Tuesday, 12 July 2016

39.கீதை என்னும் பொக்கிஷம்-1.



39. கீதை என்னும் பொக்கிஷம் -1.





ஸ்ரீமத் பகவத் கீதை நமது ஹிந்துமத நூல்களில் தலையாயது. "ப்ரஸ்தானத்ரயம்" என்ற மூன்று ஆதார நூல்களுள் ஒன்றாகக் கருதப்பட்டாலும் [ மற்றவை: உபநிஷதம், ப்ரஹ்ம சூத்ரம்], கீதையின் இடம் அலாதியானது. ஹிந்து மதப்பிரிவினர் அனைவரும் ஏற்றுக்கொள்வது.


ஹிந்து மதத்தை விளக்கவோ, விமர்சிக்கவோ முற்பட்ட எவரும் கீதையைப்பற்றிப் பேசாமலிருக்க முடியாது. அதுபற்றியே கீதைக்கு நூற்றுக் கணக்கான விளக்கங்கள் வந்தவண்ணமிருக்கின்றன. அன்றைய ஆசார்யர்கள் முதல், இன்றைய அரசியல் வாதிகள் வரை எவரும் கீதையை விட்டுவைக்கவில்லை!


ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் கொள்கைக்கு ஆதரவு தேடவே கீதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆதி சங்கரர் கீதையை ஞான நூலாகக் கண்டார். திலகர், காந்தி போன்ற தலைவர்கள் அதில் கர்ம யோகத்தைக் கண்டனர். 




முதன்முதல் அணுஆயுத சோதனை செய்த விஞ்ஞானி ஒப்பன்ஹைமருக்கு , கீதையின் ஶ்லோகம் கவனத்திற்கு வந்தது!
[16 July, 1945]

श्री भगवानुवाच

कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो

लोकान्समाहर्तुमिह प्रवृत्तः।

ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे

येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः।।11.32।।







இன்றைய நிர்வாக இயல் அறிஞர்கள் கீதையை மேற்கோள் காட்டுகிறார்கள்! இப்படி ஒவ்வொருவரும் தமக்குத்தேவையானதை கீதையிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள் . 

ஆனால் கீதை சொல்வதுதான் என்ன?


இது நமது நோக்கத்தைப்பொறுத்து அமைகிறது. இக்காலத்தில் கீதையைப் படிப்பது ஒரு ஃபாஷனாகிவிட்டது ! நானும் படித்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம்! அதை இலக்கிய நோக்கில் படிக்கலாம். அதில் என்ன தத்துவக் கருத்துக்கள் வருகின்றன ; அவற்றை எப்படி நாடலாம் அல்லது சாடலாம் என்று  அமையலாம். ஆனால் கீதை எந்த சமயத்தில் எழுந்தது என்பதைப் புரிந்துகொண்டால், அதன் முக்கியத்துவம் விளங்கும். அது வாழ்க்கைக்கு வழிகாட்டி; ஆன்மீக முயற்சியின் அடிப்படை என்பது தெரியும். 





போருக்கு ஆயத்தமாக வந்த அர்ஜுனன் , தன் குருவையும், மரியாதைக்குரிய பெரியவர்களையும், சுற்றத்தினர்களையும் நண்பர்களையும் எதிரில் கண்டு கலங்குகிறான். 'இவர்களைக் கொல்வது தர்மமாகுமா, பாவமல்லவா ' எனக் குழம்புகிறான். அரச குலத்தில் வந்த அர்ஜுனன் அதற்கேற்ற கல்விகேள்விகளில் தேர்ந்தவன். அதனால்தான் இந்தக் குழப்பம் அவனுக்கு வருகிறது. இப்படி யுத்தம் செய்தாவது ராஜ்யத்தை அடையவேண்டுமா? அதனால் சந்தோஷம் வருமா, பாவம்தானே சம்பவிக்கும்' என்று நினைத்து வில்லையும் அம்பையும்  எறிந்துவிட்டு தேர்த்தட்டில் உட்கார்ந்துவிடுகிறான். அதுவரை உறவினனாகவும் தோழனாகவும் இருந்த க்ருஷ்ணனை  குருவாகக் கண்டு அவனிடம் சரணடைகிறான். "தர்ம விஷயத்தில் மனது குழம்பிப்போயிருக்கிறேன்; எனக்கு எது நன்மையத் தருமோ அதைத் தீர்மானமாகச் சொல்; உன்னைச் சரணடைகிறேன், சிஷ்யனாகக் கேட்கிறேன் " என்கிறான். [ எனக்கு வெற்றி வரும் வழியைச்சொல் எனக் கேட்கவில்லை! ]










இதற்கு விடையாக ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வதுதான் கீதை. அவர் எளிய சொற்களையே  பேசுகிறார்.  யோகம். யஜ்ஞம் போன்ற கலைச்சொற்களை பலவாறு விளக்குகிறார். தத்துவ விசாரம் செய்வது பற்றிச் சொல்லவில்லை;எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையே சொல்கிறார். இடையிடையே அர்ஜுனன் சந்தேகம் எழுப்புகிறான், கேள்வி கேட்கிறான். அதற்கும் பகவான் சமாதானம் சொல்கிறார்.

