53.அர்ஜுனன் செய்த ஸ்தோத்ரம்
அர்ஜுனன் சொல்கிறார்:
कार्पण्यदोषोपहतस्वभावः
पृच्छामि त्वां धर्मसंमूढचेताः।
यच्छ्रेयः स्यान्निश्िचतं ब्रूहि तन्मे
शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्।।2.7।।
கார்பண்ய தோஷோபஹதஸ்வபாவ
ப்ருச்சாமித்வாம் தர்ம ஸம்மூட சேதா :
யத் ஶ்ரேய: ஸ்யான் நிஶ்சிதம் ப்ரூஹி தன்மே
ஶிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபன்னம் 2.7
இரக்கத்தினால் ஸ்வபாவ குணங்களை இழந்துவிட்டவனான நான் , தர்மம் பற்றிய விஷயத்தில் மனது குழம்பிப்போயிருக்கிறேன். அதனால் உங்களைக் கேட்கிறேன் : எனக்கு எது மேன்மையைத்தரும் என்று நீங்கள் நன்கு நிச்சயம் செய்வீர்களோ அதை எனக்குச் சொல்லுங்கள். நான் உங்கள் சீடன். உங்களைச் சரணடைந்த எனக்குக் கட்டளையிடுங்கள்.
இது ஒரு அருமையான ஶ்லோகம். குரு-சிஷ்ய 'பாவ 'த்தை நன்கு விளக்கும் உதாரணமாக இருக்கிறது. சிஷ்யன் தனது சொந்த மனச்சார்புகளை [prejudices and opinions ] எல்லாம் விட்டுவிட்டான். குருவிடம் சரணாகதி அடைந்துவிட்டான். தனக்கு ஹிதமானதைச் சொல்லும் உரிமையை குருவிற்கே கொடுத்துவிட்டான். அவர் சொல்வதைக் கட்டளையாகக் கருதுகிறான். இதைவிட ஒரு சிறந்த சிஷ்யனிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஸ்ரீ பகவானே பின்னால் இதைப்பற்றிச் சொல்கிறார்:
தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யன்தி தே ஞானம் ஞானின: தத்வ தர்ஶின : 4.34
அந்த ஞானத்தை தத்வ தர்சிகளான ஞானிகளை அணுகி அறிந்துகொள்.
அவர்களைப் பணிவுடன் நமஸ்கரி ; அவர்களுக்குச் சேவை செய்; அவர்களிடம் தகுந்த கேள்விகள் கேள். தத்வத்தை உணர்ந்த ஞானிகள் உனக்கு உபதேசிப்பார்கள்.
இங்கு குருவின் இலக்கணத்தையும் சொல்கிறார் ! குரு தத்வம் [ உள்ளதாம் பொருள் ] உணர்ந்த ஞானியாக இருக்கவேண்டும்- வெறும் வாய்ச்சொல் வீரர் அல்ல !
இந்த அறிவுரையின் உருவகமாக இங்கே அர்ஜுனன் நிற்கிறார் !
अर्जुन उवाच
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान्।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम्।।10.12।।
आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे।।10.13।।
பரம் ப்ரஹ்ம பரம்தாம பவித்ரம் பரமம் பவான்
புருஷம் ஶாஶ்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும் 10.12
ஆஹுஸ்த்வா ம்ருஷய: ஸர்வே தேவர்ஷி நாரதஸ்ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷிமே 10.13
அர்ஜுனன் சொன்னார்:
நீங்கள் பரப்ரஹ்மம். நீங்கள் பரமபதம். பவித்ரமானவர். எல்லா ரிஷிகளும் உங்களை சாஸ்வதமானவர் என்றும், தெய்வீக புருஷர், முழுமுதற் கடவுள்,பிறப்பற்றவர், எங்கும் நிறைந்தவர் என்றும் கூறுகிறார்கள். தேவரிஷியான நாரதரும், அஸிதரும், தேவலரும், மஹரிஷியான வ்யாஸரும் அவ்வாறே சொல்கிறார்கள். நீங்களும் அவ்வாறே கூறுகிறீர்கள்.
सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव।
न हि ते भगवन् व्यक्ितं विदुर्देवा न दानवाः।।10.14।।
ஸர்வமேதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேஶவ
நஹிதே பகவன் வ்யக்திம் விதுர் தேவா ந தானவா : 10.14
கேஶவா ! நீங்கள் என்னிடம் சொல்வதனைத்தும் உண்மையே என்று உணர்கிறேன். உங்கள் தெய்வீக வடிவத்தை ஸுரர்களும் அறியவில்லை; அஸுரர்களும் அறியவில்லை !
स्वयमेवात्मनाऽत्मानं वेत्थ त्वं पुरुषोत्तम।
भूतभावन भूतेश देवदेव जगत्पते।।10.15।।
ஸ்வயமேவாத்மனாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம
பூதபாவன பூதேஶ தேவ தேவ ஜகத்பதே 10.15
உயிர்களைத் தோற்றுவித்தவரே ! உயிரினங்களின் அதிபதியே ! தேவதேவரே ! இந்த ஜகத்திற்குத் தலைவரே ! புருஷோத்தமரே ! நீங்கள் தான் உங்களை அறியவல்லவர்.
त्वमक्षरं परमं वेदितव्यं
त्वमस्य विश्वस्य परं निधानम्।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता
सनातनस्त्वं पुरुषो मतो मे।।11.18।।
த்வமக்ஷரம் பரமம் வேதி தவ்யம்
த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதானம்
த்வமவ்யய ஶாஶ்வத தர்ம கோப்தா
ஸனாதனஸ்த்வம் புருஷோ மதோ மே 11.18
நீங்கள் அறியத்தக்க , மிகவுயர்ந்த அழிவற்ற பரப்ரஹ்ம பரமாத்மா; நீங்களே இந்த அகில உலகிற்கும் மேலான கதி; நீங்களே நிலையான தர்மத்தைக் காப்பவர் ; நீங்களே அழிவற்றவர் ; ஶாஶ்வதமான பரமாத்மா என்பது என்னுடைய கருத்து.
अनादिमध्यान्तमनन्तवीर्य
मनन्तबाहुं शशिसूर्यनेत्रम्।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रम्
स्वतेजसा विश्वमिदं तपन्तम्।।11.19।।
அனாதி மத்யான்தம் அனன்த வீர்யம்
அனன்த பாஹும் ஶஶி ஸூர்ய நேத்ரம்
பஶ்யாமி த்வாம் தீப்த ஹுதாஶ வக்த்ரம்
ஸ்வதேஜஸா விஶ்வமிதம் தபன்தம் 11.19
உங்களை ஆதி, நடு, முடிவு அற்றவராகவும், எல்லையற்ற வீர்யம் கொண்டவராகவும், எண்ணற்ற தோள்கள் உள்ளவராகவும், சந்திரன், சூர்யன் இவர்களைக் கண்களாக உடையவராகவும், கொழுந்துவிட்டெரியும் தீ போன்ற வாய் உடையவராகவும், தம்முடைய வெப்பத்தினால் இந்த உலகை வாட்டுபவராகவும் பார்க்கிறேன்.
द्यावापृथिव्योरिदमन्तरं हि
व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः।
दृष्ट्वाऽद्भुतं रूपमुग्रं तवेदं
लोकत्रयं प्रव्यथितं महात्मन्।।11.20।।
த்யாவா ப்ருதிவ்யோ: இதமன்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேன திஶஶ்ச ஸ்ர்வா :
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்
லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மன். 11.20
பரமாத்மாவே ! விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையேயுள்ள இந்த இடைவெளியும், எல்லா திசைகளும் உங்கள் ஒருவராலேயே நிறைந்திருக்கின்றன ! அற்புதமான இந்த பயங்கரமான உருவத்தைப் பார்த்து மூன்று உலகங்களும் பயத்தால் மிகவும் நடுங்குகின்றன.இங்கே ஸ்ரீ தாயுமான ஸ்வாமிகளின் பாடல் நினைவுக்கு வருகிறது:
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந்தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம் எந்தெய்வமென்றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்கு முள்ள தெதுஅதுகங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.
