Saturday, 30 July 2016

58. ஸ்ரீ உத்தவ கீதை -3



58. ஸ்ரீ உத்தவ கீதை -3




ஸ்ரீ உத்தவர்  ஒரு மஹாபுருஷர். ஸாது மஹான். மஹா பக்த ரத்னம். பகவானே  அவரை " புருஷர்ஷப " = மனிதர்களில் சிறந்தவனே என்று  சொல்கிறார். ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் எங்கும் கோர்வையாக வரவில்லை, இங்குமங்குமாக சிதறிக்கிடக்கின்றன. 

உத்தவரின் சிறப்புக்கள்


ஸ்ரீமத் பாகவத்தின் மூன்றாவது  ஸ்கந்தத்தில் அவரைப்பற்றிய சில முக்கிய குறிப்புக்கள் வருகின்றன. உத்தவர் ஐந்து வயது குழந்தையாக இருந்தபோதே க்ருஷ்ணர்  போல பொம்மை செய்து வைத்து அதைப் பூஜிப்பார் என்று ஸ்ரீ ஶுகப்ரஹ்ம  ரிஷியே சொல்கிறார் ! ( 3.2.2 ) க்ருஷ்ணர் பற்றிய பேச்சைக் கேட்டாலே அவருக்கு மெய் சிலிர்க்கும் ! உத்தவர் பகவானின் உண்மையான  பக்தர்; அமைதியே உருவானவர்:தேவகுருவான வியாழபகவானின் முதல் சீடர்; நீதி சாஸ்திரம் நன்கு கற்றவர்  என்று ஸ்ரீ ஶுகரே சொல்கிறார். (3.1.25)
மேலும், " ஸ்ரீ க்ருஷ்ணனின் நெருங்கிய பரிவாரங்களில் மிகவும் முக்யமான பரம பாகவதர் உத்தவர் " என்று சொல்கிறார் ஸ்ரீ ஶுகர்.(3.4.24 )ஸ்ரீ உத்தவர் அஷ்டவஸுக்களில் ஒருவராக இருந்தவர் என்று பகவானே சொல்கிறார். ( 3.4.11) "நீரோ பரம ஸாது. இப்பிறவியிலேயே எனது பரிபூரண அருள் பெற்று விட்டாய். அதனால் இனி உனக்குப் பிறவி இல்லை " என்று பகவானே  சொல்கிறார். (3.4.12)

மஹான் விதுரர்






மஹாபாரத யுத்தத்திற்குமுன்  க்ருஷ்ண பக்தரான  விதுரர் த்ருதராஷ்டிரருக்குக் கூறும் அறிவுரையை  அவர் ஏற்காததுடன், துர்யோதனனால் அவமதிக்கப் படுகிறார். வெறுப்படைந்த விதுரர் தன் தெய்வீக வில்லைப்  போட்டுவிட்டு, ஹஸ்தினாபுரத்தைவிட்டு நீங்கி, தீர்த்தயாத்திரை கிளம்பிவிடுகிறார். பாரதம் முழுதுமான இந்த யாத்திரை பல வருஷங்கள் நீடிக்கிறது. இதற்குள்  போர்முடிந்து , யுதிஷ்டிரர் அரசாகி பலவருஷங்கள் கழிகின்றன. போரினால் இருபக்கத்திற்கும் நேர்ந்த துன்பங்களை விதுரர் ஸரஸ்வதீ நதிக்கரையில் கேள்விப்படுகிறார். அங்கிருந்து யமுனைக்கரையை அடைகிறார். அங்கு தற்செயலாக உத்தவரைச்   சந்திக்கிறார். அவரிடமிருந்து நடந்தவற்றைத் தெரிந்துகொள்கிறார். [ இங்கு உத்தவர் சொல்லும் விஷயங்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் புகழ்பெற்ற தசம ஸ்கந்தத்தின் சுருக்கமாகவே இருக்கின்றன.] பகவான் கூடவே இருந்தும் அவருடைய குலத்தினரே அவரை பகவான் என்று தெரிந்துகொள்ளவில்லை; யாரோ பெரிய யாதவன் என்றுதான் நினைத்தார்கள்; இதுதான் பகவானின் மாயை போலும் என்று சொல்லி உத்தவர் வருந்துகிறார். பிறகு பகவான் தனக்கு உபதேசித்ததைச் சொல்கிறார். உத்தவரின்  உயர்வை உணர்ந்த விதுரர் அவரையே  குருவாக மதித்து அவரிடமிருந்து அறிவுரை பெற விரும்புகிறார். ஆனால் உத்தவர் ஒப்புக்கொள்வதில்லை. விதுரர்  மூத்தவர், பெரியவர். மேலும் அவருக்கு மைத்ரேயரே உபதேசம் செய்யவேண்டுமென்பது ஸ்ரீ க்ருஷ்ணரின் வாக்கு. [மைத்ரேயர், உத்தவருடன் இருந்து பகவானின் உபதேசத்தைக் கேட்டவர்] அதனால், உத்தவர் விதுரரை மைத்ரேயரிடம் அனுப்புகிறார்.