இவர் முக்கியமாகச் சொல்வது என்ன?

ஸ்ரீமத் பகவத் கீதையில்  700 ஶ்லோகங்கள் உள்ளன.

த்ருதராஷ்டிரன்  சொல்வது          1
ஸஞ்சயன் சொல்வது                41
அர்ஜுனன் சொல்வது                89
ஸ்ரீ பகவான் சொல்வது             569


பகவான் ஒரு விஷயத்தைச் சொல்ல வருகிறார்; நடுவில் அர்ஜுனன் கேள்வி எழுப்புகிறான். அதற்கு விடையாகச் சிலவற்றைச் சொல்கிறார். பிறகு மீண்டும் தொடர்கிறார். இப்படியே சம்வாதம் நீள்கிறது. இதைப் பதினெட்டு அத்யாயங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைப்பும் கொடுத்திருக்கிறார்கள். நாம் தலைப்பைக் கவனிக்காமல் அதில் உள்ள விஷயங்களை மட்டும் கவனித்தால்  ஸ்ரீ பகவான் அதிகபக்ஷமாகப் பேசியிருப்பது  பக்தி பற்றியே என்பதைத் தெரிந்துகொள்ளலாம்! சுமார் 140 ஶ்லோகங்களில் பக்தி பற்றியே சொல்கிறார்! வேறு எந்த பொருள்பற்றியும் இவ்வளவு சொல்லவில்லை! இங்கு நினைவில் இருக்கவேண்டிய சில விஷயங்கள்:


1.பூர்வீக வைதிக மார்கம் கர்மம்-ஞானம் என்ற   அடிப்படையிலேயே அமைந்தது. பக்தி இல்லாமலில்லை; ஆனால் அது ப்ரதானமாக இருந்ததில்லை. பக்தர்கள் இருந்திருக்கிறார்கள் ; ஆனால் பக்தி  மார்கம் என்று தனியாக இருந்ததில்லை. பக்தர்களை நாம் நினக்கும் பொழுது ஒரு ஶ்லோகம் சொல்கிறோம்:

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாசாம்பரீஷ ஸுக ஸௌனக பீஷ்மதால்ப்யான்
ருக்மாங்கதார்ஜுன வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யானிமான் பரம பாகவதான் ஸ்மராமி.

இதில் அனேகமாக அனைவரும் புராண கால புருஷர்கள்! 
இதையே ஸ்ரீ பகவான் கீதையில் சொல்கிறார்:



श्री भगवानुवाच

लोकेऽस्मिन्द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।

ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम्।।3.3।।





லோகேஸ்மின் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக
ஞானயோகேன ஸாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம்.

பாவமற்றவனே! இவ்வுலகில் இருவகை நிஷ்டைகள் முற்காலத்தில் என்னால் கூறப்பட்டது. ஸாங்க்ய யோகிகளுக்கு நிஷ்டை ஞானயோகத்தினாலும், கர்மயோகிகளுக்கு நிஷ்டை  யோகத்தினாலும் அமைகிறது.


स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः।

भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्।।4.3।।





ஸ ஏவாயம் மயா தேத்ய யோக: ப்ரோக்த  புராதன:
பக்தோஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்.

நீ என்னுடைய பக்தனும் உற்ற நண்பனும் ஆவாய். எனவே அந்தப் பழைய யோகம்  இன்று என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. இது சிறந்த ரஹஸ்யம்.


எனவே, பகவான் வாக்குப்படியே  ஞானம், கர்மம் என்பவை பழைய நிஷ்டைகள். 


2. ஸ்ரீ பகவான் அவதாரம். அவர் அசார்யரோ, பண்டிதரோ அல்ல. அவர் அரைத்த மாவையே அரைப்பதற்கு வரவில்லை. அவர்  "தர்ம ஸம்ஸ்தாபனத்திற்காக " வருகிறார். ஸம்ஸ்தாபனம் என்பது  "நன்கு செய்வது, திருத்தி யமைப்பது, செப்பனிடுவது"!  பழையதில் உள்ள பல அம்சங்கள் நீடிக்கும்; ஆனால் அவை  , அப்படியே மீண்டும் வரா. யோகம், யாகம், த்யாகம், ஸன்யாஸம் , தபஸ் போன்ற  எல்லா பழைய கருத்துக்களுக்கும் பகவான் புது விளக்கம் அளித்திருக்கிறார். நமது பார்வையையே மாற்றியிருக்கிறார். பழையதையே திருப்பிச் சொல்ல பகவானே வரவேண்டுமா என்ன ?

3. அனேகமாக ஒவ்வொரு அத்யாயத்திலும் பகவான் தன்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தச்  சகுண வடிவத்திற்கு பக்தி செய்யவேண்டிய அவசியத்தைச் சொல்கிறார். இவ்வாறு 50க்கும் அதிகமான குறிப்புக்கள் இருக்கின்றன.

4. அவதாரம் = பகவான் = ப்ரஹ்மம்  என்ற புதிய சமன்பாட்டைச் சொல்கிறார். 