स्थाने हृषीकेश तव प्रकीर्त्या
जगत् प्रहृष्यत्यनुरज्यते च।
रक्षांसि भीतानि दिशो द्रवन्ति
सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः।।11.36।।
ஸ்தானே ஹ்ருஷீகேஶ தவ ப்ரகீர்த்யா
ஜகத் பரஹ்ருஷ்யத் அனுரஜ்யதே ச
ரக்ஷாம்ஸி பீதானி திஶோ த்ரவன்தி
ஸர்வே நமஸ்யன் தி ச ஸித்த ஸங்கா : 11.36
ஹ்ருஷீகேஶரே ! உங்களுடைய புகழைப் பேசுவதால் உலகம் மகிழ்ச்சியடைகின்றது. ஆனந்தமும் அடைகின்றது. ராக்ஷஸர்கள் பயந்துபோய் எல்லா திசைகளிலும் ஓடுகிறார்கள். ஸித்தர் கணங்கள் நமஸ்கரிக்கின்றனர். இது எல்லாம் பொருத்தம் தானே !
कस्माच्च ते न नमेरन्महात्मन्
गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे।
अनन्त देवेश जगन्निवास
त्वमक्षरं सदसत्तत्परं यत्।।11.37।।
கஶ்மாச்ச தே ந நமேரன் மஹாத்மன்
கரீயஸே ப்ரஹ்மணோப்யாதி கர்த்ரே
அனன்த தேவேஶ ஜகன்னிவாஸ
த்வமக்ஷரம் ஸதஸத் தத்பரம் யத் 11.37
மஹாத்மாவே ! ஆதியில் ப்ரம்மாவையே படைத்தவராகவும் , எல்லோருக்கும் மூத்தவராகவும் உள்ள உங்களுக்கு ஏன் நமஸ்காரம் செய்ய மாட்டார்கள் ? முடிவற்றவரே ! தேவதேவரே ! ஜகத்திற்கெல்லாம் இருப்பிடமானவரே ! எது ஸத்தாகவும் அஸத்தாகவும் உள்ளதோ அவற்றிற்கெல்லாம் மேலான என்றும் அழியாத பரம் பொருள் நீங்களே !
त्वमादिदेवः पुरुषः पुराण
स्त्वमस्य विश्वस्य परं निधानम्।
वेत्तासि वेद्यं च परं च धाम
त्वया ततं विश्वमनन्तरूप।।11.38।।
த்வம் ஆதிதேவ : ப்ருஷ: புராண:
த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதானம்
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விஶ்வ மனன்த ரூப 11.38
நீங்கள் முழுமுதல் தெய்வம் ; ஸனாதனமான புருஷர் ; இந்த உலகத்திற்குச் சிறந்த இருப்பிடம். அறிபவர்- அறியப்படுபவர்- பரமபதமாகவும் இருக்கிறீர்கள். அளவற்ற ஸ்வரூபம் உள்ளவரே ! உங்களால் உலகனைத்தும் வ்யாபிக்கப்பட்டுள்ளது !
वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः
प्रजापतिस्त्वं प्रपितामहश्च।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः
पुनश्च भूयोऽपि नमो नमस्ते।।11.39।।
வாயுர் யமோக்னிர் வரூண: ஶஶாங்க :
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஶ் ச
நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ
புனஶ்ச பூயோ அபி நமோ நமஸ்தே 11.39
வாயு தேவனும், யமனும், அக்னியும், வருணனும், சந்த்ரனும், மக்களுக்குத் தலைவனான ப்ரம்மாவும், ப்ரம்மதேவனுக்குத் தந்தையும் நீங்களே ! உங்களுக்கு பல்லாயிரம் முறை நமஸ்காரம்! திரும்பவும் நமஸ்காரம் ! மீண்டும் மீண்டும் நமஸ்காரம் !