உத்தவர் உரை

இந்த விதுரர்- உத்தவர் ஸம்வாதத்தில் உத்தவர் பல அரிய விஷயங்களைச் சொல்கிறார்: 

  • ஸ்ரீ க்ருஷ்ணரது திருமேனிதான் சகல ஸௌபாக்யங்களுக்கும், அழகுக்கும் எல்லை.
  • ப்ரபஞ்சத்திலுள்ள சகல  உயிரினங்களும் பகவானது ஸ்வரூபமே ! அவற்றில் சில சாந்தமானவை; சில உக்ரமானவை.
  • பகவானைப் பலவாறு நிந்தித்த சிசுபாலன்கூட பகவானின் சாயுஜ்யத்தை அடைந்தான்
  • பாரதப்  போரில் பல்லாயிரம் வீரர்கள் பகவானது  தரிசனம் பெற்று , அர்ஜுனன் பாணத்தால் தாக்குண்டு பரிசுத்த மடைந்து பகவானது உயர்ந்த உலகை அடைந்தனர் !
  • அஸுரர்கள் கூட பெரும் பக்தர்கள் போலும்! பகவானிடம் பகைமை கொண்டு, அதனால் கோபத்துடன் அவரையே  ஸதா நினைக்கின்றனர்!
  • ஸ்ரீ க்ருஷ்ணர் முவ்வுலகங்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், முக்குணங்களுக்கும் தலைவர்.
  • பகவான் வந்ததால் நந்தகோகுலம் செழிப்படைந்தது. செல்வமே சுமையானது! அந்த செல்வம் சரியான வழியில்  செல்லவேண்டும் என்பதை உலகிற்குக் காட்டவிரும்பிய பகவான் , நந்தகோபரைத் தூண்டி, பிராமணர்களைக்கொண்டு  கோபூஜை என்ற சிறந்த வேள்வியைச் செய்வித்தார்!
[ "அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும் எம்பெருமான்  நந்தகோபாலன் " என்று பாடுவார் ஸ்ரீ ஆண்டாள். ]
  • விதிக்குக் கட்டுப்பட்ட மனிதன், விதிக்கு உட்பட்ட போகங்களில் இச்சை வைத்தால், விதிக்குக் கட்டுப்படாத பகவானிடம் எப்படி பக்தி  செய்ய முடியும்?  பக்தி இருந்தால்தான் விதி விலகும்!
[ தர்மம், அர்த்தம்,காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களில், அர்த்தமும் காமமும் விதி  (ப்ராரப்தம் ) வசப்பட்டவை. இதை நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்கிறோம்.(ஏதேதோ ஆசைப்படுகிறோம்; நடப்பதுதான் நடக்கிறது ! "பதவி பூர்வபுண்யானாம் " என்று  ஜோசியத்தில் சொல்கிறார்கள் ! ) விதிவசப்பட்ட மனிதன் விதிவசத்தால் வரும் பொருளுக்கு முயற்சிப்பது அறிவுடைமையோ ஆன்மிகமோ ஆகுமா ? உண்மையான ஆன்மிகம் தர்மம், மோக்ஷம் பற்றிய முயற்சியே. அதிலும் தர்மம் சூக்ஷ்மமானது, எளிதில் விளங்காதது. அதனால் பகவான் கூறியபடி பக்திவழியைப் பின்பற்றுவதுதான்  ஆன்மீகம் என்பது தாத்பர்யம்.நாம் பகவானைப் பிடித்துக் கொண்டால், பகவான் விதியைப் பார்த்துக்கொள்வார் என்பது பக்தர்களின் கொள்கை ]

இவை அத்தனையும் பக்தி மார்கத்தின் உயர்ந்த தத்துவங்கள்! இதை பரம பாகவதரான உத்தவர் வாயிலாகக் கேட்பது நமது பாக்யமே !

