  மனிதப் பதர்களும், அசுரத்தன்மையை  மேற்கொண்டவர்களும், மாயையால்  ஞானம் இழந்தவர்களும் என்னை வழிபடுவதில்லை.


अव्यक्तं व्यक्ितमापन्नं मन्यन्ते मामबुद्धयः।

परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्।।7.24।।




அவ்யக்தம் வ்யக்திமாபன்னம் மன்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜானந்தோ மமாவ்யயம் அனுத்தமம்                       7.24



புத்தியில்லாதவர்கள் என்னுடைய இணையற்றதும் அழிவற்றதும் மேலானதுமான  பரமாத்ம தன்மையை  அறிந்துகொள்ளாமல், ( வெறும் ஊனக்கண்களால் ) காணக்கூடிய (மனிதத்) தோற்றத்தை அடைந்தவன் என்று கருதுகிறார்கள்.




नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।

मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्।।7.25।।




நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய  யோகமாயா ஸமாவ்ருத:
மூடோயம் நாபி ஜானாதி   லோகோ மாம் அஜமவ்யயம்            7.25


என்னுடைய யோகமாயையால் மறைக்கப்பட்டுள்ள நான்  எல்லோருக்கும் புலப்படுவதில்லை. இந்த அறிவற்ற சமுதாயம் என்னைப் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்று அறிந்துகொள்வதில்லை. 



பகவானை அறியும் பேறும் பயனும்


वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन।

भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन।।7.26।।



வேதாஹம் ஸமதீதானி வர்த்தமானானி சார்ஜுன
பவிஷ்யாணி ச பூதானி  மாம் து வேத ந கஶ்சன                        7.26


அர்ஜுனா! சென்றுவிட்டவையும், இருப்பவையும் இனி வரப்போகின்றவையுமான  பொருள்களை நான் அறிவேன் . ஆனால் என்னை எவனும் அறிவதில்லை. 


इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत।

सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप।।7.27।।



இச்சா த்வேஷ  சமுத்தேன  தவந்தவ மோஹேன பாரத
ஸர்வபூதானி சம்மோஹம் ஸர்கே யான்தி பரன்தப                    7.27



பரத குலத் தோன்றலே! எதிரிகளை வாட்டுபவனே!  பிறக்கும் போதே எல்லா உயிர்களும் விருப்பு, வெறுப்பு ஆகிய இரட்டை மோகங்களினால் மயக்கமடைகின்றார்கள்!


येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम्।

ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः।।7.28।।



யேஷாம்  த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம்
தே த்வந்தவ மோஹனிர்முக்தா  பஜன் தே மாம் தருடவ்ரதா      7.28


ஆனால் புண்யகர்மங்களைச் செய்கின்றவர்கள் பாபம் அழிந்து, இரட்டை வடிவான மயக்கத்திலிருந்து விடுபட்டு . திட வ்ரதத்துடன் என்னை எல்லாவகையிலும் வழிபடுகிறார்கள்.


जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये।

ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम्।।7.29।।



ஜராமரண மோக்ஷாய மாமாஶ்ரித்ய  யதன்தி யே
தே ப்ரஹ்ம தத் விது: க்ருத்ஸ்னமத்யாத்மம் கர்ம சாகிலம்.       7.29


மூப்பு, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைவதற்காக யார் என்னைச் சரணடைந்து  வழிபடுகிறார்களோ அவர்கள் ப்ரஹ்மத்தையும், அத்யாத்ம தத்வம் முழுதையும்,  கர்மங்கள் அனைத்தையும் ( அதன் சூக்ஷ்மத்தை ) அறிவர்.



இது பக்தியோகம் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் பக்திசாதனைக்குரிய எவ்வளவு அபூர்வ விஷயங்களை பகவான் விளக்கியிருக்கிறார் !


















No comments:

Post a Comment