नमः पुरस्तादथ पृष्ठतस्ते
नमोऽस्तु ते सर्वत एव सर्व।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं
सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः।।11.40।।
நம: புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே
நமோஸ்துதே ஸர்வத ஏவ ஸர்வே
அனன்த வீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்னோஷி ததோஸி ஸர்வ : 11.40
அளவற்ற வீர்யம் உள்ளவரே ! உங்களுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம் ! அனைத்துமானவரே ! உங்களுக்கு எல்லாபக்கங்களிலிருந்தும் நமஸ்காரம் ! அளவில்லாத பராக்ரமம் உடைய நீங்களே எல்லாபக்கமும் வ்யாபித்திருக்கிறீர்கள். நீங்களே அனைத்து வடிவாகவும் இருக்கிறீர்கள்.!
सखेति मत्वा प्रसभं यदुक्तं
हे कृष्ण हे यादव हे सखेति।
अजानता महिमानं तवेदं
मया प्रमादात्प्रणयेन वापि।।11.41।।
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம்
மயாப்ரமாதாத் ப்ரணயேன வாபி 11.41
यच्चावहासार्थमसत्कृतोऽसि
विहारशय्यासनभोजनेषु।
एकोऽथवाप्यच्युत तत्समक्षं
तत्क्षामये त्वामहमप्रमेयम्।।11.42।।
யச்சாவ ஹாஸார்த மஸத்க்ருதோஸி
விஹார ஶய்யாஸன போஜனேஷு
ஏகோத வாப்யச்யுத தத் ஸமக்ஷம்
தத் க்ஷாமயே த்வாம் அஹமப்ரமேயம் 11.42
அச்சுதா ! உங்களுடைய இந்த மஹிமையை அறியாமல் . தோழன் என்று எண்ணி, அன்பினாலோ, அசட்டையாகவோ ஏ,க்ருஷ்ணா ; அடே, யாதவா ; அடே நண்பனே என்றெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்க்காமல் துடுக்குத்தனமாக அழைத்தேன். விளையாட்டிலும், படுக்கையிலும், உட்கார்ந்திருக்கும் போதும் , உண்ணும் போதும், தனியாகவோ அல்லது பலர் முன்னிலையிலோ வேடிக்கையாகவோ கேலியாகவோ அவமதிக்கப் பட்டீர்கள் ! அளவற்ற மஹிமை பொருந்திய நீங்கள் அது அத்தனையும் மன்னித்தருளும்படி வேண்டுகின்றேன் .
நம்மால் பகவானின் பெருமையை முழுதும் உணர்ந்து அவரை ஸ்தோத்திரம் செய்ய முடியாது. ஆயிரம் நாமம் சொன்னாலும் அதில் அவர் பெருமை அடங்கிவிடுமா என்ன !
"யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் " என்கிறார் நக்கீரர்.
"அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே இறைவா
நீ தாராய் பறை யேலோர் எம்பாவாய் "
என்கிறார் ஆண்டாள்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட ஶ்லோகங்களால் நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி கடைசியில் சொல்கிறார் :
"அஞ்ஞாத்வா தே மஹத்வம் யதிஹ நிகதிதம்
விஶ்வ நாத க்ஷமேதா
ஸ்தோத்ரம் சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதிகதரம்
த்வத் ப்ரஸாதாய பூயாத் "
விஸ்வனாதனான ஹே குருவாயூரப்பா ! நான் தங்களின் பெருமையை அறியாமலேயே ஆயிரத்திற்கும் அதிகமான ஶ்லோகங்கள் எழுதினேன்.
இதைத் தாங்கள் மன்னிக்கவேண்டும். இந்த ஸ்தோத்ரம் தங்கள் அருளை நல்குவதாக ஆகட்டும்!
पितासि लोकस्य चराचरस्य
त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान्।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो
लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव।।11.43।।
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஶ்ச குருர் கரீயான்
ந த்வத்ஸமோஸ்த்யப்யதிக குதோன்யோ
லோகத்ரயேப்ய : ப்ரதிமப்ரபாவ 11.43
.