பகவான் தனது இறுதி உபதேசங்களை உத்தவரிடம் சொன்னார், அவற்றை அவரே விளக்குவார் என்று சொன்னார் எனில், உத்தவர் பெருமையை நாம் சொல்ல முடியுமா? அவருக்கு  நாம்  நமஸ்காரம் மட்டும் செய்வோம் !

தத்துவப் பூசல்கள்


உத்தவ கீதையும் பகவத்கீதை போன்று பகவானின் வாக்குதான். ஆனால் இது ப்ரபலமாகவில்லை. நமது ஆசார்யர்களும் இதில் தமது 'கைவரிசையை'க்  காட்டவில்லை ! உத்தவ கீதையில் பகவான் சொல்லும் விஷயங்கள் நேரடியானவை; பக்தி மார்கம் பற்றியவை. நம் இஷ்டப்படி அர்த்தம் சொல்ல முடியாது! இதில் தத்துவக்  குழப்பத்திற்கு இடமில்லை. பகவத் கீதையில் சொன்ன முக்கிய விஷயங்களை இங்கு மேலும்  எளிதாகச் சொல்லியிருக்கிறார். 


நமது தத்துவப் பூசல்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்றுதான் : இந்த உலகம் உண்மையா, இல்லையா என்பது தான் அது.
ஸ்ருஷ்டிக்குமுன் இந்த ப்ரபஞ்சம் இல்லை; ப்ரளயத்திற்கு அப்பாலும் இருக்காது; அதனால் நடுவில் இருக்கும்போதும் இது இல்லாததுபோல்தான். What is not permanent is not real  என்பது ஒரு வாதம். இதன் தீவிர நிலை, " "ஸ்ருஷ்டி என்பதே இல்லை " என்பதாகும். இதை "அஜாத வாதம் " என்பார்கள். 

இன்னொரு வாதம் இதற்கு நேர்மாறானது ! 'இந்த உலகம் பகவான் படைத்தது. பகவான் தான் ஒரே சத்திய வஸ்து. சத்தியத்திலிருந்து வந்தது எப்படி அசத்தியமாகும் ' என்பது. 
இதையெல்லாம் சுருக்கமாக மூன்று நிலைகளில் சொல்வார்கள் :


  • ஸ்ருஷ்டி- த்ருஷ்டி வாதம் : படைப்பு ஏற்பட்டது. அதனால் தான் நாம் இந்த உலகைப் பார்க்கிறோம். 
  • த்ருஷ்டி- ஸ்ருஷ்டி வாதம் : நாம் பார்க்கிறோம். அதனால் தான் இந்த உலகம் தெரிகிறது.
  • அஜாதவாதம் : ஸ்ருஷ்டி என்று ஒன்று இல்லவே இல்லை !
நமது ஆசார்ய புருஷர்களும் அவர்களுடைய சிஷ்ய கோடிகளும் இந்த விஷயத்தில் ஒருவர்க்கொருவர் குடுமியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். நாம் அவர்களுக்கெல்லாம் பெரிய கும்பிடு போட்டுவிட்டு, தூர நிற்போம்.  நமக்கு பகவான் சொன்னதுதான் முக்கியம்.

[ பல தத்துவங்களின் பெயர்களையும், சம்பந்தப்பட்ட  ஆசார்யர்களின் பெயரையும்  வைத்து நாம் ஏன் குழப்பிக்கொள்ள வேணும் ? ]

பகவானும் உலகமும்



www.youthconncect.in


இந்த உலகைத் தானே படைத்ததாக பகவான் பகவத் கீதையில் சொல்லியிருக்கிறார். அவரே  அபர-பர என இரு  ப்ரக்ருதிகளாக வெளிப்பட்டிருக்கிறார். ஆனால் அவர்  எதற்கும் கட்டுப்பட்டவரல்ல. ஶ்ருஷ்டி- ஸ்திதி- லயம் ஆகிய மூன்றும் அவர் செயலே. ஆனால் இந்த உலகம் -படைப்பு  அனித்யமானது, சுகமற்றது என்பதையும் ஆறு இடங்களில் சொல்லியிருக்கிறார். நிலையில்லாத இந்த உலகத்தை நம்பாமல், பகவானையே நம்பவேண்டும். இதுவே பக்தர்களுக்கு பகவான் சொல்லும் செய்தி. " அனித்யம் அஸுகம் லோகே இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் ".