5. அனன்ய பக்தியை வற்புறுத்துகிறார். [ பகவானிடம் மட்டுமே ஈடுபாடு; வேறு எதிலும் நாட்டமின்மை ] பக்தி செய்யாதவர்கள், பகவானின் சொல்லைக் கேட்காதவர்கள் அழிந்து விடுவார்கள் என்கிறார்.

6.அர்ஜுனன் கேட்ட ஒரு நேரடியான கேள்விக்கு ஆணித்தரமாக பதில் சொல்கிறார். உடலெடுத்த மனிதர்களுக்கு சகுண உபாசனையே சிறந்தது; அதுவே  சுலபமானது என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்கிறார்.


7. ஸ்ரீ பகவான் பக்தியைப் பற்றிப் பேசும்போதெல்லாம், உயர்ந்த ரஹஸ்யம் (குஹ்ய தரம். குஹ்ய தமம் ) வித்தைகளின் ராஜன், ரஹஸ்யங்களின் அரசன்  ( ராஜவித்யா, ராஜ குஹ்யம் ) , என்னுடைய  உயர்ந்த மொழி  (மே பரமம் வச ). எல்லா ரஹஸ்யத்திலும் சிறந்தது (ஸர்வகுஹ்யதமம், குஹ்யாத் குஹ்ய தரம் ) என்று உயர்ந்த அடைமொழிகளிட்டுச் சொல்கிறார். வேறு எந்த யோகத்திற்கோ, சாதனைக்கோ இவ்வாறு சொல்லவில்லை!


பின் ஏன் பகவான் பிறவிஷயங்களைப் பற்றிப்  பேசினார் என்ற கேள்வி எழலாம். அர்ஜுனன் அரச மரபுப்படி கல்வி கற்றவன்.அவன் கற்றது இங்கு அவனுக்குக் கைகொடுக்கவில்லை. அவனுக்குத் தெரிந்த விஷயங்களிலிருந்தே தொடங்கி பகவான் புதிய கருத்துக்களைச் சொல்கிறார்; பழைய விஷயங்களுக்கும் புதிய விளக்கம் அளிக்கிறார். அதனால் பழைய விஷயங்களைப் பற்றிய பேச்சு எழுகிறது. பழைய பாடத்தை நினைவில் நிறுத்தாமல் புதியதாகக் கற்க முடியுமா?



இவ்வாறு வரும் ஶ்லோகங்களை  யெல்லாம் நாம் இங்கு தொடர்ந்து பார்க்கலாம்.  எந்த பண்டிதருடைய அல்லது ஆசார்யாருடைய கருத்தையும் அனுசரித்துப் போகவேண்டியதில்லை. பகவான் நேரடியாக, எளிய சொற்களிலேயே விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.  பகவானிடம் எவ்விதத்திலும் (ஸர்வபாவேன) பக்திசெய் ; அவரைச் சரணடை; அவர் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிப்பார் என்பதே ஸ்ரீ பகவான்  சொல்லும் முடிவான  அறிவுரையாகும். இதில் வரும் பிற விஷயங்கள்  incidental எனத்தக்கவை. யோகம் செய், யாகம் செய் என்பதை யெல்லாம் முடிந்த முடிவாகச் சொல்லவில்லை. யார் எந்த சாதனை செய்தாலும் அது முடிவில் பகவானையே அடைகிறது. அவ்வச் சாதனைகளுக்குப்  பலன் தருபவரும் பகவான் தான் ! இதைத் தெரிந்து கொண்டால் பகவானையே நேரடியாக  நாடலாமல்லவா? இதைத்தான் பகவான் வலியுறுத்துகிறார். தலையைச்சுற்றி ஏன் மூக்கைத் தொடவேண்டும்?


நமது மதத்தில் பலவித சாதனைகள் இருக்கின்றன.இதைப் பார்த்து பலருக்கு குழப்பம் வருகிறது. மனித சுபாவம் ஒன்றுபோல் இல்லை. எல்லோருக்கும் ஒரேவிதமான உணவில் விருப்பமிருப்பதில்லை. ஒரேவித நடை, உடை பாவனை இருப்பதில்லை. அதேபோல் ஆன்மீக  நாட்டத்திலும், அதற்கான தகுதியிலும் வித்தியாசமிருப்பதால் சாதனை முறைகளும் வேறுபடுகின்றன.  நமது பக்குவத்திகேற்ற  ஒருமுறையைப் பின்பற்ற வேண்டும் . இதை நமக்குக் காட்டவே குரு அவசியம். ஆனால் இன்று இருக்கும் நிலையில் எந்த குரு நிஜம், யார் போலி என்பது தெரிவதில்லை.  அதனால் பகவானே நம் எல்லோருக்கும் ஏற்ற பெரிய குருவாக இருந்து  गुरुर्गरीयान्।
குருர் கரீயான்: கீதை 11.43] நம் அனைவருக்கும் ஏற்ற சாதனை முறையை  வகுத்தளித்திருக்கிறார். இதை பகவான் வாக்கிலேயே பார்ப்போம்.

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.



















No comments:

Post a Comment