நீங்கள் இந்த அசையும்-அசையாப் பொருள்கள் கொண்ட உலகனைத்திற்கும் தந்தையாக இருக்கிறீர்கள். எல்லோரை விடவும் மிக உயர்ந்த குருவாகவும் மரியாதைக்குரியவராகவும் இருக்கிறீர்கள். இணையற்ற மஹிமை உள்ளவரே ! மூன்று உலகிலும் உங்களுக்கு இணையானவர் இல்லை ! பின், உங்களைவிட மேம்பட்டவர் எவ்வாறு இருக்க முடியும் !
तस्मात्प्रणम्य प्रणिधाय कायं
प्रसादये त्वामहमीशमीड्यम्।
पितेव पुत्रस्य सखेव सख्युः
प्रियः प्रियायार्हसि देव सोढुम्।।11.44।।
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாம் அஹமீஶ மீட்யம்
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயாரஸி தேவ ஸோடும் 11.44
அதனால் நான் தங்கள் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறேன். பூஜித்தற்குரிய பகவானே ! உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.மகன் பிழையைத் தந்தை பொறுப்பது போலும், நண்பன் தவறை நண்பன் பொறுப்பது போலும், காதலியின் பிழையைக் காதலன் பொறுப்பது போலும், என்னுடைய குற்றங்கள் அனைத்தையும் நீங்கள் பொறுத்துக்கொள்ள வேணும்.
किरीटिनं गदिनं चक्रहस्त
मिच्छामि त्वां द्रष्टुमहं तथैव।
तेनैव रूपेण चतुर्भुजेन
सहस्रबाहो भव विश्वमूर्ते।।11.46।।
கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம்
இச்சாமி த்வாம் த்ரஷ்டு மஹம் ததைவ
தேனைவ ரூபேண சதுர்புஜேன
ஸஹஸ்ரபாஹோ பவவிஶ்வ மூர்த்தே 11.46
விஶ்வரூபம் கொண்டவரே ! ஆயிரக்கணக்கான புஜங்களுள்ளவரே ! கிரீடம் தரித்தவராகவும், கதாயுதமும், சக்ராயுதமும் ஏந்தியவராகவும் உள்ள அந்த ஸ்வரூபத்திலேயே நான் உங்களைத் தரிசிக்க விரும்புகிறேன். நான்கு புஜங்கள் கொண்ட அந்த ரூபத்திலேயே தரிஸனம் அளியுங்கள்.
அர்ஜுனன்தான் எவ்வளவு பெரியவன்! சண்டைக்குமுன் பகவானிடம் அவன் வெற்றியை வேண்டவில்லை. '' எனக்கு எது நன்மையைத்தருமோ அதைச் சொல்லுங்கள் " என்றான். பகவான் வாயிலாகவே அவர் விபூதிகளைக் கேட்டு, பின் அவர் விஶ்வரூபத்தைக் கண்டான். அதன்பின் அவன் கேட்பதெல்லாம் பகவானின் சௌம்யமான சதுர்புஜ தரிசனம் ! இப்படிப்பட்டவன் சொன்ன ஸ்தோத்திரத்திற்கு மஹிமை இல்லாமலா போகும்!
ஸஞ்ஜயர் கீதையின் கடைசி ஶ்லோகத்தில் அர்ஜுனனையும் ஸ்ரீ க்ருஷ்ணரையும் சேர்த்தே நினைக்கவேண்டும் என்கிறார்.
यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम।।18.78।।
யத்ர யோகேஶ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர் தர:
தத்ர ஸ்ரீ : விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம 18.78
எந்த இடத்தில் யோகேஶ்வரனான ஸ்ரீ க்ருஷ்ணனும், எந்த இடத்தில் காண்டீபம் தரித்தவனகிய அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்தான் மங்களமும், ஜயமும், பெருமையும், நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என் கொள்கை.
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது!
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் !
ஸ்ரீ க்ருஷ்ண: கரோது கல்யாணம் !
ஸ்ரீ பகவான் எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் அருள்வாராக.
from: www.imagebuddy.com
No comments:
Post a Comment