இதே விஷயத்தைத்தான் உத்தவகீதையிலும் சொல்கிறார். இதில் தத்துவக்குழப்பத்திற்கு இடமே இல்லை.



नैतद्वस्तुतया पश्येद्दृश्यमानं विनश्यति।

நைனத் வஸ்துதயா பஶ்யேத்  த்ருஶ்யமானம் வினஶ்யதி        11.18.26

பார்த்துக்கொண்டிருக்கும்போதே  பொருள்கள் அழிந்துபோகின்றன. எனவே கண்ணுக்குப் புலப்படும் இந்த உலகத்தை ஒருபோதும் ஸத்தியம் என்று எண்ணலாகாது. 

यदेतदात्मनि जगन्मनोवाक्प्राणसंहतम्।

सर्वं मायेति तर्केण स्वस्थस्त्यक्त्वा न तत्स्मरेत्।।27।।

யதேத தாத்மனி ஜகன் மனோ வாக் ப்ராண ஸம்ஹதம்
ஸர்வம் மாயேதி தர்கேண ஸ்வஸ்தஸ்த்யக்த்வா  ந தத் ஸ்மரேத்  11.18.27

 ஆத்மாவில், மனம்-செயல்-ப்ராணன்  ஆகியவற்றின் கூட்டுறவினால்தான்  இவ்வுலகம் கற்பிக்கப்படுகிறது.  காணப்படும் இவையெல்லாம் முற்றிலும் மாயத்தோற்றமே என்று விசாரம் செய்து , இதனைத் தடுத்து, தன் ஆத்மாவிலேயே நிலைபெற்று, பின்னர் ஒருபோதும் அதைப்பற்றி நினைக்காதிருக்க வேண்டும்.


यो विद्याश्रुतसंपन्न आत्मवान्नानुमानिकः।

मायामात्रमिदं ज्ञात्वा ज्ञानं च मयि संन्यसेत्।।1।।


யோவித்யாஶ்ருத ஸம்பன்ன ஆத்மவான் நானுமானிக:
மாயாமாத்ரமிதம் ஞாத்வா ஞானம் ச மயி ஸன்யஸேத்           11.19.1

சாஸ்த்ரப் பயிற்சியால் ஞானமெய்திய ப்ரஹ்மனிஷ்டன், அனுமானம் முதலிய யுக்திவாதங்கள் இல்லாமல்  நேரடியாகவே ஆத்மஞானம் பெற்றவன்,  இந்த உலகையும் அதன் நிவ்ருத்திக்கான சாதனங்களையும் மாயை என்றுணர்ந்து, அவற்றை என்னில் ஐக்யப்படுத்தி, அவை இரண்டுமே என்மேல் ஏற்றப்பட்டவை என்ற ஞானத்தை அடைகிறான்.


नवैकादशपञ्चत्रीन्भावान्भूतेषु येन वै।

ईक्षेताथैकमप्येषु तज्ज्ञानं मम निश्चितम्।।14।।

நவ ஏகாதஶ பஞ்ச த்ரீன்  பாவான் பூதேஷு  யே ந வை
ஈஷேதாதை கமப்யேஷுதத் ஞானம் மம நிஶ்சிதம்                   11.19.14

ப்ரக்ருதி, புருஷன், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்ரைகள் ஆகிய ஒன்பது; ஐந்து ஞானேந்த்ரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள், மனம்- ஆகிய இவை பதினொன்று; ஐந்து மஹாபூதங்கள், முக்குணங்கள் ஆகிய இவை எட்டு- ஆகிய இந்த இருபத்தெட்டு தத்துவங்களும் ப்ரஹ்மாமுதல் புல்பூண்டு வரையிலான எல்லா ப்ராணிகளிடமும் காணப்படுவதால், அவற்றினூடே பரமாத்மா இருக்கிறார் என்று அறிவதுதான் ஞானம் என்பது என்னுடைய நிச்சயமான கருத்து.


एतदेव हि विज्ञानं न तथैकेन येन यत्।

स्थित्युत्पत्त्यप्ययान्पश्येद्भावानां त्रिगुणात्मनाम्।।15।।

ஏத  தேவ ஹி விஞ்ஞானம்  ந ததைகேன யேன யத்
ஸ்தித்யுத்பத் த்யப்யயான் பஶ்யேத் பாவானாம்  த்ரிகுணாத்மனாம்  11.19.15

பலவகையான பொருள்களால் ஆனது இந்த உலகம் என்று கருதாமல், இது பரமாத்மா என்ற ஒன்றினால் மட்டுமே வ்யாபிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வது விஞ்ஞானம் எனப்படும். முக்குணங்களினால் ஆக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தி- ஸ்திதி- அழிவு ஆகியவை பற்றிசிந்தித்து இதை அறிய வேண்டும். 

[ இதுவே அனைத்தும் வாஸுதேவனே என்ற அறிவு : வாஸுதேவ ஸர்வமிதி ]


धर्मो मद्भक्तिकृत्प्रोक्तो ज्ञानं तैकात्म्यदर्शनम्।

தர்மோ மத் பக்திக்ருத் ப்ரோக்தோ ஞானம் ச ஏகாத்ம்ய தர்ஶனம்  11.19.27

எதனால் என்னிடம் பக்தி  ஏற்படுமோ  அதுவே  தர்மமாகும்.
எல்லாவற்றையும் ஒரே ஆத்மாவாகப்  பார்ப்பது  ஞானமாகும்.


ज्ञानं विवेको निगमस्तपश्च

प्रत्यक्षमैतिह्यमथानुमानम्।

आद्यन्तयोरस्य यदेव केवलं 

कालश्च हेतुश्च तदेव मध्ये।।18।।



ஞானம் விவேகோ நிகமஸ்தபஶ்ச
ப்ரத்யக்ஷ மைதிஹ்ய மதானுமானம்
ஆத்யந்தயோரஸ்ய  யதேவ கேவலம்
காலஶ்ச ஹேதுஶ்ச  ததேவ மத்யே                                     11. 28.18

இந்த உலகம் தோன்றுவதற்குமுன் எது இருந்ததோ ( உலகத்  தோற்றத்திற்கு எது காரணமோ ), எது உலகம் அழிந்தாலும் காலரூபியாக இருந்து தான் அழியாமல் இருக்கிறதோ, அதுவேதான் இடைப்பட்ட காலத்திலும்  இருக்கிறது என்று அறிவதே ஞானம். [ உலகம் அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமே என்பது வேதம் ] ஸ்வதர்மங்களை அனுஷ்டிப்பது என்ற தபசினாலும், நிதர்சனமான காட்சிகளாலும், மஹாத்மாக்களின் யுக்தி வாதங்களாலும், உபதேசத்தாலும், அனுமானத்தினாலும் இந்த அறிவைப் பெறவேண்டும்.


तन्मायाफलरूपेण केवलं निर्विकल्पितम्।

वाङ्मनोऽगोचरं सत्यं द्विधा समभवद्बृहत्।।3।।


தன்மாயா பலரூபேண  கேவலம் நிர்விகல்பிதம்
வாங்மனோகோசரம்  ஸத்யம் த்விதா ஸமபவத் ப்ருஹத்      11.24.3

பரம்பொருள்  ஒரே ஸத்யமான, இரண்டற்றதான  ப்ரஹ்மம். இது மனம், வாக்குகளைக் கடந்தது.  ஆனால் அதே ப்ரஹ்மம் , காண்பவன்-காட்சி என்ற இரு பாகங்களாகப் பிரிந்தது!

[உலகில் பல தோற்றங்களைக் கண்டு மதி மயங்குகிறது. இந்தப் பல தோற்றங்களுக்கு விளக்கமளித்து, அவற்றின் மூலமும் அவற்றின் பின் இருப்பதும் ப்ரஹ்மமே என்று விளக்குவது ஸாங்க்யம். இதை பகவானும் இரு கீதைகளிலும் விளக்கியுள்ளார். ]


இங்கு வரும் விஷயங்கள் எல்லாம் - ஞனம்-விஞ்ஞானம், ஸாங்க்யம், ப்ரக்ருதி, உலகம் பகவான் மயம், பகவானே எங்கும் வ்யாபித்திருக்கிறார் என்பது, ஆகியவை - பகவத் கீதையில் வந்த விஷயங்களே. இங்கு பக்தனுக்கே சொல்வதால் மேலும்  விளக்கமாகச் சொல்கிறார்.  உலகம் பகவான் மயமானது, ப்ரஹ்மமே ஜீவனாகவும் ஜகத்தாகவும் ( காணப்படும் உலகு, காணும் ஜீவன்  என ) தோன்றுகிறது என்று தெரிந்துகொண்ட பின், வீண் சர்ச்சைகளில் ஏன்  ஈடுபடவேண்டும் ? 





No comments:

Post a Comment